பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கண் பாதுகாப்பு

கண் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பார்வைத்திறன்

முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை ஆற்றலும் 6/6 என்ற அளவில் இருத்தல் வேண்டும் (இத்தகுதி இராணுவம், கப்பற்படை, காவல்துறை) ஆகியோருக்குப் பொருந்தும்.

இரண்டாம் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வைத்திறன் (+4.00 அல்லது -4.00) கண்ணாடி அணிந்தபின் 6/9,6/6 இருத்தல் வேண்டும்.

மூன்றாம் நிலை: கண்ணின் பார்வைத்திறன் +6.00 அல்லது -6.00 கண்ணாடி அணிந்தபின் 6/6 அல்லது 6/9 இருத்தல் வேண்டும் .

கண்ணின் பாகங்கள்

கருவிழி பாப்பா
வெண்படலம் கோராய்ட்
ஒளித்திரை பார்வை நரம்பு
பார்வை நரம்பின்
இரத்தக் குழாய்கள்
விழித்திரை
கண்முன் ரசம் லென்ஸ்
விட்ரியஸ் ஆப்பிக் கயாஸ்மா
(இரு பார்வை நரம்புகளும்
சந்திக்கும் இடம்)
பார்வைத் தடம்
– Optic Tract
பார்வை பாதையின்
விரிசல்கள்
– Optic Radiations
மூளையின் பின்பகுதியில் உள்ள பார்வை பதியும் இடம்
(Visual cortex in the occipital lobe)

இரு கண்களும் அசைவதற்கு ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைநார்கள் உள்ளன. ஒளிக்கதிர்களானது கருவிழி, கண்ணின் முன்ரசம், பாப்பா, லென்ஸ் விட்ரியஸ் வழியாகச் சென்று ஒளித்திரையில் உள்ள மேகுலா (Macula) என்ற இடத்தில் உள்ள நுட்பமான போவியா Fovea என்ற புள்ளியில் குவிகிறது. இந்தப் பகுதிதான் பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது

கோன்ஸ் & ராட்ஸ்

நமது பார்வைக்கு அவசியமான கோன்ஸ், ராட்ஸ், மேகுலா என்ற இடத்தில்தான் அதிகம் உள்ளது. கோன்ஸ் பல் நேரப் பார்வைக்கும், நிற்ப்பார்வைக்கும் இரவு நேரங்களிலும் பார்க்க உதவுகிறது. ரெட்டினா என்பதற்கு வலை என்று பெயர். இதை ஒரு டிஷ் ஆன்டெனாவுடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு விழித்திரையிலும் 120 மில்லியன் செல்கள் உள்ளன. இவற்றினால் ஒளிக்கதிர்கள் கவரப்பட்டு இரசாயன மாற்றத்தால் மின் அலைகளாக மாற்றப்படுகிறது. இங்குதான் தலைகீழான பிம்பம் மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பபடுகிறது. பார்வை நரம்பில் கோன்களும் நாட்களும் இல்லை. இதற்கு Blind Spot என்று பெயர். ஒரு கண்ணின் பார்வையின் தோற்றத்தில் ஒரு இடத்தில் பார்வை இருக்காது. மனிதனின் விழித்திரையில் இந்த ராட்சும் கோன் அணுக்களும் 1:18 என்ற விகிதத்தில் அமைந்துள்ள நல்ல வெளிச்சத்தில் ரொடாக்சின் அதிக வேகமாக உடைந்து பிரிக்கப்படுகிறது. அதே சமயம் மறு உற்பத்தியின் வேகம் குறைவு மற்றும் வெளிச்சம் குறையும் பொழுது இந்த ரோடாக்சின் மறுபடியும் உண்டாவதற்கு அதிக நேரம் ஆகின்றது. போதுமான வெளிச்சம் இல்லாவிட்டால் இந்த கோன்ஸ் அணுக்கள் வேலை செய்யாமல் நின்று விடுகிறது. ஆகையால் ஒரு குழந்தை வளர்ச்சியில் கண் பார்வைக்கு வைட்டமின் ‘A’ ஊட்டச் சத்தும் புரதமும் மிகவும் அவசியமானதாகும்.

பார்வைக்களம்

என்பதின் தமிழில் போர்க்களம் என பொருள்படும். இதை வைத்து Field Of Vision என்பதற்கு பார்வைக்களம் என்று அழைக்கலாம். இதுவரை கூறியவற்றில் பார்வைத்திறனையும் அசைவுகள் பற்றி அறிந்து கொண்டாலும் ஒரு மனிதன் ஒவ்வொரு கண்ணிலும் ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது அதைச் சுற்றியுள்ள தோற்றத்தின் பரப்பு எவ்வளவு என்பதுதான் பார்வைக்களம் (Field of Vision) என்று பெயர்.

கண்ணில் நீர் அழுத்தம்

சிலருக்கு சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

 • ஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)
 • இஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை
 • எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)

இராணுவம், கடற்படை, வான்படை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.

கண்ணாடி பராமரிப்பின் அவசியம்

கிட்டப்பார்வை உடையவர்களும் தூரப் பார்வை உடையவர்களும் கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து அவரது ஆலோசனைப்படி கண்ணாடி அணிதல் வேண்டும். கண்ணாடியைப் பயன்படுத்து முன் நாள்தோறும் சுத்தமான மென்மையான துணியாலோ அல்லது ஈரத்துணியாலோ நன்கு சுத்தம் செய்து அணியவேண்டும். கண்ணாடியில் கீறல் விழுந்துவிட்டால் உடன் கண்மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து மாற்றுக்கண்ணாடி அணிவதே நன்று. நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் அதற்குரிய வேலைக்குத்தான் செல்ல முடியும்.

கண்ணாடி வகைகள்

 • கிட்டப்பார்வை
 • தூரப்பார்வை

ஒரு கோணப்பார்வை ஆக இந்த குறைபாடு உள்ள அனைவரும் கண்ணாடி அணிவது அவசியம். வெள்ளெழுத்து குறைபாடுள்ளவர்களும் 2 ஆண்டுகளுக்கொருமுறை கண்பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி கண்ணாடி அணிய வேண்டும். இவர்களுக்கு Bi-Focal lens மேலே உள்ள கண்ணாடி தூரப் பார்வைக்கும், கீழே உள்ள கண்ணாடி படிப்பதற்கும் பயன்படும். அனைவருக்குமே இரு பாப்பாவிற்கும் உள்ள தூரத்தின் அளவு I.P.D. தேவை (Inter pupilary Distance)
Bifocal Lens: இதில் நமது வசதிக்கேற்ப பல வகைகள் உள்ளது.

 • Kryptok (கிரிப்டோக்)
 • D/bifocal(டி/பைபோக்கல்)
 • Executive(எக்சிகியூட்டிவ்)
 • Tri-Focal(டிரை போக்கல்)

அணியும் கண்ணாடியின் தடிமனைக் குறைக்க M.M.T. High Intex ம் எடையின் அளவைக் குறைக்க பிளாஷ்டிக் Resilens ம், வெளிச்சத்தினால் கண் கூசாமல் இருக்க, Anti- glare & Resistant Lens, CR 39, Photo sun Lens, Photo chrome, உடையாமல் இருக்க Toughened கண்ணாடிகள் நடைமுறையில் உள்ளது

கண்களின் முக்கிய பாகங்கள் / அமைப்பு

நாம் நமது கண்களை ஒரு காமிராவோடு ஒப்பிடலாம் . காமிரா எப்படி ஒரு பொருளின் நிழலைத் தன்னிடம் பதியச் செய்து உருவமாக கொடுக்கிறதோ அவ்வாறே கண்களும் அதே வேலையைச் செய்கின்றன.

ஒளிக்கதிர்கள் கருவிழி மூலம் கண்ணுக்குள் சென்று கருமணியில் பட்டு வளைந்து ஒளித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதிவாகிறது. அங்கு தலைகீழாக பதிவாகிறது. அங்கு ஏற்படும் பார்வை நரம்புகளின் உதவியால் மூளையின் பின்பகுதியை அடைகிறது. அங்கு உருவம் நேராகப் படுகிறது. இதைத்தான் நாம் பார்வை என்கிறோம்.

கண்ணில் கீழ்கண்ட உறுப்புகள் முக்கிய பணியாற்றுகிறது.

 • பார்வை நரம்பு
 • சிலியா தசை நார்
 • ஒளிகதிர்கள் மேகுலா இடத்தில் குவிதல்
 • கண் ஆடி
 • கருவிழி
 • விழித்திரை
பரம்பரை நோய்கள் – உறவு முறை திருமணம்

நெருங்கிய உறவு முறை திருமணங்களில் சில நோய்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்பட காரணமாகிறது. உதராணமாக கிட்டப்பார்வை , மாலைக்கண் நோய் கிரந்தி ஆகிய நோய்கள் குழந்தைகட்கு பெற்றோர்கள் மூலம் வருகின்றன எனவே நமது குழந்தைகளுக்கு வரும் சில பரம்பரை நோய்களை தடுத்திட உறவு முறை திருமணத்தை தவிர்த்திடுதல் நல்லது.

சிலருக்கு அதிகமான வேலைப்பளு காரணமாக மூளைப்பளு ஏற்படுகிறது. மூளை அளவுக்கு அதிகமாக செயல்படும் பொழுது அதனால் ஏற்படும் சோர்வு கண்ணுக்கும் அதன் தசைகளுக்கும் ஏற்படுகிறது. இதனால் தசைகளும் வலுவிழக்கினறன. கவலை, அதிக அச்சம், அதிக துயரம் மனிதனைத் தாக்கும் பொழுது அதனால் ஏற்படும் அதிர்ச்சிகள் கூட பார்வைக் குறைவை ஏற்படுத்துகிறது. பார்வைக் குறைவுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

மூளைக்கு ஏற்படும் அதிகப்பளு மட்டும் கண்ணில் பார்வைக் குறைவை ஏற்படுத்தவில்லை. மூளைக்கும் க்ண்ணுக்கும் மட்டும் தொடர்பு இல்லை, கண்ணுடன் மற்ற உறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது. மூளையைப் போலவே மற்ற உறுப்புகளின் பாதிப்பும் கண்பார்வையை பாதிக்கும் வாய்ப்பு உளாது. போதிய சத்து குறையாடும் பார்வைக் குறைவுக்கு வாய்ப்பாக அமைகிறது.

நமது இரு கண்களும் ஆர்பிட் என்ற ஏழு சிறு எலும்புகளால் குழிபோன்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கண்ணும் மேல் கீழ் என்ற இரு இழைகளாலும், இமைகளின் மீது அமைந்துள்ள நூற்றுகணக்கான மெல்லிய ரோமங்களால் கண்ணின் வெளிப்புறம் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

கண்ணின் கண்ணாடி போன்ற கருவிழி வழியாக ஒளிக்கதிர்கள் ஊடுருவி கண்ணின் ஒளித்திரைக்கு செல்வதால் அதற்கு எப்பொழுதும் ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே இயற்கையாகவே நீரையும் மற்ற சுரப்பிகளையும் சுரக்கச் செய்கிறது. இதுதான் கண்ணீர் ஆகும். கண்ணின் நீர்சுரப்பிகள் கண்ணின் மேற்பகுதியில் வெளிப்பாகத்தில் அமைந்திருப்பதால் கண்ணீரை வெளியில் கொண்டுவர வசதியாக இருப்பதே கண்ணின் இமைகள்தான், 1 நிமிடத்திற்கு 18 முறை மூடித் திறப்பதால் இந்த செயல் எளிதாக நடைபெறுகிறது.

ஒரு கட்டிடத்தில் நுழைய வாயிற்படிபோல் கண்ணின் வெளிப்புற பகுதியாகிய கருவிழி என்ற காற்னியா மூலமாக ஒளிக்கதிர்கள் உட்பக்கம் வளைந்து கேமராவில் உள்ள ஒளிநாடாவில் பதிவதுபோல் கண்ணின் ஒளித்திரையில் (ரெட்டினா) ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிகிறது. இரண்டு கண்களின் ஒளிதிரையிலும் இந்த மேக்குலா என்ற ஒரு இடத்தில் பார்க்கும் பொருளின் பிம்பம் தலைகீழாக விழுகிறது. இந்த மேக்குலாவிலிருந்து ஒளிக்கதிர்கள் மின் ஆற்றலாக மாறி கண் நரம்பு வழியாக ஆப்டிக்க்யாஸ்மா என்ற இடத்தில் ஒரு பகுதி மட்டும் இடம் மாறிச் சென்று மற்றொறு பகுதி அதே கோணத்தில் சென்று ஆப்ப்டிக்பாத் வழியாக மூளையின் பின் பகுதியாகிய ஆக்சிபிடல் லோப் என்ற பகுதியின் உட்புறத்தில் நேராக விழுகின்றது. இது ஒரு கேமராவில் வெளிச்ச்த்திற்கு தகுந்த மாதிரி செயல்பட்டு காட்சி பதிவாகிறதோ அது போலவே கண்ணில் உள்ள பாப்பா வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் சுருங்கியோ (அ) விரிவடைந்தோ ஒரு பொருளின் பிம்பத்தை பதியச் செய்கிறது.

மாறுகண்

நமது கண்களில் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைநார்கள் உள்ளன. இவைகளின் உதவியால் இரு கண்களும் ஒரே சீராக ஒரே கோணத்தில் அசைகின்றன. நமது இரண்டு கண்களும் கீழ் நோக்கியோ, வலது புறமாகவோ, இடது புறமாகவோ, ஒன்று போல் அசைவதால் இரு கண்களின் பார்வையும் ஒன்றுபோல் அமைந்து, கண்ணால் பார்க்கப்படும் பொருளின் நீளம், அகலம் , உயரம் ஆகியவை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இரு கண்களின்) பார்வையும் கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ ஓரே சீராக அமைந்திடல் வேண்டும். அப்போழுதுதான் இரு கண்களிலும் விழக்கூடிய பொருளின் பிம்பம் ஓரே சீராக பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மூளையின் பின்பகுதியில் உள்ள கார்டெக்ஸ் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட முடியும் இந்தச் செயல் சீராக அமையவிட்டால் மாறுகண் ஏற்படுகிறது. மாறுகண் உள்ளவர்கள் பார்வை எங்கு விழுகிறது என்பதை சரியாக கூற முடியாது, பார்வை கண்ணுக்கு கண் மாறி இருப்பதால் இதனை மாறுகண் என்று கூறுகிறோம்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை

உடலில் ஒரு நோய் ஏற்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், புரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும்பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும்பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும் அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும். சரியான அளவில் சத்தான உணவு அமையாவிடில் கண் சம்மந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு இரத்த ஓட்டத்தின் தடையை ஏற்படுத்தி இரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும்தான் பாதிக்கும், வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு, உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும், உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இரத்த நாளங்களும் , தசைகளும் பழுதடைந்தால் இரத்த ஓட்டம் சரியாக நடைபெறாது, மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகிக் கடினத் தன்மையை பாதித்துவிடும். கண்ணின் பார்வைத் தன்மையைப் பாதித்துவிடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறைவை ஏற்படுத்திவிடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும். பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படும்.

மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து பொதுவாக மக்களிடத்தில் உள்ளது. சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும் இது அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது, எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்தி கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வைக் குறைவு ஏற்பட்டது. என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டோம், உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுக்கோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவு காரணமே இன்று 40 வயதைக் கடந்தவர்களுகளுக்கு பெரும்பாலும் ஏற்பட்டுள்ள தூரப்பார்வை குறைபாடு ஆகும். இவர்கள் தங்கள் உணவு முறையை சரிசெய்து கொண்டு எளிமையன சில பயிற்சிகளை மேற்கொண்டால் பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.

கண்புரை

நம்மில் சிலருக்கு 50 to 60 வயதுக்குள் கண் பார்வையானது கண்ணை மூடிக்கொண்டு உலகைப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணம் கண்ணில் புரை ஏற்படுவதாகும். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். இத்தன்மை பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு வயதானால் கண்புரை ஏற்படும் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் 75 வயது வரை (இறக்கும்வரை கூட) கண்புரை இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 50 வயதிற்குள்ளாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொணடு தடிமனான கண்ணாடியை அணிந்து கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

நமது கண்களில் கருவிழியின் மீது விழும் பிம்பத்தின் ஒளிக்கதிர்கள் குவிந்து கண்ணில் அமைந்துள்ள கண் ஆடி(லென்ஸ்) வழியாகச் செல்லும் போது மேலும் குவிந்து உள் பகுதி சென்று விழித்திரையில் விழுகிறது. ஐரிஸ் என்ற கிருஷ்ணபடலம் சுருங்கி விரியும் தன்மை உடையது. இதனால் கண்ணின்நடுவில் உள்ள பாப்பா என்ற பகுதி சூழலுக்கேற்ப அதிக வெளிச்சத்திற்கேற்ப சுருங்கியும் குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகவும் தோன்றும். இது லென்ஸ் என்ற அமைப்பால் தொங்கவிடப்பட்டுள்ளது.வயது ஏற ஏற இந்த லென்ஸ் நமது பார்வைக்கு தகுந்தவாறு சுருங்கியும் விரிந்தும் காணப்படும். மேலும் மங்கலான தன்மை (தெளிவற்ற) ஏற்படுகிறது. இந்த நிலையே கண்ணில் புரை விழுதல் என்று அழைக்கப்படுகிறது.

கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதை கண்ணில் பூ விழுந்துள்ளது என கூறுவர்.

கண்புரை ஏற்படக் காரணங்கள்

சிலருக்கு 50 வயதுக்கு மேல் ஏற்படலாம் சில சமயங்களில் சிறுவர்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் கூட கண்களில் கண்புரை வருகிறது. இது கர்பிணிப்பெண்களுக்கு 3,4 மாதங்களில் விஷக்காய்ச்சலால் ஏற்படுகிறது. கர்ப்பம் தரித்த 7-வது மாதத்தில் சிறுநீரில் GALACTOSE இருந்தாலும் வீரியமுள்ள மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும் ஏற்படலாம். நீரழிவு நோய், பரம்பரை நோய் கிட்டப்பர்வை, மாலைக்கண், காலரா போன்ற வியாதியால் உடல் நீர் குறையும் பொழுதும் கண் புரை உண்டாகலாம். சூரிய ஒளிக்கதிர்கள் நேரிடையாக கண்களை தாக்குவதாலும், அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும்(வெல்டிங் போன்ற வேலைகளைச் செய்தவர்கள்) கண்புரை வர வாய்ப்புள்ளது. கண்கள் அடிபடும் பொழுதும் உடனடியாக கண்புரை ஏற்படவாய்ப்புள்ளது. கண்புரை இருகண்களிலும் ஏற்படலம். ஒரு கண்ணில் புரை ஏற்பட்டால் மறு கண்ணும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. கண் புரை ஒரு தொற்று நோயல்ல. கண்ணில் கூர்மையான பொருள்களால் காயம் ஏற்படல் (உ.ம்) கில்லி விளையாட்டு, வில் அம்பு எய்தல், பந்து வீச்சு ஆகிய சூழ்நிலையில் கண்ணில் அடிப்பட்டால் 1 நாளுக்குள் (24 மணி நேரம்) கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

கண்புரைக்கான அறிகுறிகள்

கண் புரை ஏற்படும் காலத்தில் கண்கள் பொருளைப் பார்க்கும்பொழுது மங்கலாகவோ (அ) இரண்டு மூன்று உருவங்களாகவோ தோன்றும். கண்ணாடி அணிந்து கொண்டால் நன்றாகத் தெரியும். சிறிது நாளில் கண்ணாடியும் பயன்தராது. இது போன்ற சூழலில் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது. கண்புரை வந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். கண்ணின் நீர் அழுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தாகும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பார்வை நரம்பு செயலிழந்து பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். ஆதலால் கண் மருத்துவரிடம் காட்டி கண் புரையோ (அ) கண் நீர் அழுத்தமா என்பதனை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

கண்புரைக்கு மருத்துவம்

கண்ணில் புரை ஏற்பட்டால அதனை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. ஆரம்ப காலத்தில் சில மருந்துகள் பயன்பட்டாலும் சொட்டு மருந்துகள்பயன்படுத்தினாலும் பயனளிப்பதில்லை. சத்து நிரம்பிய உணவும், பயிற்சிகளும் புரையை குணமாக்காது. தடிமனான லென்ஸ் பொருந்திய கண்ணாடிகள் பயன்படுத்தினாலும் ஆரம்பத்தில் பார்வை கிடைக்கும் சிறிது நாளில் படித்தல், எழுதுதல், தெளிவான பார்வை கிடைக்காது. கண் புரை முற்றி கண் சிவத்தல், கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி கண்வலி ஏற்பட்டு வாந்தியும் ஏற்படலாம். இவைகள் ஏற்பட்டால் உடன் கண் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்து நவீன அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழுப்பார்வயும் பெறலாம். படிப்பதற்கு எழுதுவதற்கு மட்டும் கண்ணாடி அணிந்து பலனடையலாம். கண்புரையினை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் கண்பார்வை பாதிக்கப்பட்டவரின் உடலை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இரத்தம், சிறுநீர், பற்கள், சைன்ஸ், இரத்த அழுத்தம் ஆகியவை சரிபாரத்திட வேண்டும் சர்ககரை அதிகமிருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகமிருந்தாலும் இவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பற்கள் சொத்தை இருந்தால் சொத்தைப் பற்களை நீக்கிவிட வேண்டும். பல் ஈறுகளில் புண் இருந்தால் குணப்படுத்த வேண்டும். இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கள் இருந்தால் அதற்கும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இதயம் நனறாக வேலை செய்கிறதா என்பதனை EGC மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் 5 நாட்கள் கண்களுக்கு சொட்டு மருந்து இடப்பட்டு கிருமிகள் கொல்லப்பட வேண்டும். முதல் நாளில் இருந்தே உணவை மருத்துவரின் ஆலோசனை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பரவலாக மருத்துவ அறுவை சிகிச்சை முறையில் கருவிழியின் மீது சிறு கோடுஇட்டு கண்ணுக்குள் இருக்கும் கண்புரை அகற்றப்படும். கண் மறுத்துப் போவதற்கும், மேலும் கீலும் அசையாமல் இருப்பதற்கும் ஊசி மூலம் மருந்தை செலுத்தி கண்புரை இரண்டு முறைகளில் அகற்றப்படுகிறது.

முறை 1: லென்சையும் அதனைச் சுற்றியுள்ள ஜவ்வுடன் அகற்றலாம். இதை இடுக்கி மூலமாகவும்,ஐஸ் கட்டிகளின் கூரிய முனையாலும்அகற்றலாம இந்த முறைக்கு ‘இன்ட்ரா கேப்கலர’ என்று பெயர்.

முறை 2: லென்சை மாத்திரம் சவ்வு நீங்கலாகி அகற்றுவதற்கு ‘எக்ஸ்ட்ரா கேப்கலர்’ என்று பெயர். இம்முறையில் கண்புரை அகற்றிய பிறகு பிளாஸ்டிக் லென்ஸ் பொருத்தப்ப்டும். லென்ஸ் பொருத்திய பிறகு கண் ந்ல்ல பார்வையை பெற்றுவிடும்.

இந்த இரண்டு முறையை தவிர மற்றோரு முறையும் தற்பொழுது மருத்துவதுறையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘பேக்கோ மெஸ்ஸிபிகேஷன்’ இம்முறையில் அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்ணின் கருவிழியில் ஓரு சிறிய துவாரத்தின் வழியாக ஊசியை செலுத்தி கண்புரையை சேதப்படுத்தி அதை வெளியில் எடுத்து விடுவார்கள் , பின் ‘பேர்டபிள்’ IOI-யை ஊசி மூலமாக பொருத்துவார்கள். இதற்கு ‘ NO INJECTION, NO STITCH, NO PAD SURGERY’ இம்முறை மிகவும் பழமையானது.

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் கவன்த்தில் கொள்ள வேண்டியவை

 • அறுவை சிகிச்சை செய்த கண்ணுக்கு ஒரு பாதுகாப்புத் திரை அணிவிக்கப்படும், இது கண்ணிற்கு எவ்வித பாதிப்பும்(அடிபடுதல்) போன்றவை ஏற்படாதிருக்க அணிவிக்கப்படும் .
 • மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் திரவ உணவே எடுத்துக்கொள்ள வேண்டும்
 • மருத்துவர் ஆலோசனைப்படிமுறையாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், தூய்மையான பஞ்சினால் கண்ணை லேசாக துடைத்து தினந்தோறும் ஆறு முறை மருந்திடுதல் வேண்டும்.
 • குனிந்து நிமிருதல், எளிதில் ஜீரனமாகாத உணவை உண்ணுதல், புகையுள்ள இடங்களில் இருப்பது போன்றவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
 • எளிதில் உணர்ச்சி வயப்படுதல், கண்ணீர் வரவழைத்தல் போன்றவைகளை தவிர்ததல் வேண்டும்.
 • வாரம் ஒரு முறை கண்களை கண்மருத்துவரிடம் காண்பித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 வாரங்கள் கழித்து கண் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் பார்வைத்திறன் கொண்ட கண்ணாடி அணிவதன் மூலம் பூர்ண பார்வையையும் பெற முடியும். படிப்பதற்கும் எழுதுவதற்கும் வேண்டுமானால் தனி கண்ணாடி பயன்படுத்திகொள்ளலாம்.
 • கண் வலி ஏற்பட்டாலும், கண்ணில் நீர் வடிந்தாலும், கண் சிவப்பாக இருந்தாலும் உடனடியாக கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து தேவையான சிகிச்சை எடுத்துககொள்ளவேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து சில ஆண்டுகள் கழித்து கூட கண் வலி ஏற்பட்டலும் , கண் சிவத்தல் தோற்றத்தில் மாற்றம் ஆகியவை ஏற்பட்டாலும் காலதாமதமின்றி கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து கொள்வதன் மூலம் கண் பிரச்சனையை சரிசெய்து கொள்ள முடியும், ஏனெனில் கண்களை கண்ணாக பார்ப்பது மிகவும் அவசியம்.
கண்ணின் நீர் அழுத்தம் (கிளக்கோமா)

பெரும்பாலும் வயதான காலத்தில் சில நோய்களின் தாக்கத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் இதை உயர் இரத்த அழுத்தம்(ஹைபர் டென்ஷன் ) என்கிறோம். இதனால் உடலும் கண்களும் பாதிக்கப்படுகிறது. அதேபோன்று கண்ணில் சுரக்கும் கண்ணின் முன் ரசமான்து அது செல்லும் பாதையில் மாற்ற்ம் ஏற்பட்டலோ (அ) அடைப்பு ஏற்பட்டாலோ கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் பார்வை நரம்பில் உள்ள நரம்பு நாளங்களும் , நரம்பு அணுக்களும் அழிக்கப்படுவதால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் பார்வை நரம்பின் வழியாகத்தான் கண்ணின் பார்வை பற்றிய தகவல் மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த பார்வை நரம்பு நன்றாக இருந்தால்தான் முழுமையான பார்வை கிடைக்கும்.

கண்ணில் நீர் அழுத்தம், அதிகளவில் பரம்பரையாகவும் நாற்பது வயதிற்கு மேலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் கண்ணீர் அழுத்த நோய் இருப்பது தெரியாது. காரணம் கண்ணில் வலியோ, கண் சிவத்தலோ இருக்காது. வயதானவர்கள் இதனால் ஏற்படும் பார்வை இழப்பை கண்புரை என்றே கருதுகின்றனர்,. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்வை குறைவு ஏற்படும்பொழுது கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கண்ணின் நீர் அழுத்தம் சரியாக இருக்கிறதா, (அ) அதிகரித்துள்ளதா என்பதனை தெரிந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி கண்களுக்கு சொட்டு மருந்தும் , மாத்திரைகளும் எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பை தடுக்கமுடியும், இச்சிகிச்சை மூலம் கண் முன் ரசம் உற்பத்தியாவதை குறைக்கலாம் (அ) வெளியேறும் வசதியை கூட்டலாம்.

பொதுவாக படிப்பதற்கும் பார்பதற்கும் அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டிய அவசியம்.* கண் வலி, தலை வலி மற்றும் கண்களைச் சுற்றி பூச்சி பறப்பது போலத் தோன்றும்.

 • விளக்கு ஒளியைச் சுற்றி பல வண்ணங்கள் காணப்படுவதால் பக்கப்பார்வை குறைதல்.* திடீரென்று பார்வை மங்குதல்
 • குமட்டல் வாந்தி. எடுத்தல்.* கண்ணில் நீர் வழிதல்.* வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசுதல்.* கண்ணின் அளவில் மாற்றம் ஏற்படுதல்.

ஆகிய மேலே கூறிய பிரச்சனைகள் எதுவாகினும் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பை சீர் செய்து கொள்ள முடியும். அது குழந்தைகள், பெரியவர்கள் யாருக்கு இப்பிரச்சனை ஏற்பட்டாலும் நாமே நமக்கு தெரிந்த வைத்தியத்தையோ (அ) கண் ப்ற்றிய முறையான மருத்துவ அனுபவம் இல்லாத மருத்துவரிடமோ எடுத்துக்கொள்ளும் சிகிச்சை கண்ணில் நீர் அழுத்தத்தைச் சீர் செய்யாது. இவை தவிர,* கண்ணில் எற்படும் புற்று நோய்* கண்ணில் அடிபடுதல், காயங்கள் ஏற்படுதல்.* உடம்பில் ஏற்படும் பொதுவான வியாதிகளான இரத்தக் கொதிப்பு, நீரழிவு நோய், கிரந்தி நோய், காச நோய் போன்றவைகளாலும் கண்பார்வை குறைபாடு ம்ற்றும் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ள்து. எனவே மேற்கண்ட பிரச்சனைகள் கண்ணில் ஏற்படும்போழுது உடனடியாக கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவதன் மூலம் மனிதன் தனது அரிய கண்களின் பார்வைஇழப்பை தடுத்து இப்பூவுலகை இனிதாக பார்க்க முடியும்.

வைட்டமின் A-வும் கண்களின் பாதுகாப்பும்

குழந்தைப்பருவம் முதல் கண்களை பாதுகாப்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டியது. மிகவும் அவசியம். கண்களின் நலனுக்கு அடிப்படையாக அமைவது வைட்டமின் ‘A’ சத்து ஆகும். எனவே குழந்தைப்பருவதிலேயே மற்ற நோய்களுக்கு வைத்தியம் செய்வதைப் போலவே உடலில் வைட்டமின் ‘A’ சத்து சேரும் வகையிலும் வைத்தியம் செய்ய வேண்டும்.

 • குழந்தைகளுக்கு உணவு தரும்பொழுது ஆரஞ்சு, தக்காளி போன்ற பழங்களின் சாறையும் கொடுக்கலாம். இப்பழச்சாற்றில் வைட்டமின் ‘A’ சத்து நிறைய உள்ளது
 • காரட் கிழங்கை சாறாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம், வளர்ந்த குழந்தைகளுக்கு காரட் கிழங்கை சுத்தம் செய்து கொடுக்கலாம்.
 • குழந்தைகளின் வயதைப்பொருத்து வைட்டமின் ‘A’ சொட்டு மருந்து, வைட்டமின் ‘A’ மாத்திரை, மற்றும் குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் ‘A’ ஊசி மருந்து கொடுக்கலாம்
 • குழந்தைககளுக்கு தாய்பாலூட்டும் தாய்மார்கள் மீன் எண்ணெய், மீன் உணவு, ஆகியவைகளை உணவுடன் சேர்த்துக்கொள்ளும் பொழுது தாய்பாலின் வழியாக வைட்டமின் ‘A’ குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பாக அமையும். ஒவ்வொரு பெற்றொரும் தங்கள் குழந்தைகளை முறையாக கண் மருத்துவரிடம் சிசு கண் பரிசோதனை, கண் அசைவு இவைகளை பரிசோதித்து எளிமையான முறையில் பார்வைக் குறைவு இருப்பின் சரிசெய்து கொள்ளலாம்.
 • குழந்தைகளுக்கு, தாய்பால் ஊட்டும் தய்மார்களுக்கும் உணவுடன் கீரை வகைகள் , சிகப்பு முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, சாத்துக்குடி, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி பழம், போன்றவைகளை நிறைய சேர்துக்கொள்ளுவது சிறப்பாகும்.
 • குறிப்பாக கீரைவகைகளில் குப்பைமேனிக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லிக்கீரை ஆகியவைகளை சூப்பாக தயாரித்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொடுக்கலாம். தொடர்ந்து வைட்டமின் ‘A’ நிறைந்த உணவுகளை பழங்களை கொடுக்கும்பொழுது வைட்டமின் ‘A’ ச்த்து குறைபாடு களைந்து நல்ல ஆரோக்கியமான பார்வை வாழ்நாள் முழுவதும் பெற முடியும்.
கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றொர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இருவகைப்படும்.

 1. சிறுவயதிலேயே ஏற்படும்
 2. வயாதனவர்களுக்கு வருவது

சிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

அதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகியோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அபாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்

காலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிகேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளவது நல்லது. இரத்தத்த்தில் சர்க்கரையின் அளவை உடரற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.

தலைவலி

இன்று சாதாரணமாக ஒரு பிரச்சனை என்றால் கூட பெரிய தலைவலியாய் இருக்கின்றது என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம், ஆக தலைவலி என்றாலே பிரச்சனை என்பது தெளிவாகிறது. சாதாரண மக்கள் கூட அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு தலைவலி கண்ணோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அளவிற்கு பொதுமக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது என்றால் , முற்றிலும் உண்மையே , உடல் உறுப்புக்களை இயங்க செய்யும் மூளையின் இருப்பிடம் தலை. அதிலும் கண், காது மூக்கு, வாய் , பல் ஆகியன மூளையின் அருகில் இருப்பதாலும் இவற்றுள் கண் நுட்பமான உறுப்பாக இருப்பதால் அதில் நோய் ஏற்பட்டாலும் கண் நரம்புகளுக்கு கண் தசைகளுக்கும் சோர்வு ஏற்பட்டாலும் தலைவலி ஏற்படும். சிலர் எழுதும்பொழுதும், படிக்கும்பொழுதும் தலைவலிப்பதாகக் கூறுவர், இதற்குண்டான காரணம் அறியாமலேயே மருந்து கடைகளில் ‘வலி நிவாரணி’ மாத்திரைகளை சாப்பிட்டு பின்னாளில் பல்வேறு எதிர் விளைவுகளுக்கு ஆட்பட்டு துயரப்படுவோரும் உண்டு. கண் மருத்துவரிடம் சென்றால் கண்களை முழுமையாக பரிசோதித்து உகந்த கண்ணாடி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவார், உரிய கண்ணாடி அணிய ஆரம்பத்தில் சில நாட்களிலேயே ‘தலைவலி’க்கு விடை கிடைத்து விடும். அடிக்கடி தலைவலி வருவோரின் பர்ர்வை நரம்பு, மூளை , நோயினால் தாக்கப்பட்டிருககிறதா என்பதைக் கண்ணின் உட்பகுதியில் பரிசோதிக்கும் கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம். கண்ணைத் தொடர்பு படுத்தும் மூளை நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அவர்களை கண் மருத்துவர்கள் நரம்பு மருத்துவத்திற்கு அனுப்புவார்கள் இங்கு எடுக்கப்படும் X-RAY, MRI SCAN, CT SCAN ,ஆகிய பரிசோதனைகள் மூலம் வியாதியை கண்டறிய்ஸ் முடியும் , இதனை அறுவை மருத்துவம் மூலம் மூளையிலுள்ள கட்டி, இரத்த கறை போன்றவற்றை அகற்றிவிடுவார்கள். அதனால் கண் பார்வையைஇழக்காமல் கண்களைப் பாதுகாக்கலாம், தலைவலியும் நீங்கிவிடும். ஒற்றைத்தலைவலி என்பது சிலருக்கு அடிக்கடி வரும் , அவ்வாறு வரும்போதெல்லாம் அவர்கள் மரணவேதனையுடன் அவஸ்தைப்படுவதைபார்க்கலாம். இதற்கு காரணம் கண் நரம்பில் ஏற்படும் கோளாறே காரணம் அளவுக்கு மீறி வேலை (பாரப்பது, எழுதுவது, படிப்பது) இவைகளை இதுபோன்ற தலைவலி வருபவர்கள் கண்மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும் அச்சம் , அருவருப்பு ஆகிய காட்சிகளைப் பார்ப்பதும் ஒயாத அலைச்சல், மனக்கவலை (TENSION), ஆகியவைகளிலும் சிலருக்கு தலைவலி, கண் சிவப்பாக மாறுதல், பார்வை மங்கலாதல், ஆகியவைகள் ஏற்படலாம் , இது போன்ற சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு உணவு மாற்றம் , ஒவ்வாமை போன்றவைகளாலும் தலைவலி ஏற்படும், சிலருக்கு மலச்சிக்கல் காரணமாகவும் தலைவலி ஏற்படும், பல்வலி , இரத்த கொதிப்பு உள்ளவர்கட்கும் சில வேளைகளில் தலைவலி ஏற்படும். தலைவலி என்பது எந்தச் சூழலில் ஏற்பட்டாலும் அதனால் கண்பார்வை நரம்புகள் பாதிக்ககூடும். எனவே அடிக்கடிதலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனையும, கண்ணாடி அணிய வேண்டியதிருப்பின் கண்ணாடியும் அணிவதன் மூலம் தலைவலியில் இருந்து பூர்ண விடுதலைபெறுவதுடன் கண்பார்வை பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மனமும் கண்களும்

கண் என்பது மனித உடலில் தனி உறுப்பாக இருநதாலும் உடலின் எல்லா உறுப்புகளுடனும் அதற்குத் தொடர்பு உண்டு. அதே போன்று மனதிறகும் கண்களுக்கும் தொடர்பு உண்டு. ஒருவரது கண்களை வைத்தே ஒருவரது செயல்பாடுகள் , குணாதிசயங்களை அடையாளம் காண் முடியும் . (உ.ம்) நல்ல சிந்தனையும் , ஒழுக்கமும் , மற்றவர்களுக்கு உதவும் மன்ப்பான்மையும் கொண்டவர்கள் கண்களில் ஓர் அபரீதமான அமைதியும், அன்பும், குளிர்ச்சியும், கருணையும், வெளிப்படுவதை நன்கு அறிய முடியும் இவர்களுக்கு கண்களில் பெரும்பாலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

சிலர் தவறான நடவடிக்கைகள், பெண்களிடம் காமகளியாட்டத்தில் விருப்பமுள்ளவர்களாகவும் , கொலை வெறி கொண்டவர்களாகவும் பழி பாவத்திற்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பர். இவர்களது கண்களைப் பார்க்கும்பொழுதே ஒருவித அச்சம் நமக்கு ஏறபடுவதை நன்கு அறிய முடியும். கண்கள் குழி விழுந்தும் விகாரமாக காட்சியளிப்பர்., இவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களின் பதிப்பு ஏற்படும், எனவே சிந்தனையும் நல்ல குணாம்சமும் நமது கண்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு

கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்ம்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே . வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணேய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

முதுமையும் கண்பாதுகாப்பும்

40 வயது வந்தால் வெள்ளெழுத்து இது யாருக்கும் உள்ள தலையெழுத்து ‘ என தமிழ் திரைப்பட பாடலில் வரிகள் வருகிறது. ஆம் இது ஓரளவு உண்மையே ஒவ்வொருவருமே 40 வயதிற்க்குப்பின் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என கண்மருத்துவர் பரிந்துரைத்தால் கண்டிப்பாக கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். இதற்கு வெள்ளெழுத்து என்று பெயர்., இது வியாதி அல்ல, இயற்கையின் உடல்கூறுதான் . 50 வயதிற்குமேல் வருடம் ஒருமுறைகண்களை மருத்துவரிடம் காட்டி காண்பித்து கம்பியூட்டர் கண் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியமாகும். கண்பார்வை மட்டுமல்ல கண்ணின் நீர் அழுத்தம் , தோற்றப்பரப்பு, கண்ணின் உட்புறமாகிய விழித்திரையை காணல் –(VISION , TENSION ,FIELDS &FUNDUS) இந்த நான்கையும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பரம்பரை வியாதிகளான நீரழிவு நோய் , கண் புரை, குளுகோமோ, இரத்த அழுத்தம் , ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருப்பின் தங்களுக்கும் இதனால் ஏதாவது பாதிப்புக்கள் உள்ளதா என்பதை 40 வயதிற்குள் கண் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும்.

வயதான காலத்தில் இரத்த அழுத்தம், நீரழிவுநோய் , கண்ணின் நீர் அழுத்தம் ,கண்புரை, பார்வை நரம்பு கோளாறுகள், டி.பி, கிரந்தி நோய் , ஆகியவைகள் மூலம் கண்பார்வை பாதிக்ககூடும். எனவே கண்மருத்துவரிடம் கண்களைபரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

கண் பாதிப்பில் நோய்களின்- பங்கு

நமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண்களோடு தொடர்புள்ளாதாக அமைகிறது. நீரழிவு இரத்த்க்கொதிப்பு , ஸிபிலிஸ், மேகநோய், எலும்புருக்கி, கக்குவான், இருமல், முதலிய நோய்களால் கண்களில் சில அறிகுறிகள் தோன்றும். கண் மருத்துவர் கண்களை பரிசோதிக்கும்பொழுது கண்களின் ஒளித்திரையில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு அதனடிப்படையில் நோயாளி நீரழிவு நோய் (அ) இரத்த கொதிப்பால் துன்பப்படுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். நீரழிவு நோயால் ஒருவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டால் முக்கியமாக ஒளித்திரையில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணமாக இருக்கும் மற்றும் நீரழிவு நோயால் தசைநாருக்கு வரும் நரம்புகள் கெட்டு கண்விழி ஒரு பக்கம் போக முடியாத காரணத்தால் ஒரு பொருள் பலவாகத் தோன்றும். இப்பிரச்சனை உள்ளவர்களின் சிறுநீரை ஆய்வு செய்து சர்க்கரையின் அளவை கண்டறியலாம். இந்த நீரழிவு நோய்களுக்கு அடிக்கடி க்ண் இமைகளில் கட்டி ஏற்படும், கண்புரை ஏற்படும்.

மேக நோய்

இந்நோயின் காரண்மாக ஆண் குறியில் புண் ஏற்படுதல் இடையில் நெரி கட்டுதல், உடலில் தோலின்மீது திட்டுகள் ஏற்படுதல், பிறகு அது கண் மற்றும் மூளையிலுள்ள நரம்புகள் மூளையை மூடியிருக்கும் பாதுகாப்பு படலம் , எலும்புகள் முதலிய உறுப்புக்களைத்தாக்கும் . குறிப்பாக கண்ணின் கருவிழியில் பூ படர்ந்து கண்பர்வையைக் குறைத்துவிடும். கண்ணில் வலி வெளிச்சத்தைப் பார்த்தால் கூச்சமும் ஏற்படும் அதேபோல் விழிதிரையிலும் நோய் தோன்றலாம் . இதனால் கண்ணில் பாப்பா சுருங்கி விழித்திரரையில் சிறு சிறு கட்டிகள் தோன்றி பாப்பாவில் வெள்ளையான ஜவ்வுப்படலம் தோன்றி மறைக்கும், இதனால் பார்வை மிகவும் குறைந்து விடும். மேகநோய் தாக்கத்தால் சிலருக்கு இளவயதிலேயே கண்புரை ஏற்பட்டு விடும். இளவயதிலுள்ளவர்ககளுக்கு கண்ணில் புரை ஏற்பட்டால் அவர்களது இரத்தத்தை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் சில வேளைகளில் கண்ணில் பின்னியிருக்கும் நரம்பைத் தாக்கி பார்வை இழப்பு ஏற்பட்டு விடும். பழுதடைந்த நரம்பை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது, எனவே ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

காச நோயும் கண்பார்வை பாதிப்பும்

காச நோய் (டி.பி) தாக்கியவர்களுக்கு வெள்ளை விழியிலும் கண் உட்புறத்திலும் சிறுசிறு புண் (அ) கட்டிகள் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு கருவிழியும் வெள்ளை விழியும் சேருமிடத்தில் சிறுகட்டிகள் தோன்றி கண் சிவந்து காணப்படும். இதே கட்டி கருவிழிக்கும் பரவுவதன் மூலம் விழித்திரை நோயும் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படலாம். கண் நரம்பிலும் இந்நோய் பரவி காய்ச்சல் குணமடைந்தாலும் கண் நரம்பு பழுதடைந்து குழந்தை பர்வையை இழந்துவிடும்.

சூரிய ஒளியை நேரடியாக பார்க்கலாமா

காச நோய் (டி.பி) தாக்கியவர்களுக்கு வெள்ளை விழியிலும் கண் உட்புறத்திலும் சிறுசிறு புண் (அ) கட்டிகள் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு கருவிழியும் வெள்ளை விழியும் சேருமிடத்தில் சிறுகட்டிகள் தோன்றி கண் சிவந்து காணப்படும். இதே கட்டி கருவிழிக்கும் பரவுவதன் மூலம் விழித்திரை நோயும் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படலாம். கண் நரம்பிலும் இந்நோய் பரவி காய்ச்சல் குணமடைந்தாலும் கண் நரம்பு பழுதடைந்து குழந்தை பர்வையை இழந்துவிடும்.

மதுபழக்கமும் கண் பார்வை இழப்பும்

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்ப்பு அதிகம். மதுவில் உள்ள எத்தனால் உடலுக்கும் கண்ணுக்கும் அதிகமாக தீங்கு விளைவிக்ககூடியதாகும், நாட்பட்ட மதுப்பழக்கம் கண் மற்றும் நரம்பு மண்டல்த்தை பழுதடைய வைப்பதோடு கண் பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும்.

எய்ட்ஸும் கண் பார்வை இழப்பும்

எ.ச்.ஐ.வி பாதித்த தொடக்க நிலையில் ஆட்கொல்லி நோயாக மாறுவதில்லை. மெல்ல மெல்ல உடலின் நோய் எதிர்ப்புக் சக்தியை குறைத்து பின் நிமோனியா, டி.பி, போன்ற சந்தர்ப்பவாத நோய்களின் மூலம் உடல்நலம் குன்றி இறக்க நேரிடுகிறது. இவர்களுக்கு கண்பார்வையின் நரம்பு பாதிக்கப்படுவதால் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுவிடும்.

தொழு நோயும் கண் பார்வை இழப்பும்

தொழுநோய் என்பது தொற்று நோயுமல்ல பரமபரை நோயுமல்ல . இது கிருமியினால் உண்டாகும் நோயாகும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணகளின் தசைநார்கள் அழிந்து விடும். இதனால் கண்கள் உணர்விழந்து விடும். கண்களின் இமைகளில் பக்க்வாதம் ஏற்படக்கூடும். கண்களில் சிகப்பு உண்டாகலாம், கண் விழிப்படலம் உலர்ந்துபோகக்கூடும், மருத்துவரின் ஆலோசோனைப்படி சொட்டு மருந்து பயன்படுத்தலாம். கண் இமைகளில் ஏற்படும் பக்கவாதத்தை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

கம்பியூட்டரும் கண் பார்வை பாதிப்பும்

இன்றைய விஞ்ஞான உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்பியூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்க்ளுக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம்.

கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்படலாம்

 • கண்களி வலி
 • கண் சிவத்தல்
 • கண்களில் நீர் வடிதல்
 • தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி
 • கண்களில் எரிச்சல்
 • பார்வையில் குழப்பம்

ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்காரணங்கள்

 • கண்களுக்கும் கம்பியூட்டர் திரைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் நெடுநேரம் திரையை பார்த்து கொண்டிருத்தல்.
 • நெடுநேரம் கண்களை இமைக்காமல் பார்வையை செலுத்துதல். 1 நிமிடத்திற்கு குறைந்த பட்சம் 18 முறை இமைக்காமல் மூடி திறக்க வேண்டும், அப்பொழுதுதான் கருவிழி ஈரமாக இருக்கும். மேலே கண்ட குறைபாடுகளில் இருந்து கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
 • கம்பியூட்டரின் திரைக்கும் நமது கண்களுக்கும் இடையிலான தூரம் 2(அ)3 அடி தூரம் இருக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை கண்பார்வை மாற்றி பிறகு தொடரலாம்.
 • அரை மணிக்கு ஒரு முறை மற்றும் மணிக்கு ஓரு முறை கண்ணிற்கு ஓரிரு நிமிடம் ஓய்வு கொடுப்பது நல்லது.
 • கண்களை அடிகடி மூடித்திறப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி

ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தொலைவில் உள்ள ஒரு பொருளை பார்க்கவும், பேனா (அ) பென்சிலை கண்களுக்கு நேராக ஒரு கை தூரத்தில் உயர்த்தி பிடித்து அதன் முனையின் மீது நமது பார்வையை செலுத்துவும் மெதுவாக அதை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து இரட்டை உருவம் தெரியும் தூரத்தில் பொருளின் முனையை நிறுத்திக் கொள்ளவும் இப்பொழுது பேனாவின் நுனி மிகத் தெளிவாகத் தெரியும். குறைந்தபட்சம் 30 வினாடிகள் வரை பார்க்கலாம். மீண்டும் மெதுவாக பழைய இடத்திற்கே கொண்டு சென்று 30 வினாடிகள் பிறகு மறுபடியும் செய்யவும் இப்பயிற்சியை 10 முறை செய்து விட்டு மீண்டும் தூரத்தில் உள்ள பொருளின் முனையை பார்க்கவும் , காலையில் இந்த பயிற்சியை 5(அ) 10 நிமிடம் வரை செய்யலாம், ஆரம்பத்தில் இந்த பயிற்யை செய்யும்பொழுது சிறிது தலைவலி இருப்பது போல தோன்றினாலும் சில வாரங்கள் சென்ற பின் முழுநிவாரனம் கிடைக்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது கண்ணின் தசை நார்களுக்கு பலமும் உறுதியும் கிடைக்கும்.

கண்ணாடி அணிவதில் தேவை எச்சரிக்கை

இன்று கண்ணாடி அணிவதை சிலர் கவர்ச்சிக்காக எவ்வித பரிசோதனையுமின்றி அணிந்து கொள்கின்றனர் யார் கண்ணுக்கு கண்ணாடி அணிய வேண்டுமென்றாலும் கண் டாக்டர் பரிசோதித்து பரிந்துரைக்கின்ற பார்வையின் அளவீடு அடிப்படையில் கண்ணாடி அணிவது மட்டுமே கண்களுக்கும் கண் பார்வைக்கும் பாதுகாப்பாக அமையும்.

ஒருவரது கண்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கண்ணாடியை இன்னொருவர் பார்வை நன்றாக தெரிகிறது என்பதற்காக அணியக்கூடாது.தற்காலிகமாக கண்பார்வை நன்றாக தெரிவதுபோலத் தோன்றினாலும் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.ஒவ்வொருவிதமான

பார்வைக்கோளாருகளுக்கும் ஒவ்வொருவிதமான கண்ணாடி உண்டு ஒரு கண்ணாடிக்கு பதிலாக வேறு கண்ணாடி அனிந்தால் குறைபாடு குறைவதற்குப் பதிலாக அதிகமாகிவிடும்.அதனால் கண் டாக்டரின் ஆலோசனையும் அனுமதியும் இல்லாமல் எந்த கண்ணாடியும் அணியக்கூடாது.

கண்கள் பாதுகாப்பில் நமது பங்கு

கண்கள் என்பது பார்த்திட,உணர்ந்திட, உருவகப்படுத்திட மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும் இரு கண்களையும் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்திட வேண்டும்.கண்களில் எவ்விதக் கோளாறு ஏற்ப்பட்டாலும் நாம் சுயமாகவோ (அ) மருந்து கடைக்காரரிடம் சுய வைத்தியம் செய்வதையோ, கண்ணுக்கு மருந்துகள் போட்டு கொள்வதையோ கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.உடனடியாக கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.முக்கியமாக மருந்து,சாறு ,தூள் எதையுமே கண்களில் போடக்கூடாது.கர்ப்பிணிப் பெண்களுக்கு வெட்டை நோய் இருந்தால் குழந்தை பிறப்பதற்க்கு முன்னால் அதனைக் குனமாக்கிக் கொள்ள வேண்டும் .தவறினால் வெட்டை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பினிக்கு பிறக்கும் குழந்தையின் கண் பார்வை பாதிக்கக்கூடும். வெட்டை நோய் தீவிரமாக இருந்தால் பிறக்கும் குழந்தை பார்வை இழந்தே பிறக்கக்கூடும்.கண்களில் தூசு,கல்,மண்,கண்னாடித் தூள் போன்றவை பட்டு வலி ஏற்பட்டு பிறகு வலிநின்று விட்டாலும் குனமாகிவிட்டதாக கருதிவிடக்கூடாது கல்,கண்ணாடி போன்ற துகள்கள் கண்ணுக்குள்ளேயே தங்கி விழித்திரையில் புண்களை உருவாக்கி காலப்போக்கில் கண் பார்வையை பறித்துவிடும் சூழல் உருவாகிவிடும்.எனவே கண்கள் தொடர்பான என்ன தொல்லை ஏற்ப்பட்டாலும் அதனால் வலியோ,வேறுவிதமான பிரச்சனை இருந்தாலும் கண் மருத்துவ்ரிடம் கண்களை பரிசோதித்துக் கொள்வது கண்களுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.நல்ல உறக்கத்தினால் உடல் உறுப்புகள் மற்றும் கண்கள் நல்ல ஒய்வு பெறுகிறது.அடிக்கடி உறக்கம் கெட்டால் முதலில் பாதிக்கப்படுவது கண்களே ! எனவே கண்கள் ஆரோக்கியமாக இருக்க எண்றும் ஒவ்வொருவருக்கும் நிம்மதியான உறக்கம் முக்கியமான ஒன்று.

சத்து குறைபாடால் தோன்றும் நோய்கள்

போதிய அளவு சத்து இல்லாமல் வளரும் குழந்தைக்கு சிலவகையான கோளாறுகள் ஏற்படும். கண், இமை ஓரங்களில் சிறு சிறு புண்கள் உருவாகும் ,கண்ணில் நீர் வடிவதுடன் கூச்சமும் ஏற்படும். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு போதிய சத்தான உணவு இல்லாமையே காரணம் நீண்ட நாள் பேதியாகி கொண்டிருந்தாலும் கண் கோளாறுகள் ஏற்படும்.குழந்தையின் வயிற்றில் நாக்குப் பூச்சி போன்றவைகள் இருந்தாலும் கண் கோளாறுகள் ஏற்படும். இம்மாதிரி கண் கோளாறு கொண்ட குழந்தைகளுக்கு தயிருடன் சாதம் அளிப்பது சிறப்பாகும் மற்றும் கேழ்வரகுக்களி,கூழ் போன்றவை அவர்களுக்கு உடல் நலனை காக்கும் மற்றும் வாழைக்காய், தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, நிலக்கடலை ,பட்டாணி,முந்திரி, பருப்பு ,கீரைவகைகள்,பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அத்துடன் ஆட்டு ஈரல்,பால் ,முட்டை போன்றவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.வசதி குறைவான நிலையில் உள்ளவர்கள் வடித்த கஞ்சியும்,பருப்பு வகைகளும் கோதுமை போன்றவையும் கூட பயன்படுத்தலாம் ஏனெனில் இது ஒரு நல்ல சத்தான உணவாகும்.

கண்கட்டி

குழந்தைகளுக்கு கண் இமைகளின் உட்புறத்தில் கொப்புளம், சிறுகட்டிகள் போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.சாதாரனமாக இந்த மாதிரிப்பிரச்சனைகள் சத்துக்குறைவு காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் இதுபோன்ற குறைபாடுகள் காசநோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஆகையால் இம்மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சாதாரண கட்டிதானே என்று இருந்து விடாமல் கண் மருத்துவரிடம் பரிசோதித்து காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.அடிக்கடி கண்கட்டி (அ) கண் இமைகளில் கொப்புளம் ஏற்படும் குந்தைகள் இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இவர்கள் பழரசம் , மீன் எண்ணெய் போன்றவைகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும்.சில குழந்தைகளுக்கு “பூச்சி வெட்டு” கண்களில் ஏற்படும் இதனை மக்கள் புழுவெட்டு என்றழைப்பர்.இக்குறைபாடுள்ளவர்களின் கண்களில் முடி உதிர்வுகளும், உதிர்ந்த இடத்தில் புழுக்களும் தோன்றக்கூடும்.அதிகமாக கானப்படுகினற இவர்களுக்கு இமைகளின் ரோமங்கள் உதிர்ந்தார் போல் காட்சியளிக்கும்.

கண்ணாடி அணிவதில் கவனம் தேவை

கண்ணாடி அணிபவர்கள் கண்ணாடியில் கீரல் இல்லாமல் , அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடியை நாள் தோரும் துணியால் துடைத்து அணியலாம் (அ) ஈரத் துணியால் துடைத்து அணியலாம்.40 வயதைக்கடந்தவர்கள் ஆண்டிற்கொரு முறை கண்ணாடியையும்,கண்களையும் பரிசோதித்துக் கொள்ளவது மிகவும் அவசியம்.

கோடைகாலத்தில் கண்கள் பாதுகாப்பின் அவசியம்

கோடைகாலத்தில் வெப்பமும் ,தூசியும் கலந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும்,உடலில் வியர்வை ஏற்பட்ட நிலையில் காற்றில் கலந்துவரும் தூசி,அழுக்கு போன்றவை கண்ணில் பேற்பரப்பில் இமைகள் மீது படிவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளதால் கோடைகாலத்தில் கண்களை குளிர்ந்த நீரில் கழுவி தூசி,மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

சூரிய வெளிச்சம் மற்றும் வாகனங்களிள் பயனிக்கும் பொழுது கண்களின் பாதுகாப்பு

சிலர் அதிகமாக சூரிய வெப்பத்தில் பணிபுரிய ,அதிக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.இச்சூழலில் கண்களை சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தாக்கவும் ,கண் வேகமான காற்றில் தாக்காமல் தூசுகள் படிந்திட வாய்ப்புள்ளது.இவர்கள் கண்மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து குளிர் கண்ணாடி (அ) போட்டோமேட்டிக் லென்ஸ் அனியலாம் இந்த லென்ஸ் வெளியில் செல்லும் பொழுது மட்டும் கருப்பாக மாறும்.இதை விரும்பாதவர்கள் UV(Ultra Violet) லென்ஸ் பயன்படுத்தலாம்

கண்தானமும் கண்வங்கியும்

தற்பொழுது மருத்துவ உலகின் வளர்ச்சி காரணமாக மனிதரின் உடலில் ஏதாவதொரு உறுப்பு பழுதடைந்தாலோ செயல்பாட்டில்லாதிருந்தாலோ மற்றொருவரின் உறுப்பை பொருத்தி செயல்பட வைக்க முடியும்.அவ்வாறே கண் பார்வையிழந்தவர்களுக்கு மற்றோருவரின் கண்களை பொருத்தி பார்வைஅளிக்க முடியும்.ஆனால் கண் மாற்று அறுவை சிகிச்சை எண்பது கண்களை அப்படியே பொருத்துவதில் அல்ல,கண் பார்வை இழந்தவர்களுக்கு தானம் அளிப்பவரின் கண்களில் இருந்து கருவிழியை மட்டும் கண்பார்வை இழந்தவர்களுக்கு பொருத்தி கண்ணொளியைத்தர முடியும்.

கண் தானம்

கண் தானம் என்பது ஒவ்வொரு மனிதரும் செய்ய வேண்டிய அற்புதமான காரியமாகும்.ஒருவர் கண் தானம் செய்ய விரும்பி தாம் இறந்தவுடன் தம்முடைய கண்களை எடுத்துகொள்ளலாம் என முன் கூட்டியே கண் மருத்துவமனையில் பெயரை பதிவு செய்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும்.

கண் தானம் செய்தவர் இறந்த ½ மணிநேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செய்தி தெரிவிக்கப்பட வேண்டும்.உடன் கண் சேமிப்புக்கென உள்ள மருத்துவ அதிகாரைகள் உடன் வந்து இறந்தவர் கண்களை முறைப்படி எடுத்து சென்று குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துவைப்பர்.குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து தேவைப்பட்டபொழுது எடுத்துப் பயன்படுத்தலாம் இவ்வாறு கண்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் காப்பகத்திருக்கு கண் வங்கி (EYE BANK)என்று பெயர்.

தமிழகத்தில் உள்ள கண் வங்கிகளின் தொலைபேசி எண்கள்

  Chennai 044 C.U.Shah Eye Bank 8261265/1268,
  8271616/1036
  Lions Eye Bank Trust 6211060
  Rotary Rajan Eye Bank 8259635,
  8231838
  Sri Ramachandra Eye Bank 4828403
  Tamilnad Hospital Eye Bank 2375221
  Vazhum Kangal Eye Bank 5956403,
  5953594
  Chidambaram 04144 Chidambaram Lions Eye Bank Trust 22775
  Coimbatore 0422 Aravind Eye Bank 578901
  Coimbatore Eye Bank 397274
  K.G.Eye Hospital 212121
  Natraj Hospital Eye Bank 866450,
  866108
  P.S.G.Hospitals 570170
  Sankara Eye Bank 434680
  Kanchipuram 04112 Sankar Eye Bank 23452
  Kumbakonam 0435 Lions Eye Bank Trust 23520
  Madurai 0452 Aravind Eye Hospital 533653
  Nagercoil 04652 Aaditya Eye Bank 30787,
  30657
  Nagercoil Eye Bank 31671,
  30570
  Salem 0427 Salem Eye Bank 416955
  Tiruchirapalli 0431 A.G.Eye Hospital 766101,
  766401
  Joseph Eye Hospital 462275,
  462862,
  460622
  Tirupur 0421 J.P.Gandhi Eye Bank 744402,
  745402,
  741328
  Vellore 0416 Schell Eye Hospital 32921,
  22102
கண்தானத்தில் தேவையான முன்னெச்சரிக்கை
 • கண் தானம் செய்தவர் இறந்தால் அரைமனி நேரத்திற்குள் கண் தானம் செய்துள்ள மருத்துவமனைக்கு தகவல் தரப்பட வேண்டும்.
 • தானம் செய்தவர் இறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்களை இறந்தவரின் உடலிலிருந்து அகற்றி குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்க வேண்டும்.
 • கண்தானம் செய்தவர் உயிருடன் உள்ள காலத்திலேயே தமது உறவினர்களிடம் தான் தமது கண் தானம் செய்துள்ள விபரம்,முகவரி,தொலைபேசி எண்,கண் தானம் செய்ததற்கான ஒப்பந்த நகல் ஆகியவற்றை அளித்து இறந்தவுடன் தகவல் தர வேண்டிக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.


கண்

கேள்வி பதில்கள்

கண் நோய்கள் வர முக்கிய காரணம் என்ன?

ஊட்டச் சத்தில்லாத உணவுகள், பார்வை நரம்பில் ஏற்படும் ரத்தக் குறைவு, ரத்த ஓட்டம் தடைபடுதல், ரத்த அழுத்தம் குறைவு மற்றும் பரம்பரைக் காரணங்களாலும் கூட கண் நோய்கள் வரலாம்.

'சிதறல் பார்வை' எதனால் ஏற்படுகிறது?

சில ஒளிக்கதிர்கள் விழித்திரையிலும், சில ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்போ, முன்போ விழுமானால், காட்சி தெளிவாகத் தெரியாது. கண்ணைச் சிரமப்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். இதைத்தான் 'சிதறல் பார்வை' என்கிறோம். விழித்திரை வடிவத்தில் உண்டாகின்ற கோளாறுதான் இதற்கு முக்கிய காரணம். இப்பிரச்னைக்கு குவிலென்ஸ் தீர்வாகும்!

கண் சம்பந்தப்பட்ட முக்கிய நோய்கள் என்னென்ன?

கிட்டப்பார்வை, துாரப்பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், பூ விழுதல், நீர் வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறுகளால் தலைவலி, மஞ்சள்காமாலை மூலமாக வரும் தொற்றுநோய், கண் கோளாறுகளால் வரும் துாக்கமின்மை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வயதானால் கண்ணில் ஏற்படும் அதிமுக்கிய பிரச்னை?

நாற்பது வயதுக்கு மேல், கண்ணில் வருகின்ற முக்கிய பிரச்னை கண்புரை. பளிங்கு போல் இருக்கின்ற நம் விழி லென்சில் புரதம் படிந்து அழுக்கேறிப் போவதால், ஒளிக்கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் போகிறது. இதனால் விழித்திரையில் பதியும் பிம்பம் தெளிவில்லாமல் போய், பார்வை மங்கலாகிறது.

கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு

3.04511278195
முஹம்மட் றிபாஸ் Jun 12, 2020 01:53 PM

இந்த தகவல்கள் எனக்கு மிகவும் புடித்தமானதாக உள்ளது மிக்க நன்றி

Somu Aug 27, 2019 09:38 PM

வைட்டமின் ஏ சத்து உடலில் தேவையான அளவை விட அதிக அளவு இருந்தால் பார்வை குறைவு ஏற்படுமா? எப்படி சரி செய்வது

Prasan Apr 08, 2019 12:26 AM

நிறக்குருடு பிரச்சினைக்கு தீர்வுகள் இருக்கின்றதா

ஆர் நித்தியானந்தம் Sep 17, 2018 11:53 AM

அருமை

சபினா Oct 06, 2017 05:04 PM

விழித்திரை விரிசல் என்றால் என்ன

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top