பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / கருங்காய்ச்சல்/லெய்ஷ்மேனியாசிஸ்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கருங்காய்ச்சல்/லெய்ஷ்மேனியாசிஸ்

கருங்காய்ச்சல்/லெய்ஷ்மேனியாசிஸ் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கருங்காய்ச்சல் ஒரு வட்டார நோயாகும். லெய்ஷ்மேனியா வகையைச் சார்ந்த ஓர் ஒரணு பாரசைட்டால் இந்நோய் உண்டாகிறது. இந்தியாவில் லெய்ஷ்மேனியா டோனோவனி என்ற பாரசைட் மட்டுமே இந்நோயை ஏற்படுத்துகிறது. இவை முக்கியமாகக் குருதியோட்ட மண்டலத்தையே தாக்குகின்றன. எலும்பு மச்சை, மண்ணீரல் மற்றும் கல்லீரலில் இவை அதிகமாகக் காணப்படும்.

பின் கருங்காய்ச்சல் தோல் புண்கள் (PKDL)

லெய்ஷ்மேனியா டோனோவனி பாரசைட்டுகள் தோல் உயிரணுக்களுக்குள் புகுகின்றன. அவை அங்கு தங்கி தோல் புண்களை உண்டாக்குகின்றன. கருங்காய்ச்சல் குணமாகி 1-2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாதிப்பு சில இந்திய நோயாளிகளிடம் காணப்படுகிறது. கருங்காய்ச்சல் இன்றியும் இந்நிலை அபூர்வமாகக் காணப்படலாம். உள்ளுறுப்புகளைப் பாதிக்காமலேயே கருங்காய்ச்சல் உண்டாகலாம் என்று தற்போது நம்பப்படுகிறது. ஆயினும் இதைப்பற்றிய போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

நோயறிகுறிகள்

அடிக்கடி தொடர்ந்தும் விட்டுவிட்டும் வரும் காய்ச்சல். பல வேளை காய்ச்சல் இருமடங்கு அதிகரிக்கும்.

 • பசியின்மை
 • வெளிறிய தோற்றம்
 • எடை குறைவு
 • உடல்நலிவு
 • பலவீனம்

தோல்

 • உலர்தல், செதில்கள் ஏற்படுதல்; முடி இழப்பும் உண்டாகலாம். நல்ல நிறமாக இருப்பவர்களின் கைகள், பாதங்கள், வயிறு மற்றும் முகத்தின் தோல் சாம்பல் நிறமாகும். இதனால் இதற்குக் கருங்காய்ச்சல் என்று பெயர் வந்தது.
 • விரைவாக இரத்தச்சோகை உண்டாகும்
 • மண்ணீரல் வேகமாக மிகவும் வீங்கிப், பொதுவாக மென்மையாக மாறும்.
 • கல்லீரல், மண்ணீரல் அளவுக்கு வீங்குவதில்லை. ஆயினும் மென்மையாக, கூர்மையான ஓரங்கள் கொண்டதாக மாறும்.

காரணங்கள்

இந்தியாவில், ஃபிளேபாட்டோமஸ் அர்ஜெண்டைப்ஸ் (Phlebotomus argentipes) என்ற மணல் ஈ மட்டுமே கருங்காய்ச்சலைக் கடத்துகிறது. கொசுவில் நான்கில் ஒரு பங்கு அளவே கொண்ட சிறு பூச்சியே மணல் ஈ. இதன் உடல் நீளம் 1.5 — 3.5 மி.மீ அளவே இருக்கும்.

அதிக ஒப்பீட்டு ஈரத்தன்மையும் (relative humidity), சூடான வெப்பநிலையும், உயர் நிலத்தடி நீரும், அதிக அளவில் பயிர்ப்பச்சைகளும் உள்ள இடங்களில் மணல் ஈ பெருகுகிறது. முட்டைப்புழுக்களுக்கு உணவாகக் கூடிய அங்ககப்பொருட்கள் செறிந்த சாதகமான நுண்-தட்ப வெப்ப சூழ்நிலைகளிலேயே இவை இனப்பெருக்கம் செய்கின்றன.

சுற்றுச்சூழல், நுண்ணிய இப்பூச்சிகளை அதிகமாக பாதிக்கும்.

நோய்கண்டறிதல்

அறிகுறிகளைக் கொண்டு

எதிர் மலேரியா மருந்துகள் மற்றும் நுண்ணுயிர்க் கொல்லிகளுக்குக் கட்டுப்படாத, இரண்டு வாரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் இதன் அறிகுறி ஆகும். ஆய்வகச் சோதனையில் இரத்தச்சோகை, வெள்ளணு-தட்டணுக் குறைவுபட்டு வருதல், அதிக அளவு காமோ குளோபுலின் ஆகியவை கண்டறியப்படலாம்.

ஆய்வகச்சோதனை

ஊனீர் சோதனை

கருங்காய்ச்சலைக் கண்டறிய பலவித சோதனைகள் உள்ளன. பரவலாக பயன்படுத்தப்படும் சோதனைகள் ஒப்பீட்டு உணர்திறனை அடிப்படையாகக் கொண்டவை. நேரடி திரட்சி சோதனை (DAT),  rk39  தோய்குச்சி மற்றும் எலிசா போன்ற சோதனைகள், குறிப்பாக உணர்த்தும் திறன் கொண்டவையும் சாத்தியமானவைகளும் ஆகும். எனினும் இச் சோதனைகள் யாவும், ஒப்பீட்டளவில் நீடித்து நிலைத்து நிற்கும் IgG எதிர்பொருட்களைக் கண்டறிகின்றன. பொதுவாக ஆல்டிஹைட் சோதனை செய்யப்படுகிறது. ஆனால் இது குறிப்பான சோதனை அல்ல. IgG கண்டறியும் சோதனைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவை களப்பரிசோதனைகளுக்கு பயன்பட்டில் இல்லை.

பாரசைட் இருப்பதை நிரூபித்தல்

எலும்பு மச்சை, மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றின் ஊசிமாதிரிகள் அல்லது திசுவளர்ச்சி கொண்டு பாரசைட்டுகள் இருப்பதை உறுதிப்படுத்துதல். ஆயினும் ஊசிமாதிரிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்புகளைப் பொறுத்து உணர்திறன் அமையும். மண்ணீரல் ஊசிமாதிரி ஆய்வு அதிக உணர்திறனும், குறிப்பாகக் கண்டறியும் திறனும் கொண்டதாகும். எனினும் வல்லுநர் ஒருவர் நல்ல மருத்துவ வசதிகள் உள்ள இடத்தில் முன்னெச்சரிக்கைகளுடன் செய்ய வேண்டும்.

இது குறிப்பான தகவல் மட்டுமே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

தடுப்பு முறைகள்

உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் கருங்காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்துகள் இல்லை. மணல் ஈ கடியில் இருந்து காத்துக் கொள்வதே சிறந்த தடுப்பு முறையாகும். கீழ்க்காணும் தடுப்பு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன

வீட்டுக்கு வெளியே

 • மணல் ஈக்கள் அதிகமாக அலைந்து திரியும் நேரமான மாலையில் இருந்து விடிகாலை வரை வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும். வெளியில் இருக்கும்போது: மூடாத தோல்பகுதியின் அளவைக் குறைக்கவும். தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப நீண்ட கையுள்ள சட்டை, நீளமான பேன்ட், காலுறை ஆகியவற்றைப் பயன்படுத்தவும். சட்டையைப் பேன்டுக்குள் செருகிக்கொள்ளவும்.
 • வெளியில் தெரியும் தோல்பகுதி, சட்டைக் கை, பேன்ட் நுனி ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு பூச்சிவிரட்டி மருந்தைப் பூசிக்கொள்ளவும். பூச்சிவிரட்டி மருந்தின் வெளி உறையில் எழுதப்பட்ட அறிவுரைகளைப் படிக்கவும். டையீத்தைல்மெட்டாதொலுவாமைட் (DEET) என்னும் வேதிப்பொருளைக் கொண்ட பூச்சிவிரட்டியே சிறந்த முறையில் பலனளிக்கக் கூடியது.

வீட்டுக்குள்

 • நன்கு திரையிடப்பட்ட அல்லது குளிர்பதன அறைகளிலேயே தங்கி இருக்கவும்.
 • மணல் ஈ கொசுவைவிட மிகச் சிறியது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். சிறிய துளைகள் வழியாகவும் அவை நுழையும்.
 • நடமாடும்/உறங்கும் பகுதிகளில் பூச்சி விரட்டியைத் தெளிக்கவும். நன்கு திரையிடப்பட்ட அல்லது குளிர்பதன அறையில் தூங்காவிட்டால் ஒரு கொசுவலையைக் கட்டி மெத்தைக்குள் செருகவும்.
 • கொசுவலையில் பைரித்ராய்ட் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும். கதவுத்திரைகள், சன்னல்திரைகள், போர்வைகள், ஆடைகள் ஆகிய அனைத்திலும் பூச்சிக்கொல்லி தெளிக்கவும் (ஐந்து முறை சலவை செய்யும்போது ஒருமுறை பூச்சிமருந்து தெளிக்கவும்).

சிகிச்சை

கருங்காய்ச்சலைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது பல காரணங்களால் பிரச்சினைக்கு உரியதாகும். மருத்துவம் நீடித்ததும் அதிக செலவு பிடிப்பதுமாகும். ஏனெனில், கருங்காய்ச்சலைக் குறிப்பாகக் கண்டறிய நுண்காட்டி மூலம் சோதனை செய்யவேண்டும். இதற்குத் தேவையான திசு மாதிரிகளை ஓர் உறுப்பில் இருந்து ஊசிமாதிரி முறை மூலமாக எடுக்க வேண்டும். பின் நுண்ணுயிரின் இடைநிலை வடிவத்திற்கு (amastigote forms) நிறமேற்ற வேண்டும். தொற்று உள்ளது என்று சந்தேகப்படும் நோயாளிகளின் எலும்பு மச்சை, மண்ணீரல், மற்றும் நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் திசுக்களே பெரும்பாலும் மாதிரிகளாக சோதிக்கப்படுகின்றன. மண்ணீரலில் இருந்து எடுக்கப்படும் ஊசி மாதிரிகளே அதிக உணர்திறன் கொண்டவை (95 — 98 %). ஆயினும் இம்முறையால் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்பு மச்சை ஆய்வின் உணர்திறன் மிகக் குறைவு (53% - 95 %). உறுப்புகளில் இருந்து ஊசிமாதிரிகளை எடுப்பதற்கும் சாயமேற்றப்பட்டவைகளை நுட்பமாக சோதிப்பதற்கும் தொழில் நுட்பத் திறன் தேவை. இது கிராமப்புறத்தில் எல்லா இடங்களிலும் சீராகக் கிடைப்பதில்லை. ஊசிமாதிரிகளைத் திசுவளர்ச்சி அல்லது பாலிமரேஸ் தொடர்வினை சோதனை (PCR) மூலம் ஆயும் போது நுண்ணுயிர் வளர்ச்சி இருக்கும். ஆனால் ஆய்வகத்திற்கு வெளியே இச்சோதனைகளை நடத்துவது கடினம்.

கருங்காய்ச்சலுக்கு இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள்

 • சோடியம் ஸ்டிபோகுளுக்கோனேட் (Sodium Stibogluconate)
 • பெண்டாமிடினல்சேத்தியோனேட் (PentamidineIsethionate)
 • ஆம்போடெரிசின் B (Amphotericin B)
 • லிப்போசோமால் ஆம்போடெரிசின் B (Liposomal Amphotericin B)
 • மில்ட்டேஃபோசின் (Miltefosine)

இது குறிப்பான தகவல் மட்டுமே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார ஆணையம்

2.98461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top