অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சல் ஏன்? என்ன செய்வது?

புயலுக்கு அடுத்தபடியாக புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக அறிமுகமாவது காய்ச்சலாகத்தான் இருக்கும். உடல் வெப்பநி லையை எகிறச்  செய்கிற இந்தக் காய்ச்சல், சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடும். பல நேரங்களில் உயிரைப்  பறிக்கிற அளவுக்கு கோர  முகத்தையும் காட்டும். அதனாலேயே குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கும் பீதி  தலைக்கேறும்.

உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம்.  வெப்பநிலையானது  100 டிகிரி வரை இருப்பது பிரச்னையில்லை. அதைத் தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும்.

காய்ச்சல் என்பது என்ன?

உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது காய்ச்சல் வரும். காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது  ஒரு அறிகுறி.  பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி  அந்தக் கிருமிகளை  அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை  காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும்  நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல்  வரும் போது அலட்சியம் கூடாது. 

பொதுவாக குழந்தைகளுக்கு 5 - 6 வயதுக்கு மேல்தான் எதிர்ப்பு சக்தியில் முன்னேற்றம் தெரியும். எனவே, அவர்களுக்குக் காய்ச்சல்  வரும் போது,  கூடவே வலிப்பும் வரலாம். இதற்கு ‘ஃபெப்ரைல் ஃபிட்ஸ்’ என்று பெயர். இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு அடுத்த  முறை காய்ச்சல் வரும் போது அதிக  கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கான காரணங்கள்?

  • வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ, கொசு, ஈ போன்றவை சுமந்து வந்து நம் உடலில் இறக்கும் கிருமிகளின்  பாதிப்பினாலோ காய்ச்சல் வரலாம்.
  • நம் உடலிலுள்ள சில மென் மையான கொலாஜன் திசுக்கள், உடலிலேயே சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச்சல் வரலாம். இள  வயதினருக்கு ‘ருமாட்டிக் காய்ச்சல்’ என ஒன்று வரும். இதற்குக் காரணமான பாக்டீரியாவானது முதலில் தொண்டையைப் பாதிக்கும். அதன் மூலம்  இதய வால்வைத் தொற்றும். அப்படியே அலட்சியமாக விட்டால், இதய வால்வில் பிரச்னைகள்  வளர்ந்து, ஒரு கட்டத்தில் இதயத்தின்  செயல்பாட்டிலேயே பிரச்னைகளை ஏற்படுத்தும் அளவுக்குக் கொண்டு போகும்.
  • ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம். பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும். அது முதலில் முதுகுவலியாக வெளிப்பட்டு, பிறகு திடீரென  காய்ச்சலாக  உணரப்படும். காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரலாம். பொதுவாக இருமல்தான் காசநோயின் அறிகுறியென்றும், காச நோயெல்லாம் அடித்தட்டு  மக்களுக்கு மட்டும்தான் வருமென்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காய்ச்சல், களைப்பு  போன்றவை அடிக்கடி வந்தாலும் காசநோய்க்கான  சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
  • காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால், இது ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி யாரையும் தொற்றலாம். சில நேரங்களில் காய்ச்சல் என்பது  புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகக் கூட இருக்கலாம். காய்ச்சல், நெறி கட்டுதல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளை யாரும் புற்றுநோயுடன்  தொடர்புப்படுத்திப் பார்க்க மாட்டார்கள்.
  • இதெல்லாம் அடிக்கடி தொடர்ந்தால் எச்சரிக்கை அவசியம். இவை எல்லாம் போக ‘ட்ரக் ஃபீவர்’ என்றே ஒன்று உள்ளது. நீரிழிவு,  ரத்த அழுத்தம் என  ஏகப்பட்ட பிரச்னைகளுக்காக ஏகப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வோருக்கு ஒரு கட்டத்தில் அவர்களது  உடம்பு அந்த மருந்துகளை விரும்பாததன்  விளைவாக காய்ச்சலாக வெளிப்படுத்தும்.முதியவர்களுக்கு இது சகஜம். மிதமான காய்ச்சல், படபடப்பான மனநிலை போன்றவை இதன் அறிகுறிகள்.

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

லேசாக உடல் சூடானாலே போதும்... உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துப் போடுகிற பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது  தேவையில்லை. இன்னும் சிலர் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது 3 மணி நேரத்துக்கொரு முறை பாராசிட்டமால்  கொடுக்கிறார்கள். அதுவும்  தவறு. 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப்  பிழிந்து, நெற்றி, அக்குள் பகுதிகளில் வைத்துத்  துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.

தேவையில்லாமல் நாமாக மருந்துகள் எடுப்பதன் மூலம் தாமாக உற்பத்தியாகிற எதிர்ப்பு சக்தியை நாமாகவே கெடுக்கிறோம். 100 டிகிரிக்கு  அதிகமான காய்ச்சலும், அதீத களைப்பும் இருந்தால் அல்லது காய்ச்சலுடன் கூடவே உளறல், குளிர், ஜன்னி போன்றவை இருந்தாலோ மருத்துவரை  நாடுவதே பாதுகாப்பானது. டி.பி, டைஃபாய்டு போன்ற காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப்  பரவும். டெங்கு, மலேரியா போன்றவை  பரவாது. வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்திருக்கும். மருத்துவரைப் பார்த்து மருந்துகள்  எடுத்துக் கொண்டிருப்பார். 

அடுத்த சில நாட்களில் இன்னொரு நபருக்கும் காய்ச்சல் வந்தால், அவருக்கும் அதே காய்ச்சலாகத்தான் இருக்கும், மருத்துவர் அதே  மருந்தைத்தான்  பரிந்துரைப்பார் என்கிற தவறான நம்பிக்கையில் தாமாகவே அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்துகள் என்பவை ஒருவரது வயது,  ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.காய்ச்சலுடன் கூடிய  தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத்  தாமாகவே மருந்துக் கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடுவதும் தவறு. வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் எடுக்கக்கூடாது. என்ன  மாதிரியான காய்ச்சல், அதன் தீவிரம் என்ன என்பதைப்  பொறுத்து, ஒரு மருத்துவரால்தான் சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். 

ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் போது, பிரச்னை சரியானதும் பாதியோடு நிறுத்தவும் கூடாது. முழுக்க குணமானாலும், பரிந்து ரைக்கப்பட்ட மொத்த  ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டியது முக்கியம்.

என்னென்ன பரிசோதனைகள்?

தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவற்றை எடுக்கலாம்.

தடுப்பு முறைகள்

  • சிலவகை காய்ச்சல்களில் இருந்து தப்பிக்க தடுப்பு மருந்துகள் உள்ளன. உதாரணத்துக்கு டைஃபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ்,  அம்மை  போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால் அந்த நோய் வராது.
  • அப்படியே வந்தாலும் தீவிரம் குறைவாக இருக்கும். வைட்டமின் மற்றும் மினரல் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை  தினசரி உணவில்  கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவியே உபயோகிக்க வேண்டும். என்னதான் உயர் ரக வாட்டர் ஃபில்டர் இருந் தாலும், கொதிக்க  வைத்த தண்ணீர்தான் 100 சதவிகிதம் பாதுகாப்பானது.
  • ஃபாஸ்ட் ஃபுட் பழக்கத்தைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய் கறிகளை அவர்களுக்குப் பிடித்த ஏதேனும்  ஒருவகையில் உணவில் சேர்த்துக் கட்டாயமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

ஆதாரம் : குங்குமம் தோழி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate