பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இல்லங்களில் ஆரோக்கிய நிர்வாகம்

இல்லங்களில் ஆரோக்கிய நிர்வாகம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

வீட்டில் சிகிச்சையளித்து நோயாளிகளை ஆரோக்கியம் காணச் செய்வது பல நூறு காலங்களாக குழந்தையிலிருந்து, பெரியவர்கள் வரை இதன் மூலமாய் பலன் பெற்றுள்ளார்கள் என்பதை எவரும் மறக்க முடியாத உண்மை. இக்காலத்து ஆங்கில மருந்துகளை விட அதிக செலவில்லாத, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வைத்திய முறைகள் பழங்காலத்திலிருந்து இத்தகைய வீட்டு சிகிச்சைகளை கையாள்வது காலச்சிறந்தது. சிகிச்சை செய்யும் முன் பின்வருவனவற்றை கவனித்தல் வேண்டும்.

உணர்ந்த தேவைகள்: மக்களின் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள்

உண்மையான தேவைகள்: பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

தயார் நிலை : எடுக்கப்படும் தீர்வுகளை மக்களின் ஆமோதிப்பு

முக்கிய ஆதாரங்கள் : முக்கிய நபர், திறமைகள், பொருள்கள், பணம், மூலிகைகள், மருந்துகள் போன்ற ஆதாரங்கள், உதவிகள் சிறந்த முறையில் கிடைத்தல்.

காய்ச்சல் (Fever)

மனித உடலில் அளவுக்கு அதிகமான (98.6°F or 37°C) வெப்பம் உயரும் தன்மை ஜுரம் என்று சொல்வது வழக்கம். இத்தகைய வெப்பம் நோயின் அறிகுறியே அன்றி நோய் ஆகாது. உடலின் வெப்பம் குழந்தைகளுக்கு அதிகமாகும் போது பேராபத்தை விளைவிக்கும். எனவே உடனே உடல் வெப்பத்தை தணித்தல் வேண்டும்.

வீட்டு சிகிச்சை முறை (Home Management)

* உடலில் உள்ள அனைத்து துணிகளையும் குழந்தைகளுக்கு நீக்கி விடுவதால் காற்று பட்டு உடலின் வெப்பம் குறையும்

* நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் படுக்கை அமைத்தல்.

* நெற்றிபற்று குளிர்ந்த நீரால் போடுதல்

• நிறைநீர், பழரசம் மற்றும் திரவங்களை அருந்த கொடுத்தல்

* பேராசிடமால் ஜீரம் குறைக்கும் மாத்திரை சரியான அளவுடன் கொடுத்தல்

* முப்பது நிமிடத்திற்கொருமுறை வெப்பமானி (தெர்மாமீட்டர்) கொண்டு உடல் வெப்பத்தை அளத்தல்

* குறையாத பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்லுதலே நல்லது.

வயிற்றுப்போக்கு (பேதி) (Diarrhoea)

வயிற்றுப்போக்கு என்றால், மலம் அடிக்கடி நீராகப்போவது. இதனுடன் இரத்தமும், சீதமும் கலந்து வந்தால் அது சீதபேதி ஆகும். இதை சரியாக்கவில்லை என்றால் உடலிலுள்ள நீர் குறைந்து நீர் இழப்பு உண்டாக்கி மரணம் ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் இத்தகைய அபாயகரமான இழப்பிற்கு ஆளாகின்றார்கள்.

நீர் இழப்பின் அறிகுறிகள் (Signs of Dehydration)

மிகுந்த தாகம். குறைந்த சிறுநீர், மஞ்சள் நிறத்தில் போகும் சிறுநீர், உடல் எடைக் குறைவு, வறண்ட உதடு, குழிவிழுந்த கண்கள், வறண்ட கண்கள், நீளும் தன்மை குறைந்த தோல் என பலவகை அறிகுறிகள் சிறிது தோன்றும் போதே சிகிச்சை செய்வது அவசியம். வயிற்றுப்போக்கு, வாந்தி என துவங்கியவுடன் நீர் இழப்பு ஏற்படுவதற்க்கு முன் சிகிச்சை செய்வது பல அபாயங்களை தவிர்க்க உதவும்.

சிகிச்சை (Management)

* நிறைய திரவம் கொடுத்தல் (நீர், கஞ்சி, தேனீர்) நீர் குறையை சரிசெய்ய உதவும்.

* உணவு: காரமற்ற, குடலை அரிக்காத உணவுகளை விரைவில் துவங்குதல்

* குழந்தையாய் இருக்கும் பட்சத்தில் தாய்பாலைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

நீர் ஏற்றும் பானம் தயாரிக்கும் மூன்று முறைகள்

1) 1 லிட்டர் சுத்தமான நீருடன் அரை தேக்கரண்டி உப்பு, எட்டு தேக்கரண்டி சர்க்கரை கலந்து, வடிகட்டி கொடுத்தல்.

2) 1 லிட்டர் சுத்தமான நீருடன், 1/2 தேக்கரண்டி உப்பு, 3 தேக்கரண்டி சர்க்கரை, கையளவு அரிசிமாவு அல்லது சோளமாவு அல்லது மசித்த உருளை கிழங்கு மாவு சேர்த்து, ஐந்திலிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க வைத்த கஞ்சியை குழந்தைக்கு கொடுக்கலாம். கொடுப்பதற்கு முன்பு அது நல்ல நிலையில் உள்ளதா என்று அறிந்த பிறகு கொடுக்கவும்.

3) ORS (Oral Rehydration Solution) என்ற கடையில் விற்கும் பொட்டலத்தை (Pocket) வாங்கி, 1 லிட்டர் கொதித்து ஆறவைத்த நீரில் கலந்து கொடுக்கலாம்.

இவைகளை அடிக்கடி கொடுப்பதன் மூலம் இழந்த நீரை உடலில் ஏற்றலாம்.

தலைவலியும், ஒற்றைபக்க தலைவலியும் (Headache and migraine)

தலைவலி என்பது பொதுவாக பலருக்கும் வருவதை ஒய்வு எடுப்பது, தைலம் தடவுவதன் மூலம் பல சமயம் நிவர்த்தி செய்யலாம். சூடான நீரில் நனைத்து பிழிந்த துணியை முதுகு, கழுத்தில் பரப்புவதன் மூலமும் மசாஜ் செய்வதன் மூலமும் சரிசெய்யலாம்.

ஒற்றை தலைவலி (Migraine) :

ஒரு பக்க நெற்றியில் அளவுக்கதிகமான வலி, இதை அமைதியான இருண்ட அறையில், ஓய்வு எடுப்பதும், கவலைகளை களைந்து நிம்மதியாக இருப்பதும் பேராசிடமால் (2) இரண்டை கருப்பு தேனீர் அல்லது காபியுடன் கொடுப்பதால் சரிசெய்யலாம்.

சளி, இருமல், ப்ளு (Cold. Cough and Flu)

மேலுள்ள அனைத்தும் வைரஸ் கிரமிகளால் ஏற்படும் தொற்று, தலைவலி, மூக்கில் ஒழுகல், இருமல், தொண்டை வலி, ஜீரம், மூட்டுகளில் வலி என பலவகை அறிகுறிகள் தோன்றும்

விபால் சிகிச்சை

* குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்தல்

* ஓய்வு கொடுத்தல். இதற்கென்று தனிப்பட்ட உணவு என்று எதுவுமில்லை.

* பழரசம் குறிப்பாக ஆரஞ்சு அல்லது எலுமிச்சைபழம் சாறு நல்லது.

* நீரை கொதிக்கவைத்து 15 நிமிடங்கள் ஆவி பிடித்தல் சளியை இளக வைத்து, வெளியே கொண்டுவர உதவி செய்யும் சிலர் நீராவியில் யூக்கலிப்டஸ் அல்லது விக்ஸ் சேர்ந்து எடுப்பது வழக்கம். அதனால் வெறும் நீராவியே போதுமானது.

* இருமலுக்கு மருந்து (சிரப்) ஒரு தேக்கரண்டி எடுக்கலாம். இதன் அளவு பெரியவர் குழந்தைகள் என வயதிற்கு ஏற்றாற்போல மாறுபடும்.

ஆர்தரைடிஸ் (Arthritis) எலும்பு அலர்ச்சி (வலி, தொற்று)

வீட்டில் சிகிச்சை- நடக்க முடியாமல், மடக்க முடியாமல் மூட்டுகளில் ஏற்படும் தாங்க முடியாத வலியை சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தல் சிறிது வலியை குறைக்கும், வலியுள்ள பாகத்தை உயர்த்துவதினால் இவ்வலியை குறைக்கலாம்.

வலிப்பு நோய் (Convulsion)

வலிப்பு என்பது திடீரென்று நினைவு இழப்பதும், கைகால்கள் இழுப்பதும் வாயில் நுரைதள்ளுவதும், அடிப்படுவதும், கண்கள் மேலே சொருகி கொள்வது போன்ற பல அறிகுறிகள் தோன்றுகிறது.

வலிப்புக்கான காரணங்கள்

* அதிகமான ஜீரம்

* அதிகமான நீர் இழப்பு

* மூளையில் ஏற்படும் அழற்சி (Meningitis

* மூளையில் மலேரியா

* விஷம் ஏறுதல்

* வெட்டு நோய் (Epilepsy)

* கையிலிருக்கும் கூர்மையான ஆயுதங்களை களைதல்

* வாயில் தண்ணீர், உணவு என எதுவும் கொடுக்காமல், தலையை ஒரு பக்கமாக திருப்புதல்.

* நாக்கை கடித்துக்கொள்ளாதவாறு வாயில் கட்டை அல்லது ஸ்பூனில் துணி சுற்றி வைத்தல்.

* தன்னைத்தானே காயப்படுத்துவதை தவிர்த்து, அவரின் கை கால் அசைவுகளை கட்டுப்படுத்தாதிருத்தல்

* வலிப்பு நின்றதும், நித்திரை செய்ய விடுதல்

* மருத்துவரிடம் கொண்டு செல்லுதல்.

பல் வலி

பல்லில் உணவுத் துகள்களை நீக்கி, வெது வெதுப்பான உப்பு நீரில் பல்லைக் கழுவுதல். வலி அதிகமாகவோ சீழ் இருந்தாலோ மருத்துவரை அணுகுதல்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் என்பது கடினமாகிவிட்ட மலம் மூன்று அல்லது அதற்கும் அதிகமான நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பதே ஆகும்.

காரணங்கள்

* சரியாக உணவு எடுக்காமை முக்கியமாக நார்சத்து பொருள்கள் அதாவது பழவகைகள், காய்கறிகள்

* சரியான உடற்பயிற்சி இல்லாமை.

* தண்ணீர் குறைவு

* தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துதல்.

* தினமும் பழவகைகள், காய்கறிகள், தானியங்கள், புரதச்சத்துகள் உணவில் சேர்த்து கொள்ளுதல்.

* தினமும் உடற்பயிற்சி செய்தல்

* தினமும் சரியான நேரத்தில் மலம் கழித்தல்.

இல்லத்தில் நோயாளிகளை கவனிப்பதில் செவிலியரின் பங்கு (Extended Role of Home Nurse)

செவிலியர்:

இப்பொறுப்பை ஏற்கும் தகுதியுடைய, சரியாக பயின்று தகுதிச் சான்றிதழோடு பதிவு செய்தவர் மட்டும் நோயாளிகள் தங்களை தாங்களே சரியாக கவனித்துக் கொள்ள சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நோய்களும் அறுவை சிகிச்சைகளும்

கீழ்க்கண்ட நோய்களுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான வீட்டு கவனிப்புகள்:

நோய்கள்: நிமோனியா, நுரையீரல் காசநோய், ஆஸ்துமா, கரோனரி இதய நோய், சர்க்கரை வியாதி, இரத்த சோகை எலும்பு அலற்சி, குருட்டுத்தன்மை, புற்றுநோய்.

அறுவை சிகிச்சைகள்: கர்ப்பப்பை நீக்கம், இருதய அறுவை சிகிச்சை, மார்பு மற்றும் சிகிச்சை, மாவுக்கட்டு, எலும்பு மற்றும் வயிற்றுப்பகுதி சிகிச்சைகள்.

மனநோய், கைகால் ஊனம், ஊமை, காது கேளாதவர், வலிப்பு நோயுள்ளவர் இரத்த நாளங்களில் நோய், மூளை சம்மந்தப்பட்ட நோய்கள், மேற்சொல்லப்பட்ட நோயாளிகளை கவனிக்க பலவகையான சேவைகள் தேவைப்படுகிறது.

இவைகளை சரியான முறையில் வீட்டில் செய்ய தாதியரின் சேவைகள் மகத்தானவை. அவையாவன.

* ஓய்வு

* உடற்பயிற்சி

* இரத்த ஓட்டம்

* கழிவு நீக்கம்

* உணவு

* சுத்தம்

* கவனிப்பு

* பாதுகாப்பு

* காற்றோட்டம் என்பவற்றை விரிவாக காண்போம்

ஓய்வும் உடற்பயிற்சியும் (Rest and Activity)

ஓய்வு பல நோய்களை குணப்படுத்தும் அமைதியான இடத்தில் எந்தவித இடர்பாடும் இல்லாத இடத்தில் ஓய்வும் தூக்கமும் அவசியமாகிறது.

உடற்பயிற்சி இது இரண்டு வகைப்படும்.

1) நோயாளியாக அசைப்பது (Active exercise)

2) மற்றவர்கள் அசைத்து உடற்பயிற்சி கொடுப்பது (Passive exercise)

இத்தகைய உடற்பயிற்சிகள் சரியாகவும், அளவாகவும், முறையாகவும் கொடுத்தல் அவசியம். தினமும் குளிப்பது, உடுத்துவது. சின்ன சின்ன வேலைகள் விளையாட்டு \களும் இதில் அடங்கும்.

இத்தகைய உடற்பயிற்சிகள், சரியான உடல் அசைவுகள், சரியாக உயர்த்தும் முறைகள், எடைகளை தூக்கியெடுக்கும் முறைகள், தாங்கல், இழத்தல், உடல் சக்திக்கு தகுந்தவாறு பயன்படுத்துதல் தசைகளை அசைத்தல் போன்றவை மிக முக்கியம்.

வயது சிறிது அதிகமானவர்களுக்கு இடுப்பில் அதிக வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் சரியான நிலையில் அமர்தல், எழுதல், போன்ற உடற்பயிற்சிகளை சரியாக செய்தல் அவசியம்.

மார்பக அறுவை சிகிச்சையில், 24 மணி நேரத்திற்கு பிறகு துவங்குதல், கை தோள்பட்டை தசைகளை உறுதிப்படுத்த உதவும். இதைதவிர மார்பகங்களுக்கு பதிலாக உடயோகிக்கும் கருவிகளை சரியாக உபயோகித்தல் வேண்டும்.

இதய நுரையீரல் செயல் இழப்பு

இத்தகைய சிகிச்சைக்கும் (CPR Cardiac Pulmory Resuscitation) கொடுக்க சிறந்த பயிற்சி தேவை, இதற்காக இரண்டு பேர் தேவை.

பேஸ்மேக்கர் (Peace Maker) : இருதயம் சில சமயம் சரியாக வேலை செய்ய தடைபடும் போது பேஸ்மேக்கர் வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களை சரியாக கவனிப்பது அவசியம்.

கழிவு வெளியேற்றல் (Elimination)

i) சிறுநீரை வெளியேற்றும் பயிற்சி

ii) மலம் வெளியேற்றும் பயிற்சி

iii) எனிமா உபயோகித்து மலம் வெளியேற்றும் முறை :

iv) சிறுநீரை குழாய் மூலம் வெளியேற்றும் முறை

v) அறுவை சிகிச்சை மூலமாக துளையிட்டு மலம் வெளியேற்றும் முறை

மேற்சொல்லப்பட்ட பயிற்சிகள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொடுக்கப்படுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும். சிறுநீர், மலம் கழிக்க தேவையான உபகரணங்களை படுக்கையிலிருக்கும் நோயாளிகளை காயப்படுத்தாமல் கொடுத்து எடுக்க கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

மலம் வெளியேற்ற முடியாத பட்சத்தில் சோப்பு கலந்த அல்லது கடையில் கிடைக்கும் எனிமாவை எப்படி சிகமாய்டு (Sigmoid) குடலில் செலுத்தி காற்று, மலம் வெப்ப குறைப்பு குடல் அசைவு போன்ற பல நன்மைகளைப் பெற சொல்லிக் கொடுத்தல் வீட்டு தாதியர்களின் கடமையாகிறது.

இவைகளைத் தவிர அறுவைச் சிகிச்சையின் மூலம் துளை செய்து மலக் குடலையோ, சிறுநீர்க் குழாயையோ தோலின் மேல் பகுதிக்கு கொண்டு வந்து வழக்கமான துளையில் இல்லாமல் வயிற்று கீழ் பகுதியன் மூலம் வெளியேற்றுதல் இதை கவனமுடன் செய்வது மட்டுமின்றி அந்த இடத்தில் சுத்தமாகவும், புண்ணாக மாறாமலும் தனிக்கவனம் செலுத்த நோயாளிக்கும், குடும்பத்தினருக்கும் கற்று கொடுத்தல்.

உணவு திரவம் (Food Fluid) :

நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி தங்களின் உணவு திரவம் இவைகளை பல சமயம் வாயின் வழியாக மென்று உண்ண முடியாத போது அல்லது வாயில், கழுத்தில், வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது குழாய் வழியாக வயிற்றில் குழாய் போட்டோ உணவை தருவது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை உணவால் குணப்படுத்துவது வழக்கம். ஆனால் நீண்ட நாட்கள் இவ்வாறே உண்ண வேண்டும் என்ற நிர்பந்தத்தில் மருத்துவ செயலை செய்ய முடியாத நிலையில் வீட்டிலும் இம்முறை கையாளப்படுகிறது. இதை சரியான முறைப்படி செய்ய செவிலியர் கற்றுக்கொடுப்பது அவசியம்.

உடல் சுகாதாரம் (Hygiene) :

உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேல் உடலில் உள்ள கிருமிகளை அவ்வபோதே சுத்தம் செய்யவில்லையெனில் உடலின் கழிவுகளுடன் சேர்த்து உடல்நலம் மிகவும் பாதிக்கும், அதுமட்டுமில்லாமல் உடலில் துர்நாற்றம் வீசவும் செய்யும்.

குளியல்கள் (Baths) :

குளியல் என்பது நேரிடையாகவோ மற்றும் தோலின் மூலம் வெளியாகும் கழிவுப் பொருட்களால் உடலில் காணப்படும் அழுக்கு மற்றும் அழுக்கடைந்த பொருட்களை நீக்கி, சுத்தம் செய்வதாகும். முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ படுக்கையிலிருக்கும் நோயாளிக்கு மூன்று வகையான குளியல்கள் தேவை, முழுமையான படுக்கை குளியல் என்பது நோயாளி முழுமையாக படுக்கையிலேயே குளிக்க வைக்கப்படுதல். பகுதிக் குளியல் என்பது உடலின் பகுதிகளை மட்டும் சுத்தம் செய்தல். படுக்கை குளியலை தவிர்ப்பது நோயை உண்டாக்கும். வசதியின்மை மற்றும் துர்நாற்றத்தை குறைக்க முகம் மற்றம் அக்குள் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

நீர்பீச்சுதல் (Douche) :

நீர் பீச்சுதல் என்பது சிசுத்தாரையில் நீர் பீச்சுதல் அல்லது சுத்தம் செய்தலாகும். இது சிசுத்தாரையை சுத்தம் செய்யவும், தொற்று நீக்கவும் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு மருந்து போடவும், மற்றும் வசதியின்மையை குறைக்கவும் பயன்படுகிறது. இது சிசுத்தாரையிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. பீச்சுதல் மூலம் மருந்துகள் அளிப்பதன் முன்னேற்றத்தை, எந்த நிலையில் பீச்சுதல் செய்யப்பட்டது என்பதைக் கொண்டு மதிப்பிடலாம்.

கண்சுத்தம் (Eye Care) :

பார்வை உறுப்பாகிய கண், அதிக அளவில் உணர்ச்சி உடையதாக இருப்பதால், எளிதில் பாதிப்பு மற்றும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்ணில் சொட்டு மருந்துவிடுதல், பசைக்குழம்புகள் தடவுதல், நெருக்கிகளை பொருத்துதல் மற்றும் கண்ணை குளிப்பாட்டுதல் போன்ற பராமரிப்பு கண்ணில் வெளிப் பொருட்களை அகற்றவும், நோய்தொற்றை தடுக்கவும் உதவுகிறது.

காது சுத்தம் (Ear Care):

காது கேட்பதற்கு மட்டும் முக்கியமானதல்ல. இது ஒருங்கிணைந்த மற்றும் சமநிலையில் ஈடுபடுகிறது. செவிக்குழாயில் சுரப்பிகளின் மூலம் சுரக்கும் பசைத் தன்மையுள்ள பொருளுக்கு செருமன் என்று பெயர் சளிச்சவ்வுகள் தொடர்ந்து நடுச்செவியிலும், தொண்டையிலும் காணப்படுகின்றன. எனவே நோய்த் தொண்டையிலிருந்து நடுச்செவிக்கு செல்ல வாய்ப்புள்ளது. உணர்ந்தால், நுட்பங்களை கூர்ந்து கவனித்து, தேவையானவற்றை பரிந்துரைக்கலாம்.

கால் சுத்தம் (Foot Care) :

நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு மற்ற பிரச்சனைகளை விட காலில் தொற்று சுலபமாக ஏற்படும். ஏனென்றால் கால்கள் இருதயத்திற்கு சற்று தொலைவில் இருப்பதால், இரத்த ஒட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். கால் துவளல், புண் மற்றும் திசுக்கள் இறந்து காணப்படுதல் போன்றவைகளால் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படலாம். கால் துவளல் என்பது கால் அசாதாரண முறையில் கணுக்கால் பகுதியில் பாதத்தை நோக்கி நீட்டப்படுவதால் ஏற்படும் குறைபாடாகும். இது பொதுவாக நடக்கும்போது ஏற்படும். ஆனால் ஓய்வெடுக்கும் போது சரியாகிவிடும். நீரிழிவு நோயில் புண் மற்றும் திசுக்கள் இறந்து போதல் முக்கியமான பக்க விளைவுகளாகும். இது பொதுவாக காலில் இரத்த ஓட்டம் குறைவாக காணப்படுவதால் இயற்கையில் குணமாகும் நிலையை குறைக்கும்.

வாய் சுத்தம் (Oralcare) :

வாய், பல் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்வது நோயாளியை நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வையும், பல் சொத்தை மற்றும் நோய் தொற்றை தடுக்க உதவும். வாயை சுத்தப்படுத்துவதில் உமிழ்நீர் முக்கியமாக இயந்திர மற்றும் வேதியியல் செயலாக பங்கு வகிக்கிறது. இது உணவுத் துகள்களுடன் சேர்ந்து செரிப்புக்கு துணை புரிகிறது. பற்திசுக்கள் பாக்டீரியாக்களினால் சிதைக்கப்படும் இடங்களில் பல் சொத்தை உருவாகிறது. பல்லின் மேற்பரப்பில் காணப்படும் எனாமல் தேய்மானம் ஏற்படும்போது உருவாக்கப்படும் அமிலம் பல்லின் மேல் கூட்டாக அமைவதுதான் பற்சிதைவுக்கு காரணம்.

