பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக மாற்று சிகிச்சை

சிறுநீரக மாற்று சிகிச்சை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உலகிலேயே ஒரு புரட்சியைக் கொண்டு வந்த பல முன்னேற்றங்களில் மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்துவதும் ஒன்று.

விரும்பத்தகாத ஒரு முடிவு நிலையை நோக்கி மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் சிறுநீரக நோய்க்காரர்களுக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலைக்கு, ESKD (End stage kidney disease) என்று பெயர். அப்படிச் செயற்கை சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின் வாழ்க்கை அனேகமாக சாதாரண நிலைக்கு வந்து விடுகிறது.

மாற்றப்படும் முன் தேவைப்படும் தகவல்கள்

மாற்றுச்சிறுநீரகம் பொருத்துதல் என்றால் என்ன?

இது அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுவது ஆகும். நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவருடைய அல்லது இறந்தவருடைய சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுத்து, சிறுநீரக நோய் உடையவருக்குப் பொருத்துதல் ஆகும்.

அத்தைகைய மாற்றம் எப்பொழுது தேவைப்படுகிறது. ?

இனிவேறு வழியில்லை என்ற ஒரு முடிவான நிலைக்கு வந்து விட்டோருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அத்தகைய மாற்றம் எப்பொழுது எல்லாம் தேவைப்படாது?

மிகத் தீவிரமாக (ஆனால் தாற்காலிகமாகவே) சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது இந்த மாற்றம் தேவையே இல்லை. அல்லது ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும் பழுது பட்டிருக்கும் பொழுதும் இந்த சிகிச்சை மாற்றம் தேவையே இல்லை.

நோய் ஒரு முடிவான தீவிர நிலைக்குச் சென்று விட்டபொழுது இந்த மாற்றத்தின் அவசியம் ஏன் ஏற்படுகிறது?

இவ்வகை நோயாளிகள் பொதுவாக முடிவு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், டையாலிஸிஸும் மருத்துவமும் சேர்ந்து கை கொடுக்கிறது. ஆனால் அதுவே பூரண குணத்தைக் கொண்டு வராது. வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தைச் செய்வதே மிகவும் திறன் வாய்ந்த ஒரு வழியாகும். மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவது எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி வந்து, அனேகமாக சாதாரண வாழ்க்கையையே மீண்டும் வாழ வைக்கிறது.

செயற்கைச் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொள்வதால் வரும் நன்மைகள் யாவை?

1. முழுவதுமாக நோயிலிருந்து காப்பாற்றப்படுதலும் நலம் பெற்ற வாழ்க்கையை மீண்டும் வாழத்துவங்குவதும் ஆகும். நோயாளியின் முழு வாழ்க்கை மீண்டும் அனேகமாக திரும்பக் கிடைத்துவிடுகிறது. மீண்டும் அவர் வழக்கம் போல ஒடி ஆடி சுற்றித் திரிந்து அலுவல்கள் யாவையும் கையாளுகிறார். மேலும் அவருக்கு சக்தி கூடுகிறது. உடலுக்கு தாங்கிக் கொள்ளும் வலிமை கூடுகிறது. உற்பத்தித் திறனும் படைப்பாற்றலும் கூடுகிறது.

2. டையாலிஸிஸ் இனி செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வலி, கால விரயம், மற்றும் டையாலிஸிஸினால் வரும் உபரியான உபாதைகள் - இவற்றிலிருந்து பூரண விடுதலை.

3. வாழ்நாள் கூடும். வெறும் டையாலிஸிஸினால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்நாட்களை விட சிறுநீரகத்தை மாற்றிக்கொண்டு, மாற்று சிறுநீரகத்தைப் பொருத்தி வாழ்பவர்கள் மேலும் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்.

4. உணவுக்கட்டுப்பாடுகள் மிகக் குறைவு. அதேபோல் எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களும் மிகக் குறைவாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.

5. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் படுவதில் வரும் சிக்கல்கள் மிகக் குறைவு. டையாலிஸிஸ் சிகிச்சையில் சிக்கல்களின் சாத்தியக் கூறு மிக அதிகம்.

6. செலவு குறைவு. சிறுநீரகம் பொருத்தப்பட்ட ஆரம்பத்தில் செலவு சற்று அதிகம்தான். ஆனால் இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் அதைப் பேணும் செலவு குறைகிறது. உண்மையில் பார்க்கப் போனால் டையாலிஸிஸ் செய்து கொண்டே போவதே செலவை அதிகரிக்கச் செய்யும்.

7. பாலியல் வாழ்க்கையில் நல்ல மேம்பாடு தெரியும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பும் சாத்தியக் கூறுகளும் அதிகம்.

மாற்றுச் சிறுநீரக சிகிச்சை செய்து கொள்வதால் வரும் தீமைகள் என்ன?

மாற்றுச் சிறுநீரக சிகிச்சை எத்தனையோ நன்மைகளைக் கொண்டுதான் வருகின்றன. இருந்தாலும் அதிலும் கூட சில தீய விளைவுகளின் சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.

 • ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு அது வழி கோலக் கூடும். மாற்றுச் சிறுநீரக சிகிச்சை என்பதே ஒரு பெரிய அறுவை சிகிச்சையைக் கொண்ட வழிமுறை. இதற்கு உரிய மயக்க மருந்து சாதாரணமாக உபயோகப் படுத்தப்படும் மயக்க மருந்து வழிமுறைகளே. இதில் அறுவை சிகிச்சை செய்யும் முன்பும் பின்பும் ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன.
 • சிகிச்சை செய்து கொள்பவரின் உடல் மாற்றுச் சிறுநீரகத்தை உதறித்தள்ளும் அபாயம் அல்லது சாத்தியக் கூறு நிரம்ப உள்ளது. சிகிச்சை செய்து கொள்பவரின் உடல் 100 க்கு 100 வெளியிலிருந்து வரும் மாற்று சிறுநீரகத்தை ஒப்புக் கொண்டு விடும் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் மருந்துகளைக் கொண்டு அந்த உதறிவிடும் நிலையை மாற்றி அமைக்கலாம். கடந்த காலத்தைப் போல அல்லாமல் இன்றைய கால கட்டங்களில் உதறிவிடும் அபாயங்கள் குறைவு.
 • முறையான மருத்துவம் : மருத்துவம் தொடர்ந்து இடைவிடாது எடுத்துக் கொண்டு வரப்படல் வேண்டும். சிறுநீரகம் தொடர்ந்து முறையாக வேலை செய்து வர, வாழ்நாட்கள் முழுவதும் மருத்துவம் தொடர வேண்டும். மருந்துகள் அதுவும் உதறித் தள்ளிவிடப்படும் அபாயத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதலை நிறுத்தவே கூடாது.
 • தொற்றுதல் உண்டாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
 • மருந்துகளின் பக்க விளைவுகளும், தீயவிளைவுகளும் எழ சாத்தியக் கூறுகள் உள்ளன.
 • அழுத்தம், யாராவது சிறுநீரகத்தைதானம் செய்ய வருகிறார்கள என்று எதிர்பார்த்துக்காத்திருத்தல், அந்த சிறுநீரகம் நிச்சயம் வெற்றிகரமாக சிகிச்சை மூலம் பொருத்தப் பட்டு வேலை செய்யுமா செய்யாதா என்ற இழுபறி நிலை, இது போன்ற சூழல்கள் மன அழுத்தங்களைக் கொண்டு வரும்.
 • ஆரம்பகாலத்தில் செலவு அதிகம்.

மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் இல்லாத உடல் நிலைகள் என்னென்ன?

நோயாளிக்கு,

 • கடுமையான தொற்றுதல் இருந்தால்,
 • உளவியல் பிரச்னைகள் இருந்தால்,
 • இரத்தம் பாய்வது சீராக இல்லாமல் இருந்தால்,
 • இருதயக் கோளாறுகள் இருந்தால்,

மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைக்க முடியாது.

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏதாவது வயது வரம்பு உண்டா?

அப்படி எந்த வயது வரம்பும் கிடையாது. வழக்கமாக 5 வயதிலிருந்து 65 வயது வரை இருக்கும் எவருக்கும் இந்த அறுவை சிகிச்சையை செய்யலாம்.

இந்த சிகிச்சைக்கு உகந்த சிறுநீரகங்கள் கிடைக்கும் இடங்களின் சாத்தியக்கூறுகள் என்னென்ன?

மூன்று சாத்தியக்கூறுகள் அப்படி உள்ளன.

1. உயிருடன் இருந்து தானமளிக்க முன்வரும் உறவினர்கள் : உயிருடன் இருந்து தானமளிக்க முன்வருவோர்கள், பெறுபவரோடு இரத்த உறவு இருப்பவராக இருத்தல் வேண்டும். அது பெற்றோராக இருக்கலாம், சகோதரன் அல்லது சகோதரியாக இருக்கலாம், மகன் அல்லது மகளாக இருக்கலாம், அத்தை, சிற்றப்பா அல்லது அவருடைய மகன்/மகள் போன்றவர்களின் சிறுநீரகங்கள் கிடைத்தால் பொருத்தலாம்.

2. உயிருடன் இருந்து உறவினராக இல்லாமல் தானமளிக்க முன்வரும் உறவினர்கள் : மனைவி / கனவர் அல்லது நண்பர் போன்றவராக இருக்கலாம்.

3. இறந்துவிட்டவரின் சிறுநீரகங்கள் : மூளைச் சாவால் இறந்தவராக இருந்தால், அவருடைய சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்தலாம்.

மாற்றுச் சிறுநீரகம் கொடுப்பதற்கு மிகச் சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர் யார்?

ஒரே அச்சாக வளர்ந்த இரட்டையர்களே அத்தகைய சிறப்பைக் கொண்டவர்கள்.

யார் யார் தங்கள் சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகக் கொடுக்கலாம்?

ஆரோக்கியமானவர்களே தங்களுடைய இரு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகக் கொடுக்கலாம். அதுவும் இரத்த குரூப்பும், தசை வகைகளும் ஒத்து இருத்தல் அவசியம். பொதுவாக அப்படிக் கொடுப்பவர்கள், 18 லிருந்து 65 வயதிற்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

இரத்த வகை அல்லது Blood Group க்கும் சிறுநீரக தானத்திற்கும் என்ன சம்பந்தம்?

இரத்த வகை பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் நிச்சயம் ஒத்து இருத்தல் வேண்டும். ஒன்று ஒரே வகையானதாக இருக்கலாம் அல்லது ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் வகையாக இருக்கலாம்.

பெறுபவருடைய இரத்த வகை

கொடுப்பவர் இரத்த வகை

O

O

A

A or O

B

B or O

AB

AB, A, B or O

அப்படி சிறுநீரகத்தை தானம் செய்ய முடியாதவர் யார்?

உயிருடன் இருந்து தானம் செய்ய முன்வருவரை முழுக்க முழுக்க மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தல் வேண்டும். உளவியல் பூர்வமாகவும் அவர் சோதிக்கப்படல் வேண்டும். அப்படி தானம் செய்வது முற்றிலும் பாதுகாப்பான பழக்கமே என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கொடுக்க நினைப்பவருக்கு நீரிழிவு நோய் அல்லது புற்று நோய் இருந்தால், அவர் சிறுநீரகத்தை எடுக்கக் கூடாது. இதே போல் எய்ட்ஸ் தொற்றுதல், உயர் இரத்த அழுத்தம் அல்லது தீவிரமான மருத்துவ அல்லது உளவியல் பூர்வமான நோய் போன்றவை இருந்தாலும் அவருடைய சிறுநீரகத்தை எடுக்கக்கூடாது.

உயிருடன் இருந்து தானமளிப்பவருக்கு உள்ளார்ந்து நிற்கும் அபாயங்கள் என்ன?

முதலில் அவர்தானம் செய்யத்தகுந்தவர் என்பதை முற்றிலுமாக சோதித்து அறிதல் வேண்டும். பொதுவாக ஒரே சிறுநீரகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் வாழ ஆரம்பிக்கும்பொழுது எந்தவித பிரச்னையும் எவருக்கும் எழுந்ததில்லை. தானம் செய்ய நினைக்கும் பெண்மணிக்கு குழந்தைகள் இருக்கலாம். தானம் செய்ய முன்வருபவர் ஆணாக இருந்தால் அவர் ஒரு குடும்பத்திற்கு தந்தையாக இருக்கலாம்.

வேறு எந்த சாதாரண அறுவை சிகிச்சைக்கும் என்னென்ன அபாய சாத்தியக் கூறுகள் உண்டோ அதைப் போலத்தான் இந்த சிகிச்சைக்கும் உண்டு. ஒரே சிறுநீரகத்தைக் கொண்டு வாழ ஆரம்பிப்பதால், அவருக்கு சிறுநீரக நோய்கள் வரும் என்ற அதிக சாத்தியக் கூறு உண்டு என்றே சொல்ல முடியாது.

ஜோடியாக செய்யப்படும் தானம் என்றால் என்ன?

உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரக தானத்தைச் செய்வதால் பற்பல நன்மைகள் உண்டு. அதாவது இறந்து விட்டவரின் சிறுநீரகத்தை எடுப்பதை விட உயிருடன் இருப்பவர்களின் சிறுநீரகத்தை எடுப்பது பல நன்மைகளைக் கொண்டு வரும். எத்தனையோ நபர்கள், சிறுநீரக நோயின் முற்றிய நிலையில் இருப்பவர்கள் ஆரோக்கியமான சிறுநீரகங்களை வைத்துக் கொண்டும் தானம் செய்ய முன்வருவார்கள். ஆனால் இரத்த வகை ஒன்றாகவோ அல்லது ஒத்துப் போகவோ செய்யாது.

ஜோடியாகக் கொடுக்கப்படும் சிறுநீரக தானம் அல்லது 'உயிருடன் இருக்கும் தானமளிப்பவரோடு வைத்துக் கொள்ளும் சிறுநீரக பரிமாற்றம்" என்பது சிறுநீரகங்களை வேறொருவரோடு பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதாகும். சில சமயங்களில் ஒத்துப் போகாத இரு சிறுநீரகங்களை இப்படிச் செய்வதால் ஒத்துப் போய் விடலம். ஒத்துப் போகாத இருவருடைய சிறுநீரகங்களை எடுத்து, இரு ஒத்துப் போகும் சிறுநீரக அறுவை சிகிச்சையாக செய்து விடலாம்.

டையாலிஸிஸ் செய்யும் முன்பே மாற்று சிகிச்சை மேற்கொள்ளுதல் என்றால் என்ன?

பொதுவாக டையாலிஸிஸ் செய்து முடித்த பின்தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சில சமயங்களில் மேலே சொல்லப்பட்ட விதத்தில் அதற்கும் முன்பே மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

மருத்துவரீதியாக முற்றிலும் சரியென்று தீர்மானிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு அதுவும் நோய் தீவிர நிலைக்குச் சென்று விட்ட நிலையில் இருப்பவருக்கு, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவது சரியே. அப்படிச் செய்வதால் அபாய சாத்தியக் கூறுகள் குறைவு, செலவு குறைவு மற்றும் டையாலிஸிஸினால் வரும் உபத்திரவங்கள் குறைவு. அத்துடன் மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கு ஒப்புதலான சூழல்கள் உருவாகி இருக்கும். பொதுவாக இப்படி டையாலிஸிஸ் செய்யும் முன்பே அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

மாற்று அறுவை சிகிச்சை

சிறுநீரகங்கள் எப்படி மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன?

 • அறுவை சிகிச்சைக்கு முன்னால், முறையாக மருத்துவ, உளவியல் பூர்வ மற்றும் சமூக நிலைக்கு ஒப்ப, குறிப்பிட்ட நோயாளியையும் தானமளிப்பவரையும் சோதித்து அறிதல் வேண்டும். அவர் உயிருடன் இருப்பவராக இருந்தால் இதை முதலில் செய்து அறிதல் வேண்டும். அத்துடன் இரத்த வகை ஒத்துப் போகக் கூடியவையா என்பதை சோதிக்கவும்
 • மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு குழுவே சேர்ந்து ஒத்துழைத்துச் செயல்பட வேண்டிய சிகிச்சை. அதில் nephrologists, transplant surgeon, pathologist, anesthetist, supporting nursing staff மற்றும் transplant coordinators போன்றவர்கள் அவசியம் உடன் இருந்தாக வேண்டும்.
 • தானமளிப்பவருக்கு எல்லா விஷயங்களையும் வழி முறைகளையும் முறையாக எடுத்துச்சொன்ன பிறகு, ஒப்புதல் படிவத்தை அவரும் முறையாக முழுக்க முழுக்க படித்து அறிந்து கையொப்ப மிட்ட பிறகு, சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம்.
 • உயிருடன் இருப்பவர் தானமளிக்கும் பொழுது இருவருடைய அறுவை சிகிச்சையும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது.
 • இதன் தீவிரத்தன்மை காரணமாக இந்த சிகிச்சை 3 - லிருந்து 5 மணி நேரம் நீடிக்கக் கூடியது. பொதுவாக எவருக்கும் கொடுக்கப்படும் மயக்க மருந்தைக் கொடுத்தே நோயாளியையும் தானமளிப்பவரையும் நினைவிழக்கச் செய்வார்கள்.
 • உயிருடன் இருப்பவர் தானமளிக்கும்பொழுது, வழக்கமாக இடது சிறுநீரகமே எடுக்கப்பட்டு -(முறையான அறுவை சிகிச்சை மூலமோ அல்லது லாப்ரோஸ்கோப்பி மூலமோ) - பொருத்தத்திற்கு உபயோகப் படுத்தப்படும். அந்த சிறுநீரகம் எடுக்கப்பட்ட பிறகு ஒரு சிறப்பான தன்மை கொண்ட திரவத்தால், நன்றாகக் கழுவப்படும். அதை அடுத்து பெறுபவரின் அடிவயிற்றின் வலது கீழ்ப்புறம் அது பொருத்தப்படும்.
 • பெரும்பாலான சமயங்களில் பெறுபவரின் பழுது பட்ட சிறுநீரகங்கள் வெளியே எடுக்கப்படுவதில்லை.
 • உயிருள்ளவரின் சிறுநீரகங்களை எடுத்து பெறுபவருக்கு பொருத்தி விட்ட உடனேயே அது செயல்படத் துவங்கி விடும். ஆனால் அது ஒரு இறந்த உடலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் ஒரு சில நாட்கள் கழித்தே மாற்றப் பட்ட அந்த சிறுநீரகம் வேலை செய்யத்துவங்கும். பெறுபவர் சில நாட்களுக்கு டையாலிஸிஸில் இருக்க வேண்டி வரும். போதுமான அளவு திறனுடன் மாற்றப் பட்ட புதிய சிறுநீரகம் வேலை செய்ய ஆரம்பிக்கும் வரை அப்படித்தான் இருத்தல் வேண்டும்.
 • மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின், நெஃப்ராலஜிஸ்ட் அந்த பெறுபவரைப் பார்த்துக் கொள்வார்.

அறுவை சிகிச்சைக்குப்பின் கவனம்

அறுவை சிகிச்சைக்குப்பின் வரக்கூடிய அபாய சாத்தியக் கூறுகள் என்னென்ன?

பெற்றவரின் உடல் புதிதாக உள்ளே நுழைக்கப்பட்ட சிறுநீரகத்தை உதறித்தள்ளலாம், தொற்றுக்கள் பரவலாம் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள் ஏற்படலாம். அல்லது அறுவை சிகிச்சையிலேயே ஏற்படும் சில கோளாறுகள் பாதிக்கலாம்.

பொதுவாகவே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, முறையான மருத்துவமும் உதறித்தள்ளும் தன்மையை கண்காணிப்பதும் மிக அவசியம்.

ஆ. அறுவை சிகிச்சைக்கு மாற்றப்பட்ட சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா என்பதை இடைவிடாது கவனித்தல்.

அறுவை சிகிச்சைக்குப்பின் கொடுக்கும் மருத்துவமும் சிறுநீரக நிராகரிப்பும்

அறுவை சிகிச்சைக்குப்பின் கொடுக்கப்படும் மருத்துவத்திற்கும் பிற மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

பெரும்பாலான சிகிச்சைகளுக்குப் பின், 7 லிருந்து 10 நாட்களுக்காவது மேற் சொன்ன கவனம் தொடர வேண்டும். ஆனால் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின், வாழ்நாள் முழுவதுமே முறையான மருத்துவமும் கூரிய கவனமும் மிகவும் அத்தியாவசியமே.

சிறுநீரக நிராகரிப்பு என்றால் என்ன?

ஒவ்வொரு மனித உடலுக்குமே வெகு இயல்பாக ஒரு தடுப்பு அமைப்பே வேலை செய்கிறது. இது உடலுக்குள் வரும் அன்னிய பொருட்கள் யாவையும் - (பாக்டீரியாக்கள், வைரஸ்கள், போன்றவை) உதறித் தள்ளி உடலைப் பாதுகாக்கிறது. அப்படித்தான் புதிதாக உள்ளே வைக்கப் பட்ட சிறுநீரகத்தையும் உடல் உதறித் தள்ள முயற்சிக்கும்.

ஏனென்றால் உடலைப் பொறுத்த வரை, அது ஒரு அன்னியப் பொருள்”. அதன் செயலை முறியடிக்க முயற்ச்சிப்பதுமல்லாமல் அதையே அழிக்க நினைக்கிறது. பெறுபவரின் உடல் இப்படி புதிதாக வந்த சிறுநீரகத்தை "ஒப்புக் கொள்ளாத’ நிலைமைகளும் உண்டு.

சிறுநீரக நிராகரிப்பு எப்பொழுது ஏற்படும்? அதன் விளைவுகள் என்ன?

அப்படிப் பட்ட உதறித்தள்ளப்படும் நிலை அறுவை சிகிச்சை நடந்து முதல் ஆறு மாதங்களுக்குள் நடக்கலாம். இந்த உதறித் தள்ளப் படும் தன்மையின் தீவிரம் நோயாளிக்கு நோயாளி மாறுபடும். அநேகமாக அந்த செயல் அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதை முறையான மருத்துவத்தால் உடலின் இயல்பான சக்திகளை ஊக்குவித்து சரி செய்யலாம். ஆனால் ஒரு சிலருக்கு உண்மையிலேயே இந்த உதறித் தள்ளும் தன்மை மிகத் தீவிரமாகவே இருக்கலாம். மருத்துவத்தால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். இந்த தீவிரத்தன்மை சிறுநீரகத்தையே அழிக்கும்.

மாற்று சிறுநீரகம் பொருத்திய பின், சிறுநீரக நிராகரிப்பு ஏற்படாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் என்ன?

 • உடலின் உள்ளார்ந்த எதிர்ப்பு சக்தி இருப்பதால், மாற்று சிகிச்சையில் பொருத்தப் பட்ட சிறுநீரகம் உதறித் தள்ளப் படும் அபாயம் என்றைக்கும் உண்டு.
 • அந்த எதிர்ப்பு சக்தி முழுவதுமாக கட்டுப் படுத்தப் பட்டு விட்டால், உதறித் தள்ளப்படும் சம்பவமே நிகழாது. ஆனால் நோயாளிக்கு உயிரையே பாதிக்கக்கூடிய தொற்றுதல் வரக்கூடும்.
 • சிறப்பான மருந்துகள் நோயாளிக்கு சிகிச்சைக்குக் கொடுக்கப் பட்டு உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தி கட்டுப்படுத்தப்படும். நோயாளியின் உடல் தொற்றுதலுக்கு எதிராக போராடும் சக்தியை சற்று மட்டுப்படுத்திவைக்கும்.

இத்தகைய மருந்துகளுக்கு immunosuppressant மருந்துகள் என்று பெயர். மிகவும் பெரும்பாலும் மேற்சொன்ன வகையில் உபயோகப்படுத்தப்படும் மருந்துகளாவன - prednisolone, cyclosporine, azathioprine, mycophenolate mofetil (MMF) , tacrolinus and sirolimus போன்றவை ஆகும்.

மாற்று சிகிச்சைக்குப்பிறகு எவ்வளவு நாட்கள் immunosuppressant மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

immunosuppressant மருந்துகளை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். ஆனால் சிகிச்சை காலத்தில் கொடுக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கையும் வீரியமும் காலப்போக்கில் படிப்படியாக குறைக்கப்படும்.

மாற்று சிகிச்சைக்குப்பிறகு நோயாளிக்கு வேறு மருந்துகள் தேவைப்படுமா?

ஆமாம். சிகிச்சைக்குப் பிறகு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் - இரத்த அழுத்தம் அதிகமாவதைத் தடுக்கும் மருந்துகளும், டையூரெடிக்ஸ், கால்ஷியம், விட்டமின் மாத்திரைகள், தொற்றுதலைத் தடுக்கும் மருந்துகளும், வயிற்றில் புண் வராமல் தடுக்கும் மருந்துகளையும் மருத்துவர் கொடுப்பார்.

உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகள் யாவை?

அவை கீழே விளக்கப்பட்டிருக்கின்றன.

