பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / இருதயம் / மாரடைப்பைத் தெரிந்துகொள்ளுவதற்கான வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாரடைப்பைத் தெரிந்துகொள்ளுவதற்கான வழிமுறைகள்

மாரடைப்பைத் தெரிந்துகொள்ளுவதற்கான வழிமுறைகள் பற்றிய குறிப்புகள்

‘இதயத் துடிப்பு’

இதயம் ஒரு தசைக்கோளம். தானாகவே துடிக்கும் தன்மையுள்ள சிறப்புத் தசைகளால் ஆனது. இதயத்தில் மேற்புறம் இரண்டு; கீழ்ப்புறம் இரண்டு என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. இதயத்தின் வலது பக்க அறைகளில் அசுத்த ரத்தமும், இடது பக்க அறைகளில் சுத்த ரத்தமும் ஓடுகின்றன. இதற்கு இதயத்தின் இயக்கம் உதவுகிறது. அதாவது, மேலறைகள் சுருங்கும்போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள் சுருங்கும்போது மேலறைகள் விரிகின்றன. இப்படி ஒருமுறை இதயம் சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.

இப்படி ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உடலிலிருந்து அசுத்த ரத்தத்தைப் பெறுவதும், சுத்த ரத்தத்தை உடலுக்குத் தருவதுமாக இருக்கிறது இதயம். இது ஓய்வில்லாத சுழற்சியாகத் தொடர்கிறது. இதன் பலனால், நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உயிர் வாழ்வதற்கு இந்தத் துடிப்பும் ரத்தச் சுழற்சியும் அத்தியாவசியம்.

ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப்போல, இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படுகிறது. அதை இதயமே தயாரித்துக்கொள்கிறது என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

தானியங்கி மின்னுற்பத்தி

 • இதயத்தின் வலது மேலறையில் ‘சைனோ ஏட்ரியல் நோட்’ (Sino Atrial Node) என்று ஒரு இதயக் கணு உள்ளது. இது பலதரப்பட்ட தசைநார்க் கற்றைகள் வழியாக இதயத் தசைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. 2 செ.மீ. x 2 மி.மீ. அளவுள்ள இக்கணுவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதுதான் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்த மின்னோட்டமானது ஒரே சீராகவும் முறையான நேரப்படியும் இதயத் தசைகளுக்கு விநியோகிக்கப்படுவதால் இதயம் ஒரே சீரான எண்ணிக்கையிலும் `லப், டப், லப், டப்’ என்ற இயல்பான லயத்துடனும் துடிக்கிறது.
 • இதயத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் காரணமாக இந்த மின்னோட்ட உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டாலோ, அதிக அளவு மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிட்டாலோ, இதன் விநியோகத்தில் தவறு நேர்ந்தாலோ, இதயத் துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
 • பொதுவாக, இதயம் துடிப்பதை ஸ்டெதாஸ்கோப் கொண்டு அறிய முடியும். ஆனால், இதயத்தில் ஓடுகிற மின்னோட்டத்தை ஸ்டெதாஸ்கோப்பால் தெரிந்துகொள்ள முடியாது. இந்த மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைதான் ‘இ.சி.ஜி.’ எனப்படும் இதய மின்னலை வரைவுப் பரிசோதனை.

இ.சி.ஜி. என்பது என்ன?

இதயம் துடிக்கும்போது இதயத்தில் ஏற்படும் மிக நுண்ணிய மின் மாற்றங்களைப் பல ஆயிரம் மடங்கு பெரிதுபடுத்தி, அவற்றை ஒரு வரைகோட்டுப் படமாக (Graph), அதற்கென உள்ள தாளில் பதிவு செய்து தரும் கருவிக்கு இ.சி.ஜி. கருவி (Electro Cardio Graph) என்று பெயர். அந்த வரைகோட்டுப் படத்துக்கு இ.சி.ஜி. (Electro Cardio Gram - ECG), அதாவது இதய மின்னலை வரைவுப் படம் என்று பெயர்.

ஆரோக்கியத்துடன் உள்ள ஒருவரின் இ.சி.ஜி.யில் ஒரு முறையான அலைகள் காணப்படும். இதய நோயுள்ளவரின் இ.சி.ஜி.யில் அவரது நோய்க்கு ஏற்ப அந்த அலைகளில் மாற்றங்கள் தெரியும். அந்த மாற்றங்களைக் கவனித்து நோயை மருத்துவர்கள் கணிப்பார்கள்.

இ.சி.ஜி. கருவி வகைகள்

 • சாதாரண இ.சி.ஜி. கருவி (Normal ECG).
 • கணினியுடன் இணைக்கப்பட்ட இ.சி.ஜி. கருவி (Computerized ECG).
 • தொடர் பதிவு இ.சி.ஜி. கருவி (Continuous Monitoring ECG).
 • எங்கும் எடுத்துச் செல்லும் இ.சி.ஜி. கருவி (Portable ECG).
 • வயரில்லாத இ.சி.ஜி. கருவி (Wireless ECG).
 • நடைபயில் இ.சி.ஜி. கருவி (Ambulatory ECG)
 • சுழல் மிதி இ.சி.ஜி. கருவி (Tread Mill Test)

இ.சி.ஜி. எடுக்கப்படும் முறை

இ.சி.ஜி. கருவி ஒவ்வொன்றிலும் ‘லீடுகள்’ (Leads) என்று சொல்லக்கூடிய மின்குமிழ்கள் இருக்கும். இவற்றைப் பயனாளியின் கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பொருத்தி, இ.சி.ஜி. கருவியுடன் இணைத்து, இதயத்தின் மின் மாற்றங்களைப் பதிவு செய்கிறார்கள். இவ்வாறு எடுக்கப்படும் வரைகோட்டுப் படத்தில் Lead I, II, III, AVR, AVL, AVF, V1, V2, V3, V4, V5, V6 என மொத்தம் 12 தொகுதிகள் பொதுவாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியும் இதயத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஏற்படுகிற மின்கடத்தலின் தன்மையைத் தெரியப்படுத்தும். இதை வைத்து இதயத்தில் உள்ள பிரச்சினையை மட்டுமன்றி, அது எந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதயத்தின் பின் பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனக் கருதினால், V7, V8, V9, V10, V11, V12 என மேலும் ஆறு தொகுதிகளில் இ.சி.ஜி. எடுக்கப்படும்.

இ.சி.ஜி.யில் என்ன தெரியும்?

 • மாரடைப்பைத் தெரிந்துகொள்ள மட்டுமே இ.சி.ஜி. என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அப்படியல்ல!
 • இதயத்துடிப்பின் எண்ணிக்கையை இதைக் கொண்டு அறியலாம். இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதா, கூடியுள்ளதா என அறிய முடியும். இதன் பலனால், இதயத்துடிப்புக் கோளாறுகளை (Arrhythmias) ஏற்படுத்துகிற இதய நோய்களைக் கண்டறிய முடியும்
 • இதயம் சீரான லயத்துடன் துடிக்கிறதா அல்லது முறையில்லாமல் துடிக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
 • இதயத்தில் மின்னோட்டம் சரியாகக் கடத்தப்படுகிறதா என்பதை அறிய முடியும்
 • இதயம் எந்தப் பக்கத்தில் இருக்கிறது, எவ்வளவு கோணத்தில் சாய்ந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
 • மாரடைப்புக்கு முன்பாக ஏற்படுகிற இதயவலியின் பாதிப்பை (Ischaemia அல்லது Angina) எளிதில் தெரிந்துகொள்ளலாம். இதன் பலனாக, மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
 • ஒருவருக்கு மாரடைப்பு (Myocardia>Infarction) ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் மிக எளிய, செலவு குறைந்த பரிசோதனை இதுதான்.
 • இதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதியானால், அவசரச் சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பித்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
 • இதயத் தசைகள் மற்றும் இதய அறைகளின் வீக்கம், தடிமன் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
 • ரத்தத்தில் உள்ள சில தாதுகளின் நிலைமை (உதாரணத்துக்கு, பொட்டாசியம் தாது), சில மருந்துகளின் நச்சுத்தன்மை (உதாரணத்துக்கு, டிஜிட்டாலிஸ் மருந்து) போன்றவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்.

முக்கியக் குறிப்புகள்

 1. நெஞ்சுவலி வந்தவருக்கு முதல் முறையாக எடுக்கப்படும் இ.சி.ஜி. நார்மலாக இருந்து, நெஞ்சுவலி தொடருமானால், ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் இ.சி.ஜி.யை எடுக்க வேண்டும் (Serial ECG). அதுவும் நார்மலாக இருந்தால் மட்டுமே அவருக்கு மாரடைப்புப் பிரச்சினை இல்லை என்று கூற முடியும்.
 2. நீரிழிவு நோயாளிகளுக்கு இதயவலி, மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி தெரியாது. பதிலாக அதிகமாக வியர்க்கும். கிறுகிறுப்பு, மயக்கம் வரும். புளித்த ஏப்பம் வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே இ.சி.ஜி. எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது.
 3. தொப்புளுக்கு மேல் எந்த ஒரு வலி வந்தாலும் முக்கியமாகத் தாடை வலி, முன் கழுத்தில் வலி, நெஞ்சுவலி ஏற்படுமானால், ஒருமுறை இ.சி.ஜி. எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது.