மதிப்பிடுதல் மற்றும் கவனித்தல்

வீட்டு சுகாதார நல பராமரிப்பில் மதிப்பிட்டு, கவனிக்க வேண்டியவை பின்வருமாறு

நரம்பியில் அறிகுறிகளை மதிப்பிடுதல்

சிறுநீர் சர்க்கரை பரிசோதனை

உயர்நிலை அடையாளங்கள்

நரம்பியல் அறிகுறிகளை மதிப்பிடுதல்

நோயாளியின் நரம்பியல் மதிப்பீட்டை தொடர்ந்து செய்யப்படும் பரிசோதனைகள், மதிப்பீடுகளின் மூலம் கிடைக்கும் பல குறிப்புகளிலிருந்து பெறலாம். இந்த நரம்பியல் மதிப்பீடு நிலைமாற்றத்தில் அல்லது ஒருங்கிணைந்த நிலையை கண்டறிய தேவைப்படும். இது வீடுகளில் விபத்துகளினால் ஏற்படும் காயங்களை மதிப்பிட அல்லது தொடர்ச்சியாக மருந்துகளின் பக்க விளைவுகளால் நரம்பியல் பாதிப்பு இருக்கும்போது இது முக்கியமாக தேவை.

சிறுநீர் சர்க்கரை பரிசோதனை :

சிறுநீரில் சர்க்கரை பரிசோதனை நீரிழிவு நோயாளிகளின் நிலையை கண்டறிய பயன்படுகிறது. சர்க்கரை நிலையினால் உடலில் உணவு சரியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். உணவு சரியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். உணவு செரிக்கப்படும் போது குளுகோசாக சிதைக்கப்பட்டு கல்லீரல் மற்றும் தசை திசுக்களில் கிளைகோசனாக சேமித்து வைக்கப்படுகிறது. இன்சுலின் சேமிப்பை ஊக்கவிக்கிறது. நீரிழிவு நிலையில் இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அசாதாரணமாக அதிகரித்து காணப்படுகிறது. சாதாரணமாக சாப்பிடாத நிலையில் சர்க்கரையின் அளவு 60ல் இருந்து 115 ஆக இருக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 அடையும் வரை சிறுநீரில் சர்க்கரை காணப்படாது. எனவே சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் பிரதிபலிக்கும் சர்க்கரையின் அளவை பாதிக்கலாம்.

உயிராதாரங்கள் :

உயிராதாரங்கள் கணக்கிடப்பட வேண்டும். நோயாளியின் உடல்நிலையைப் பற்றி கணக்கிட உடம்பில் உள்ள உயிராதார மையங்கள் முக்கியம். வெப்பநிலை, நாடித்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த அழுத்தம் உயிராதாரங்களைக் குறிக்கிறது. வெப்பநிலை வாய் வழியாகவோ, ஆசனவாய் வழியாகவோ அல்லது அக்குள் வழியாகவோ எடுக்கப் படலாம். நாடித்துடிப்பு தொட்டு உணர்தல் அல்லது மார்பு பகுதியில் கேட்டறிதல் மூலம் இரத்த அழுத்தம் ஸ்பிக்மோ மேனோ மீட்டர் மூலம் அளவிடப்படும்.

பாதுகாப்பு இல்ல பராமரிப்பு

* மாவுகட்டு பராமரிப்பு

* படுக்கைப்புண் மற்றும் அழுத்தபரப்பு பராமரிப்பு

• வெப்பம் மற்றும் குளிர்ச்சி அளித்தல்

* சிரைவழி சிகிச்சை

* இழுவிசை

* ஊன்று கோலில் நடத்தல்

*. இன்சுலின் ஊசி

* வாய்வழியாக மருந்து கொடுத்தல்

காயங்கள் கவனிப்பு

ஊன்று கோலினால் நடத்தல் : ஊன்று கோல் செயல் புரிவதற்கு அல்லது அசைவுக்கு உதவி புரிகிறது.

* நோயாளிக்கு காலில் பாதிப்பு இருக்கும்போது கீழே விழுவதை தடுக்க ஊன்றுகோலை உடல், மற்றும் கையுடன் சரியாக பயன்படுத்த கூறுதல்

* சமநிலை மற்றும் ஒருங்கிணைதலை சரிபார்த்தல்

காலில் உடல் சமநிலைக்கு எவ்வளவு எடை தாங்க முடியும் என்பதை போதிக்க வேண்டும். நோயாளிக்கு சரியான சமநிலைப்பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிரைவழி சிகிச்சை :

இப்போது சுகாதார பராமரிப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் விரைவில் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவதால் பல நோயாளிகளுக்கு சிரைவழி சிகிச்சை வீட்டில் தேவைப்படுகிறது. வீட்டில் சிரைவழி ஊசி போடுவதும், மருந்து செலுத்துவதும், பொதுவாக சுகாதார செவிலியைப் பொறுத்தது.

வாய்வழியாக மருந்து கொடுத்தல் :

வீட்டில் வாய்வழியாக மருந்து கொடுக்கப்படும் நோயாளிக்கு மிகவும் குறைந்த செலவிலும் மற்றும் மிகவும் நம்பகமான முறையாகவும் இருக்கும். வாய்வழியாக மருந்து கொடுப்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று. மருந்துகள் நாக்குக்கு அடியில் வைக்கப்படுகின்றன. சாதாரணமாக நாக்குக்கடியில் உள்ள இரத்த குழாய்களால் உறிஞ்சப்படுகின்றன. அவைகள் சளிப்படலங்கள் மற்றும் எச்சிலினால் கரைக்கப்பட்டு வினைபுரிகிறது.

படுக்கை மற்றும் அழுத்த பராமரிப்பு :

அசைக்கப்படாத உடல் உறுப்புகளில் இரத்த ஒட்டம் குறையும் பட்சத்தில் அங்கே புண் ஏற்படுவதை படுக்கைப்புண் என்று அழைக்கிறோம். அழுத்தம், கழிவால் ஈரம் உராய்வு மூலமாக இப்புண் ஏற்படுவதை தடுக்க சதைக்கு அசைவும், இரத்த ஓட்டமும் தேவை. எனவே உடற்பயிற்சி அவசியமாகிறது. வயதானவர், மிகவும் மெலிந்தவர், குண்டானவர், கைகால் செயல் படாதவர்கள் கவனமாக பார்த்தல் வேண்டும்.

வெப்பம் மற்றும் குளிர்ச்சி அளித்தல் :

குளிர்ந்த வெப்ப ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தோலில் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுத்தி உடலை குணப்படுத்தும் முறையை சரியாகச் செய்தல் அவசியம்.

இன்சுலின் ஊசி :

இன்சுலின் என்ற மருத்து ஊசியின் மூலம் தினமும் சில நோயாளியே பெறலாம். இவர்களுக்கு சரியான பயிற்சி அளித்தலும், அதனை கண்காணித்தலும் நலம். ஊசி போடும் முறையில் கிருமி தொற்று இல்லாமல் சரியான முறையுடன் கொடுத்தல் நல்லது.

இழுவிசை (Traction) :

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் நோக்கில் எடை ஏற்றப்பட்ட கருவிகளை இழுப்பதற்காக சிகிச்சை கொடுக்கப்படும் நேரத்தில் கால்கள் அசையாமல் இருக்கும் பட்சத்தில் இவர்களை கவனிப்பது அவசியம். திசுக்களில் காயம், ஏற்பட்டால் தொற்று கிருமிகள் வளர்வது போன்றவற்றை தவிர்க்க, புண்களை சரியான மருந்துகளைக் கொண்டு அடைத்து சுத்தமான பேன்டேஜ்கள் கொண்டு மூடி வைப்பது முக்கியமாகிறது. இவைகளை வீட்டில் உள்ளவர்களுக்கு சரியான முறைகளை கற்பிப்பது அவசியம்

உறிஞ்சி எடுத்தல் :

அறுவை சிகிச்சையில், வலி மற்றும் தசை இழப்பு போன்ற நீண்ட கால மருத்துவ பிரச்சனையிலுள்ள நோயாளிக்கு நன்றாக இருமும் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் சுவாச நோய்த்தொற்றுக்கு வாய்ப்பு அதிகம் இல்லாத நிலையில் குழாய் முறையில் மூச்சுக்குழல் உறிஞ்சி எடுத்தல் தேவைப்படலாம். இதை செய்தவற்கு அதிக திறமை தேவை மற்றும் பொதுவாக சுகாதார செவிலியர்களால் செய்யப்படலாம்.

காற்றோட்டம் (Ventilation)

நுரையீரலில் அடைப்பு போன்ற நோய் ஏற்படுவோர்க்கு கழுத்தில் துளையிட்டு அதன் மூலமாக காற்று உட்போகச் செய்யும் முறையினால் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே செவிலியர்களே வீடுகளில் நோயாளிகளை சந்தித்து தொண்டையை அடைக்கும், உறுத்தும் கோழைகளை நீக்கி சுத்தமான காற்று உள்ளே செல்ல உதவுதல் அவசியம்.

ஆலோசனை மையங்கள் (Counselling)

பெறும்பாலான வீடுகளில் அமைதியின்மையே நோய்களுக்கான காரணமாக அமைவதால், இத்தகைய சூழ்நிலையை மாற்றதகுந்த, பயின்ற ஆலோசகர்கள் வழிநடத்த வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகளாவன:

- கோபத்தை சமாளித்தல்

- படப்படப்பு, உற்சாகமின்மை

- குழந்தைகளை கட்டுப்பாடோடு வளர்த்தல்

- மது அருந்துதல், போதை மருந்து

– திருமணமானவர்களின் முரண்பாடுகள்

- தவறான நடத்தையில் வளரும் இளம் பருவத்தினர்.

- ஆழ்ந்ததுக்கம் மற்றும் இழப்பு

- பெற்றோர், குழந்தை முரண்பாடு

குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் குறிக்கோளை அடைய எதை முக்கியம் என்று உணர்கிறார்களோ அதை ஆலோசனை நேரங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிகிச்சையின் காலம் குடும்பத்தினரின் ஒருங்கிணைந்த தேவைகளைப் பொறுத்தது.

இன்றும் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளை சரியாக்குதலே பல குடும்பங்களில் உடல், மனம், சமூக ஆராக்கியத்தை வளர்க்கிறது. வீட்டில் உள்ளவர்களின் இலக்குகளை அடைய உதவுதல் வாழ்வில் நம்பிக்கை, உற்சாகம் கொடுக்க உதவும்.

இல்ல சுகாதார பராமரிப்பின் நன்மைகள்

வீட்டு நலபராமரிப்பு நோயாளிகளுக்கும், குறிப்பாக வயதான நோயாளிகளுக்கும் பலமுறைகளில் பயனுள்ளதாக இருக்கிறது.

தீவிரநோய் மற்றும் விபத்துக்களிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் வீட்டு சூழ்நிலையில் விரைவாக குணமடைவார்கள்.

வீடுகளில் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில முக்கிய அளவீடுகளை கட்டுப்படுத்த சுதந்தரம் கொடுக்கப்பட வேண்டும்.

வீட்டு கவனிப்பு பராமரிப்பின் நிலையை அதிகப்படுத்துகிறது மற்றும் நோயாளியை திருப்திகரமாக வைக்கிறது.

வீட்டு கவனிப்பில் செலவு குறைகிறது.

இல்லங்களில் ஏற்படும் சில அசௌகரியங்கள் (Disadvantage of home care)

• மிகவும் நோய்வாய்பட்டவர்களுக்கு மருத்துவமனைதான் சிறந்த இடம்.

* வீட்டு சூழ்நிலை எல்லா நோய்க்கும் பாதுகாப்பற்றது.

* வீட்டிலேயே வந்து கவனிக்க நம்நாட்டில் ஆட்கள் கிடைப்பது குறைவாகவே உள்ளது.

பாடச்சுருக்கம் (Summary)

* இல்லங்களில் இருந்தபடியே தரமான கவனிப்பு கிடைப்பதால் உடல், மனம், சமூகம் ரீதியான ஆரோக்கியம் கிடைக்க நல்ல வாய்ப்பு அமைகிறது.

• உடல் ரீதியாக சுகவீனமானவர்க்கு வீட்டில் இருந்தபடி சிகிச்சை கிடைப்பதால், இச்சேவை மிகப்பெரிய வளர்ச்சி கொண்டு வருகிறது.

* இல்லங்களில் சிகிச்சையின் குறிக்கோள்; நோயற்ற வாழ்வு நோயுற்றவருக்கு சிகிச்சை என்பதாகும்.

* இத்தகைய கவனிப்பில் பலதரப்பட்ட மையங்கள் சேர்ந்து சேவை புரிகின்றன. உதாரணமாக தாதியர்பணி, மருந்துகள், மருந்தளிப்பவர், பேச்சு பயிற்சியாளர், உடற்பயிற்சி தருபவர் என நீளுகிறது.

* சிகிச்சை எட்டாத இடங்களுக்கு செல்லுவதன் மூலம் நிறைய மக்களை சந்தித்து, அவர்களை தரம் பிரித்து யாருக்கு சேவை தேவை என நிர்ணயிக்க உதவுகிறது.

* மறுமலர்ச்சி மையங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே முடியாதவர்களை அவர்களே தங்களை கவனித்து கொள்ள உதவி செய்தல் மிகப்பெரிய சேவையாகும்.

* செவிலியரின் மகத்தான பணி நோயாளிகளின் உடல் ஆரோக்கிய கவனிப்புகளை (ஓய்வு, இரத்த ஓட்டம், கழிவு நீக்கம், உணவு, திரவம், சுத்தம், வேலை, பாதுகாப்பு, காற்று) சரி செய்துகொள்ள உதவுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.95918367347
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top