பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / சிறுநீரக கோளாறுகளுக்கான திட்ட உணவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக கோளாறுகளுக்கான திட்ட உணவு

சிறுநீரக கோளாறுகளுக்கான திட்ட உணவு குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரகத்தின் வேலைகள்

நெப்ரான் எனப்படுவது உள்ளமைப்பிலும் செயல்பாட்டிலும் சிறுநீரகத்தின் ஓர் அடிப்படை அலகாகும். ஒவ்வொரு சிறுநீரகமும் 1 மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது. நம் உடலிலுள்ள திரவம் இவ்வித நுட்பமான அமைப்புகளுடைய நெப்ரான்களின் வழியே செல்லும்போது, நான்கு முக்கிய வேலைகளை செய்கிறது.

நான்கு முக்கிய வேலைகள்

 1. வடிகட்டுதல்  : நெப்ரான்கள் சிவப்பணுக்கள் மற்றும் புரதங்களைத் தவிர மற்ற பொருட்கள் இரத்தத்துடன் கலப்பதைத் தடுக்கின்றன.
 2. மீண்டும் உறிஞ்சுதல் : உடலுக்குத் தேவையான பொருட்கள் சிறுநீரகத்திலுள்ள நெளி குழல்களின் மூலம் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
 3. சுரத்தல் : கூடுதலான அயனிகளைச் சுரந்து நம் உடலின் கார அமில சமநிலை பராமரிக்கப்படுகிறது.
 4. கழிவு நீக்கம் : தேவையற்ற பொருட்கள் நீக்கப்பட்டு சிறுநீரை அடர்த்தியாக்குகிறது.

சிறுநீரகத்தின் முதன்மை பணி இரத்தத்தின் இயைபையும், கொள்ளவையும் ஒரே சீராகப் பாதுகாத்தலாகும். இதனை செயல்படுத்த சிறுநீரகம் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.

 1. நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் அளவிற்கதிகமான நீர் மற்றும் கரைபடு பொருட்களான (solutes) சோடியம், குளோரைடு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உண்டாகும் துணைப் பொருட்களான (by products) யூரியா போன்றவை வெளியேற்றப்படுகின்றன.
 2. சிறுநீரகம், உயிர்சத்து D-யின் செயல் திறன் வடிவமாகிய 125 டைஹைராக்ஸி கோலிகால்சிபெரால் உருவாக்கும் தளமாக அமைந்துள்ளது. இதன் சரியற்ற செயல்பாடு எலும்பு நோய்களை உருவாக்கும்.
 3. சிறுநீரகம் எரித்ரோபாய்டின் என்னும் பொருளை உற்பத்தி செய்கிறது. இது இரத்த சிவப்பணுக்கள் உருவாக்குதலுக்கு மிக அவசியமானது.
 4. குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக சிறுநீரகம் ரெனினை வெளியிடுகிறது. இது ஆல்டோஸ்டீரோன் உற்பத்தியை நேரடியாக தூண்டுகிறது.
 5. சிறுநீரகத்தின் செயல்பாட்டினால் பாரா தைராய்டு ஹார்மோன், கால்சிடோனின், இன்சுலின் மற்றும் காஸ்ட்டிரின் போன்றவற்றின் செயல்பாடுகள் குறைக்கப்படுகின்றன.

குளோமருலோ நெப்ரைடிஸ் (Glomerulonepritis)

குளோமருலை என்பது நெப்ரானின் தலைப்பகுதியிலுள்ள சிறிய இரத்த குழாய்கள். இவை தொற்றினால் வீக்கம் அடைந்து குளோமருலையின் செயல்பாட்டினைத் தடை செய்வதால் குளோமருலோ நெப்ரைடிஸ் என்னும் நோய் உருவாகிறது. இந்நோய் குழந்தைகள் மற்றும் வாலிப வயதினருக்கு (young adult) வரக்கூடியது. பொதுவாக, நோயாளி ஸ்ரெப்டோகாக்கல் தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாலோ, டான்சில் பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்தாலோ (tonsitis), நிமோனியா மற்றும் சுவாச மண்டலம் கிருமிகளால் பாதிக்கப்பட்டாலோ இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மருத்துவ அறிகுறிகள்

சில நோயாளிகளுக்கு கணுக்காலில் வீக்கம் மற்றும் கண்களைச் சூழ்ந்த பகுதிகளில் வீக்கம் காணப்படுகிறது. சில நோயாளிகள் தலைவலி, பசியின்மை, குமட்டுதல் மற்றும் வாந்தி எடுத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வை மங்குதல் ஏற்படலாம். இதன் முக்கிய அறிகுறிகள் சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்-ஹீமட்டூரியா (hematuria) மற்றும் சிறுநீரில் புரதம் வெளியேறுதல் - புரோட்டீனூரியா (Proteinuria). தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் மூச்சு விட திணறுதல் (Shortness of breath) போன்றவை சோடியம் தங்குவதாலும் மற்றும் உடலில் நீர் தேக்கம் (water retention) ஏற்படுதலாலும் உண்டாகிறது. இருதயம் சுருங்கி விரிய சிரமப்படும் நிலைக்கு டாக்கி கார்டியா (Tachy cardia) என்று பெயர். இதனோடு உயர் இரத்த அழுத்தமும் காணப்படலாம். இந்நோயாளிகளுக்கு பசியின்மை காரணமாக உணவு உட்கொள்ளுதலில் பாதிப்புகள் உண்டாகும். இந்நோய் தீவிரமடையும் போது ஆலிக்யூரியா (Oliguria) அல்லது அனுரியா (Anuria) ஏற்படும். இதனால் குறுகியகால சிறுநீரக பாதிப்புகள் (Acute renal failute) உண்டாகும்.

குளோமருலோ நெப்ரைடிஸ் நோயுற்றவர்களுக்கு குமட்டுதலும், வாந்தி எடுத்தலும் இருப்பதால் அவர்களுடைய உடலின் திரவ சமநிலையைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திசுக்களில் புரதம் சிதைவடைவதைத்தடுக்க, புரதம் சாரா கலோரி உணவுகளை அளிக்க வேண்டும்.

தொற்றுகளினால் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் அல்லது ஆலிக்யூரியா (Oliguria) போன்ற அறிகுறிகள் இருப்பின், உப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நோயாளியின் பசியுணர்வு முன்னேற்றம் அடையும்போது கீழ்க்கண்ட திட்டஉணவு மாறுதல்களை மேற்கொள்ளலாம்.

சக்தி

இந்நோய்க்கு, பரிந்துரைக்கப்பட்ட திட்டஉணவு அளவுகள் பொதுவான வழிகாட்டியாக அமைந்துள்ளது. இதில் அந்தந்த வயதினரின் எடையை பொருத்தும், அதனோடு 10% கூடுதலாக, தொற்றுகளின் பாதிப்பை பொருத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு 80 கிலோ கலோரி / கிலோ கிராம் உடல் எடை என பரிந்துரைக்கின்றது. புரதத்தின் அளவை அதிகரிப்பதைத் தவிர்த்து, தேவையான அளவு கலோரிகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிக கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அயனிகள் உள்ள திரவங்களான குளுக்கோஸினால் இனிப்பூட்டப்பட்ட பழரசங்கள், தேன், சவ்வரிசி மற்றும் தானிய வகை கஞ்சிகளைக் கொடுக்கலாம்.

புரதம்

இரத்தத்தில் யூரியா நைட்ரஜன் அளவு அதிகரித்து, ஆலிக்யூரியா நிலை காணப்படும்போது புரதத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிக வயது குழந்தைகளின் உணவில் ௦.5கி புரதம்/ கிலோ கிராம் உடல் எடையும், வயது குறைந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1இல் இருந்து 1.5 கிராம்/1 கிலோகிராம் உடல் எடை புரதம் என்பது சாலச் சிறந்தது. சிறுநீரகங்களுக்கு ஓய்வு தேவைப் படுவதால் குறைந்த புரத உணவு தரப்படுகிறது. அனுரியா தோன்றும் போது புரத உணவை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 20-40 கி புரதம் போதுமானது. அதில் 50 சதவீத புரதம் மாமிச புரதமாக இருத்தல் வேண்டும். பயறுகளும், நிலக் கடலையும் இரத்தத்தில் யூரியாவின் அளவை அதிகரிப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சோடியம்

தொற்றுகளால் வீக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காணப்படும்போது, சோடியத்தின் அளவை 500 அல்லது 1000 மி.கி என கட்டுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சோடியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவில் கீழ்க் காணும் உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அ. உப்பை சமைக்கும் போதும், சமைத்த பின்பும் தவிர்த்தல்.

ஆ கேக் மற்றும் பிஸ்கட்டுகளில் சோடியம் பை கார்பனேட் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கப்படுவதால் அவற்றைத் தவிர்த்தல்.

இ. சோடியம் பென்சோயேட் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்.

ஈ. அப்பளம், பாலாடைக் கட்டி, கொட்டைகள், மக்காச் சோளப் பொரி (pop corn), பிஸ்கட்டுகள் மற்றும் உப்பிட்ட சிப்ஸ்(chips).

உ உலர்ந்த, உப்பிட்ட பன்றி இறைச்சி (bacon), பதப்படுத்தப்பட்ட பன்றியின் தொடைப்பகுதிகள் (Ham) மாமிசத்தை வேக வைத்த நீர், வியாபார ரீதியில் விற்கப்படும் சாஸ் (Sauces).

ஊ. மோனோ சோடியம் குளோடாமேட் - அஜினமோட்டோவை பயன்படுத்தி சமைக்கப்பட்ட சீன உணவு வகைகள் மற்றும் பிரியாணி.

எ. தனிப்பட்ட நிறுவனங்களின் சத்து பானங்கள் - போன்விட்டா, மற்றும் சாக்லேட் பானங்கள்.

ஏ. உலர்ந்த பழங்கள் மற்றும் கருவாடுகள். மிதமான சோடியம் அடங்கிய உணவுகள் - இவற்றை கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் தரப்பட வேண்டும்.

ஐ. சிறிய அளவில் உபயோகப்படுத்தப்பட வேண்டியவை (miscelaneous). தனியா, சீரகம், மஞ்சள் மற்றும் வெல்லம்.

பொட்டாசியம்

சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்யாவிடில், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கப்பட்டு இருதயம் சீராக வேலை செய்யாமல், நின்றுவிடும். மிக குறைந்த அளவு பொட்டாசியம் உட்கொள்ளுதலும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதே. அனைத்து பழங்களும், காய்கறிகளும் பொட்டாசியத்தை உள்ளடக்கியவை. ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய், அன்னாசி பழம் போன்றவற்றில் மிக குறைந்த அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே இவற்றை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை கொடுக்கலாம்.

