பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரக செயலிழப்பு / நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சை

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை மூன்று வகைகளில் மேற்கொள்ளலாம் அவையாவன, மருந்திலேயே மேலாண்மை செய்வது, டையாலிஸிஸ் மற்றும் மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவது ஆகும்.

* இத்தகைய நோயாளிகள் யாவரும் ஆரம்ப காலத்தில் வெறும் மருத்துவத்திலேயே சிகிச்சையை தொடருவார்கள் (மருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள், மற்றும் முறையாக கவனம் கொள்ளுதல்)

* சிறுநீரகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவது அவசியமாகும்.

மருத்துவ சிகிச்சைகள்

இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை ஏன் முக்கியமாக கருதப்படுகிறது?

நீண்ட நாள் இருந்து தாக்கும் இந்த நோய்க்கு குணமடையும் தன்மையே கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துதல் கட்டாயமாகிறது. விலை மிக உயர்வாக இருப்பதால், இந்தியாவில் 5-10 சதவீத நோயாளிகளுக்கே டையாலிஸிஸ் மேற்கொள்ளப்படுகிறது.

மீதமுள்ளவர்கள் இறந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே ஆரம்ப காலத்திலேயே நோயைக் கண்டு கொண்டு சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது. அது ஒன்றுதான் வழி. செலவும் குறைவாகும். அதன் மூலம் டையாலிஸிஸின் தேவையைக் குறைக்கலாம். அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்துவதை தள்ளிப் போடலாம்.

இந்நோயுடையவர்கள், ஏன் மருத்துவத்தின் பலனை உணர்வதில்லை?

ஆரம்ப காலத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் போவதுதான் ஒரு குறை. மருத்துவத்தை நடுவில் நிறுத்தினால், நிலைமை படு மோசமாகி விடும். அதற்குப் பிறகு சில நாட்களுக்குள்ளேயே அவர்களுக்கு மிகுந்த செலவில் சிகிச்சையை ஆரம்பிக்க நேரிடும். அது டையாலிஸிஸ் ஆகவோ அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவதாகவோ இருக்கலாம்.

மருத்துவத்தில் இந்த நோயைக் கையாளுவதின் நோக்கங்கள் என்ன?

1. நோயின் தொடர்ச்சியைக் குறைத்தல்

2. நோய்க்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றிற்கு சிகிச்சை அளித்தல்.

3. அறிகுறிகளை அகற்றச் செய்து நோயின் சிக்கல்களை அகற்றுவதற்கு மருத்துவம் மேற்கொள்ளுதல்.

4. இருதயத்தைச் சுற்றி ஓடும் இரத்தக் குழாய்களை பாதிக்கும் சாத்தியக் கூற்றை அகற்றச் செய்தல்.

5. டையாலிஸிஸ் அல்லது மாற்றுச்சிறுநீரகம் பொருத்தும் தேவையைத் தள்ளிப்போடுதல்.

சிகிச்சையின் பல்வேறு உத்திகளும் அவற்றை செயல்படுத்தும் முறைகளும்

கீழ்க் காணும் அட்டவணையில் அந்த உத்திகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

நோயின் நிலை

பரிந்துரைக்கப் படும் சிகிச்சை

எல்லா நிலைகளிலும் இதைச் செய்யவும்

 • முறையாக தொடர்ந்து நோயை கவனித்து வரவும்
 • வாழ்க்கை முறை மாற்றங்களையும், பொதுவான நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வரவும்.

1

 • நோயாளிகளுக்கு நோயைப் பற்றிய அடிப்படைக் கல்வியைப் புகட்டி வரவும்
 • நோய் தொடர்வதின் வேகத்தையும் இருதய நோய் ஆபத்துக்களையும் குறைக்க சிகிச்சை மேற்கொள்ளவும்

2

நோய் தொடர்ச்சியை கூர்மையாக கவனித்து உடன் சேரும் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கவும்.

3

சிக்கல்களை கணித்து சிகிச்சை செய்யவும்

சிறுநீரகங்களைப் பற்றி தெரிந்த நெஃப்ராலஜிஸ்டிடம் நோயாளியைக் காண்பித்து ஆலோசனைப் பெறவும்

4

செயற்கை சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை பற்றி நோயாளிக்கு எடுத்துச் சொல்லி சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அவரைத் தயார் செய்யவும்

5

டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவும்

மருத்துவ சிகிச்சையின் ஒன்பது படிநிலைகள்

அடிப்படை சிகிச்சை மேலாண்மை

கீழ்க்கண்ட வழியில் நோயைக் கண்டு கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்கவும். அது நோயின் தொடர்ச்சியை தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம் அல்லது நோயின் போக்கை மாற்று திசையில் கூடதிருப்பிவிடலாம்.

