பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திட்டஉணவு - ஒரு அறிமுகம்

திட்டஉணவு தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டஉணவு படிப்பு

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நோய் வராமல் தடுக்கவும் மற்றும் நோய்க்கேற்ற சிகிச்சை அளிப்பதற்கான உணவினைத் திட்டமிடுதலில் அக்கறை காட்டுவதே திட்ட உணவு படிப்பின் முக்கிய குறிக்கோளாகும். திட்ட உணவில், உணவூட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும், உணவினை எவ்வாறு சுவை நலம் மிக்க உணவாக சமைத்துப் பரிமாறுதல் என்பதனைப் பற்றியும் படிப்பதால் இது ஒரு அறிவியல் பாடமாகும்.

உணவு சிகிச்சை

நோயினால் பாதிப்படைந்தோரைக் கவனிப்பது மட்டுமின்றி, நோய் வராமல் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுக்கு, சிகிச்சை உணவு என்று பெயர். மேலும், உணவு சிகிச்சையானது, உணவின் உதவி கொண்டு, நோயிலிருந்து மீளச் செய்வதிலும் அக்கறை காட்டுகிறது.

மூலக்கோட்பாடுகள்

நன்கு திட்டமிடப்பட்ட உணவு, உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும், குறிப்பிட்ட அளவில் அளிக்க வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் சமநிலை பராமரிக்கப்பட்டு, மனிதனை ஆரோக்கியமானவனாக வைத்திருக்க உதவும். ஆனால், நோயுற்ற காலங்களில் ஊட்டச்சத்து சமநிலை பாதிக்கப்படுகிறது. ஏனெனில் இக்காலங்களில், திசுக்கள் ஊட்டச்சத்துக்களை போதுமான அளவுக்கு எடுத்துக் கொள்ளாததாலும் அல்லது எடுத்துக் கொண்ட ஊட்டச்சத்துக்களை உபயோகிக்க இயலாததாலும் ஊட்டச்சத்து சமநிலை பாதிக்கப்படுகிறது. மேலும் ஜீரணித்தல், உறிஞ்சப்படுதல் ஊட்டச்சத்துக்கள் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுதல் ஆகிய செயல்கள் பாதிக்கப்படுவதாலும் ஊட்டச்சத்து சமநிலை மாற்றமடைகிறது. எனவே, திட்டஉணவில் தேவையான ஊட்டச்சத்து மாற்றங்கள் சரியானபடி செய்யப்பட வேண்டும். இவ்வகையான மாற்றங்கள், நோயுற்றவர்கள் சாதாரணமாக உட்கொள்ளும் உணவினை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.

எனவே சிகிச்சை உணவானது, இயல்பான உணவு (normal diet) முறையினில் நோயுற்ற காலங்களுக்கு ஏற்ப செய்யப்படும் தேவையான மாற்றங்களாகும். இம்மாற்றமானது, நோயுற்றவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

உணவு சிகிச்சையின் பொதுவான நோக்கங்கள்

 • நல்ல ஊட்டச்சத்து நிலையைப் பராமரித்தல்
 • நோயினால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை சரி செய்தல்.
 • உடல் முழுவதும் அல்லது நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு மட்டும் ஓய்வு அளித்தல்.
 • ஊட்டச்சத்துக்களின் வளர்சிதை மாற்றம் செய்யும் திறனுக்கேற்ப உணவு உட்கொள்ளுதலை மாற்றியமைத்தல்.
 • தேவைப்படும் நேரங்களில் உடல் எடையில் மாற்றங்களைக் கொண்டு வருதல்.

சிகிச்சை உணவில் இயல்பான உணவை அடிப்படையாகக் கொள்வதால் பெறப்படும் நன்மைகள்

 • உளவியல் மற்றும் சமூகத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், பரிமாறப்படும் உணவு நன்கு விரும்பப்படுகிறது. இருப்பினும், அளவிலும், தரத்திலும் மாற்றங்கள் இருக்கும்.
 • மாற்றம் செய்யப்பட்ட உணவானது, குடும்ப உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தயாரிப்பது எளிதாகிறது. எனவே தயாரிக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைகிறது.
 • ஊட்டச்சத்து தேவைப்படும் அளவுகளுக்கேற்ப உணவு திட்ட மிடப்படுவதால் எந்த உணவினை சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பதனைத் தெளிவாக அறியலாம். உதாரணமாக: காய்கறிகள் தவிர்க்கப்படும் போது, வைட்டமின் A அல்லது வைட்டமின் C குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகிச்சை உணவினைத் திட்டமிடும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்,

 1. குறிப்பிட்ட நோய்க்கான உணவை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதனைப் பற்றிய அறிவு
 2. நோய் எவ்வளவு நாள் இருக்கும் என்பதனைப் பற்றிய அறிவு.
 3. நோயிலிருந்து விடுபட தேவைப்படும் உணவு பற்றிய அறிவு.
 4. உணவை வாய்வழியாக உட்கொள்ளக் கூடிய ஏற்புத்திறன் பற்றிய அறிவு.

