অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மஞ்சள் காய்ச்சல்

மஞ்சள் காய்ச்சல்

அறிகுறிகள்

ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுக்களால் பரப்பப்படும் வைரல் நோயே மஞ்சள் காய்ச்சல். இந்த வைரஸ் ஃப்ளேவிவைரஸ் வகையைச் சேர்ந்த ஓர் ஆர்.என்.ஏ. வைரஸ். ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்குத் தென்பகுதி நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் காரிபியனின் சில பாகங்களில் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது.

மஞ்சள் காய்ச்சலில் இருவடிவங்கள் உள்ளன: நகர்ப்புற மஞ்சள்காய்ச்சல் மற்றும் வன மஞ்சள்காய்ச்சல். மருத்துவ மற்றும் காரணவியல் அடிப்படையில் அவை இரண்டும் ஒன்றே.

நகர்ப்புற மஞ்சள்காய்ச்சல்

மனிதர்களுக்குப் பரவும் வைரல் தொற்று நோயாகும். நோயுள்ளவர்களிடம் இருந்து பிறருக்கு ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுவால் பரவுகிறது. மனித குடியிருப்பைச் சார்ந்து வீட்டுக்குள்ளும் வெளியிலும் இருக்கும் கொள்கலன்களில் (உ-ம். தண்ணீர்க் குடுவை, பீப்பாய்கள், டிரம்கள், டயர் அல்லது தகரப் பாத்திரங்கள்) இக் கொசு பெருகுகிறது. எங்கெல்லாம் ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் அழிக்கப்பட்டனவோ அல்லது அழுத்தப்பட்டனவோ அங்கெல்லாம் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சலும் மறைந்து விடுகிறது. மனிதர்களுக்குத் தடுப்புமருந்து அளிப்பதன் மூலமும், நோய்பரப்ப முடியாதபடி ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுகளை அழித்தொழிப்பதன் மூலமும் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சலைத் தடுக்க முடியும்.

வன மஞ்சள் காய்ச்சல் உண்டாகும் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் இதனை வெற்றிகரமாகத் தடுக்க முடியும்.

நோயகுறிகள்

மஞ்சள் காய்ச்சலின் நோயரும்பு காலம் 3-6 நாட்கள் ஆகும். அறிகுறிகள் இரண்டு கட்டங்களாகத் தோன்றும்:

முதல் கட்டம் கடும் கட்டம் என்றும் அழைக்கப்படும். அதில் அடங்குவன:

  • 38ºC (100.4ºF)  அல்லது அதற்கும் மேற்பட்ட காய்ச்சல்
  • குளிர் நடுக்கம்
  • தலைவலி
  • குமட்டலும் வாந்தியும்
  • முதுகு வலி உட்பட தசை வலி
  • பசியின்மை

இரண்டவது கட்டமே மிகவும் கடுமையான கட்டமாகும். இது நச்சுக் கட்டம் என அழைக்கப்படும். அறிகுறிகளில் அடங்குவன:

  • அடிக்கடி வரும் காய்ச்சல்
  • வயிற்று வலி
  • வாந்தி
  • மஞ்சள் காமாலை – கல்லீரல் சிதைவால் தோல் மஞ்சளாகும்; கண்கள் வெண்மையாகும்
  • சிறுநீரகம் செயலிழப்பு
  • வாய், மூக்கு, கண்கள் அல்லது வயிற்றில் இருந்து இரத்தம் கசிதல். தொடர்ந்து வாந்தியிலும் மலத்திலும் இரத்தம் வெளிப்படுதல்.

காரணங்கள்

ஃபிளேவி வைரசால் மஞ்சள் காய்ச்சல் உண்டாகிறது. சில வகையான கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் பரவுகிறது. பயணம் செல்லும் போது மஞ்சள் காய்ச்சல் பரவும் அபாயம் கீழ் வருவனவற்றைப் பொறுத்துள்ளது:

  • நீங்கள் பயணம் செல்லும் இடத்தில் மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ளதா
  • மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி இட்டுள்ளீர்களா
  • காடு அல்லது காடு சார்ந்த இடங்களுக்குச் செல்கிறீர்களா.

நோய் கண்டறிதல்

மஞ்சள் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டும் இரத்தப் பரிசோதனையின் மூலமும் கண்டறியப்படுகிறது.

இரத்தப் பரிசோதனை

தொற்றுக்களை எதிர்த்துப் போரிடும் வெள்ளணுக்களின் குறைவு இரத்தப் பரிசோதனையில் காணப்படும். இதற்குக் காரணம்  மஞ்சள் காய்ச்சல் வைரசுகள் எலும்பு மச்சையை (இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம்)  பாதிப்பதனால் ஆகும்.

நோய் மேலாண்மை

மஞ்சள் காய்ச்சலுக்கு குறிப்பாக எந்த மருத்துவமும் இல்லை. அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கலாம்.

  • காய்ச்சலடக்கிகளான இபுபுருபன் போன்றவற்றால் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கலாம்
  • வலியடக்கிகளான பாரசெட்டமால் ஆகியவற்றால் தலைவலிக்கும் முதுகுவலிக்கும் மருத்துவம் அளிக்கலாம்
  • மேலும், நீர்ச்சத்திழப்பைத் தவிர்க்க ஏராளமான நீராகாரம் அருந்த நோயாளிக்கு ஆலோசனை கூறவேண்டும்.

தடுப்புமுறை

தடுப்பூசியின் மூலம் மஞ்சள் காய்ச்சலைத் தடுக்கலாம். தோலுக்கடியில் செலுத்தப்படும் ஒரு வேளை தடுப்பு மருந்து 100% நோய்த்தடுப்பை அளிக்கிறது. தடுப்பூசி இட்டு 10 நாளைக்குப் பிறகே தடுப்பாற்றல் உருவாகும். இடவாரியாக மஞ்சள் காய்ச்சல் ஏற்படும் நாடுகளில் ஒருவருக்கு வாழ்க்கை முழுவதும் இத்தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. எனினும் இடவாரியாக பரவாத இடங்களில் வாழ்வோருக்கு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை ஊக்கமருந்து அளிக்க வேண்டும். முட்டைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், முந்திய தடவை அளித்தத் தடுப்பு மருந்துக்கு மிகை உணர்திறன் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 12 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள், நோய்த்தடுப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோருக்கு எதிர் அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல், வலி, சிவப்பு, அல்லது ஊசி இட்ட இடத்தில் வீக்கம் ஆகியவை காணப்படும். இந்த பக்க விளைவுகள் பொதுவாக ஒரு வாரத்தில் குறையும்.

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசு தடுப்புமருந்து மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி வசதி எப்போதும் கிடைக்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate