பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / முன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்

முன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

ஒரு வயது வரை வேகமாக வளரும் குழந்தையின் வளர்ச்சி 1-6 வயதில் மெதுவாக குறையத் தொடங்குகிறது. ஆனால், இவ் வயதுப் பருவத்தில் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்கள் வளரும் சமுதாயம் மற்றும் சூழலைப் பொருத்து அவர்களது உணவுப் பழக்கங்கள் அமைகிறது. மேலும் இரண்டு வயதுக்குள் வளரும் பால்பற்கள், குழந்தைகள் விதவிதமான உணவுகளை உண்ண வாய்ப்பளிக்கிறது. குழந்தைகள் வளர வளர, அவர்களது ஊட்டச்சத்து தேவையும் அதிகரிக்கிறது.

வளர்ச்சியோடு இணைந்த மாற்றங்கள்

இரண்டாவது வயதில் குழந்தையின் உயரம் 10 சென்டிமீட்டரும், எடை 2-2.5 கி.கி. அதிகரிக்கிறது. இதற்குப் பின், குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சற்று குறைகிறது. அதாவது, ஆண்டிற்கு 6-7 சென்டிமீட்டர் உயரமும், 1.5-2 கி.கி எடையும் மட்டுமே அதிகரிக்கிறது. இருப்பினும், குழந்தைகளிடையே உடலியக்க முன்னேற்றத்தில் அதிக அளவு வித்தியாசம் (Physical Development) காணப்படுகிறது.

குழந்தை வளரும்போது, உடலின் நீர், தசைத்திசுக்கள், கொழுப்புச்சத்து படிதல் மற்றும் எலும்பு மண்டல வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது, குழந்தைகளின் உடலில் நீரின் அளவு குறைந்து கொழுப்புத் திசுக்களின் அளவு அதிகரிக்கிறது. மேலும், தாது உப்புக்கள், எலும்புகளில் படிவதும் அதிகரிக்கிறது.

குழந்தைகளிடையே மன மற்றும் சமூக அளவிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இரண்டாவது வயது ஆரம்பத்தில், அவர்களிடையே ஒரு தனித்தன்மை உணர்வு ஏற்படுகிறது. இத்தனித்தன்மையானது அவர்களின் உணவுப் பழக்கங்களிலும் பிரதிபலிக்கிறது. குழந்தைகள் வளர வளர, சுதந்திர உணர்வு, முயற்சித்தல் உணர்வு, கற்பனை உணர்வு மற்றும் கூர்ந்தறியும் உணர்வு போன்ற உணர்வாற்றல்கள் அதிகரிக்கின்றன.

முன்பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் பாலினத்தைத் தெரிந்துகொள்வதிலும், பார்த்துப் பின்பற்றுதலையும் (Imitation) செய்கிறார்கள். ஆண் குழந்தைகள் தந்தையையும், பெண் குழந்தைகள் தாயையும் பின்பற்றுகின்றனர். இந்த நடத்தைகள் உணவு உண்ணும் வேளைகளில் வெளிப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளிடையே, உணவைப் பற்றிய நல்ல, ஆரோக்கியமான சிந்தனையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

ஊட்டச்சத்து தேவைப்படும் அளவுகள்

சக்தி

சக்தியானது உடல் வளர்ச்சிக்கும், உடலியக்கத்திற்கும் தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சி விகிதம் (growth rate) வயதிற்கேற்றவாறு மாறுபடுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவில், பத்து வயது வரைக்கும், பாலினத்தைப் பொருத்து எவ்வித வேறுபாடும் இல்லை. சக்தியின் தேவை 1 - 3 வயது வரை 1240 கி. கலோரியும், 4-6 வயது வரை 1690 கி. கலோரியும் வரையறுக்கப்பட்டுள்ளது. இணை உணவு சரியாக தரவில்லையெனில் குழந்தைகளிடையே புரதசக்தி ஊட்டச்சத்து குறைபாடு தோன்றும்.

புரதம்

தசைகளின் வளர்ச்சி அதிகரிப்பதால், நைட்ரஜன் சமநிலை உடலின் அடிப்படை இழப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கூடுதலான அளவு ஆகியவற்றைப் பொருத்து, புரதத்தின் தேவை கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், புரதத்தின் தேவை 1 - 3 வயது பருவத்தினருக்கு 22 கிராமாகவும், 4 - 6 வயது பருவத்தினருக்கு 30 கிராமாகவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

கொழுப்புச் சத்து

கலோரிகள் அடர்த்தி கொடுக்கவும், உணவின் நிறையை குறைக்கவும் (Reduce Bulk) மற்றும் கூடுதலாக தேவைப்படும் சக்தியின் தேவையைப் பூர்த்தி செய்யவும், கொழுப்பு தேவையான அளவு உணவில் சேர்க்கப்படவேண்டும். 3 சதவிகித சக்தியானது லினோலியிக் அமிலத்திலிருந்து பெறப்பட வேண்டும். தேவையான சக்தி அடர்த்தியைத் தருவதற்கும், உணவின் சுவையைக் கூட்டுவதற்கும், ஒரு நாளைக்கு 25 கிராம் கண்ணுக்குப் புலப்படும் கொழுப்பினை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கால்சியம்

வளர்ச்சி காலங்களில் கால்சியம் உடலில் சேரும் அளவைப் பொருத்து, கால்சியத்தின் தேவை மதிப்பிடப்படுகிறது. ஆனால் வளர்ச்சி காலங்களில், இவை ஒரே மாதிரியாக உடலில் படிவதில்லை. ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திலும், வாலிப வயதிலுமே கால்சியம் படிதல் அதிகமாக நடைபெறுகிறது. மேலும், உணவிலுள்ள கால்சியம் அனைத்தும் உறிஞ்சப்படுவதில்லை. எனவே, கூடுதலான கால்சியம் சமநிலையைப்பெற, ஒரு நாளைக்கு 400 மி.கி. கால்சியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இரும்புச்சத்து

இரும்புச் சத்துத் தேவையை கணக்கிட பின்வருவனவற்றைக் கணித்துக்கொள்ள வேண்டும். உடலிலிருந்து இழக்கப்படும் இரும்புச்சத்தின் அடிப்படை இழப்பு, வளர்ச்சிக்கேற்ற தேவை மற்றும் 1g/dl-ஆக அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அடர்வு போன்றவைகளைக் கொண்டே இரும்புச்சத்தின் தேவை கணக்கிடப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, 1-3 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 12 மி.கிராம் இரும்புச்சத்தும் 4-6 வயது வரை உள்ளவர்களுக்கு 18 மி.கிராம் இரும்புச்சத்தும் அளித்திட வரையறுக்கப்பட்டுள்ளது.

வைட்டமின்கள்

வைட்டமின் A

ஒரு நாளைக்கு 100 மி.கி.க்கும் குறைவாக வைட்டமின் A உட்கொள்ளும் இந்தியக் குழந்தைகளுக்கு, வைட்டமின் A குறைபாடும், சீரத்தில் (Serum) வைட்டமின் A குறைவான அளவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. எனினும், ஒரு நாளைக்கு 300 மி.கி. வைட்டமின் A அளிக்கும் துணை உணவுகள் 6 மாத காலத்திற்கு கொடுக்கப்படும் போது, குறைபாடு அறிகுறிகள் மறைந்துவிடும். இந்தக் கண்காணிப்பை கொண்டு, ICMR 400 மி.கி. வைட்டமின் A-யை, ஒரு நாளைய தேவையாக வரையறுத்துள்ளது.

B - தொகுப்பு வைட்டமின்கள்

பெரியவர்களுக்கு கணக்கிடப்படுவதைப் போன்றே, தேவையின் அளவைப் பொருத்து, B - தொகுப்பு வைட்டமின்கள் கணக்கிடப்படுகிறது. 1000 கி. கலோரிகளுக்கு, தயாமின் 0.5 மி.கிராமும், ரைபோஃப்ளேவின் 0.6 மி.கிராமும், நயாசின் 6.6 மி.கிராமும் கணக்கிடப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஃபோலிக் அமிலம் மற்றும் பைரிடாக்ஸின் வைட்டமின்களின் தேவை சிறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இடைப்பட்ட அளவாக கணக்கிடப்படுகிறது. இக்குழந்தைகளின் தேவை, சிறு குழந்தைகளின் (Infants) தேவையைவிட சற்று அதிகமாகும்.

வைட்டமின் C

பெரியவர்களுக்குத் தேவைப்படும் வைட்டமின் C-யின் அளவே இக்குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைய தேவையின் அளவு 40 மி.கிராம் ஆகும்.

முன்பள்ளிப் பருவ குழந்தைகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவுகள் (RDA)

முன்பள்ளிப் பருவமானது, எண்ணற்ற உணவு வகைகளை உட்கொள்ளுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் பருவமாகும். ஆனால் இந்தியாவில் மூன்றில், இரண்டு குழந்தைகளாவது ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஊட்டச்சத்து நிலையைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளாவன :

 • உணவு கிடைப்பதை நிர்ணயம் செய்யும் பொருளாதார நிலை (சக்தி அடர்ந்த உணவுகள்).
 • குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பிலும், உணவு ஊட்டுவதிலும் தாயின் அனுபவமும், அறிவும்.
 • உணவு தயாரிப்பதற்காக தாய்க்கு கிடைக்கும் நேரம்.
 • சுகாதாரமின்மை மற்றும் சுகாதாரமற்ற தண்ணீர்.
 • தரமற்ற வாழ்க்கைச் சூழல்.
 • தூய்மைக்கேடான உணவால், தொற்று நோய்கள் ஏற்படுதல்.
 • ஒரு குறிப்பிட்ட உணவினை உட்கொள்வதில் பெற்றோர்கள் வெறுப்பைக் காட்டுதல்.

மேற்கூறிய காரணங்களால், குழந்தைகள் உணவு உட்கொள்வது பாதிக்கப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு நிலையை அடைகிறார்கள். இது, இக்குழந்தைகளின் வளர்ச்சியையும் செயல் திறனையும் பின்னாளில் பாதிக்கிறது.

மேலும், முன்பள்ளிக் குழந்தைகள் உணவுகளின் மீது சில விருப்பு, வெறுப்பினையும் காண்பிக்கின்றனர். அவற்றை புரிந்துகொண்டு அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் ஊட்டக்குறைவு (Undernutrition) நிலை ஏற்படும். இக்குழந்தைகள் சில உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இவ்விருப்பம் சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை தொடரும். ஆனால், உணவின் மீதான விருப்பம், காலத்திற்குக் காலம் மாறுபடும். இதுமட்டுமல்லாது, சில வகை உணவுப்பொருட்களை, ஒரு குறிப்பிட்ட வகையில் சமைத்துக் கொடுத்தால் மட்டுமே உண்பார்கள்.

முன்பள்ளிப் பருவக் குழந்தைகளின் பசிக்கும் தன்மையும் நிச்சயமில்லாதது. ஒரு வேளை நன்கு உண்பார்கள். ஆனால் அடுத்த வேளை உண்ண மறுப்பார்கள். எனவே, உணவு வேளைகளில், குழந்தைகளை வேகமாக உண்ணும்படி வற்புறுத்தக்கூடாது. ரம்மியமான, அமைதியான, கவனத்தை திசை திருப்பாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை உணவு உண்ணும்போது ஏற்படுத்தித் தர வேண்டும். உணவு உண்ணும் வேளைகள் சீரானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் தட்டில் உள்ள உணவு அனைத்தையும் வீணாக்காமல் உண்ணக் கற்றுத்தர வேண்டும்.

சீராக மலம் கழித்தலை தொடர்ந்து செயலாற்றுவதற்காக, உணவில் தினமும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள், எளிதான, ஒன்றுடன் ஒன்று கலக்காத உணவுகளையே விரும்புகிறார்கள். இவ்வுணவுகள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. நன்கு பழகின உணவுகளையே விரும்புகிறார்கள். எனவே, புதிய உணவு அளிக்க ஆரம்பிக்கும் போது, ஏற்கனவே பழக்கமான உணவுடன் சிறிய அளவுகளில் பரிமாற வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்களில், கடின மற்றும் மென்மையான உணவுகளுக்கிடையே ஒரு சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும். வண்ண வண்ண உணவுகள், பல்வேறு வகையினை உண்டுபண்ணுவது மட்டுமல்லாது உண்ணும் ஆர்வத்தையும் தூண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கடித்து உண்ணக்கூடிய உணவுகளான கட்லெட், அவித்த முட்டை, சிறிய சாண்ட்விச்சுகள், ரோல்ஸ் மற்றும் தோல் நீக்கப்படாத பழங்கள் அவர்களால் எளிதில் கையாளக்கூடிய உணவுகளாகும்.

உணவு உண்ணும் மேசை உட்காருவதற்கு வசதியாகவும், உடையும் தன்மையற்ற கிண்ணங்களும், உண்ண உதவும் கருவிகள் கூர்மையற்றனவாக இருப்பதும், குழந்தைகள் தானாக உண்ணும் முயற்சியை மேற்கொள்ள உதவும். எனவே, குழந்தைகளின் உணவு விருப்பத்தைக் கவனித்து, அவர்களிடம் நல்ல உணவு பழக்க வழக்கங்களை வித்திடுதல் மிகவும் முக்கியமாகும்.

புரதசக்தி ஊட்டக்குறைவு (PEM) வைட்டமின் A குறைவு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றின் பரவல் (Prevalence)

முன்பள்ளிப் பருவ குழந்தைகளிடம், புரதசக்தி குறைவு, நுண்ணிய ஆதாரப் பொருட்களான வைட்டமின் A குறைவு மற்றும் இரும்புச்சத்துக் குறைவால் ஏற்படும் இரத்தசோகை, போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பொதுவாகக் காணப்படுகிறது.

ஊட்டச்சத்துக் குறைவுக்கு முதன்மையான காரணம் தவறான உணவும் மற்றும் உணவு பற்றாக்குறையுமே. இவையல்லாமல், சமூக, பொருளாதார காரணிகளும், பல வேறுபட்ட சூழ்நிலைக் காரணிகளும் உணவு பற்றாக்குறையை அதிகப்படுத்துகிறது. இதில் அடங்கும் காரணங்களாவன :

 • நீண்டகால தொற்று.
 • சுற்றுப்புற சுகாதாரக் குறைவு.
 • சுகாதாரமற்ற வாழும் சூழ்நிலை.
 • தனிநபர் சுத்தம் இல்லாதிருத்தல்.

புரதசக்தி ஊட்டக்குறைவு (PEM)

புரதமும், கலோரியும் வேறுபட்ட விகிதத்தில் குறைவதால் ஏற்படும் நோய்குறியாய்வினால் சிறு குழந்தைகளும், இளம் குழந்தைகளும் பாதிக்கப்படும் நிலையே புரதசக்தி ஊட்டக்குறைவு என்று வரையறுக்கப்படும். இந்நிலையில் பெரும்பாலும் குழந்தைகள் நோய்த் தொற்றுடன் காணப்படுவர்.

ஊட்டச்சத்துக் குறைவு நிலைக்கேற்றவாறு அறிகுறிகளும் வேறுபடும். பல்வேறு வகைப்பட்ட PEM-ன் அறிகுறிகளாவன :

சவலை நோய்

முகம் மற்றும் கால்களில் நீர் தேங்குதல் (Odema), செயல்பட திறனற்று இருத்தல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, தோல் அழற்சி (Dermatities), உணர்ச்சியின்மை (Apathy), அடர்த்தி குறைவான, மென்மையான, சற்று மெலிதான முடி, மைனாவாய், கீலோஸிஸ் (chelosis) மற்றும் இரத்தசோகை,

நோஞ்சான்

செயல்பட திறனற்று இருத்தல், எரிச்சலடைதல், உணர்ச்சியின்மை, வயிற்றுப்போக்கு, உடலில் நீரின் அளவு வற்றுதல். மேலும் குழந்தை மெலிந்து காணப்படும். தோலின் அடியில் கொழுப்பு சிறிய அளவு இருத்தல் அல்லது இல்லாதிருத்தல்.

நோஞ்சான் சவலை

இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளிடத்தில், நோஞ்சான் மற்றும் சவலை நோயின் அறிகுறிகள் இணைந்து காணப்படும்.

சத்துணவுக் குறைவால் ஏற்படும் குள்ளத்தன்மை (Nutritional Dwarfing)

 • வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து காணப்படும்.
 • புரத சக்தி ஊட்டக்குறைவு, 2-3 வயது வரை உள்ள குழந்தைகளிடத்தில் அதிகமாக பரவிக் காணப்படுகிறது. நோஞ்சான் 1-2 வயது வரை உள்ள குழந்தைகளிடையே அதிகமாக பரவிக் காணப்படுகிறது.
 • 5 வயதுக்குட்பட்ட 80 சதவிகிதக் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 • இதில் 1-2 சதவிகிதக் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 • மேலும் 50 சதவிகிதத்திற்கும் மேல், குழந்தைகளின் இறப்புக்கு ஊட்டச்சத்துக் குறைவு நிலையானது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக உள்ளது.

NNMB (1988 - 1990) கிராமப்புற குழந்தைகளிடையே கணக்கெடுப்பு நடத்தியது. இதில், 10 சதவிகிதக் குழந்தைகள் தான் ஒப்பிடும் எடையில் (Standard Weights) 90 சதவிகிதத்திற்கு மேல் எடையைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான குழந்தைகள் குறைவான அல்லது மிதமான ஊட்டக்குறைவு நிலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 7-8 சதவிகிதக் குழந்தைகள் கடுமையான ஊட்டக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறைந்தது 1-2 சதவிகித முன்பள்ளிப் பருவக் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறை நோயான, நோஞ்சான் மற்றும் சவலையால் (PEM) பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்தியாவில், முன்பள்ளிப் பருவக் குழந்தைகள், கண்ணுக்குப் புலப்படாத நோய் அறிகுறிகளைக் கொண்ட ஊட்டக்குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கேற்றவாறு எடை அதிகரிக்காததின் மூலம் கண்டறியப்படலாம். குறைந்தபட்சம் 65 சதவிகிதத்தினர் குறை வளர்ச்சி அடைவது, அவர்களின் நீண்டகால ஊட்டக்குறைவினை காட்டுவதாகவே உள்ளது.

வைட்டமின் A குறைநோய்

போதுமான அளவு வைட்டமின் A அல்லது அதன் முன்காரணி யான 8-கரோட்டீன் நிறைந்த உணவை உட்கொள்ளாததே வைட்டமின் A குறைபாட்டிற்கு காரணமாகும்.

ஜெராப்தால்மியாவால் ஏற்படும் கண் பார்வை இழத்தல் ஒரு முக்கியமான பொதுநலப் பிரச்சினையாக இந்தியக் குழந்தைகளிடையே காணப்படுகிறது. ஜெராப்தால்மியா என்பது கண்களில் ஏற்படக்கூடிய அனைத்து அறிகுறிகளையும் குறிக்கும். அவையாவன : மாலைக்கண், விழிவெண்படலம் உலர்தல், பைடாட் புள்ளிகள் மற்றும் விழிகருபடலம் உலர்தல் போன்றவையாகும். வைட்டமின் A குறைபாடால் ஏற்படும் பைடாட் புள்ளிகள், 3 சதவிகித முன்பள்ளிப் பருவக் குழந்தைகளிடத்தில் காணப்படுகிறது.

குழந்தைகள் வைட்டமின் A குறைவால் பார்வையிழக்கிறார்கள். குழந்தைகள் நோயினால் பாதிக்கப்படுதலையும், இறப்பினையும் வைட்டமின் A குறைபாடு அதிகரிக்கிறது.

இரும்புச்சத்துக் குறைவு இரத்தசோகை

உணவில் இரும்புச்சத்து குறையும்போதோ அல்லது இரும்புச்சத்து உறிஞ்சப்படுதல் மற்றும் உபயோகிக்கப்படுதல் போதுமான அளவு இல்லாமல் இருக்கும்போதோ, இரத்தசோகை ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகளாவன:

 • வெளிறிய தோல்.
 • நகங்கள் மெலிந்து, தட்டையாகி காணப்படுதல்.
 • நாக்கிலுள்ள சுவையரும்புகள் அழிவுறுதல் மற்றும் நாக்கில் அழற்சி.
 • பசியின்மை .
 • இரைப்பை அழற்சியால், அமிலச் சுரப்பு குறைதல்.

நீண்டகால குறைபாட்டினால், பல வகைப்பட்ட மண்டலங்களின் (Systems) செயல்கள் பாதிப்படைகின்றன. இதில் காணப்படும் பொதுவான அறிகுறிகளாவன : களைப்பு, சோர்வு, கடும் உழைப்பின்போது மூச்சுவிட கஷ்டப்படுதல், படபடப்பு, மயக்கம், தலைவலி, பார்வை மங்குதல், உறக்கமின்மை மற்றும் நெஞ்சு வலி.

50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முன்பள்ளிப் பருவ குழந்தைகள் இரும்புச்சத்து குறைவு இரத்தச்சோகையால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவின் முன்பள்ளிப் பருவக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு பரவல்

ஊட்டச்சத்துக் குறைவுகள்

பரவல் விகிதம் (%)

குறைவான பிறப்பு எடைக் குழந்தை

30

சவலை / நோஞ்சான்

1-2

பைடாட் புள்ளிகள்

3

இரும்புச்சத்துக் குறைவு இரத்தசோகை

50

வயதுக்கேற்ற எடை இல்லாதிருத்தல்

53

வயதுக்கேற்ற உயரம் இல்லாதிருத்தல்

65

ஊட்டச்சத்துக்களின் குறைவால் ஏற்படும் நோய்களின் பரவல், சரிவிகித மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை பள்ளி முன்பருவ வயதினருக்கு அளிக்கப்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR

3.02985074627
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top