 • நீரிழிவுநோய் மற்றும் உயர்இரத்த அழுத்தம்
 • சிறுநீர்ப்பாதை அடைபடுதல் அல்லது சிறுநீர்ப்பாதை தொற்று
 • க்ளோமெருலோனெப்ரிடிஸ், ரெனோவாஸ்குலர் நோய், வலி நிவாரணி நெப்ரோபதி.

நோய் தொடர்ச்சியின் வேகத்தை மிதப்படுத்தும் உத்திகள்

 • இரத்த அழுத்தத்தை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வைத்தல்.
 • உட்கொள்ளப்படும் புரோட்டின் அளவை கட்டுப்படுத்துதல்
 • லிபிட் திரவத்தை குறைக்க சிகிச்சை செய்தல்
 • இரத்த சோகையை சரிசெய்தல்

நோய்குறி ரீதியான சிகிச்சைகள்

 • நீர்க் கேப்சூல்கள் (மாத்திரைகள்) விழுங்குவதன் மூலம் சிறுநீரின் அளவை அதிகரிக்கச் செய்து வீக்கத்தைக் குறைத்தல்
 • குமட்டல், வாந்தி மற்றும் இரைப்பை கோளாறுகளை கட்டுப்படுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல்.
 • நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு சார்ந்த எலும்பு நோய்களை குணப்படுத்த கால்ஷியம், ஃபாஸ்பேட், விட்டமின் டி  போன்ற பிற மருந்துகளை உட்கொள்ளுதல்.
 • இரும்புச் சத்து, விட்டமின், எரித்ரோபொயிடின் ஆகியவற்றை கொண்ட மருந்தினை உட்கொள்வதன் மூலம், ஹீமோ க்ளோபின் குறைந்த நிலையை சரி செய்தல்.
 • இருதயத்தைச் சுற்றி ஒடும் இரத்தக் குழாய்களுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் தடுத்தல். ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நிபுணர் அறிவுரைக் கூறாதவரை அன்றாடம் அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரவும்

திசை திருப்பும் காரணங்களை மேலாண்மை செய்தல்

சிறுநீரகம் செயலிழக்கும் விகிதத்தை அதிகப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து சிகிச்சை செய்யவும். இவற்றின் மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். இவ்வகையில் பொதுவாகக் காணப்படும் காரணங்களாவன:

 • சிறுநீரின் கனஅளவு குறைதல்
 • மருந்துகளால் சிறுநீரகங்கள் செயலிழத்தல்
 • தொற்று நோய்களும் இருதயத்திற்கு அழுத்தத்தைக் கொண்டு வந்து செயலிழக்கச் செய்யும் நோய்களுமாகும்.

நோயின் முற்றிய நிலையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து சிகிச்சை செய்தல்

திரவங்களின் மிக அதிக சேர்க்கை. இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு வெகுவாகக்கூடுதல், சிறுநீரகபாதிப்பினால் இருதயத்திற்கு, மூளைக்கு மற்றும் நுரையீரல்களுக்கு வரும் மிக மோசமான கேடுகள் போன்றவை பொதுவாக ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.

வாழ்க்கை முறையை மாற்றங்கள் மற்றும் பொதுவாக அனுசரிக்க வேண்டிய நிலைகள்

 • அபாய சாத்தியக்கூறுகளை அகற்றுவதில் கீழ்க்கண்ட வழிகள் மிகவும் அவசியமாகும்
 • புகைபிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்.
 • ஆரோக்கிய நிலையிலேயே உடல் எடையை வைக்க வேண்டும். முறையாக காலம் தவறாமல் தேகப் பயிற்சி செய்வதோடு உடல் ரீதியான உழைப்பில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
 • குடிப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
 • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் மற்றும் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைக்கவும்.
 • சிறுநீரகக் கோளாறுகளைப் பொறுத்து மருந்தின் அளவு மாறுபடுவதால், மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்தை எடுத்துக் கொள்ளவும்.
 • நெஃப்ராலஜிஸ்ட் அறிவுரைக்கேற்ப மருத்துவத்தைத் தொடரவும்

உணவுக் கட்டுப்பாடுகள்

நோயின் வகையையும் தீவிரத்தையும் பொறுத்து, உணவுப் பழக்கங்களையும் கட்டுப் படுத்த வேண்டும்.

 1. உப்பு. (சோடியம்.) உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பை குறைப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். வீக்கங்களையும் இது கட்டுப் படுத்தும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட ஃபாஸ்ட் புட்கள், அப்பளம், ஊறுகாய், டப்பாக்களில் அடைக்கப் பட்டு வரும் உணவுப் பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது  அவசியம்.
 2. உட்கொள்ளப்படும் திரவங்களின் அளவு : இந்த நோயுடையவர்கள் குறைந்த அளவில் சிறுநீர் கழித்தால் வீக்கங்கள்  மற்றும் சில மோசமான நிலைகளில் மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே இத்தகைய நோயாளிகளுக்கு திரவ உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு மிக அவசியமாகும்.
 3. பொட்டாசியம்: இந்நோய் உள்ளவர்களுக்கு பொதுவாகவே பொட்டாசியத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதனால் இருதயத்தின் செயல்பாட்டில் தீய விளைவுகள் ஏற்படும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப் பண்டங்களை (உலர்ந்த பழங்கள், இளநீர், உருளைக் கிழங்கு, ஆரஞ்சுப் பழங்கள், வாழைப் பழங்கள், தக்காளி போன்றவற்றை) தவிர்க்கவும்.
 4. புரோட்டீன்: புரோட்டின் அதிக அளவு உட்கொள்ளப்படுவதால் சிறுநீரகங்கள் பாழாவது துரிதப்படுத்தப்படும். எனவே, புரோட்டீன் மிகுதியாக உள்ள உணவை நிச்சயமாகத் தவிர்க்கவும்.

சிறுநீரக மாற்று சிகிச்சையின் தயார் நிலை

 • இதை நோயைக் கண்டறிந்தவுடனேயே, இடதுகையின் முன்புறம் இருக்கும் இரத்த குழாய்களை முதலில் பாதுகாக்கவும்.
 • எந்த ஒரு இரத்த பரிசோதனைக்கும் இடதுகையின் இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் எடுக்கக்கூடாது.
 • நோயாளிகளுக்கு நோயைப் பற்றிய கல்வியை புகட்டவும். அவர்களை குறைந்த பட்சம் 6 முதல் 12 மாதங்களுக்கு முன்பிருந்தே ஹீமோடையாலிஸிஸுக்கு தயார்ப்படுத்தவும்.
 • இந்த நோயின் ஆரம்பத்திலேயே ஹெபடிடிஸ் பி ஊசியைப் போட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. டையாலிஸிஸ் அல்லது மாற்றுச் சிறுநீரகங்கள் பொறுத்தும்பொழுது இது நோயின் தொற்று வராமல் தடுக்கும். (இரண்டு டோஸ்கள் அல்லது நான்கு டோஸ்கள் (0,1,2 மற்றும் 6 மாதங்கள்) என்ற முறையில் ஊசி சதைக்குள் குறிப்பாக டெல்டாய்ட் பகுதியில் போட வேண்டும்

நெஃப்ராலஜிஸ்டிடம் (Nephrologist) ஆலோசனை பெறுதல்

இவ்வகை நோயாளிகள் மிக சீக்கிரமாகவே மேற்சொன்ன மருத்துவரைக் கண்டு ஆலோசிக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசிப்பதும், டையாலிஸிஸுக்கு முன் பெறும் கல்வியும் நோயாளிக்கு மனத் தொய்வையோ இறப்பையோ ஏற்படச் செய்யாது. விரைவாக ஆலோசனை பெறுதல் நோய் முற்றுவதைத் தடுத்து சிறுநீரகத்தை மாற்றும் முயற்சியை சற்றுதள்ளிப் போட உதவுகிறது.

நோயின் தீவிரத்தை தடுக்க அல்லது தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை?

இந்த நோய்க்கு அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும், இரத்த அழுத்தத்தை சரியாக கட்டுப்படுத்தி வந்தால் அதுவே மிக முக்கியமான சிகிச்சையாகிறது. கட்டுக்குள் அடங்காத நிலையில் இரத்த அழுத்தம் இருந்து கொண்டிருந்தால், இந்த நோய் மிக வேகமாக முற்றக் கூடிய அபாயம் இருக்கிறது. இருதய பாதிப்பும் பக்க வாத நோய்தாக்கக் கூடிய அபாயமும் சேரும்.

உயர்இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் யாவை?

உயர்இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற மருந்தை  மருத்துவரே பரிந்துரைப்பார். மிகவும் சாதாரணமாக உபயோகிக்கப்படும் மருந்துகளாவன:

ACE என்று சொல்லக்கூடிய ஆன்ஜியோடென்சின் நொதிகளும், ARB என்று சொல்லக்கூடிய ஆன்ஜியோடென்சின் ரிசப்டர் தடுப்பான்களும்

முதல் நிலை மருத்துவமாக பரிந்துரைக்கப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோயின் தீவிரம் மிகைப்படாமல் பாதுகாக்கும்.

இந்நோயில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் நோக்கம் என்ன?

இரத்த அழுத்தத்தை எப்பொழுதும் 130/ 80 மி.மி.க்கு குறைவாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் உகந்த வழி எது?

அடிக்கடி மருத்துவரை சந்திப்பதன்மூலம் இரத்த அழுத்தத்தின் நிலையை அறியலாம். ஆனால், இரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய உதவும் சாதனத்தை வாங்கி, தனக்குத்தானே வீட்டில் கண்காணித்து வருவது சாலச் சிறந்த்து. இரத்த அழுத்த அளவுகளை வரைபடமாக குறித்து வைத்தால், அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

டையூரிடிக்ஸ் மருந்துகள் இந்த நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது?

சிறுநீரின் அளவு குறைந்தால், வீக்கமும் மூச்சுத் திணறலும் ஏற்படும். எனவே இவ்வகை மருந்துகள் சிறுநீரின் அளவை அதிகரிக்கச்செய்து வீக்கம் மற்றும் மூச்சுத்திணறலை குறைக்கும். ஆனால் இந்த மருந்துகள், சிறுநீரின் அளவை கூட்டுமே ஒழிய சிறுநீரகங்களின் செயல்பாட்டில் எந்தவித மேம்பாட்டையும் காண்பிக்காது.

இவ்வகை நோய் தாக்கும்பொழுது இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது?

சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, எரித்ரோபொயிடின் எனும் ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதுவே எலும்புகளின் மூலமாக சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த நோய்களின் காரணமாக, சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறன் குறையும்பொழுது, இந்த ஹார் மோனின் உற்பத்தியும் குறைந்து இரத்த சோகைக்கு காரணமாகிறது.

இரும்புச்சத்தைக் கொடுக்கும் மாத்திரைகள், சில சமயங்களில் விட்டமின்கள், நரம்பு ஊசிகளின் மூலம் அவற்றை உடலுக்குள் செலுத்துதல், போன்றவையே முதன் முதலில் இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகளாகும். மருந்துகளுக்குக் கட்டுப்படாத மிக மோசமாக தாக்கும் இரத்த சோகை ஏற்பட்டால் உடலுக்குள் ஊசிகள் மூலம் செயற்கை எரித்ரோபொயிடின் என்ற மருந்தை பாதுகாப்பாகச் செலுத்த வேண்டும். அதன் மூலம் எலும்புக்கு சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கிட்டுகிறது. அதைத் தவிர உடலுக்குள் இரத்தத்தை ஏற்றுவதும் இன்னொரு திறன்மிக்க வழியாகும். இது அவசரகால சிகிச்சையாகும். ஆனால் பெருவாரியாக இதை யாரும் பரிந்துரைக்காமல் விடுவதற்குக் காரணம் தொற்றுக்கள் தொற்றிவிடும் அபாயம் இதில் இருக்கிறது.

இந்த நோயினால் வரும் இரத்தசோகையை ஏன் மருத்துவத்தால் நீக்கவேண்டும்?

சிவப்பு அணுக்கள், நுரையீரலிலிருந்து பிராணவாயுவை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன. அன்றாட உடலுழைப்பிற்கு வேண்டிய சக்தியை எல்லாம், அவை கொண்டு செல்கின்றன. இரத்த சோகை அல்லது குறைவான அளவில் உள்ள ஹீமோக்ளோபின் உடல் சோர்வுக்கும், நலிவுக்கும், உடல் உழைப்பு உரிய அளவுக்கு செய்ய முடியாமலும் கொண்டு சென்றுவிடுகிறது. உடலை வருத்தி கொண்டால் ஏற்படும் களைப்பு, இருதயம் மிக வேகமாகத் துடித்தல், மனத்தை ஒன்று குவித்து எதிலும் ஈடுபட முடியாமற் போதல், மார்பு வலி முதலியவற்றை ஏற்படுத்தும். ஆகவே இந்த நோயினால் வரும் இரத்த சோகைக்கு சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top