புதர்க்காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் ஒரு கடும், தொற்றுக் காய்ச்சல் ஆகும். இது ஓரியன்டியா (முன்னர் ரிக்கெட்சியா) சுத்சுகமுஷி என்ற பாக்டீரியாவால் உண்டாகிறது. லார்வாவால் (சிகர்) பரவும் டைபஸ் என்றும் இது அழைக்கப்படும். இது விலங்கால் பரவும் நோய் ஆகும். கணுக்காலியான நோய்ப்பரப்பி அறுவடை உண்ணியால் இது பரவுகிறது. இந்நோய்க்கு மனிதர்கள் ஒரு தற்செயலான ஓம்புயிர்கள் ஆவர்.
இந்தியாவின் பலபகுதிகளில் புதர்க்காய்ச்சல் பரவலாக உள்ளது. ஜம்முவில் இருந்து நாகாலாந்து வரையுள்ள இமாலய சார்மண்டலத்தில் இது நோய்த்தாக்கமாக வெளிப்பட்டதும் உண்டு. இராஜஸ்தானிலும் இது நோய்த்தாக்கமாகப் பரவியதாக அறிவிக்கப்பட்டது. 2003-2004 –லும் 2007-லும் இமாசலப் பிரதேசம், சிக்கிம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நோய்த்தாக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மழைக்காலங்களிலேயே அடிக்கடி நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. தென்னிந்தியாவில் குளிர்காலங்களில் உண்டாகிறது. புதர்க்காய்ச்சல் இந்தியாவில் மீண்டும் தோன்றி வரும் தொற்று நோயாகும்.
கடித்த இடத்தில் ஒரு கொப்புளம் உண்டாகிறது. அரை, அக்குள், பிறப் புறுப்பு அல்லது கழுத்தில் பொதுவாகக் கடிதடம் காணப்படும். பின்னர் கொப்புளம் புண்ணாகி இறுதியில் ஆறும்போது ஒரு கறுப்பு பொருக்கு உருவாகும்.
நோய் ஏற்படும்போது கடும் குளிர் காய்ச்சலும் (1040-1050 F), கடுமையான தலைவலியும், விழிவெண்படலத் தொற்றும், நிணநீர் வீக்கமும் காணப்படும்.
ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து ஒரு புள்ளி தோன்றி பின் வெண் கொப்புளமும் உடல் பகுதியிலும் பின் நுனி அவயவங்களிலும் உருவாகி சில நாட்களில் சட்டெனப் பின்வாங்கும்.
சிகிச்சை இல்லாமலேயே பொதுவாக இரண்டு வாரம் கழித்து அறிகுறிகள் மறைந்துவிடும்.
இடைவிட்டு வரும் நிமோனியா (30-65 % நேர்வுகள்), மூளையுறை – மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவை சிக்கல்கள். கடுமையான நிமோனியா மற்றும் இதயத்தசை அழற்சி நேர்வுகளில் இறப்பு விகிதம் 30% -ஐ அடையலாம்.
புதர்க்காய்ச்சல் ஓரியன்டியா சுத்சுகமுஷி என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. லெப்டோடிராம்ப்பிடியம் டெலியன்ஸ் என்ற உண்ணி இத் தொற்றைப் பரப்புகிறது.
இவ்வகை உண்ணிக்கு சாதகமான நுண்சூழல் அமந்த மண்பகுதிக்குச் செல்லும் மனிதரை உண்ணியின் லார்வா (சிகர்) கடிக்கும் போது நோய் பரவுகிறது. உண்ணி தன் வாழ்நாள் சுழற்சியில் ஒரே முறைதான் வெப்ப இரத்த விலங்குகளின் ஊனீரை உணவாகக் கொள்ளுகிறது. வளர்ச்சி பெற்ற உண்ணி மனித இரத்தத்தைக் குடிப்பதில்லை. உண்ணியின் கருப்பைப் பரவல் மூலம் நுண்ணுயிர்கள் பரப்பப்படுகின்றன (சில கணுக்காலி நோய்பரப்பிகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் முதிர்ச்சியுற்ற கணுக்காலியில் இருந்து குஞ்சுகளின் வழியாகப் பரப்பப்படுகின்றன).
லார்வாப் பருவம் என்பது மனிதர்களுக்கும் கொறித்துண்ணிகளுக்கும் தொற்றைப் பரப்பும் ஒரு சேமிப்பு மற்றும் பரப்பும் நிலையாக உள்ளது.
புதர்க்காய்ச்சலின் நோயரும்புகாலம் கடித்ததில் இருந்து 5-20 நாட்கள் (குறைந்தது 10-12 நாட்கள்).
புதர்க்காய்ச்சல் ஓர் இனம்புரியாத காய்ச்சலாகவே வெளிப்படுகிறது. ஆய்வகப் பரிசோதனை மூலமே நோய் உறுதிப்படுத்தப்படும்.
இரத்தப் பரிசோதனை – ஆரம்பக் கட்ட வடிசெல்லிறக்கத்தோடு காலந்தாழ்த்தி வடிநீர் செல்லேற்றமும், உறைசெல்லிறக்கமும் காணப்படும்.
சிறுநீர்ச்சோதனை: சிறுநீரில் ஆல்புமின்.
புதர்க்காய்ச்சலை ஆய்வகத்தில் கீழ்க்காணுமாறு கண்டறிகிறார்கள்:
(i) உயிரியை தனிப்படுத்துதல்
(ii) ஊனீரியல்
(iii) மூலக்கூற்று கண்டறிதல் (PCR)
பல ஊனீர் சோதனைகள் உள்ளன. வெய்ல்-ஃபெலிக்ஸ் சோதனை (WFT), மறைமுக நோய்த்தடுப்பு ஒளிர்தல் சோதனை (IIF), நொதியோடு இணைந்த நோய்த்தடுப்பு உறிஞ்சல் மதிப்பாய்வு (ELISA) ஆகியவை அவற்றில் சில.
புதர்க்காய்ச்சலுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகளால் மருத்துவம் அளிக்கப்படுகிறது. நோயாளியின் வயது, பெண் நோயாளியின் கர்ப்பத்தின் கட்டம் ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
இடைவிட்ட நிமோனியா (30-65 நேர்வுகள்), மூளையுறை மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவை சிக்கல்கள் ஆகும். கடும் மூளையுறை மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவற்றில் இறப்பு விகிதம் 30 % வரை இருக்கும்.
புதர்க்காய்ச்சலுக்குத் தடுப்புமருந்து எதுவும் இல்லை.
நோய்த்தாக்க இடங்களில் சில முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்:
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்