অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கண் வேதியற் காயம்

கண் வேதியற் காயம்

அறிமுகம்

வேதிப்பொருட்களால் கண்களுக்கு ஏற்படும் காயம் ஓர் அவசரநிலை ஆகும். பார்வை இழப்பும், கண்ணின் முழு அமைப்புக்கு ஆபத்தும் உண்டாகலாம். கண் பரப்பு மேல்தோலுக்கு பெரிய அளவில் கடும் சிதைவும் ஏற்படலாம்.

வேதியற் காயங்களால் திசுச் சிதைவு ஏற்படுகிறது. முற்றிலும் சிதறிய அயனி அலைகளால் இது ஏற்படுகிறது. கண் இமை மற்றும்/அல்லது கண்ணீர் படலம் மற்றும் தேக்கத்தை இவை சூழ்ந்து வெண்படலத்தையும் சுற்றியுள்ள திசுக்களையும் ஊடுறுவுகின்றன. இவ்வாறு இவை கண் நீர்மத்தை அடைகின்றன. கண்ணின் இணைப்புத்திசுப் புரத உறை திடீரெனச் சுருங்குவதால் உள்விழி அழுத்தம் விரைவாக அதிகரிக்கிறது. இதைத்தொடர்ந்து, புரோஸ்ட்டோகிளாண்டின் வெளிவிடப்படுவதால் இரண்டாம் முறை இந்த அழுத்தம் அதிகரிக்கிறது. தாங்குதிசு வலையில் சிதைந்த திசுக்கள் உறைவதாலும் அழற்சிக் கூறுகள் உருவாகி அதைத் தொடர்ந்து குறிப்பாகக் கீழ்ப்பகுதியில் கண்ணறை கோணம் வடுக்களால் அடைபடுவதாலும் கண்ணழுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

அழற்சி செல்கள், மிகவும் முக்கியமாக, சாயச்சார்பற்ற செல்கள், சிதைவுற்ற திசுக்குள் பாய்ந்து, சூப்பராக்சைடு மூலிகத்தையும் (ரேடிக்கல்கள்) திசுச்சிதைவு நொதிகளையும் வெளிவிடுகின்றன. வெண்படலப் புண், துளை மற்றும் புதுக்குழல் வளர்ச்சி உருவாகக் கூடும்.

காயம் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் ஏராளம். சுத்திகரிப்பான்கள், உரம், குளிரூட்டிகள், சிமெண்ட், பதப்படுத்திகள் மற்றும் பட்டாசுகள் இதில் அடங்கும். அமிலங்களை விட காரங்களால் ஏற்படும் காயங்கள் அடிக்கடி நிகழுகின்றன. வீட்டு உபயோக அல்லது தொழிற்சாலைப் பொருட்களில் பொதுவாக காரப்பொருட்கள் அடங்கியுள்ளதே இதற்குக் காரணம். சோப்பு மற்றும் வெப்பமூட்டிகளால் கண் காயம் பொதுவாக ஏற்படுவதில்லை.

நல்ல வேளையாக வேதியற் காயங்கள் இலேசானவை என்றே வகைப்படுத்தப் படுகின்றன. பொதுவாக இளம் ஆண்களே காயம் அடைகின்றனர். பல திறப்பட்ட வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வீட்டுச் சூழ்நிலைகளில் பரவலாக இவை ஏற்படுகின்றன. குற்றச் செயல்களினால் குறைந்த அளவே வேதியற் காயங்கள் உண்டாகின்றன. இருப்பினும், தாக்குதல் காரணமாக ஏற்படும் வேதியற் கண் காயங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதே.

வேதியற் காயத்தின் தன்மை, கண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் அளவு, சிகிச்சை தொடங்கப்பட்டக் காலம் மற்றும் திறன் ஆகியவையைப் பொறுத்தே பார்வைப் பாதிப்பைக் கணக்கிட முடியும்.

பொதுவாகக் காரப்பொருள் தீப்புண் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் வேதியல் மற்றும் வெப்பக் காயம் ஏற்படும் போது “கார-வெப்பக் காயம்” அல்லது “வெப்ப-காரப்பொருட் காயம்” என எது அதிகமாக இருக்கிறதோ அதை முன் வைத்துக் கூறவேண்டும். அமிலக் காயமும் இது போன்றே குறிப்பிடப்பட வேண்டும்.

நோயறிகுறிகள்

முக்கிய உடனடி அறிகுறிகள்:

 • கடுமையான வலி
 • சிவந்த கண்கள்
 • நீரொழுகல்
 • அயல்பொருள் உணர்வு
 • பார்வை மங்கல்
 • பார்வைக் கூர்மை குறைதல்
 • ஒளிக்கூச்சம்
 • இமைமூடல்

காரணங்கள்

கண்களுக்குக் காயம் ஏற்படுத்தக் கூடிய 25000-க்கு மேற்பட்டப் பொருட்கள் இனம்காணப் பட்டுள்ளன. அவற்றை அமிலம் அல்லது காரம், உயிர்வளி ஏற்றி அல்லது நீக்கி அல்லது அரிப்பன என்று வகைப் படுத்தலாம். அமிலங்களும் காரங்களுமே அதிகமாகச் சம்பந்தப்படும் வேதியற் பொருட்கள். வேதியற் பொருளின் தன்மை, அடர்த்தி, அளவு மற்றும் பி.எச்சைப் (pH) பொறுத்து காயத்தின் கடுமை இருக்கும். ஏற்படும் கால அளவு மற்றும் படும் பரப்பு ஆகியவைகளையும் பொறுத்தே காயத்தின் கடுமை காணப்படும். அதிக விசையுடன் ஏற்பட்ட (வெடிப்பு) வேதிப்பொருள் காயத்தினால் அயல்பொருள் உள்ளிருக்கும் ஐயமும் ஏற்படும்.

வேதியற் காயங்களுக்குக் காரணமான பொருட்கள்:

காரம்:

காரப்பொருட்களால் ஏற்படும் காயங்களுக்கு, பொட்டாசியம் ஹைடிராக்சைடு, மக்னீசியம் ஹைடிராக்சைடு, கால்சியம் ஆக்சைடு, உலர்/ஈர சிமெண்ட் மற்றும் அம்மோனியா ஆகியவை பொதுவான காரணமாக இருக்கும். கண்ணுக்குள் ஊடுறுவக் கூடிய அம்மோனியாவும் பொட்டாசியம் ஹைடிராக்சைடும் கடுமையான கண் காயத்தை உருவாக்கும். எதிர்மின்ம அடர்த்தி, காரப்பிரிகை மற்றும் நீர்ம அளவு ஆகியவையைப் பொறுத்தே காயத்தின் கடுமை இருக்கும். ஹைடிராக்சைல் அயனிகள் அலைபோல கண் திசுக்களின் ஊடாக முன்னேறுகின்றன. செல்படலங்கள் இறுகுவதாலும், கிளைகோசா-அமினோகிளைக்கான்கள் மற்றும் வெண்படல மச்சைக்குள் இருக்கும் கோலஜென் பரந்த அளவில் நீரால் சிதைவு உறுவதாலும் மொத்தமாக செல் இறப்பு நிகழ்கிறது. கால்சியம் ஆக்சைடால் ஏற்படும் காயம் , கால்சியம் சோப்பாகப் படிந்து ஆழ ஊடுறுவலைத் தடுப்பதால், குறைகிறது. பட்டாசுகளில் இருக்கும் மக்னீசியம் ஹைடிராக்சைடால் வேதியல் மற்றும் வெப்பக் காயங்கள் இணைந்து ஏற்படுகின்றன.

கண்காயத்தை ஏற்படுத்தும் மிக முக்கியக் காரப்பொருட்கள்:

 • அமோனியா (NH3): இது உரமாகவும் குளிரூட்டியாகவும் கிடைக்கிறது. பிற வேதியற் பொருட்களை உருவாக்கவும் இது பயன்படுத்தப் படுகிறது. கடுமையான கண்காயத்தை உருவக்குவதில் அமோனியம் ஹைடிராக்சைடு முதல் நிலை வகிக்கிறது. பொதுவாக இது வீடுகளில் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும் கண் காயத்தை ஏற்படுத்த 7% அமோனியக் கரைசலே போதுமானதாகும். இதற்குக் காரணம் இதன் மிகையாகக் கரையும் தன்மையும் ஊடுறுவும் ஆற்றலும் ஆகும்.
 • காஸ்டிக் சோடா அல்லது சோடியம் ஹைடிராக்சைடு (NaOH) : 3-5 நிமிடங்களில் கண்ணுக்குள் ஊடுறுவும். சாக்கடை சுத்திகரிப்பானாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் திட சோடியம் ஹைடிராக்சைடு, கழிவுநீர் குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி வெடித்து கண்ணிலும் முகத்திலும் பட நேரிடலாம். சுருள் முடியை நிமிர்த்த சூடான காஸ்டிக்சோடா பயன்படுத்தப்படுகிறது. கூழ், காகிதம், துணி, சோப் ஆலைகளிலும் இது பயன்படுகிறது. வீடுகளில் இது பொதுவாகக் காணப்படுவதால் கள்ளக்காதலர்களால் தாக்குவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வேதியல் பொருளாக உள்ளது. அமோனியம் ஹைடிராக்சைடுக்கு அடுத்த படியாக கடுமையான காயம் ஏற்படுத்துவதாக விளங்குகிறது.
 • பொட்டாசியம் ஹைடிராக்சைடு (KOH) : காஸ்டிக் பொட்டாஷ், சோடியம் ஹைடிராக்சைடை விட குறைவாகவே கண்ணுக்குள் ஊடுறுவும். இது நீரில் கரையும் போது மிகவும் வெப்பம் ஏற்படும். அரிக்கும் தன்மை கொண்டது.
 • மக்னீசியம் ஹைடிராக்சைடு (Mg(OH)2): சோடியம் ஹைடிராக்சைடை விட சற்று குறைவாகவே கண்ணை ஊடுறுவும். இது பட்டாசுகளில் காணப்படும். இதனால் வெப்ப மற்றும் வேதியல் காயங்கள் இணைந்து உருவாகும். தனித்தனிக் காயங்களை விட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
 • கால்சியம் ஹைடிராக்சைடு (Ca(OH)2): சுண்ணாம்பு, கால்சியம் ஹைடிரேட், பூச்சு, சிமெண்ட், சாந்து மற்றும் வெள்ளையடிக்கும் சுண்ணம் ஆகியவை குறைந்த வேகத்திலேயே கண்ணுக்குள் ஊடுறுவும். ஏனெனில் இது மேல்தோல் செல்லுடன் வினை புரிந்து கால்சியம் சவர்க்காரத்தை உருவாக்கும். அது மேலும் ஊடுறுவலைத் தடுக்கும். சிமெண்டிலும் பூச்சுக் கலவையிலும் காணப்படும் சுண்ணாம்பே காரப்பொருள் காயத்தின் முக்கியக் காரணம். காயம் தீவிரம் அடைய கண்ணுக்குள் தங்கும் பொருட்கள் தேக்கத் தொட்டியாக செயல்படுகின்றன. இருப்பினும் காயம் கடுமையாகக் கூடும். ஒளிபுகாத்தன்மை அமோனியம் மற்றும் சோடியம் ஹைடிராக்சைடை விட விரைவில் தென்படும்.
 • மீதைல் ஈதைல் கீட்டோன் பெராக்சைடு: இது பொதுவாகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வினையூக்கி. இதனால் உடனடியாக அல்லது தாமதமாக வெண்படலக் காயம் ஏற்படலாம். அதிகரிக்கவும் குறையவும் செய்யும் லிம்பல் மற்றும் வெண்படல நோய்கள் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

அமிலங்கள்:

மென்னமிலக் கூட்டுப்பொருட்கள் வெண்படல மற்றும் கண்சவ்வு மேல்தோலில் கொழுப்புகளைப் படிய வைக்கின்றன. இவை வேதிப்பொருட்கள் மேலும் ஆழமாக ஊடுறுவுவதை தடுக்கும் பகுதித் தடைகளாக செயல்படுகின்றன. இது சாம்பல் வெண்மை மேல்தோலாகக் காணப்படும். அடியில் இருக்கும் திசுக்கள் இதனால் மறைக்கப்படும். ஒளிபுகா இப்படலத்தை உரித்தெடுத்தால் தெளிவான வெண்படலத் திசுவலை காணப்படும். லிம்பசின் அருகில் இருக்கும் அடிசெல்கள் சிதைவு அடையாதவரை, குறைந்த அளவு திசுவலை மறைப்போடு அல்லது இல்லாமலேயே மேல்தோலை மீட்டெடுக்கலாம்.

ஹைடிரோஃபுளூரிக், சல்ஃபூரிக், சல்ஃப்ரஸ், குரோமிக் மற்றும் ஹைடிரோகுளோரிக் அமிலங்களே காயங்களுக்கான பரவலான காரணங்கள். ஒரு நீர்க்கரைசலில் அடர் அமிலங்கள் முற்றிலுமாக மின்மம் அடைகின்றன. பிரிந்து ஒரு புரோட்டானை இழக்கும் திறனிலேயே ஒரு அமிலத்தின் வலிமை அமைந்துள்ளது. பிரியும் இந்தப் புரோடானின் செயலாலேயே அமிலத்தால் ஏற்படும் சிதைவின் செயல்நுட்பம் அமைந்துள்ளது. தனித்துவமான குணங்களால் ஹைடிரோஃபுளூரிக் அமிலம் மிகக் கடுமையான காயத்தை உண்டாக்குகிறது. இதன் கரையும் வினையால் ஆழமான திசுக்களை விரைவில் ஊடுறுவும். மேலும், ஹைடிரோஃபுளூரிக் அமிலம் செல்களில் உள்ள அனைத்து கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் வினைபுரிந்து இடுக்கிப்பிணைவை ஏற்படுத்துவதால் செல்லில் நடைபெறும் உயிர்வேதியல் செயல்பாட்டை முடக்குகிறது.

பொதுவாக காரத்தினால் ஏற்படும் காயங்களே மிகக்கடுமையானவை என்றாலும் அனைத்து அமிலக் காயமும் கடுமையாக இருக்காது எனக் கூற முடியாது. படிவுகளால் ஏற்பாடும் தடையை மீறி அடர் அமிலங்கள் காரங்களைப் போல திசுக்களை ஊடுறுவும். கடுமையான அமிலம் மற்றும் காரக் காயங்களுக்கு இடையில் வித்தியாசம் காண முடியாது.

கண்களுக்குக் காயம் ஏற்படுத்தும் மிக முக்கிய அமிலங்கள்:

 • ஹைடிரோ குளோரிக் அமிலம் அல்லது ஹைடிரஜன் ஃபுளூரைடு (HF): இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு மென்னமிலம்; ஆனால் ஒரு தீவிரக் கரைப்பான். கண்ணாடி மற்றும் சிலிக்கானை பளபளப்பாக்கவும் செதுக்கவும், உலோகங்களை அமிலத்தில் ஊறவைக்கவும் சிதைக்கவும், யுரேனியம், தாந்தலம் மற்றும் பெரிலியத்தைச் சுத்திகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. குறைக்கடத்தி தொழிற்சாலையில் சிலிக்கான் சிப்சுகளை உருவாக்கப் பயன்படுகிறது.

செல் படலங்களைக் கரைக்கும் தீவிரத் தன்மையால் HF கடும் கண் காயங்களை உண்டாக்குகிறது. இது கால்சியம், மக்னீசியம் மின்மங்களோடு இடுக்கி இணைப்பு உருவாக்கி குறைந்த மூலக்கூறு எடையின் காரணமாக விரைவாக ஊடுறுவுகிறது. இது கடும் நச்சுத்தன்மை கொண்டது. 7 மி.லி. ஹைடிரஜன் ஃபுளோரைடு அல்லது 2.5 % தீய்ப்பே கடுப்படுத்த முடியாத இரத்தக் கால்சியக் குறைபாட்டை ஏற்படுத்தி மரணம் உண்டாக்கப் போதுமானது ஆகும்.

இது தனித்த நிலையிலும் காணப்படும். நைட்ரிக் அமிலம், அமோனியம் டைஃபுளோரைடு மற்றும் அசட்டிக் அமிலம் போன்ற பொருட்களோடு சேர்ந்தும் காணப்படும்.

 • கந்தக அமிலம் (H2SO4): சேமக்கலங்களிலும், தொழிற்சாலை வேதிப்பொருளாகவும் இது பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. அமிலக் காயங்களுக்குப் பரவலாக இதுவே காரணமாக இருக்கும். குறிப்பாகச் சேமக்கல வெடிப்பால் கடும் காயங்கள் விளைகின்றன. சேமக்கலத்தில் கந்தக அமிலம் நீரோடு இணைவதால் மின்னாற்பகுப்பு நிகழ்ந்து ஐடிரஜனும் ஆக்சிஜனும் உண்டாகின்றன. தீப்பிழம்பில் பட்டு இந்த வாயுக்கலவை வெடிக்கிறது. தீப்பெட்டிகள் அல்லது சிகரட் கொளுத்திகள் அல்லது துள்ளுகம்பிப் பொறிகள் தீப்பிடிப்பதற்கான மிகவும் பரவலான காரணங்கள். சேமக்கல வெடிப்பால் அமிலத் தீய்ப்புக் காயம், துகள் பொருட்களால் ஏற்படும் கன்றல் மற்றும் கீறல் அல்லது கண்ணுக்குள் அயல்பொருள் ஊடுறுவல் ஆகியவை ஏற்படலாம்.

கந்தகம் நீரோடு வினை புரிவதால் ஏற்படும் வெப்பத்தால் வெண்படல கண்ணீர்ப் படலம் பாதிக்கப்படலாம். இந்த வெப்பத்தால் திசுக்கள் எரியவும் கூடும்.

 • சல்பூரஸ் அமிலம் (H2SO3): கண்ணில் உள்ள நீரில் சல்பர் டையாக்சைடு கலந்து சல்பூரஸ் அமிலம் உருவாகிறது. அது சல்பூரஸ் அன்ஹைடிரைட் அல்லது சல்பூரஸ் ஆக்சைடாக இருக்கும். இது பழம்/காய் பதப்படுத்தியாக, பிளீச்சாக மற்றும் குளிரூட்டியாக பயன்படும். சல்பூரஸ் அமிலம் புரதத்தின் இயற்கைத்தன்மையை மாற்றி பல்வேறு நொதிகளை செயலிழக்கச் செய்கிறது. இது லிப்பிடிலும் நீரிலும் வெகுவாகக் கரைவதால் திசுக்களில் எளிதாக ஊடுறுவும்.

சல்பூரஸ் அமிலம் பட்ட உடன் பார்வைக் கூர்மை கடுமையாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் மணிநேரமும், நாட்களும் கடந்துச் செல்லச்செல்ல கண்நிலைமை மோசாமாகும்.

 • ஹைடிரோகுளோரிக் அமிலம் (HCl): ஹைடிரோ குளோரிக் அமிலம் (செரிமானச் சாற்றிலும் உள்ளது) வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் நெகிழி உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. ஹைடிரஜன் குளோரைடு ஆவி கண் எரிச்சலைத் தூண்டி கண்ணீரை வரவழைக்கிறது. இதனால் கண் சேதம் குறைகிறது. அடர்த்தி அதிகமாக இருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டாலும் கடுமையான கண் சேதாரம் உருவாகும்.
 • நைட்ரிக் அமிலம் (HNO3): இதனுடைய விளைவும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தைப் போலவே இருக்கும். ஆனால் மேல்தோலில் உண்டாகும் ஒளிபுகா படலம் பிற வகையான அமில தீய்ப்பு வெண்மையைப் போலன்றி மஞ்சளாக இருக்கும்.
 • குரோமிக் அமிலம்: குரோமிக் ஆக்சைடு மற்றும் குரோமியம் டிரையாக்சைடுகளில் இருந்து பெறும் குரோமிக் அமிலம் வன் பொருள் ஆகும். குரோமியப் பிளேட்டிங் தொழிலகங்களில் கண்னில் படும் துளிகளால் காயம் ஏற்படக் கூடும். இதனால் குரோமியக் கண்சவ்வழற்சி உண்டாகும். குரோமியம் பட்ட இமைப் பிளவில் பழுப்பு நிறமாற்றம் உருவாகும்.
 • அசட்டிக் அமிலம் (CH3COOH): இது ஒரு பலவீனமான அங்கக அமிலம். இது வினிகர் மற்றும் கிளேசியல் அசட்டிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். பலவகைப்பட்ட அசட்டிக் அமிலங்கள், குறிப்பாக வினிகர், தொடர்ந்து கண்ணில் படாத போது, இலேசான கண் காயங்களையே ஏற்படுத்தும். கண்ணில் படும் நேரம் குறைந்த அளவில் இல்லாவிட்டால் 10% மேற்பட்ட வலுவுள்ள அடர் கரைசல் அரிக்கும் தன்மையால் கடும் காயத்தை ஏற்படுத்தும். வினிகர் சாரம் (80% அசட்டிக் அமிலம்) மற்றும் கிளேசியல் அசட்டிக் அமிலம் (90%) ஆகியவையே அடர்த்தி மிகுந்த அசட்டிக் அமிலங்கள். இவை கடுமையான கண் காயங்களை உருவாக்கும்.

பிற நச்சு வேதிப்பொருட்கள்:

பிற வேதிப் பொருட்களால் ஏற்படும் கண் காயங்கள் அமில மற்றும் காரங்களால் ஏற்படும் காயங்களை விட கடுமை குறைந்தவையே.

கண்ணீர் வரவழைக்கும் பொருட்கள்: இந்த வேதிப்பொருட்கள் கண் அரிப்பை ஏற்படுத்தும்.

பொதுவான கண்ணீர் வரவழைக்கும் பொருட்கள்:

 • கண்ணீர்ப்புகை: குளோரோ அசெட்டோ ஃபீனோன், குளோரோ பென்சைலிடின் நலனோநைட்ரைல் அல்லது டைபென்சாக்சாசெபைன் ஆகியவையே பொதுவாகக் காணப்படும் வேதிப்பொருட்கள். கலவரங்களைக் கட்டுப்படுத்தக் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப் படுகிறது. கண்ணில் இது படும்போது கொட்டும் கண் வலி, நீரொழுகுதல் மற்றும் கண் திறக்க முடியாத நிலை ஏற்படும்.

வேதித் தெளிப்பான் (சுத்திகரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகையும் வேதிக் கரைசலும் கொண்ட அபாயமற்ற தெளிப்புப்பொருள்): இவை பல காரணிகளைப் பொறுத்து சிறியதும் பெரியதுமான கண் காயங்களை ஏற்படுத்தக் கூடும். இதிலுள்ள கண்ணீர் வரவழைக்கும் வேதிப்பொருளான குளோரோஅசெட்டோஃபீனோனே காயத்துக்கான காரணம். கண்களில் இருந்து தெளிப்பானின் தொலைவு, கண்னுக்குள் புகும் வேதிப்பொருளின் அளவு, படும் நேரம், இயல்பான அனிச்சை செயல்களின் தன்மை, வேதிப்பொருளைப் பீய்ச்சும் பொறிநுட்பம் ஆகியவற்றைப் பொறுத்து கடுமையின் விகிதம் இருக்கும். தொடர்ந்து வேதிப்பொருட்கள் கண்ணில் படுமானால், கண்பரப்பு மேல்செல் இழப்பு, கடுமையான தொடர் திசுவலை வீக்கம், உட்படலச் சிதைவு, திசுவலை மறைப்பு மற்றும் வெண்படல புதுக்குழல் உருவாக்கம் ஆகியவை ஏற்படும்.

 • மிளகுப்பொடி வீசுதல்: கலவரம் அடக்கவும் தற்பாதுகாப்புக்கும் மிளகுப்பொடி பயன்படுத்தப்படுகிறது. இதனால் கொட்டும் கண் வலியும், நீரொழுகலும் கண்திறக்க இயலாமையும் உருவாகும்.
 • கடுகுமண வாயு (டைகுளோரோடையீதைல் சல்பைடு): இந்த நச்சு வாயு வேதிப்போரில் பயன்படுத்தப்படும். இது கண்சவ்வு எரிச்சலையும் ஒட்டும் கண்ணையும் ஏற்படுத்தும். நீடித்த அழற்சியும் வெண்படலச் சிதைவும் உருவாகும்.

வேதிப்பொருட்களும் இந்தியப் பண்டிகைகளும்:

ஹோலி: ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி அல்லது மார்ச் மாதத்தில் வண்ணப்பண்டிகையான ஹோலி கொண்டாடப்படுகிறது. இயற்கை வண்ணங்களுக்குப் பதிலாக மக்கள் தீங்களிக்கும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான இவை ஆக்சிஜனேற்ற உலோகங்கள் அல்லது தொழிற்சாலை சாயங்களாகும். இவை தரமற்ற எண்ணெய்யுடன் சேர்க்கபடுகின்றன. கார அடிப்படையிலான பெரும்பான்மை நீர் வண்ணங்கள் தீங்கு தருவனவாகும்.

பல நிறங்களைத் தரும் வேதிப்பொருட்கள்:

 • காப்பர் சல்பேட்டு: பச்சை நிறத்தை அளிக்கிறது.
 • குரோமியம் அயோடைடு: பழுப்பு நிறத்தை அளிக்கிறது.
 • அலுமினியம் புரோமைடு: வெள்ளை மஞ்சள் சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
 • மெர்க்குரி சல்பைடு: சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
 • கண்ணாடிப் பொடி: மினுமினுப்பை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தீபாவளி: இது ஒரு தலையாய இந்தியப் பண்டிகை. விளக்குகள் கொழுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் இது கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசுகள் தீங்கு தருபவை.

பட்டாசுகளில் வேதிப்பொருட்கள்:

 • சல்பர் டையாக்சைடு
 • காட்மியம்
 • காப்பர்
 • லெட்
 • மக்னீசியம்
 • நைட்ரேட்டு
 • நைட்ரைட்டு

மத்தாப்புகளில் மக்னீசியம் ஹைடிராக்சைடு காணப்படுகிறது. கடுமையான காயங்கள் வெப்பம் மற்றும் வேதிப்பொருட்களால் உண்டாகின்றன.

கார்பண்டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மாசுப்பொருட்கள் பட்டாசுகளில் இருந்து வெளிப்படுகின்றன.

நோயுடற்கூறியல்

காரம்:

வேதிப் பொருளின் கண்ணுக்குள் ஊடுறுவும் திறனைக் கொண்டே கண் காயத்தின் கடுமை தீர்மானிக்கப்படுகிறது. அமிலத்தை விட காரமே வேகமாகக் கண்ணுக்குள் ஊடுறுவும் இயல்பு கொண்டது.

ஹைடிராக்சைல் (OH) எதிர்மின்மம் பிளாஸ்மாப் படலங்களைக் கொழுப்பிறுக்கம் (சவுக்காரமாக்கல்) செய்கிறது. இதனால் செல் இடையூறும் செல்லிறப்பும் ஏற்படுகின்றன. காரத்தின் ஊடுறுவும் தன்மைக்கோ நேர்மின்மமே காரணம். வன் காரங்களால் அதிக ஊடுறுவல் ஏற்படும். பின் வரும் காரணங்களில் ஏறுவரிசையில் இத்தன்மை காணப்படும்: கால்சியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடிராக்சைடு, சோடியம் ஹைடிராக்சைடு, அம்மோனியம் ஹைடிராக்சைடு. அம்மோனியம் ஹைடிராக்சைடு கண்னில் பட்டு சில நொடிகளிலும், சோடியம் ஹைடிராக்சைடு பட்டு 3-5 நிமிடங்களிலும் கண் நீர்ம pH மாற்றம் தென்படும். pH 11.5 ஐ விட அதிகம் ஆகும் போது திருப்ப முடியாத திசு மாற்றங்கள் ஏற்படும்.

கார காயத்தின் போது எதிர்மின்மம் திசுவலையில் உள்ள கார்பாக்சைல் (COOH) மற்றும் கிளைகோசா - அமினோகிளைகானின் குழுக்களோடு வினைபுரிகின்றன. கிளைகோசா – அமினோகிளைகானின் நீரேற்றம் அடையும் போது திசுவலையம் தெளிவு இழக்கும். தசைநார்ப்புரத நாரிழைகள் நீரேற்றம் அடைவதால் தாங்குதிசு வலைப்பின்னல் சளிந்து புரோஸ்டோகிளாண்டின் வெளிவிடப்படுகிறது. இந்த நோய்ப்பின் விளைவுகள் இணைந்து உட்கண் அழுத்தத்தை (IOP) உருவாக்குகிறது.

அமிலங்கள்:

பொதுவாக காரங்களைப் போன்று அமிலங்கள் வெண்படல திசுவலையத்தை உடனடியாக ஊடுறுவுவதில்லை. pH மாற்றமைவால் ஏற்படும் சேதாரத்தை ஹைடிரஜன் மின்மம் இடைநின்று ஊக்குவிக்கிறது. எதிர்மின்மமோ வெண்படல மேல்தோலிலும் முன் திசுவலையத்திலும் உள்ள புரதத்தைப் படிவும் இயல்புநீக்கமும் செய்கிறது. மேல்தோல் புரதப் படிவு மேலும் ஊடுறுவாமல் தடுக்கும் தடுப்புச் சுவராக ஓரளவுக்குத் திகழ்கிறது. இருப்பினும் ஓர் அமிலம் திசுவலையத்தை ஊடுறுவும்போது கண் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதாரம் காரக் காயம் போலவே இருக்கும்.

அமிலக் காயத்தால் ஏற்படுபவை:

 • புறசெல் கிளைகோசா-அமினோகிளைகான் படிவு
 • வெண்படல ஒளிபுகாமை
 • தாங்குதிசு வலைப்பின்னல் சளிதல்
 • முன்னறை pH மாற்றம்
 • முன்னறை அமைப்புகளில் சேதம்
 • கண்ணீர்ம அஸ்கார்பேட் அளவில் குறைவு
 • குழல் சிதைவால் குருதியூட்டக் குறை காயம்

அமிலங்களும் காரங்களும் வெண்படலத்தில் ஊடழுத்தச் சிதைவை உருவாக்கக் கூடும். வேதியல் சிதைவால் ஊடழுத்தத்தில் பெரும் மாற்றங்கள் விளைவதால் செல் செயலிழப்பும் சிதைவும் ஏற்படலாம். வெண்படலத்துக்குக் குறைவான தாக்கக்குறைப்பு திறனே இருப்பதால் பலவிதமான வேதியல் மற்றும் நச்சு பாதிப்புகளுக்கு எதிராக மிகக் குறைந்த பாதுகாப்பே உள்ளது. தாக்கக் குறைப்புத் திறன் கூடுமேயானால் உயிர்வேதியல் செயல்முறைகள் உடனடியாக நின்று போகும். எ-டு: புரதத் தொகுப்பு.

காயம், சீரமைப்பு மற்றும் வேறுபடுத்தல்

கண் பரப்பு

காயத்தைத் தொடர்ந்து மிகத் தொலைவில் உள்ள செயல்படும் புறத்திசுசெல்களில் இருந்து மையம் நோக்கி செல்கள் செல்வதைப் பொறுத்தே குணமடைதல் அமையும். காயத்தின் பரப்பே சீரமைக்கும் புறத்திசுச் செல்களின் ஆதாரத்தைத் தீர்மானிக்கும். சிறு பகுதி அல்லது முழு வெண்படல புறத்திசு இழப்பு முறையே அருகில் உள்ள வெண்படல புறத்திசு செல்கள் அல்லது லிம்பசில் இருந்தே மறுசீர் அமைக்கப்படுகின்றன. முழு வெண்படலம் அல்லது லிம்பசில் புறத்திசுசெல் இழப்பு இருந்தால் பின்னர் கண்சவ்வே சீரமைப்ப்ற்கான ஒரே புறத்திசுசெல் ஆதாரம். புறத்திசுசெல்கள் மறுபடியும் சீரமையும் விகிதம் மற்றும் சீரமைந்த புறத்திசு செல் வகையை ஆதார புறத்திசுசெல்களே தீர்மானிக்கின்றன.

வேதியல் காயத்தைத் தொடர்ந்து புறத்திசுசெல் சீரமைப்பு விகிதத்தைப் பாதிக்கும் காரணிகள்:

 • வலிய தொடர் அழற்சி பதில்வினை
 • மேற்திசுசெல் அடிப்படலக் கட்டமைப்புச் சிதைவு

நுண்கிருமி தாக்குதல் ஆபத்து இருப்பதால் ஆறாத வெண்படல மேற்திசு காயங்கள் ஆபத்தானவை.

திசுவலையம்:

கடுமையான வேதியல் காயங்களால் திசுவலையக் கெராட்டோசைட்டுகள் குறைவுபடுகின்றன. இதனால் நார்ப்புரதம் கரைந்து நார்ப்புரத இழைநார்கள் பலவீனம் அடையும். இதன் மூலம் கட்டமைப்பு குலையும். வெண்படலப் புண்னும் துளையும் உண்டாகக் கூடும். வெண்படல தசைவலையம் நிலையாக இருக்கவும் மறுசீரடையவும் கெராட்டோசைட்டுகள் இன்றியமையாதவை. வெண்படலக் காயத்தைத் தொடர்ந்து அருகில் இருக்கும் திசுக்களில் உள்ள கெராட்டோசைட்டுகள் சிதைவடைந்தப் பகுதிகளுக்கு நகரும். நார்ப்புரதக் கூட்டிணைவுக்கு கெராட்டோசைட்டுகளே காரணமானவை. காயத்துக்குப் பின் நார்ப்புரத உற்பத்தி 7-56 நாட்கள் வரை தீவிரமாக இருக்கும். காயம்பட்ட 21-ஆம் நாள் உச்ச கட்டத்தை அடையும். நார்ப்புரத கூட்டிணைவுக்கு அஸ்கர்பேட் அவசியம். வேதியல் காயத்தைத் தொடர்ந்து இந்தச் செயல்முறை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அழற்சி

வேதியல் காயத்தினால் அழற்சியைத் தூண்டும் பொருட்களும், அழற்சி செல்களும் காயமடைந்தத் திசுக்களை ஊடுறுவும். இந்த அழற்சி பதில்வினை முக்கியமானது. ஏனெனில், வலிமையான மற்றும் தொடர் பதில்வினையால் காயம் ஆறும் தன்மை பாதிக்கப்படும்.

இரு அழற்சி அலைகள் கடும் வேதியல் காயத்தின் இயல்பாகும். முதல் அலை முதல் 24 மணி நேரத்திலும் இரண்டாவது அலை காயம் பட்ட 7 வது நாளில் தொடங்கி 2 அல்லது 3 வாரத்தில் உச்சத்தைத் தொடும். முதல் அலையின் தீவிரம் இரண்டாவது அலைக்கு முக்கிய மானதாகும். வெண்படல சிதைவு மற்றும் சீரமைவின் உச்ச கட்டத்தில் இரண்டாம் அலை ஏற்படும். இதனால் திசுவலைய நொதிச் செரிமானம் அற்ற தன்மைக்கு உதவும். வெண்படல திசுவலையத்தில் அழற்சி செல்கள் இல்லாத போது கிருமியற்ற புண்களும் இருக்காது.

நோய்கண்டறிதல்

கீழ் வருவனவற்றைப் பொறுத்து கண் காயத்தின் கடுமை அமையும்:

 • வேதிப்பொருளின் நச்சுத்தன்மை
 • வேதிப்பொருள் கண்ணில் படும் கால அளவு
 • ஊடுறுவலின் ஆழம்
 • பாதிக்கப்படும் பகுதியின் பரப்பு

நோய்கண்டறிதலுக்குத் தேவை:

மருத்துவ வரலாறு:

 • எப்போது காயம் ஏற்பட்டது
 • கண் கழுவப்பட்டது எனில் எவ்வளவு நேரம்
 • காயம் ஏற்பட்ட விதம் (வேதிப்பொருள் அழுத்தத்தில் இருந்ததா)
 • வேதிப்பொருளின் தன்மை
 • கண் பாதுகாப்பு எதுவும் இருந்ததா

மருத்துவப் பரிசோதனை

கண் பரிசோதனை செய்வதற்கு முன் இரு கண்ணிலும் pH சோதிக்கப்பட வேண்டும். pH ஐ பாதுகாப்பான 7 மற்றும் 7.2 அளவுகளுக்கு இடையில் கொண்டு வரும் வரை கண்களுக்குப் போதிய அளவு கரைசல் இட வேண்டும்.

லிம்பஸ், வெண்படலம், குமிழ்/இமைசார் கண்சவ்வு பாதிக்கப்பட்டுள்ள அளவை மதிப்பிடுதலே ஆரம்பக் கட்டம் ஆகும். பின்னர் செய்யப்படும் மதிப்பீட்டிற்கும் சிகிச்சைக்கும் இது உதவும்.

இமைசார் பிளவுகள் சோதிக்கப்பட வேண்டும். வளைமுகடு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் துகள்கள் எதுவும் தங்கி இருந்தால் தொடர்ந்து சேதாரத்தை ஏற்படுத்தும். ஒளிர் சாயத்தின் கீழ் கண்கள் சோதிக்கப்பட வேண்டும். உட்கண் அழுத்தம் பதிவு செய்யப்பட்டு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வேதியற்காயம் ஏற்பட்ட உடனேயே அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். வகைப்படுத்தலைப் பின்னர் வைத்துக்கொள்ளலாம். நிலைமை சரியானவுடன், முக்கிய அம்சங்களை ஆய்ந்து வேதியற் காயத்தின் போக்கைத் தீர்மானிக்க வேண்டும். காரப்பொருளால் ஏற்பட்ட காயத்தின் முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டு பதிவு செய்வதன் மூலம் தகுந்த சிகிச்சையையும் துல்லியமான நோய்முன் கணிப்பையும் செய்யலாம். முடிந்தால் நிழற்படப் பதிவையும் செய்யலாம்.

வேதியற்காயங்களை மருத்துவ ரீதியாக தரப்படுத்தல்

புறத்திசுசெல் பாதிப்பு: 2% ஒளிர்சாயம் இட்டு பாதிப்பின் அளவையும் வடிவையும் அளக்கவும். கண்சவ்வு புறத்திசெல் பாதிப்பு எதுவும் இருந்தாலும், குறிப்பாக லிம்பல் அடிசெல்கள், இணைத்துக் கொள்ளவும். கண்ணின் வளைமுகட்டுக்குள் செல்வது உட்பட, அனைத்து புறத்திசுசெல் பாதிப்புகளையும் ஆவணப்படுத்தவும்.

வெண்படல திசுவலைய ஒளிபுகாமை: பேனாவொளி சோதனை மூலம் வெண்படல திசுவலைய ஒளிபுகாமையை தரப்படுத்தவும்:

 • தரம் 0: தெளிவான வெண்படலம்.
 • தரம் 1: இலேசான வெண்படல மூட்டம்
 • தரம் 2: இலேசானதில் இருந்து மிதமான ஒளிபுகாமை
 • தரம் 3: மிதமான ஒளிபுகாமை.
 • தரம் 4: மிதமானதில் இருந்து கடுமையான ஒளிபுகாமை. கருவிழி வலையமைப்பு அமைப்புகள் தெளிவாகத் தெரியும். கண்பாவை தெரியும்.
 • தரம் 5: கடும் வெண்படல ஒளிபுகாமை. பேனாஒளியில் கண்பாவை புலனாகாது.

லிம்பசைச் சுற்றி குருதியூட்டக் குறைபாடு: இதை ஆவணப்படுத்தக் கண்சவ்வு வெண்மையாகும் மணிநேரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். இப்பகுதிகளில் கண்சவ்வும் விழிவெளிப்படல மேலுறையும் இரத்தக் குழாய்கள் இல்லாமல் இருக்கும். குறைந்த காயங்களோடு கூடிய வெண்மையோடு வைத்து இதைக் குழப்பக் கூடாது. அதில் விழிச்சவ்வு வீக்கமும் குருதியுறைந்த இரத்தக்குழாய்களும் காணப்படும். ஆனால் கண்சவ்வின் ஒரு பகுதி செயல்படக் கூடியதாக இருக்கும். வெண்படல அடி செல் எவ்வளவுதூரம் சிதைவு அடைந்துள்ளது என்பதை அறிய லிம்பசைச் சுற்றியுள்ள வெண்மை உதவும். இதன் மூலம் அடியில் அமைந்திருக்கும் சிலியரி பொருள் மற்றும் சிறுதாங்கு வலைப்பின்னலில் ஏற்பட்டிருக்கும் சிதைவை கணிக்கலாம். இவற்றை ஆவணப்படுத்துவதன் மூலம் வெண்படல அடிசெல் மாற்று தேவைதானா என்பதை துல்லியமாகக் கணிக்க முடியும்.

சூழ்பகுதிகள்: இமைக்கும் முறை, வெண்படலப் பாதிப்பு மற்றும்/அல்லது இமைமூடாமை ஆகியவற்றை அளந்து ஆவணப்படுத்தல்.

காரப்பொருளால் ஏற்படும் காயங்களை ஹியூக்ஸ் வகைப்படுத்தியுள்ளார். பின்னர் இது பேலன் (1963), ரோப்பர் – ஹால் (1965) மற்றும் ஃபிஸ்ட்டர் அனையோரால் (1982) மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இவற்றோடு வரைபடங்களும் நிழற்படங்களும் உள்ளன. இவை காரப்பொருட்களால் ஏற்படும் காயத்தின் அளவெல்லையைக் காட்டும். மேற்கண்ட அளவீடுகளையும் கண்டுபிடிப்புகளையும் இவற்றோடு ஒப்பிட்டு நோக்கலாம். நோய்த்தடுப்புக்கும் சிகிச்சைத் திட்டங்களுக்கும் ஆரம்ப கணிப்புகளின் துல்லியம் முக்கியமானது ஆகும்.

வேதியல் கண் காயத்தை வகைப்படுத்தல்:

துயா (2001), கண் பரப்புத் தீக்காயத்தை வகைப்படுத்தி அளித்துள்ளார். வெண்படலத் தோற்றம், கண்சவ்வுப் பாதிப்பு, பாதிக்கப்பட்ட லிம்பஸ்/கண்சவ்வுப் பாதிப்பு சதவிகிதம் ஆகியவற்றை மணிக்கணக்குப்படி உருவக அளவீட்டில் பதிவுசெய்த லிம்பல் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நோய்த்தடுப்பும் அளித்துள்ளார். கண்சவ்வு முகட்டை உள்ளடக்கி அது வரையிலான கண்சவ்வுப் பாதிப்பை குமிழ் கண்சவ்வுக்கு மட்டுமே அளவீடு செய்ய வேண்டும்.

தரம் I: தரம் I-ல் லிம்பல் பாதிப்பு 0 கடிகார மணிநேரம், கண்சவ்வு பாதிப்பு 0 %, உருவக அளவீடு 0/0 % மற்றும் நோய்முன்கணிப்பு மிக நன்று ஆகும்.

தரம் II: தரம் II -ல் லிம்பல் பாதிப்பு 3 கடிகார மணிநேரத்தை விட குறைவு, கண்சவ்வு பாதிப்பு 30 %-ஐ விடக் குறைவு, உருவக அளவீடு 0.1- 3/ 1- 29.9% மற்றும் நோய்முன்கணிப்பு நன்று ஆகும்.

தரம் III: தரம் III -ல் லிம்பல் பாதிப்பு 3-6 கடிகார மணிநேரம், கண்சவ்வு பாதிப்பு 30-50 %, உருவக அளவீடு 3.1- 6/ 31- 50% மற்றும் நோய்முன்கணிப்பு நன்று ஆகும்.

தரம் IV: தரம் IV -ல் லிம்பல் பாதிப்பு 6-9 கடிகார மணிநேரம், கண்சவ்வு பாதிப்பு 50- 75%, உருவக அளவீடு 6.1- 9/ 51- 75% மற்றும் நோய்முன்கணிப்பு நன்று முதல் குறிப்பாகக் கூற முடியாது வரை ஆகும்.

தரம் V: தரம் V -ல் லிம்பல் பாதிப்பு 9-12 கடிகார மணிநேரம், கண்சவ்வு பாதிப்பு 75%-100%, உருவக அளவீடு 9.1- 11.9/ 75- 100% மற்றும் நோய்முன்கணிப்பு குறிப்பாகக் கூற முடியாது முதல் மோசம் வரை ஆகும்.

தரம் VI: தரம் VI -ல் முழுமையான லிம்பல் பாதிப்பு (12 கடிகார மணிநேரம்), கண்சவ்வு பாதிப்பு 100%, உருவக அளவீடு 12/ 100% மற்றும் நோய்முன்கணிப்பு மிக மோசம் ஆகும்.

மெக்கல்லி (1987) வேதியல் காயத்தின் மருத்துவப் போக்கை 4 கட்டங்களாகப் பகுத்தார்:

 • உடனடிக்கட்டம்
 • கடுங்கட்டம் (0-7 நாட்கள்)
 • ஆரம்ப ஈடுகட்டும் கட்டம் (7-21 நாட்கள்)
 • பின் ஈடுகட்டும் கட்டம் (21 நாட்களுக்கு மேல்)

வேதியல் காயம் ஏற்பட்ட உடன் கிடைக்கும் மருத்துவக் கண்டறிதலைக் கொண்டு கடுமையையும் நோய்முன்கணிப்பையும் தீர்மானிக்கலாம்.

ஹியூக்ஸ் (1946) வகைப்பாடு (மாற்றியமைக்கப்பட்டது: பேலன் 1963, ரோப்பர்-ஹால் 1965 மற்றும் ஃபிஸ்ட்டரும் பிறரும் 1982): வெண்படலத் தோற்றம் மற்றும் லிம்பல் குருதியூட்டக்குறைவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நோய்முன்கணிப்புக்கு வழிகாட்டுதலை அளிக்கிறது. ரோப்பர்-ஹால் வகைமுறை 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பொதுவாக நடைமுறையில் உள்ளதும் ஆகும்.

தரம் I காயம்: தரம் I காயத்தில் வெண்படல மேற்திசு சிதைவு இருக்கும். லிம்பல் குருதியோட்டக் குறைவு இருக்காது. நோய் முன் கணிப்பு சிறப்பாக இருக்கும்.

தரம் II காயம்: தரம் II காயத்தில் வெண்படலம் மூட்டமாக இருக்கும். ஆனால் கண்பாவை அம்சங்கள் புலனாகும். குருதியோட்டக் குறை லிம்பசின் மூன்றில் ஒரு பங்கு காணப்படும். நோய் முன் கணிப்பு சிறப்பாக இருக்கும்.

தரம் IIIகாயம்: தரம் IIIகாயத்தில் மொத்த மேற்திசு இழப்பும், திசுவலை மூட்டம் மற்றும் அம்சங்கள் புலனாகா நிலை, லிம்பசில் மூன்றில் ஒன்றில் இருந்து அரைப்பாகக் குருதிய்யோட்டக் குறை இருக்கும். நோய் முன்கணிப்பு குறிப்பிட்டு கூறத்தகாததாக இருக்கும்.

தரம் IV காயம்: தரம் IV காயத்தில் வெண்படலம் ஒளிபுகா நிலையிலும் கண்பாவை மற்றும் கருவிழி புலனாகாதும், லிம்பசின் அரைபாகத்துக்கும் மேலாக குருதியோட்டக் குறையும் இருக்கும். நோய் முன்கணிப்பு மோசமாக இருக்கும்.

கடும் கட்டத்தில் (முதல் வாரம்): தரம் I காயங்கள் ஆறும்; தரம் II காயங்களில் ஒளிபுகாமை மறைந்து மேற்திசு முழுவதுமாக வளரும். மிகவும் கடுமையான பாதிப்புகளில் மருத்துவ ரீதியான தோற்றத்தில் மாற்றம் இருக்காது. மேற்திசு வளர்ச்சி தாமதம் ஆகும் அல்லது மறுவளர்ச்சி நின்று போகும். கோலஜெனும் கோலஜெனேசும் உற்பத்தியாவதால் கெரட்டோசைட் ஊடுறுவல் நிகழும். இதனால் மென்மை அடைந்து துளைவிழும் அபாயம் ஏற்படும்.

பின் ஈடுகட்டும் கட்டம்: காயமடைந்த கண்களை மறு புறத்திசு வளர்ச்சி இரண்டு தொகுதியாகப் பிரிக்கும்:

 • முதல் தொகுதி: புறத்திசு ஒன்றில் முற்றிலும் வளர்ந்திருக்கும் அல்லது நிறைவுறும் நிலையில் இருக்கும். லிம்பல் அடி செல் மிதமாக இருக்கும். வெண்படலம் உணர்விழப்பு, குடுவை செல்/சளிசார் கோளாறுகள் மற்றும் மேற்திசு அடித்தளப் படல மறுவளர்ச்சிக் கோளாறுகள் நீடிக்கும்.
 • இரண்டாம் தொகுதி: கண்சவ்வு மேற்திசுவில் இருந்து வெண்படல மறு மேற்திசு வளர்ச்சியில் லிம்பல் அடி செல் சிதைவு விளைகிறது. இத் தொகுதியில் மிக மோசமான நோய்முன்கணிப்பு காணப்படும். புதுக்குழல் வளர்ச்சி மற்றும் வடுவுறல், குடுவை செல்/சளிசார் குறைபாடு மற்றும் தொடர்/நிலை அரிப்புகளால் கடுமையான கண்பரப்பு சிதைவு ஏற்படும். இமையுட்பிறழல், இமைமயிர் இடமாறல், இமைசார் மற்றும் குமிழ் கண்சவ்வு ஒட்டுதல் போன்றவை உருவாகும். புண் இல்லை எனில் ஒரு நார்-குழல் படலம் எழலாம். இது பார்வை மீளலைப் பாதிக்கும்.

வகையீட்டுக் கண்டறிதல்:

 • கண்களுக்கு வெப்பத் தீப்புண்.
 • புற ஊதாக் கதிர்வீச்சு வெண்படல அழற்சி
 • வெண்படல ஒளிபுகாமைக்கு பிற காரணங்கள்
 • கண் வடுதோல் குமிழ்

நோய் மேலாண்மை

மருத்துவ கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பார்வை மீட்புக்கான தயாரிப்பு: பார்வை மீட்புக்கான தயாரிப்பு காயம் பட்ட உடனேயே தொடங்கப்பட வேண்டும். தக்க தருணத்தில் செய்யப்படும் தீவிரமான சிகிச்சை மறுவாழ்வு முயற்சியின் போது உறுதியான வெற்றியைத் தீர்மானிக்கும்.

தொடர் மேலாண்மையில், காயம்பட்ட ஆரம்ப நாட்கள் மற்றும் மாதங்களில், அவசரகால சிகிச்சை, அழுத்தக் கட்டுப்பாடு, அழற்சியைக் கட்டுப்படுத்துதல், திசுவலை சீரமைப்பைத் தீவிரப்படுத்துதல், இமை-கண்கோள இணக்கத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

உட்கண் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வெளிப்பூச்சு மற்றும் வாய்வழி அன்ஹைட்ரேஸ் தடுப்பிகள் மற்றும் வெளிப்புற பீட்டா தடுப்பிகள் தொடர்ந்து முக்கிய மருந்துகளாகத் திகழும். கண்ணழுத்தநோய்க்கான வடித்தல் அறுவையின் வெற்றியை நார்செல் தடுப்பு மைட்டோமைசின் சி மேம்படுத்தும். ஒன்று அல்லது மேற்பட்ட அறுவை தோல்வி அடைந்தால் வடிகால் முறையை நடைமுறைப்படுத்தலாம்.

பனிக்குடப் படல மாற்று, வெண்படல மேற்திசு அடிசெல் மாற்று, வெண்படல அறுவை, பெரும் விட்ட மடிப்பிதழ் வெண்படல அறுவை மற்றும் செயற்கை வெண்படல மாற்று ஆகியவை அறுவை சிகிச்சையில் அடங்கும்.

மருத்துவ சிகிச்சை:

அவசரகால மேலாண்மை:

கண்களைக் கழுவுதல்: உடனடியாகக் கண்களைக் கழுவி தங்கி நிற்கும் வேதியல் போருட்களை அகற்றுதல் அவசர கால நடவடிக்கை ஆகும். முன் அறைக்குள் வேதிப்பொருள் ஊடுறுவலைக் குறைத்து அது தொடர் காயத்துக்கு ஒரு சேமிப்பு ஆதாரமாக விளங்குவதைத் தடுப்பதே நோக்கமாகும். நிகழிடத்தில் அதிக அளவில் தண்ணீரை விட்டுக் உடனடியாகக் கழுவுதல் ஒரு முக்கிய சிகிச்சை ஆகும். இமைகளைத் திறந்து வைத்து 1-2 லிட்டர் நீரால் குறைந்தது 30 நிமிடத்துக்குக் கழுவ வேண்டும். pH சமனாகும் வரை இதைத் தொடர வேண்டும். இப்படிக் கழுவப்பட்ட கண்களில் குறைந்த அளவுக் காயமும் இல்லையெனில் காயம் கடுமையாக இருப்பதும் இயல்பே. ஓர் ஈரியல்பு கரைசல் கூடுதல் நன்மை தரும் என்றாலும் கிடைக்கும் எந்த ஒரு சமநிலை திரவத்தையும் அவசரத்துக்குப் பயன்படுத்தலாம். சாதாரண உப்புநீர், உப்புநீரோடு பைகார்பனேட் கலந்தது, ரிங்கர் லேக்டேட், சமநிலை உப்புக் கரைசல் (BSS)மற்றும் பி.எஸ்.எஸ் பிளஸ் ஆகியவை கழுவ ஏற்றவை. இவற்றிற்கிடையில் எந்த ஒரு சிகிச்சை வித்தியாசமும் காணப்படவில்லை. நன்றாகக் கழுவிய பின், புது மேற்திசு வளர்வதற்காக சிதைவடைந்த வெண்படல மேற்திசுவில் இருந்து சிதைவுகளை அகற்ற வேண்டும்.

சாத்தியம் உள்ள போது எல்லாம் வெளி மரப்பு மருந்துகள் இட வேண்டும். இதனால் வலியும் இமையழற்சியும் குறைந்து கண் கழுவல் எளிதாகும். இமைகளைத் திருப்பி சுத்தம் செய்யலாம். இவ்வகையில் துகள் பொருட்கள் அகற்றப்படும். சுண்ணாம்புத் துகள்களை இடுக்கியால் அகற்றலாம். எதிலெனெடிஅமினேட்ட்றாஸ்ட்டிக் அமிலத்தில் பஞ்சு முனை தடவியால் சுத்தம் செய்யும் போது கட்டியான துகள்களை அகற்ற உதவியாக இருக்கும். துகள்களை அகற்ற சிலருக்கு மயக்க மருந்து தேவைப்படலாம்.

முன்கண் நீர்ம மாற்று: வேதிப் பொருட்கள் முன்னறையை அடைந்து விட்டால் அவற்றை வெளிப்புறக் கழுவலால் அகற்ற முடியாது. முன்னறை நீர்மத்தை அகற்றிவிட்டு கழுவலாம் என்ற கருத்து விவாதத்திற்குரியது. ஆயினும், கடுமையான காயம் பட்டவர்களுக்கு, காயம் ஏற்பட்டு முதல் இரண்டு மணி நேரத்தில் முன்னறை நீர்மத்தை மாற்றுவது சரியாக இருக்கலாம்.

கடுமையான மற்றும் சீரமையும் கட்டங்கள்:

கழுவலுக்குப் பின் புறத்திசு வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். வளர்ச்சி தாமதமானால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

 • கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை: முதல் இரண்டுவாரங்களுக்கு தீவிரக் கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை அளிப்பதால் அழற்சி கட்டுப்படுத்தப்பட்டு புறத்திசு வளர்ச்சி துரிதமடையும். முதல் 10 நாட்களுக்குக் கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் பயன்படுத்துவதால் எந்த எதிர் விளைவும் இருக்காது. ஆனால் இரண்டு வாரத்துக்கும் மேலாக கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் பயன்படுத்துவதால் கெரட்டோசைட் நகர்வும் கோலஜன் உற்பத்தியும் குறைந்து திசுவலைப் புண் சீரமைவு தடைபடும்.
 • மெட்ராக்சிபுரோஜெஸ்ட்டரோன்: கோர்ட்டிக்கோஸ்டிராய்டோடு ஒப்பிடும்போது மெட்ராக்சிபுரோஜெஸ்ட்டரோன் ஒரு பலவீனமான எதிர் அழற்சி வினை புரியும் முன் கரு ஊக்கி. இது கோலஜென் உற்பத்தியைக் குறைத்தாலும், கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் போன்று திசுவலைப் புண் சீரமைவைத் தடுக்காது, வெண்படல புண் கவலை அளித்தால் இரண்டு வாரங்களுக்குப் பின் கோர்ட்டிக்கோ ஸ்டிராய்டுக்குப் பதிலாக மெட்ராக்சிபுரோஜெஸ்ட்டரோன் பயன்படுத்தலாம்.
 • வெளி மற்றும் முறையான சோடியம் அஸ்கார்பேட் (10 %): வெளி மற்றும் முறையான சோடியம் அஸ்கார்பேட் (10 %) காரத்தால் காயம் ஏற்படும் போது குறையும் முன்னறை நீர்மத்தை மறு உற்பத்தி செய்யும். கோலஜென் உற்பத்தியில் ஒரு விகிதக் கட்டுப்பாட்டுத் துணைக் காரணியாக அஸ்கார்பேட் உள்ளது. இதனால் திசுவலைப் புண்ணைக் கட்டுப்படுத்தும். குறைப்புப் பொருளான அஸ்கார்பேட் குறைவுபடுவதால் கோலஜென் தகுந்த முறையில் இணைவுறாமைக்குக் காரணமான மூலக்கூற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
 • சிட்ரேட் வெளிமருந்து (10%): சிட்ரேட் வெளிமருந்து ஒரு கால்சியம் செலேட்டர் ஆகும். இது அமிலச்சார்பற்ற செல்களில் செல்லுக்குள் இருக்கும் கால்சியம் அளவைக் குறைக்கும். இதன் மூலம் வேதியீர்ப்பு, செல் விழுங்கல் மற்றும் லைசோசோம் நொதி வெளிவிடல் ஆகிய வினைகள் பழுதாக்கப்படும். மேலும் இது வெண்படலப் புண் மற்றும் விழித்துளை ஆகியவற்றையும் குறைக்கும்.
 • வாய்வழி டெட்ராசைக்ளின்கள்: வாய்வழி டெட்ராசைக்ளின்கள் கோலஜென் சிதைவுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.

மேற் தொற்றைத் தடுக்க வெளி நுண்ணுயிர்க் கொல்லிகள் தேவைப்படும். இழைத்தசை வாத மருந்துகள் கண்ணுக்கு நலம் அளிக்கும். செயற்கைக் கண்ணீர்கள், குறிப்பாகப் பதப்படுத்திகள் அற்றவை, பொதுவான கண் அசைவிற்கான மசகளிக்கும்.

அறுவை சிகிச்சை:

கடும் வேதியல் காயத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் கண் பரப்பை சீர்ப்படுத்த முடியும்.

 • அகழறுவை: கடுமையான காயத்தின் போது அகழறுவை லிம்பல் குழலோட்டத்தை மறு சீரமைக்க உதவுகிறது. இதனால் புறத்திசு வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அகழறுவையில், சிதைவுற்ற கண்சவ்வு மற்றும் விழிவெளிப்படல மேலுறைசார் திசுக்கள் வெட்டி அகற்றப் படுகின்றன. குமிழ்திசுப்படலம் மழுங்கிய ஒரு கருவியால் கீறப்பட்டு, இதன் விளைவாகக் கிடைக்கும் இரத்த ஓட்டத்துடன் கூடிய மடல் லிம்பசுக்கு செலுத்தப்படுகிறது.
 • திசுப்பசை: வெண்படலம் மெல்லியதாகி குமிழில் நேரக்கூடிய அல்லது நேர்ந்த துளைகளில் இருந்து நிவாரணம் பெற இது உதவுகிறது. இதனுடன் பொதுவாக மென்மையான கட்டு விழிவில்லை பயன்படுத்தப்படும். பசை விலகாமல் இருக்க இது உதவும். அழற்சி செல்களும் அவற்றோடு தொடர்புடையனவும் பாதிக்காது திசுப் பசை தடுக்கும்.ஊடுறுவும் வெண்படல நோயைத் தாமதப்படுத்தவும் இது உதவுகிறது.
 • பனிக்குடப் படல மாற்று: கரசுமுரடான பரப்புகளை நிரப்பவும் அழற்சியை அழுத்தவும் அறுவை சிகிச்சைக்கு இணைப்பாக பனிக்குடப் படல மாற்று அமைகிறது. பனிக்குடப் படலம் இரத்தக் குழல் வளர்ச்சியை இயல்பாகவே தடுக்கும் தன்மை கொண்டது. அழற்சியைத் தடுக்கும் புரதங்களையும் கொண்டது. புது அடிப்படைப் படலமாக அமைந்து பனிக்குடப் படலம் புறத்திசு வளர்ச்சியை ஊக்குவிக்கும். வேதியல் காயம் ஏற்பட்டு அவசர சிகிச்சைகளைத் தொடர்ந்து சிலவாரங்களிலேயே பனிக்குடப் படலத்தைப் பொருத்தலாம். நன்மைகள் இருந்தாலும் வெண்படல அடி செல் தேவையைப் பனிக்குடப் படலம் ஈடு செய்ய இயலாது.
 • வெண்படல அடிசெல் மாற்று: வேதியல் காயத்தால் இழந்த அடிசெல்களை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி ஈடுகட்டுதல் இயல்பான மற்றும் உறுதியான வெண்படலப் புறத்திசு செல் அடுக்கை மறுசீரமைக்க முக்கியமானதாகும். இந்த மெதுவாக சுழற்சியுறும் முந்தைய அடி செல்கள் லிம்பல் பகுதியில் அமைந்துள்ளன.

ஒருகண் காயத்தில் காயம்படாத மறுகண்ணில் இருந்து அடிசெல்களைப் பெற்றுக்கொள்ள இடம் இருக்கிறது.

இருகண் காயம் ஏற்பட்டால், உறவற்ற வழங்குநராக இருந்தும் ஓரின லிம்பல் திசு மாற்று சிகிச்சை மூலம் பெற்ற லிம்பல் திசுவால் அடிசெல் எண்ணிக்கையைப் பெருக்க இயலும் என பிஃஸ்ட்டெர்(1993) நிறுவினார். ஒட்டப்பட்ட ஓரின வெண்படல அடி செல்களை பெறுபவரின் நோய்த்தடுப்பு செயல்முறைகள் ஒதுகாதபடி முறையான நோய்த்தடுப்பு அழுத்திகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் உ-ம்., சைக்ளோஸ்போரின்.

வெண்படல மாற்று:

சீரமைப்பு வெண்படல அறுவை வெற்றியை உறுதிப்படுத்துபவை:

- இயல்பான இமைப்பின் போது இமை – கோள இணக்கம் மற்றும் வெண்படலம் மூடப்படாமை. இயல்பான இமை இயக்கத்தை மறுசீரமைக்க இமையிணைவைப் பிரித்தல், ஒருபுறம் மூடிய இமை திறத்தல் மற்றும் இமைமூடலை நீக்கல் ஆகையவை தேவைப்படும்.

- கண்ணீர்ப்படலத் தன்மையும் அளவும்.

- வெண்படலத்துக்கு மேற்திசு அடிசெல் புறத்தோற்ற இருப்பு

- தற்போதைய புண், அழற்சி மற்றும் /அல்லது கண்ணழுத்தம் இல்லாமல் இருத்தல்.

- பிழையற்ற அறுவை நுட்பம்

- புது வெண்படல மற்றுத் திசு

அதி ஆபத்துள்ள நோயாளிகளுக்கு லிம்பசின் இரத்தக் குழல்களில் அறுவைக்கு முந்திய லேசர் பயன்பாடு விவாதத்துகுரியது என்றாலும் அறுவையின் போது அது இரத்தப் போக்கைக் குறைக்கிறது.

ஒரு வேதியல் காயத்திற்குப் பின் வெண்படல அறுவை 18 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை தாமதமானால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது, குறிப்பாக ஏற்கெனவே புண், துளை மற்றும் கண்ணழுத்தம் இல்லாமல் இருந்தால்.

ஊடுறுவும் வெண்படல அறுவை: பாதிக்கப்பட்ட வெண்படலத்தை முற்றிலுமாக ஒரு கொடையாளரிடம் இருந்து பெற்ற வெண்படலத்தால் மாற்றுவதே ஊடுறுவும் வெண்படலம் என அழைக்கப்படுகிறது. அடித்தள ஆதாரத்தை வழங்கவும் (வெண்படல மெலிவு அல்லது துளை) பார்வைத் திறனை மேம்படுத்தவும் (வெண்படல வடு மாற்றல்) ஊடுறுவும் வெண்படல அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரும் விட்ட ஊடுறுவும் வெண்படல அறுவை: முழு வெண்படலத்தையும் அருகில் உள்ள அடிசெல்களையும் முற்றிலுமாக மாற்றப் பெரும் விட்ட ஊடுறுவும் வெண்படல அறுவை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகையப் பெரும் விட்ட ஊடுறுவும் வெண்படல அறுவையால் நார்க்கற்றை வெளியேற்ற கால்வாய்கள் அடைபட்டுக் கண்ணழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. லிம்பல் இரத்தக் குழாய்களுக்கு அருகில் இருந்தால் நோய்த்தடுப்பு ஆற்றலால் மறுக்கப்படவும் வாய்ப்புண்டு.

பெரும் விட்ட மடல் வெண்படல அறுவை: 12 அல்லது 13 மி.மீ. மடல் வெண்படல மாற்றுடன் லிம்பல் புறத்திசு அடி செல் மாற்று சிகிச்சை வேதியல் காயங்களுக்கு நல்ல பலனளிக்கும் உத்தியாகும். ஆழமான வெண்படலப் புண், திசுவலை நலிவு மற்றும் வெளிப்படையான வெண்படலத் துளைகள் ஆகியவற்றிற்கு சிறு மடல் மற்று பயன் தருவதாக இருக்கும்.

செயற்கை வெண்படலம்: கடுமையான நேர்வுகளில் பார்வையைத் திரும்பப் பெற முழு வெண்படல மாற்றே ஒரே வழி.

இதற்கான அடையாளங்களாவன:

- வெண்படலத்தில் மிகையான குழல்வளர்ச்சி

- வெண்படல திசு மாற்று திரும்பத் திரும்பத் தோல்வியுறல்

- நீடித்த லிம்பல் அடிசெல் குறைபாடு

- இமை அமைப்பைத் திரும்பப் பெற இயலாமை

கண்சவ்வு மாற்று: நார்த்தன்மை பெற்ற கண்சவ்வு வளைவை சீரமைத்தலே கண்சவ்வு மாற்று எனப்படும். பிற சளிச்சவ்வு மாற்றைப் போல் அல்லாமல் இது இணக்கமான திசுவை அடைப்படலமாக வழங்குகிறது. பாதிக்கப்படாத கண்ணில் இருந்து ஒரு மாதிரி குமிழ் கண்சவ்வை எடுத்தல் இந்த முறையில் அடக்கம் ஆகும்.

 • உள்வாய் மற்றும் உள்மூக்கு சளிச்சவ்வு மாற்று: இமை இணைவு, இமைப்பிறழ்வு, இணை இமைமுடி அல்லது இமை உட்பிறழலுக்கு உள்வாய் சளிச்சவ்வு ஒட்டைப் பயன்படுத்தலாம். இந்த ஒட்டுத்திசு பொதுவாக மேல் அல்லது கீழ் உதடுகளின் பின் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. பெரிய அளவுக்கான ஒட்டு இதன் மூலம் கிடைப்பதே இதன் அனுகூலம்.

வேதியல் காயத்துக்குப் பின் கண் குணமடையும் கட்டங்கள் (கோல்பி, 2010):

 • ஆரம்பக் கட்டம் (நாள் 0): மருத்துவக் கண்டுபிடிப்புகள் காயத்தின் கடுமையை உணர்த்தும். லிம்பல், வெண்படல மற்றும் கண்சவ்வு பாதிப்பைப் பொறுத்து தரப்படுத்தப்படும்.
 • கடும் கட்டம் (நாள் 0-7): போதுமான அளவுக்கு பாதிப்படையாத லிம்பல் அடிசெல் இருந்தால் புறத்திசு மறுவளர்ச்சி தொடங்கும். வளர்ச்சியை ஊக்குவிப்பதும் அழற்சியைக் கட்டுப்படுத்தலுமே சிகிச்சையின் நோக்கம்.
 • ஆரம்பப் பழுதுநீக்கும் கட்டம் (நாட்கள் 7-21): இந்தக் கட்டத்தில் வெண்படல/கண்சவ்வு புறத்திசுவும் கெரட்டோசைட்டுகளும் பெருகும். சிறு காயங்களில் முழு மறு மேற்திசு வளர்ச்சியும் கடுமையான காயங்களில் நிலையான குறைபாடுகளும் காணப்படும்.14-21 நாட்களில் கோலஜென் சிதைவு காணப்படும். அதே நேரத்தில் உற்பத்தியும் தொடரும். சிதைவைக் கட்டுப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குதலே சிகிச்சையின் முயற்சியாக இருக்கும்.
 • பிந்தியப் பழுதுநீக்கும் கட்டம் (21 நாட்களுக்குப் பின்): இலேசான காயங்களில் லிம்பல் அடிசெல் எண்ணிக்கை கட்டுக்குலையாமல் இருந்தால் பழுதுநீக்கம் முழுமை பெறும். குறிப்பிட்டப் பகுதியில் இருக்கும் அடி செல் இழப்புள்ள காயங்களில் அந்தப் பகுதியில் வெண்படலத்தின் மேல் கண்சவ்வு வளர்ச்சி ஏற்படும். இன்னும் கடுமையான காயங்களில் வெண்படலத்தில் புறத்திசு வளர்ச்சி தாமதம் ஆகும். இதன் விளைவாக ஒன்றில் மீண்டும் கண்சவ்வுப் புறத்திசு அதிகரிக்கும் அல்லது திசுவலை புண்னும் நிரந்தர வடுவும் உண்டாகும். கடுமையான லிம்பல் சிதைவு இருந்தால் சிறந்த சிகிச்சைக்குப் பின்னும் கண்ணைக் காப்பாற்ற முடியாது.
 • கண்ணீர் ஊக்கிகளின் பாதிப்பிற்கான மேலாண்மை: கண்ணீர்ப் புகையோ வேதியல் புகையோ கண்ணைப் பாதித்தால் நன்றாகக் கழுவும்போது பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்.
 • மிளகுப்பொடி வீச்சு: தண்ணீரால் கழுவும்படி ஆலோசனைக் கூறப்பட்டாலும், மிளகுப்பொடி தண்ணீரில் கரையாது என்பதால் இதில் பயன் இல்லை. அரைப்பகுதி திரவ ஆண்டாசிடும் (அலுமினியம் அல்லது மக்னீசியம் ஹைடிராக்சைடு) அரைப்பகுதி தண்ணீரும் கலந்த கரைசலால் கண்னீரைக் கழுவுதல்.
 • டைகுளோரோடைமீதைல் சல்பைடு: பாயும் நீர் அல்லது சாதா உப்புநீரில் கண் கழுவுதல் பயன்தரும். தொடர்புடைய வெண்படல பாதிப்புகளுக்க்ய் பூச்சுக்கொல்லிப் புறமருந்துகள், சைக்ளோபிளஜிக் மற்றும் மசகு மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.

விழாக்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் காயங்களுக்குத் தண்ணீராலும் உப்புநீராலும் கழுவுவது நலம் தரும்.

நோய்முன்கணிப்பு:

கடும் நோய்களை முன்கணிகத்தல் கடினமானது. கண் பரப்பு மேற்திசு, வெண்படலம் மற்றும் முன்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் வெண்படலத்தின் அமைப்பை பற்றிய அறிவிலும், மருத்துவ அறிவிலும் தற்போது நிலவும் முன்னேற்றத்தால் முன்கணித்தலில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இறுதிப் பார்வைத்திறன் முன்கணித்தலைத் தீர்மானிப்பவை:

 • வேதியல் காயத்தின் தன்மை
 • கண்சேதத்தின் அளவு
 • மருத்துவம் தொடங்கிய நேரம் மற்றும் சிகிச்சைத் திறன்.

சிக்கல்கள்

கண்ணில் ஏற்படும் வேதியல் காயங்களால் நேரக்கூடிய சிக்கல்களும் நோயின் பின்விளைவுகளும்:

இமைகள்:

 • மெய்போமியன் துளைகள் பின் நகர்தல்
 • இமைமயிர் உட்சுருளல்
 • வடுவுறும்
 • கண்ணிமைத் துருத்தல்
 • வடுவுறும்
 • கண்ணிமை உட்பிறட்சி
 • இமைமூடாமை
 • இமையிணைவு

கண்பரப்பு:

 • உலர் கண்
 • குடுவை செல் இழப்பு
 • கண்ணீர் மண்டலச் சிதைவு
 • வெண்படல வடு
 • வெண்படலப் புதுக்குழல் வளர்ச்சி
 • லிம்பல் அடி செல் குறைபாடு
 • இமைஇணைவு
 • வெண்படலத் துளை
 • உட்கண் அழற்சி
 • தொடர் வெண்படல அரிப்பு
 • ஆறாத மேற்திசு குறைபாடு
 • நுண்ணுயிர் வெண்படல அழற்சி

கண்ணழுத்தம் கூடுதல்:

 • இரண்டாம் கட்ட கண்ணழுத்தம்

உட்கண் அமைப்புகள்:

 • நிலைத்த விரிவடைந்த பாவை
 • கருவிழி இரத்த ஓட்டத் தடை
 • பிசிர்ப்பொருள் மூடலோடு உட்கண் அழுத்தக் குறைவு
 • கண்புரை
 • விழித்திரை விடுபடல்
 • விழிக்கோள சுருக்கம்

தடுப்புமுறை

பணி இடத்தில் வேதியல் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்தக் கல்வியும் பயிற்சியும் கண் காயம் ஏற்படுவதைத் தடுக்கும்.

பாதுகாப்புக் கண்ணாடிகளைப் பொதுவான பாதுகாப்பிற்காக அணியலாம். ஆயினும் வெடித்துச் சிதறும் வேதியல் காயங்களுக்கு இந்த நடவடிக்கைகளும் போதுமானவை அல்ல.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate