பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உடல் கூறும் உடல் இயலும்

உடல் கூறும் உடல் இயலும் (Anatomy and Physiology) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் அமைப்பு

உடல் என்பது அற்புதமாக அமைக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் ஒரு முழுமையான இயந்திரம். ஒவ்வொரு உறுப்பும் தனது பணியைச் செய்ய சிறப்பாக அமைக்கப்பட்டது. ஒவ்வொறு உறுப்பும், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலுக்கும் தேவையான பணிகளைச் செய்கிறது.

நேராக நின்று கைகளைத் தொங்கவிட்டு உள்ளங்கைகளை முன்புறம் திருப்பி வைத்துக் கொண்டிருக்கும், ஒருவரைப் பார். அந்த தோற்றம் உடற்கூற்று இயல் தோற்றம் (anatomicalposition). உடல் என்பது தலை, கழுத்து, முண்டம் (நடு உடல்) மேற்புற நீண்ட எலும்புகள் (கைகள்) கீழ்புற நீண்ட எலும்புகள் (கால்கள்) ஆகியவை அடங்கியது எனக் காணலாம்.

உடல் கூற்று இயலில் பயன்படுத்தப்படும் சொற்களும், விளக்கங்களும், கீழே தரப்படுகின்றன.

 1. Superior மேல்
 2. Inferior கீழ்
 3. Anterior முன்புறம்
 4. Posterior பின்புறம்
 5. Medial நடுக்கோட்டுக்கு அருகே
 6. Lateral பக்கவாட்டில்
 7. Proximal தலைக்கு அருகே, மூல இடத்துக்கு அருகே
 8. Distal தலையிலிருந்து அல்லது மூல இடத்திலிருந்து தூரத்தில்
 9. External வெளிப்புறம் அல்லது முண்டத்தின் நடுவிலிருந்து தூரத்தில்
 10. Internal - உட்புறம் அல்லது முண்டத்தின் நடுவிலிருந்து
 11. Superficial உடலின் மேற்புறத்திற்கு அருகில்
 12. Deep - உடலின் உட்புறம், உடலின் மேற்புறத்திலிருந்து மிகவும் உள்ளே உடலில், உறுதியான எலும்புகளால் ஆன கூடு உள்ளது. அதற்கு எலும்புக்கூடு என்று பெயர். எலும்புக்கூடானது, தசைகளும், வேறு மெல்லிய, திசுக்களும் மூடப்பட்டு, வெளிப்புறத்தில் தோலினால் மூடப்பட்டுள்ளது.

உடலின் குழிவுகளும் அவற்றின் உள்ளே இருப்பவைகளும்

எலும்பினால் ஆன பகுதிகளின் இடையே உள்ள இடம் குழிவுகள் எனப்படும். இவற்றுள் முக்கியமான உள் உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

தலைபுறக் குழிவு (Cranial Cavity) அல்லது மண்டை ஓடு - இதற்குள் மூளை இருக்கிறது.

மார்புக்கூட்டு குழிவு (Thorasic cavity) - இதற்குள் நுரையீரல்கள், இருதயம் ஆகியவை உள்ளன.

வயிற்குக் குழிவு - இது உதரவிதானம் எனப்படும். கூம்பு வடிவத் தசையினால் மார்புக் குழியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதனுள் அடங்கியவை

 • (அ) இரைப்பை
 • (ஆ) பெருங்குடல்
 • (இ) சிறுகுடல்
 • (ஈ) கல்லீரல்
 • (உ) மண்ணீரல்
 • (ஊ) சிறுநீரகம்
 • (எ) சிறுநீர்க் குழாய்கள்
 • (ஏ) கணையம்

இடுப்புக் குழிவு - கீழ்வருவன இவற்றுள் அடங்கும்.

 • (அ) இனப்பெருக்க உறுப்புகள்
 • (ஆ) சிறுநீர்ப்பை - இது காலியாக இருக்கும் போது இடுப்புக் குழிவிலும், சிறுநீர் நிறைந்திருக்கும் போது வயிற்றுக் குழிவு வரை உயர்ந்தும் இருக்கும்.
 • (இ) மலக்குடல்

செல்

மனித உடல் உட்பட எல்லா உயிருள்ள பொருட்களும், உயிருள்ள செல்களினால் ஆனவை. ஒரு பெரிய கட்டடம் கட்டப்படுவதற்குரிய பல வகையான பொருள்கள் பயன்படுத்துவது போல மனித உடலிலும் பல வகையான செல்கள் காணப்படுகின்றன.

செல் என்பது கீழ்கண்ட பகுதிகள் உடையது

 1. செல் சவ்வு (செல்லின் வெளிப்போர்வை)
 2. புரோட்டாபிளாசம் (செல்லின் முக்கிய பொருள்)
 3. உட்கரு (செல்லின் செயல்களுக்கு காரணமானது)

எலும்புக்கூட்டின் அமைப்பும், பணிகளும்

வளர்ச்சியடைந்த ஒருவரின் எலும்புக்கூடு 206 தனித்தனி எலும்புகளால் ஆனது. மூட்டுகளில் எலும்புகள் இணைந்து இருக்கக் குருத்தெலும்புகளும், தசைநார்களும் உதவுகின்றன. எலும்புக்கூட்டின் பாகங்கள் ஆவன.

 1. மண்டை ஓடு
 2. தண்டு வடம்
 3. மார்புக்கூடு அல்லது மார்பு எலும்புகள் மொத்தம் - 26, தனித்தனி எலும்புகள் - 25 (12 ஜோடி விலா எலும்புகளும், ஒரு மார்பு எலும்பும்)
 4. கை எலும்புகள் ஒவ்வொன்றிலும் - 64
 5. கால் எலும்புகள் ஒவ்வொன்றிலும் - 62

எலும்பின் வகைகள்

 1. நீண்ட எலும்புகள் - இவை கைகள், கால்கள், விரல்களில் உள்ளன. இவை நெம்புகோல்கள் போல் இருந்து உறுப்புகளை அசைக்கின்றன.
 2. சிறு எலும்புகள் - மணிக்கட்டு, கணுக்காலில் உள்ளவை.
 3. தட்டை எலும்புகள் - விலா, தோள்பட்டை, மண்டை ஒட்டுக்குரிய எலும்புகள்
 4. ஒழுங்கற்ற எலும்புகள் - முக எலும்புகள், முதுகு எலும்புத் தொடர் எலும்புகள் போன்றவை.

எலும்புக் கூட்டின் பணிகள்

 1. உடம்புக்கு ஆதாரமாக இருந்து வடிவம் தருகிறது
 2. உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது
 3. தசைகளின் உதவியுடன் உடல் அசைவுகளை உண்டாக்குகிறது.
 4. இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

எலும்புத்திசுவின் அமைப்பு

 1. பெரியாஸ்டியம் - இது எலும்பின் மேல் உறை. இதில் இரத்தக்குழாய்களும், நரம்புகளும் செல்கின்றன.
 2. அழுத்தமான எலும்பு (Compact Bones) - கால்சியம், பாஸ்பரஸை முக்கியமாகக் கொண்ட இது, எலும்புத் திசுவின் வெளிப்புற அடுக்காகும்.
 3. கான்சலஸ் எலும்பு - இந்த எலும்பின் உட்புறம் கடற்பஞ்சு போன்ற அமைப்பு கொண்டது. இதில் நுண்ணிய இடைவெளிகள் இருக்கும். எலும்பு லேசாக இருக்க இது உதவுகிறது.
 4. எலும்பு மஜ்ஜை - இது எலும்புக்குள் இருக்கும் மென்மையான திசு.

(அ) சிவப்பு மஜ்ஜை

எலும்புக்குள் உள்ள இடைவெளியில் இது நிறைந்து உள்ளது. சிவப்பு எலும்பு மஜ்ஜை, இரத்தத்தின் சிவப்பு அணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

(ஆ) மஞ்சள் மஜ்ஜை

இது முக்கியமாகக் கொழுப்புச் செல்களினாலானது. மஞ்சள் எலும்பு மஜ்ஜை நீண்ட எலும்புகளின் தண்டுப்பகுதியின் உட்புறத்தை நிரப்பியுள்ளது. இதனால் எலும்பு லேசாக உள்ளது.

குருத்தெலும்பு

உறுதியான எளிதில் வளையும் ரப்பர் போன்ற திசுவாகிய இது, சில எலும்புகளுடன் சேர்க்கப்பட்டிருக்கும். (உ.ம். மூக்கின் நுனி, விலாக்களின் நுனி). குழந்தை பருவத்தில் இந்த இடுப்பெலும்பு தனித்தனியாக இருக்கும். மூன்று எலும்புகளாக இருந்து, வயது வந்த பிறகு இணைந்து ஒன்றாகிவிடும்.

 1. இலியம் (ileum) என்ற மேற்புறத் தட்டையான பகுதி, பொய்க் கூபகமாகும் (False pelvis)
 2. இஸ்கியம் (Ischium) என்ற கடினமான கீழ்ப்பகுதியின் மேல்தான் நாம் உட்காரும்போது உடல் அமர்கிறது.
 3. பியூபிஸ் - இது முன் பகுதி இரண்டு பியூபிக் எலும்புகள் சேர்ந்து சிம்பிஸிஸ் பியூபிஸ் என்று மூட்டாக ஆகிறது. தொடை எலும்பு என்பது மிக நீளமானதும் உறுதியுமான எலும்பு.
 4. முழங்கால் சில்லு (platella) - இது முழங்கால் மூட்டு இருக்குமிடத்தில் முன்புறம் உள்ள சில எலும்பு
 5. கீழ்க்கால் உள்ள எலும்பு (Tibia) - இது கீழக்காலின் உட்புறமாக இருக்கும் நீண்ட எலும்பு
 6. கீழ்க்கால் வெளி எலும்பு - பிபுலா (Fibula) - இது கீழ்க்காலின் வெளிப்புறத்தில் உள்ள நீண்ட மெல்லிய எலும்பாகும்.
 7. கணுக்கால் எலும்புகள் இது ஏழு சிறிய எலும்புகள். இதில் மிகப் பெரியது
 8. குதிக்கால் எலும்பு - மேற்புறம் இருக்கும் எலும்பு, கணுக்கால் மூட்டுடன் சேர்ந்துள்ளது.
 9. உள்ளங்கால் எலும்புகள் - பாதத்தின் மேற்புறமாக உள்ள ஐந்து நீண்ட எலும்புகளாகும். கால்விரல் எலும்புகள் கைவிரல் எலும்புகள் போல் இவையும் 14ஆகும். இவை சிறியவை நீண்டவை பெருவிரலில் இரண்டும் மற்ற கால் விரல்களில் மும்மூன்றும் இருக்கும்.

மூட்டுக்களும் தசைகளும்

மூட்டு - மூட்டு என்பது இரண்டு அல்லது பல எலும்புகள் சேரும் இடத்தின் முனையாகும். எலும்புகளை அவற்றின் மூளைகளில் சேர்த்து இணைத்து வைப்பவை. இணைக்கும் திசுக்கள் ஆகும். அவை நார்த்திசுக்கள், குருத்தெலும்புகள், தசைநார்கள், வலிமையாக நாரினால் ஆன நாண் போன்றவை. தசைக்களினால் தான் உடலின் எல்லா அசைவுகளும் (சில மூட்டுகளில் இருக்கும் எலும்புகள் அசைவது உட்பட) ஏற்படுகின்றன.

 1. தொடை எலும்பு
 2. முழங்கால் எலும்பு
 3. குருத்தெலும்பு
 4. கீழ்கால் உள் எலும்பு
 5. சைனோவியல் ஜவ்வு
 6. கீழ்கால் வெளி எலும்பு

மூட்டுகளின் வகைகள்

நார்த்தன்மையுள்ள மூட்டுகள் : இவை அசையாத மூட்டுகள் (எ.கா) மண்டை ஓட்டிலுள்ள 'தையல்” உள்ளவை. மண்டை ஓட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று தைக்கப்பட்டவை போல அவ்வளவு நெருக்கமாக சேர்ந்துள்ளன.

குருத்தெலும்பு மூட்டுகள் - இரண்டு எலும்புகள், நார்க்குருத்தெலும்பினால் ஆன திண்டு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளவை. முதுகுத்தண்டு கோவையிலும் இடுப்பு எலும்புகளிலும் இவைகளைக் காணலாம்.

சைனோவியல் மூட்டுகள் - இவை தாராளமாக அசைபவை. கை, கால் எலும்புகளிலும், தாடை எலும்பிலும் காணலாம். இவை மிகவும் சிக்கலான அமைப்பு கொண்டவை.

 • (அ) அசையும் எலும்புகளின் (articulating bones) முனைகள் மென்மையாக இருக்க, அசைவுத் குருத்தெலும்பால் அவை மூடப்பட்டு இருக்கும்.
 • (ஆ) முனை, நார்த்தன்மையான உறையினால் மூடப்பட்டு தசை நார்களால் தாங்கப்பட்டு இருக்கும்.
 • (இ) மூட்டில் காணப்படும் குழியில் சைனோவியல் திரவம் உள்ளது. இத்திரவம் உராய்வை நிக்கும். (Lubricating)

பந்து கிண்ண மூட்டு

ஓர் எலும்பின் பந்து போன்ற உருண்ட முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது, இது. (எ.கா) தோல், இடுப்பு மூட்டுகள். இந்த இரு இடங்களிலும் உள்ள மூட்டுகளுக்குக் கிழ்க்கண்ட அசைவுகள் உள்ளன.

 • வளைதல்
 • நீளுதல்
 • உடலின் மையத்திலிருந்து புறம் போய் அசைதல்
 • உடலின் மையத்தை நோக்கி வருதல்
 • திரும்புதல் (அல்லது) வட்டமிடுதல்
 • வட்டமாகச் சுழலுதல்

கீழ் மூட்டு

இதனால் ஏற்படும் அசைவுகள் வளைதலும் நீளுதலும், மட்டுமே (எ.கா) முழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.

வழுக்கு மூட்டுகள்

ஒன்றன்மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல் ஓரளவு தாராளமான அசைவுகள் ஏற்படும், (எ.கா) மூட்டுகள்.

மூளை மூட்டு

வட்டமிடுதல், திரும்புதல் என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் ஏற்படும் அசைவுகள் (எ.கா) தலைதிரும்பும் போது அட்லஸ் எலும்பு பிடர் அச்சின்மேல் சுழலுகிறது. கையைத்திருப்பும்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.

தசை

தலை, கழுத்து ஆகியவற்றின் தசைகள்

ஸ்டெர்னோ மாஸ்டாயிட்

இது தலைப்பொட்டெலும்பில் உள்ள மாஸ்டாயிட் புடைப்பையும், மார்பெலும்பையும் இணைப்பது. இந்த ஜோடித் தசைகள் ஒன்றாகக்கூடி இயங்கும்போது கழுத்து வளைகிறது. தனித்தனியாக இயங்கும்போது, தலை ஒரு பக்கமாகத் திரும்ப உதவுகிறது.

ட்ரபீசியஸ்

இது பெரிய, டையமண்ட் வடிவத்தில் உள்ளது. இது முதுகெலும்பின் பின்புறத்தையும், பிடரி எலும்பையும் இணைக்கிறது. இது தோள்களைப் பின்னுக்கு இழுக்கவும், தலையை நீட்டவும் செய்யும். இது நல்ல உடல் அமைவுக்கு (posture) உதவுகிறது.

மேல் கையை இயக்கும் தசைகள்

டெல்டாய்ட் (Deltoid) இது தோள்மூட்டினை மூடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கோண வடிவத்தசை. இது தோள்பட்டை, காரை எலும்பு, மேல்கை எலும்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. இது கையைத் தோள் மட்டத்தில் வெளிப்புறத்தில் உயர்த்துகிறது.

பெக்டோராலிஸ் (Pectoralis)

இது மார்பின் முன்புறத்தை மூடிக்கொண்டும் மேல் கை எலும்புடன் இணைக்கப்பட்டும் இருப்பது. இது கையை மார்பின் குறுக்காக வரும்படி இழுக்க உதவும்.

லட்டிசிமஸ் பார்சை (Latissimus Darsi)

இது முதுகில் உள்ள பெரிய தசை. இது மேல்கை எலும்பின் பின்புற மேல் முனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கையைக் கீழ்நோக்கியும் பின்புறமாகவும் இழுக்கப் பயன்படுகிறது.

முன்னங்கையை இயக்கும் தசைகள்

இருதலைத் தசைகள் (Biceps)

இது தோள்பட்டை எலும்பிலிருந்து வரும் இரண்டு பிரிவுகளைக் கொண்ட தசை. இது மேல் கை எலும்பின் முன்புறத்தில் அமைந்து ரேடியஸ் எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முன்னங்கையை மடக்குகிறது.

முத்தலைத் தசைகள் (Triclaps)

இது தோள்பட்டை எலும்பிலிருந்தும் மேல் கை எலும்பிலிருந்தும் வரும் மூன்று பிரிவுகளைக் கொண்ட தசை, இது மேல்கையின் பின்புறத்தில் அமைந்து முழங்கை எலும்புடன் இணைந்துள்ளது. இது முழங்கை மூட்டினை நீட்டுகிறது.

தொடையை இயக்கும் தசைகள்

இலியோ கசோயாஸ் (llio Psoas)

இது முதுகெலும்புத் தொடரில் உள்ள இடுப்பு முள்ளெலும்பு, இலியம் ஆகியவற்றின் முன்புறத்திலிருந்து தொடை எலும்பு வரை செல்கிறது. இது இடுப்பு மூட்டினைவளையச் செய்கிறது.

க்ளூட்டியல்ஸ் (Gluteals)

இவை புட்டத்தின் தசை, இலியம், பீடிகை எலும்பு ஆகியவற்றின் பின்புறத்திலிருந்து தொடை எலும்பை இணைப்பது. இடுப்பு மூட்டின் நீட்டுபவை இந்தத் தசைகள்.

கீழ்காலை இயக்கும் தசைகள்

நான்கு பிரிவு கொண்ட தொடைத் தசை இது, தொடையின் முன்புறத்தை, மூடியிருக்கும் மிகவும் உறுதியான நான்கு தசைகளின் தொகுதி, இலியம், தொடை எலும்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கி, முழங்கால் சில்லுடன், முழங்கால் சில்லு தசை தாண்களால், கீழ்க்கால் உள்ளெலும்புடன் சேர்க்கப்பட்டுள்ளன. முழங்கால் மூட்டினை இவை நீட்டுகின்றன.

ஹாம்ஸ்டிரிங்ஸ் (Hamstrings)

இது இஸ்கியம், தொடை எலும்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கிக் கீழ்க்கால் உள் எலும்பு, கீழ்க்கால் வெளி எலும்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இது தொடையின் பின்புறம் உள்ளது. இது முழங்கால் மூட்டினை மடங்கச் செய்கிறது.

சார்டோரியஸ் (Sartorius)

இது இலியாக் முள் எலும்பிலிருந்து கீழ்க்கால் உள் எலும்பின் உட்புறம் செல்லும் நீண்ட மெல்லிய தசை. நாம் இரு கால்களையும் குறுக்காக மடக்கித் தரையில் உட்காரும்போது இடுப்பையும் முழங்காலையும் நீட்டவும், மடக்கவும் உதவுகிறது.

வயிற்றுச் சுவர்த் தசைகள்

ரெக்டஸ் அப்டாமினஸ் இவை மார்பெலும்பு விலாக் குருத்தெலும்பு ஆகியவற்றிலிருந்து பியூபிக் எலும்புக்குச் செல்லும் இரண்டு நேரான தசைகள். வயிற்றின் முன்புறச் சுவராக இவை அமைகின்றன. முதுகெலும்பு வளைவதற்குக் காரணமான இவை, மலம் கழிப்பதற்கும், பிரசவத்தின்போதும் உதவுகின்றன.

சாய்வான தசைகள்

வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் இத்தகைகள் உள்ளன. வயிற்றின் சுவர்களாக இவை அமைகின்றன. உடலின் பக்கவாட்டு அசைவுக்கு துணைபுரிகின்றன.

குறுக்குத் தசைகள்

சாய்ந்த தசைகளின் உட்புறமாக இந்தக் குறுக்குத் தசைகளின் நார்கள் வயிற்றுச் சுவரைச் சுற்றிலும் அமைந்திருக்கிறது. உடலைத் திருப்புவதற்கு உதவுகிறது.

மார்புச் சுவரை இயக்கும் தசைகள்

விலா விடைத்தசைகள்

விலா எலும்புகளுக்கிடையே அமைந்திருக்கும். இவை சுவாசத்தின்போது விலா எலும்புகளை உயர்த்துகின்றன.

உதரவிதானம்

இது மார்பையும் வயிற்றையும் பிரிக்கின்ற, குவிந்த, கூரை வடிவில் உள்ள தசை, மார்பெலும்பு, கீழ்விலா எலும்புகளுடனும் இடுப்பு முள்ளெலும்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. சுவாசத்திற்கு இதன் அசைவுகள் மிகவும் தேவை. சுருங்கும்போது, இது தட்டை ஆகிறது. அதனால் மார்பு விரிவடைந்து மூச்சு உள் இழுக்க வசதியாகிறது. இது கீழ்நோக்கி வந்து அழுத்தம் தந்து மலம் கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும், பிரசவம் நடைபெறவும் உதவுகிறது.

நரம்பு மண்டலம்

இது ஒரு தொலைபேசி அமைப்புப் போன்றது. மூளை தலைமை நிலையம் போலவும், நரம்புகள் எல்லாம் மின்கம்பி போலவும் அமைந்து, உடலின் எல்லா பகுதிகளுக்கும் செய்திகளை எடுத்துச் செல்கிறது. எண்ணற்ற செய்திகளை அனுப்புவதாலும், பெறுவதாலும், உடலின் பல்வேறு திசுக்களும் உறுப்புகளும் ஒருமித்துச் செயல்படுகின்றன. நரம்பு மண்டலம் இரு பகுதிகளைக் கொண்டது
1. மத்திய நரம்பு மண்டலம். (CentralNervous System)
2. தானியங்கு நரம்பு மண்டலம் (Autonomic Nervous System)

மத்திய நரம்பு மண்டலம்

இது மூளை, மண்டை நரம்புகள், தண்டுவடம், முதுகுத்தண்டு நரம்புகள் ஆகியவற்றால் ஆனது.

(அ) கட்டுப்படுத்துதல் - இந்த மத்திய நரம்பு மண்டலம் தலை, நடுஉடல், கைகால்கள் ஆகியவற்றின் இயக்குத் தசைகளைக் கட்டுப்படுத்துகிறது.

(ஆ) செய்தி வாங்குதல் - இது தோல், கண்கள், காதுகள் போன்ற உணர்ச்சி உறுப்புகளிலிருந்து செய்திகளை வாங்குகின்றது.

தானியங்கு நரம்பு மண்டலம்

பரிவு நரம்புகள், துணைபரிவு நரம்புகள் ஆகியவற்றால் ஆனது. தானியங்கு நரம்பு மண்டலம், இயங்கு (உடலில் உட்புறத்) தசைகளையும், சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகிறது.

நரம்புத் திசு (Nerve Tissue)

நரம்பு மண்டலங்களின் அமைப்புக்குக் காரணமான நரம்புத் திசுக்கள், நரம்பு செல்களினாலும், நரம்பு நார்களினாலும் உண்டாக்கப்பட்டுள்ளன. மெல்லிய தன்மையுடையவை. மூளையில் இந்தச் செல்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, "சாம்பல் நிறப்பொருள்” எனப்படும் பொருளாக அமைந்துள்ளன.

நரம்பு நார்கள் "வெள்ளைப் பொருளாக” அமைந்துள்ளன. நரம்பு நார்கள் ஒவ்வொன்றும் தங்கள் நரம்பு செல்களுடன் இணைக்கப்பட்டு நியூரோன் (Neurone) என்ற அலகாக அமைந்துள்ளது. செய்திகள், ஒரு நியூரோனிலிருந்து அடுத்த நியூரோனுக்கு அதன் நார்களின் வழியாக தாவித் தாவிச் செல்கின்றன. சில நியூரோன்களின் நார்கள் மிகவும் நீளமானவை. (எ.கா. கை கால்களில் உள்ளவை) அவை பல தொகுதிகளாகச் சேர்ந்து வெள்ளை நரம்புக் கட்டுகளாகத் தென்படுகின்றன.

நரம்புகள் மூன்று வகைப்படும்.

 • உணர்ச்சி நரம்புகள் (Sensory Nerves)
 • கட்டளை நரம்புகள் (Motor Nerves)
 • கலப்பு நரம்புகள் (Merced Nerves)

உணர்ச்சி நரம்புகள் (Sensory Nerves)

இவை உடலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மூளைக்கும் தண்டுவடத்திற்கும் செய்திகளை எடுத்துச் செல்கின்றன. அவை உடல் தனது பாதுகாப்புக்குச் செய்ய வேண்டிய எதிர்வினைகளைச் செய்ய (React) உடலுக்கு உதவுகிறது.

கட்டளை நரம்புகள் (Motor Nerves)

இவை மூளை தண்டு வடங்களிலிருந்து செய்திகளை உடலின் எல்லாப்பாகத்திலும் இருக்கும் தசைகள், சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. செயல்கள் செய்ய இவை தூண்டுகின்றன.

கலப்பு நரம்புகள் (Minuel mixed Nerves)

இவை உணர்ச்சி நரம்பு மற்றும் கட்டளை நரம்பு நார்களும் கொண்டவை. அதனால், இவை இரண்டு திசைகளிலும் செய்திகளை எடுத்துச் செல்லுகின்றன.

மூளை

இது, மத்திய நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பகுதி. இது மண்டை ஒடாகிய குழியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. அதன் பகுதிகளாவன,

 1. பெருமூளை அல்லது மூளையின் முன்பகுதி
 2. சிறுமூளை அல்லது மூளையின் பின்பகுதி
 3. நடுமூளை / மூளைத் தண்டு - இது பான்ஸ் (Pons), முகுளம் ஆகியவை அடங்கியது.

பெருமூளை

இது மூளையின் மிகப்பெரும் பகுதியாகும். மண்டை ஓட்டின் முன் பகுதியையும், மேல் பகுதியையும் அடைத்துக் கொண்டுள்ளது. அது, வலது பகுதி, இடது பகுதி என இரு பகுதிகளாக உள்ளது. இவ்விரு பகுதிகளில் ஒவ்வொன்றும் உடலில் தங்கள் எதிர்எதிர்ப் பக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், வலப்பக்கத்துக்குப் பெருமூளைக்கு நோய் அல்லது காயம் ஏற்பட்டால் உடலின் இடப்புற உறுப்புகள் செயலற்று போகின்றன. இடப்பக்கப் பெருமூளைக்கு நோய் அல்லது காயம் ஏற்பட்டால் வலப்புற உறுப்புகள் செயலற்றுப் போகின்றன.

 1. பெருமூளை
 2. நடுமூளை
 3. முகுளம்
 4. பான்ஸ்வரோலி
 5. முதுகுத்தண்டுவடம்

பெருமூளையின் பணிகள்

பெருமூளையின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. மண்டை எலும்புகளுள்ள அதே பெயர்களோடு அவை உள்ளன. அவையாவன மற்றும் அவற்றின் பணிகள் பின்வருமாறு:

 1. முன்புற பகுதி
 2. உச்சிபுற பகுதி
 3. நெற்றிப்பொட்டுப் பகுதி
 4. தலைஓட்டின் பின்புறபகுதி, முன்புற பகுதி

முகுளம் (Medulla)

மேலே இருக்கும் பான்ஸ்களையும் கீழே உள்ள தண்டுவடத்தையும் சேர்த்து வைக்கிறது இது. தண்டு வடத்தைப்போலவே இது தோன்றினாலும், சிறிது பருமனானது. மண்டை ஓட்டுக்கு உள்ளேயே இது உள்ளது.

முகுளத்தின் முக்கிய பணிகள் (Functions of the Medulla)

(அ) மூளையையும், தண்டுவடத்தையும் இணைத்துச் செய்திகளை அனுப்புகிறது.

(ஆ) இரத்த ஓட்டம், மூச்சுவிடுதல் ஆகிய முக்கிய பணிகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்களை உள்ளடக்கியது இது.

(இ) விழுங்குதல், வாந்தி எடுத்தல், இருமல் ஆகிய அனிச்சைச் செயல் மையங்களைக் கொண்டுள்ளது.

மண்டை நரம்புகள் (Cranial Nerves)

மூளையிலிருந்தும், மூளைக் காம்பிலிருந்தும் வெளிவரும் பன்னிரெண்டு ஜோடி நரம்புகள் மண்டை நரம்புகளாகும். இவை, மண்டை ஓட்டிலுள்ள துளைகள் வழியாகக் கண்கள், காதுகள், முகம், நாக்கு, தொண்டை முதலியவற்றிற்குச் செல்லுகின்றன.

வேகஸ் (Vagus) எனப்படும் பத்தாவது ஜோடி மண்டை நரம்பு, கிளைகளாகப் பிரிந்து, குரல்வளை, நுரையீரல், இதயம், செரிப்பு உறுப்புகளுக்குச் செல்லுகின்றன. தன்னியக்க நரம்பு மண்டலத்தின் ஒரு பாகமாகவே வேகஸ் நரம்புகள் செயல்படுகின்றன.

தண்டுவடமும் தண்டுவட நரம்புகளும் (Spinal cord and spinal nerves)

தண்டுவடம் என்பது நரம்புத் திசுக்களால் ஆன கயிறு போன்றது. சுண்டுவிரல் பருமனும் சுமார் 42 செ.மீ நீளமும் உடையது. இது முதுகெலும்புக் கோவையால் உண்டாக்கப்படும் கால்வாய் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது. கழுத்தின் பின் பகுதி மண்டை ஓட்டுடன் சேரும் இடத்தில், தண்டுவடம், முகுளத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். கீழே, இது இடுப்பு முன்னெலும்பின் முதல் எலும்புவரை நீண்டு இருக்கும். இது, குதிரை வால்போல், நரம்புகள் கற்றையாக இதன் முடிவில் காணப்படும்.

தண்டுவடத்தின் பணிகள் (Functions of the spinal cord)

 1. கட்டளைத் தூண்டுதல்களைப் பெருமூளையின் முன்புறப்பகுதியிலிருந்து பெற்றுத் தண்டுவட நரம்புகள் வழியாகத் தசைகளுக்கு அனுப்புதல்.
 2. தோல் மற்றும் வேறு திசுக்களிலிருந்து உணர்ச்சிகளைப் பெற்று, அந்தச் செய்திகளை மூளைக்கு அனுப்புதல்.

மூளை உறைகளும், மூளை - தண்டுவடத் திரவமும்

மூளையும், தண்டுவடமும் மூன்று உறைகளால் மூடப்பட்டுள்ளன. அவைகளுக்கு மூளை உறைகள் (Meninges) என்று பெயர்.

டியூராமேட்டர் (Dura Mater)

இது வெளிப்புறமாக உள்ள பருமனானதும், சுருங்கிவிரியும் தன்மையுடையதும் ஆகும். இது மண்டை ஓடு, முதுகு முன்ளெலும்பின் உட்புறக்கால்வாய் போன்ற பகுதி ஆகியவற்றிற்கு மெத்தென்ற தன்மை தரும் உரை.

அரக்னாய்டு

இது மெல்லிய நடுப்புறப் படலம். இது தளர்த்தியான ஓர் உறை. இதற்கு அடியில் "தீக்கா'' (theca) என்ற இடைவெளி உள்ளது.

பயா மேட்டர்

இது நரம்புத் திசுக்களுக்கு மிக அருகில் இருப்பது, இரத்தக் குழாய்கள் இதில் அடங்கியுள்ளன.

மூளை - தண்டுவடத் திரவம்

இது ஒரு தெளிவான திரவம். மூளை - தண்டுவடம் ஆகியவற்றிற்கு உட்புறமும் இது சுழன்று ஒடிக் கொண்டுள்ளது. நரம்பு மண்டல நோய்த் தன்மைபற்றி அறிந்திட, இடுப்பு முள்ளெலும்புப் பகுதியிலிருந்து “லம்பார் பங்சர்” முறையில் ஊசியால் இந்தத் திரவம் சிறிதளவு எடுத்து ஆராயப்படும்.

மூளை தண்டுவடத் திரவத்தின் பணிகள்

 1. 'தண்ணீர் மெத்தை' போல இது இருந்து, மூளையும் தண்டுவடமும் அதிர்ச்சி, குலுங்கல் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.
 2. கழிவுப்பொருள்களையும் நச்சுப் பொருள்களையும் அடித்துக் கொண்டுபோய், அதன் காரணமாக சத்து ஊட்டம் தருதலும், சுத்தமாக்குதலும்.

தானியங்கு நரம்பு மண்டலம் (Autonomic System)

இரண்டாவது நரம்பு மண்டலமான இது, இயங்கு தசை சுரப்பிகளின் சுரப்புகள் ஆகியவற்றின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த நரம்புகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனினும் மைய நரம்பு மண்டலத்துடன் இது நெருங்கிய சம்பந்தம் உடையது. இந்தத் தானியங்கு நரம்பு மண்டலத்தில் இரண்டு தொகுதி நரம்புகள் உள்ளன. செயல்படுவதில் அவை ஒன்றுக்கொன்று எதிர் எதிர் ஆனவை.

இருதயம்

இருதயத்தின் வலது புறமானது உடலில் உள்ள அனைத்து அசுத்த (oxygen அற்ற) இரத்தங்களையும் பெற்று, சிறிய மற்ற பெரிய சிரைகளின் மூலமாக நுரையீரலுக்குள் அனுப்புகிறது. அங்கு அசுத்த இரத்தம் தூய்மையாக்கப்பட்டு கரியமிலவாயுவும், உள்ளிழுக்கப்பட்ட கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. இருதயத்தின் இடது புறமானது சுத்த இரத்தத்தை நுரையீரலிலிருந்து பெற்றுக் கொண்டு உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் மகாத் தமனி மற்ற சிறிய தமனிகள் மூலமாகவும் அனுப்புகிறது.

வலது வெண்ட்ரிகள் விட இடது வெண்ட்ரிகளில் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஏனெனில் உடலில் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை செலுத்துகிறது. அதனால், இதன் தசைகள் அதிக தடிமனாக இருக்கும்.

இதயத்தின் பணிகள்

 1. தந்துகளிலிருந்தும் சிறைகளிலிருந்தும் இரத்தத்தை இழுக்கிறது.
 2. ஆக்சிஜனை ஏற்று கொள்ளுவதற்காக இரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்புகிறது.
 3. மகாதமணி வழியாக, இரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது.

இரத்த ஓட்ட மண்டலத்தின் பாகங்கள்

 1. இரத்தம்
 2. இருதயம் - இரத்த ஓட்டத்தை உந்தித் தள்ளுகிறது.
 3. இரத்த குழாய்கள் - இரத்த ஓட்டத்தை கண்காணிக்கிறது.
 4. நிண நீர் மண்டலம் - இணைந்த இருதயத்தின் பகுதியாகவும், இரத்த ஓட்ட மண்டலத்தின் பாகங்களாகவும் கருதப்படுகிறது.

இரத்தம்

இதயம், இரத்தக் குழாய்கள் வழியாகச் சுமார் 6 லிட்டர் இரத்தம் உடலில் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து ஒடிக்கொண்டுள்ளது. இரத்த பசை தன்மை கொண்ட சிவப்பு திரவமாகும். சிறிது காரத் தன்மையாகக் கிரியை புரியும். இது திரவத்தாலும் (பிளாஸ்மா) திடப் பொருள்களாலும் (இரத்த செல்கள்) ஆனது. பிளாஸ்மா என்பது வெளிர் மஞ்சள் நிறத்திரவம், அதில் அடங்கியுள்ளவை. தண்ணீர் 90% உப்புகள் சோடியம் குளோரைடு உட்பட 0.9% புரதங்களின் - ஆல்புமின் உட்பட, இது இரத்தத்தை பசையுள்ளதாக்குகிறது.

ஊட்டப் பொருட்கள்

 • குளுகோஸ், கொழுப்பு, அமினோ அமிலம், விட்டமின்கள்.
 • கழிவுப் பொருட்கள் - யூரியா, கார்பன் - டை- ஆக்சைடு.
 • நோய் எதிர்ப்புப்பொருள், நச்சு முறிவுப் பொருள் (நோய்க் கிருமிகளை எதிர்க்க).
 • நாளமில்லாச் சுரப்பிகள் தயாரிக்கும் ஹார்மோன்கள்.
 • இரத்தம் உறைவதற்கும் இரத்தம் உறைவதைத் தடுப்பதற்குமான பொருட்கள்.

இரத்த அணுக்கள்

இவற்றில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

 • சிவப்பு இரத்த அணுக்கள்
 • வெள்ளை இரத்த அணுக்கள்
 • இரத்தத் தட்டுகள்

இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவை. இவை எலும்பு மஜ்ஜை (Lone marrow) களில் உருவாகின்றன. சுமார் மூன்று மாதங்களில் அழிகின்றன. அவை மீண்டும் உண்டாக்கப் படவேண்டும். இரத்த சிவப்பு அணுக்கள் உட்கரு இல்லாத மிகச் சிறிய தட்டுக்கள் போன்றவை. இரும்புச்சத்து, புரதம் ஆகியவற்றால் உண்டான ஹீமோகுளோபின் என்ற பொருள்களால் திரப்பட்டிருக்கும். ஹீமோகுளோபின் இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைத் தருகிறது. சாதாரணமாக, 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு 14.5-15 கிராம் ஆகும். ஹீமோகுளோபினை உண்டாக்கப் போதிய இரும்புச் சத்து இல்லாததுதான் இரத்த சோகைக்குக் காரணம். இரத்தச் சிவப்பு அணுக்கள் முக்கியமான பணி, ஆக்சிஜனை நுரையீரல்களிலிருந்து திசுச் செல்களுக்கு எடுத்துச் செல்லுவதாகும். நுரையீரல்களில் ஆக்சிஜனுடன் சேர்ந்திருக்கும்போது, ஹீமோகுளோபின் ஒளிமிக்க சிவப்பு நிறத்தில் இருக்கும். இரத்தம் ஆக்சிஜனைக் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, அது வெளுத்த சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.

இரத்த வெள்ளை அணுக்கள் நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போரிடுபவை. இவை இரண்டு முக்கிய வகையானவை.

லுகோசைட்ஸ் (Leucocytes)

இவை எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்ளும். திசுக்களுக்குள் சென்றுவிட்ட நோய்க் கிருமிகளுடன் போரிட இவை சிறு இரத்த குழாய்களின் வழியாக உட்செல்லும். போரில் பல இறந்து 'சீழாக' மாறிவிடும். கொடி நோய்த் தொற்றுதலின்போது போரிட உதவியாக அதிக அளவில் இந்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. (Leucocytes)

லிம்போசைட்ஸ் (Lymphocytes)

இவை மண்ணீரலிலும் நிணநீர்ச் சுரப்பிகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை அதிகமாக நகருவதில்லை. ஆனால் இவையும் நோய்த் தொற்றுதலைக் குறிப்பாக நாட்பட்ட நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போரிட்டு உதவுகின்றன. இரத்தத் தட்டுகள் எலும்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இரத்தம் உறைவதற்கு இவை உதவுகின்றன.

இரத்தத்தின் பணிகள்

 1. இரத்தச் சிவப்பு செல்கள் மூலமாக திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுதல்.
 2. திசுக்களுக்கு உணவு சத்துக்களை எடுத்துச் செல்லுதல்.
 3. திசுக்களிலிருந்து கழிவுப் பொருட்களை அகற்றி எடுத்து வந்து கழிவு உறுப்புக்களில் சேர்த்தல்.
 4. சுரப்பிகளிலிருந்து - ஹார்மோன்களைத் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லுதல்.
 5. இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு பொருள்கள் மூலமாக நோய்த் தொற்றை எதிர்த்துப் போர் புரிதல்.
 6. உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாத்தல்.
 7. உடலில் தண்ணீரின் அளவு குறையாமலும் கூடாமலும் இருக்க உதவுதல்.

நிணநீர் மண்டலமும் மண்ணீரலும்

நிணநீர் மண்டலம் இரண்டாவது ஓட்ட மண்டலமாகும். இதில் அடங்கியுள்ளவை.

உணவுப்பாதை

உணவுப்பாதை என்பது சுமார் 750 செ.மீ நீளமுள்ள தசையால் ஆன நீண்டக் குழாய் ஆகும். இதில் அமைந்துள்ள பாகங்கள்

 1. வாய்
 2. உணவுக்குழல்
 3. இரைப்பை
 4. சிறுகுடல்
 5. பெருங்குடல்
 6. மலக்குடல்
 7. குதலம்

உணவுப்பாதை முழுவதும் நான்குவித தசை அடுக்குகளால் ஆனது. அவைகள் முறையே,

 1. முதல் அடுக்கு - அது நார்களால் ஆன வெளி அடுக்காகும்.
 2. இரண்டாவது அடுக்கு - அது வட்டமான, நீண்ட தசைத் திசுக்களால் ஆனது.
 3. மூன்றாவது அடுக்கு - அது சீத கடைக்கீழ் சவ்வினால் ஆனது.
 4. நான்காவது அடுக்கு - சீத சவ்வினால் ஆன உள் அடுக்காகும்.

சீரண மண்டலத்தின் வேலைகள்

 1. உணவுப் பொருட்களைச் சிறிய துகள்களாக மாற்றுதல்.
 2. உணவுப் பொருட்களைச் சீரணித்தல்.
 3. உணவுப் பொருட்களை உறிஞ்சுதல்.
 4. சீரணிக்கப்படாத உணவுப் பொருட்களை வெளியேற்றுதல்.

சீரண மண்டலமானது இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது

 1. உணவுக்குழல் - இது வாய்ப் பகுதிகளிலிருந்து ஆரம்பித்து மலக்குடலில் முடிவடைகிறது.
 2. செரித்தலுடன் தொடர்புடைய சுரப்பிகள் - உமிழ்நீர் சுரப்பிகள், கல்லீரல், கணையம் ஆகிய மூன்றும் உணவுக் குழலுக்கு வெளியே அமைந்துள்ளன. ஆனால் இவற்றில் சுரக்கப்படும் சுரப்பு நீர்கள் சீரணித்தலுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

சீரணித்தல்

சீரணித்தல் உணவுப்பாதையின் மூன்று இடங்களில் நடைபெறுகின்றது.

அவை,

 1. வாய் - உமிழ்நீர்
 2. இரைப்பை - இரைப்பை நீர்
 3. சிறுகுடல் - கணைய நீர், பித்தநீர், சிறுகுடல்நீர்.

பெரும்பான்மையான சீரண நீர்களில் காணப்படும் நொதிகளுக்கு என்சைம்கள் என்று பெயர். என்சைம்கள் சிக்கலான, மூலக் கூறுகளையுடைய உணவுப் பொருட்களை வேதிமாற்றங்கள் மூலம் எளிய மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. என்சைம்கள் அனைத்தும் புரத மூலக்கூறுகளாகும். தங்கள் உடலின் வெப்பத்தைத் தனித்துக் கொள்கின்றன. பாதரசம், ஈயம், அயோடின் சேர்ந்த மருந்துப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உமிழ்நீர் உதவுகிறது.

வாயில் உணவு செரித்தல்

வாயில் உணவுப் பொருட்களைப் போட்டவுடன் உமிழ்நீர் சுரக்கத் தொடங்குகிறது. உணவின் ஈரப்பசையை பொருத்து உமிழ்நீர் சுரக்கும் அளவு மாறப்படுகிறது. உலர்ந்த ஈரமில்லாத உணவுப் பொருட்களுக்கு மிகக் குறைவாகவும் உமிழ்நீர் சுரக்கப்படுகிறது. உமிழ்நீரில் டயலின், மால்டோஸ் என்ற என்சைம்களின் உதவியால் வாயில் சிரணித்தல் நடைபெறுகிறது.

டயலின் ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுகிறது. மால்டேஸ் மால்டோஸை குளுக்கோசாக மாற்றுகிறது. வாயில் புரதமும், கொழுப்பும் எவ்வித மாறுதல்களையும் அடைவதில்லை.

உணவுக்குழல்

உணவுக்குழல் தொண்டயையும், இரைப்பையையும் இணைக்கும் குழாய் ஆகும். பற்களால் அரைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாயிலிருந்து இரைப்பைக்கு அனுப்ப உதவுகிறது.

இரைப்பை

இரைப்பை இதயத்தின் அருகில் உள்ளது. இது உணவுப் பாதையின் மிகப்பெரிய உறுப்பாகும். இரைப்பையின் முன்பாகம் பெருத்துக் காணப்படுவதால் இதற்கு இதய வயிறு (cardiac stomach) என்று பெயர். ஒடுங்கிய பாகத்திற்கு (Pylocic stomach) குடல்வாய் வயிறு என்று பெயர்.

இரைப்பையின் இரு முனைகளிலும் சுருக்குத் தசையால் ஆன வால்வுகள் காணப்படுகின்றன. இதயவயிறு ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள வால்வு இதயச்சுருக்கு (cardiac spincter) என்றும் குடல்வாய் வயிறு முடியும் இடத்தில் காணப்படும் வால்வு குடல்வாய் சுருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இரைப்பையானது அதிக உணவுப் பொருட்களைத் தேக்கி வைப்பதால் அடிக்கடி உணவு உண்பது தவிர்க்கப்படுகிறது. இரைப்பைச் சுவர்களின் அசைவின் காரணமாக உணவுப் பொருட்கள் நன்கு கலக்கப்படுகின்றன. மேலும் இங்கு சுரக்கப்படும் கைடிலோரிக் அமிலத்தினால் (hydrochloric acid) உணவுப் பொருட்களிலுள்ள நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இரைப்பையில் உணவு செரித்தல் உணவுப் பொருட்கள் பற்களால் நன்கு அரைக்கப்பட்ட பின்னர் உணவுக் குழல் வழியாக இரைப்பையை அடைகிறது. உணவுப் பொருட்கள் இரைப்பையை அடைந்தவுடன் கேஸ்ட்ரின் என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இது இரத்தத்தில் கலந்து இரைப்பைச் சுரப்பிகளை ஊக்குவித்து இரைப்பை நீரைச் சுரக்க வைக்கிறது. இரைப்பை நீரில் ஹைடிரோ குளோரிக் அமிலம், கோழைப்பொருட்கள், என்சைம்கள் ஆகியவை உள்ளன.

இடைவிடாமல் சுரக்கும் பித்தநீர், பித்த நாளங்கள் வழியாகப் பித்தப்பைக்குச் செல்கிறது. இது பொது பித்த நாளத்தின் மூலம் முன் குடலில் வந்தடைகிறது. பித்தநீரில் பித்த நீர் உப்புக்கள், நீர், நிறமி அணுக்கள் ஆகியவை காணப்படுகின்றன. பித்த நீரின் நிறம் அதிலுள்ள இரு நிறமிகளான பிலிவெர்டின் (Biluverdin பிலிருபின் (Blurubin) ஆகியவற்றால் ஏற்படுகின்றன. கல்லீரல் பழுதுபட்டாலோ அல்லது பித்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டாலோ இரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாகிறது. இதனால் கண்கள், முகம், சிறுநீர் ஆகியவற்றின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

பித்தநீரின் வேலைகள்

 1. பித்த நீரின் அமிலத்தன்மை, கணைய நீரின் கொழுப்புச் சிதைவு நொதியைச் செயல்படச் செய்வதுடன் அதன் புரத சர்க்கரைப் பொருட்களைச் சிதைக்கும் நொதிகளின் செயலையும் ஊக்குவிக்கிறது.
 2. பித்த நீர் பெரும் அளவில் கொழுப்பு அமிலங்களை கரைக்கும் தன்மையுடையது. கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலங்களைச் சிதைக்கும் நொதிகளுடன் பித்த நீரானது இணைந்து செயல்படத் துணை புரிகின்றது.
 3. கொழுப்புப் பொருட்கள் செரித்தப்பின் உறிஞ்சப்படுவதற்குப் பித்த நீர் உதவுகிறது. மற்ற செரிப்பு நீர்களுடன் இணைந்து குடலுக்குள் செல்லும் அமிலத்தன்மை வாய்ந்த கூழை நடுநிலைப் படுத்துகிறது.

இந்நீரில் உள்ள கொலஸ்டிரால் (cholesterd) சீரணித்தலில் பங்கு கொள்வதில்லை. ஆனால், பித்தநீரின் அடர்வு அதிகரிக்கும் பொழுது பித்தக் கற்கள் (Gall stone) ஏற்பட்டு பித்த நாளங்களை அடைத்துப் பித்தநீரின் போக்கைத் தடுத்து விடுகிறது.


சிறுகுடலில் செரித்தல்

கணையம்

கணையத்தை இரண்டாவது பெரிய இரட்டைச் சுரப்பி என்று கூறலாம். இது இரைப்பையின் நீண்ட பாகத்திற்கும் முன் நிறு குடலுக்கும் (Deodenum) இடையில் ஒரு நீண்ட மாவிலைப் போல் அமைந்துள்ளது. இது நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது. இதன் சுரப்பு நீர் கணைய நீர் ஆகும். கணையமானது இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தில் நேரடியாகக் கலக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

கணைய நீரில் மூன்று வித என்சைம்கள் உள்ளன.

அவையாவன,

1. டிரிப்ஸின்

2. அமிலேஸ்

3. லிப்பேஸ்

மேலும் இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோகுளோரின் அமிலத்தின் அமிலப் பண்பை நடுநிலைப்படுத்த உதவும் சோடியம் கார்பனேட் என்ற பொருளும் இந்நீரில் உள்ளன.

மண்ணீரல்

இது வயிற்றின் இடதுபுறம் மேல் பகுதியில் இரைப்பைக்கு பின்னால் உள்ள கருஞ்சிவப்பு நிறமான ஓர் உறுப்பு. இது ஜீரணிக்கப்படாத உறிஞ்சப்படாத உணவுப் பொருட்களைத் தற்காலிகமாக சேமித்து வைக்கும் உறுப்பாக விளங்குகிறது. இது பெருங்குடலின் இறுதி பாகமாக விளங்குகிறது. இங்கிருந்துதான் ஜீரணிக்கப்படாத, தேவையற்றதுமான கழிவுப் பொருட்கள் குதத்தின் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

கணைய நீரின் என்சைம்களும், அவற்றின் வேலைகளும்

1. அமிலேஸ் - கார்போஹைடிரேட்டை குளுக்கோஸாக மாற்றுகிறது.

2. டிரிப்சின் - கணைய நிரில் டிரிப்சின் முதலில் இயங்காத நிலையில் டிரிப்சினோசன் என்ற என்சைமாக இருக்கும். இது சிறுகுடல் நொதியான எண்டிரோகினேஸ் மூலமாக இயங்கக் கூடிய டிரிப்சினாக மாற்றப்பட்டு, புரதத்தை சிதைக்கும் தொழிலைச் செய்கிறது. டிரிப்சின் பெட்டோன்களைப் பாலிடெப்டைடுகளாக மாற்றுகிறது.

3. லிப்பேஸ் - கொழுப்புப் பொருட்களைக் கொழுப்பு அமிலமாகவும், கிளிசரலாகவும் மாற்றுகிறது. சீரணிக்கப்பட்ட உணவுக் கூழ் முன் சிறுகுடலிலிருந்து சிறுகுடலுக்கு வருகிறது. சிறுகுடலின் சீதச் சவ்வில் காணப்படும் சுரப்பிகள் சிறுகுடல் நீரைச் சுரக்கின்றன. இதற்கு சக்கஸ் எண்டிரிக்கஸ் என்று பெயர்.

சக்கஸ் எண்டிரிக்கஸின் (succus entericus) நொதிகளும் வேலைகளும்

1. பெப்சின் - பாலிபெப்டைடுகளை அமினே அமிலமாக மாற்றுகிறது.

2. நியுக்ளியோடைட்டேசஸ் (Nucleotidaeses) - நியுக்ளியோடைடுகளை நியுக்ளியோசைடுகளாக மாற்றுகிறது.

3. நியுக்ளியோசைட்டேசஸ் (Nucleosidaeses) – நியுக்ளியோசைடுகளை பென்ட்டோஸ், புயுரின் பிரமிடின்களாக மாற்றுகிறது. மேலும் இவற்றில் உள்ள லாக்டேஸ், மால்டேஸ் சுக்ரேஸ் போன்ற என்சைம்கள் சர்க்கரையை எளிய குளுக்கோஸ் மூலக் கூறுகளாக மாற்றுகின்றன.

சீரணிக்கப்பட்ட உணப் பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸ் நிலையிலும், புரதங்கள் அமினோ அமிலங்களாகவும், கொழுப்பு பொருட்கள் கொழுப்பு அமிலங்களாகவும் கிளிசராலாகவும் உள்ளன. பின்னர் சீரணக்கப்பட்ட உணவானது முன் சிறுகுடலிலிருந்து சிறுகுடலுக்குள் அனுப்பப்படுகிறது. இப்பொழுது உணவுப் பொருட்கள் உட்கிரகிக்கப்படுவதற்கும் தன்மயமாவதற்கும் தயாரான நிலையில் உள்ளன.

உணவு உட்கிரகித்தல் (Absorption)

நீர், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துகள், சீரணிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிறுகுடலின் வழியாக செல்லும் பொழுது குடலுறுஞ்சிகளின் உதவியால் நேரடியாகவோ அல்லது நிணநீர்க் குழாய்களின் மூலமாகவோ இரத்தத்தில் உறிஞ்சப்படுவதற்கு உட்கிரகித்தல் என்று பெயர்.

வயிற்றில் குளுக்கோசும், சில மதுபானங்களும், தாது பொருட்களும் உறிஞ்சப்படுகின்றன. பெருமளவு உணவுப் பொருட்கள் சிறுகுடலில் தான் உறிஞ்சப்படுகின்றது. சிறுகுடலில் உள்ள உட்சீதச் சவ்வு சற்று மடிப்புகளாக அமைந்திருப்பதால் உணவு உறிஞ்சப்படும் பரப்பு அதிகமாகிறது.

அலைச் சுருக்க அசைவுகள் (Peristaltic movement)

குடலில் உள்ள வட்டத்தசைகள் சுருங்குதல் குடலின் குறிப்பிட்ட பகுதி சுருங்கி, அடுத்த பகுதி விரிவடைகிறது. இதனால் குறுகியப் பகுதியில் உள்பகுதியில் உள்ள பொருட்கள் விரிந்த பகுதிக்குத் தள்ளப்படுகின்றன. பின்னர் விரிந்தப் பகுதி குறுகி, குறுகியப் பகுதி விரிவடைகிறது. இச்சுருக்க விரிவுகள் மாறி மாறி சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்குச் செல்கின்றன. அவைச் சுருக்கங்கள் குதத்திலிருந்து இரைப்பையை நோக்கி வந்தால் அந்த அலைச் சருக்கத்திற்கு எதிர் அலைச்சருக்கம் என்று பெயர்.

சுவாச மண்டலம்

ஒரு உயிருக்குத் தன் வாழ்க்கையை முழுவதும் சுவாசித்தல் அவசியம். ஏனெனில் சுவாசித்தல் முறையில் தான் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தி தொடர்ந்து அளிக்கப்படுகிறது. சுவாசித்தல் என்பது ஒரு உயிரின் எல்லா உயிருள்ள செல்களிலும் நடைபெறுவது எவ்வளது தேவைப்படுகிறதோ, அதே போன்று பிராண வாயு இன்றியமையாதது. தமனிகளின் மூலம் பிராணவாயுவானது திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திசுக்களில் ஏற்படும் கரியமில வாயுவைச் சிரைகள் எடுத்து வருகின்றன. இதற்குச் சுவாசித்தல் என்று பெயர்.

இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் நுரையீரலிலிருந்து பிராண வாயுவைக் கிரகித்துத் திசுக்களுக்கு எடுத்து செல்கின்றன. அங்கு வளர்சிதை மாற்றத்தினால் ஏற்பட்ட கரியமில வாயுவை சிரைகள் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இதற்கு உட்சுவாசம் என்று பெயர். திசுக்களில் உள்ள கரியமிலவாயுவை நீக்கி, திசுக்கள் சுவாசிப்பதற்குத் தேவையான பிராணவாயு நுரையீரல்களின் மூலம் பெறும் முறைக்கு வெளிச்சுவாசம் என்று பெயர்.

சுவாச மண்டலத்தின் அமைப்பு

சுவாச மண்டலம் வெளிநாசித் துவாரத்தில் ஆரம்பித்து, நாசிப்பாதை, வாய்க்கழி, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக்குழல் வழியாக நுரையீரலில் முடிவடைகிறது. நாசித்துவாரத்தின் உட்காற்று சுவற்றில் உள்ள சிலேட்டுமப் படலத்தில் எண்ணற்ற மயிரிழைகள் காணப்படுகின்றன. இவைகள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பெருமளவு தூசிகளையும், சிறு பூச்சிகளையும் வடிகட்டுகின்றன. இதனால் நாம் உட்கொள்ளும் காற்று தூய்மைப்படுத்தப்படுகிறது. நாசிப் பாதைச் சுவற்றில் அமைந்துள்ள சிலேட்டுமப் படலத்தில் இரத்தக் குழாய்களும், நரம்பு இழைகளும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்குத் துளையின் வழியாகச் சுவாச மண்டலத்தில் நுழைகிறது. மூக்கில் உள்ள நரம்பனுக்கள் பொருட்களின் வாசனையை அறிய உதவும் புலன் உறுப்பாகச் செயல்படுகிறது. மூக்கின் வழியாகச் செல்லும் காற்று சற்று வெப்பம் அடைந்து செல்கிறது. சிலியாக்களின் அசைவினால் பெரும்பான்மையான தூசுகள் வடிகட்டப்படுவதால் உட்செல்லும் காற்றுத் தூய்மையாக உள்ளது. வாயினாலும் சுவாசிக்கலாம். ஆனால், வாயினால் சுவாசிப்பது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாயினால் சுவாசிப்பதனால் உணவு ஜீரணமாதலில் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.


சுவாசித்தல்

கழிவு நீக்கும் மண்டலம்

வளர்ச்சிதை மாற்றம் எல்லா உயிரினங்களிலும் நடைபெறக்கூடிய ஒரு இன்றியமையாத செயல் ஆகும். திசுக்களில் ஆக்ஸிகரணம் நடைபெறும் பொழுது எண்ணற்ற கழிவுப் பொருட்கள் உண்டாகின்றன. இக்கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுவது மிகவும் அவசியம். வளர்சிதை மாற்றத்தின் முடிவின் ஏற்படும் பொருள்களுக்குக் கழிவுப் பொருட்கள் என்று பெயர். அக்கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளுக்குக் கழிவு உறுப்புகள் என்று பெயர். சிறு நீரகம் (kidney) தோல் (Skin), நுரையீரல் (Lungs) உணவு குழாய் (Gastro intestinal Tract) உமிழ்நீர் சுரப்பிகள் (Salivary glands) கல்லீரல் (Liver) ஆகியவை கழிவு உறுப்புகளாக வேலை செய்கின்றன.

சுவாசித்தலினால் வெளியேற்றப்படும் கரியமிலவாயுவும், நீராவியும் நுரையீரல்களின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நீர், உடலினுள் செலுத்தப்படும் சில வகையான மருந்துப் பொருட்கள், கனமான உலோகப் பொருட்கள் (காட்மியம், இரும்பு, மாங்கனிசு) ஜீரனமாகாத உணவுப் பொருட்கள் போன்றவைச் ஜீரணமண்டலம் வழியாகவும் வெளியேறுகின்றன. சிறிதளவு கல்லீரல் மூலமாகவும் வெளியேற்றப் படுகின்றன. தோலில், கழிவு நீக்கம் வியர்வை சுரப்பிகள் மூலமாகவும், எண்ணெய்ச் சுரப்பிகள் மூலமாகவும் நடைபெறுகின்றன. வியர்வைச் சுரப்பிகள், நீர், யூரியா, உப்புகள், யூரிக் அமிலம், கிரியாட்டினின் போன்ற பொருட்களை வியர்வையாக வெளியேற்றுகின்றன.

நம் உடலில் அமைந்துள்ள கழிவு உறுப்புகளில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள் சிறுநீர் ஆகும். இதில் யூரியா, அம்மோனியா, கிரியாடினின், நைட்ரஜன் சேர்ந்த பொருட்கள் வெளியேற்றப் படுகின்றன.


கழிவு நீக்கம்

சிறுநீரகம் (Kidney)

நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. இவை வயிற்றின் கீழ்பகுதியில் பின் பக்கத்திற்கொன்றாக அமைந்துள்ளன. இவை அவரை விதை வடிவத்தில் உள்ளன. ஒவ்வொரு சிறுநீரகமும் 5 செ.மீ நீளமும் 3 செ.மீ, அகலமும் 2 செ.மீ தடிமனும் உள்ளது. இதன் எடை சுமார் 200 கிராம் முதல் 250 கிராம் வரை உள்ளது. சிறுநீரக்கத்தின் உட்பக்கத்தில் உள்ள குழிந்த பகுதிக்கு ஹைலம் (Hilum) என்று பெயர். இதனுடன் சிறுநீரகத்தமணி, சீறுநீரகச் சீரை, சீறுநீரக குழல்கள் (creter) ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிறுநீரகமும், எபித்தீலியல் திசுக்களினாலும், இணைப்புத்திசுக்களினாலும் ஆனது. ஒவ்வொரு சிறுநீரகமும், சிறுநீரைச் சேகரிக்கப் பெல்விஸ் (Pelvis) என்ற பகுதியைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்திள் குழிந்த பகுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வெண்மை நிறக்குழாய்களுக்குச் சிறுநீரக்குழாய்கள் என்று பெயர். சிறுநீரகத்தின் பெல்விஸ் பகுதியிலிருந்து முடியும் இடத்தைச் சிறுநீர்ப்பை (Urinary bladders) அமைந்துள்ளது. இங்குள்ள சிறுநீர், சிறுநீர் புறவழி (Urethra) வழியாக வெளியேற்றப் படுகிறது.

சிறுநீரகத்தின் நீள்வெட்டுத் தோற்றம்

நீள்வெட்டு அமைப்பில் ஒவ்வொரு சிறுநீரகமும் வெளிப்புறம் குவிந்தும், உட்புறம் குழிந்தும் காணப்படுகின்றன. குவிந்த பகுதிக்கு கார்டெக்ஸ் என்றும், குழிந்த பகுதிக்கு மெடுல்லா என்றும் பெயர். மெடுல்லா பகுதியில் 0-18 வரை கூம்பு அல்லது பிரமிட் வடிவ அமைப்புகள் காணப்படுகின்றன. இவைகளுக்குப் பிரமிடுகள் என்று பெயர். பிரமிடுகளின் அடித்தளமானவை கார்டெக்ஸ் பகுதியை நோக்கி அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீர்குழாயின் மேல் பகுதியும் புனல் வடிவத்தில் உள்ளன. இந்தப்பகுதிக்கு (Pelvis) என்று பெயர்.

1. கார்டெக்ஸ்

2. மெடுல்லா

3. பிரமிடுகள்

4. பெல்விஸ்

5. சிறுநீர் குழாய்.

நுண்ணோக்கியால் பார்க்கப்படும்போது, ஒவ்வொரு மனித சிறுநீரகத்திலும் எண்ணற்ற நெப்ரான்கள் (Nephrons) காணப்படுகின்றன. இவை கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு அடிப்படையாக இருக்கின்றன. நெப்ரான்களின் எண்ணிக்கை இனத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நெப்ரான் என்பது மிக மெல்லிய தந்துதிக்குழாய்கள் காணப்படுகின்றன.

அவைகள் முறையே

 1. மால்பீஜியன் முடிச்சுறைகள் (malphigian Capsules)
 2. சிறுநீர்க் குழாய்கள் (Renal Tupules) ஆகும்.

மால்பீஜியன் முடிச்சுறைகள்

இது கிளாமருலஸ் என்று அழைக்கப்படும். ஒவ்வொரு பக்கத்திலும் சிறுநீர்க்குழல் ஆரம்பிக்கும் இடத்தில் கோள அமைப்புடைய ஒரு வடிகட்டும் உபகாரணம்போல் இது அதன் உட்புறம் கிளாமெருலஸ் (Glamarulous) என்ற சிறிய தந்துகி முடிச்சுகளையும் கொண்டுள்ளது.

பெளமன் மேலுறையின் உள்மைப்பில் உள்ள ரத்தத்தந்துகிக் குழாய்களில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் தந்துகிக் குழாய்களில் பிளாஸ்மா திரவம் வடிகட்டப்படுகிறது. பெளமன் மேலுறை, இரத்த அணுக்களையும், புரதப் பொருட்களையும் ஊடுருவிச் செல்ல விடாமல் தடுக்கின்றன. இரத்த அழுத்தத்தின் ஆற்றலால் பிசிதம் வடிந்து வரும்பொழுது, இரத்த அணுக்களையும், புரதங்களையும் விட்டுப்பிரிகின்றன.

இவ்வாறு இரத்தம், புரதப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கும் முறைக்கு நளிங்கண் வடிகட்டுதல் என்று பெயர். வடிகட்டி வெளியேறும் நீர் தனிங்கண் வடிநீர் என்று பெயர். இந்த நனிங்கண் வடிநீர் சிறுநீர்க் குழல் வழியாகச் செல்கின்றன.

ஒவ்வொரு சிறுநீர்க் குழல்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவைகள் முறையே

 1. அண்மை நெளிகுழல் (ProximalConvoluted)
 2. ஹென்லியன் வளைவு (Henle's loop)
 3. சேய்மை நெளிகுழல் (Distal Convoluted)
 4. சிறுநீர் திரட்டுக்குழல் (Collecting Tubule)

சுரப்பிகள்

தைராய்டு சுரப்பிகள்

முன் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைரோட்ரோபின் ஹார்மோன் (TSH) (Thyrotrophin) தைராய்டு சுரப்பிகளை ஊக்குவித்து அதிக தைராக்கினைச் சுரக்கச் செய்கிறது.

தைராக்சின் வேலைகள்

தைராக்சின் செல்களில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவும் பின் வருமாறு

 1. இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுதலும் பயன்படுத்தலும் அதிகரிக்கிறது.
 2. வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகரித்து உடல் வெப்பத்தையும் அதிகரிக்கிறது
 3. இரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவு குறைக்கப்படுகிறது.
 4. இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்திற்கு வலுவூட்டுகிறது.
 5. என்சைம்களின் செயல்களுக்கு உயிர்ச்சத்துகள் தேவைப்படுவதால் உயிர்ச்சத்துகளின் தேவைகளை அதிகரிக்கிறது.
 6. சுவாசத்தின் அளவை அதிகரிக்கிறது.
 7. நரம்பு மண்டலம், தசை மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.

பாராதைராய்டு சுரப்பி (parathyroid gland)

தைராய்டு சுரப்பியின் அடிப்பகுதியில் பக்கத்திற்கு இரண்டாக முட்டை வடிவத்தில், மஞ்சள் நிறமாக உள்ளன. இதன் அளவு 6மி.மீx2மி.மீ ஆகும். இச்சுரப்பியில் பாராதைராக்சின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.

பாராதைராக்சின் வேலைகள்

 1. எலும்பில் கரிம அமிலத்தின் அடர்வை அதிகரிக்கிறது.
 2. கால்சியம், பாஸ்பரஸ் கழைதிறனை அதிகரிக்கிறது.
 3. எலும்பிலிருந்து கால்சியத்தை மீண்டும் உறிஞ்சுகிறது.
 4. சிறுநீரின் மூலமாக பாஸ்பேட்டுகளை வெளியேற்றுகிறது.
 5. சிறுநீர்க் குழல்களிலிருந்து கால்சியத்தை உறிஞ்சி இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்தகிறது.
 6. கால்சியம், பாஸ்பரஸ் சிறுகுடலிலிருந்து உறிஞ்சுகிறது.
 7. பால் சுரப்பிகளை தூண்டுவிக்கிறது.

லாங்கர்ஹான்ஸ் திட்டுகள் (Islets of largerhans)

கணையம் எனும் சுரப்பி நீண்டு மாவிலை வடிவத்தில் வயிற்றறையின் பின் சுவற்றில் காணப்படுகிறது.

இதில்

 1. தலைப்பகுதி
 2. உடல்பகுதி
 3. வால்பகுதி

என்ற மூன்று பாகங்கள் உள்ளன.

இச்சுரப்பி ஜீரண நீர்களை சுரப்பதால் நாளமுள்ள சுரப்பியாகவும், ஹார்மோன்களை சுரப்பதால் நாளமில்லா சுரப்பி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் தலைப்பகுதி சிறு குடலின் டியோடினத்தின் வளைவில் பொருத்தப்பட்டுள்ளது.

கணையத்தின் பரப்பில் காணப்படும் செல்களின் தொகுப்பு லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள் (Islets of langerhans) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான செல்கள் கணையத்தின் தலைப்பகுதியில் குறைவாகவும், வால் பகுதியில் மிக அதிகமாகவும் காணப்படுகின்றன. லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களில் "ஆல்பா” செல்கள், 'பீட்டா' செல்கள் எனும் இருவகையான செல்கள் காணப்படுகின்றன. இவற்றில் 'ஆல்பா' செல்கள் குளுக்கானையும், பீட்டா செல்கள் இன்சுலினையும் சுரக்கின்றன. ஆல்பா செல்களில் சுரக்கும் ஹார்மோன், குளுக்கான கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கேற்கிறது. இது கிளைக்கோஜினை குளுக்கோஸ் ஆக மாற்றி இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது. மேலும் அடிப்போஸ் திசுவில் உள்ள கொழுப்பு பொருட்களை சிதைக்கிறது. பீட்டா செல்களில் சுரக்கும் ஹார்மோன், இன்சுலின், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

குளூக்காணின் வேலைகள்

 1. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்குதல்.
 2. கல்லீரலில் உள்ள கிளைகோஜனை (Glycogen) குளுக்கோஸாக மாற்றுகிறது.
 3. கொழுப்பு திசுவில் உள்ள கொழுப்பு சத்தினை கரைக்க தூண்டுகிறது.

இன்சுலின் வேலைகள்

 1. குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றவும், இரத்தத்திலிருந்து குளுகோஸை, செல்லிற்கு மாற்றுவதற்கு இன்சுலின் துரிதப்படுகிறது.
 2. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது
 3. கல்லீரலில் கிளைகோஜனை சேகரித்து வைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

அட்ரீனல் சுரப்பி

சிறுநீரகங்களுக்கு மேலாக தொப்பி போன்ற அமைப்புடன் இச்சுரப்பிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அட்ரீனல் சுரப்பியும் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

 1. சிவந்த நிறமான மெடுல்லா எனும் உட்பகுதி
 2. மஞ்சள் நிறமான கார்டெக்ஸ் எனும் வெளிப்பகுதி

அட்ரீனல் கார்டெக்ஸ் : இதில் 3 அடுக்குகள் காணப்படுகின்றன.

 1. சோனா குளோமெருல்லுசா (Zona glomerulosa) வெளியடுக்கு
 2. சோனா பெசிக்குலேட்டா (Zona fasciculata), சோனா ரெட்டிகுலாரிஸ் (Zona retiulularis) உள் அடுக்கு
 3. பாலிக்கின்ஸ்டிமுலேட்டிக் ஹார்மோன் (follicular stimulating harmone), லேக்டோஜெனிக் ஹார்மோன் (lactogenic hormone), லூட்டினைசிங்ஹார்மோன் (lutenizing ஹார்மோன்)

வளர்ச்சி ஹார்மோன்கள்

இது எலும்புத்திசுவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கேற்கிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. குழந்தைப் பருவத்தில் அதிகமாகச் சுரந்தால் தசை வளர்ச்சி மிகுதியாக ஏற்பட்டு பேருருவம் (gigantism) என்ற நிலை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு அதிகமாகச் சுரந்தால் கை, கால்கள், முகம், கீழ்த்தாடை, போன்றவற்றின் எலும்புகள் மட்டும் அதிகமாக வளர்கின்றன. இந்நிலை அக்ரோமெகலி (acromegaly) எனப்படும். வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் உடல் வளர்ச்சி பெரிதும் தடைப்படுகிறது. இதனால் குள்ள உருவம் (Dwarfism) என்ற நிலை ஏற்படுகிறது.

தைரோட்ரோபின் ஹார்மோன்

இந்தி ஹார்மோன் தைராய்டு சுரப்பியின் செயல்களைத் தூண்டுவிக்கிறது. இரத்தத்தில் தைராக்ஸின் அளவு குறையும் பொழுது, தைரோட்ரோபின் அதிக அளவில் சுரந்து தைராக்சினை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோனை உடலுக்குள் செலுத்தினால் தைராய்டு சுரப்பியின் திசுக்கள் பெரிதும் வளர்கின்றன.

அட்ரினோ கார்ட்டிகோ ட்ராபிக் ஹார்மோன்

இந்த ஹார்மோன் அட்ரீனல் சுரப்பியில் கார்டெக்ஸ் பகுதியைத் தூண்டுகிறது. அதில் சுரக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கிறது.

ஃபாலிக்கிள் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FSH)

இந்த ஹார்மோன் பெண்களின் கருக்கூட்டில் உள்ள திசுக்களை ஊக்குவிக்கிறது. எனவே கருக்கூட்டின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் பெரிதும் துணை புரிகிறது. கருவகத்தில் ஈஸ்ட்ரோஜன் (estrogen) என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. மேலும் ஆண்களின் விந்தங்களில் விந்தணுக்கள் உருவாதலைத் தூண்டுகிறது.

லேக்டோஜெனிக் ஹார்மோன்

இந்த ஹார்மோன் பால் சுரப்புகளை ஊக்குவித்து பால் சுரத்தலுக்குத் துணை புரிகின்றது. இது குறைந்தால் பாலூட்டும் சமயத்தில் பால் சுரத்தல் நின்று விடுகிறது.

லூட்டினைசிங் ஹார்மோன்

இந்த ஹார்மோன் பெண்களின் கருவக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. இச்சுரப்பு குறையும் போது கருவகத்தில் மஞ்சள் கூட்டின் (corpus lateum) வளர்ச்சித் தடைபடுகிறது ஆண்களின் விரைகளில் உள்ள இன்டாஸ்டிசியஸ் செல்களை (Interstitial cells) ஊக்குவித்து டெஸ்டோஸ்டீரான் (testoteron) எனும் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது.

பின் பிட்யூட்டரி சுரப்பி

இச்சுரப்பி முன் பிட்யூட்டரி சுரப்பியை அடுத்து அமைந்துள்ளது. இதில் இரண்டு வித ஹார்மோன்கள் சுரக்கின்றன.

 • ஆக்சிடோசின் (oxytocin)
 • வேசோபிரசின் (vasopresin)

ஆக்சிடோசின்

இது கருப்பையின் சுவர்களைச் சுருங்க வைத்துக் குழவியை ஈனுதலுக்குப் பெரிதும் துணைபுரிகின்றது.

வேசோபிரசின்

இந்த ஹார்மோன் இரத்தக் குழாய்களின் சுவர்களைச் சுருங்க வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மேலு சிறுநீர் நுண்குழல் வழியாகச் செல்லும் சிறுநீரிலிருந்து பெருமளவு நீரை உறிஞ்சி, வெளியேறும் சிறுநீரின் அளவைக் குறைக்கிறது. இந்நிலைக்கு டயாபெடிஸ் இன்சிபிடெஸ் (Diabetes Insipidus) என்று பெயர். இந்நோயாளிகள் அடிக்கடி நீர் பருக வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள்.

இனச்சுரப்பிகள்

நாளமில்லா சுரப்பிகளுள், இனச்சுரப்பிகளாக விந்தகங்களும், கருவகமும் மிகவும் இன்றியமையாததொன்றாகும். இச்சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் பால் முதிர்ச்சியில் பெரிதும் பங்கேற்கிறது. ஆண் இனப்பெருக்க உறுப்பில் சுரக்கும் ஹார்மோன், டெஸ்ட்டோஸ் ஆண்களின் பால் துணைப் பண்புகளுக்குக் (secondary sexual chatacters) காரணமாக பெண் இனப்பெருக்க உறுப்பான கருவகத்தில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பெண்களின் தீட்டுச் சுற்றுக்கும் (menstruation) கருவகத்தின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் உதவி புரிகிறது. இதில் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் புரொஜெஸ்ட்ரான் ஆகும். இது, கருவுற்ற பெண்ணின் கரு வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரிகின்றது.

புலன் உறுப்புகள்

சில புலன் உறுப்புகள், சில வகையான உணர்ச்சி தூண்டுதலை பெறக்கூடிய தனிதன்மை வாய்ந்தது. உணர்ச்சிகளை மூளைக்கு நரம்பு எடுத்து செல்கிறது.

அவ்வுணர்சிகள் உதாரணம்

 • வாசம்
 • பார்வை
 • தொடுதல்
 • கேட்டல்

இத்தகைய உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு நரம்புகள் உள்ளன. இந்த சிறப்பு நரம்புகள் உணர்ச்சியை உணர்ந்து தனித்தனியாக செயல்படுகின்றன.

தோலும் அதன் வேலைகளும்

தோல் உடலைப் போர்த்திப் பாதுகாக்கும் உடையாக அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளால் ஆனது. அவைமேல் தோல் (Epidermis) அடித்தோல் (Dermis). சுரப்பிகள், உணர்ச்சி உறுப்புகள், நகங்கள், முடிகள் ஆகியவை தோலில் பதிந்து காணப்படும் முக்கிய உறுப்புகளாகும்.

புறத்தோல் (Epidermis)

புறத்தோல் என்பது நம் உடலின் மேல் பாகத்தில் காணப்படும் அடுக்கு ஆகும். இந்த அடுக்கில் இரத்தக் குழாய்கள் காணப்படுவது இல்லை. இங்குள்ள செல்கள் நிணநீரின் மூலம் சத்துக்களைப் பெறுகின்றன. நரம்புகள் இந்த அடுக்கில் காணப்படுகின்றன. புறத்தோல் நான்கு வகையான அடுக்குகளால் ஆனது.

அவைகள்

 1. ஸ்ட்ரேட்டம் கார்னியா (Stratum Corneum)
 2. ஸ்ட்ரேட்டம் லூசிடம் (Stratum Lucidum)
 3. நிறமி அடுக்கு (Stratum granulosum)
 4. ஸ்ட்ரேட்டம் மல்பீஜியன் (Stratum malphig)

ஸ்ட்ரேட்டம் கார்னியா (Stratum corneum)

இந்த அடுக்கு, உடலில் சில பகுதிகளால் குறிப்பாக உள்ளங்கை, உள்ளங்கால் ஆகிய பகுதிகளில் தடித்துக் காணப்படுகின்றன. உதடுகளில் இந்த அடுக்கு மென்மையாகக் காணப்படுகிறது. தளும்புகள், கொம்புகள், நகங்கள், சிறகுகள், மீனின் செதில்கள் ஆகியவையனைத்தும் இந்த அடுக்கிலிருந்து தான் தோன்றுகின்றன.

ஸ்ட்ரேட்டம் லூசிடம் (Stratum Lucidum)

இந்த அடுக்கு, ஸ்ட்ரேட்டம் கார்னியத்தை அடுத்து அமைந்தள்ளது. இது ஒளி ஊடுதலும் தன்மையுள்ளது. இங்குள்ள செல்களுக்குத் தெளிவானத் தோற்றம் இல்லை.

நிறமி அடுக்கு (granulosum)

இது மேல் தோலின் மூன்றாவது அடுக்காக அமைந்துள்ளது. தட்டையான செல்களால் ஆனது. செல்கள் தோலுக்கு நிறத்தையளிக்கும். நிறம் அணுக்களைக் கொண்டுள்ளது.

ஸ்ட்ரேட்டம் மல்பீஜியன் (Malphig)

இவ்வடுக்கு புறத்தோலின் அடுக்குகளில் மிகவும் பெரிய பாகமாகும். இவ்வடுக்கில் உள்ள செல்கள் செல் பிரிதல் (poly edral cell) களால் ஆனது. இதன் இடையில் உள்ள செல்களுக்குப் ப்ரிக்கள் செல்கள் (prickle cel) என்று பெயர். இவ்வடுக்குகள் இறுதியில் மெலானின் என்று நிறமித்துணுக்குகள் (melanin) காணப்படுகின்றன. இந்த நிறமித் துணுக்குகளில் எண்ணிக்கையைப் பொறுத்து தோலின் நிறம் அமைகிறது.

அடித்தோல் (Dermis)

புறத்தோலையடுத்து அடித்தோல் அமைந்துள்ளது. இவ்வடுக்கு இணைப்புத் திசுக்களால் ஆனது. இரத்த குழாய்களும், நரம்பு ஏற்பிகளும் இதில் உள்ளன. புறத்தோலையும், அடித்தோலையும் பிரிக்கும் பகுதி மேடு பள்ளமாகக் காணப்படுகின்றன. அது உள்தோலின் கூம்பு போன்ற நீட்சிகளால் வளைந்து காணப்படுகிறது. இந்நீட்சிகள் டெர்மல் பர்பில்லாக்கள் (Dermal papillac) அல்லது அசத்தோல் முகிழப்பிகள் எனப்படும். இவ்வடுக்கு உறுதியாக, மின்சக்தியுள்ளதாக அமைந்துள்ளது. இவ்வடுக்களில் காணப்படும் முக்கிய பொருட்கள் :

 1. மின் தன்மையுள்ள தசை நார்கள்,
 2. இரத்த குழாய்களும், நிணநீர் குழாய்களும்
 3. நரம்புகளும் ஏற்பிகளும்
 4. மயிர்த் துளைகள்
 5. வியர்வை சுரப்பிகள்
 6. எண்ணெய்ச் சுரப்பிகள்
 7. இயங்கு தசை நார்கள்

தோலின் சுரப்பிகள்

தோலில் இரண்டு வகையானச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவை:

 1. வியர்வை சுரப்பிகள்
 2. எண்ணெய்ச் சுரப்பிகள்

ஒவ்வொரு வியர்வைச் சுரப்பியும் ஒரு நீண்ட குழாயைக் கொண்டுள்ளது. இதன் ஒரு முனை மேல் தோலில் உள்ள வியர்வைத் துளையில் திறக்கிறது. இதன் மறுநுனி அடித்தோலில் ஒரு முடிச்சு போன்ற பாகமாகக் காணப்படுகிறது. இதன் மறுநுனி அடித்தோலில் ஒரு முடிச்சு போன்ற பாகமாகக் காணப்படுகிறது. இதற்கு வியர்வைச் சுரப்பிக்கள் என்று பெயர். இதில் உள்ள சுரப்புச் செல்கள், இரத்தத்திலிருந்து நீர், கழிவுப் பொருட்கள் ஆகியவற்றைப் பிரித்து செல்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
3.02941176471
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top