பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காற்றோட்ட வசதி

சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் காற்றின் பயன்பாடுகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

முன்னுரை

மனிதனின் நலமான வாழ்வுக்கு தூய்மையான காற்று முக்கியம். ஒரு மனிதன் திட உணவாக 1.2 கிலோகிராமும், திரவமாக 1.8 கிலோகிராம் உணவையும் உட்கொள்கிறான். ஆனால் அவன் சுவாசிக்கும் காற்றின் அளவு ஒரு நாளைக்கு 14 கிலோகிராம்.

காற்று மண்டலம் (Air atmosphere)

1. வெளி மண்டலம் - அறையின் வெளிப்பரப்பிலுள்ள காற்று

2. உள் மண்டலம் - கட்டிடத்தில் உள்ள அறையில் உள்ளே காற்று.

வளிமண்டலத்தை பாதிக்கும் காரணிகள்

இயற்பியல் காரணிகள் (PhysicalAgents) :

a. வெப்பநிலை

b. ஈரப்பதம்

C. காற்றின் வேகம்

பி. வளிமண்டலக்காற்றின் அழுத்தம்

வேதியியல் காரணிகள் (Chemical Agents) : தூசி, அழுக்கு, புகை, மற்றும் வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியாகும் கரிம மற்றும் கனிம பொருட்கள்.

உயிரியல் காரணிகள் (BiologicalAgents) : பாக்டீரியா மற்றும் வைரஸ்கள்

சுற்றுசூழலில் வளிமண்டலத்தை பாதிக்கும் காரணிகள் (Factors affecting atmospheric environment)

a. சூரிய ஒளி,

b. வளிமண்டல அழுத்தம்,

C. ஈரப்பதம்,

d. மழை,

f. வெப்பக்காற்று

மேற்கண்ட காரணிகள் தட்பவெப்பநிலையை உறுதிப்படுத்தி, அதன் வெப்பநிலை, மழை, ஈரப்பதம் காற்றின் திசைவேகம் மற்றும் காற்றழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மனித செயல்களும் தொழிற்சாலைகளும் : வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் சத்தம், கதிர்வீச்சு, புகை, புகைக்கரி, மற்றும் மாசுகளின் வகைகள் இவைகளெல்லாம் சுகாதாரத்தை பாதிக்கும்.

சுற்றுசூழலில் பெளதிக காரணிகள் (Physical Agents)

*வெப்பநிலை

*மழை

*காற்றசைவு

*சூரிய ஒளி

*ஈரப்பதம்

*காற்றழுத்தம்

சுற்றுசூழலின் வேதியியல் காரணிகள் (ChemicalAgents)

1. கார்பன் மோனாக்ஸைடு, சல்பர்டை ஆக்ஸைடு, அம்மோனியா, சல்பைடுகள், ஆல்டிஹைடுகள், அசிடோன்கள், மற்றும் ஹைடிரோகார்பன்கள்.

2. கார்பன் புகை அல்லது கரிபுகை மற்றும் வேதிப்பொருட்கள் 1 மைக்ரான் அளவு பெரியது.

3. காற்றில் கலந்துள்ள தூசிமாசுகளான சரளைக்கல்கள், கரிப்புகை, மணல், தரை மற்றும் நார் போன்றவை.

4. கதிரியக்க மாசுகள் மற்றும் ஐசோடோப்புகள் (Isotopes)

5. காற்றில் கலந்துள்ள புகை போன்று அதன் அளவு 0.5 மைக்ரானை விட சிறியவை. அவைகள்.

a). எரிக்கப்படாத கார்பன், கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்ஸைடு, அம்மோனியா (NH)

b). மரக்கட்டை புகையிலிருந்து வரும் பைரோலிஜின்ஸ் அமிலம் (Pyroligneous acid) மற்றும் அசிட்டிக் அமிலம்.

C). ஹைடிரோ கார்பன்கள், நாப்தலின், ஃபாரபின்.

காற்று மாசுபடுதல் (Airpollution)

வளிமண்டலத்தில் உள்ள பொருட்களின் எத்தகைய அடர்வினால் மனிதனுக்கும் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்குமோ அத்தகைய பொருட்களின் அந்த அடர்வுநிலையே வளிமண்டல மாசு எனப்படும்.

காற்று மாசுறுதலின் மூலங்கள் (Sources of Airpollution)

தொழிற்சாலைகள் : உரம், காகிதம், சிமெண்ட், இரும்பு, பூச்சிக்கொல்லி, ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்புகள் போன்ற பல வேதிப்பொருட்கள் காற்றில் கலக்கப் படுகின்றன.

எரித்தல் (Combustion) : கரி, எண்ணெய் மற்றும் மற்ற எரிபொருட்கள் வீடுகளிலிருந்து எரிக்கப்படுவதாலும், ஆலைகளில் இருந்து புகையினாலும், தூசி மற்றும் சல்பர்டை ஆக்ஸைடு போன்றவை காற்றை மாசுபடுத்துகின்றன.

மோட்டார் வாகனங்கள் (Motor Veticles) : வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, ஹைடிரோ கார்பன்கள், பார்மால்டிஹைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், காரியம் போன்றவை காற்றை மாசுபடுத்துகின்றன.

மற்றவை (Miscellaneous) : தாவரங்கள், ஈஸ்ட், பூஞ்சைக்காளான் மற்றும் விலங்குகள் போன்றவைகளிலிருந்து வெளியாகும் ஒவ்வாமை பொருட்கள், வேளாண்மையில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் (Insecticide Sprays) காற்றை மாசுபடுத்தலாம்.

உடல்நலத்தில் காற்று மாசுறுதலின் விளைவுகள்

1. திடீரென்று காற்று மாசுபடுவதால் இறப்பு விகிதம் உடனே அதிகரிக்கும்.

2. விழிவெண்படல அழற்சி (Conjuctivitis) தோல் அழற்சி, நாட்பட்ட நுறையீரல் பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) போன்றவற்றிற்கு புகையிலுள்ள கார்பன்களும் மற்ற மாசுகளும் காரணமாகும்.

3. நியுமோகோனியாசிஸ் (Pneumoconiosis)க்கு காரணம் தூசிகள்.

காற்று மாசுறுதலை தடுத்தலும் கட்டுப்படுத்தலும் (Prevention and Control of Pollution)

காற்று மாசுறுதலைத் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் 5 கோட்பாடுகளை குறிப்பிட்டுள்ளது. அவை:

1. உள்ளடக்குதல் (Containment) : உற்பத்தியில் இருந்து வெளிவரும் மாசுகள் காற்றில் கலப்பதை தடுத்தல்.

2. மாற்றுதல் (Replacement) : மாசுகளின் அளவைக் குறைப்பதற்கு புதிய நுட்பங்களைகையாளுதல்.

3. நீர்க்கச் செய்தல் (Dilution) : காற்றிலுள்ள மாசுகளின் அடர்த்தியை நீர்க்கச் செய்து அவைகளை இயற்கையில் இலைகளின் மூலம் நீக்குதல்.

4. சட்டம் இயற்றுதல் (Legislation) : காற்றுமாசுறுதலை தடுப்பதற்கு சட்டங்களை விதித்து செயலாற்றுதல்.

5. பன்னாட்டு செயல்கள் (International Action) : உலக சுகாதார நிறுவனம் இரண்டு பன்னாட்டு மாசு கணக்கீடு நிலையங்களை வாஷிங்டன் மற்றும் லண்டனிலும், 3 வட்டார நிலையங்களை டோக்கியோ, மாஸ்கோ மற்றும் நாக்பூரிலும் மற்றும் 20 ஆய்வுக் கூடங்களை நாட்டின் வெவ்வேறு பகுதியிலும் நிறுவியுள்ளது.

செயல்முறைகள்

1. தொழில் நுட்பங்களை மாற்றியமைப்பதால் தீமை விளைவிக்கக் கூடிய வேதியல் பொருட்களிலிருந்து காற்று மாசுறுதலை குறைக்கலாம்.

2. தேவைப்படும் இடங்கள் மற்றும் வீடுகளில் மரம், கரி மற்றும் எண்ணெய்க்குப் பதிலாக மின்சாரம் மற்றும் இயற்கை வாயுக்களை பயன்படுத்தலாம்.

3. எரிபொருட்களை எரிப்பதற்குப் பதிலாக மற்ற எரிசக்தியை பயன்படுத்தலாம் (சூரிய ஒளி, காற்று)

4. போக்குவரத்து நிர்வாகம் வாகனப் புகைகளைக் குறைப்பதற்கு சரியான என்ஜின்களை பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. பொது மக்களுக்கு புகையினால் ஏற்படும் தீமை விளைவுகளையும், அவைகளை தடுத்தல் பற்றியும் விளக்க வேண்டும் (சரியான முறையில் எரிபொருட்களை எரித்தல், நல்ல காற்றோட்டம்)

6. சட்டங்களின் அடிப்படையில் புகை மற்றும் மாசுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். (Indian FactorAct)

7. தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு பகுதிகளில் மரம் செடிகளை (Greenbelts) அமைக்கலாம்.

8. எரிநட்சத்திரம் போன்ற அச்சுறுத்தல் இருக்கும்போது தற்காலிக முறைகள் அதிகமாக சுற்று சூழல் பாதிக்கப்பட்ட இடங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டும்.

காற்றோட்டம் (Ventilation)

காற்றோட்டம் என்பது கட்டிடத்துக்குள் இருக்கும் காற்றுக்கு பதிலாக வெளியிலிருந்து சுத்தமான, குளிர்ச்சியான காற்றைப் பெற்றுக் கொள்வதாகும்.

காற்றோட்டத்தின் நோக்கம் : வேலை செய்யும் இடத்தினுள் அல்லது வசிக்கும் அறையினுள் செல்லும் காற்று தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இல்லாததாகவும் வசதி மற்றும் உடல்நலத்துக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

காற்றோட்டத்தின் பயன்கள்

a). வாசனை மற்றும் துர்நாற்றம் அறைகளிலிருந்து வெளியேற்றப்படும்.

b). அறையில் பாக்டீரியாக்களால் மாசுபடுத்தப்பட்ட காற்று குறையும்

C). அறையின் காற்றில் உள்ள வேதியியல் மூலக்கூறுகள் சரியான விகிதத்தில் இருக்கும்.

d). அறையில் உள்ள காற்றின் இயற்பியல் பண்புகளான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் இயக்கம் சரியான நிலையில் இருக்கும்.

காற்றோட்டக் குறைவினால் ஏற்படும் பாதிப்புகள்

மூடிய அறை அல்லது நெருக்கடியான அறையில் உள்ள காற்று வேதியியல் மாற்றங்கள் அடைவதால் வசதியின்மையை உணரமுடியும். அதாவது ஆக்சிஜன் அளவு குறைந்து கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும், மனித உடலிலிருந்து வெளியாகும் வியர்வை, துர்நாற்றம் மற்றும் கனிம நச்சுகள் அதிகரிக்கும்.

காற்றோட்ட குறைவு உள்ள அறையில் இருப்போருக்கு ஏற்படும் பாதிப்புகள்

*வசதியின்மை

*அமைதியற்ற நிலை மற்றும் குறைவாகும் திறமை

*குமட்டல், வாந்தி

- எரிச்சல் மயக்கம்

- சோர்வு

காற்றோட்டத்தின் தரங்கள் : காற்றோட்டத்தில் பரிந்துரைக்கப்படும் இரண்டு வகையான தரங்கள்: அவை

1. கன அளவு: (Cubic Space) : 3000 கன அடி இடம் ஒரு மனிதனுக்கு தேவை.

2. தரைப்பரப்பு (Floor Area) : சராசரியாக ஒரு மனிதனுக்கு 5-10 ச.மீட்டர் இடம் தேவை. பொதுவான காற்றோட்டத்திற்கு வாயுமாற்றம் ஒருமணி நேரத்திற்கு 3 முறை, அதாவது 20 நிமிடத்திற்கு ஒரு முறை அந்த அறைக்குள் தூய்மையான காற்றை நிரப்பவேண்டும். இந்தியாவில் ஒரு மனிதனுக்கு பரிந்துரைக்கப்படும் தரைப்பரப்பு கீழ்கண்டவாறு.

ஒரு நபருக்கு

a. வீடு -- 5 ச.மீ

b. தொழிற்சாலை -- 5 ச.மீ

C. பொது மருத்துவமணை -- 10. ச.மீ

d. தொற்றுநோய் மருத்துவமணை -- 15 ச.மீ

e. பள்ளியில் ஒரு குழந்தைக்கு -- 0.8 ச.மீ

காற்றோட்ட வசதி முறைகள்

இது இயற்கை மற்றும் செயற்கை காற்றோட்ட வசதியாக இருக்கலாம்.

இயற்கை காற்றோட்ட வசதி

காற்று : கதவுகள் மற்றும் பலகணிகள் வழியாக காற்று செல்லுதல் ஆகும்.

வெப்பநிலை : இது காற்றின் அடர்த்தி நிலையற்ற வெப்பநிலையில் இருப்பதாகும். வெப்பமான கால நிலையில் ஓர் அறையில் உள்ள காற்று குளிர்ச்சியாக இருக்க, கதவுகளிலும், பலகணிகளிலும் தட்டிகள் அல்லது ஈரமான திரைகளை அமைக்கலாம்.

செயற்கை காற்றோட்ட வசதி : கீழ்கண்ட முறைகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

1. வெற்றிடத்தில் காற்றை இழுத்தல் : அசுத்த காற்றை வெளியேற்றும் மின்விசிறி (Exhaust Fan) எனப்படும் மின் விசிறிகள் மேற்தளத்திற்கு அருகில், மின்விசிறியின் பட்டைகள் வெளிப்புறத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்.

2. பிளினம் (அ) உந்து அமைப்பு (Plenum or Propulsion System) : சுத்தமான காற்றை அறையின் எல்லா பகுதிகளுக்கும் முன் தள்ளவும், அசுத்தக்காற்றை இழுத்துக் கொள்ளவும் மின்விசிறிகளின் தொகுப்பு மற்றும் மின்கம்பிவடக் குழாய்களும் கொண்டதாக இருக்கும். இந்த நுட்பம் பொதுவாக காற்று குளிரூட்டி (Aircoolers) களில் பயன்படுத்தப்படுகிறது.

3. காற்றை இழுத்தலும் - உந்து அமைப்பு : இது கதவுகளும், பலகணிகளும் மூடப்பட்ட நெருக்கமான அறைகளிலும், அரங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

4. காற்று கட்டுப்படுத்திகள் (Air Conditioning) : இதன் கொள்கை, ஒரு மின் விசிறி அல்லது காற்றடிப்பான் மூலம் சுத்தமான காற்று அறைக்குள் இழுக்கப்பட்டு, அந்தக் காற்று வடிகட்டப்பட்டு, ஈரம் ஏற்றப்பட்டு பிறகு தேவைக்கு ஏற்ப குளிர வைக்கப்படும். காற்று கடத்தியின் வெப்பத்திற்கும் வெளியில் உள்ள காற்றின் வெப்பத்திற்கும் வித்தியாசம் 5-8°C ஆக இருக்கும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.98076923077
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top