உணவை திட்டமிடும் போது, நோயாளியின் பொருளாதார நிலை, உணவு விருப்பங்கள், வேலை மற்றும் உணவு உண்ணும் வேளை போன்றவை கவனிக்கப்பட வேண்டும்.

சிகிச்சை உணவின் (therapeutic diet) முக்கிய அம்சங்கள்

 • போதுமான அளவு உணவு (Adequacy).
 • சுவையுணர்வு மிக்கதாக இருத்தல் (palatability

சிகிச்சை உணவின் மாற்றங்கள்

சிகிச்சை உணவில் அளவிலும், தரத்திலும் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மாற்றங்கள்

 • ஊட்டச்சத்து கட்டுப்படுத்தப்படுதல்
 • அழுத்தத்தில் சோடியம் உட்கொள்ளுதல் கட்டுப்படுத்தப்படுதல்
 • உணவுத் தன்மையில் மாற்றம்
 • உணவு வேளைகளை மாற்றியமைத்தல்
 • உணவினை ஒதுக்குதல் (உம்) ஒவ்வாமையின்போது ஒவ்வாமை உண்டுபண்ணும் உணவுகளை முழுவதுமாகத் தவிர்த்தல்

தெளிந்த திரவ உணவு

தெளிந்த திரவ உணவானது தற்காலிகமாக பரிமாறப்படுவதாகும். இது சக்கையற்றது, தூண்டுதலை ஏற்படுத்தாதது, எரிச்சலூட்டாதது மற்றும் வாயு உற்பத்தி செய்யாதது ஆகிய தன்மைகளைக் கொண்டது.

திரவ உணவானது, சிறிய அளவுகளில் (30 - 60 மி.லி) 2 மணிக்கொரு முறை பரிமாறப்படுகிறது. இது திரவ மற்றும் அயனிப்பொருள்களின் அளவை சரியான நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. மேலும் தாகத்தையும் தணிக்க உதவுகிறது. தெளிந்த திரவ உணவில், தண்ணீர், கார்போஹைட்ரேட் மற்றும் சில அயனி திரவங்கள் அடங்கியுள்ளது. இவ்வுணவானது, 400 - 500 கி.கலோரி, 5 கிராம் புரதம், மிகக் குறைந்த அளவு கொழுப்பு சத்து மற்றும் 100 - 120 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே அளிக்கக்கூடியது. இவ்வுணவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள உணவாக இருப்பதால், மிகக் குறைந்த காலத்திற்கே அளிக்கப்படுகிறது. (24-48 மணிகளுக்கு மட்டும்).

தெளிந்த திரவ உணவு பயன்படக்கூடிய நோயுற்ற காலங்கள்

 1. அறுவை சிகிச்சைக்கு முன் அளிக்கப்படுகிறது. (உம்) குடல் அறுவை சிகிச்சை
 2. கொலனோஸ்கோப்பிக் (colonoscopic) பரிசோதனைக்கு முன்பு
 3. அறுவை சிகிச்சைக்குப் பின் (உ.ம்) வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின் உடனடியாக கொடுத்தல் அல்லது நரம்புகள் மூலமாக (intravenousfeeding) கொடுத்ததற்குப் பின் தரப்படுதல்.
 4. குறுகிய கால சுகமின்மை மற்றும் தொற்றுகள். (உம்) உணவுக் குழாய்ப் பாதை தொந்தரவுகள் - பாக்டீரியாவால் ஏற்படும் இரைப்பை அழற்சியின் போதும் வயிற்றுப் போக்கால் ஏற்படும் திரவ மற்றும் அயனி திரவங்களின் இழப்பினை சரி செய்வதற்காகவும், தெளிந்த திரவ உணவுகள் அளிக்கப்படுகிறது.
 5. ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, வாய் வழியாக அளிக்கப்படும் முதல் உணவு, இவ்வுணவாகும்.
 6. உணவு உட்கொள்ள முடியாமல் போதல் தற்காலிகமாக ஏற்படும் போதும்,
 7. தாகத்தைத் தணிப்பதற்கும்,
 8. மலக்குடலில் மலத்தின் அளவை குறைப்பதற்கும் இவ்வுணவு பயன்படுகிறது.

முழு திரவ உணவு

அனைத்து திரவ உணவுகள் மற்றும் அறை வெப்பம் அல்லது உடல் வெப்பத்தில் திரவமாகக் கூடிய உணவுகளும் முழு திரவ உணவில் அடங்கும். இது நார்ப்பொருளும், எரிச்சலூட்டும் தன்மையுடைய மசாலாப் பொருட்களும் அற்ற ஒரு உணவாகும்.

இந்த உணவினை, சரியான முறையில் திட்டமிடுவதன் மூலமாக உடலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவில் அளிக்க இயலும். இவ்வுணவினை, இரண்டு நாட்களுக்குமேல் உபயோகப்படுத்தினால், அதிக புரதம், அதிக கலோரி இணை உணவுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வுணவு தெளிந்த திரவ உணவுக்கும், மிருதுவான உணவுக்கும். இடைப்பட்டது. இந்த உணவின் மூலம் சராசரியாக 1200 கி.கலோரிகள் மற்றும் 35 கிராம் புரதமும் நோயாளிகள் பெறலாம். இந்த உணவு 2-4 மணிநேர இடைவெளியில் அளிக்கப்பட வேண்டும்.

முழு திரவ உணவு பயன்படக் கூடிய நோய்க் காலங்கள்

 1. அறுவை சிகிச்சைக்குப் பின் தேறிவரும் நோயாளிகளுக்கு அளிக்கலாம். அதாவது நோயாளி தெளிந்த திரவ உணவிலிருந்து திட உணவிற்கு சீராக மாறும்போது அளிக்கப்பட வேண்டும்.
 2. குறுகிய கால இரைப்பை அழற்சி மற்றும் தொற்றுகள்.
 3. வாய் அறுவை சிகிச்சை அல்லது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது.
 4. குறுகிய கால உடல்நலக் குறைவால், மெல்லவும், விழுங்கவும் முடியாமல் இருக்கும்போது.
 5. உள்ளுறுப்புகளின் சீரற்ற தன்மையான உணவுக்குழாய் அல்லது வயிற்றுக் கோளாறின் காரணமாக திட உணவுகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை.

மிருதுவான உணவு

முழு திரவ உணவுக்கும் இயல்பான உணவுக்கும் இடைப்பட்ட உணவே மிருதுவான உணவாகும். இது ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் உணவாகும். இந்த உணவானது, மிருதுத் தன்மையுடனும், எளிதில் மென்று உண்ணக்கூடியதாகவும், எளிதில் சீரணமாகும் தன்மையும் கொண்டது. மேலும், இதில் நார்ப்பொருள் மற்றும் இறைச்சியில் காணப்படும் இணைப்புத் திசுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது. இந்த வகை உணவுகளில் மேலும் அதிக வாசனைப் பொருள்கள் கிடையாது.

சராசரியாக 1800 கி.கலோரிகள் மற்றும் 50 கிராம் புரதத்தினை இந்த உணவின் மூலம் சராசரியாகப் பெறலாம் எனினும் தனிமனிதத் தேவை, செயல்கள், உயரம், எடை, பாலினம், வயது மற்றும் நோயுற்ற நிலைக்கேற்ப, சக்தி, புரதத்தின் தேவைகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

இந்த உணவினை மூன்று வேளைகளுக்கு அளிக்கலாம். இடைவேளை நேரங்களில் ஏதேனும் வேறு வகை உணவுகளை அளிக்கலாம் அல்லது அளிக்காமலும் இருக்கலாம்.

மிருதுவான உணவு உபயோகப்படும் நோய்க் காலங்கள்

 1. நோயாளிகள் உணவிலிருந்து, இயல்பான உணவிற்கு தேறும் நிலையில்,
 2. நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப் பின்பு இயல்பான உணவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருத்தல்.
 3. உணவுக் குழாய் பாதையில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளைக் கொண்ட நோயாளிகள்,
 4. பலவீனமான நோயாளிகள் அல்லது இயல்பான உணவினை உண்ண இயலாத பற்கள் குறைவாக உள்ள நோயாளிகள்.
 5. வயிற்றுப் போக்கிலிருந்து தேறும் நிலையில்,
 6. குறுகிய கால நோயினால் பாதிக்கப்பட்டு பின் தேறும் நிலையில்

இயல்நிலை இயக்கமுள்ள மிருதுவான உணவு

பற்கள் இல்லாத பெரும்பாலான மனிதர்களுக்கு மிருதுவான உணவு தேவைப்படுகிறது. இவ்வகையான உணவிற்கே இயல்நிலை இயக்கமுள்ள (mechanical) அல்லது பற்களுக்கு மிருதுவான உணவு என்று பெயர். இவ்வகை நோயாளிகளை, உணவு உண்ணும் விஷயத்தில் கட்டுப்படுத்துதல் விரும்பத்தக்க செயலன்று. இவர்களது உணவு பழக்கத்தில் சில வகை மாற்றங்களைச் சேர்த்தாலே போதும். அம்மாற்றங்களாவன:

 • சமைப்பதற்கு முன் காய்கறிகளை துண்டுகளாக அல்லது பகடை சதுர துண்டுகளாக (diced) வெட்டுதல்.
 • கடினத் தன்மையுடைய, சமைக்கப்படாத பழங்களும், காய்கறிகளும் தவிர்க்கப்படுதல் கடின தோல் மற்றும் விதைகளை நீக்குதல்.
 • துண்டுகளாக நறுக்கப்பட்ட அல்லது பொடியாக்கப்பட்ட கொட்டை வகைகள் மற்றும் உலர் பழங்களை உபயோகித்தல்.
 • கொத்துக் கறி அல்லது அரைக்கப்பட்ட மாமிசத்தை உபயோகித்தல்.
 • மிருதுவான ரொட்டிகள் மற்றும் சப்பாத்திகளைக் கொடுத்தல்.