கொட்டைகள், வெல்லம், இளநீர், உடனடி காப்பி, சாக்லேட் மற்றும் கோகோ பொடிகள் மிக அதிக அளவில் பொட்டாசியம் உடையவை. இவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

காய்கறிகளில் உள்ள பொட்டாசியத்தை வெளியேற்ற ‘லிட்ச்சிங்' (leaching) முறையைப் பயன்படுத்தலாம். அதாவது, அதிக அளவு நீரில் காய்கறிகளை வேக வைத்து நீரை அகற்றுதல். மசாலாப் பொருட்களில் பொட்டாசியம் அளவு அதிகமாக காணப்படுவதால், குறைந்த அளவே பயன்படுத்துதல் வேண்டும்.

உணவில் புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியத்தைக் கட்டுப்படுத்தும் பொழுது தேவையான கலோரிகள் கிடைப்பது கடினம். புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாகவும், கலோரிகளைத் தரக்கூடிய உணவுகள் - சர்க்கரை, லாலிபாப் மிட்டாய்கள் (olipop) சவ்வரிசி, சமைக்கப்பட்ட இனிப்பு வகைகள், பஞ்சு மிட்டாய்கள், உப்பிடாத வெண்ணெய், உப்பற்ற மார்கரின், டால்டா, எண்ணெய், நெய் போன்றவையாகும்.

நெப்ரோடிக் சின்ரோம்

குளோமருலோ நெப்ரைடிஸ் நோய் தீவிரமடையும் போது நெப்ரோடிக் சின்ரோம் ஏற்படக் கூடும். மேலும் நீரிழிவு நோய், மருந்துகள் மற்றும் நச்சுப் பொருட்கள் உடலினுள் செல்வதாலும் இந்நோய் ஏற்படும்.

அறிகுறிகள்

நெப்ரோசிஸ் நோயாளி, புரோட்டீனுயூரியா (Proteinuria) மற்றும் தொற்றுகளால் ஏற்படும் வீக்கத்தால் கல்லீரல் பருமன் (fatty liver) ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். சிறுநீரில் அதிக அளவில் ஆல்புமின் மற்றும் பிளாஸ்மா புரதங்கள் வெளியேறுவதால் திசுக்கள் சிதைவடைந்து, கல்லீரல் வீக்கமடைகின்றது. மேலும் ஊட்டச்சத்து குறைவினால் தொற்று நோய்களால் எளிதில் பாதிக்கப்பட கூடும்.

திட்ட உணவு

நெப்ரோசிஸ் நோயாளிக்கு கட்டுப்படுத்தப்பட்ட புரதம், அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு கட்டுப்பாடும், திரவ கட்டுப்பாடும் உள்ள உணவு பரிந்துரைக்கப்படுகிறது. உயிர்ச்சத்து துணை உணவுகள் முக்கியமாக, உயிர்ச்சத்து C அடங்கியுள்ள உணவுகளை அளிக்க வேண்டும். பயறுகளில் உள்ள தரம் குறைந்த புரதத்தை ஈடு செய்ய, அவற்றை தானியங்கள் மற்றும் பால் போன்றவற்றோடு சேர்த்து உண்ணுவதால் புரதத்தின் தரம் மேம்படுகிறது. அதிக தரம் வாய்ந்த புரதங்களான முட்டை, திட்ட உணவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சக்தி மற்றும் புரதம்

புரதம், திசுக்களின் கூட்டிணைப்பில் முக்கிய பங்கு வகிப்பதால், தேவையான அளவு கிலோ கலோரிகள் உணவின் மூலம் பெறப்படல் வேண்டும். அதாவது 2000 கிலோ கலோரிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

நோயாளிக்கு பசியுணர்வு குறைவாக காணப்படும். எனவே பசியைத் தூண்டும் உணவுகளையும், மென்மையான உணவினையும் கொடுக்கலாம். மிதமான புரதம் அதாவது 05-06 கிராம்/கி.கி என்ற அளவில் தேவைப்படுகிறது. சிறுநீரில் புரதம் வெளியேறுதல் 10 கிராம்/நாள் என்ற அளவை விட அதிகரிக்கும்போது புரத பற்றாக்குறை (protein malnutrition) ஏற்படுகிறது.

சோடியம்

சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவும் மருந்துகள் மற்றும் சோடியம் கட்டுப்பாடுகள், திரவ தேக்கத்தையும் உயர் இரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 2 கிராம் அல்லது அதனிலும் குறைவாக 500 மி.கி அளவே வழங்க தக்க அளவாகும். சமைக்கும் போதும், சமைத்த பின்பும் உப்பு சேர்த்தல் கூடாது.

குறைந்த சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம். வீக்கம் வற்றி உடல் தேறும் போது, சோடியத்தின் அளவை அதிகரிக்கலாம். பொட்டாசியம் அடங்கிய துணை உணவுகளை அளிப்பது மிக அவசியம். ஏனெனில் கால்சியம் மற்றும் பொட்டாசியக் குறை நோய்கள், கடுமையான புரோட்டீனுரியா அறிகுறிகளுடன் காணப்படும்.

சிறுநீரகம் செயலற்று போதல்

நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், திட்டஉணவு மேலாண்மை

குறுகிய காலத்தில் சிறுநீரகங்கள் செயலற்று போதல்

சிறுநீரகத்தின் செல்கள் திடீரென பாதிக்கப்படுவதால், சிறுநீரகத்தின் வேலைகள் நின்றுவிடுகிறது. இந்நிலையில் சிறுநீரகங்கள் இரத்தத்தின் கூட்டமைப்பை சரிவர பராமரிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

நோய்க்கான காரணங்கள்

விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பு, உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரத்த கசிவு (internal haemorrhage), புண்கள் போன்றவை, குறுகிய காலத்தில் சிறுநீரகங்கள் செயலிழக்க காரணமாகிறது. இத்தகைய நிலைகளில் சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவுபடுகிறது.

 • தீப்புண்களினால் பிளாஸ்மாவை இழத்தல்.
 • மூக்கின் வழியாகவும் வாயின் மூலமாகவும் கார்பன் டெட்ரா குளோரைடு அல்லது பாதரசம் போன்ற நச்சுக்கள் உள்ளே செல்லுதல்.
 • அறுவை சிகிச்சையினால் ஏற்படும் அதிர்ச்சி.
 • நெப்ரைடிஸ் மற்றும் நெப்ரோசிஸ் போன்றவைகளும் சிறுநீரகங்கள் செயலிழக்க காரணங்களாகிறது.

அறிகுறிகள்

 • யூரிமியா - யூரியா மற்றும் சிறுநீரக கழிவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் தங்கிவிடுதல்.
 • அசோடீமியா - நைட்ரஜன் பகுதிப் பொருட்கள் இரத்தத்தில் சேர்க்கப்படுதல்.
 • ஆலிக்யூரியா - சிறுநீரின் அளவு குறைவாக காணப்படல் (500 மி.லிட்டருக்கும் குறைவாக).
 • அனுரியா - சிறுநீரின் அளவு மிக குறைவாக இருத்தல் அல்லது சிறுநீரை உற்பத்தி செய்ய இயலாத நிலை (100மி.லி / நாள் என்ற அளவில் குறைவாக இருத்தல்).
 • சீரம் (serum) பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும் போது, திசு புரதம் சிதைவடைந்து தேவையான கலோரிகளைத் தருகிறது.
 • பாஸ்பேட், சல்பேட் போன்றவற்றின் அளவு அதிகமாகவும் சோடியம், கால்சியம் மற்றும் பை - கார்பனேட் போன்றவைக் குறைவாகவும் காணப்படும்.
 • நோயாளிகள் செயலற்ற தன்மை உடையவராக (lethargic), பசியுணர்ச்சியற்றவராகவும், குமட்டுதல் மற்றும் வாந்தி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவராகவும் காணப்படுவர்.

சக்தி

இந்நோயாளிகளுக்கு குறைந்த அளவு 600-1000 கிலோ கலோரிகள் தேவைப்படுகிறது. இந்நோயின் தொடக்க காலத்தில், வாய் வழியாக உட்செல்லும் உணவின் அளவு குறைவாக இருக்கும். ஏனெனில், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினால் நோயாளி பாதிக்கப்பட்டிருப்பர் 24 மணி நேரத்தில் 100கி குளுக்கோஸை நரம்பின் வழியே (Intravenous) செலுத்தி புரதம் சிதைவடைவதைத் தடுக்க வேண்டும்.

புரதம்

நோயின் ஆரம்ப காலத்தில் புரதமற்ற உணவு செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்ற தேவையில்லாத நோயாளி (nondialysed) களுக்கு வழங்கப்படுகிறது. இரத்தத்தில் யூரியாவின் அளவைப் பொருத்து உணவில் புரதத் தேவை மாறுபடுகிறது. கார்போஹைட்ரேட் திசு புரத சிதைவடைதலைத் தடுப்பதற்கு குறைவான அளவு அதாவது 100 கிராம் நாள் என்ற அளவில் தேவைப்படுகிறது.

திரவம்

சிறுநீர் வெளியேறும் அளவை பொறுத்து திரவத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட திரவத்தின் அளவு = 500 மி.லி. + சிறுநீர் வெளியேறுவதால் இழக்கப்படும் திரவம் + உணவுக்குழாயில் இழக்கப்படும் திரவம். வியர்த்தலினால் இழக்கப்படும் திரவத்தினை ஈடு செய்ய கூடுதலாக 500 மி.லி. திரவம் நோயாளிக்கு அளிக்கப்பட வேண்டும்.

சோடியம்

சிறுநீரில் வெளியேறும் சோடியத்தின் இழப்பைப் பொருத்து, சோடியம் அளிப்பது தீர்மானிக்கப்படுகிறது. 500 மி.கி - 1000 மி.கி/ நாள் என்ற அளவில் கொடுக்கலாம். டயலிசிஸ் (dialysis) நோயாளிக்கு 1500-2000 மி.கி/நாள் என்ற அளவில் அளிக்கலாம்.

பொட்டாசியம்

பொட்டாசியம் தேவைப்படும் அளவு நிணநீரிலுள்ள பொட்டாசியத்தின் அளவைப் பொருத்தது. ஹைபர்கலிமியா (பொட்டாசியம் நஞ்சாதல் என்னும் நிலை) இருதயத்திற்கு அதிக கேட்டை விளைவிக்கும். பொட்டாசியம் அதிகமுள்ள தக்காளிப் பழச்சாறு, காபி, கோக்கோ போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

நீண்ட காலத்திற்கு சிறுநீரகங்கள் செயலற்று போதல்

யூரியாவின் அளவு இரத்தத்தில் மிக அதிகமாக இருப்பதால், இந்நிலைக்கு யூரிமியா என்றும் பெயர். 90 சதவீத சிறுநீரக செல்கள் செயலற்று சிதைவடையும் போது இந்நிலை ஏற்படுகிறது. இது குறுகிய கால குளோமருலோநெப்ரைடிஸ் மற்றும் நெப்ரோடிக் சின்ரோம் போன்ற நோய்களின் கடைசி நிலையாகும்.

காரணங்கள்

 1. நெப்ரைடிஸ் அல்லது நெப்ரோசிஸ்
 2. நோய் தீவிரமடைதல்.
 3. சிறுநீர் குழல்கள் நீண்டகால தொற்றுகளால் பாதிக்கப்படுதல்.
 4. சிறுநீரக கற்கள்.
 5. உயர் இரத்த அழுத்தம்.
 6. நச்சுப் பொருட்கள் சூழ்ந்த நிலையில் வாழ வேண்டிய நிலை.

நீண்ட காலத்திற்கு சிறுநீரகம் செயலற்று போகும் நிலை ஒருமுறை ஏற்பட்டுவிட்டால் அதன் சீரான செயல்பாடுகளான உடலின் திரவநிலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல், அயனிகள் திரவ சமநிலை, வளர்சிதை மாற்றத்தினால் உண்டாகும் கழிவுப் பொருட்களை அகற்றுதல் போன்ற வேலைகள் பாதிக்கப்படுகின்றன.

அறிகுறிகள்

குளோமரூலர் வடிகட்டுதல் அளவீடு (glomerular filteration rate GFR) குறைவுபட்டு, நைட்ரஜன் கழிவுப் பொருட்களை வெளியேற்ற இயலாத நிலை ஏற்படும்போது, நீண்ட கால சிறுநீரக செயலற்ற நிலையின் அறிகுறிகள் தோன்றுகிறது. GFR அளவு நிமிடத்திற்கு 10 மி.லி என்ற அளவில் குறைவுபடும் பொழுதும் (இயல்பான நிலை 120 மி.லி / நிமிடம்) நிணநீரில் யூரியா நைட்ரஜன் 280 - 90மி.கி/நாள் (இயல்பான நிலை 8-18 மி.கி/நாள்) என்ற அளவிலும் இருக்கும் போது, திட்டஉணவு மாறுதல்கள் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். GFR குறைவுபட்டால், தினசரி புரத உட்கொள்ளுதலில் கட்டுப்பாடுகள் தேவை.

 • உணவுக் குழலில் குமட்டுதல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். நோயாளியின் சுவாசத்தில் அம்மோனியா வாசம் வீசும். வாய்ப்புண்களும், விக்கலும் சீரான உணவு உட்கொள்ளுதலைத் தடுக்கும்.
 • நரம்பு மண்டலம் - நோயாளிகள் அரை தூக்க நிலையிலிருப்பர். எளிதில் எரிச்சலடையும் தன்மை உடையவராகவும், இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்க நிலைக்கு (Coma) செல்பவர்களாகவும் இருப்பர்.
 • உயர் இரத்த அழுத்தம் இருப்பின் - தலைவலி, தலை சுற்றுதல் (dizziness), பார்வை இழப்பு ஏற்படும்.
 • இருதயத்தின் செயல்பாடுகள் தீவிரமாக பாதிக்கப்படுகின்றன.
 • ஹைபர்கலிமியா (இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தல்) நோய் முற்றி, இதயம் சுருங்கி விரிதலை தடை செய்யும்போது, மரணம் நேரிடும்.
 • நீர் வற்றி போதல், இரத்தத்தில் பொட்டாசியத்தின் அடர்வு குறைதல், (depletion) நிணநீரில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தல், இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்தல் (acidosis),

தொற்றுகளால் எளிதில் பாதிப்படையும் தன்மை போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

சிகிச்சையின் முக்கிய குறிக்கோள்கள்

 1. மிக சிறந்த ஊட்டச்சத்து நிலையில் உடலைப் பேணுதல்.
 2. இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து நச்சுத் தன்மை உண்டாக்குதலைக் குறைத்தல்.
 3. புரத சிதைவடைதலைத் தடுத்தல்.
 4. நோயாளியின் உடல் நலம் தேற செயல்படுதல்
 5. சிறுநீரகம் செயலற்று போகும் நிலையைத் தாமதப்படுத்துதல்.
 6. டயலிசிஸ் செய்வதை தாமதப்படுத்துதல்.

சக்தி

புரதம், திசு புரத சேர்க்கைக்கு ஈடு செய்யப்படுவதால் (Spare protein) போதுமான அளவு கிலோ கலோரிகள் தேவைப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவு கலோரிகள் கிடைக்கப் பெறாவிடில், திசுக்கள் வேகமாக சிதைக்கப்பட்டு, இரத்தத்தில் யூரியா மற்றும் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பெரியவர்களுக்கு 35-45 கிலோ கலோரிகள்/கி.கி உடல் எடை உள்ளவர்களுக்கு சிறந்தது அல்லது 2000-3000 கிலோ கலோரிகள் நாள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

புரதம்

சிறுநீரகங்களில் செயலற்ற தன்மை ஏற்படும் போது ஓய்வு தேவை. எனவே தினசரி புரதத்தின் அளவை குறைத்து 05கி/கி.கி உடல் எடை என நிர்ணயிக்கலாம். டயலிசிஸ் நோயாளிகளுக்கு 10 கி புரதம்/கி.கி உடல் எடை என்ற அளவில், அமினோ அமில இழப்பை ஈடு செய்ய தேவைப்படுகிறது.

கார்போஹைடிரேட் மற்றும் கொழுப்பு

நீண்ட கால சிறுநீரகங்கள் செயலற்ற தன்மை நோயாளிகளுக்கு சீரம் (serum) டிரைகிளிசரைடுகள் அதிகமாக காணப்படும். இதனைக் குறைக்க, கார்போஹைட்ரேட், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்டீரால் மற்றும் கூட்டு செறிவற்ற கொழுப்பு (polyunsaturated) போன்றவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் வேண்டும்.

பொட்டாசியம்

பொட்டாசியத்தின் தேவை 1 மோல்/கி.கி உடல் எடை என்ற அளவில் கட்டுப்பாடு தேவை. உணவில் கொடுக்கப்பட வேண்டிய பொட்டாசியத்தின் அளவானது, நோயாளியின் இரத்தத்தின் பொட்டாசியத்தின் அளவு, சிறுநீர் வெளியேறும் அளவு மற்றும் செயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரித்தலின் (dialysis) போது ஏற்படும் கழிவுகளில் (dialysate) பொட்டாசியத்தின் அளவு போன்றவற்றைப் பொருத்து மாறுபடும்.

சோடியம்

சீரத்தில் (serum) அடங்கியுள்ள சோடியத்தின் அளவைப் பொருத்தும், சிறுநீரிலுள்ள சோடியத்தின் அளவைப் பொருத்தும் திட்ட உணவில் சோடியத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. தொற்றுக்களால் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதயம் செயலற்று போதல் (congestive heart failure) போன்ற அறிகுறிகள் தென்படும் போது திட்டஉணவில் சோடியத்திற்கு கட்டுப்பாடுகள் அவசியம்.

உயிர்ச்சத்துக்கள்

டயலிசிஸ் நோயாளிகளுக்கு, செயற்கை முறையில் இரத்தம் சுத்திகரிக்கப்படும் போது அஸ்கார்பிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து B இழப்பு ஏற்படும். பழங்களையும் சமைக்காத காய்கறிகளையும் திட்டஉணவு கட்டுப்படுத்துவதால், இவ்வுயிர்ச்சத்துக்கள் உட்கொள்ளும் அளவும் குறைவுபடுகிறது. போலிக் அமிலமும், பைரிடாக்ஸின் (Pyridoxine) தேவையும் அதிகரிக்கிறது. உயிர்ச்சத்து D யின் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதால் அதனை ஈடு செய்ய வேண்டும்.

திரவங்கள்

திரவ உட்கொள்ளுதல் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். வீக்கமின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தம் இன்றி, இயல்பான சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும் நிலையில் 500 மி.லி திரவம் அளிக்கலாம்.

சிறுநீரக கற்கள் மற்றும் யூரோலித்தியாசிஸ் (urolithiasis)

 • சிறுநீரக கற்கள் சிறுநீரகத்திலோ, சிறுநீர் குழாய்களிலோ, சிறுநீர் பையிலோ அல்லது சிறுநீர் புற வழியிலோ (Urethra) காணப்படும்.
 • 90% சதவீத கற்கள் கால்சியத்தால் ஆனவை. தனி நபருடைய ஊட்டச்சத்து நிலை, உணவு உட்கொள்ளும் முறைகள், சுற்றுச்சூழல் காரணங்கள் உதாரணமாக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு (humidity) போன்றவற்றைப் பொருத்து சிறுநீரக கற்கள் உண்டாகும்.
 • மிதமான தட்பவெப்பநிலையில் வெளியேறும் சிறுநீரின் அளவு குறைந்து, யூரேட்டுகள், ஆக்ஸலேட்டுகள் மற்றும் கால்சிய உப்புகளால் அடர்வூட்டப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் குழல்கள் தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், சிறுநீரக கற்கள் உருவாகும். இந்தியர்களுக்கு உருவாகும் சிறுநீரக கற்களில் பெருமளவு கால்சியம் ஆக்ஸலேட்டு வகையைச் சார்ந்தது. திட்டஉணவு, ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் பியூரினை குறைவான அளவில் கொண்டிருக்க வேண்டும். உணவின் மூலம் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுகளை உட்கொள்ளுதல் குறைக்கப்பட வேண்டும். உட்கொள்ளும் திரவத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் வெளியேறும் சிறுநீரின் அளவை அதிகரிக்கலாம். அடர்வு குறைந்த சிறுநீர் (dilute urine) சிறுநீரக கற்களை உருவாக்காது.
 • கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட்டுகள் மற்றும் கார்பனேட்டுகள் அடங்கிய சிறுநீரக கற்களை உடைய நோயாளிகளின் சிறுநீர் காரத்தன்மை உடையதாக இருப்பதால், அமில - சாம்பல் திட்டஉணவு (Acid-ash) கொடுக்கப்படுகிறது. அமில சாம்பல் திட்ட உணவில் சிறுநீரின் P மதிப்பு 4.5 லிருந்து 5 வரையிலும், கார சாம்பல் (Alkaline ash) திட்ட உணவில் சிறுநீரின் P மதிப்பு 7.6 லிருந்து 8 வரை பராமரிக்கப்பட வேண்டும்.

அ. அமில சாம்பல் திட்டஉணவு திட்டமிடல்

மிதமான அளவு உப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தாராளமாக திரவம் உட்கொள்ளப்பட வேண்டும். திட்ட உணவிற்காக தேர்ந்தெடுக்கும் பழங்களும், காய்கறிகளும் 25 மி.லிட்டருக்கும் குறைவான காரத்தை (base) கொண்டிருக்க வேண்டும்.

ஆ, கார சாம்பல் திட்டஉணவு திட்டமிடல்

யூரிக் அமில கற்கள் மற்றும் சிஸ்டைன் கட்டிகளை உடைய நோயாளிகளுக்கு கார சாம்பல் திட்டஉணவு வழங்கப்படுகிறது. கார நிலையை உருவாக்கும் உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அமில நிலை உருவாக்கும் மாமிசம், முட்டை மற்றும் தானியங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

இ. குறைந்த அளவு ஆக்ஸ்லேட்டுகளைக் கொண்ட திட்டஉணவு

ஆக்ஸலேட்டுகளைக் கொண்ட சிறுநீரக கற்களால் பாதிக்கப்படும் நோயாளிகள், அவரை, கோக்கோ, உருளைக் கிழங்கு, பசலைக்கீரை, டீ மற்றும் தக்காளிப் பழம் போன்ற ஆக்ஸலேட்டுகள் செறிந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

திரவம்

ஒரு நாளைய திட்ட உணவில் கட்டுபாடற்ற அளவில் அதாவது 3000 மி.லி அல்லது அதற்கு மேலும் கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியம். அதிக அளவு திரவம் சிறுநீர் அடர்வாக்கப் படுவதைத் தடுக்கிறது.

டயலிசிஸ்

நமது உடலிலுள்ள சிறுநீரகங்கள் இயல்பாக செய்யும் வேலைகளை, செயற்கையாக இயந்திரங்களைக் கொண்டு செய்யும் முறைக்கு ‘டயலிசிஸ்’ என்று பெயர். சிறுநீரகங்கள் வேலை செய்யாமல் இருக்கும் போது இம்முறை பயன்படுத்தப்படுகிறது. டயலிசிஸ் முறை கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், உப்புக்கள் மற்றும் அதிக அளவு திரவங்களை வெளியேற்றவும் உதவுகிறது. அது மட்டுமின்றி, இரத்தத்திலுள்ள வேதிப் பொருட்களான பொட்டாசியம், சோடியம் மற்றும் குளோரைடுகளின் அளவுகளை பராமரித்து, இரத்த அழுத்த்தை கட்டுப்படுத்துகிறது.

செயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும்போது நோயாளிகளின் இரத்தம் அவர்களுடைய உடலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டு, இரத்தத்தை மட்டும் ஊடுருவ விட்டு, அதிலுள்ள மற்ற பொருட்களை புகவிடாமல் தடுக்கிற சவ்வு படலங்களைப் கொண்ட (semi permeable) சுருள் குழாய்களடங்கிய இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது. இச்சவ்வு படலங்கள் நிரந்தரமாக ஹைப்போடோனிக் டயலைசிங் திரவத்தில் (hypotonic dialyzing fluid) மூழ்குமாறு பொருத்தப்பட்டிருப்பதால், இரத்தத்திலுள்ள நைட்ரஜன் அடங்கிய கழிவுகள் (dialysate) நீக்கப்பட்டு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இச்சவ்வு படலங்கள் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கிறது.

அதே சமயம் இரத்ததிலுள்ள புரதங்கள் வெளியேறுவதையும் தடுக்கிறது. ஆயினும் இச்செயல்முறையில் ஏற்படும் கழிவுகளில் அமினோ அமில இழப்பு நேரிடுகிறது. ஒரு வாரத்தில், செயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரித்தல் 3 முறைகள், 3 முதல் 4 மணி நேரத்திற்கு செய்யப்படுவதால், நோயாளியின் நைட்ரஜன் கழிவுப் பொருட்களை கணக்கில் கொண்டு, அவர்களுடைய புரத திட்ட அளவை கட்டுப்படுத்த வேண்டும். புரதத்தை திட்ட உணவில் கட்டுப்படுத்தாவிடில் அடிக்கடி டயலிசிஸ் செய்ய நேரிடும்.

குடலிடை சவ்வு செயற்கை முறை சுத்திகரிப்பு (Peritoneal dialysis)

இம்முறையில் சுமார் 30 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்கள் வரை, 1 முதல் 2 லி. இரத்த சுத்திகரிப்புத் திரவத்தை (Dialysis fluid) மார்பறையினுள் செலுத்தி, செயல்முறை முற்று பெற்றவுடன் வெளியேற்றுதலாகும். இரத்தத்தில் யூரியாவின் அளவு ஏற்கத்தக்க வகையில் அமையும் வரை, இச்செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. சிறிதளவு இரத்த புரதங்களும் அமினோ அமிலங்களும் இழக்கப்படுகின்றன. எனவே அதனை ஈடு செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக இயங்குகின்ற குடலிடை சவ்வு செயற்கை (Continuous ambulatory peritoneal dialysis- CAPD) ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை நிரந்தரமாக பொருத்தி வைக்கப்பட்ட சிறுநீர் இறக்குங் குழல் (catheter) மூலமாக கழிவுப் பொருட்கள் வயிற்றறையினுள் புகுத்தப்படுகிறது. இக்கழிவுகள் (dialysate) 4 முதல் 8 மணி நேரம் வயிற்றறையில் தங்கிய பின் வடித்தெடுக்கப்படுகிறது. பின்பு சிறிது சிறிதாக கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இதனால் ஏற்படும் புரத இழப்பை ஈடு செய்ய திட்டஉணவு புரதத்தை பயன்படுத்தலாம்.

திட்டஉணவு மேலாண்மை

செயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும் நோயாளிகளின் உயிர் வேதியல் பொருட்களின் அளவுகளைப் (Biochemical) பராமரிக்க வேண்டும். அதன் குறிக்கோளாவன.

 1. புரதங்களையும், கிலோ கலோரிகளையும் சமநிலைப்படுத்துதல்
 2. நீர் வற்றும் நிலையை (dehydration) தடுத்தல் அல்லது அளவிற்கதிகமான திரவங்களை திட்ட உணவில் சேர்த்தல்.
 3. இயல்பான சீரம் (serum) பொட்டாசியம் மற்றும் இரத்த சோடியத்தின் அளவுகளைப் பராமரித்தல்.
 4. ஏற்கத்தக்க பாஸ்பேட் மற்றும் கால்சியத்தின் அளவுகளைப் பராமரித்தல்.

புரதம்

பெரியவர்களுக்கு 1கி/கி.கி உடல் எடை என்ற அளவில் வழங்கினால், அவர்களுடைய ஊட்டச்சத்து நிலைப் பராமரிக்கப்படும். அது மட்டுமின்றி, கூடுதல் நைட்ரஜன் சமநிலைக்கு (Positive Nitrogen balance) வழிவகுத்து, டயலிசிஸ் செயல்முறையின் போது இழக்கப்படும், அமினோ அமிலங்களையும் ஈடு செய்யலாம். திட்ட உணவின் தினசரி புரதத்தில், 75 சதவீதம் உயர் உயிரியல் மதிப்பு மிக்க (high biological value) உணவுகளான முட்டை, மாமிசம், மீன் மற்றும் கோழியிறைச்சியின் மூலம் பெறப்பட வேண்டும். பாலில் அதிக அளவு பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளமையால் அதனைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்.

சக்தி

கார்போஹைட்ரேட்டுகள் சக்தியை அளிக்கவும். புரத சிதைவடைதலைத் தடுக்கவும் வழங்கப்படுகிறது. ஒல்லியான உடலமைப்பு கொண்டவர், ஒரு நாளைக்கு 40கி.கலோரிகள்/கி.கி உடல் எடை என்ற அளவில் உண்ண வேண்டும். திட்ட உணவில் எளிய கார்போஹைட்ரேட்டுகளைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

நீரின் சமநிலை

 • தினமும் சிறுநீர் வெளியேறும் அளவுடன் 400 முதல் 500 மி.லி திரவம் சேர்த்து திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். சோடியம்
 • நோயாளியின் உடலில் திரவ தேக்கத்தையும், உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த, சோடியத்தின் அளவை 1000 முதல் 2000 மி.கி/ நாள் என நிர்ணயிக்கலாம்.

பொட்டாசியம்

அளவிற்கதிகமான சோடியம் இருதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடும். எனவே சோடியத்தை கட்டுபாட்டிற்குள் வைத்திடல் வேண்டும். திட்ட உணவில் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 மி.கி என்ற அளவில் கொடுக்கலாம்.

உயிர்ச்சத்துக்கள்

டயலிசிஸ் நோயாளிகள், இரத்ததிலுள்ள நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களை இழக்கின்றனர். எனவே தினசரி திட்டஉணவில் எல்லா நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களையும் சேர்க்க வேண்டும். அதனோடு கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களை, முக்கியமாக உயிர்ச்சத்து A மற்றும் D யை அளிக்க வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கான திட்டஉணவு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை முடிந்தபின், ஆரம்ப கால கட்டத்தில் திட்டஉணவின் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல் அவசியம். திட்டஉணவு மாறுதல்கள், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்டீராலை இயல்பான நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. ஏற்கத்தக்க அளவு புரதத்துடன், சக்தி, கட்டுப்படுத்தப்பட்ட உப்பு, எளிய சர்க்கரைகள், மொத்தகொழுப்பு, கொலஸ்டிரால் மற்றும் செறிவுற்ற கொழுப்புகள் தேவைப்படுகிறது. நலம் தரும் உணவு பிரமீடு, தானியங்கள், ரொட்டி, பயறுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகவும் பால், பாலாடைக்கட்டி, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, கோழியிறைச்சி மற்றும் முட்டைகளை மிதமாகவும், சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணெய் குறைவாகவும் உண்ண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top