பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு / குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

நாணயத்தை சுண்டினால் பூ, தலை என இரண்டில் ஏதாவது ஒன்று தான் விழும் என்பது போல் முயற்சியின் விளைவுகள் இரண்டு தான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி. கரும்பின் சுவை போன்று இனிப்பானது வெற்றி. கசக்கும் இயல்பு கொண்டது தோல்வி. பெற்றோர்களாகிய நாம் தோல்விகளாலேயே துவண்டு போய் இருப்பதால் நம் குழந்தைகளும் தோல்வியடைவதை விரும்புவதில்லை. அனுபவம் என்னும் அகராதியை வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதேனும் வகையில் உதவி அவர்களுக்கு வெற்றியை அளிக்க முயற்சிக்கிறோம்.

ஒரு சிறுவன் போட்டி ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான். மைதானத்தில் அமர்ந்து அவனின் பெற்றோர் மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சிறுவன் விளையாடும் போது ஒரு பாயிண்ட் எடுத்து விட்டால் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் துள்ளிக் குதிப்பதும், ஏதேனும் தவறு செய்து விட்டால் உடனே வெளியிலிருந்து கடிந்து கொள்வதுமாக பெற்றோரின் நடத்தை இருந்தது. கிட்டத்தட்ட சிறுவன் தோற்பது உறுதியாகிவிட்ட நிலை நிலவிய போது பெற்றோரின் முகம் பெரும் சோகத்தில் இருந்தது. விளையாட்டின் முடிவில் தோற்ற அந்த சிறுவனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவனின் பெற்றோர் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர். சிறுவன் விளையாட்டில் தோற்றதைவிட பெற்றோரிடம் அவமானப்பட நேரிட்டதே என்பதற்காகத்தான் அழுவது போல் தெரிந்தது. ஏனென்றால் பெற்றோருடன் வராத சிறுவர்கள் தோற்றபோது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நண்பர்கள் போட்டியில் விளையாடுவதுப் பார்த்து அவர்களை மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்படும் தோல்விகளை பூதாகரமாக்குவது பெற்றோர்தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நல்ல பெற்றோரின் கடமை வெற்றி தோல்வி பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதல்ல. மாறாக முயற்சி என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுப்பது தான். விளையாட்டு, போட்டி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் முயற்சிப்பதே முக்கியம் என்பதையும், அறிவுப்பூர்வமாக முயற்சி செய்வது எப்படி என்பதையும், கடினமாக உழைப்பது எப்படி என்பதையுமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முயற்சியின் முடிவு வெற்றியாக அமைந்துவிட்டால் குழந்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த வேண்டுமே தவிர, அதனைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் கர்வம் ஏற்பட பெற்றோர்க் காரணமாக இருக்கக் கூடாது. முடிவு தோல்வி என்றால் முயற்சி சரியான பாதையில் இல்லை என்பதை பெற்றோர் உணர்த்த வேண்டும். தோல்வியைக் காட்டி குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது.

சிறுவயதில் எளிய காரியங்கள் செய்யும் போது குழந்தைகள் தோல்வியை சந்திப்பது நல்லது. தோல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள இவ்வனுபவங்கள் உதவும். வெற்றிக்கான முயற்சிகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை இத்தோல்விகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். பிற்காலத்தில் பெரிய முயற்சிகளில் தோல்வியடையும் போது மனம் கலங்காமல் மீண்டும் முயற்சிக்கும் மனப்பான்மை வளரும். இக்கால கட்டத்திலோ சிறுவயதில், சின்னசின்ன முயற்சிகளில் பெற்றோர் உதவியுடன் ஏராளமான வெற்றிகளை குழந்தைகள் பெறுகின்றனர். எல்லோராலும் சாதிக்கக் கூடிய இவ்வெற்றிகளால் பயன் ஏதும் இல்லை. இதே குழந்தைகள் பெரியவர்களானதும் ஒரே தோல்வியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களால் தனித்து முயற்சி செய்யவும் முடிவதில்லை. தோல்வியைத் தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.

ஒரு குழந்தை எல்லா முயற்சிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றால் பெற்றோர் சற்று உஷாராக இருக்க வேண்டும். அக்குழந்தையின் மனதில் தோல்வியே எனது வாழ்க்கை என்ற மனப்பான்மை உருவாக வாய்ப்புண்டு. அந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் அதற்குப் பின் குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குப் போய்விடும். இது போன்ற குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை புதிய முயற்சி எடுப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பழைய சூழ்நிலையில் ஏற்பட்ட தோல்விகள் புதிய சூழ்நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும், புதிய சூழ்நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் உணர்த்துவது பெற்றோரின் கடமை.

வெற்றியடைந்து விட்டால் வியாக்கியானம் பேசுவதும், தோல்வியடையும் போது துவண்டு போவதும் குழந்தைகளின் இயல்பு. பெற்றோர் இரண்டையுமே ஊக்குவிக்கக் கூடாது. வெற்றி தோல்வியை வைத்து குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. ஒரு குழந்தை வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம். அவைகளுக்காக நம் குழந்தைகளுக்கு பாசத்தைக் காட்டுவதை விட அவர்கள் நம் குழந்தைகள் என்பதற்காக பாசத்தைக் காட்டினாலே உங்கள் குழந்தை வெற்றிக் குழந்தையாக வளரும்.

ஆதாரம்: தோழி இதழ்

2.99019607843
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top