பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / இருதயம் / மாரடைப்பின் அறிகுறிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாரடைப்பின் அறிகுறிகள்

நெஞ்சுவலி வந்தால் மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்று கண்டுப்பிடிப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாரடைப்பு இன்றைக்கு மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ யாருக்கும் மிகத் தெளிவாக தெரிவது கிடையாது. மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

அதோடு நான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்கிறேன். துரித உணவுகளைச் சாப்பிடுவதில்லை என்று நீங்கள் சொன்னாலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக முதலுதவி கொடுக்க முடியும்.

இந்த மாரடைப்பில் இருக்கிற முக்கியப்பிரச்சனை நமக்கு தற்போது ஏற்பட்டிருப்பது மாரடைப்பு தானா? இந்த நெஞ்சுவலி மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்பதில் குழப்பம் இருக்கும். முதலில் அவற்றிற்கான வித்யாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக இவை இரண்டுக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் தெரிந்திடும். மூச்சு வாங்குதல், மார்பில் வலி, அதீத வியர்வை, குமட்டல் போன்றவை ஏற்படும்.

இதயத்தில் இருக்கிற தசைகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதயத்தில் இருக்கிற கார்னரி ஆர்டரிஸ் தான் இதற்கு பொறுப்பு. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கூட பெரும் பிரச்சனையாகிடும். அந்த ஆர்டரிஸில் நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிற கொழுப்பு, ப்ரோட்டீன், கால்சியம் போன்றவை அங்கே படர்ந்திடும். இதனால் ரத்த ஓட்டத்தில் சீரான தன்மை இருக்காது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வர நாளடைவில் அவை அடைப்பு ஏற்படும். ஒரு கட்டத்தில் அந்த வழிதடத்தையே அடைக்கும் அளவிற்கு வளர்ந்ததும் நமக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

கண்டுபிடிக்கும் வழி

மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும். சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். பொதுவாக இந்த வலி நடு நெஞ்சில் ஏற்படக்கூடும். பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோல்பட்டை பகுதியிலும் அப்படியே முதுகுப் பக்கமும் வலி பரவிடும். சிலருக்கு பற்கள், தடை பகுதியிலும் வலி இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரியான வலி இருக்காது, ஐந்து நிமிடங்களுக்கு மேல் இவை நீடிக்காது. அதற்குள்ளாகவே வலி இருக்கும்.

உணர்வு

இந்த வலி எடுத்தவுடனேயே உங்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது. அதிகமாக வியர்க்கும், குமட்டல் ஏற்படும். மார்பில் அதிகபட்ச வலி ஏற்படும் போது தான் மக்களுக்கு பயமே ஏற்படுகிறது. சில நேரங்களில் அதனை கண்டுகொள்ளாமல் விட்டாலும் மாரடைப்பு ஏற்படுமே என்கிற பயமே பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பேனிக் அட்டாக்

உங்கள் உடலில் அட்ரினலின் அளவு திடிரென அதிகமாக உயரும் போது மாரடைப்பு ஏற்படும் போது தோன்றுகிற சில அறிகுறிகள் தோன்றிடும். இது மாரடைப்பு தான் என்று நீங்கள் நினைப்பது தான் அடுத்தடுத்த சிக்கல்களை உருவாக்கிடும்.

மூச்சு வாங்குதல்

பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாக்காகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.

பேனிக் அட்டாக் அறிகுறிகள்

கடினமான வேலை செய்யும் போது மட்டுமல்ல பிற சாதரண நாட்களிலும் ஏற்படக்கூடும். இந்த வலி நீண்ட நேரம் இருக்கும். வலி ஆரம்பித்து சுமார் பத்து நிமிடங்கள் கழித்தே நம்மால் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி நம் மார்பு கூட்டைச் சுற்றியே இருக்கும். விரல்கள், கால் ஆகியவற்றில் வலி ஏற்படும். மயக்கம் வருவது போலத் தோன்றும்.

என்ன செய்ய வேண்டும்?

மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளுங்கள். சில அறிகுறிகளை வைத்து மட்டும் நீங்களே எதையும் உறுதி செய்து கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில் அதுவே பெரும் பிரச்சனை ஏற்படுத்திடும் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம். வந்த பின் அவதிப்படுவதை விட அதனை வராமல் தடுப்பது தான் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதை மறக்க வேண்டாம்.

உணவுக் கட்டுப்பாடு

முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொழுப்பு

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசியையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள். பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

எண்ணெய்

எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

புகைப்பிடிப்பது

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியெனில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

உடல் எடை

இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. ஏனெனில் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

சர்க்கரை நோய்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.

வைட்டமின்கள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

மன அழுத்தம்

அதிகமான வேலைப் பளுவின் காரணமாக நிறைய பேர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

ஆதாரம் ஒன்இந்திய நாளிதழ்

3.140625
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top