மருந்து

பொதுவான பக்க விளைவுகள்

Prednisolone

உடலின் எடை கூடும், இரத்த அழுத்தம் கூடும். வாயு உபத்திரவம் எரிச்சல், பசி அதிகமாகும், நீரிழிவு பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும், கண் புரையும் ஏற்படும்

Cyclosporine

உயர்இரத்த அழுத்தம், மெலிதான நடுக்கம், உபரியாக முடி வளர்தல், பல் ஈறு வீங்குதல், நீரிழிவு மேலும் தாக்கக் கூடிய சாத்தியக் கூறு

Azathioprine

இரத்த அணுக்கள் உற்பத்தியில் தடங்கல், தொற்றுதலின் அதிகபட்ச அபாயம்

MMF

அடிவயிற்றில் வலி, வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு

Tacrollinnus

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அபாயம், பதைபதைப்பு, தலை வலி, சிறுநீரகம் பாதிக்கப்படுதல்

Sirolimus

உயர் இரத்த அழுத்தம், இரத்த அணுக்கள் குறையும் அபாயம், வயிற்றுப் போக்கு, மூட்டுக்களில் வலி, காலஸ்ட்ரால் கூடுதல் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் கூடுதல்

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின் செயலிழந்தால் என்ன செய்வது?

மாற்றுச் சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று அறுவை சிகிச்சை அல்லது டையாலிஸிஸ் செய்தல் வேண்டும்

மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின் எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

வெற்றிகரமான மாற்றுச் சிறுநீரகம் புதிய, முழு இயல்புடன் கூடிய ஆரோக்கியமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையைக் கொண்டு வருகிறது. ஆனால் வாழ்க்கையில் மருத்துவ ரீதியில் வெகு வெகு கண்டிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டியதும் தலையாய முக்கியத்தைக் கொண்டது.

மாற்றுச் சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பதற்கான பொதுவான சில அறிவுரைகள்

 • மருந்து சாப்பிடுவதை நிறுத்தவே கூடாது. அல்லது மருத்துவர் எப்பொழுதாவது அளவை மாற்றச்சொன்னால் அதன்படி அவசியம் நடந்தாக வேண்டும். முறைகள் பிசகுவதும், தானே மாற்றிக் கொள்வதும், அல்லது இடையிடையே நிறுத்திவிடுவதும், மாற்றுச் சிறுநீரகங்கள் செயலிழந்து போவதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
 • மருந்துகளின் பட்டியல் எப்பொழுதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். போதுமான அளவு அவற்றை பாதுகாத்து வைக்கவும். மருந்துக் கடைகளில் கேட்டவுடன் கை மேல் கிடைக்கும் மருந்துகளையோ அல்லது மூலிகை மருத்துவத்தையோ நாடாதீர்கள்.
 • அடிக்கடி இரத்த அழுத்தத்தை அளந்து கொள்ளவும். வெளியேறும் சிறுநீற்றின் அளவை அளக்கவும். உடல் எடையை அடிக்கடி பார்த்துவரவும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை, மருத்துவர் பரிந்துரைத்தால் ஒவ்வொரு நாளும் அளந்து அதை ஒரு நோட் புத்தகத்தில் குறித்து வரவும்.
 • முறையாக மருத்துவரைப் பார்ப்பதும் அவர் அறிவுரைப் படி அடிக்கடி சோதித்துக் கொள்வதும் ஒரு விதியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்.
 • பரிந்துரைக்கப்படும் சோதனைச் சாலைகளிலேயே சென்று சோதித்துக்கொள்ளவும். ஒருவேளை சோதனைச்சாலை முடிவுகள் சரியில்லை என்றால் சோதனைச் சாலையை மாற்றுவதை விட மருத்துவரைக் கண்டு ஆலோசிப்பது மேல்.
 • அவசர காலத்தில் ஒரு மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெற நினைத்தால், அவருக்கு உங்களைப் பற்றி இதுவரை தெரியாமலிருந்தால், நீங்கள் மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் என்பதைக் கூற மறந்து விடாதீர்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துப் பட்டியலை அவரிடம் காண்பிக்கவும்.
 • உணவுக் கட்டுப்பாடுகள், அறுவை சிகிச்சைக்குப் பின் வெகு குறைவே. சமச்சீரான உணவையே உண்ணவும். போதுமான கலோரிகள் இருக்கும் உணவையே உண்டு வரவும். புரோட்டினும் போதுமான அளவே பரிந்துரைத்தபடி இருத்தல் வேண்டும். உணவு உண்ணும் வேளைகளில் ஒரு ஒழுங்கு காண்பிக்கப்படல் வேண்டும். உப்பு குறைவான உணவையும், சர்க்கரை, கொழுப்பு போன்றவை குறைவாக இருக்கும் உணவையுமே உண்ண வேண்டும். அப்படி இருந்தாலே எடை கூடாது.
 • ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் குடிநீர் பருகவும்.
 • முறையாக தேகப் பயிற்சி செய்து வரவும். உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும். மிகவும் அதிகமான உடலுழைப்பை மேற்கொள்ள வேண்டாம். மிக அதிகம் உடலுழைப்பைக் கொண்ட பாக்சிங் அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடல் வேண்டாம்.
 • பாதுகாப்புடன் கூடிய உடலுறவைத் தொடரலாம். குறைந்தது 2 மாதங்களுக்குப் பிறகு தொடரலாம். அதுவும் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே தொடரவும்.
 • சிகரட் புகைப்பதையும் மது அருந்துவதையும் விட்டு விடவும்.
 • கூட்ட நெரிசல் உள்ள இடங்களிலிருந்து விலகி வந்து விடவும். சினிமாக்கள், ஷாப்பிங் இடங்கள், பொதுஜன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள், மற்றும் தொற்றுதலினால் பாதிக்கப் பட்டவர்களின் அருகாமை -இவற்றைத்தவிர்க்கவும்.
 • பொதுநல இடங்களில் எப்பொழுதுமே ஒரு கவசம் அணியவும். முதல் மூன்று மாதங்களுக்கு இப்படிச் செய்து வரவும்
 • எப்பொழுதும் உணவு உண்பதற்கு முன்பும் மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன்பும் கைகளை கழுவி வரவும். சிறுநீர் கழித்து விட்டு வரும்பொழுதோ மலம் கழித்து விட்டு வரும்பொழுதோ நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
 • நன்றாக வடிகட்டப் பட்ட கொதிக்க வைக்கப் பட்ட குடிநீரையே பருகவும்.
 • வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது தட்டுக்களில் வைத்து உண்ணவும். வீட்டிற்கு வெளியே கிடைக்கும் உணவை உண்ண வேண்டாம். பச்சை பழங்களையும் காய் கறிகளையும் முதல் மூன்று மாதங்களுக்கு உண்ண வேண்டாம்.
 • வீட்டிற்குள் அப்பழுக்கற்ற வெகு சுத்தமான சூழலை பேணிக்காக்கவும்.
 • உங்கள் பற்களை ஒவ்வொரு நாளும் இரு முறைகள் துலக்கி சுத்தமாக வைத்திருக்கவும்.
 • எங்கேயாவது வெட்டுக் காயங்கள், உரசல்களினால் எழும் காயங்கள் இருந்தால், உடனுக்குடன் சோப்பினால் சுத்தம் செய்து நீரினால் கழுவி மருந்து போட்டு பேண்டேஜ் போடவும்.

கீழ்க்கண்ட சமயங்களில் உங்கள் டாக்டரையோ அல்லது மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியின் உதவியை கூப்பிட்டுப் பெறவும்.

 • 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது ஃப்ளுவின் அடையாளங்கள் இருந்தால், அதாவது உடல் சில்லிட்டுப் போவதாக இருந்தால், உடல் வலி இருந்தால் அல்லது இடைவிடாது தலைவலி இருந்தால்
 • வலி அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைச் சுற்றி சிவப்பாக இருந்தால்
 • வெளியேறும் சிறுநீரின் அளவு குறைந்திருந்தாலோ, வெளியேற வேண்டிய திரவங்கள் உடலில் தேங்கி வீக்கத்தைக் காண்பித்தாலோ, அல்லது உடல் எடை வேகமாக ஏறினாலோ (ஒரே நாளில் 1 க்கும் மேற்பட்ட கிலோகிராம்)
 • சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் அல்லது சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படுதல்
 • இருமல், மூச்சுத்திணறல், வாந்தி பேதி போன்றவை
 • ஒரு புதிய அசாதாரண நிலை ஏதோ உடலுக்கு ஏற்படுதல்

சிறுநீரகம் செயலிழந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்படுவது சாத்தியமாகிறது. ஏன்?

சிறுநீரகக் கோளாறுகள் மிகத் தீவிரமான நிலையை அடைந்து விட்ட பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே முறையான வழியாகும். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை வேண்டி வெகு அதிகமான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

1. மாற்றுவதற்கு சிறுநீரகம் கிடைப்பதில்லை மாற்றுச் சிறுநீரகம் வேண்டி நிற்பவர்களில் ஒரு சிலருக்கு உயிருடன் இருக்கும் சொந்தக்காரர்கள் அல்லது இறந்து விட்டவர்கள்தானம் செய்யும் வகையில் கிடைக்கிறார்கள். உயிருடன் இருந்து தானம் செய்பவர்கள் கிடைப்பது ஒரு பெரும் பிரச்னை. இதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் வெகு நீளம், அதிலும் இறந்து விட்டவர் ஒருவர்-அவருடைய சிறுநீரகத்தை உபயோகப்படுத்தக் கூடிய நிலையில் - இருப்பவருக்காக காத்திருப்பவர் ஏராளம்.

2. அதற்காகும் செலவு. மாற்று சிறுநீரக அறுவைக்கு ஆகும் செலவும், மாற்றிய பின் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளின் செலவும் அபரிமிதமான அளவில் அதிகம். இதுவே முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நாடுகளில் மிக மிக அதிகமான அளவில் நோயாளிகளைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

3. வசதிகள் போதாமை; எத்தனையோ முன்னேறிவரும் நாடுகளில் மாற்று சிறுநீரகம் பொருத்தும் அறுவை வசதிகள் மிகக் குறைவு.

இறந்தவருடைய சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துதல் (Cadaveric kidney transplantation)

 

மூளைக்காய்ச்சலினால் அல்லது இருதயம் நின்று போனதால் இறந்தவருடைய சிறுநீரகத்தை எடுத்துப் பொர்த்துவது என்பதே மேற்கண்ட சிகிச்சையைக் குறிக்கும். வெகு அண்மையில் இறந்தவருடைய சிறுநீரகமாக அது இருத்தல் வேண்டும்.

இறந்தவருடைய சிறுநீரகத்தை எடுத்து வேண்டியவருக்குப் பொருத்துவது ஏன் தேவைப்படுகிறது?

உயிருடன் இருந்து தன் சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மிகத்தீவிரமான சிறுநீரகக் கோளாறு உடையவர்கள் நெடுநாட்களாக மாற்றுச் சிறுநீரகத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே நம்பிக்கை இறந்தவர் ஒருவருடைய சிறுநீரகத்திற்காகக் காத்திருப்பதுதான். தன் சிறுநீரகங்களில் ஒன்றை தான் இறந்த பின் வேறு ஒருவருக்குப் பொருத்துவதற்குத் தயாராக இருப்பது ஒரு பெரும் மனிதாபிமான செயலாகும். அப்படிச் செய்வதின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சிறுநீரக வியாபாரமும் தடுப்பதற்கு உதவும்.

"மூளைச் சாவு" என்றால் என்ன?

"இறப்பு" என்ற சாதாரண வார்த்தை, இருதயமும் சுவாசித்தலும் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லாமலும் நிரந்தரமாகவும் நின்று போய்விடுவதாகும். 'மூளைச் சாவு" என்ற சொற்றொடர், முழுவதுமானதும் திரும்ப ஏற்பட வைக்க இடமில்லாமலும், மூளையின் எல்லா செயல்களும் நிரந்தரமாக நின்றுபோய் இறப்புக்கு வழிவைப்பதுதான் ஆகும்.

அந்த வகை இறப்பை தீர்மானிப்பதற்கு முன் இருக்க வேண்டிய நிலைகள் யாவை?

1. நோயாளிக்கு நினைவு தவறி இருத்தல் வேண்டும். அதன் காரணம், தலை பாகம் முழுவதும் செயலிழந்து இருத்தல் வேண்டும். மூளை பழுதாகி விடுவதால் ஏற்படும் மிக அதிக இரத்தப் போக்கு முதலியவை ஊர்ஜிதப் படுத்தப்படல் வேண்டும். தூக்க மருந்துகள், உடல் நடுக்கத்தைக் குறைப்பதற்காகக் கொடுக்கப் படும் மருந்துகள், சதையை தளர்ச்சியாக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், மனத் தொய்வை குறைக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் hypnotics, narcotics போன்ற மருந்துகளால் மூளைச் சாவு ஏற்படும். இன்னமும் சில காரணங்களால் அது ஏற்படக் கூடும். இவை எல்லாம் இல்லையா என்பதை தீர்மானத்திற்கு முன் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மருத்துவர் முதலில் இரத்த அழுத்தத்தை சரி செய்வார். அல்லது குறைவான உடல் வெப்பநிலையையும் உடலுக்குள் பிராணவாயு குறைந்த அளவே செல்லுவதையும் குறைப்பார். அதற்குப் பிறகே மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பார்.

2. முறையான சிகிச்சைக்குப் பின்னும் வல்லுநர்களின் கவனத்திற்குப் பின்பும் நினைவிழந்த நிலை நீடித்து, 'இனி பிழைப்பதற்கு வழி இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த பின் அந்த முடிவை எடுக்கலாம்.

3. நோயாளியினால் இயல்பாக சுவாசிக்க முடியாது போய் அவரை நிரந்தரமாக செயற்கையாக வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை.

4. சுவாசித்தல், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டம் போன்றவை வென்டிலேட்டர் அல்லது இதர உயிரைக் காக்குக் உபகரணங்களால் பேணப்பட்டால் -

மூளைச் சாவுக்கும் நினைவிழத்தலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

நினைவிழந்தவருக்கு வென்டிலேட்டரின் உதவி வேண்டியோ வேண்டாமலோ போகலாம். முறையான சிகிச்சைக்குப்பின் அவர் உயிரோடு மீண்டு வர சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் 'மூளைச் சாவினால் வரும் தாக்குதல் மிக மோசமானதும் திரும்ப நோயாளியை சாதாரண நிலைக்குக் கொண்டு வர முடியாத நிலையுமாகும். எந்த வித மருத்துவ சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ அவரை மீண்டும் சாதாரண நிலைக்கு உயிருடன் மீட்டுக் கொண்டு வர முடியாது. வென்டிலேட்டரை "ஆஃப்' செய்தவுடன் சுவாசிப்பது நின்றால் மேலும் இருதயமும் துடிப்பதை நிறுத்தினால், நோயாளிக்கு குணம் ஏற்படப் போவதில்லை. ஆனால் சட்டபூர்வமாகப் பார்த்தால் நோயாளி ஏற்கனவே இறந்து விட்டார் என்று தான் அர்த்தம். வென்டிலேட்டரை அவர் மூக்கை விட்டு நகர்த்தியதால் அவர் இறப்பதில்லை அல்லது அது இறப்பதற்கு உண்டான காரணம் இல்லை. கால வரையறை இல்லாமல், மூளைச் சாவினால் இறப்பவர்களுக்கு வென்டிலேட்டர் வைத்து காப்பாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு சில மணிநேரங்களுக்குள் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும்.

இறந்த பின் யாராவது சிறுநீரகங்களை தானம் செய்ய முடியுமா?

முடியாது. கண் தானத்தைச் செய்வது போல, இறந்த பின் சிறுநீரகங்களை தானம் செய்ய முடியாது. இறப்பு ஏற்பட்டவுடன், இருதயம் நின்று விடுகிறது. அதே சமயத்தில் சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தமும் தடைப்பட்டு நின்று விடுகிறது. இதனால் சிறுநீரகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப முடியாத நிலையை அடைந்து விடுகிறது. கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகிறது. இதனால் அந்த சிறுநீரகத்தை எடுத்து இன்னொருவருக்கும் பொருத்த முடியாது.

“மூளைச் சாவு"க்குப் பின் இருக்கும் சாதாரண காரணங்கள் யாவை?

தலையில் காயம் ஏற்படுதல் (விபத்தினால்) அல்லது மூளைக்குள் தாக்கம் ஏற்பட்டு அதீதமான இரத்தப் போக்கு, மூளையில் கட்டி போன்றவை மூளைச் சாவுக்கு காரணமாகின்றன.

மூளைச்சாவு எனும் நிலை எப்படி கண்டுபிடிக்கப் படுகிறது? அதை கண்டு பிடிப்பவர் யார்?

ஆஸ்பத்திரிகளில் அவசர கால நிமித்தம் அனுமதிக்கப் பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரிலிருந்து செயற்கையாக காற்றை உள்ளே புக வைத்தும், எந்த வித முன்னேற்றத்தையும் காண்பிக்காத நோயாளிகளை அல்லது நரம்பியல் நிபுணர்களும் கைவிட்டுவிட்ட நிலையில் இருக்கும் அவ்வகை நோயாளிகளை "மூளை செயலிழந்து "இறப்பைத் தழுவுபவர்கள் என்று கூறுவார்கள். இந்த முடிவுக்கு வரும் முன் மருத்துவர் குழுவே முன்னின்று முடிவு செய்யும். அவர்களுக்கும் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வல்லுநர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட நோயாளியை கவனிக்கும் டாக்டர், ஒரு நியூரோடாக்டர், ஒரு நியோரோசர்ஜன் என்று பலர் இருப்பர். பின்னவர்கள் நரம்பியல் துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சோதித்து 'மூளை முழுமையாக செயலிழந்து விட்டதால்" இறந்து விட்டார் என்பதை தீர்மானிப்பார்கள். விரிவான பரிசோதனைகள், வெகு பல மருத்துவ சோதனைகள், முக்கியமான EEG பரிசோதனைகள் (மூளையை பரிசோதிக்கவே ஏற்பட்டவை) போன்ற பல சோதனைகளை மேற்கொண்டு, மூளை பாதிப்பிலிருந்து நோயாளியை விடுவிக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று வெகு விரிவாக பரிசோதிப்பார்கள். எல்லா பரிசோதனைகளும் ஊர்ஜிதப்படுத்திய பிறகு, மீண்டும் உயிர் பிழைக்க நோயாளிக்கு வழியே இல்லை என்று தெரிந்த பிறகு, "மூளை செயலிழந்த நிலையில் இறப்பு" என்பது வெளியாகிறது.

மூளை செயலிழப்பினால் இறப்பை தழுவும் நோயாளிக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?

கீழ்க்கண்ட நிலைகளில் 'மூளை செயலிழப்பால் இறந்த" ஒருவருடைய சிறுநீரகத்தை இன்னொருவருக்குப் பொருத்த சம்மதிக்கக்கூடாது.

1. நோயாளிக்குக் கடுமையான தொற்றுதல்கள் இருத்தல்

2. HIV and hepatitis B (மஞ்சள் கா மாலை) இருந்தால் கூடவே கூடாது.

3. வெகு நாளைக்கு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர், நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர், அல்லது சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர் அல்லது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உள்ளவர்.

4. புற்று நோயால் அவதிப்படுபவர், (மூளையில் ட்யூமர் இருப்பவரைத்தவிர)

5. 10 வயதிற்க்கும் குறைவான நோயாளி அல்லது 70 வயதிற்கும் அதிகமான நோயாளி

வேறு எந்த உடலுறுப்புக்களை இறந்தபின் ஒருவரிடமிருந்து மாற்றாக பொருத்த முடியும்?

இறந்தவர்களுடைய இரு சிறுநீரகங்களையும் எடுத்து உயிருடன் இருக்கும் இருவருக்குப் பொருத்தி அவர்களை பிழைக்க வைகக் முடியும். சிறுநீரகத்தைத் தவிர வேறு தானமாகக் கொடுக்கப்படக்கூடிய அங்கங்கள் : கண்கள், கணையம், கல்லீரல், தோல், போன்றவை.

தீவிர நிலையை எட்டி விட்ட சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு இறந்தவருடைய சிறுநீரகங்களை எடுத்து இருவரைக் காப்பாற்ற முடியும். பின்னவருடைய இரு சிறுநீரகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

இறந்தவருடைய சிறுநீரகங்களை எடுத்து வேறொருவருக்குப் பொருத்தும்பொழுது இயங்க வேண்டிய மருத்துவ குழுவில் யார் யார் இடம் பெற்றிருப்பார்கள்?

மேற்கண்ட அறுவை சிகிச்சைக்கு ஒரு மருத்துவர் குழுவே இயங்க வேண்டும். அதில் –

 • இறந்தவருடைய உற்றார் உறவினர்கள் - சட்ட பூர்வமாக இறந்தவருடைய சிறுநீரகத்தை தானம் செய்வதற்காக
 • தானம் செய்பவரின் குடும்ப டாக்டர்
 • இறந்தவரின் சிறுநீரகத்தைக் கொடுப்பதற்கு வழி செய்யும் இடைத்தர உதவியாளர், - அவரே உற்றார் உறவினருக்கு அறுவை சிகிச்சையைப் பற்றி எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லுவார்.
 • மூளைச்சாவை அறிந்து சொல்லும் நரம்பியல் நிபுணர்.
 • நெஃப்ராலஜிஸ்டுகள், யூராலஜிஸ்ட் மற்றும் அவருடைய குழு அங்கத்தினர்கள் - அவர்களே சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படும் ஒருவருக்குப் பொருத்துவார்கள்.

இறந்தவருடைய சிறுநீரகம் எப்படி எடுத்துப் பொருத்தப் படுகிறது?

அந்த அறுவை சிகிச்சையின் முக்கிய அம்சங்களாவன:

 • முறையான வகையில் 'மூளைச் சாவு" என்பது சட்டபூர்வமாக ஊர்ஜிதம் செய்யப்படல் வேண்டும்.
 • சரியான சோதனைகளுக்குப் பின் இறந்தவருடைய இரு சிறுநீரகங்களும் முழுக்க முழுக்க ஆரோக்கியமாக இருக்கின்றன என்பது தீர்மானிக்கப்படல் வேண்டும்.
 • தானம் கொடுப்பவரின் உறவினர்களின் சம்மதத்தைப் பெறுதல் வேண்டும்.
 • தானம் கொடுக்கும் இறந்தவர் வென்டிலேட்டர் மூலமே சுவாசிக்க வைக்கப்படுகிறார். அவருடைய இருதய துடிப்பினாலேயே தொடர்கிறது. மற்றும் இரத்த அழுத்தமும் அப்படியே நிலைநிறுத்தப்படுகிறது. இவை எல்லாம் சிறுநீரகங்கள் வெளியே எடுக்கப்படும் வரை தொடரும்.
 • அப்படி சிறுநீரகத்தை எடுத்த பிறகு தனிச் சிறப்பு வாய்ந்த திரவத்தால் அது நன்றாக கழுவப் பட்டு பணிக்கட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
 • இறந்த ஒருவருடைய இரு சிறுநீரகங்களும் தானம் செய்யத் தகுந்தவையே. ஆகவே இருவர் அவற்றைப் பெற்று உயிர் வாழ இரத்த வகை ஒன்றாக இருக்கின்றனவா என்பது சோதிக்கப்பட்டு அப்படியே HLA யும் ஒத்திருக்கிறதா என்று பார்க்கப்படல் வேண்டும். தசைப் பொருத்தமும் ஒத்துப் போகிறதா என்று பார்க்கப்படல் வேண்டும்.
 • மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டவுடன், நோயாளி சாதாரண வாழ்க்கையை முறையான உடலுழைபுக்களுடன் தொடரலாம்.
 • காத்திருப்போர் பட்டியலிலிருந்து முறையான வரிசையில் முதன்மையாக இருப்பவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 • விரைவிலேயே இந்த மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து கொள்வது அவசியமாதலால், தயார் நிலை முடிந்த உடனேயே சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்ளுதல் வேண்டும். அவற்றைப் பெறும் இருவருக்கும் உடனே துவங்கியாக வேண்டும்.
 • சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்ளப் போகும் இருவருக்கும் வழிமுறை ஒன்றே.
 • ஆக்சிஜன் குறைவாகவோ அல்லது இல்லாமற் போனால், பெறப் பட்ட சிறுநீரகங்கள் பழுதடைந்து போய் விடும். ஏனென்றால் இரத்த ஒட்டம் இருக்காது. மற்றும் பனிக்கட்டிக்குள் வைப்பதினாலேயே அது நிகழக்கூடும். இந்ததாக்குதலினால் இந்த சிறுநீரகங்கள் பொருத்தப்பட்ட உடனேயே இயங்காமல் போகலாம். ஒரு குறுகிய கால டையாலிஸிஸ் மூலம் நோயாளிக்கு உதவி அவருக்கு மருத்துவ ஆதரவு தரலாம்.

தானம் கொடுப்பவரின் குடும்பத்திற்கு இதன் மூலம் ஏதாவது நன்மை உண்டா?

இல்லை. அந்த குடும்பத்திற்கு எந்தவித பண உதவியும் கிடைக்காது. சிறுநீரகத்தை வாங்கிக் கொள்பவர் வேறு எவருக்கும் பெற்றதற்காக பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். அப்படி தானமாக வரும் சிறுநீரகங்களே ஒரு மாபெரும் பரிசாகும். இந்த வகை கருணை உதவிக்கு பரிசளிப்பது பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுக்க வேண்டும். சிறுநீரகத்தை வேண்டி நிற்பவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதில் இருக்கும் திருப்தியே எந்தவித பணக் காப்பீட்டை விட சிறந்தது.

இந்தியாவில் அப்படி மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் வசதிகள் நிறைந்த நிலையங்கள் எங்கு இருக்கின்றன?

இவ்வகை நிலையங்களை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கின்றன. இவ்வகை வசதி உள்ள பெருநகரங்களாவன - அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற ஊர்களாகும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

3.27586206897
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top