অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குதிகால் வலி

குதிகால் வலி

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல்சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்

ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்குபிளான்டார்ஃபேசியைட்டிஸ் (Plantar Fasciitis) என்று பெயர்.

காரணங்கள்

குதிகால் எலும்பிலிருந்துபிளான்டார் அப்போநீரோசிஸ் (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்கபர்சா (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்குகால்கேனியல்ஸ்பர் (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம்.

  • முடக்குவாதம்,
  • தன்தடுப்பாற்றல் நோய்,
  • காசநோய்,
  • கோணலாக வளர்ந்த பாதம்,
  • தட்டைப் பாதம்,
  • எலும்பு வலுவிழப்பு நோய்

யாருக்கு வருகிறது?

  • முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.
  • நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படிவார்ம்அப்பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.
  • கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில்ஷாக் அப்சார்பர்வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.
  • இன்றைய பெண்களில் பலரும்ஹைஹீல்ஸ்செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.
  • இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

சிகிச்சைமுறைகள்

  • குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.. ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
  • ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.
  • வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு, மேற்கண்ட எளிய பயிற்சியிலேயே வலி மறைந்துவிடும்.
  • அதேபோலக் கீழ்க்கண்ட பயிற்சியையும் செய்யலாம். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கிற பொருட்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.
  • பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ESWT எனும் ஒலி அலை சிகிச்சையும் IFT எனும் வலி குறுக்கீட்டு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.
  • இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில்ஹைட்ரோகார்ட்டிசோன் (Hydrocortisone) என்ற மருந்தைலிக்னோகைன்எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும். என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.

தடுப்பதற்கான வழிகள்

  • குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.
  • குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டும் பயிற்சி, குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. காரணம், முன் பாதத்தில் அழுத்தம் கொடுத்துப் பெடல் செய்வதால், மொத்தப் பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.
  • உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.
  • குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும் தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும்.
  • எம்.சி.ஆர்.” (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடுமுரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக்கூடாது. நீரிழிவு நோய், ‘கவுட் (Gout) போன்ற நோய்கள் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசை நாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலியை ஏற்படுத்த இவை துணைப் போகும்.

ஆதாரம் : தி-இந்து நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate