பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / காய்ச்சலுக்கான திட்ட உணவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

காய்ச்சலுக்கான திட்ட உணவு

காய்ச்சலுக்கான திட்ட உணவு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உடலின் உஷ்ணம் இயல்பு வெப்பநிலையான 98.4°F-க்குமேல் உயரும் போது, அதனை காய்ச்சல் என்கிறோம். இந்நிலை தொற்று நோய்கள், உடல் அழற்சி மற்றும் பல அறியப்படாத காரணங்களால் ஏற்படுகிறது.

காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவதாக, குறுகிய கால காய்ச்சல் (உ.ம்) சளி, இன்புளூயன்சா காய்ச்சல், இரண்டாவதாக நீண்ட கால காய்ச்சல் (உம்) காசநோய் மற்றும் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட தொடர்பறு காய்ச்சல் (உம்) மலேரியா.

காய்ச்சல் வரக் காரணங்கள்

 1. வெளிக்காரணிகளான பாக்டீரியா அல்லது பூஞ்சை அல்லது
 2. உள் காரணிகள் : ஆன்டிஜென்-ஆன்டிபாடி வினைகள், கட்டிகள் மற்றும் உடல் ஒவ்வாமை.

பாக்டீரியா மற்றும் பூஞ்சையினால் ஏற்படும் தொற்றுநோய்கள்

 • எலும்பு மஜ்ஜையிலுள்ள ஃபேகோசைட்டுகள் (Phagocytes) செயல்படத் துவங்குதல்
 • பைரோஜென் (Pyrogen) வெளியிடப்படுதல் (காய்ச்சலைத் தூண்டும் ஹார்மோன்)
 • புரோஸ்டாக்ளாண்டின் உற்பத்தி செய்யப்படுதல் (Prostaglandin)
 • ஹைப்போதலாமஸ்ஸிலுள்ள - உடல் வெப்பநிலையை ஒழுங்கியக்கும் மையம் தூண்டப்படுதல்
 • வெப்பநிலை அதிகமாகுதல்

வெளிக்காரணிகளால் காய்ச்சல் ஏற்படும் விதம்

வளர்ச்சிதை மாற்றங்கள்

 • காய்ச்சலின் போது நடைபெறும் வளர்சிதை மாற்றங்கள், காய்ச்சலின் வெப்பநிலை மற்றும் அதன் கால அளவு இவற்றினை அளவொத்ததாக அமைகிறது.
 • 19 செல்ஷியஸ் வெப்பநிலை உயரும்போது, 13 சதவிகிதம் வளர்சிதை மாற்றம் அதிகமாகிறது (1F விற்கு 7 சதவிகிதம் உயர்கிறது). ஓய்வற்ற தன்மையிலும் (restleSSness) உஷ்ணநிலை அதிகரித்து, கலோரியின் தேவையை அதிகரிக்கச் செய்கிறது.
 • கொழுப்புத் திசுக்களில் சேமிப்பு மற்றும் கிளைக்கோஜன் சேமிப்பு குறைதல்
 • டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சலின் போது, அதிக அளவில் புரதம் சிதைவதால் சிறுநீரகங்களின் வேலைப் பளு அதிகரித்தல்.
 • அதிகமாக வியர்த்தல் மற்றும் உடல் கழிவுகள் அதிகமாக வெளியேறுவதால், உடலின் நீரின் அளவு வேகமாகக் குறைதல்.
 • சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் வெளியேறுதல்.

திட்டஉணவு முறையின் நோக்கம்

காய்ச்சலின் போது உணவுகளைத் தயாரிக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை:

 1. நோய் உண்டாக்கும் நுண்ணுயிரியின் தன்மையும், அதன் வீரியமும்
 2. குணமடைவதற்கானக் காலம் மேலும் திட்டமிடும் உணவு கீழ்க்காணும் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

சக்தி (Energy)

திசுக்கள் அழிவதாலும், உடல் உஷ்ணநிலை அதிகரிப்பதாலும் சக்தியின் தேவை 50 சதவிகிதம் அதிகரிக்கிறது. ஒய்வற்ற தன்மையும் சக்தியின் தேவையை அதிகரிக்கிறது.

புரதம் (Protein)

பெரியவர்களுக்குக் காய்ச்சல் நீண்டகாலம் இருக்கும் போது 100 கிராம் புரதம் வரை பரிந்துரைக்கப்படுகிறது. இப்புரதம் நன்கு உபயோகப்பட வேண்டுமெனில், கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருக்க வேண்டும். நமது தினசரி உணவில் சாதாரண உணவிற்குப் பதிலாக அதிக அளவு புரதம் நிறைந்த பானங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். (உம்) பால்.

கார்போஹைட்ரேட் (Carbohydrate)

கிளைக்கோஜன் சேமிப்புகள் கார்போஹைட்ரேட் அதிக அளவு உட்கொள்ளுவதால் அதிகரிக்கிறது. குளுக்கோஸ் குறைந்த இனிப்புடைய எளிமையான சர்க்கரையாகும். இது இரத்த ஓட்டத்தில் எளிதில் உறிஞ்சப்படும். எனவேதான் காய்ச்சலின்போது எளிய கார்போஹைட்ரேட்டான குளுக்கோஸ் கொடுக்கப்பட வேண்டும்.

கொழுப்பு (Fat)

கொழுப்பினை உட்கொள்ளுவதால், சக்தியின் கூடுதல் தேவை சரி செய்யப்படுகிறது (35 கிராம் கொழுப்பு). ஆனால் உணவு உண்ண விருப்பமின்மையால் ஜீரணித்தல் மந்தமாகிறது.

உணவில் சூப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உப்பினை உணவுகளில் தேவையான அளவு தூவுவதன் மூலமும் சோடியம் குளோரைடின் தேவை பூர்த்தியாகிறது. பொட்டாசியம் நிறைந்துள்ள பழச்சாறுகளும் (Fruit Juices) உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

வைட்டமின்கள் (Vitamins)

கலோரிகளின் தேவை அதிகரிப்பதால், B தொகுப்பு வைட்டமின்களின் தேவையும் அதிகரிக்கிறது. மேலும் காய்ச்சலின் போது வைட்டமின் A மற்றும் அஸ்கார்பிக் அமிலத்தின் தேவையும் அதிகரிக்கிறது.

திரவ உணவுகள் (Fluid)

தோலின் மூலமாக ஏற்படும் இழப்பினைச் சரிசெய்யவும் மற்றும் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் தேவையான அளவு திரவ உணவுகள் உண்ண வேண்டும். தினசரி 2500-5000 மிலி என்ற அளவில் பருக வேண்டும். இந்த அளவினை சூப்புகள், பழச்சாறுகள் மற்றும் நீர் இவற்றை உட்கொள்ளுவதன் மூலம் பெறலாம்.

எளிதில் சீரணமாகுதல்

அதிக மசாலா மற்றும் எண்ணெய் அற்ற, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே பரிமாற வேண்டும். ஏனெனில், இவ்வகை உணவுகள் எளிதில் ஜீரணிக்கப்ட்டு உறிஞ்சப்படுகின்றன. உணவு மிக மிருதுவாகவும் அல்லது இயல்பான உணவாகவும் இருக்க வேண்டும்.

உணவு பரிமாறப்படும் இடைவேளை

உணவு சிறிய அளவுகளில் 2 அல்லது 3 மணிக்கு ஒருமுறை பரிமாறப்பட வேண்டும். இவ்வாறு பரிமாறப்படும் உணவு தேவையான ஊட்டச்சத்தினை தரவல்லது.

குறுகிய கால காய்ச்சல் - டைபாய்டு

டைபாய்டு கடும் காய்ச்சலைக் குறுகிய காலத்திற்கு ஏற்படுத்தும் ஒரு தொற்று நோயாகும். இக்காய்ச்சல் மனிதனை மட்டுமே பாதிக்கிறது.

சால்மோனெல்லா டைஃபி, டைஃபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவாகும். டைஃபாய்டு நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் அல்லது நோய்க்கிருமி தொற்று கொண்ட மனிதன் ஆகியவை. டைஃபாய்டு காய்ச்சலை உண்டாக்கும் காரணிகளாகும். இந்நோய் மற்றவர்களுக்குப் பரவுவதற்கு நோய்கிருமிகளால் மாசுபடுத்தப்பட்ட குடிநீரும், உணவுகளுமே காரணமாகும்.

நோயாளியின் மலம், சிறுநீர், கிருமி தொற்று கொண்ட மனிதன் (Carrier) அல்லது ஈக்கள் ஆகியவற்றால் குடிநீரும், உணவும் மாசுபடுத்தப்படுகின்றன.

அறிகுறிகள்

 • தொற்றினால் பாதிக்கப்பட்டு குடல் பகுதி வீங்கிக் காணப்படுதல், குடல் புண்கள் (Ulcers)
 • மண்ணீரலில் (Spleen) வீக்கம் மற்றும் இரத்தக் கசிவு (haemorrhage)
 • குடல் பகுதியிலுள்ள நிணநீர் திசுக்களில் வெள்ளைத் திட்டுகள் (peyers patches)
 • மேலும் டைஃபாய்டு நோயாளிகள் வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் மற்றும் கடுமையான வயிற்று வலியாலும் பாதிக்கப்படுவார்கள்.

திட்டஉணவின் கொள்கைகள் (Principles of Diet)

அதிக கலோரிகள், அதிக புரதம், அதிக கார்போஹைட்ரேட், அதிக திரவம், குறைந்த கொழுப்பு, குறைந்த நார்ச்சத்து மற்றும் காரம், எண்ணெய் அல்லாத உணவு (Bland diet) - ஆகியவையே டைஃபாய்டு நோயாளிகளுக்குத் தர பரிந்துரைக்கப்படுகிறது.

முதலில் தெளிந்த திரவ உணவும் (Clear fluid) பின்னர் முழு திரவ உணவும், அதற்கும் பின் மிருதுவான உணவும் தரப்பட வேண்டும். திரவ உணவுகள் டைஃபாய்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அதிக அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரதத்தின் தேவையை பூர்த்தி செய்யாது. ஆனால் திரவ உணவு வகைகள், தண்ணீர் மற்றும் (Electrolytes) அயனி திரவங்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மேலும் குடல் பகுதி பாதிக்கப்படுவதால், நார்ப்பொருள் மற்றும் மசாலாப் பொருள் போன்றவை உணவு திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.

டைபாய்டு காய்ச்சலின் போது சேர்த்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

 

தவிர்க்கப்பட வேண்டிய வேண்டிய உணவுகள்

குளுக்கோஸ் சேர்த்த பழச்சாறுகள், இளநீர், பால் மற்றும் பாலாடை தெளிந்த வேக வைத்த பருப்பு, அடுமனையில் சமைத்த மீன் (baked fish), பாலாடைக் கட்டி, தானியங்கள், காய்கறி சாறுகள், ரொட்டி, அவித்த உருளைக் கிழங்கு, பலவகைப்பட்ட மாவுக் கஞ்சிகள்.

வெண்ணெய், நெய், மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், கஸ்டர்டு சேர்க்கப்பட்ட சூப்புகள்.

இடைக்காலக் காய்ச்சல் (உ.ம்) மலேரியா

அனாபிலஸ் வகையைச் சேர்ந்த தொற்று உள்ள பெண் கொசு கடிப்பதால், மலேரியா காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. தோற்றுவித்த மலேரியா (induced malaria) வானது பிறவியோடுபட்ட மரபுவழி மூலமாகவும், இரத்தம் மூலமாகவும் (Blood Transfusion)) ஏற்படுகிறது.

அறிகுறிகள்

மலேரியாக் காய்ச்சலின் போது ஏற்படும் முக்கிய அறிகுறிகள் 4-6 மணி நேரம் குளிர்காய்ச்சல், பின்னர் காய்ச்சல் 41°C அல்லது அதற்கு மேலும் (hot state) மற்றும் வியர்த்தல் நிலை. இவ்வறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுகிறது. மலேரியாக் காய்ச்சலில் தோன்றும் மற்ற அறிகுறிகள் - சோர்வு, தலைவலி, மயக்கம், வயிறு மற்றும் குடல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் அறிகுறிகள் - பசியின்மை, குமட்டல் உணர்வு, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்றுப் பகுதி தசை வலி, முதுகு வலி மற்றும் உலர் இருமல் போன்றவையாகும். இந்த அறிகுறிகள் 4 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கும் போது மண்ணிரல் வீக்கம் (Splenomegaly) போன்றவை ஏற்படும்.

காய்ச்சலின் போது பின்பற்றப்படும் உணவுத் திட்டமே, மலேரியாவுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

நீண்ட காலக் காய்ச்சல் - காசநோய்

காசநோய், பேசில்லஸ் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் கல்லீரலை பாதிக்கிறது. மேலும் உள்ளுறுப்புகளான நிணநீர் கணுக்கள் அல்லது சிறுநீரகங்களையும் இந்நோய் பாதிக்கிறது.

அறிகுறிகள்

நுரையீரல் சார்ந்த காசநோயில் (Pulmonary) திசுக்கள் வீணாகுதல், அயற்சி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். நோயின் ஆரம்ப காலத்தில் அதிகக் காய்ச்சல், அதிக இரத்த ஓட்டம் மற்றும் மூச்சு வாங்குதல் காணப்படும். இந்நோய் நீண்ட நாட்களாக இருக்கும் போது, தொடர்ந்து குறைந்த அளவு காய்ச்சல் இருக்கும். இந்நோய் நீண்ட காலத்திற்கு இருப்பதினால் திசுக்கள் வீணாகுதலும் காணப்படும்.

இந்நோய் வளர்ச்சியடைந்த நிலையில், நோயாளியிடம் பின்வரும் அறிகுறிகள் காணப்படும். பசியின்மை, மார்பு வலி, சோர்வு, எடை குறைதல், அதிகமாக வியர்த்தல் மற்றும் நிரந்தர இருமல் காணப்படும். கல்லீரலிலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைவதால், சளியானது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். கல்லீரல் மற்றும் மற்ற முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்தால், இறப்பு நேரிடக்கூடும்.

திசுப் புரதம் அதிகமாகச் சிதைவடைதல் மற்றும் சோடியம் குளோரைடு, பொட்டாசியம் உப்புகள், அதிக அளவில் வீணாகுதல் போன்றவையும் காணப்படும்.

ஊட்டச்சத்து அளவுகளில் பின்பற்றப்படும் மாற்றங்கள்

சக்தி

சக்தியின் தேவை அதிகரிப்பதாலும், சரியான உடல் எடையைப் பராமரிப்பதற்கும் 2500 முதல் 3000 கி.கலோரிகள், ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

புரதம்

(Serum Albumin levels) இருப்பதனால், அதனை சரி செய்ய 80 கிராம் முதல் 120 கிராம் வரை புரதம் உட்கொள்ள வேண்டும்.

தாது உப்புக்கள்

காசநோய் நோயினால் ஏற்படும் புண்கள் குணமடைவதற்குக் கால்சியம் தேவைப்படுகிறது. இத்தேவையை அடைய, குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு, ஒரு லிட்டர் பால் குடிக்க வேண்டும். இரத்தக் கசிவு இருக்குமானால் இரும்புச் சத்து தேவையை ஈடுசெய்ய துணை உணவுகள் உட்கொள்ள வேண்டும். கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை செல்கள், இரத்தம் மற்றும் உடலின் திரவ நிலை இயல்பு நிலையை அடைய உதவுகிறது.

வைட்டமின்கள்

கரோட்டீன், வைட்டமின் A யாக மாறுவது குறைவதால், வைட்டமின் A நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும். வாரத்திற்கொரு முறை கல்லீரலும் தேவையை ஈடுகட்ட வைட்டமின் A நிறைந்த உணவும் (Supplement) மிகவும் இன்றியமையாதது. அஸ்கார்பிக் அமில குறைபாடு இருப்பதினால், தேவையை ஈடுகட்டவும், புத்துயிர்வூட்டவும், (regeneration process) புளிப்பு சத்து மிகுந்த பழங்களையும், அஸ்கார்பிக் அமிலம் நிறைந்த துணை உணவுகளையும் (Supplement) தர வேண்டும். இதனுடன் வைட்டமின் B.ம் கொடுத்தல் வேண்டும்.

திட்ட உணவின் கொள்கைகள்

அதிக கலோரி, அதிக புரதம் கொடுக்கப்பட வேண்டும். மேலும் காய்ச்சல் குறைந்து நிலைமை மேம்படும் போது மிருதுவான உணவு மற்றும் சாதாரண உணவு கொடுக்கப்பட வேண்டும்.

திட்ட உணவு மேலாண்மை வழிகாட்டுதல்

 • உணவு காரமில்லாமலும், ஜீரண அமிலங்களை தூண்டும் இயல்பற்றதாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
 • பசியை தூண்டுவனவாக இருக்க வேண்டும்.
 • ஆரம்ப நிலையில் அதிக கலோரி கொண்ட திரவ உணவும், மிருதுவான உணவும் பரிந்துரைக்க வேண்டும். இதன் பின் அதிக கலோரி நிறைந்த, மிருதுத் தன்மை கொண்ட சாதாரண உணவை பரிந்துரைக்க வேண்டும்.
 • ஆரம்ப நிலையில் 3 மணிக்கு ஒரு முறை திரவ உணவை அளிக்க வேண்டும். காய்ச்சல் குறையும் போது இந்த இடை வேளையை 4 மணிக்கு ஒரு முறை என்று அதிகப் படுத்தலாம்.
 • முட்டையைப் போன்ற முதல்தர புரதம் உள்ள உணவை அளிக்க வேண்டும்.
 • கொழுப்பு நிறைந்த உணவுகள், நார் பொருள் நிறைந்த உணவுகள், மசாலா உணவுகள், சீரணிக்க கடினமான உணவுகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

காசநோயினால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவிலும் அதிகமாகக் காணப்படுவதால் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக மார்ச் 23ம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்

2.98214285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top