பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்ணழுத்த நோய்

கண்ணழுத்த நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பல நோய்க்காரணிகளை உள்ளடக்கிய கண் கோளாறுகளின் ஒரு தொகுதியே கண்ணழுத்த நோய் என்று அழைக்கப்படுகிறது. உள்விழி அழுத்தத்தால் உண்டாகும் நரம்புக் கோளாறே இதன் நோய்க்கூறு ஆகும். கண்ணுக்குள் அதிகமாகும் திரவ அழுத்தம் பொதுவாக இதனோடு தொடர்புடையது. அதிகமான உள்விழி அழுத்தமே (21 mmHg or 2.8 kPa-க்கு மேல்) முக்கியமான மாறுபடும் ஆபத்துக் காரணியாகும். ஆயினும் பலருக்குப் பல ஆண்டுகளாக கண்ணழுத்தம் இருந்து வந்தாலும் எந்தச் சிதைவும் ஏற்படாது. ஒரு சிலருக்குக் குறைந்த கண் அழுத்தத்திலும் கண் சிதைவு உண்டாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் விழிநரம்புக்கு சேதாரம் ஏற்பட்டு நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

கண்ணழுத்த நோயின் வகைகள்:

கண்ணழுத்த நோயில் நான்கு முக்கிய வகைகள் உண்டு:

 • நாட்பட்ட திறந்த-கோண கண்ணழுத்த நோய் – இதுவே பரவலான வகை. இது மெதுவாக அதிகரிக்கும்.
 • முதன்மை மூடிய-கோண கண்ணழுத்த நோய் – இது அபூர்வமானது. மெதுவாகவும் (நாட்பட்ட) விரைவாகவும் (கடுமையானது) திடீரென உண்டாகும். வலிதரும் கண்ணழுத்தம் ஏற்படும்.
 • இரண்டாம்நிலை கண்ணழுத்த நோய் – இது காயத்தாலும் விழிநடு படல அழற்சியாலும் ஏற்படும்.
 • வளர்ச்சிநிலை அல்லது பிறவி கண்ணழுத்த நோய் – இதுவும் மிக அரிய வகை ஆனால் ஆபத்தானது. இது பிறப்பிலேயே இருக்கும் அல்லது பிறந்து சிறிது காலத்தில் உருவாகும். இது விழியின் ஒரு அசாதாரண நிலையால் ஏற்படுகிறது.

நோயறிகுறிகள்

நாட்பட்ட கண்ணழுத்த நோய்: இவ்வகை நோய் மிகவும் மெதுவாக அதிகரிப்பதால் காணும்படியான எந்த அறிகுறியும் இருப்பதில்லை. முதலில் பக்கப்பார்வையே பாதிக்கப்படுவதால் தங்கள் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக யாரும் அறிவதில்லை. விழியின் புறவட்டத்தில் இருந்து மையத்தை நோக்கி மெதுவாகப் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பார்வை மாற்றம் வயதோடு தொடர்பு உடையது. இதனால் உங்கள் கண்களை முறையாகச் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

மூடிய-கோண கண்ணழுத்த நோய்: அறிகுறிகள் வேகமாக உருவாகின்றன, அவையாவன:

 • கடுமையான வலி
 • கண் சிவப்பு
 • தலைவலி
 • கண்பகுதியில் தோல் மென்மையாதல்
 • ஒளியைச் சுற்றி வானவில் போன்ற வளையம் தென்படுதல்
 • பார்வை மங்குதல்
 • ஒரு கண்ணிலோ அல்லது இரண்டிலுமோ பார்வை இழப்பு வேகமாக அதிகரித்தல்.

இரண்டாம் நிலை கண்ணழுத்த நோய்: இது பிற காரணங்களாலோ அல்லது விழிநடுப்படல அழற்சி போன்ற கண்காயங்களாலோ உருவாகும். பொதுவாகக் கண்ணழுத்த நோயின் அறிகுறிகளும் பிற கண் நோய் அறிகுறிகளும் ஒன்று போலவே தோன்றும். உதாரணமாக விழிநடுப்படல அழற்சியால் கண் மற்றும் தலை வலி உண்டாகும்.

வளர்ச்சிநிலை கண்ணழுத்த நோய்: இளம் வயது காரணமாக இதன் அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். இருப்பினும் கீழ்வரும் அறிகுறிகள் தென்படலாம்:

 • கண்ணழுத்தம் காரணமாக கண்கள் பெரிதாகலாம்
 • ஒளிக்கூச்சம்
 • கண்களில் நீர் வடிதல்
 • கண் துடிப்பு
 • மாறுகண்

காரணங்கள்

கண்ணின் ஒரு பகுதியில் ஏற்படும் தடங்கலே கண்ணழுத்த நோய்க்குக் காரணம். தடையின் காரணமாகத் திரவம் கண்ணில் இருந்து வடிய முடிவதில்லை. இதனால் உள்விழி அழுத்தம் அதிகரிக்கிறது.

இப்பாதிப்போடு தொடர்புடைய ஆபத்தான காரணிகள்:

வயது: வயதானவர்களுக்குக் கண்ணழுத்தம் உண்டாகும் அபாயம் அதிகம்.

இனம்: ஆப்பிரிக்க அல்லது ஆப்பிரிக்க காரிபியன் இன மூலம் உடையவர்களுக்கு நீடித்தத் திறந்த-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும் அபாயம் அதிகம். ஆசிய இன மூலம் கொண்டவர்களுக்குக் கடும் மூடிய-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும் ஆபத்து உள்ளது. மருத்துவ வரலாறு – நீரிழிவு நோய் கொண்டவர்களுக்குக் கண்ணழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு கூடுதலாகும். கண்ணில் மிகை அழுத்தம் இருந்தால் நீடித்த திறந்த-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும்.

குடும்ப வரலாறு: பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்குக் கண்ணழுத்த நோய் இருந்தால் நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

நோய் கண்டறிதல்

கண் பரிசோதனை செய்து கண்ணழுத்த நோயைக் கண்டறியலாம்.

சோதனைகள் வருமாறு:

 • உள்விழி அழுத்தத்தை அழுத்தமானியால் அளக்கலாம்
 • கண்ணின் அளவு வடிவம் ஆகியன நோக்கப்படும்
 • முன்விழியறை கோணச்சோதனை மற்றும் விழிநரம்பு ஆய்வு மூலம் சிதைவுகள் ஆராயப்படுகின்றன.

நோய் மேலாண்மை

கண் சொட்டு மருந்துகள் மூலம் உள்விழி அழுத்தத்தைக் குறைக்கலாம்.

 • புரோஸ்டாகிளாண்டின் அனலாக்குகள் (Prostaglandin analogs): லேற்றனோப்ராஸ்ட் (latanoprost-Xalatan), பிமட்டோப்ராஸ்ட் (bimatoprost-Lumigan) போன்ற இம்மருந்துகள் முன்விழி நீர்ம வெளியேற்றத்தை அதிகரிக்கின்றன. நார்த்தசைப் பின்னல் நீர்ம வெளியேற்றத்தைப் பிமட்டோப்ராஸ்ட் அதிகரிக்கிறது.
 • டாப்பிக்கல் பீட்டா-அட்ரீனர்ஜிக் ரிசப்டார் ஆண்டகோனிஸ்ட்டுகள் (Topical beta-adrenergic receptor antagonists): டிமோலால் (timolol), லெவொபுனோலால், (levobunolol-Betagan), பீட்டாக்ஸாலோல் (betaxolol) போன்றவை சிலியரித் திசுவால் உற்பத்திச் செய்யப்படும் முன்விழிநீர்ம அளவைக் குறைக்கிறது.
 • ஆல்பா 2- அட்ரீனர்ஜிக் அகோனிஸ்ட்டுகள் (Alpha2-adrenergic agonists): பிரிமோனிடைன் (brimonidine-Alphagan), அப்ராக்ளோனிடைன் (apraclonidine) போன்ற மருந்துகள் இருவழிகளில் செயல்புரிகின்றன. அவை ஒருபுறம் முன்விழி நீர்ம உற்பத்தியைக் குறிக்கின்றன; மறுபுறம் நீர்ம வெளியேற்றத்தை அதிகரிக்கின்றன.
 • குறை தேர்வு ஆல்பா இயக்கிகள் (Less-selective alpha agonists): எஃபினேஃப்ரைன் (epinephrine) போன்ற  மருந்துகளும் நுண் இரத்தக் குழாய்களைச் சுருக்கி முன்விழி நீர்ம உற்பத்தியைக் குறைக்கின்றன. இவை திறந்த-கோண கண்ணழுத்த நோய்க்கே பயனுள்ளவை. கண்நீர்மங்கள் வெளியேறுவதை எஃபினேஃப்ரைன் மேலும் குறுக்குவதால் இது மூடிய-கோண கண்ணழுத்த நோய்க்கு பொருந்துவதில்லை (அதாவது, முன்விழி நீர்மங்களை உறிஞ்சும் பணியைச்செய்யும் நார்த்திசு அமைப்பை இம்மருந்து மேலும் மூடி விடுகிறது).
 • கண்மணிச் சுருக்கும் மருந்துகள்: பைலோகார்ப்பைன் (pilocarpine) போன்ற மருந்துகள் நுண்திசுக்களைச் சுருக்கியும் நார்த்திசு கட்டமைப்பைத் திறந்தும் முன்விழிநீர்மங்கள் அதிக அளவில் வெளியேற வகை செய்கின்றன.

இது குறிப்பான தகவல் மட்டுமே. சிகிச்சைகளுக்கு உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

தடுப்பு முறை

பார்வை இழப்பே கண்ணழுத்த நோயின் முக்கிய சிக்கலாகும். எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளிப்பது முக்கியமானது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்

2.91935483871
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top