பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்லீரல் அழற்சி

கல்லீரல் அழற்சி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினால் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறிகளுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.

ஆறு மாதங்கள் வரை இருப்பது குறைந்த கால அளவினது.

அதற்கு மேலுல் இருப்பது நீடித்த வகையாகும்.

கல்லீரல் அழற்சி நுண்ணுயிரிகள் எனப்படும் ஒரு வைரசுகளின் தொகுதியால் இது ஏற்படுகிறது என்றாலும், நச்சுப் பொருட்களினாலும் (முக்கியமாக மதுவினாலும், சிலவகை மருந்துகளினாலும், சில தொழிற்சாலை கரைப்பான்களாலும், தொழிற்சாலைகளினாலும் கூட), பிற தொற்று நோய்களாலும், தம்மைத்தாமே கட்டுப்படுத்திக் கொள்ளும் நோய்களாலும் ஏற்படுகிறது.

கல்லீரல் அழற்சி நோய்களின் வகைகள்: பொதுவான கல்லீரல் அழற்சி நோய்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கல்லீரல் அழற்சிநோய் A: இது கல்லீரல் அழற்சி நுண்ணுயிரி A யால் உண்டாகிறது. நுண்ணுயிரியினால் உண்டாகும் கல்லீரல் அழற்சியில் இதுவே பரவலான வகையாகும். இது பொதுவாக சுகாதாரமற்ற இடங்களிலும் சாக்கடை வசதி குறைபாடு உள்ள இடங்களிலும் ஏற்படும். இந்நோய் பெரும்பாலும் வாய்வழிக் கழிவுகளினாலும் மலக் கழிவுகளினாலும் பரவுகிறது. இது பொதுவாகக் குறைந்த கால அளவினதாகும். இதன் அறிகுறிகள் மூன்று மாதத்திற்குள் மறைந்துவிடும். அறிகுறிகளை நீக்கும் இபுபுரூஃபன் போன்ற வலிகுறைப்பான்களைக் கொடுப்பதைத் தவிர இந்த A வகை கல்லீரல் அழற்சிக்கு வேறு மருத்துவம் எதுவும் இல்லை. இந்நோயைத் தடுக்கும் தடுப்பூசி உண்டு. இந்நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கும் இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, தொலை கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் ஒருவருக்கு இத்தடுப்பூசி பரிந்துரை செய்யப்படுகிறது.

கல்லீரல் அழற்சிநோய் B: இது கல்லீரல் அழற்சி நோய் நுண்ணுயிரி B யால் ஏற்படுகிறது. இது இரத்தத்திலும், இரத்த நீர்மங்களான விந்து, பெண்ணுறுப்புக் கசிவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. எனவே பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது போதைப் பொருள் செலுத்தும் ஊசி ஆகியவைகளால் பரவுகிறது. போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களிடம் இது பரவலாகக் காணப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாகவும், சீனா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியா, சகாராவை ஒட்டிய ஆப்பிரிக்க பகுதிகள் போன்ற உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான நோயாளிகள் இந்த வகையான நுண்ணுயிர்களை எதிர்த்து நின்று இரண்டொரு மாதங்களில் முற்றிலுமாகக் குணமடைய முடியும். இந்த நோயுடன் வாழ்வது சுகமாக இல்லாவிட்டாலும் இது பெரும்பாலும் நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் ஒரு சிலருக்கு இது நீடித்த நோயாக உருவாகும் வாய்ப்புள்ளது. இது குறுகிய காலக் கல்லீரல் அழற்சி— B என்று அழைக்கப்படுகிறது. இதற்குத் தடுப்பூசி உண்டு. போதைப் பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவோருக்கு இந்நோய் தாக்கும் ஆபத்து உள்ளதால் இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லீரல் அழற்சிநோய்—C:

இது கல்லீரல் அழற்சி நுண்ணுயிரி C யால் ஏற்படுகிறது. இது நோயால் பாதிக்கப்படவரின் இரத்தத்திலும் சிறுபான்மை எச்சில், விந்து, பெண்ணுறுப்புக் கசிவுகளிலும் காணப்படுகிறது. இந்நுண்ணுயிரி குறிப்பாக இரத்தத்திலேயே அடர்த்தியாகக் காணப்படுவதால் பெரும்பாலும் இரத்தத் தொடர்பினாலேயே தொற்றுகிறது. கல்லீரல் அழற்சி நோய்க்கு வெளிப்படையான அறிகுறிகள் பெரும்பாலும் தென்படுவதில்லை. அல்லது சளிகாய்ச்சலுக்கு (ஃபுளூ) உரிய அறிகுறிகள் எனத் தவறாக எண்ணக்கூடிய அறிகுறிகள் தோன்றுவதில்லை. இதனால் பெருவாரியான மக்கள் இந்நோயை அறிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் இந்த நுண்ணுயிரிகளை எதிர்த்து நின்று நோயில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள். மற்றவர்களின் உடலில் இந் நுண்ணுயிரி பல ஆண்டுகள் நிலைத்து வாழலாம். இதுவே நாட்பட்ட கல்லீரல் அழற்சி C என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளால் சிகிச்சை செய்யலாம். ஆனால் சில எதிர் விளைவுகள் தவிர்க்க முடியாதவை. கல்லீரல் அழற்சி C வகைக்குத் தற்போது எவ்விதத் தடுப்பு மருந்துகளும் இல்லை.

மதுவால் உண்டாகும் கல்லீரல் அழற்சி

தொடர்ந்து நீண்ட நாட்களாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அழற்சி உண்டாகலாம். இது மதுவால் ஏற்படும் கல்லீரல் அழற்சி எனப்படும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஓரளவிற்கு மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிகுறியும் இருக்காது. பெரும்பாலும் இரத்தப் பரிசோதனையில் கண்டறியப்படும். தொடர்ந்து மது அருந்தினால் ஈரல்நோய் ஏற்பட்டு கல்லீரல் செயலிழக்கக் கூடும்.

அரியவகை கல்லீரல் அழற்சிகள்:

கல்லீரல் அழற்சி D: கல்லீரல் அழற்சி D வைரசால் உண்டாகிறது. இது ஏற்கெனவே கல்லீரல் அழற்சிநோய் B-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கே ஏற்படுகிறது (உங்கள் உடலில் கல்லீரல் அழற்சி B வைரஸ் இருந்தால் மட்டுமே  இது நிலைத்திருக்க முடியும்).

கல்லீரல் அழற்சி E: கல்லீரல் அழற்சி E வைரசால் ஏற்படும் அரிய வகை நோயான இது கடுமையற்ற குறுகிய காலத் தொற்றாகும். இதுவும் வாய் மற்றும் மலக் கழிவுகளால் பரவுகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுவது மிகவும் அபூர்வமாகும்.

தன்தடுப்பாற்றல் கல்லீரல் அழற்சி (Autoimmune hepatitis): இது நீடித்து நிலைக்கும் அரிய வகை கல்லீரல் அழற்சி நோய் ஆகும். இரத்த வெள்ளணுக்கள் கல்லீரலைத் தாக்கி நீடித்த அழற்சியையும் சிதைவையும் ஏற்படுத்துகின்றன. இது கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளைக்குக் கொண்டு செல்லும். இந்த எதிர்வினைக்கான காரணம் தெரியவில்லை. களைப்பு, வயிற்றுவலி, மூட்டுவலி, மஞ்சள் காமாலை (தோல் மற்றும் விழிவெண்திரை மஞ்சளாதல்), ஈரல்நோய் போன்றவை இதன் நோய்க்குறிகள். நோய்த்தடுப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி அழற்சியைக் குறைக்க மருந்துகள் அளிப்பதே தன்தடுப்பாற்றல் கல்லீரல் அழற்சிக்கான சிகிச்சை. பல வாரங்கள் ஊக்கியங்கள் (பிரட்னிசோலோன்) உட்கொண்டு வீக்கத்தைக் குறைத்துப் பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நோயறிகுறிகள்

தொற்றால் ஏற்படும் கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் சளிக்காய்ச்சலைப் போன்றதே. அவற்றுள் அடங்குவன:

 • தசை, மூட்டு வலி
 • கடுமையான காய்ச்சல்: 38C (100.4F) அல்லது அதற்கும் மேல்
 • நோய் இருப்பது போல் உணர்தல்
 • தலைவலி
 • எப்போதாவது கண்களும் தோலும் மஞ்சளாதல் (மஞ்சள் காமாலை).

நாட்பட்ட கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளில் அடங்குவன:

 • எப்போதும் களைப்பாக உணர்தல்
 • மனவழுத்தம்
 • மஞ்சள் காமாலை
 • பொதுவாகவே நோயிருப்பது போலவே உணர்தல்

காரணங்கள்

கீழ்க்காணும் வைரசுகள் கல்லீரல் அழற்சியை உண்டாக்குகின்றன:

 • ஹெப்பாட்னாவிரிடே: கல்லீரல் அழற்சி B
 • ஹெப்பேவிரிடே: கல்லீரல் அழற்சி E
 • பிக்கோர்னாவைரசஸ்: எக்கோவைரஸ்
 • கல்லீரல் அழற்சி A : கல்லீரல் அழற்சி அனபிளாஸ்மா, நோகார்டியா போன்ற மேலும் பல.
 • மது போன்ற பிற காரணிகள்
 • தன் தடுப்பாற்றல் நிலைகள்: சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமேட்டோசஸ் (systemic lupus erythematosus)
 • மருந்துகள்: பாரசெட்டமால், அமாக்சிசிலின், காசநோய் எதிர்ப்பு மருந்துகள், மோனோசைக்கிளின் போன்ற பல
 • குருதியோட்டக்குறை கல்லீரல் அழற்சி
 • வளர்சிதைமாற்ற நோய்கள்: வில்சனின் நோய்
 • கர்ப்பம்

நோய் கண்டறிதல்

கல்லீரலின் செயல்பாட்டை உயிர்வேதியல் மதிப்பீடு செய்தே கல்லீரல் அழற்சி கண்டறியப்படுகிறது.

 • ஆரம்ப ஆய்வக மதிப்பீட்டில் பிலிருபின், ALT, AST, அல்கலைன் பாஸ்பேட்டேஸ், புரோதோம்பின் டைம், முழு புரதம், அல்புமின், முழு இரத்த எண்ணிக்கை, இரத்த உறைதல் ஆய்வு ஆகியவை அடங்கி இருக்க வேண்டும்.
 • எலிசா சோதனையால் கண்டுபிடிக்கப்பட்ட எதிர்- HCV செயல்விளக்கத்தைப் பொறுத்தே கல்லீரல் அழற்சி  C  கண்டறிதல் அமைந்துள்ளது.
 • கல்லீரலின் சிதைவு அளவை அறிய கல்லீரல் திசுச் சோதனை நடத்தப்படுகிறது.

உங்கள் சந்தேகங்களுக்கு மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

நோய் மேலாண்மை

 • நோயறிகுறிகளில் இருந்து நலம் பெற படுக்கையில் ஓய்வு, மது அருந்தாமல் இருப்பது, மருந்துகள் உட்கொள்ளுவது அவசியம்.
 • கல்லீரல் அழற்சி A யும்  E யும் உள்ள பலர் சில வாரங்களில் தாங்களாகவே நலமடைவார்கள்.
 • கல்லீரல் அழற்சி  B-க்கு லேமிவுடைன், அடேஃபோவிர் டிபிவோக்சில் போன்ற மருந்துகளால் சிகிச்சை தரப்படுகிறது.
 • கல்லீரல் அழற்சி  C –க்கு பெகிண்டெர்ஃபெரான், ரிபோவாரின் ஆகிய மருந்துகளை சேர்த்தளித்து சிகிச்சை தரப்படுகிறது.
 • கல்லீரல் அழற்சி B, C, அல்லது D யால் கல்லீரல் செயலிழந்தால் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யலாம்.

இவை குறிப்பான செய்திகளே. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

தடுப்புமுறை

கல்லீரல் அழற்சி A: குழந்தைகளுக்கான தடுப்புமருந்து (1-18 வயது) இரண்டு அல்லது மூன்று தடவையாகத் தரப்படுகிறது. வயது வந்தவர்களுக்கு முதல் கட்ட தடுப்பு மருந்துக்குப் பின் 6-12 மாதங்களில் ஒரு தடவை செயலூக்கத்திற்காக கொடுக்க வேண்டும். இத் தடுப்பு மருந்து 15-20 ஆண்டுகள் வரை வீரியத்தோடு இருக்கும் என்று எண்ணப்படுகிறது.

கல்லீரல் அழற்சி B: பாதுகாப்பான பயனளிக்கும் தடுப்பு மருந்துகள் கல்லீரல் அழற்சி B-க்கு 15 ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் காப்பளிக்கின்றன. 18 வயதுள்ள குழந்தைகளும் தொற்றுக்கான சாத்தியக் கூறு கொண்ட பெரியவர்களும் தடுப்பு மருந்து எடுக்க வேண்டும் என்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தற்போது அறிவுறுத்தியுள்ளது. முழுப்பாதுகாப்புக்கு 6-12 மாத கால அளவில் மூன்று முறை தடுப்பூசி இட வேண்டும்.

பொதுவாக:

கழிவறைக்குப் போய்வந்த பின்னும் உணவு உண்ணும் முன்னும் கைகளைக் கழுவவும்.

பரவலைத் தடுக்கும் மரப்பால் ஆணுறைகளைப் பயன்படுத்தவும்

ஒருவருக்கு இட்ட மருந்தூசிகளைப் பிறருக்கு பயன்படுத்த வேண்டாம்.

பற்குச்சி, சவரக்கத்தி, நகவெட்டிகளைத் தொற்று உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.07894736842
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top