অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

காது பிரச்சனைகளை சமாளிக்கும் முறைகள்

காது பிரச்சனைகளை சமாளிக்கும் முறைகள்

காது

இந்த இரண்டு எழுத்து உறுப்பு ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும்கூட மிக அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால்தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது. மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு, மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல காரணங்களால் இப்போது காது பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

காதுவலிக்குக் காரணம்

காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும். மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண்  உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.

காதில் சீழ் வடிந்தால்

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற `ஈஸ்டாக்கியன் குழல்’ (Eustachian tube) வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும். பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளிக்காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பநிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம் கடத்தினால், ‘டிம்பனாஸ்டமி’ (Tympanostomy) எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

காதில் குரும்பி சேர்ந்தால்

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி (Ear wax). காதுக்குள் `செருமோனியஸ்’ சுரப்பிகள் (Ceremonious glands) உள்ளன. இவைதான் காதுக்குள் ஒருவித திரவத்தைச் சுரந்து, குரும்பியாக மாறி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடி தடுப்பது, இந்தக் குரும்பி தான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

குரும்பியை அகற்றுவது முறைகள்

குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அதை அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாக குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட் களுக்கு விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்து விடும் என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

காது குடைவது

காதுக்குள் ஏதாவது பிரச்னை என்றால், உடனே நாம் கையில் எடுக்கும் பொருள் `பட்ஸ்’தான். காதுக்குள் குரும்பி சேர்ந்தால் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இந்த முயற்சி, குரும்பியை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. மாறாக, செவிப்பறையைத் தாக்கிப் புண்ணாக்கிவிடும். ஆகவே, கையில் தொடக்கூடாத ஒரு பொருள் உண்டென்றால் அது `பட்ஸ்’தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது. ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால்,  செவிப்பறை பழுதடைந்து, பின்னொரு நாளில் காது கேட்காமல் போகும்.

காதுக்குள் அந்நியப் பொருள்

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையை சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி அதில் இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு,  தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றாதீர்கள். அப்படிச்செய்தால், அது காதைப் பாதிக்கும்.

காது சொட்டு மருந்து

காதுவலி, காது அடைப்பு, காது இரைச்சல் என்று காதுப் பிரச்னை எதுவானாலும் உடனே காதில் ஒரு சொட்டு மருந்தை ஊற்றிக்கொள்வது சிலருக்குப் பழக்கம். இதனால் அவர்களுக்கு ஆபத்துதான் வருமே ஒழிய காதுக்குப் பாதுகாப்பு ஏற்படுவதில்லை. நம் காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்க வேண்டிய உறுப்பு. அதில் அவசியமேயின்றி எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஒன்றை ஊற்றி ஈரமாக வைத்திருந்தால், காற்றில் கலந்து வரும் பூஞ்சைக் கிருமிகள் (Fungal infection) அதில் உட்கார்ந்து கொள்ளும். அரிப்பை உண்டுபண்ணும். காது அடைத்த மாதிரி தோன்றும். காதுவலி, காதில் சீழ் வடிவது என்று பிரச்னைகள் தொடரும். இறுதியில், காது கேட்பது குறையும். ஆகவே, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி காதில் சொட்டு மருந்து ஊற்றுங்கள். நீங்களாக எந்த மருந்தையும் காதுக்குள் ஊற்றாதீர்கள்.

காது கேளாமை

அதீத சத்தம்தான் காது கேளாமைக்கு முக்கியக் காரணம். பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. 90 டெசிபல் சத்தத்தைத் தினமும் எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும். வெடிச் சத்தம் போன்ற 140 டெசிபல் சத்தத்தை சில விநாடிகள் கேட்டாலே காது பாதிக்கப்படுவது நிச்சயம். ஆகவே, விமான நிலையம், ஜெனரேட்டர் ஓடுகின்ற தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.

இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம் அல்லது `இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம். `இயர் மஃப்’ (Ear Muff) அணிந்து கொள்ளலாம். சிலருக்கு நடுக்காதிலுள்ள அங்கவடி எலும்பு பாதிக்கப்படும்போது (Otosclerosis) காது கேட்காது. இதனை குணப்படுத்த ‘ஸ்டெபிடெக்டமி’ (Stapedectomy) எனும் அறுவை சிகிச்சை உள்ளது. பழுதடைந்த எலும்பை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உலோகத்தாலான எலும்பைப் பதித்துவிடுவார்கள். இதன் பலனால் காது கேட்கும்.

பிறவியிலேயே காது கேளாமை

பரம்பரைக் கோளாறு, நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொள்வது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடும் சில மாத்திரைகள், கர்ப்பிணிக்குத் தட்டமை வருவது போன்றவை குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேளாமையை ஏற்படுத்துகின்றன, கணவருக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும், மனைவிக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தமாகவும், குழந்தைக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும் இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பிறவிச் செவிடு உண்டாகலாம். அடுத்து, குழந்தைக்கு ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல் இந்தப் பிரச்னையை உண்டுபண்ணும்.

என்னென்ன பரிசோதனைகள்

காது கேளாமையின் விகிதத்தை மதிப்பீடு செய்ய ‘ஆடியோகிராம்’ மற்றும் ‘இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி’ (Impedance audiometry) ஆகிய அடிப்படை பரிசோதனைகள் உள்ளன. காது கேளாமையை இவற்றில் முழுமையாக மதிப்பீடு செய்ய முடியாதபோது, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி கண்டுபிடிக்கும் ‘பெரா’ (பிரெய்ன் ஸ்டெம் எவோக்டு ரெஸ்பான்ஸ் - Brain stem Evoked Response Audiometry BERA) என்று ஒரு பரிசோதனை செய்யப்படும். பாதிக்கப்பட்டவரை உறங்க வைத்து செய்யப்படும் இந்த நவீன பரிசோதனை மூலம் காது கேளாமையை மிகத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்யமுடியும்.

ஹியரிங் எய்டு எப்போது அவசியம்

காது கேளாமைக்கு அடிப்படை காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒலி அலைகள் காதுக்குள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவது. அடுத்து, ஒலி மின்னலைகள் மூளைக்குள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவது. முதலில் சொல்லப்பட்டது பெரும்பாலும் வெளிக்காது கோளாறால் வருகிறது. ஆகவே, இதை `ஹியரிங் எய்டு’ மூலம் சரிபடுத்திக்கொள்ளலாம். `ஹியரிங் எய்டு’ என்பது வெளி உலகச் சத்தங்களை பன்மடங்குப் பெரிதாக்கிக் காதுக்குள் அனுப்பும் ஒரு ஆம்ப்ளிஃபயர். கேட்கும் திறனை சற்றுக் கூடுதலாக்க இது உதவும். இரண்டாவதாக சொல்லப்பட்டது காக்ளியா அல்லது செவி நரம்பு செயல்படுவதில் ஏற்படும் சிக்கலால் வருவது.

இதன் காரணமாக சிலருக்கு ஓரளவு காது கேட்காமல் போகலாம் அல்லது முழுவதும் காது கேட்காமல் போகலாம். பிறவியிலிருந்தே குழந்தைகளுக்கு ஓரளவு காது கேட்பதாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் `ஹியரிங் எய்டு’  கருவியைப் பொருத்திவிட வேண்டும். அப்படியும் காது கேட்கவில்லை என்றால், `காக்ளியர் இம்பிளான்ட்’(Cochlear implant)டைப் பொருத்திக்கொள்ள வேண்டும்.

காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை

பிறவிச் செவிடாக இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு உள்காதில் உள்ள காக்ளியாவில் தான் குறைபாடு இருக்கும். இதை ஒரு வயதுக்குள் கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இவர்களுக்கு `காக்ளியர் இம்பிளான்ட்’ எனும் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலமும் அதைத் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி கொடுப்பதன் மூலமும் இதைச் சரி செய்துவிடலாம். தமிழக அரசு இதை இலவசமாகவே செய்துகொள்ள உதவுகிறது. முதுமை மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக செவி நரம்பு பாதிக்கப் பட்டு காது கேட்காது. இதைக் குணப்படுத்துவது சிறிது சிரமம்தான்.

காது இரைச்சல்

முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல் (Tinnitus) கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் காது இரைச்சலுக்கு வழிவிடுகிறது. தவிர, காதுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைவதால், செவி நரம்பு பாதிப்பதால், செவிப்பறை மீது அழுக்குப்படிந்து அழுத்துவதால், காதில் அடிக்கடி சீழ்வடிவதால், தடுமம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை… இப்படி பல காரணங்களால் காதில் இரைச்சல் உண்டாகலாம்.

காரணம் தெரிந்து அதற்கான சிகிச்சை தரப்படும்போது இது குணமாகும். இதனால் சரியாகாதபோது ‘ஒலி மருத்துவம்’ (Sound Therapy) மூலம் சிகிச்சை தரப்படும், வாக்மேனின் இயர்போன் மாதிரி ‘மாஸ்கர்’ (Masker) எனும் கருவியைக் காதில் பொருத்திவிடுவார்கள். காது

இரைச்சலுக்குச் சவால் விடுகிற மாதிரி அதைவிட அதிக டெசிபல் உள்ள ஒலியை இது உருவாக்கும். இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் இந்த ஒலி தடுத்துவிடும்.

காதின் நலன் காக்க

  1. அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும.
  2. பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று கண்டகண்ட பொருட்களை வைத்துக் காதைக் குடையக்கூடாது.
  3. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
  4. காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கை பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது.
  5. காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக்கூடாது.
  6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.
  8. சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
  9. தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
  10. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  11. தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
  12. 12. மதுவும் புகைப்பிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.

ஆதாரம் : குங்குமம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate