பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எபோலா வைரஸ் நோய்

எபோலா வைரஸ் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எபோலா வைரஸ் நோய், எபோலா குருதிப்போக்குக் காய்ச்சல் (EHF) என்றும் அழைக்கப்படுகிறது. இது குருதி மண்டலத்தைப் பாதிக்கும் வைரசால் உண்டாகும் ஒரு குருதிப் போக்குக் காய்ச்சல் ஆகும்.

 • இது மனிதர்களையும் குரங்குகளையும், மனிதக்குரங்கு வகைகளையும் பாதிக்கும் கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோயாகும்.
 • வைரசால் உண்டாகும் இந்நோய் விலங்குகளில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது.
 • எபோலா நோயாளிகளுள் 90% பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
 • எபோலா திடீர்ப் பரவல் வெப்ப மண்டல மழைக்காடுகளின் அருகில் இருக்கும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கக் கிராமங்களில் ஏற்படுவதாக அறியப்படுகிறது.
 • மிகப்பெரிய திடீர்ப் பரவலான 2014 மேற்கு ஆப்பிரிக்க எபோலா நோய்ப் பரவல் இன்றும் தொடர்கிறது. கினி, லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளை இது பாதித்துள்ளது. 2014 ஆகஸ்ட் வரை 1750-க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் இருப்பதாக ஐயம் எழுந்துள்ளது.
 • கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர கவனிப்பு தேவைப்படும். குறிப்பாக எந்த மருத்துவமும் தடுப்பு மருந்துகளும் இந்நோய்க்கு இல்லை.

வரலாறு

சூடானிலும் காங்கோ மக்கள் குடியரசிலுமே முதலில் எபோலா தோன்றியது. ஆப்பிரிக்காவின் சகாராவைச் சார்ந்துள்ள வெப்ப மண்டலப் பகுதியில் பொதுவாக இந்நோய் திடீர்ப்பரவலாக ஏற்படுகிறது. 1976-ல் இருந்து 2013 வரை ஆயிரத்துக்கும் குறைவானவர்களே ஒவ்வொரு ஆண்டும் பாதிப்படைந்தார்கள். ஜெயரிலும் சூடானிலும் நிகழ்ந்த பரவலில் முதன் முறையாக எபோலா வைரஸ் கண்டறியப்பட்டது. எபோலா நதிக்கரையில் அமைந்துள்ள காங்கோ மக்கள் குடியரசில் (முந்தைய ஜெயர்) 1976-ல் நடந்த ஒரு முதல் திடீர்ப் பரவலின்போது இப்பெயர் பெற்றது.

நோயறிகுறிகள்

எபோலா வைரஸ் நோயின் அறிகுறிகள்

 • காய்ச்சல்
 • தலைவலி
 • பலகீனம்
 • மூட்டு மற்றும் தசை வலி
 • வயிற்றுப்போக்கு
 • வாந்தி
 • வயிற்றில் வலி
 • பசியின்மை

இந்நோய் பின் இரத்தக்கசிவு கட்டத்தை அடைகிறது. கண்கள், காதுகள், மூக்கின் வழியாகவும் உடலுக்குள்ளும் இரத்தக் கசிவு உண்டாகிறது.

வைரஸ் உட்புகுந்து 2-21 நாட்களில் பொதுவாக அறிகுறிகள் தென்படும் என்றாலும் பரவலாக 8-10 நாட்களில் அறிகுறிகள் வெளிப்படும்.

காரணங்கள்

எபோலா இன வைரசுகளில் ஃபிலோவிரிடே குடும்பத்தையும் மோனோநெகவிரேல் வரிசையையும் சேர்ந்த நான்கு அல்லது ஐந்து வைரசுகள் எபோலா வைரஸ் நோயை உண்டாக்குகின்றன. மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் நான்கு வைரசுகளாவன:

 • பண்டிபக்யோ எபோலா வைரஸ்
 • ஜெயர் எபோலா வைரஸ்/ எபோலா வைரஸ்
 • சூடான் எபோலா வைரஸ்
 • தாய் வன எபோலா வைரஸ்

BDBV,EBOV,SUDV வைரசுகள் மிகவும் அபாயகரமானவை. ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பல திடீர்ப்பரவலுக்கு இவையே காரணம்.

ஐந்தாவது வைரசான ரெஸ்டோன் எபோலா வைரஸ் (Reston Ebola virus (RESTV) மனிதக்குரங்குகளில் இந்நோயை உண்டாக்குகின்றன என அறியப்படுகிறது.

நோய்பரப்பல்

அ. தொற்று பரவும் முதன்மை மூலம்- இவ்வைரசுகள் விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது. எபோலா வைரஸ் இனத்தையும், ஃபிலோவைரிடே குடும்பத்தையும் சேர்ந்த வைரஸ் மனிதனைத் தாக்குகிறது. இவ்வைரஸ் விலங்கு சார்ந்தது. வௌவால்களே தொற்றுக்கு மிக முக்கியமான பிறப்பிடமாக இருக்கலாம்.

ஆ, இரண்டாம் நிலை தொற்று மூலம்- இது மனிதரில் இருந்து மனிதருக்குக் கீழ் வருமாறு பரவலாம்:

 • தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து இரத்தம், வியர்வை, எச்சில், விந்து அல்லது வேறு உடல் கசிவுகளின் நேரடித் தொடர்பு மூலமாக
 • நோயாளிக்குப் பயன்படுத்திய ஊசிகள் போன்ற கருவிகளின் மூலம்
 • நோயாளியின் உயிரற்ற உடல் மூலமாக

பரவல் பற்றிய உண்மைகள்

 • எபோலா காற்று மூலமாகப் பரவாது
 • நீர் மூலமாகப் பரவாது
 • உணவு மூலமாகப் பரவாது

இதனால் எபோலா உணவு, நீர், காற்றின் மூலம் பரவும் நோயல்ல என்பது தெளிவாகிறது.

பாதிப்பு அபாயம்

திடீர்ப் பரவலின் போது தொற்றேற்படும் ஆபத்தில் உள்ளவர்கள்-

அ) சுகாதாரப் பணியாளர்கள்

ஆ) நோயாளியுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் குடும்பத்தினர் போன்றோர்

இ) இறந்து போனவர்களின் மரணச் சடங்கில் உடலோடு நேரடித் தொடர்பு கொள்பவர்கள்

ஈ) நோய் தாக்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோர்.

நோய்கண்டறிதல்

எபோலா வைரஸ் தொற்றின் குறிப்பான அறிகுறிகள் எதுவும் காணப்படாததால் ஆரம்ப கட்டத்தில் இந்நோயைக் கண்டறிவது கடினம். எனினும் பல ஆய்வகச் சோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறியலாம்:

 • எலிசா (Antibody-capture enzyme linked immunosorbent assay)
 • எதிர்பொருள் உருவாக்கி கண்டறியும் சோதனைகள்
 • பாலிமரேஸ் தொடர் மறுவினை (PCR)
 • உயிரணு வளர்ச்சி மூலம் வைரசைத் தனிமைப்படுத்தல்
 • மின்னியல் நுண்ணோக்கி

நோய் மேலாண்மை

எபோலா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நோய்க்குக் குறிப்பிட்ட மருத்துவம் எதுவும் இல்லை. எனினும், தீவிர ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் அடங்குவன:

 • நோயாளியின் உடல் நீர்மங்களையும் மின்பகுபொருளையும் சமநிலைப்படுத்துதல்
 • உயிர்வளி நிலையையும் இரத்த அழுத்தத்தையும் நிலைப்படுத்துதல்
 • பிற தொற்றுநோய்களுக்கு மருத்துவம் அளித்தல்

இந்நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினமாதலால் எபோலாவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முக்கியமானதாகும். ஆரம்ப நிலை அறிகுறிகளான தலைவலியையும் காய்ச்சலையும் வைத்து வேறு நோய் எனத் தவறாக முடிவெடுக்க முடியும். எந்த வகையில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டது என்று அறிய முடிவதில்லை என்பதால் நோயைத் தடுப்பது ஒரு சவாலான பணியாகும்.

இந்தியாவில் அவசரநிலை கவனிப்பு அமைப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள திடீர் எபோலா பரவல் “பொது சுகாதார அவசர நிலைக்கு இட்டுச் சென்றுள்ள மிகச் சிக்கலான நோய் பரவல்” என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது உலக சுகாதார அவசர நிலை என்பதால், அரசு ஓர் 24 மணி நேர ”அவசர தொலைபேசி செயல் மையத்தை” திறந்துள்ளது. இது மேம்பட்ட தேடி கண்காணிக்கும் அமைப்பாகும். புதுதில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமும் எபோலா நோயுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. உதவி தொலைபேசி எண்கள்: (011)- 23061469, 3205 & 1302.

தடுப்புமுறை

முதன்மையான தடுப்பு முறைகளாவன தனிமைப்படுத்தி எச்சரிக்கையாக இருப்பதும் காப்புமுறை மருத்துவப் பேணல் நுட்பங்களுமாகும்.

தனிமைப்படுத்துதல்

தொற்று நோயாளியிடம் இருந்து ஆரோக்கியமான ஒருவருக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க நேரடித் தொடர்பைத் துண்டித்து நோயாளியைத் தனிமையாக வைத்தல். பொதுவாக தனிமைக்காலம் என்பது நோயரும்பும் கால அளவாகும். எபோலா வைரஸ் நோயைப் பொறுத்த வரையில் 2-21 நாட்கள்.

பாதுகாப்பான மருத்துவப்பணி நுட்பத்தில் அடங்குவன:

 • காப்பு ஆடைகளை அணிதல் (முகமூடிகள், கையுறைகள், அங்கிகள், கண்ணாடிகள் போன்றவை)
 • தொற்றுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (கருவிகள் அனைத்தையும் கிருமிநீக்கம் செய்தல், வழக்கம்போல் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவை)
 • சுற்றுப்புறச் சூழலுக்குப் புகையூட்டி, உங்களைச் சுற்றி இருக்கும் இடங்களைக் கிருமிநீக்கம் செய்தல். கிருமிநாசினி, வெப்பம், சூரிய ஒளி, அழுக்குநீக்கிகள், சோப்பு ஆகியவை வைரசுகளை அழித்துவிடும்.
 • இறந்த உடல்கள் வைரசுகளைப் பரப்பும். பாதுகாப்புக் கவசம் இன்றித் தொடக் கூடாது. அல்லது அறவே தொடுதலைத் தவிர்க்க வேண்டும்.
 • சோப் அல்லது சுத்திகரிப்பானால் கைகளைக் கழுவுங்கள்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.10204081633
பரணி Oct 03, 2018 10:49 AM

நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top