பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / எலிக்காய்ச்சலை எதிர்கொள்ளும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எலிக்காய்ச்சலை எதிர்கொள்ளும் முறைகள்

எலிக்காய்ச்சலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல்

 • மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும், ஜலதோஷம், ஃப்ளூ, டைபாய்டு, மலேரியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நம்மைத் தொல்லைப்படுத்தும். பெரும்பாலும் இந்த நோய்களைப் பற்றிய விவரங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சில நோய்கள் நமக்கு வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. அப்படியே நோயின் பெயரைத் தெரிந்தாலும், அந்த நோய் பற்றிய விவரங்கள் புரியாது. எல்லாமே புதிதாகவும் புதுமையாகவும் இருக்கும்.
 • அப்படிப்பட்ட நோய்களில் ஒன்று  ‘எலிக் காய்ச்சல்’. 100 பேருக்கு இது வந்தால் 30 பேருக்கு மரணத்தைக் கொண்டுவரக்கூடிய மோசமான நோய் இது. ஆங்கில மருத்துவத்தில் இதை ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) என்று அழைக்கிறார்கள். முன்பு இது கிராமத்து நோயாக இருந்தது. இப்போது இது நகரத்து நோயாக மாறிவிட்டது. என்ன காரணம்? ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இயற்கை தந்த நீராதாரங்கள் அனைத்தும் அடுக்குமாடி கட்டிடங்களாக மாறிவிட்ட காரணத்தால், தண்ணீர் வடிய வழியில்லாமல், தெருக்களெல்லாம் குளங்கள் ஆகிவிட்டன.
 • கால்வாய் சீரமைப்பும், சாலை பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால் மழைநீர், குடிநீர், கழிவுநீர் எல்லாமே கலந்து கொசுக்களும் நோய்க்கிருமிகளும் ‘மாநாடு’ நடத்த இடம் தந்துவிட்டன. இதன் விளைவாக வரக்கூடிய பல நோய்களின் பட்டியலில் எலிக்காய்ச்சலும் இப்போது இடம் பெற்றுவிட்டது. இந்தியாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில்தான் முதன் முதலில் 1920ல் இந்த நோய் இருப்பது தெரியவந்தது. 1988 முதல் 1997 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி இது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பரவி இருப்பதாகத் தெரிய வந்தது.
 • அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழைக்காலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 100 பேர் காய்ச்சலோடு வந்தால் அவர்களில் 38 பேருக்கு எலிக்காய்ச்சல்தான் காரணமாக இருக்கிறது என்கிறது இந்திய அரசின் தொற்றுநோய் கட்டுப்பாட்டுத்துறை. இந்தக் கணக்கில் வராதவர்கள் இன்னும் பல நூறு பேர் இருக்கலாம் என்றும் அது எச்சரிக்கிறது. என்ன காரணம்?
 • ‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் இந்த நோயை உண்டாக்குகின்றன. இவை ஸ்போரோகீட்ஸ் எனும் இனத்தைச் சேர்ந்தவை. நுண்ணோக்கியில் பார்த்தால் ஆங்கில எழுத்து  ‘எஸ்’ வடிவத்தில் ஒரு தொங்கும் தராசு ஊக்கைப்போல இவை காட்சி தரும். இந்த பாக்டீரியாவில் இரண்டு வகைகள் உள்ளன. 1. லெப்டோஸ்பைரா இன்டிரோகன்ஸ் (Leptospira interrogans). 2. லெப்டோஸ்பைரா பைஃபிளக்சா (Leptospira biflexa). இவற்றில் இரண்டாவது இனம் சாதுவானது.

யாருக்கு பாதிப்பு வரும்?

 • விவசாயிகள் மற்றும் பண்ணை வேலை ஆட்கள்.
 • ஆடு, மாடு வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர்.
 • மீன் பிடிப்போர்.
 • தோட்டத் தொழிலாளிகள்.
 • விலங்கினக் காப்பாளர்கள்.
 • கால்நடைப் பணியாளர்கள்.
 • பால் பண்ணைகளில் பணிபுரிவோர்.
 • வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர்.
 • சாக்கடை மற்றும் கழிவுநீரைச் சுத்தம் செய்வோர்.
 • ராணுவத்தினர்.

நோய் பரவும் விதம்

இந்த நோய்க் கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம். என்றாலும், ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளிடம் இந்த நோய்க்கிருமிகள் காணப்படுவது உண்டு. இவற்றின் சிறுநீரில் இக்கிருமிகள் வெளியேறுவது வழக்கம். கிராமப் புறங்களில் ஒரு பழக்கமுண்டு. ஆடு, மாடு, பசு போன்ற விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளம், குட்டை, ஊருணிகளில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். விலங்குகளின் சிறுநீர் குளத்து நீரில் கலந்திருக்கும்.

அவை, அதில் குளிப்பவரின் கண், மூக்கு, வாய் வழியாக நுழைந்து, அங்குள்ள சிலேட்டுமப் படலத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்துவிடும். அவர்களுக்கும் நோய் பரவும். அடுத்த வழி இது: பாதங்களில் உள்ள சிறு கீறல் அல்லது சிராய்ப்பு போதும், இக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதற்கு. விவசாய வேலை செய்யும் கிராம மக்கள் பலருக்கும் சேற்றுப்புண் இருக்க அதிக வாய்ப்புண்டு. இதன் வழியாகவும் எலிக்காய்ச்சல் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும்.

நெல் வயல்களில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அப்போது அங்கு வெறுங்காலுடன் வேலை செய்பவர்களுக்கு இக்கிருமிகள் பரவும். மாட்டுத் தொழுவங்களில் சாணி அள்ளும்போது, ஆடு, மாடு மேய்ப்பிடங்களில் வேலை செய்யும்போது காலில் செருப்பில்லாமல் நடந்தால், இக்கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. நகர்ப்புறங்களில் மழை நீர் அல்லது வெள்ளம் வடியாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்தத் தண்ணீருக்கு வரும்.

அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும். காலில் தகுந்த பாதுகாப்பில்லாமல் தேங்கிய தண்ணீரிலும் மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது, பாதங்கள் வழியாக இந்நோய்க் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடும். இப்படிப் பல வழிகளில் நம் உடலுக்குள் நுழையும் எலிக்காய்ச்சல் கிருமிகள் 2லிருந்து 25 நாட்களுக்குள் நோயை உண்டாக்கும்.

அறிகுறிகள்

 • இந்த நோய் ஒரு சாதாரண தடுமக் காய்ச்சல் போலத்தான் ஆரம்பிக்கும். கடுமையான காய்ச்சல், தலைவலி, சில நேரங்களில் குளிர்க் காய்ச்சல், கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றி ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கும். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறி. பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து, நோய் குணமாகிவிடும்.
 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பயணம் செய்து, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி, அந்த உறுப்பு களையும் பாதிக்கும். அப்போது அடுத்த கட்ட அறிகுறிகள் தோன்றும்.
 • எந்த உறுப்பைக் கிருமிகள் பாதிக்கின்றனவோ அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும்.
 • எடுத்துக்காட்டாக, கல்லீரல் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்சொன்ன அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் வீக்கம் அடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், சிறுநீர் பிரிவதில் பிரச்னை உண்டாகும். கால், கை, முகம், வயிறு வீங்கும். மூளை பாதிக்கப்பட்டால் மூளைக் காய்ச்சலுக்கு உரிய எல்லா அறிகுறிகளும் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்படும்போது நிமோனியா நோய் வந்து, இருமல், இளைப்பு வரும்.
 • இரைப்பை பாதிக்கப்படும்போது ரத்த வாந்தி வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்தில் ரத்தம் வெளியேறும். இது இதயத்தைத் தாக்கினால் இதயத் தசை அழற்சி நோய்க்குரிய நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ‘வியில்ஸ் நோய்’வழக்கத்தில் இந்த நோய் பாதித்தவருக்குக் கல்லீரலும் சிறுநீரகமும் கட்டாயம் பாதிக்கப்படும். இதற்கு ‘வியில்ஸ் நோய்’ (Weil’s Disease) என்று ஒருதனிப் பெயரும் உண்டு.
 • மஞ்சள் காமாலைதான் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். சிலருக்கு ரத்த உறைவுக் கோளாறுகளும் சேர்ந்து கொள்ளும். இந்நோய்க் கிருமிகள் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
 • இது ஒரு மோசமான நோய். நோயாளியைப் பெரிதும் படுத்திவிடும். மரணத்தின் வாசலுக்கே அழைத்துச்சென்றுவிடும். சரியான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால், உயிரிழப்பு ஏற்படும். இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நம் மக்களுக்கு மஞ்சள் காமாலை என்றதுமே அலோபதியை விட்டுவிட்டு, உள்ளூர் வைத்திய முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
 • கண்ட கண்ட இலைகளைச் சாப்பிடுவது, தலையில் பத்து போடுவது என்று பல கைவைத்தியங்களைச் செய்துவிட்டு, நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வருவார்கள். அப்போது சிகிச்சை பலனளிக்காமல் பலரும் உயிரிழக்க நேர்கிறது.

பரிசோதனை

‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test  MAT). எலிக் காய்ச்சலை உறுதி செய்ய, இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். எலிக் காய்ச்சல் வந்தவருக்கு இந்தக் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

இத்துடன் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை, கல்லீரலுக்குரிய பரிசோதனைகள், சிறுநீரகப் பாதிப்பை அறியும் பரிசோதனைகள், ஐஜிஎம் எலிசா பரிசோதனை (IgM ELISA Rapid Test), பிசிஆர் பரிசோதனை (Real time DNA PCR Test), முதுகுத் தண்டுவட நீர்ப் பரிசோதனை ஆகியவை இந்த நோயை உறுதி செய்யவும் இதன் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் பரிசோதனைகளும் தேவைப்படும்.

சிகிச்சை

இந்த நோய்க்கு டாக்சிசைக்ளின், பெனிசிலின், ஆம்பிசிலின், எரித்ரோமைசின் எனப் பல மருந்துகள் உள்ளன. நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் நன்கு குணப்படுத்திவிடலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முறைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றிலும் பாதிப்பு இருந்தால், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தரப்படும். மழைக்காலங்களில் மட்டும் முன்னெச்சரிக்கையாக, டாக்சிசைக்ளின் 200 மி.கி. மாத்திரையை வாரத்துக்கு ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால், எலிக் காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம்.

தடுப்பது எப்படி?

 • வயல் வேலை மற்றும் தோட்ட வேலைகளுக்குச் செல்லும்போது கை உறை அணிவது, காலணி அணிவது போன்ற தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
 • குளம், குட்டை, ஊருணிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • அசுத்த தண்ணீரில் நீச்சல் பழகாதீர்கள்.
 • வெளியில் செல்லும்போதெல்லாம் காலணி அணிய மறந்துவிடாதீர்கள்.
 • முக்கியமாக, மழைக்காலங்களில் வெறுங்காலோடு நடக்காதீர்கள்.
 • மண் சகதியில் வெறுங்காலை வைக்காதீர்கள்.
 • வீட்டிலும் வயலிலும் எலி மற்றும் பெருச்சாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
 • தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
 • காய்கறி, பழங்களை நன்கு கழுவிச் சுத்தம் செய்த பிறகே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
 • சுய சுத்தம் மிக முக்கியம். குறிப்பாக, கைகளையும் பாதங்களையும் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 • கை, கால்களில் சேற்றுப் புண், சிராய்ப்புகள், காயங்கள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்று குணப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • வீட்டில் அழுகிய உணவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுங்கள். இது எலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கும்.

ஆதாரம் : குங்குமம் மருத்துவ இதழ்

2.94805194805
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top