பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு / குழந்தைகளை சாதனையாளராக உருவாக்குவது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளை சாதனையாளராக உருவாக்குவது எப்படி?

குழந்தைகளை சாதனையாளராக உருவாக்குவது எப்படி?

வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகும் போது சாதனையாளர்களாக உருவாவதில்லை. பண வசதியும் பிற வசசிகளும் கொண்ட பல குழந்தைகள் பிற்காலத்தில் எந்த சாதனைகளும் செய்யாமல் சாதாரணமானவர்களாகவே இருந்து விடுகின்றனர். அதே சமயத்தில் ஒன்றுமே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தாலும் சில குழந்தைகள் தன் முயற்சியால் ஏதேனும் சாதித்து இந்த உலகில் தங்கள் இருப்பை பதிவு செய்து விடுகின்றனர். குழந்தை வளர்ப்பு முறையும், ஆளுமைப் பண்புகளுமே குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்குகின்றன.

குழந்தைகளை சாதனையாளராக்க பெற்றோர் மிக சிரமப்பட வேண்டும், வீர தீர பராக்கிரமங்களைச் செய்ய வேண்டும், அவ்வாறு சாதனையாளராக குழந்தைகளை உருவாக்குவது மிக மிக கடினம் என்ற கருத்துக்களையே பெரும்பாலான பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவ்வாறெல்லாம் கிடையாது. சாதாரண விஷயங்களில் இருந்தே சாதனைகள் தொடங்குகின்றன. சிறு வயதிலிருந்தே சரியான குழந்தை வளர்ப்பு முறையை பெற்றோர் கடைபிடித்து வந்தால் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்று சாதனை ஊக்கம் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட உளவியல் அறிஞர் மெக்லிலேண்ட் கூறுகிறார். அவ்வாறான சரியான குழந்தை வளர்ப்பு முறைகளில் முதன்மையானது குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்குவதாகும். குழந்தையை தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது போன்றவை சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்க்கும் பெற்றோர் நடத்தைகளாகும். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வை தூண்டி வளர்க்கும். நீண்ட வருடங்களாக நடத்தப்பட்ட உளவியல் ஆய்வு ஒன்றில் மிக இளம் வயதிலேயே கழிவறை பயிற்சி பெற்ற குழந்தைகள் இருபத்தியாறு வருடங்கள் கழித்து அதிக சாதனை ஊக்கம் கொண்டவர்களாக மாறி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இவர்கள் எல்லா செயல்களையும் தன்னால் முடியும் என்ற மனப்பாங்குடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகியது ஆய்வில் கண்டறியப்பட்டது.

குழந்தைகளின் ஆற்றல்களைத் தெரிந்து கொண்டு அந்த ஆற்றல்களுக்கு உட்பட்ட எல்லைவரை சவாலான இலக்குகளை பெற்றோர் குழந்தைகளுக்கு நிர்ணயிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக் கூடாது. குழந்தைகளால் சாதிக்கக் கூடிய இலக்குகளை நிர்ணயித்த பெற்றோர், அந்த இலக்கை அடையும் வண்ணம் அமையும் குழந்தைகளின் நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக, அ, ஆ, இ, ஈ அல்லது A, B, C, D எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓர் முத்தம் கொடுத்தோ அல்லது ஓர் சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்த வேண்டும்.

முதல் இரண்டு வயது வரை குழந்தைகள் விளையாடும் போது அல்லது ஏதாவது செயல்களை செய்யும்போது பெற்றோர் அவர்களுடனே அருகில் இருந்து தேவையான உதவிகளை செய்து வருவது பிற்காலத்தில் குழந்தைகளை மாபெரும் சாதனையாளர்களாக உருவாக்கும். இவ்வாறு தன் பெற்றோர் அருகில் இருக்கும்போது முயற்சி மேற்கொண்ட குழந்தைகள் பிற்காலத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும் ஆவலுடனும் அனைத்து விஷயங்களையும் அணுகும். புதிய புதிய திறன்களை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கும். தன்னிடமுள்ள திறமைகளை தானே மதித்து பெருமை கொள்ளும். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தோல்வியடையும் வாய்ப்புகளாக கருதாமல் சமாளித்து வெற்றி கொள்ளும் சவால்களாக எடுத்துக் கொள்ளும்.

கேரோல் டெக் என்னும் உளவியல் நிபுனர் குழந்தைகள் எவ்வாறு சாதனையாளர்களாக உருவாகிறார்கள் என விளக்கும்போது முயற்சியால் திறமைகள் அனைத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொள்ளும் குழந்தைகளே சாதிக்கும் குழந்தைகளாக உருவாகிறார்கள் என்று தெரிவிக்கிறார். எல்லா திறமைகளுமே தொடர்ந்து செய்யும் முயற்சியின் பலனாக வளர்த்துக் கொள்ளக் கூடியவையே. வாழ்க்கையில் இறுதியாக ஒருவர் அடையும் வெற்றி அவரின் தொடர்முயற்சியின் பலனாக விளைவதாகும். இதை உணராத பல அறிவாளிகள் கூட தற்காலிக தோல்விகளால் மனம் துவண்டு நிரந்தர தோல்வியாளர்களாக மாறி விடுகின்றனர். எனவே திறமைகள் முயற்சிகள் மூலம் வளர்ச்சியடையும் என்னும் நல்ல நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

• பெற்றோர்களின் பின்வரும் செயல்பாடுகள் ஒரு சாதாரண குழந்தையையும் சாதனைக் குழந்தையாக்கும்:

• சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல்.

• குழந்தைகளின் சிறுசிறு வெற்றிகளை பாராட்டிக் கொண்டாடுதல்.

• தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக் கொள்ளச் செய்தல்.

• குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடைய வேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்குதல்.

• முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைத்தல்.

இவைகளை உங்கள் குழந்தை வளர்ப்பில் கடைபிடித்து சாதிக்கும் குழந்தையை உருவாக்கி சாதனையை படைக்கலாமே!

மூலம்: http://gestaltselvaraj.blogspot.in/2012/02/blog-post_17.html

2.95192307692
Anonymous Oct 12, 2019 04:16 AM

நன்றி மகிழ்ச்சி.....

கா.நஸ்ரின் திருவெறும்பூா் Jun 04, 2018 11:58 AM

மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top