பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளின் இணை உணவுகள்

குழந்தைகளின் இணை உணவுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இணை உணவு

ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இவைகள் வீட்டிலே தயார் செய்யப்பட்டதாக இருக்கும் போது குழந்தை எளிதில் பழகிவிடும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும், வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி இருப்பதால் இது சுலபமாகும்.

இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது?

குழந்தையின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில் தயாராக உள்ளது.  6 மாதம் முன் இணை உணவு தரும் போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்து விடும். ஊட்டச்சத்து குறைவு ஏற்படலாம். அதே போல் இணை உணவு ஆரம்பிப்பதை 6 மாதத்திற்குப்பின் தள்ளிப்போடவும் கூடாது. அறிவில் சிறந்த நம் பண்டைய சமுதாயம் நம் பாரம்பரிய முறையான அன்னம் ஊட்டுதலை 6 வது மாதத்தில் கடைப்பிடித்தது.

பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு, அன்றன்றைக்கு வீட்டுப் பக்குவத்தில் தயாரான சுத்தமான,  ரசாயன பொருள் சேராத சாதா உணவானது, தாயின் அன்பு, பாசத்துடன் சேர்ந்து, மிகச்சிறந்த உணவாக மாறும். குழந்தையும் விரும்பி உண்ணும்.

அடைத்து விற்கப்படும் உணவுகளில் ருசிக்காகவும், வாசத்திற்காகவும், இனிப்பும், வேதிப்பொருட்களும், மணமும் கலந்து இருக்கும். உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அதன் ருசிக்கு குழந்தை பழகிவிடும்.  டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகளை மட்டும் தந்து பழக்கிவிட்டால் சத்துள்ள கீரை, பருப்பு மற்றும் பயிறு வகைகளை கண்ணெடுத்தும் பாராது. சாப்பிடவும் சாப்பிடாது.

வீட்டு இணை உணவு ஏன் தர வேண்டும்?

வீட்டு உணவினைத் தரும் போது தானும் வீட்டின் அங்கம் என்ற உணர்வு வளரும்.  கட்டாயப்படுத்தி படுக்க வைத்து திணிக்க வேண்டாம். ஒரு வயதிற்கு மேல் தானாகவே சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். இதனால் வாய் மற்றும் கையின் ஒத்தசையும் வளரும். சாப்பாடு ஊட்டும் போது கதை சொல்லுங்கள், பேசுங்கள், உடலுடன் அறிவும் வளரும்.

குழந்தையின் உதாரண உணவுமுறை

முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். 6 மாதங்களுக்கு பிறகு அரிசிக்கஞ்சி (அ) பருப்புக்கஞ்சி, காய்கறி, கீரை, முளைகட்டி பின் வறுத்து அரைத்த கோதுமை, ராகி பவுடரில் (2-3 ஸ்பூன்) உப்பு சேர்த்து கஞ்சி (இதனுடன் எண்ணெய் (அ) நெய் ¼ - ½  ஸ்பூன் சேர்க்கலாம்), மசித்த வாழைப்பழம் இவைகளை 1-2 வாரங்கள் தந்து ருசி பழக்கவும்

வீட்டில் உணவினைத் தயாரிக்கும் போது காரம் போடாமல் செய்யவும். அதனை 6 கிண்ணங்களில் எடுத்து வைத்து சிறிது சிறிதாகப் பிரித்து வைத்து, 6 வேளைகளில் தரவும். குழந்தையின் இரைப்பையின் கொள்ளளவு குறைவாக இருக்கும். எனவே 6 முறை தருவது அவசியம்.

6 மாதங்களுக்கு பிறகு 9 மாதங்கள் வரை

 

இட்லி (அ) தோசை - தொட்டுக்கொள்ள காரம் போடாத சாம்பார், சட்னி

அரிசி உணவுடன் 1 ஸ்பூன் பருப்பு, காய்கீரை, தானிய வகைகள்

சப்பாத்தி ½ முதல் 1 (அல்லது) ராகிக்களி, பருப்பு, மசித்த வாழைப்பழம், உப்புமா, பொங்கல்

குழந்தைக்கு பல் முளைக்கும் வரை மசித்தோ (அ) மிக்சியில் அரைத்தோ தரலாம்.  அதனால் உணவில் சத்துக்குறைவு ஏற்படாது.

9 முதல் 12 மாதங்கள்

தாய்ப்பால் தொடரவும்.  இட்லி (அ) தோசை வீட்டில் செய்த சட்டினி சாம்பார் உடன் 1 முதல் 2 வரை கொடுக்க வேண்டும்.

காய் கீரைப்பருப்பு, எண்ணெய்(அ) நெய் ½ -1 ஸ்பூன்.

பழம் ஒன்று (அ) ½ முட்டை முதலில் மஞ்சள் பின் வெள்ளைக்கரு (அ) 4 முதல் 5 துண்டு மாமிசம் (அ) 30 கிராம் மீன் கொடுக்கவும்.

வேகவைத்த பருப்பு, தானிய வகைகள் கொடுக்கவும், தானாக சாப்பிடச் செய்யவும் தூய்மையான குடிநீர் கொடுக்கவும்.

பழவகைகள்

எந்தக் காலத்திலும் எங்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, மாதுளம் நல்லது.  ஒவ்வாமை உள்ளவர்கள் எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பூம்பழம் மற்றும் புளிப்பு மிகுந்த பழங்களை தவிர்க்கலாம்.

இணை உணவு தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

வேகமாக வளரும் குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதில் தானியத்தை முளைகட்டுவது, மிகவும் பலனளிக்கும். தானியத்தை முளை கட்டுதலினால் உண்டாகும், அமைலேஸ் சத்து கூட்டுச் சக்கரையை (பாலி சாக்கரைட்ஸ்) தனிச் சர்க்கரையாக மாற்றுகிறது. இந்த அமைலேஸ் சத்து கலந்த மாவுக்கஞ்சியின் அடர்த்தி குறைவு, மணமும் ருசியும் அதிகம். எனவே, குழந்தையால் எளிதில் அதிக அளவு குடிக்க முடிகிறது. எளிதில் ஜீரணிக்கவும் முடிகிறது.

தானியக் கலவை கூடுதல் சத்து அளிக்கும். முழு தானியங்கள் மிகச் சிறந்தது.

எளிதில் ஜீரணிக்கக் கூடிய உடைத்த கடலை, பயத்தம் பருப்பை (பாசிப்பருப்பு) குழந்தைகளுக்கான இணை உணவு தயாரிப்புகளில் பயன்படுத்துதல் மிக நல்லது. இணை உணவுடன் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் கூடுதல் சக்தி கிடைக்கும்.

தயாரிக்கும் போது சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும். சுத்தமான கிண்ணம், ஸ்பூன் உபயோகித்து இணை உணவு ஊட்ட வேண்டும்.

6 மாதம் முதல் குழந்தைகளுக்கான சத்துணவில் இணை உணவுக் கலவைகள்:

கலவை 1 :

கேழ்வரகு (ராகி) - 100 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 30 கிராம்

செய்முறை: கேழ்வரகை கல் நீக்கி சுத்தம் செய்து, சுமார் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் வடித்து, சுத்தமான மெல்லிய துணியில் கட்டி சுமார் 12 மணிநேரம் கழித்து, மூட்டையை அவிழ்த்து, சுமார் 6 மணிநேரம் நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடைத்த கடலையைச் சுத்தம் செய்து, வறுத்த கேழ்வரகு, சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து காற்றுப்புகாத, ஈரம் இல்லாத டப்பாவில் கெட்டியாக மூடி வைத்து குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவில் கஞ்சி தயாரித்து ஊட்டலாம்.

கலவை 2 :

அரிசி - 100 கிராம், கேழ்வரகு - 100 கிராம், பாசிப்பருப்பு - 25 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்

செய்முறை : அரிசி பாசிப்பருப்பைத் தனித்தனியே வாணலியில் லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். கேழ்வரகை முன்னர் கூறிய முறையில் தயார் செய்துக்கொள்ளவும். உடைத்த கடலையைச் சுத்தம் செய்து, வறுத்த தானியம் மற்றும் பருப்பு, சர்க்கரையைச் சேர்த்து அரைத்து, சுத்தமான டப்பாக்களில் போட்டு காற்றுப்புகாமல் வைத்து தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம்.

9 மாதம் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கான சத்துணவில் இணை உணவுக் கலவைகள்:

கலவை 3 : கேழ்வரகு - 100 கிராம், கோதுமை - 100 கிராம், பாசிபருப்பு - 25 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்.

கலவை 4 : அரிசி - 50 கிராம், கம்பு - 50 கிராம், கேழ்வரகு - 50 கிராம், பொட்டுக்கடலை - 25 கிராம், பாசிப்பருப்பு - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்.

செய்முறை : மேற்கூறியது போல் தயாரிக்கவும்.

மேற்கூறிய கலவைகளைச் சுத்தமாகத் தயாரித்து, சுத்தமான டப்பாக்களில் காற்றுப்புகாமல் அடைத்து வைத்தால் சுமார் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இதுபோல ஆங்காங்கு அதிக அளவில் கிடைக்கக் கூடிய தானியங்கள் பருப்பு அல்லது பயறு வகைகள் சேர்த்து இணை உணவுக் கலவைகளை நாமே சுலபமாகத் தயாரிக்கலாம். இக்கலவைகளைக் கொண்டு கஞ்சி, லட்டு, புட்டு, கொழுக்கட்டை, தோசை மற்றும் உப்புமா போன்ற குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான உணவுகளைத் தயாரிக்கலாம். இக்கலவையுடன் கீரைகள், காய்கறிகள், தக்காளி போன்றவற்றைச் சேர்த்து கண்ணுக்குக் கவர்ச்சியாகவும், சத்துள்ளதாகவும் பல வகையான உணவுகள் தயாரிக்கலாம். செலவும், வேலையும் மிகக் குறைவு. கடைகளில் கிடைக்கும் வர்த்தக சத்துணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. இக்கலவைகளை நாமே வீட்டில் குறைந்த செலவில் தயாரித்து நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

சில உணவுத் தயாரிப்புகள்

கஞ்சி பாயாசம் : ஏதாவது ஒரு கலவையில் 2 அல்லது 3 சிறிய தேக்கரண்டி அரைத்த மாவை எடுத்துக் கொண்டு அரை டம்ளர் குளிர்ந்த சுத்தமான நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  6-7 மாதக் குழந்தைகளுக்கு இது நல்ல இணை உணவாகும். இதில் சிறிது சமைத்த கீரையின் சாறோ அல்லது தக்காளி சாறோ சேர்த்துக் கொடுக்கலாம்.

கெட்டியான கஞ்சி கூழ்: இதையும் மேற்கூறியவாறே 4 அல்லது 5 தேக்கரண்டி கலவையில் இருந்த கெட்டியாகத் தயாரித்து 7-8 மாதக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

களி: நீரின் அளவைச் சிறிது குறைத்து 4 அல்லது 5 தேக்கரண்டி கலவையை ¾ டம்ளர் நீரில் கரைத்து நன்றாக கட்டி இல்லாமல் கிளறி, வெந்த பருப்பு அல்லது மசித்த கீரையுடன் பிசைந்து 8 மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

புட்டு: 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.  5 அல்லது 6 தேக்கரண்டி கலவையை எடுத்துக் கொண்டு சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்த மாவை 15 நிமிடம் ஆவியில் திட்டமாக வேகவைத்த பாசிப்பருப்போடு கலந்து சமைக்கலாம். சிறிது நல்லெண்ணெய், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உண்ணக் கொடுக்கலாம்.

கொழுக்கட்டை: 10 தேக்கரண்டி கலவையில் சிறிது முருங்கைக்கீரை, தேவையானால் சிறிது தேங்காய் கலந்து உப்பு நீர் தெளித்து கட்டியாக பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சிறிதளவு வெல்லம் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

இது கடையில் விற்கும் டின் வகையை விட மிகவும் விலை குறைவானது. சத்து அதிகம்.  கலப்படம் இல்லாதது. இதைத் தயாரிக்க ஆகும் செலவு மிகக் குறைவு.

காய்கறி இட்லிகள்

பச்சை இட்லி:

புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் ஒன்றை அரைத்து இட்லி மாவுடன் கலந்து வேக வைத்தால் பச்சைநிற வைட்டமின் சத்து நிறைந்த சுவையான இட்லி கிடைக்கும்.

ஆரஞ்சு இட்லி:

கேரட்டை துருவி இட்லி மாவுடன் கலந்து வேக வைத்தால் வைட்டமின் ஏ சத்து மிகுந்த ஆரஞ்சு நிற இட்லி கிடைக்கும்.

கருப்பு இட்லி:

இட்லிக்கான உடைந்த உளுந்தை தோலுடன் சேர்த்து சமைத்தால் கால்சியம், இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த இட்லி கிடைக்கும்.

பல தானிய இட்லி:

இரண்டு பங்கு கேழ்வரகு, ஒரு பங்கு அரிசி மற்றும் ஒரு பங்கு உளுந்து கலந்து வேக வைத்து, கேழ்வரகுக்கு பதிலாக தினை, சாமை ஆகியவற்றில் ஒன்று சேர்ந்து பல தானிய இட்லி சமைக்கலாம்.

கம்பு, கேழ்வரகு, திணை, வரகு ஆகிய புஞ்சைப்பயிர்கள் நமது உடலுக்கு பலம் சேர்க்கும்.  உரம், பூச்சி மருந்து போன்ற நச்சுக்கள் இல்லாமல் இருப்பது அதன் சிறப்பு அம்சமாகும்.  இவைகளை தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.

1-3 வயது குழந்தையின் உணவுப் பழக்கம்

பிறந்தவுடன் ஆரம்பித்த வேக உடல் வளர்ச்சியின் முதல் கட்டம் 1.5 வயது முதல் 2 வயதில் நிறைகிறது. எனவே முதலில் இருந்த பசி குறைந்து எல்லாம் சாப்பிடும் நிலை உருவாகிறது.

சின்னஞ்சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை பழக்கவும். இளமையில் நல்ல உணவுப் பழக்கங்களை கடைபிடிக்காவிட்டால், வளர்கின்ற வயதில் பெருந்தீனி, உடனடி திண்பண்டம் டின் உணவு, மென்பானங்கள் சாப்பிட்டு பழகி அதிக பருமன், சர்க்கரை நோய் முதலியவை வரக் கூடும்.

எனவே 1-3 வயதே, வளரும் குழந்தைக்கு நல்ல உணவுப்பழக்கங்களை பழக்க சரியான நேரம்.  சாதரணமாக 1 வயது குழந்தை தரையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து உண்ண இயலும்.

கை கால் கழுவி, உணவு உட்கொள்வது, சுத்தமும், சுகாதாரமும், தகுந்த தட்டினைப் பயன்படுத்தவும், உண்ண தேவையான நேரம் அளிக்கவும்.

உணவினை தொட்டுப்பார்த்து அதன் நிறம், மணம், அளவு, வடிவம் பற்றி உணரச் செய்யவும்.

முகர்தல் மற்றும் சுவைத்தலில் உணவினை அறிதல் அபிவிருத்தி அடைகிறது. எனவே புதுப்புது உணவுகளை சுவைக்க குழந்தை விருப்பப்படும்.

காரம் குறைந்த, மிதமான சூடுள்ள உணவுகளையே விரும்பும். அதிக காரம், மசாலா கொதிக்கும் சூடு குழந்தைக்கு பிடிக்காது.

மழலைகள், சிறார்கள் வண்ண நிறங்களுடைய காரட், கீரைகளை விரும்பும். சத்துடனும், நேசத்துடனும் ஊட்டவும். ஒவ்வொரு முறையும் புது உணவாக தர ஆரம்பிக்கலாம்.

குழந்தை உண்ணும் அளவு மட்டும் (உதாரணம் 1 கப்) தரவும். மீதமாகும் உணவு தர வேண்டாம். உணவு துகள்கள் மூச்சு குழாய்களை அடைக்காவண்ணம் தரவும்.

வீட்டில் தயாரிக்கும் சக்தி நிறைந்த தானிய, பருப்பு மற்றும் கீரை சேர்ந்த உணவுகள் கலோரிச்சத்து பற்றாக்குறையினை போக்கும், உணவு இடைவேளையின் போது அவைகளை தரவும்.

குழந்தையின் குறிப்பிட்ட உணவினை உண்ண (உதாரணம்- முட்டை) தொந்தரவு செய்ய வேண்டாம்.  தற்போது மறுத்தால் பின்னர் வேறு ஒரு சமயத்தில் பொறுத்து தரவும்.

உணவினை திணிப்பது வெறுப்பினை உண்டாக்கும். மிரட்டி, அதட்டி தர வேண்டாம்.  சாப்பிடாவிட்டால் பேய், பூதம் பிடிக்கும் என பயமுறுத்த வேண்டாம்.

கலர் கலரான குளிர்பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட வாசனை பானங்கள் தருவது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். அதிலுள்ள சத்தில்லாத இனிப்பு, நிறத்தினை அளிக்கும் இரசாயனப் பொருட்கள், பொங்கி வரும் நுரையின் வேதிப்பின்னனணி ஒவ்வாமையினை உண்டு பண்ணலாம்.  அதனை விட வீட்டில் தயாரிக்கும் பழரசம் நல்லது.

தின்பண்டங்கள்

கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த வகைவகையான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

கேழ்வரகு அடை:

வெல்லம் (அ) கருப்பட்டி, தேங்காய், துண்டுகள் ஆகியவற்றை கேழ்வரகுடன் கலந்து கேழ்வரகு அடை சுடலாம். மொறுமொறுப்புடன் சாப்பிட இனிப்பாக இருக்கும். இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.

கேழ்வரகு கொழுக்கட்டை:

மேற்கூறிய கேழ்வரகு கலவையை கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்து கொழுக்கட்டையாகவும் செய்து கொடுக்கலாம்.

பச்சைப்பயிறு பாயாசம்:

உடைத்து வறுத்த பச்சைப்பயிரை, வேகவைத்து அதனுடன் வெல்லம், கருப்பட்டியுடன் தேங்காய் துறுவல் கலந்து, ஏலக்காய் சேர்த்து பாயசமாக கொடுக்கலாம். சுவை மிகுந்தது.  குழந்தைகள் விரும்பி சாப்பிடும், புரதம், இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்தது.

சுண்டல்:

கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேர்க்கடலை, கொள்ளு இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வேகவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் மாங்காய் கலந்து தாளித்து சுண்டலாக செய்து கொடுக்கலாம்.

பள்ளிக்கு கொடுத்தனுப்ப தின்பண்டங்கள்:

பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் குழந்தையின் பசியை மந்தப்படுத்துவதோடு, ரசாயனங்களும் அடங்கியவை. அவற்றை தவிர்த்து வீட்டிலேயே செய்யக் கூடிய தின்பண்டங்களைக் கொடுத்தனுப்பலாம்.

அவல் சிற்றுண்டி:

1. இனிப்பு அவல்: சிவப்பு அவல், சுடுநீர், தேங்காய் பால், வாழைப்பழம் (அ) பேரீச்சை, தேன் (அ) வெல்லம் இத்துடன் இஞ்சி சாறு சிறிதளவு.

2. அவல் காரட் கலவை: சிவப்பு அவல், சுடுநீர் விட்டு கையால் பிசைந்து வைத்துக் கொள்ளவும். நெல்லித்துருவல், தேங்காய் துருவல், மிளகு (அ) பச்சை மிளகாய், சுவையூட்டும் நீர் காய்கள் இவைகளை ஒன்றாக அரைத்து, பிசைந்து வைத்த கார அவல் உடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்து இடவும். அவல் காரக் கலவை ரெடி.

3. அதிரசம்: பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் கலந்து அதிரசம் செய்து கொடுக்கலாம். இது இரும்புச்சத்து நிறைந்தது.

4. கேழ்வரகு பிஸ்கட்: கேழ்வரகு 2 பங்கு, கம்பு 1 பங்கு இவை இரண்டையும் முளைகட்டி உலர்த்தி மாவாக்கவும். அத்துடன் உளுந்து மாவு, கடலை மாவு, தலா ஒவ்வொரு பங்கு, வெல்லம் ஒரு பங்கு, நல்லெண்ணெய் தேவையான அளவு, சிறிது ஈஸ்ட் சேர்த்து மொத்தமாக தட்டி ஆவியில் வேகவைத்தால் பிஸ்கட் தயார். மெலிதாகத் தட்டி கல்லில் வார்த்தால் ரொட்டி தயாராகிவிடும்.

5. கடலை மிட்டாய் : உடைத்த வேர்க்கடலை, வெல்லப்பாகு ஆகியவை கலந்து கடலை மிட்டாய் செய்து கொடுக்கலாம். புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. கடைகளில் கிடைக்கும் தரமான கடலை மிட்டாய்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

6. காலை பானம்: (காபி, டீக்கு மாற்று) காபி, டீ போன்ற பானங்கள் குழந்தைகளின் பசியை குறைப்பதால், அதற்கு மாற்றாக பச்சைப்பயிறு காபி செய்து கொடுக்கலாம். உடைத்து, வறுத்து, ஏலக்காய் கலந்து அரைத்த பச்சைப்பயிறு மாவு 1 கரண்டியுடன் சூடாக்கிய பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து காபிக்கு மாற்றாக கொடுக்கலாம்.

புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், நிறைந்தது. இனிப்பானது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

ஆதாரம் : இந்திய குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் உணவு அறிவுரை வெளியீடுகள்

3.07766990291
S. Kannadasan Apr 11, 2020 07:28 AM

பணம்கிழங்கு குழந்தைக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்

இளஞ்செழியன் Jun 21, 2019 07:42 AM

ஒரு பெண் கருவுற்ற 3 மாதத்தில் இருந்து இணை உணவு அங்கன்வாடி மைய ஊழியர்களால் வழங்க படுகிறது ஆனால் அது எவ்வளவு நாட்களுக்கு வழங்க வேண்டும்?
குழைந்தைக்கு எவ்ளோ வயது வரை???
இள பெண்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு????
பெண்களுக்கு நாப்கின் வழங்க படுகிறதா???
இதில் பெருவாரியாக இணை உணவை மூட்டையாகவே விற்கிறார்கள் ..????

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top