மிருதுவான உணவுகள் உபயோகப்படுத்தப்படும் நோய்க் காலங்கள்

 1. மெல்லுதல், விழுங்குவதில் குறை ஏற்படும் போது
 2. தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள்
 3. பற்களில் பிரச்சினைகள்
 4. உணவுக் குழாயின் உட்பகுதியில் வழியடைப்புச் சிக்கல் அல்லது இறுக்கம்

மிருதுவான, முழு திரவ மற்றும் தெளிந்த திரவ உணவு ஆகிய உணவு வகைகளில், என்னென்ன உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இயல்பான உணவு

ஆரோக்கியமான மனிதனால் உண்ணப்படும் எந்த ஒரு உணவும் அல்லது எல்லா உணவுகளுமே இயல்பான உணவு என்று வரையறுக்கப்படுகிறது. இயல்பான உணவானது, அடிப்படை ஐந்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுவதால், எல்லா வித ஊட்டச்சத்துக்களும் போதுமான அளவில் தரவல்லது. உணவில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாதிருப்பின், இவ்வுணவு சரிவிகித உணவாகவும், ஊட்டச்சத்துக்களைத் தேவைக்கேற்ப போதுமான அளவு அளிக்கும் உணவாகவும் இருக்கிறது.

நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது படுக்கை ஓய்வில் (bed rest) இருக்கும்போதோ, சக்தி உட்கொள்ளும் அளவில் 10 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பொரித்த உணவுகள் சீரணிக்க சிரமமாக இருப்பதால் தவிர்க்கப்பட வேண்டும். புரதத்தின் தேவை 10% (+10%) அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலமாக, நோயுற்ற காலங்களில் ஏற்படும் நைட்ரஜன் குறைவு சமநிலையை சீராக்க இயலும். மற்ற ஊட்டச்சத்துக்கள் இயல்பான அளவுகளில் அளிக்கப்பட வேண்டும்.

குளிர்ந்த, அரை நீர்ம இயலான திட்ட உணவுகள்

அடிநாக்கு சதை அறுவை சிகிச்சை அல்லது தொண்டை பகுதி அறுவை சிகிச்சை செய்திருக்கும் போது, மிருதுவான அல்லது இயல்பான உணவை உண்ண இயலாது. இச்சமயங்களில் தான் இவ்வுணவு கொடுக்கப்படுகிறது. இவ்வுணவினை மிருதுவான அல்லது இயல்பான உணவைச் சிரமமின்றி நன்கு விழுங்க முடியும் வரை கொடுக்க வேண்டும். குளிர்பானங்களும், இளஞ்சூடு தயாரிப்புகளும் இந்த வகை உணவில் அடங்கும்.

கலவை திரவ உணவுகள்

கீழ்க்காணும் சமயங்களில், இவ்வகை உணவுகள் தரப்படுகிறது. அவையாவன:

 1. போதுமான வாய்வழி கட்டுப்பாடு இன்மை
 2. வாய் அறுவை சிகிச்சையும், பசியின்மையும்
 3. கம்பி பொருத்தப்பட்ட தாடைகள் (Wiredjaws) (கலவை திரவ உணவுகள்) சிறு துளையின் மூலம் உட்கொள்ளப்படுகிறது.
 4. அடித்தொண்டையில் (pharyngeal) தன்னியக்க தசை சுருக்க அலைகள் (Peristalsis) குறைவாக கொண்ட நோயாளிகள்

உணவளித்தலில் சிறப்பு முறைகள்

நோயின் தன்மை, நோயாளியின் நிலை மற்றும் நோயாளியின் உணவு ஏற்புத்திறன் ஆகியவற்றைப் பொருத்து உணவளித்தலில் சிறப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. நோயாளிக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு முறைகளாவன:

 1. உணவுக் குழாய் பாதை மூலமாக உணவளித்தல் (Enteral)
 2. உணவுக் குழாய் பாதையைத் தவிர்த்து உணவளித்தல் (Delivery of nutrients through circulation - Parentral).

உணவுக் குழாய் பாதை மூலமாக உணவளித்தல்

உணவுக் குழாய் வழியாக உணவளித்தலையே என்ட்ரல் (enteral) முறை குறிக்கும். முடிந்தவரை, நோயாளிகளை வாய்வழியாக உணவு உட்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். துணை நிறைவுகள் தேவைப்படும் நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உணவானது குழாய் (tube) மூலமாக அளிக்கப்படுவதால், இம்முறைக்கு குழாயின் மூலம் உணவளித்தல் (tube feeding) என்று பெயர்.

சீரண மண்டலம் இயல்பான நிலையில் இருந்தும், ஆனால் வாய்வழியாக உணவை உட்கொள்ள இயலாத நோயாளிகளுக்கு, இம்முறையில் உணவளிக்க அறிவுறுத்தப்படுகிறது. முழு திரவ உணவு அல்லது இதற்கென கடைகளில் விற்கப்படும் உணவுகளை அளிக்கலாம்.

குழாயானது மூக்கின் வழியாக இரைப்பை (nasogastric) முன் (nasojejunum) வரை அனுப்பப்படுகிறது. உணவுக்குழாய் பாதையில் (Oesophagus) அடைப்பு ஏற்படும் போது, உணவானது குழாய் மூலமாக அளிக்கப்படுகிறது. இம்முறையில் வயிற்றுப் பகுதியில், அறுவை சிகிச்சை மூலமாக ஒரு சிறு துளையிடப்படுகிறது. இத்துளையின் வழியாக குழாயானது, இரைப்பைக்கோ (gastrostomy) முன் சிறுகுடலுக்கோ அல்லது பின் சிறுகுடலுக்கோ அனுப்பப்படுகிறது.

குழாய் மூலமாக உணவளிக்கப்படும் நிலைகள்

 • அ. விழுங்க உதவும் தசைகள் செயல்பட இயலாதால், உணவினை (diptheria/Poliomyelitis) விழுங்க இயலாத நிலை
 • ஆ. உணவினை உண்ண மனமின்மை ஒத்துக் கொள்ளாத நிலை.
 • இ. நிரந்தர பசியின்மையின் காரணமாக வலுக்கட்டாயமாக உணவளிக்க வேண்டிய சூழ்நிலை.
 • ஈ. பாதி உணர்வு அல்லது உணர்வற்ற நிலையிலுள்ள நோயாளிகள்
 • உ ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாததின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் போது, வாய்வழியாக உண்ணும் தன்மையற்ற உணவினை அளிப்பதற்காக,
 • ஊ. குடல் நீளம் குறைவாக உள்ள நிலை (short bowelsyndrome)
 • எ. பிறப்பு எடை குறைந்த குழந்தைகள் (Tubes)

குழாய்கள்

குறுகிய காலத்திற்கு உணவுக் குழாய் வழியாக உணவை அளிக்க வேண்டுமெனில், மெலிதான துளையுள்ள மூக்கு இரைப்பை குழாய் (Nasogastric tubes) பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால், தனிக்கவனத்துடன் தயாரிக்கப்பட மெலிதான துளை கொண்ட, மிருதுவான, வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையுடைய (flexible) குழாய்கள் நீண்டகால உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.

உணவளிக்கும் முறை (Procedure)

குழாய்கள் வழியாக செலுத்துவதற்காக தயாரித்த உணவுகளை, பாட்டிலில் நிரப்பி இரைப்பையில் செலுத்துவதற்கு என்று எழுதி வைக்க வேண்டும். இப்பாட்டிலானது, குழாயுடன் இணைக்கப்பட்டிருப்பதால் திரவ உணவானது, இரைப்பையைத் துளித்துளியாகச் சென்றடைகிறது. இச்செயல் புவிஈர்ப்பு விசையினால் நடைபெறுகிறது. உணவளித்தல் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். ஒரு மணிக்கு 50 மி.லி அளவில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்துவரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 மி.லி அளவு, 24 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட வேண்டும். (பொதுவாக 100 to 120 மி.லி/hr). உணவைத் தொடர்ச்சியாக கொடுப்பதை விட, இரண்டு மணிக்கு ஒரு முறை பெரும் அளவில் அளிக்கும் போது வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.

உணவுக்குழாய் பாதை மூலம் உணவளித்தல் - வகைகள்

குழாயின் மூலம் அளிக்கப்படும் உணவுகளின் வகைகளாவன.

கலவை உணவு

வாய், குரல்வளை (larynx) உணவுக்குழாய் (Oesophagus) போன்ற பகுதிகள் புற்றுநோயினால் பாதிக்கப்படும் போது உணவினை மெல்லவோ, விழுங்கவோ முடியாது. இவ்வகையான நோயாளிகளுக்கு கலவை உணவு தயாரிக்கப்படுகிறது.

விழுங்க இயலாத சாதாரண உணவுகள், நன்கு சமைத்து, கலவை சாதன உதவியால், திரவ நிலைக்கு மாற்றப்படுகிறது. பின்னர், திரவ நிலை உணவானது, மூக்கு இரைப்பை (nasogastric) குழாய் வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது.

பாலிமெரிக் கலவைகள்

முழுமை கெடாத புரதம், கொழுப்பு மற்றும் அதிக மூலக்கூறு எடையுள்ள (highmolecular weight) கார்போஹைட்ரேட் போன்றவை பாலிமெரிக் கலவைகளில் அடங்கியுள்ளது. இவ்வுணவுகளில் ஊடுகலப்பு தன்மை (OSmolarity) குறைவாக உள்ளது. மேலும் இவ்வுணவுகள் சீரணமாவதற்கு, இயல்பான சீரண சுரப்புகளே காரணம்.

தனிந்த உணவு

தனித்த உணவானது விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு, விற்கப்படும் உணவு வகையாகும். இந்த உணவில் உள்ள கலவைகளான அமினோ அமிலங்கள், டெக்ஸ்டிரின், சர்க்கரைகள், நீர்மப்பொருட்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு ஏற்கனவே சீரணித்த நிலையில் உள்ளது. மேலும் இந்த உணவில் லாக்டோஸ் இல்லாததால், எளிதில் உள்ளே செலுத்த முடிகிறது. குறுகிய குடல் சிண்ட்ரோம் (short bowelsyndrome) உள்ள நோயாளிகளுக்கு இந்த உணவு முக்கியமாக கொடுக்கப்படுகிறது. குடல் தன் செயலை புத்துணர்ச்சியுடன் தொடரும் வரை இவ்வகை உணவே தரப்படுகிறது. நரம்பூடாக செலுத்தப்பட்டு (intravenous feeding) உணவளிக்கும் முறைக்குப் பதிலாக கலவையிராத (elemental diet) முறையில் உணவளிப்பது ஒரு சிறந்த மாற்றுமுறையாகும். இருப்பினும், அதிக விலை, தன்மை போன்றவை, இம்முறையின் குறைபாடுகளாகும். எனவே, எளிதில் சீரணிக்கும் மற்றும் உண்ணத் தகுந்த பால்புரதம் (casein) மற்றும் முட்டை புரதம் ஆல்புமின் தயாரிப்புகளே விரும்பப்படுகிறது.

இன்றியமையாத கொழுப்பு அமிலங்களின் குறைபாடைத் தவிர்ப்பதற்காக, மொத்த கலோரி தேவையில் 4% இவ்வமிலங்களிலிருந்து பெறப்பட வேண்டும்.

மாறுபட்ட ஊடுருவல் தன்மை, சீரணித்தல், சக்தி அளித்தல், லாக்டோஸ் அளவு, குழைம நிலை மற்றும் கொழுப்பு உள்ள உணவுகள் வணிகச் சந்தையில் கிடைக்கிறது. (உ.ம்) என்ஸ்யூர்

செலுத்தப்படும் முறைகள் (Methods of Administration)

உணவினை செலுத்துவதற்காக, மூன்று முறைகள் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவையாவன:

 • தொடர்ச்சியாக சொட்டு சொட்டாக விழுதல் (continous drip)
 • இடைப்பட்ட சொட்டு சொட்டாக விழுதல் (Intermittent drip)
 • பெருங்குளிகை (Bolus)

தொடர்ச்சியாக சொட்டு சொட்டாக விழுதல்

இதுவே அதிக அளவில் உபயோகிக்கப்படும் ஒரு முறையாகும். வலி, குமட்டல், வயிற்றுப் போக்கு அல்லது வயிறு கீழிறங்குதல் (distention) போன்ற நிலைகளுக்கேற்ப சொட்டும் விகிதம் மாறுபடுகிறது. 8 லிருந்து 12 மணி வரை, ஒரு மணிக்கு 30 – 50 மிலி என்ற அளவில் ஆரம்பித்து தேவையான அளவை அடையும் வரை கொடுக்கப்படுகிறது.

இடைப்பட்ட சொட்டு சொட்டாக விழுதல்

4- 5 முறை ஒரே சீரான முறையில் விட்டுவிட்டு உணவளிக்கப் படுகிறது. அதாவது 4 மணி நேரம் உணவளிக்கும் போது, அடுத்து வரும் 4 மணி நேரமும் உணவு அளிக்கப்படக் கூடாது.

பெருங்குளிகை (Bolus method)

இம்முறையில் அதிக கொள்ளளவு கொண்ட உணவு அளிக்கப்படுகிறது. மேலும், அடுத்தமுறை உணவு கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள் அளிக்கப்பட வேண்டும். (உ.ம்). 200 மி.லி, 10 நிமிடத்திற்குள் அளிக்கப்பட வேண்டும்.