டிரட் மில் பரிசோதனை

 • சிலருடைய இதயத்தில் மாரடைப்புப் பிரச்சினை ஆரம்ப நிலையில் இருக்கும். ஆனால் அந்த நபர் சாதாரணமாக உள்ளபோது அதன் குணங்கள் வெளியில் தெரியாது. சாதாரணமாக எடுக்கப்படும் இ.சி.ஜி.யிலும் அது தெரியாது. இந்த மாதிரி நேரத்தில் அந்த நபரை உடற்பயிற்சிகளைச் செய்ய வைத்து, அதன் மூலமாக இதயத்துக்குப் பளுவை அதிகப்படுத்தி, அப்போது இ.சி.ஜி.யை எடுத்துப் பார்ப்பதுண்டு. இந்தப் பரிசோதனைக்கு ‘டிரட் மில் பரிசோதனை’ என்று பெயர். ’டிரட் மில்’ என்று அழைக்கப்படும் இயந்திரம் இதற்குப் பயன்படுகிறது.
 • கணினி மற்றும் இ.சி.ஜி. கருவி இணைந்த ஓர் இயந்திரம் இது. மின்சாரத்தில் ஓடுகின்ற தளம் ஒன்று இருக்கும். இதில் பயனாளியை முதலில் நிற்கவைத்து, பிறகு அதில் நடக்க வைப்பார்கள். அந்தத் தளத்தின் வேகத்தையும் சாய்வுக் கோணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பார்கள். இதனால் பயனாளியின் நடை வேகமும் அதிகரிக்கும்; இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கும். அப்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்களையும் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஒரு வரைபடமாக வரைந்து கொடுக்கும் அதில் உள்ள இ.சி.ஜி. கருவி.
 • இவ்வகை இ.சி.ஜி. காண்பிக்கிற மின்னலை மாற்றங்களில் இதயத்தில் மறைந்துள்ள சிறு பிரச்சினைகூடத் துல்லியமாகத் தெரிந்துவிடும். இதை அதிநுட்ப இ.சி.ஜி. என்று சொன்னால் மிகையில்லை. மறைந்திருக்கும் மாரடைப்பையும் அவ்வப்போது வந்து செல்கிற இதயவலியையும் இனம் காட்ட உதவும் முக்கியமான பரிசோதனை இது. செலவு கொஞ்சம் அதிகம்.
 • கடுமையான மாரடைப்பு, நிலையில்லாத மாரடைப்பு (Unstable angina), இதயச் செயலிழப்பு, அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்தப் பரிசோதனையைச் செய்யக்கூடாது.

நடைபயில் இ.சி.ஜி. கருவி (Holter monitor ECG)

 • இந்த இ.சி.ஜி. கருவியைப் பயனாளியின் உடலில் 24 48 மணி நேரத்துக்குப் பொருத்தி விடுகிறார்கள். அவர் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, இந்தக் கருவி தொடர்ந்து இ.சி.ஜி. வரைபடத்தைத் தயாரிக்கிறது. அப்போது அவருடைய இதயத்தில் மிக லேசாகவும் குறுகிய நேரத்திலும் வந்து செல்கிற இதயவலி, மாரடைப்பு மற்றும் முறையற்ற இதயத் துடிப்பு போன்றவற்றைக்கூட இதில் தெரிந்துகொள்ள முடியும் என்பது இந்தப் பரிசோதனையின் சிறப்பம்சம். இதன் பலனால் இதயத்துக்கும் மூளைக்கும் திடீரென ஏற்படுகிற மோச மான பாதிப்புகளைத் தடுக்க முடியும்.
 • மேலும் முதியவர்களுக்குக் குறுமயக்கம் (Syncope) ஏற்படுவது வழக்கம். இதற்கான அடிப்படைக் காரணம் இதயத் துடிப்புக் குறைபாடாக இருக்கும். இந்தப் பரிசோதனை மூலம் அதைக் கண்டுபிடித்து, மயக்கத்துக்குத் தீர்வு காண முடியும்.

இ.சி.ஜி. எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

 • சட்டை, பனியன், வாட்ச், மோதிரம் ஆகியவற்றைக் கழற்றிவிட வேண்டும்.
 • நெஞ்சுப் பகுதியில் அதிக முடி இருந்தால் நீக்கிவிட வேண்டும்.
 • நெஞ்சில் அதிக வியர்வை, எண்ணெய் போன்றவை இருந்தால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
 • பயனாளி படபடப்பு இல்லாமல் அசைவில்லாமல், அமைதியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.
 • கைகளைப் பக்கவாட்டில் வைத்து, உள்ளங்கைகள் மேல்நோக்கி இருப்பதுபோல் வைத்துக்கொள்ள வேண்டும்.
 • கால்களை மடக்கக்கூடாது. பின்னக்கூடாது.
 • உலோகப் பெஞ்சுகளைவிட மர பெஞ்சுகளில் பயனாளியைப் படுக்கவைத்து இ.சி.ஜி. எடுப்பது நல்லது.
 • காய்ச்சலுடன் உடல் நடுக்கம் இருந்தால் இப்பரிசோதனையைச் சரியாகச் செய்யமுடியாது.
 • வலிப்பு இருக்கும்போதும் வாந்தி எடுக்கும்போதும் இந்தப் பரிசோதனையைச் செய்யக்கூடாது. வலிப்பு நின்றதும் வாந்தி எடுத்து முடித்ததும் இதைச் செய்யலாம்.

ஆதாரம் : டாக்டர். கு. கணேசன்

3.10144927536
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top