பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / இருதயச் சுற்றோட்ட மண்டல நோய்களில் திட்ட உணவு மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இருதயச் சுற்றோட்ட மண்டல நோய்களில் திட்ட உணவு மேலாண்மை

இருதயச் சுற்றோட்ட மண்டல நோய்களில் திட்ட உணவு மேலாண்மை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

இருதயத்தின் பணிகள்

 1. இருதயம் நான்கு அறைகளைக் கொண்டது. மேலறைகள் இரண்டும் ஏட்ரியம் (atria) எனப்படும். கீழறைகள் இரண்டும் வெண்டிரிக்கிள் (ventricles) எனப்படும். இடது ஏட்ரியம் மற்றும் இடது வெண்டிரிக்கிளை இரத்தம் கிட்டத்தட்ட பூஜ்ய அழுத்தத்தில் வந்தடைகிறது. இடது வெண்டிரிக்கிளிலிருந்து இரத்தம் மகாதமனி வழியாக நம் உடல் முழுவதும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மகாதமனி பலகிளைகளாகப் பிரிந்து, தமனிகள், (artery) மிகச்சிறிய இரத்த கிளை குழாய்கள், (arterioles), என பிரித்து உடல் முழுவதும் இரத்தத்தை பரப்புகிறது. தந்துகிகளிலிருந்து இரத்தம் சிரைகளை (veins) அடைந்து, சிரைகள் மூலமாக வலது ஏட்ரியத்தை உடலின் பெருஞ்சிரைகளான மேற்பெருஞ்சிரை, கீழ்பெருஞ்சிரை வழியாக வந்தடைகிறது. பிறகு அங்கிருந்து வலது வெண்டிரிக்கிளை அடைகிறது.
 2. வலது வெண்டிரிக்கிள், நுரையீரல் தமனி வழியாக இரத்தத்தை நுரையீரலுக்கு செலுத்தி நுரையீரல் சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது. நுரையீரல் தமனி பலகிளைக் குழாய்களாக பிரிந்து தந்துகிகளாக மாறி நுரையீரல் முழுவதும் பரவி, வாயு பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் பிறகு நுரையீரல் தந்துகிகள் வழியாக நுரையீரல் சிறு சிரைகள் (venules) மூலமாக, நுரையீரல் சிரையை அடைந்து அவற்றின் மூலமாக இடது ஏட்ரியத்தை சென்றடைகிறது.
 3. இருதயம் இரத்த சுற்றோட்டத்திற்கான அழுத்தத்தைக் கொடுக்கிறது.

இரத்த சுற்றோட்ட மண்டலத்தின் பணிகள்

 1. சீரணமடைந்த உணவின் மூலக்கூறுகளையும், ஆக்ஸிஜனையும் உடலின் அனைத்து செல்களுக்கும் எடுத்து செல்கிறது.
 2. அனைத்து செல்களிலிருந்தும் கழிவுப் பொருட்களையும், கார்பன்-டை-ஆக்ஸைடையும் சேகரித்து, கழிவு உறுப்புக்களுக்கு எடுத்து செல்கிறது.
 3. உடல் வெப்பத்தைச் சீராக்குகிறது. வளர்சிதை மாற்றத்தை உண்டுபண்ணும் திசுப்பகுதிகளில் உண்டாகும் வெப்பத்தை, உடலின் மேல்பரப்பிற்குக் கொண்டு சென்று வெளியேற்றுகிறது. தோலுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவை மாற்றியமைப்பதின் மூலம், உடல் வெப்பத்தைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கிறது.
 4. ஊக்கு நீர்களை (hormones) அவை சென்றடைய வேண்டிய இலக்குத் திசுக்களுக்கு எடுத்து செல்கிறது.

இருதய நோயை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளும் அவற்றின் பரவலும்

இருதய நோய் அனைத்து வயதினரையும் தாக்க கூடியது. ஆனாலும் இது நடுத்தர வயது மக்களையே அதிகம் தாக்குகிறது. ஆத்திரோஸ்கிலிரோசிஸ் எனப்படும் (atherosclerosis) இரத்தக் குழாய் தடிப்பினால் தான் இந்நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இரத்தக் குழாய் தடிப்பிற்கும், இருதய நோய்க்கும் ஒரு குறிப்பிட்டக் காரணிதான் காரணம் என்று கூற முடியாது.

சில பெரிய ஆபத்தான காரணிகள், இந்நோயின் ஆபத்தை அதிகரிக்கின்றன. அதிக அளவு சீரம் கொலஸ்டிரால், இரத்த அழுத்தம், புகை பிடித்தல், நீரிழிவு நோய், உடல் பருமன் ஆகியவை மிக முக்கியமான காரணிகள் ஆகும். பரம்பரையாக இருதய நோய் காணப்படுதல், உடலியக்க செயல்பாடுகளின்மை, மன அழுத்தம் ஆகியவை பிற காரணிகள் ஆகும்.

பல்வேறு ஆபத்தான காரணிகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

பிரிவு அ. மாற்றக் கூடியவை

சரியான சிகிச்சை குறுக்கீடு மூலம் இருதய சுற்றோட்ட நோய்களை குறைக்கக் கூடியவை என்று நிரூபிக்கப்பட்ட காரணிகள்

 1. புகைப்பிடித்தல்: இது இருதய துடிப்பை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. திராம்பஸ் (thrombus) எனப்படும் இரத்தக் கட்டிகளை உண்டு பண்ணுகிறது.
 2. செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளாகிய வெண்ணெய், நெய், முட்டை மஞ்சக்கரு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை அதிகமாக உண்பதால், பிளாஸ்மா கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கிறது. ஆத்திரோமா (atheroma) உருவாதலை மேன்படுத்துகிறது.
 3. குறைந்த அடர்த்தி லிப்போபுரத கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கும் போது இரத்த குழாய் தடிப்பும் அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம், ஸ்டிரோக் ஏற்படுவதையும் (Stroke) (மூளையில் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் அந்த பகுதிக்குரிய பாகங்கள் செயலற்றுப் போதல்) மற்றும் இருதயத்தின் செயல்பாடுகள் நின்று போதலையும் விரைவுப்படுத்துகிறது. அதிக கொழுப்பு, அதிக இனிப்புப் பண்டங்கள், அதிக உப்பு உண்ணும் உணவு பழக்க வழக்கங்கள்.

பிரிவு ஆ

சரியான சிகிச்சை குறுக்கீட்டின் (Intervention) மூலம் இருதய சுற்றோட்ட நோய்களை ஒரளவிற்கு குறைக்க கூடிய காரணிகள்.

நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகிய இன்சுலின் எதிர்ப்பு, (resistance) உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை இருதய நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.

உடலியக்கச் செயல்பாடின்மை : உடலியக்க செயல்பாடுகளின்மை உடல் பருமனை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க ஆக்ஸிஜனை அதிகம் செலவழிக்கும் உடற்பயிற்சிகளை (aerobic exercise) செய்ய வேண்டும். இத்தகைய உடற்பயிற்சிகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். டிரைகிளிசரைடுகள் அளவைக் குறைக்கும். அதிக அடர்த்தி லிப்போ புரத கொலஸ்டிரால் அளவை அதிகரிக்கும். எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

உடல் பருமன் : உடல் பருமன் இருதய நோய்களை உண்டாக்குவதில் முக்கிய ஆபத்துக் காரணி ஆகும். இது உயர் இரத்த அழுத்தத்தையும், நீரிழிவையும் உண்டாக்கும்.

பிரிவு இ

கீழ்கண்ட காரணிகளில் சரியாக சிகிச்சை குறுக்கீடு செய்வதன் மூலம் இதய சுற்றோட்ட நோய்களை குறைக்கலாம்.

உளவியல் காரணிகள் : மனச்சோர்வு மற்றும் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவை இருதய நோய்களை அதிகப்படுத்துகின்றன.

அதிக அளவு டிரைகிளிசரைடுகள் : இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும் போது உடல் பருமன், நீரிழவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் HDL அளவுகள் குறைதல் ஆகியவை ஏற்படுவதால், இருதய நோய்கள் உண்டாவது அதிகரிக்கிறது.

பிரிவு ஈ - மாற்ற முடியாதவை

வயது : வயது அதிகரிக்கும் போது, இருதய நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. 50-55 வயதினருக்கு ஆபத்து அதிகம்.

பாலினம் : ஆண்களுக்கு, பெண்களை விட இருதய நோய் பாதிப்பு இருமடங்கு அதிகம். பெண்களுக்கு கருவகத்தில் சுரக்கும் ஊக்குநீர்கள் (hormone) இருதய நோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் தீட்டு சுற்று நின்ற பிறகு (menopause) பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பரம்பரை : ஒரு குடும்பத்தில் தந்தைக்கு 55 வயதுக்கு முன்னும் தாய்க்கு 65 வயதுக்கு முன்னும் இருதய நோய் இருந்திருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இரத்த குழாய் தடிப்பு

போதுமான அளவு ஆக்ஸிஜனும், உணவுச்சத்துக்களும் இருதய தசைகளுக்கு அளிக்க முடியாத நிலையாகும். இதனால் இருதயம் செயலிழக்கிறது. இதன் காரணமாக ஆன்ஜைனா பெக்டோரிஸ் ஏற்படுகிறது. ஆன்ஜைனா பெக்டோரிஸ் ஏற்படும் போது மிகவும் இறுக்கமான, அழுத்தக் கூடிய, எரியக் கூடிய கடுமையான வலி, மார்பு பகுதி முழுவதும் ஏற்படும். கடுமையான உழைப்புக்குப் பிறகு இவ்வாறு ஏற்படும். இதயத் தசைகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் இந்நிலை ஏற்படுகிறது.

கொலஸ்டிரால் அதிகரிக்கும் போது கொழுப்புத் திசுக்களில் (atheroma) கொலஸ்டிரால் படிந்து இருதயக் குழாய் தடிப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. நமது இரத்தத்தில் மிக முக்கிய லிப்பிடுகளாகிய கொலஸ்டிராலும், டிரைகிளிசரைடுகளும், லிப்பிடுகளும், புரதங்களும் இணைந்தக் கூட்டுப் பொருளான, லிப்போ புரதங்களாக (Lipoproteins) காணப்படுகின்றன. லிப்போ புரதங்கள், கைலோமைக்ரான்கள் (chylomicron), அடர்த்தி மிக குறைந்த லிப்போ புரதம் (VLDL), அடர்த்தி குறைந்த லிப்போ புரதம் (LDL), அடர்த்தி அதிகமான லிப்போபுரதம் (HDL) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அடர்த்தி குறைந்த லிப்போபுரதம், (LDL), கொலஸ்டிராலை, கல்லீரலிலிருந்து உடலின் மற்றப் பகுதிகளுக்குக் கொண்டு செல்கிறது. எனவே அது இருதய நோய்களை உண்டாக்க காரணமாகிறது. அடர்த்தி அதிகமான லிப்போபுரதம் (HDL) கொலஸ்டிராலை உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்துப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்காகக் கல்லீரலுக்குக் கொண்டுச் செல்கிறது. எனவே தான் HDL சிறந்தது என்றும் LDL சிறப்பற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முறைகள்

 1. உடற்பயிற்சியை அதிகரிப்பதன் மூலம் HDL அளவை அதிகரிக்கச் செய்தல்
 2. உணவில் கொழுப்பு மற்றும் கொலஸ்டிராலைக் குறைப்பதன் மூலம் கைலோமைக்ரான்களின் அளவைக் குறைத்தல்.
 3. உணவில் மொத்தக் கொழுப்பின் அளவைக் குறைத்தல், செறிவுற்ற கொழுப்புகளின் அளவு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் (transfatty acids) அளவை உணவில் குறைப்பதால் உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதனால் VLDL அளவு குறைக்கப்படுகிறது.
 4. உணவில் GLOP நார்ச்சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் மலக்குடல் மூலம் கொலஸ்டிரால் வெளியேற்றத்தை அதிகரிக்கலாம். (GLOP- நீரில் கரையக்கூடிய நார்கள் உதாரணம்: Guargum, Legumes, Oat-bran and Pectin).

குறைந்த கொழுப்பு அடங்கிய திட்ட உணவு மேலாண்மை

குறிக்கோள்

 1. இருதயத்துக்கு அதிகப்படியான ஓய்வு
 2. உணவில் சத்துக்களின் அளவை சிறந்த முறையில் நிலை நிறுத்துவது.

திட்ட உணவின் அடிப்படைக் கொள்கைகள்

அதிக கலோரி, குறைந்த கொழுப்பு திட்டஉணவில், குறிப்பாக குறைந்த அளவு செறிவுற்ற கொழுப்பு, குறைந்த அளவு கொலஸ்டிரால், அதிக அளவு கூட்டு செறிவற்ற கொழுப்பு அமிலம் (PUFA) குறைந்த அளவு கார்போஹைடிரேட்டு, சரியான அளவு புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவு இந்நோய்க்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

சக்தி

உடல் எடை அதிகரிக்கும் போது, இருதயத்தின் வேலைப் பளுவும் அதிகரிக்கிறது. எனவே செறிவுற்ற கொழுப்பு அமிலங்களுக்குப் பதிலாக PUFA உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடைக் குறையும், மேலும் குறைந்தளவு இரத்த லிப்பிடுகளும் பெறப்படுகிறது. சக்தி உட்கொள்ளபடுவதும், செலவிடப்படுவதும் சமன் செய்யப்படும் போது உடல் எடை சரியாக பராமரிக்கப் படுகிறது. இதற்குச் சீரான உடற்பயிற்சி அவசியமாகிறது.

கொழுப்பு

இருதய நோயைக் கட்டுபடுத்தவும், தடுக்கவும் வல்ல ஒரே முக்கியக் காரணி நம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் கொழுப்பு ஆகும். நமக்குக் கிடைக்கும் மொத்த கலோரிகளில் 30 சதவிகிதம் மட்டுமே கொழுப்புகளிலிருந்து பெறப்பட வேண்டும். அதே சமயம் கடுமையான கட்டுப்பாடுகள் உடல் சோர்வையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். செறிவுற்றக் கொழுப்பு அமிலங்களின், கலோரிப் பங்களிப்பு 10 சதவிகிதத்திற்கு குறைவாகவும் PUFA வின் கலோரிப் பங்களிப்பு 10 சதவிகிதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். செறிவற்ற, ஒற்றைச் செறிவுராத (Mono unsaturated), கூட்டுச் செறிவுறாத கொழுப்பு அமிலங்களின் விகிதம் 11:1 என்ற அளவில் இருக்க வேண்டும். செறிவுற்றக் கொழுப்பு அமிலங்கள் இருதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும். ஒற்றைச் செறிவுறாத கொழுப்பு அமிலங்கள் பிளாஸ்மா கொலாஸ்டிரால் அளவைக் குறைத்து, HDL கொலஸ்டிரால் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த கொழுப்பு அமிலங்கள் கடலை எண்ணெயிலும், ஆலிவ் எண்ணெயிலும் காணப்படுகின்றன.

ஒமேகா-6-PUFA கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயிலும், கோழிக்கறி கொழுப்பிலும் காணப்படுகிறது. இது பிளாஸ்மா கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால், இருதய நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கிறது. ஒமேகா-3-PUFA மீனில் அதிகமாகக் காணப்படுகிறது. இது டிரை கிளிசரைடு அளவைக் குறைப்பதால், இருதயநோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு 100 முதல் 200 கிராம் மீன் வீதம் வாரத்திற்கு 2-3 முறை உண்பது இருதய நோய் வராமல் தடுக்கும். அடுமனைப் பொருட்களில் (pastries) மெல்லிய அடுக்குகளை உண்டாக்க உதவும்.

குறிப்பு

பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு அதிகம் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அடங்கிய மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒன்று வீதம் கொடுக்கப்பட வேண்டும். குறைவுத் திட்ட உணவில் இருப்பவர்களுக்கு (reducing diets) இது அவசியம். டீகாபி சர்க்கரையில்லாமல் குடிக்க வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயின் அளவு 15 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சைவ உணவு

சைவ உணவுக்கு எப்போதுமே நல்ல சாத்தியக் கூறுகள் உள்ளது. இவ்வுணவில் குறைந்தக் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் உள்ளது. மேலும் அதிக P/S விகிதம் (P=PUFA, S= செறிவுற்ற கொழுப்பு அமிலம்) கொண்டது. போதுமான நார்சத்து தரவல்லது.

P/S விகிதம் 0.5 அல்லது அதற்கு மேற்பட்ட விகிதம் திருப்திகரமானது. - ஹைடிரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்புகளில் (shortening and spread) டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை LDL கொலஸ்டிரால் அளவை அதிகரித்து HDL கொலஸ்டிரால் அளவைக் குறைக்கின்றன. இதனால் இரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவு அதிகரிக்கிறது. உணவில் கொலஸ்டிரால் உட்கொள்ளும் அளவு, ஒரு நாளைக்கு 300 மி.கி. அளவில் இருக்க வேண்டும். கொழுப்பிலிருந்து கிடைக்கும் கலோரிகளைத் தவிர்க்க, கூட்டுச் சர்க்கரை பொருட்களான ரொட்டி, தானியங்கள், முழு பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களைத் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது. குறைந்தக் கொழுப்புள்ள அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் சார்ந்தப் பொருட்களை உண்ணவேண்டும்.

கார்போஹைடிரேட்டுகள்

கலோரிகள் அளவைக் குறைப்பதற்காக கார்போஹைடிரேட்டு அளவும் குறைக்கப்பட வேண்டும். கூட்டுச் சர்க்கரை உணவுப் பொருட்கள் சிறந்தது. சுக்ரோஸின் அளவைக் குறைக்க சர்க்கரையின் அளவு குறைக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் போது சீரத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவும் குறையும்.

புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள்

அவ்வயதினருக்கு பரிந்துரைக்கப்பட்ட சரியான அளவின்படி தரவேண்டும்.

சோடியம்

உயர் இரத்த அழுத்தம் இருக்கும்போது சோடியம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

உணவும், உடற்பயிற்சியும்

இரண்டு வேளை முழு சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக மூன்று, நான்கு சிறிய அளவு சாப்பாடாக உண்ண வேண்டும். படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மாலை உணவு உட்கொள்ளப்பட வேண்டும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க சீரான உடற்பயிற்சி அவசியம்.

செயல்பாடுடைய உணவு

ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம், மனநிலை, உடலியல் செயல்பாடுகளின் திறன் ஆகியவற்றில் நல்ல விளைவுகைைள ஏற்படுத்தக் கூடிய உணவே செயல்பாடுடைய உணவு எனப்படும். (உ.ம்) எதிர் ஆக்ஸிஜனேற்றிகள், கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் உணவுகள், பைட்டோ வேதிப்பொருட்கள் இருதய நோய் ஏற்படாமல் ஒருவரைக் காக்கக் கூடியவை) வைட்டமின் C மற்றும் 8 கரோட்டீன் எதிர் ஆக்ஸிஜனேற்றிகள். கிச்சிலி வகைப் பழங்களில் வைட்டமின் C அதிகமாக உள்ளது. கீரைகள், ஆரஞ்சு நிற பழங்களிலும், காய்கறிகளிலும் கரோட்டினாய்டுகள் அதிகம் காணப்படுகிறது. பூண்டு, கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க வல்லது. ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு கொலஸ்டிரால் அளவைக் குறைக்கப் போதுமானது. அதிக நார்சத்து கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கும். ஆப்பிளில் உள்ள பெக்டின், கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதில் நல்ல செயல்பாடு உள்ளது. கொத்தவரங்காயில் உள்ள குவார்கம் (guargum), ஒட்ஸ், மஞ்சள், வெங்காயம், மற்றும் வெந்தயம் ஆகியவை கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கக் கூடிய உணவுகள். மொச்சைகள் மற்றும் காய்கறிகள் சீரம் டிரைகிளிசரைடுகள் அளவைக் குறைக்க வல்லது.

உயர் இரத்த அழுத்தம்

நம்முடைய சரியான இரத்த அழுத்தத்தை விட (120 மி.மீ. Hg/ 80 மி.மீ. Hg) உயர்வாக இருந்தால் அந்நிலை உயர் இரத்த அழுத்தம் எனப்படும். இது பலவகையான இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களின் அறிகுறியே.

உயர் இரத்த அழுத்தம் உண்டாகக் காரணம்

 1. பரம்பரை மற்றும் சுற்றுப்புறக் காரணங்கள்.
 2. உணர்ச்சிவசப்படும் படியான பிரச்சினைகள், தொல்லைகள்
 3. மனஅழுத்தம்.
 4. உடல் பருமன்
 5. அதிகமாக புகைப் பிடித்தல்
 6. சிறுநீரகக் கோளாறு (உம்) கிளோமுருலோ நெப்ரைடிஸ் (glomerulonephritis)
 7. அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள்
 8. இரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மை அதிகரித்தல் (viscosity)
 9. கார்டிஸோன், ஆல்டோஸ்டீரோன், அட்ரீனலின் மற்றும் நார்அட்ரீனலின் ஹார்மோன்கள் சுரப்பினால், இரத்த குழாய்கள் சுருங்கிப் போதல்

திட்ட உணவு மேலாண்மை

திட்ட உணவின் அடிப்படைக் கொள்கைகள்

குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு, குறைந்த சோடியம் தேவையான அளவு புரதம் கொடுக்கப்பட வேண்டும்.

சக்தி

உடல் பருமனாக உள்ளவர்களின் உடல் எடையை தேவையான அளவு குறைப்பதற்காக, குறைந்த கலோரி உணவு கொடுக்கப்பட வேண்டும். இலகுவான வேலை செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு, ஒரு கிலோ சரியான உடல் எடைக்கு 20 கலோரி வீதமும், நடுத்தர வேலை செய்பவர்களுக்கு 25 கலோரிகள் வீதமும் கலோரிகள் வழங்கப்பட வேண்டும்.

புரதம்

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு நாளைக்கு 60 கிராம் புரதம் அவசியம்.

கொழுப்பு

கிட்டத்தட்ட 20 கிராம் தாவர எண்ணெய் அனுமதிக்கப் படுகிறது.

கார்போஹைடிரேட்டு

கூட்டுச் சர்க்கரைப் பொருட்கள் திட்ட உணவு மேலாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சோடியம்

உணவில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது, இருதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் அளவு அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எடைக் குறைப்பும், சோடியம் கட்டுப்பாடும், குறைவான மற்றும் மிதமான உயர் இரத்த அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்தும். உப்பைச் சமையலில் சேர்க்கவோ சாப்பாட்டு மேசையில் வைக்கவோ கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகளாகிய ஊறுகாய், டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சிப்ஸ் போன்றவைத் தவிர்க்கப்பட வேண்டும்.

சோடியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு

நாம் சாதாரணமாக உண்ணும் உணவு 3 லிருந்து 6 கிராம் உப்பு சேர்க்கப்பட்டது. எனவே சாதாரண உணவையே சோடியம் கட்டுப்பாட்டிற்காக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மிகத் தீவிரமான சோடியம் கட்டுப்பாடு (200 - 300 மி.கி)

சமையலில் உப்பைப் பயன்படுத்தக் கூடாது. சோடியம் குறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தீவிரமான சோடியம் கட்டுப்பாடு (500 - 700 மிகி)

சமையலில் உப்பைப் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருட்களைக் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். குறைந்த பட்சமாக சோடியத்தை உணவில் சேர்ப்பது தீவிரமான இருதய செயலிழப்பு (Severe Congestive heart failure) உள்ளவர்களுக்கு ஏற்றது

மிதமான சோடியம் கட்டுப்பாடு (1000 - 1500 மிகி)

சமையலில் உப்பைப் பயன்படுத்தக் கூடாது. சோடியம் குறைந்த உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உப்பு அளந்து உபயோகப்படுத்த வேண்டும். இந்த அளவு உப்பு, பரம்பரையாக உயர் இரத்த அழுததம் உள்ளவர்களுக்கும், உயர் இரத்த அழுத்தத்தின் எல்லைக் கோட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்றது.

குறைவான சோடியம் கட்டுப்பாடு (2000 - 3000 மி.கி)

ஓரளவுக்கு உப்பைப் பயன்படுத்தலாம். உப்பு நிறைந்த உணவுப் பொருட்களுக்கு அனுமதியில்லை. சாப்பாட்டு மேசையில் உப்பு வைக்கக் கூடாது. இருதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு உணவில் தொடர்ந்து பயன்படுத்தும் அளவாக அமைய வேண்டும்.

உணவுப் பொருட்களில் காணப்படும் சோடியத்தின் அளவு

விலங்கு உணவுகளில் சோடியத்தின் அளவு கூடுதலாக இருக்கும். மாமிசம், மீன், பறவை இறைச்சி, பால், பாலாடைக் கட்டி ஆகியவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்ணக் கூடாதவை

 1. சமையலில் உப்பைச் சேர்க்கக் கூடாது. உண்ணும் போதும் சேர்க்கக் கூடாது.
 2. உப்பினால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய், டப்பாவில் அடைத்த உணவுப் பொருட்கள்
 3. உருளைக்கிழங்கு சிப்ஸ்
 4. வாசனை மற்றும் மசாலாப் பொருட்கள் மற்றும் சாஸ்கள்
 5. பாலாடைக்கட்டி, பீநட் பட்டர், உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய்
 6. உறைய வைக்கப்பட்ட பட்டாணி
 7. ஓடுடைய மீன்கள், கருவாடு
 8. அனைத்து அடுமனை உணவுப் பொருட்கள் மற்றும் ஆயத்த உணவுகள் ஆகும்.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்

2.89285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top