உணவுக்குழாய் பாதை தவிர்த்து ஊட்டமளித்தல்

ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் வெளிப்புற (Peripheral) அல்லது மத்திய (Central) இரத்த நாளத்தின் மூலமாக நேரடியாக கலப்பதற்கு உணவுக்குழாய் பாதை தவிர்த்து ஊட்டமளித்தல் என்று பெயர். இதனை உணவாகவோ அல்லது துணை நிறைவுகளாகவோ பயன்படுத்தலாம்.

உடலுக்கு ஆதாரமாகத் தேவைப்படும், அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களின் மொத்தத் தேவையையும் நரம்பூடாகச் செலுத்தப்படுவதற்கு (intravenous feeding) மொத்த பேரன்ட்ரல் ஊட்டம் (TPN) என்று பெயர். ஒரு நாளைய மொத்த ஊட்டச்சத்து தேவையில், 30 - 50% பேரன்ட்ரல் ஊட்டத்தின் மூலம் பெறப்படுவதற்கு பகுதியளவான பேரன்ட்ரல் ஊட்டம் (Partial parentral Nutrition) என்று பெயர். நோயாளிகள் உண்ண முடியாத நிலை, உண்ண விருப்பமில்லாத நிலை, உண்ணக் கூடாத நிலை, போதுமான அளவு உண்ண முடியாத நிலை அல்லது குழாய் மூலம் உணவளித்தல் முறையில் போதுமான அளவு ஊட்டச்சத்து பெற இயலாத நிலை ஆகிய நிலைகளில் நரம்பூடாகச் செலுத்தப்படும் முறையினைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

கீழ்க்கண்ட நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள், பேரன்ட்ரல் முறையில் தான் உணவை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 1. புற்று நோய்.
 2. குடல் நோயால் குடல் வீங்குதல்.
 3. குறுகிய - குடல் சிண்ட்ரோம்.
 4. அறுவை சிகிச்சைக்கு செல்வதற்கு முன் நிலையிலுள்ள (Preoperative patients)
 5. இரைப்பை - குடல் பகுதியில் உள்ள புரையோடிய புண்கள் (Gastrointestinal fistulae)

நரம்பு வழி செலுத்தப்படும் உணவுக் கரைசல்கள்

புற நரம்பு வழி செலுத்தப்படும் கரைசல்களில், 600 ml க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக ஊடுருவல் தன்மையினால், இரத்த உறைதலும், நரம்புகள் வீங்குதலும் ஏற்படலாம்.

 • குளுக்கோஸ்
 • சிறு திவலைகளை உடைய குழம்பாக மாற்றப்பட்ட கொழுப்பு (emulsified fat)
 • படிக அமினோ அமிலங்கள்
 • வைட்டமின்கள்
 • அயனி திரவப்பொருள்கள் - சோடியம், குளோரின், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம்.
 • சிறிய அளவில் தேவைப்படும் தனிமங்கள் - துத்தநாகம் மற்றும் அயோடின்
 • தண்ணீர்

ஊட்டத்தினை நரம்பூட்டமாகச் செலுத்தப்படுவதை விட, தனித்த நிலையில் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் (Advantages of enteral feeding over intravenous feeding)

 • எளிதில் செலுத்த முடியும்.
 • விலை குறைவானது.
 • மருத்துவமனையில் இருக்கத் தேவையில்லை.
 • குழாய் அல்லது ஊட்டச்சத்தினை நோய் நுண்மத் தீர்வாக்கம் (Sterilisation) செய்ய வேண்டியதில்லை.
 • வல்லுநரின் மேலாய்வு தேவையில்லை. உடலால் எளிதாக ஏற்றுக் கொள்ளத்தக்கது.
 • ஊட்டத்தினை உடலின் உள்ளே நீர்ம வடிவத்தில் செலுத்தும் குழலில் (catheter) சீழ்த்தொற்றோ (Sepsis) அல்லது தொற்றோ (infection) ஏற்பட வாய்ப்பில்லை.
 • வளர்சிதை மாற்றத்தில் எந்தவித தொந்தரவும் இல்லை.

உணவு பரிமாற்ற பட்டியல்

உணவு பரிமாற்ற பட்டியல் என்பது, ஒரே வகையான உணவுகளை ஒன்றாக தொகுப்பது ஆகும். இதில், கொடுக்கப்பட்ட அளவுகளில் உள்ள ஒவ்வொரு உணவுகளும், சக்தி, கார்போஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பு சத்தினை அளிப்பதில் ஒரே அளவினைக் கொண்டது. எனவே, ஒரு உணவுப் பொருளுக்குப் பதிலாக, அதே தொகுப்பில் உள்ள மற்றொரு உணவுப் பொருளினைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால், ஒரே தொகுப்பில், எண்ணற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் விதத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படுவது கிடையாது.

ஒன்பது உணவு பரிமாற்ற பட்டியல் கீழே வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி பரிமாற்றம் (Vegetable exchange A)

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகள் இதில் அடங்கும். 100 கிராம் காய்கறிகள் ஒரு பரிமாற்ற அளவாக கருதப்படுகிறது. இதில் கொழுப்பும், புரதமும் மிகக் குறைந்த அளவிலேயே (Negligible) உள்ளது. இதில் கீரைகள் மற்றும் சுரை கொடியின வகைக் காய்கள் (gourds) அடங்கும்.

காய்கறி பரிமாற்றம் (B (Vegetable exchange B)

இதில் கார்போஹைட்ரேட் செறிந்த உணவுகள் அடங்கும். அதாவது, இதிலுள்ள உணவுகளில் கார்போஹைட்ரேட் 7 கிராமும் அல்லது அதற்கு மேலும் இருக்கும். (உம்) பீட்ரூட், காலிஃபிளவர், கேரட், இந்த பரிமாற்ற உணவு 10 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் புரதம், 50 கி.கலோரிகள் மற்றும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச் சத்தினை அளிக்கிறது.

பழ பரிமாற்ற உணவு (Fruit exchange)

இப்பட்டியலிலுள்ள ஒவ்வொரு பழபரிமாற்ற அளவும், குறைந்தது 10 கிராம் கார்போஹைட்ரேட் மிகக் குறைந்த புரதம் (Negligible) மற்றும் கொழுப்பு மற்றும் 50 கி கலோரிகள் அளிக்கிறது.

தானிய பரிமாற்ற உணவு (Cereal exchange)

20 கிராம் கார்போஹைட்ரேட் அளிக்கக் கூடிய அளவிலான தானியங்களும், தானியம் சார்ந்த பொருள்களும், ஒரு பரிமாற்ற அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தானிய பரிமாற்ற அளவும், 20 கிராம் கார்போஹைட்ரேட் 2 கிராம் புரதம், மிகக் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் 100 கலோரிகள் அளிக்கிறது.

பயறு பரிமாற்ற உணவு (Pulse exchange)

சமைக்கப்படாத 30 கிராம் பயறில், 6 கிராம் புரதம் இருப்பதை இப்பட்டியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, 6 கிராம் புரதம் அளிக்கக் கூடிய பயறுகளின் அளவே, ஒரு பரிமாற்ற அளவாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பயறு பரிமாற்ற அளவு உணவு 6 கிராம் புரதமும், மிகக் குறைந்த கொழுப்புச் சத்தும், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 100 கி.கலோரிகள் தரவல்லது.

பால் பரிமாற்ற உணவு (Milk exchange)

பால் பரிமாற்ற அளவானது, குறைந்தது 5 கிராம் புரதமும், 100 கி.கலோரிகளும் அளிக்க வல்லது. இப்பரிமாற்றத்தில், உணவுகளின் அளவு, ஒரே அளவாக அல்லாமல், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து அளவினைப் பொருத்து மாறுபடுகிறது. ஆனால், இப்பரிமாற்றத்தின் அடிப்படை உணவாக விளங்குவது, புரதம் நிறைந்த உணவுகளேயாகும்.

மாமிச உணவு பரிமாற்றம் (Flesh food exchange)

இறைச்சியின் ஒரு பரிமாற்ற அளவு 10 கிராம் புரதமும் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் 70 கி.கலோரிகள் அளிக்கிறது. உணவுகளில் உள்ள புரதத்தின் அளவைக் பொருத்து ஒரு பரிமாற்றத்தின் அளவு 50 கிராமிலிருந்து 60 கிராம் வரை வேறுபடும்.

கொழுப்பு உணவு பரிமாற்றம் (Fat exchange)

இப்பரிமாற்றத்தில் வெண்ணெய், உண்ணத் தகுந்த கொழுப்பு மற்றும் எண்ணெய், க்ரீம், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள் போன்றவை அடங்கும். 1 கிராம் வரை கொழுப்பினை அளிக்கக் கூடிய உணவின் அளவே ஒரு பரிமாற்ற அளவாகக் கருதப்படுகிறது. பசலைக்கீரை, வாழைப்பூ மூலம் குறைந்தது 4 கி கொழுப்பு, 100 கி கலோரிகள் அல்லது மிகக் குறைந்த புரதத்தினை, இப்பரிமாற்றத்தின் மூலம் பெறலாம்.

சர்க்கரை பரிமாற்ற உணவு (Sugar exchange)

சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், ஜெல்லிகள் மற்றும் மார்மலேடுகள் இப்பரிமாற்றத்தில் அடங்கும். இப்பட்டியலிலுள்ள உணவுகள் குறைந்தபட்சம் 5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 20 புடலங்காய் கி.கலோரிகள் அளிக்க வேண்டும்.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR)

Filed under:
3.04545454545
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top