பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான உணவு முறை

மிகவும் தீவிரமடைந்த நோய் தாக்கத்தின் பொழுது எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சிறுநீரகத்தின் முக்கிய வேலையே கழிவுப் பொருட்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதுதான். இதற்கும் மேல், சிறுநீரகங்கள், உபரியாக வந்து விடும் நீரை, தாது உப்புக்களை, இரசாயனப் பொருட்களை வெளியேற்றி தூய்மையாக வைக்கிறது.

நாள்பட்ட சிறுநீரக நோயில் (Chronic kidney disease) திரவங்களை சமநிலைப் படுத்துவதும், மின் கடத்தி திரவங்களை கட்டுப்பாட்டு நிலைக்குள் வைப்பதும் முறையின்றி இருக்கும். இதனால் முறையாக எடுத்துக்கொள்ளப்படும் நீரின் அளவு, அல்லது உப்பு அல்லது பொட்டாசியம் போன்றவை திரவங்களின் அளவை தீவிரமாக பாதிக்கும்.

ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருக்கும் சிறுநீரகத்தின் மீது வந்துள்ள பாரத்தைக் குறைக்க, தீவிர நிலையில் தாக்கமடைந்துள்ள இந்த நோயாளிகளுக்கு உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றப்படச்சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள். முறையான பரிந்துரைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள். இவ்வகை நோயாளிகளுக்கு உணவில் வரையறை கிடையாது. ஒவ்வொரு நோயாளிக்கும் அவருக்குத்தகுந்த வகையில் மருத்துவ பரிந்துரைப்பு இருக்கும். அவருக்கு வந்திருக்கும் நோயின் தாக்கத்தையும், மருத்துவ நிலையையும் பொறுத்து சிபாரிசுகள் இருக்கும். அதே நோயாளிக்கு அவ்வப்போது மருத்துவ பரிந்துரை மாறும்.

உணவுப் பழக்கங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகள்

1. நோயின் தீவிரத்தை மிதப்படுத்துதல் மற்றும் டையாலிஸிஸ் எடுத்துக் கொள்ள வேண்டிய நாளை தள்ளிப் போடுதல்

2. இரத்தத்தில் சேர்ந்து விட்ட உபரியான யூரியாவினால் விஷப் பொருட்களின் அளவைக் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்

3. சத்தான உணவு சரியான நிலையில் இருக்குமாறு செய்து உடல் எடை குறையாமல் பாதுகாத்து வருதல்

4. திரவங்கள் மற்றும் மின் கடத்தும் திரவங்களின் சமநிலை கெடக்கூடிய அபாயத்தை தவிர்த்தல்

5. இருதயத்தின் பாதிப்பு இல்லாமல் செய்தல் அல்லது பாதிப்பைக் குறைத்தல்

இந்த சூழலில் பொதுவாக அனுசரிக்கப்பட வேண்டிய சில பழக்கங்கள்

 • ஒவ்வொரு நாளும் உடலுக்கு வேண்டிய புரோட்டின் அளவை, 0.8 கிராம்/கிலோ கிராம் (உடல் எடை) என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
 • போதுமான அளவு உடலுக்கு கார்போஹைட்ரேட் கிடைக்குமாறு செய்து உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கச் செய்ய வேண்டும்.
 • உடலுக்குப் போதுமான அளவே (ஒரு மிதமான அளவில்) கொழுப்புச் சத்து கிடைக்குமாறு செய்யவும். வெண்ணை, நெய் மற்றும் எண்ணைகள் மிகவும் மிதமான அளவிலேயே இருக்கட்டும்.
 • வீக்கங்கள் காணும் பட்சத்தில், பருகும் பானங்கள் அல்லது நீர் போன்றவற்றை அளவுடன் குறைத்துக் கொள்ளவும்.
 • விட்டமின்களையும் ட்ரேஸ்தனிமங்களையும் போதுமான அளவில் சேர்க்கவும். உணவில் நார்ச்சத்து சற்று அதிகமாகவே இருக்கட்டும்.

நோயாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உணவு வகைகளும், மாறுதல்களும்

அதிக கலோரிகள் உள்ள உணவை உட்கொள்ளுதல்

அன்றாட உழைப்புக்கு உடலுக்கு போதுமான அளவு கலோரிகள் தேவைப்படுகின்றன. உடல் எடையும் குறையக்கூடாது. வளர்ச்சியும் குன்றக்கூடாது. முக்கியமாக கலோரிகளை கார்போ ஹைட்ரேட்டுக்களும், கொழுப்புச்சேர்ந்த உணவு வகைகளுமே கொடுக்கின்றன. பொதுவாக இத்தகைய நோயாளிகளுக்கு அன்றாடம் 35-40 கிலோ கலோரிகள் (உடல் எடை கிலோக்கள்) என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த கலோரிகளின் அளவு குறைந்தால், புரோட்டினிலிருந்தே கலோரிகளை எடுத்துக்கொள்ள வகை செய்யப்படும். இப்படி புரோட்டினையே அதற்கு உபயோகித்தால் தீய விளைவுகளான சத்துக்குறைவுக்கு இட்டுச்செல்லும். அத்துடன் உடலிலிருக்கும் நீக்க வேண்டிய கழிவுப்பொருட்களும் அதிகமாகும். ஆகவே போதுமான அளவு கலோரிகள் கிடைக்குமாறு இவ்வகை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

கார்போஹைட்ரேட்டுக்கள்

இவைதாம் உடலுக்கு பிரதானமாக கலோரிகள் கொடுப்பவை. சாப்பிடும் ரொட்டிகளில், பருப்பு வகைகளில், அரிசியில், உருளைக் கிழங்குகளில், பழங்களில் மற்றும் காய்கறிகளில் இவற்றைக் காணலாம். மேலும் சர்க்கரை, தேன், இனிப்பு பண்டங்கள், மற்றும் பருகும் பானங்கள் ஆகியவற்றிலும் இவை காணப்படுகிறது. நீரிழிவு உடையவர்களோ அல்லது உடல் பருமனாக இருப்பவர்களோ உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுக்களைக் குறைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

கொழுப்புச் சத்து

உடலுக்கு கொழுப்புச்சத்து மிக அவசியம். இவையும் கலோரிகளை கொடுக்கின்றன. கார்போஹைட்ரேட்டுக்களை விட அல்லது புரோட்டீன்களை விட, இவை இரு மடங்கு கலோரிகளை கொடுக்கின்றன. மாமிசம், வெண்ணை மற்றும் எண்ணைப் பொருட்களில் கொழுப்பு மிகுந்து இருக்கிறது. "அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை விட "பாலிஅன்சாச்சுரேட்டட்' கொழுப்புக்கள் நல்லவை. பின்னதானவற்றை எடுத்துக்கொள்வதை அதிகமாக்கி முன்னதான வகையை குறைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றால் இருதய நோய்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

புரோட்டின் உட்கொள்ளப்படுவதைக் குறைத்தல்

உடலின் தசைகளை புதுப்பிக்கவும் பேணிக் காக்கவும் புரோட்டீன் மிக அவசியம். காயங்களையும் அது குணப்படுத்துகிறது. தொற்றுதல்களை எதிர்த்துப்போராடிக் குறைக்கிறது.

டையாலிஸிஸ் செய்து கொள்ளும் முன், புரோட்டீன் மிக அதிகமாக உள்ள உணவைத் தவிர்க்கவும். அன்றாடம் எடுத்துக் கொள்ளும் புரோட்டீனின் அளவை 0.8 கிராம் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவும். நல்ல தரமான புரோட்டீனாகவும் மற்றும் உயிரியல் நோக்கில் மிக அதிக மதிப்பை உடைய புரோட்டீனையுமே உட்கொள்ள வேண்டும்.

சிறுநீரக செயல்பாடுகளின் தரம் குறைந்து போவதை புரோட்டின்-குறைப்பு தடுக்கிறது. அதன் மூலம் டையாலிஸிஸின் தேவையை தள்ளிப்போடுகிறது. அல்லது மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்த வேண்டிய நாளைத் தள்ளிப் போடுகிறது.

எடுத்துக் கொள்ளும் புரோட்டீனைக் குறைப்பது உடலில் உற்பத்தியாகும் யூரியா அளவைக்குறைக்கிறது. உடலில் அதிக யூரியா தங்கி விட்டால் அதனால் ஏற்படும் அசதி, வாந்தி எடுத்தல், வாயில் சரியான ருசி இல்லாமை, மற்றும் பசி இல்லாமை ஆகியவை அதிகரிக்கும். அதே போல் இரத்தத்தில் இருக்கும் ஃபாஸ்பேட்டின் அளவைக் குறைக்க ஆரம்பிக்கும். அப்படிச் செய்து அசிடோஸிஸிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

டையாலிஸிஸுக்கு முந்தைய நாட்களில், புரோட்டினை குறைவாக எடுத்துக்கொள்ளுதல் மிகவும் பயனளிப்பதாக இருக்கும். ஆனால் அதையும் அளவுக்கு மீறி குறைத்து விட வேண்டாம். இத்தகைய நோயாளிகளுக்கு பசி மிகக் குறைவாக இருப்பது சகஜமே. குறைவான பசியும், மிகக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படும் புரோட்டீனும் உடலுக்கு வேண்டிய சத்தைக் குறைத்து விடலாம். உடல் எடையைக் குறைக்கலாம். உடலின் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடலாம். அதனால் இறப்பின் சாத்தியக் கூறு அதிகமாகலாம்.

டையாலிஸிஸ் ஆரம்பித்த பிறகு புரோட்டீன் அதிகமாக இருக்கும் உணவே பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இத்தகைய நோயாளிகள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவையே எடுத்துக் கொண்டு இதர வகையில் இழந்த புரோட்டினை ஈடுகட்ட வேண்டும்.

உட்கொள்ளப்படும் திரவங்கள்

இவற்றை எடுத்துக் கொள்வதில் இத்தகைய நோயாளிகள் கொஞ்சம் எச்சரிக்கைகளைக் கையாளுதல் வேண்டும்

சிறுநீரகங்களே உடலில் இருக்கும் திரவங்களை சமநிலையோடு காத்து வருவதில் பிரதான அங்கம் வகிக்கின்றன. உபரியாக இருக்கும் திரவத்தை சிறுநீராக வெளியேற்றிவிடுகிறது. இத்தகைய நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கும்பொழுது, வெளியேறும் சிறுநீரின் அளவு வழக்கமாக குறைய ஆரம்பிக்கிறது.

குறைவாக வெளியேறும் சிறுநீர் உடலுக்குள் தேக்கத்தை உண்டாக்குகிறது. தேகத்தில் இருக்கும் திரவங்களின் அளவு கூடுவதோடு முகம், கால், கைகள் வீக்கமடைகின்றன. நுரையீரலில் திரவங்கள் சேருவது முச்சு விடுதலை பாதிக்கிறது. இதை கட்டுப்படுத்தாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

உடலில் திரவங்கள் கூடுதலாகி விட்டதற்கு என்ன அடையாளங்கள் உண்டு?

உடலில் உபரியாக இருக்கும் திரவங்களை, திரவங்களினால் வரும் உபரியான எடை என்பார்கள். உடலில் ஆங்காங்கு வீக்கங்கள், அடிவயிற்றில் சிறு சிறு இடைவெளிகளில் ஏற்படும் திரவங்களின் சேர்க்கை, மூச்சுத் திணறல், குறைவான கால இடைவெளிகளில் உடல் எடை கூடுதல் போன்றவை இதன் அடையாளங்கள். திரவங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டன என்று அர்த்தம்.

எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

மருத்துவரின் சிபாரிசு பேரிலேயே அளவோடு மட்டுமே திரவங்களை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த அளவு வேறுபடும். இது அவர்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவைப் பொறுத்தே பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் உடலில் ஏற்கனவே இருக்கும் திரவத்தின் அளவையும் பொறுத்தது.

நோயாளி என்ன அளவு எடுத்துக் கொள்ளல் வேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறார்?

வீக்கமே இல்லாதவர்கள் மற்றும் போதுமான அளவு சிறுநீர் கழிப்பவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நீரைப்பருகச் சொல்லப்படுவார்கள். ஆனால் மிக மோசமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்கள், மிக அதிக அளவு திரவங்களை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்று சொல்வது மடத்தனம்.

வீக்கங்கள் உள்ள நோயாளிகளும் குறைவாக சிறுநீர் கழிப்பவர்களும், திரவங்களை உட்கொள்ளுவதை குறைக்கச் சொல்லப்படுகிறார்கள். வீக்கத்தைக் குறைப்பதற்கு 24 மணி நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய திரவங்களின் அளவு, ஒரு நாளைக்கு வெளிப்படுத்தும் சிறுநீரின் அளவை விடக்குறைவாக இருத்தல் வேண்டும்.

அப்படி எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போய் விட்டால், கீழ்க்கண்ட சூத்திரத்தை உபயோகித்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படும் திரவத்தின் அளவானது, முந்தைய நாளில் வெளியேற்றிய சிறுநீருடன் மேலும் 500மி.லி. அதிகமாக இருத்தல் வேண்டும். இதுதான் அந்த சூத்திரம். மேற்கொண்டு உத்தேசமாக 500 மி.லி. திரவத்தை எடுத்துக்கொண்டு வியர்வையினாலும் மூச்சு விடுவதினாலும் வீணாகி விடும் திரவத்தை ஈடு கட்டுதல் வேண்டும்.

மேற்கண்ட நோய் உடைய நோயாளிகள் அன்றாடம் தங்கள் உடல் எடையை சோதித்துக் கொள்ளுதல் வேண்டும். அப்படிச் செய்து ஒரு நோட் புஸ்தகத்தில் எழுதி வருதல் வேண்டும்.

அன்றாடம் உடலிலுள்ள திரவங்களின் மொத்த எடையை, அறிந்து எழுதி வருவதற்காகவும், திரவங்கள் கூடி இருக்கின்றனவா குறைந்திருக்கின்றனவா என்பதை சோதிப்பதற்கு உதவியாக, ஒவ்வொரு நோயாளியும் தாங்கள் கண்ட அளவுகளை அன்றாடம் ஒரு நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும். உடல் எடையோ என்றைக்கும் மாறப் போவதில்லை. அதுவும் எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களை மருத்துவர் பரிந்துரைத்தபடி மிகவும் துல்லியமான அளவில் கண்டிப்பாக அனுசரித்து எடுத்துக்கொண்டு வந்தால், உடல் எடை கூடப் போவதில்லை. திடீரென்று எடை கூடுவது எடுத்துக் கொள்ளப்பட்ட திரவங்களின் எடையால் கூடி விடுகிறது என்று அர்த்தம். இந்த உடல் எடை நோயாளிகளை உடனே எச்சரிக்கிறது. உங்கள் எச்சரிக்கை மேலும் தீவிரப்படுத்தல் வேண்டும் என்பதைச்சொல்கிறது. உடல் எடை குறைவது என்பது வழக்கமாக திரவங்களைக் குறைக்கச் சொல்வதாலும் டையூரெடிக்ஸ்" சிகிச்சைக்கு உடல் காட்டும் விளைவுகளாலும் ஏற்படுவது.

திரவங்களை எடுத்துக் கொள்வதற்கு உபயோகமான சில யோசனைகள்.

1. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் உடல் எடையை அளந்து பாருங்கள். அந்த எடைக்குத் தகுந்தாற்போல நீங்கள் எடுத்துக் கொள்ளும் திரவத்தின் அளவை சரி செய்து கொள்ளுங்கள்.

2. மருத்துவர் உங்களுக்கு, ஒருநாளைக்கு எவ்வளவு திரவத்தின் அளவு தேவை என்பதை அவ்வப்போது பரிந்துரைப்பார். அதை அனுசரித்தே கவனமாக கணக்கிட்டு பருக வேண்டிய பானங்களைப் பருகுங்கள். துல்லியமாகக் கணக்கிடப்பட்ட கன அளவு திரவத்தையே குடித்து வாருங்கள். இது பருகும் நீருக்கு மாத்திரமல்ல, டீ, காப்பி, தயிர், குளிர்பானம், மோர், பழ ஜூஸ் போன்றவற்றிற்கும் பொருந்தும். திரவங்களின் அளவை கணக்கிடும்பொழுது, ஏற்கனவே உங்கள் உடலில் மறைந்திருக்கும் திரவங்களின் சேர்க்கையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கணக்கிடுங்கள். உணவில் நீர்ச்சத்து நிரம்பிய பதார்த்தங்களில் உள்ள திரவங்களின் அளவை மறந்து விடாதீர்கள். திராட்சைப் பழங்கள், தர்பூசணிக்காய், தக்காளி, போன்ற பழங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் இருக்கும் நீரும் இதில் சேரும்.

3. உடலில் சேரும் உப்பைக் குறைத்துக் கொள்ளவும். காரமானதும் வறுத்த, பொறித்த உணவுப் பண்டங்களையும் தவிர்க்கவும். அவை தாகத்தை மேலும் உருவாக்குகின்றன. அதனால் மேலும் குடிநீரைப்பருக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

4. தாகம் ஏற்பட்டால் குடிநீர் பருகவும். குடி நீரைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டாம். பிறர் யாவரும் குடிக்கிறார்களே என்பதைப் பார்த்து நீங்களும் அடிக்கடி குடிநீரைப் பருக ஆரம்பிக்க வேண்டாம்.

5. தாகம் எடுக்கும்பொழுது சிறிதளவு நீரையே எடுத்துக் கொண்டு அத்துடன் கொஞ்சம் ஐஸ்துண்டுகளைப் போடவும். ஒரு சிறு ஐஸ் துண்டை எடுத்துக் கொண்டு வாயில் வைத்து உறிஞ்சவும். திரவத்தை விட ஐஸ்துண்டு வாயில் மேலும் நீண்ட நேரம் நிற்கிறது. ஆகவே அதே அளவு நீரை விட ஐஸ் கட்டி தாகத்தை மேலும் தணிக்கும். கணக்கிடும்பொழுது ஐஸை மறந்து விட வேண்டாம். அதற்கு ஈடான நீரைக் கணக்கிட்டுக் கொள்ளவும். கணக்கிடுதலுக்கு உதவியாக, பருக வேண்டிய நீரை ஒரு ஐஸ் ட்ரேயில் வைத்து உறையச் செய்யவும்.

6. வாய் உலர்ந்து போகாமல் இருக்கச் செய்ய, நீரை எடுத்துக் கொண்டு கொப்பளித்துத் துப்பி விடலாம். அது உடலில் இருக்கும் திரவத்தின் எடையைக் கூட்டாது. அல்லது 'சூயிங்கம் மிட்டாய்களை சுவைத்துக் கொண்டு இருந்தால், வாய் உலர்வது நிற்கும். அல்லது வாய் கழுவும் மருந்து நீரில் கொப்பளிக்கவும்.

7. ஒரு சிறு அளவு கோப்பையையே குடிக்கும் திரவங்களை ஊற்ற உபயோகிக்கவும்.

8. எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சாப்பாட்டிற்குப் பின் எடுத்துக் கொள்ளவும். அதுவும் மருந்துடன் நீரைக் கலந்து சாப்பிடும்பொழுது இப்படிச் செய்யவும்.

9. நோயாளி எப்பொழுதும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். எந்த ஒருநோயாளிக்கு ஓய்வு நேரம் இருக்கிறதோ, அவருக்கு உடனே குடிநீரை ஏன் பருகக் கூடாது என்ற ஆவல் அல்லது செளகரியத்தை நாடச்சொல்லும்,

10. அதிக அளவு இரத்தத்தில் சர்க்கரை கூடிவிட்ட நோயாளிகளுக்கு தாகம் அதிகரிப்பது இயற்கையே. ஆகவே சர்க்கரையின் அளவை எப்படியாவது குறைக்கவே செய்தால்தான் தாகம் எழாது.

11. வானிலையின் வெப்ப நிலை தாகத்தை அதிகரிக்கச் செய்வதன்மூலம், சுற்றுப்புறச்சூழலை குளிர்ச்சியுடன் வைக்க முடிந்தால், அது வரவேற்கத்தக்கதே.

துல்லியமாகக் கணக்கிடப்பட்டே திரவங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை துல்லியமாக அளந்துகொள்வது எப்படி?

 • அன்றாடம் ஒரு கோப்பையில் அளந்து எடுக்கப்பட்ட நீரை ஊற்றி நிரப்பிக்கொள்ளவும். மருத்துவரின் சிபாரிசுப்படியே அந்த அளவு இருக்கட்டும்.
 • அந்த அளவுக்கு மேல் மருத்துவர் பரிந்துரைக்கவில்லை என்பதை நோயாளி உணர்ந்து செயல்படட்டும்.
 • ஒவ்வொரு முறையும் அந்த திரவத்தைப் பருகும்பொழுது, அந்தக் கோப்பையில் என்ன அளவு ஊற்றப்படுகிறது என்பதைக் குறித்துக் கொள்ளவும். அதே அளவே ஒவ்வொரு நாளும் ஊற்றிக் குடிக்கவும். உபயோகித்து விட்டு அந்த காகிதக் கோப்பையை தூக்கி எறிந்து விடவும்.
 • கோப்பையில் நீர் தீர்ந்தவுடன், நோயாளிக்கு தான் எடுத்துக் கொள்ளவேண்டிய அன்றைய பங்கு தீர்ந்து விட்டது என்றும் மேலும் தான் குடிக்கக் கூடாது என்பதும் தெரியும். எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நீரின் அளவு நாள் முழுவதற்கும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
 • கட்டுப்பாடுடன் கூடிய இந்த முறையைத்தான் அன்றாடம் பின்பற்ற வேண்டும்.
 • இந்த எளிய மற்றும் திறன்மிக்க முறையாலேயே, பரிந்துரைக்கப்பட்ட கன அளவை சரியாக நோயாளிக்குக் கொடுத்து அவர் எடுத்துக் கொள்ளும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் (சோடியம்) உப்பைக் குறைத்தல்

இத்தகைய நோயாளிகளுக்கு உப்பை ஏன் குறைத்துக்கொள்ளச் சொல்லப்படுகிறது?

நாம் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டிய சோடியத்தின் அளவு மிகவும் முக்கியமாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டும். அதை போதுமான அளவு குறைப்பதாலேயே இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். சிறுநீரகங்களே இந்த சோடியத்தைக் கட்டுப்படுத்துதலில் பெரும் பங்கை வகிக்கின்றன. தீவிரமாக சிறுநீரகங்கள் தாக்கப்பட்ட நோயை உடையவர்களுக்கு சிறுநீரகங்களால், உபரியான சோடியத்தையும் திரவத்தையும் அகற்றி விட முடியாது. ஆகவே சோடியமும், திரவமும் அன்றாடம் அவர்களுக்குச் சேர்ந்து கொண்டே போகும்.

சோடியம் உடலில் அதிகரித்துக்கொண்டே போனால் தாகமும் அதிகரித்துக்கொண்டே போகும். வீக்கங்கள் தோன்றும், மூச்சு திணறும். இந்த பிரச்னைகளைக் குறைக்க, நோயாளிகள் உணவில் சோடியத்தை வெகுவாக குறைத்தே ஆக வேண்டும்.

சோடியத்திற்கும் உப்புக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் என்ன?

பொதுவாகவே மேற்கண்ட இரு சொற்களையும் ஒரே பொருளைக் குறிப்பது போலவே பேசுவார்கள். நாம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உப்புக்கு சோடியம் குளோரைடு என்று பெயர். அதில் 40 சதவீதம் சோடியம் இருக்கிறது. நம் உணவில் சோடியம் கலப்பதற்கு முக்கியமான பொருள் உப்பே. ஆனால் இன்னமும் சில சோடியத்தைக் கொண்ட கூட்டுப் பொருட்கள் உள்ளன.

அவையாவன :

 • சோடியம் ஆல்கினேட். இது ஐஸ் கிரீம்களில் உபயோகப் படுத்தப்படுகிறது.
 • சோடியம் பைகார்பனேட் - இது பேக்கரிகளில் ரொட்டி உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதை சோடா என்று சுருக்கமாகச் சொல்லுவர்.
 • சோடியம் பென்ஸோஏட் - இது விற்கப்படும் உணவுப் பொருட்களைக் கெடாமல் பார்த்துக் கொள்கிறது.
 • சோடியம் சிட்ரேட் ஜெலாட்டின் - சில பதார்த்தங்கள் மற்றும் குடி பானங்களுக்கு வாசனையை ஊட்டுகிறது.
 • சோடியம் நைட்ரேட் உற்பத்தி செய்யப்பட்ட மாமிச உணவுப் பதார்த்தங்களுக்கு வசீகரமான நிறங்களைத் தர இது உபயோகப்படுத்தப்படுகிறது.
 • சோடியம் சக்காரைட் - செயற்கையான தித்திப்பைக் கொடுக்கும் பொருள்.
 • சோடியம் சல்ஃபைட் - உலர்ந்த பழங்களின் நிறம் கெடாமல் இருக்கப் பாதுகாக்கும் பொருளாக இது உபயோகப் படுத்தப்படுகிறது.

ஒருவர் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ளுதல் நலம்?

ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிராம் உப்புக்கு மேல் ஒருவர் உண்ணக்கூடாது. தீவிரமாக சிறுநீரகங்கள் தாக்கும் நோய் உடையவர்கள், டாக்டர்களின் பரிந்துரையின் பேரிலேயே உப்பை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். அதுவும் வீக்கங்கள், அதிக இரத்த அழுத்தம் உடையவர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 3 கிராம் உப்பை விட அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

எந்த பதார்த்தத்தில் உப்பு அதிகமாக இருக்கிறது?

அவையாவன :

 • பப்பட் (அப்பளம்), நன்றாக உப்பு கலந்த ஊறுகாய்கள், உப்புடன் கூடிய சட்னி, சாஸ், சாட் மசாலா, மற்றும் சாம்பார், ரசம் போன்ற உணவுப் பொருட்கள்.
 • பிஸ்கட், கேக்குகள் மற்றும் ரொட்டிகள்.
 • சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் சோடா, பக்கோடாக்கள், டோக்லாக்கள், ஹல்வா, சமோசா, தயிர்வடை போன்றவை.
 • வறுவல்கள், பாப்கார்ன், உப்பிட்ட வேர்க்கடலை, உப்பு கலந்த உலர்ந்த் பழங்கள், டின்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் முதலியவை.
 • உப்பு போட்டு தயாரிக்கப்பட்ட வெண்ணை, மற்றும் பாலாடைப் பொருட்கள் முதலியன.
 • நூடுல்ஸ் போன்ற உடனுக்குடன் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்குகள் முதலியன.
 • முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தமல்லி இலைகள் போன்றவை.
 • உப்பு கலந்த லஸ்ஸி, மசாலா சோடா, எலுமிச்சை ஜூஸ் மற்றும் சோடியம் பை கார்பனேட் மாத்திரைகள், ஆண்டாசிட் மாத்திரைகள் மற்றும் மலமிளக்கி மாத்திரைகள்
 • மாமிச பதார்த்தங்கள், சிக்கன், மிருகங்களின் உடலுறுப்புக்களான சிறுநீரகங்கள், கல்லீரல், மூளை போன்றவை.
 • கடல் வாழ்ஜந்துக்களான வண்டு, இறால் மீன்கள் போன்றவை.

நடைமுறைக்கு ஒத்து வரக் கூடிய சில யோசனைகள்.

1. உப்பை கடுமையாகக் குறைக்கவும். உபரியாக உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டாம்.

2. சோடியம் அதிகம் உள்ள மேற்கண்ட உணவுப் பதார்த்தங்களைக் குறைக்கவும்.

3. சாப்பாட்டு டேபிளிலிருந்து உப்பு இருக்கும் குடுவையையே நீக்கி விடுங்கள். உணவுப் பதார்த்தங்களில் மோர் போன்றவற்றில் உப்பையே சேர்க்காதீர்கள்.

4. வியாபாரத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் பாட்டில்கள் மீது ஒட்டியிருக்கும் லேபல்களை சரிவரப் படியுங்கள். உப்பு மாத்திரம் அல்லாமல், இதர சோடியம் இருக்கும் பொருட்களையும் படியுங்கள். இதில் சோடியம் இல்லை" போன்ற சொற்றொடர்களை கவனமாகப் படித்து வாங்குங்கள்.

5. எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் உப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

6. சோடியம் அதிகம் உள்ள காய்கறிகளை நன்றாக கொதிநீரில் வேக வையுங்கள். அதற்குப் பின் அந்த நீரை கொட்டி விடுங்கள். இது காய்கறிகளில் உள்ள உப்பைக் குறைக்கும்.

7. உப்பு இருக்கும் உணவை ருசியாக்க, பூண்டு, வெங்காயம், எலுமிச்சை சாறு, புளிச்சக்கை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சை மிளகாய், மிளகு(கறுப்பு), வெந்தயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

8. எச்சரிக்கை! உப்புக்கு பதிலாகத் தரப்படும் பொருட்களை உபயோகிக்கவே செய்யாதீர்கள். அவற்றில் பொட்டாசியம் கலந்திருக்கும்.

உணவில் பொட்டாசியம் அளவைக் குறைத்தல்

அபாயகரமான விளைவுகளை தவிர்க்க நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் உணவில் பொட்டாசியத்தைக் குறைக்க வேண்டும்.

இரத்தத்தில் இருக்க வேண்டிய பொட்டாசியத்தின் சாதாரண அளவு எவ்வளவு? எப்பொழுது அதை அதிகம் என்று சொல்ல முடியும்.?

இரத்தத்தில் அந்த தனிமம் இருக்க வேண்டிய அளவு 3.5 Emeq/1 லிருந்து 5.0 IEQL ஆகும். இந்த அதிக அளவை பொட்டாசியம் தொடும்பொழுது உணவில் அவசியம் மாற்றம் செய்ய வேண்டும்.

அந்த அதிகத்தைத் தொடும்பொழுது அவசியம் மருத்துவரின் கவனம் உடனடியாகத் தேவைப்படுகிறது.

அந்த அளவு 7.00 mEq/I ஐத் தொட்டு விட்டால், உயிருக்கு ஆபத்து. மிக அவசரமான கவனம் தேவைப்படும்.

பொட்டாசியத்தின் அளவுகோலில் வகைப்படுத்தப்படும் உணவு வகைகள்.

மிக அதிக பொட்டாசியம் --- (200 மி.கி/100 கிராம் உணவு). க்கும் அதிகம்

நடுத்தர அளவு --- (100 லிருந்து 200மி.கி./100 கிராம்) உணவு

குறைந்த அளவு --- 100மி.கி.க்கும் குறைவு

பொட்டாசிய அளவு அதிகமுள்ள உணவுப் பண்டங்கள்

 • பழங்கள் : வாழைப்பழங்கள், செர்ரிக்கள், புதிதாக துருவப் பட்ட தேங்காய், பேரிக்காய், திராட்சைப் பழங்கள், நெல்லிக்காய், எலுமிச்சை, மாம்பழம், மொசாம்பி, ப்ளம்ஸ் மற்றும் சப்போட்டா.
 • காய்கறிகள் : அமராந்த், கத்தரிக்காய், அவரை, கொத்தமல்லி, வெந்தயம், முருங்கைக்காய், பச்சை பப்பாளி, உருளைக்கிழங்கு.
 • உலர்ந்த பழங்கள் : பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பேரீச்சம்பழம், உலர்ந்த அத்திப்பழம், உலர்ந்த திராட்சைப்பழம்
 • பருப்பு வகைகள் : ராகி மற்றும் கோதுமை மாவு தானியங்கள் : பாசிப்பயிறு, துவரம் பருப்பு (முழுவதுமானது)
 • மசாலா : வெந்திய விதைகள் கொத்தமல்லி விதைகள், உலர்ந்த சிவப்பு மிளகாய்கள், மற்றும் ஜீரக விதைகள்.
 • அசைவ உணவு வகைகள் : anchovy, mackerel, rohu, white pomfret, prawns, lobster and crabs போன்ற மீன்களும், மாட்டு இறைச்சியும்
 • பானங்கள் : போர்ன்விட்டா, இளநீர் பதப்படுத்தப்பட்ட பால், ட்ரிங்கிங் சாக்லேட், அப்பொழுதே தயாரிக்கப்பட்ட பழரசங்கள், பருப்புரசம், சூப், பீர், வைன், மற்றும் வாயு உள்ளடங்கிய சோடா.
 • உதிரி உணவு வகைகள் : சாக்கலேட், காட்பரி, சாக்கலேட் கேக், சாக்கலேட் ஐஸ் கிரீம், உப்புக்கு பதிலாகக் கொடுக்கப்படுவது, உருளைக்கிழங்கு வறுவல், மற்றும் தக்காளி சாஸ்

நடுத்தரமான பொட்டாசியம் அளவுள்ள உணவு வகைகள்

 • பழங்கள் : எலுமிச்சம்பழம், லிச்சி, மாதுளம்பழம் மற்றும் தர்பூசணிப்பழம்
 • காய்கறிகள் : பீட்ரூட், பச்சை வாழைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், காரட், செலரி, காலிஃப்ளவர், ஃப்ரெஞ்ச், அவரை, வெண்டைக்காய், வெங்காயம், பூசனிக்காய், சோளம், தக்காளி போன்றவை
 • பருப்பு வகைகள் : பார்லி, மைதா (பொதுவான உபயோகம்), ஜோவார், கோதுமையில் தயாரித்த நூடுல்ஸ், மற்றும் கோதுமையில் தயாரித்த சேமியா போன்றவை.
 • அசைவ உணவு : கல்லீரல்
 • பானங்கள் : பசுவின் பால், தயிர்
 • உதிரியான சில மிளகு, கிராம்பு, ஏலக்காய், கரம் மசாலா (இந்திய மசாலா பவுடர்களின் கூட்டு)

பொட்டாசியம் குறைவாக இருப்பவை

 • பழங்கள் : ஆப்பிள், செர்ரி, கோவா, ஆரஞ்சு, பப்பாளி, பைனாப்பிள், ரோஸ் ஆப்பிள், மற்றும் ஸ்ட்ராபெர்ரிக்கள்
 • காய்கறிகள் : சுரைக்காய், கொண்டை மிளகாய், துரியா, வெள்ளரிக்காய், வெந்தய இலைகள், பூண்டு, பச்சை பட்டாணி, பச்சை மாங்காய், பாவக்காய், திண்டா (இளசு)
 • பருப்பு வகைகள் : அரிசி, ரவை, மற்றும் மோதுமை (பெரிய வகைத்துண்டுகள்)
 • விதைகள் : பச்சைப் பட்டாணி
 • மாமிச உணவு : ஆடு, மாடு, பன்றி, சிக்கன் மற்றும் முட்டை
 • பானங்கள் : எருமைப்பால், கோக்கோ கோலா, ஃபாண்டா, லெமனேட், நீரில் கலந்த எலுமிச்சம் பழச்சாறு லிம்சா, ரிம்ஜிம், மற்றும் சோடா.
 • உதிரியான சில உலர்ந்த இஞ்சி, தேன், புதினா, எள், வினிகர் மற்றும் மசாலாப் பொருட்கள் (ஜாதிக்காய் போன்றவை)

உணவில் பொட்டாசியத்தைக் குறைக்க நடைமுறைக்கு சாத்தியப்படும் யோசனைகள்

1. பொட்டாசியத்தில் குறைவாக உள்ள ஒரு பொருளை ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

2. ஒருநாளைக்கு ஒரே ஒரு கோப்பை டீயோ அல்லது காப்பியோ அருந்தவும்.

3. பொட்டாசியம் உள்ள காய்கறிகளில் பொட்டாசியத்தைக் குறைத்துவிட்டு எடுத்துக்கொள்ளவும், (கீழே காண்பதுபோல் அனுசரிக்கவும்.)

4. இளநீர் மற்றும் பழஜூஸ்களை தவிர்க்கவும். மேலே கூறப்பட்டுள்ளது போல பொட்டாசியம் அதிகம் உள்ள பொருட்களை தவிர்க்கவும்.

5. அனேகமாக எல்லா உணவுப் பொருட்களில் கொஞ்சம் கொஞ்சம் பொட்டாசியம் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே எப்பொழுதெல்லாம் சாத்தியப்படுமோ அப்பொழுதெல்லாம் பொட்டாசியம் குறைவாக உள்ள பதார்த்தங்களையே சாப்பிட்டு வரவும.

6. CKD நோயாளிகளுக்கு டையாலிஸிஸ் செய்யும் முன், பொட்டாசியத்தை அவசியம் குறைப்பது தேவையானது மட்டுமல்லாமல், டையாலிஸிஸை மேற்கொண்ட பின்னும் அப்படிச் செய்வது தேவைப்படும்.

காய்கறிகளில் உள்ள பொட்டாசியத்தை எப்படிக் குறைப்பது?

 • தோலை உறித்து விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் இந்த துண்டுகளைப் போட்டு விடவும்.
 • வெதுவெதுப்பான நீரில் அவற்றைக் கழுவவும்.
 • இப்பொழுது பாத்திரத்தை சுடுநீரால் நிரப்பவும். (நீரின் அளவு, காய்கறிகளின் அளவை போல நான்கு ஐந்து மடங்கு இருக்க வேண்டும்.) அதை சுமார் ஒரு மணி நேரத்திற்காவது அந்த நீரில் ஊற வைக்கவும்.
 • 2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஊற வைத்தபின், மூன்றுமுறை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
 • அதன்பின் காய்கறிகளை உபரியாக எடுத்துக்கொண்டு நீரால் கழுவவும். பின்பு, நீரை வடித்து விட்டு விருப்பப்பட்ட வகையில் சமைக்கவும்.
 • இந்த வழியில் நீங்கள் காய்கறிகளில் உள்ள பொட்டாசியத்தைக் குறைக்கலாம். ஆனால் அதை முழுவதுமாக நீக்கி விட முடியாது. ஆகவே அதிகம் பொட்டாசியம் உள்ள காய்கறிகளை அறவே ஒதுக்கி விடுவது நல்லது. அல்லது அவற்றை குறைந்த அளவே எடுத்துக்கொள்ளவும்.
 • நன்றாக சமைக்கப்பட்ட காய்கறிகளில் விட்டமின்கள் இழந்து விடப்படுகின்றன. இழந்த விட்டமின்களை ஈடுகட்ட மருத்துவரைக்கண்டு ஆலோசித்து விட்டமின் மாத்திரைகள் வாங்கிச்சாப்பிடவும்.

உருளைக்கிழங்கிலிருந்து பொட்டாசியத்தை வெளியே எடுக்க சில நடைமுறை யோசனைகள்

 • முதலில் சதுரம், சதுரமாக வெட்டி பின் நறுக்கவும் அல்லது அச்சில் பதித்து துண்டுதுண்டாக நறுக்கிக்கொள்ளவும். இந்த வழியில் உருளைக்கிழங்கின் மேற்பரப்பின் உச்ச அளவு நீரால் மூழ்கட்டும்.
 • உருளைக்கிழங்கை ஊற வைக்க அல்லது கொதிக்க வைக்க உபயோகப்படுத்தப்படும் நீரின் அளவே எல்லா வித்தியாசத்தையும் கொண்டு வரும்.
 • நிரம்ப அளவு நீரில் உருளைக்கிழங்கை ஊறவைப்பது நல்ல பயன்தரும்,

பாஸ்பரஸை உணவில் குறைக்கும் வழிகள்.

CKD நோயாளிகள் பாஸ்பரஸ் குறைந்த அளவே உள்ள உணவை ஏன் உண்ண வேண்டும்?

 • பாஸ்பரஸ் எனும் தாதுப்பொருள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியத்துடனும் வைக்க அவசியம் தேவைப்படும் பொருளாகும். வழக்கமாக உணவில் கலந்திருக்கும் உபரியான பாஸ்பரஸ் சிறுநீற்றுடன் வெளியேற்றப்பட்டு விடுகிறது. அதன் மூலம் இரத்தத்தில் இருக்கும் உபரியான பாஸ்பரஸின் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.
 • இரத்தத்தில் இருக்க வேண்டிய பாஸ்பரஸின் அளவு 4.0 லிருந்து 5.5 மி.கி./டெசி லிட்டர் ஆகும்.
 • CKD நோயாளிகளுக்கு உபரியாக எடுத்துக் கொள்ளப்படும் பாஸ்பரஸ் சிறுநீற்றோடு வெளியேற்றப்படுவதில்லை. அதனால் இரத்தத்தில் அதன் அளவு அதிகரிக்கிறது. இந்த உபரியான அளவு எலும்புகளில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சிவிடுவதால், எலும்புகள் நலிவடைந்து விடுகின்றன.
 • பாஸ்பரஸின் அளவு அதிகமாகும்பொழுது, அரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன. தசைகளும் எலும்புகளும் நலிவடைகின்றன. எலும்பு வலியும் எலும்புகள் விறைத்துப் போவதும் ஏற்படுவதோடு மூட்டு வலிகளும் வருகின்றன.

பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ள எந்தப் பொருளை குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்ய வேண்டும்?

பாஸ்பரஸ் அதிகம் உள்ள சில பொருட்களை மிகவும் சமயோசிதமாக உபயோகித்தல் நலம். அத்தகைய பொருட்களாவன:

 • பால், மற்றும் பண்ணையிலிருந்து வரும் பொருட்கள் : வெண்ணை, பாலாடைக்கட்டி, சாக்லேட், பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்கிரீம், மில்க் ஷேக், மற்றும் பன்னீர் போன்ற பொருட்கள்
 • உலர்ந்த பழங்கள் : முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பு, உலர்ந்த தேங்காய் மற்றும் அவை போன்ற பொருட்கள்.
 • குளிர்பானங்கள் : கோலா பானங்கள், ஃபான்டா, ஃபுரூட்டி, பீர் போன்ற பானங்கள்.
 • காரட், கோலகேசியா இலைகள், சோளம், வேர்க்கடலை, சக்கரவள்ளிக்கிழங்கு போன்றவை.
 • மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரோட்டீன்: மாமிசம், சிக்கன், மீன் மற்றும் முட்டை

விட்டமினும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ள பதார்த்தங்களை எடுத்துக் கொள்தல்

CKD நோயாளிகள் டையாலிஸிஸ் செய்து கொள்வதற்கு முன் விட்டமின்களின் குறைவால் அவதிப்படுவார்கள். இது உணவு குறைவாக சாப்பிட வேண்டியதின் விளைவால் வருவது. அதுவும் தனிப்பட்ட முறையில் உணவைச் சமைக்க வேண்டி வருகிறது. பொட்டாசியத்தை அகற்ற வேண்டியதால் வரும் விளைவு மற்றும் பசியும் குறைவாக இருக்கும். சில விட்டமின்கள் அதுவும் நீரில் கரைந்து விடும் விட்டமின் B மற்றும் C போன்றவை அல்லது ஃபோலிக் ஆசிட் போன்றவை டையாலிஸிஸ் செய்வதால் இழந்துவிடப்படுகின்றன.

இந்த இழப்புக்களை ஈடுசெய்ய வேண்டுமானால் நீரில் கரையும் விட்டமின்களை CKD நோயாளிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நார்ச்சத்து மிக அதிகம் உள்ள பண்டங்களையும் உண்ண வேண்டும். ஆகவேதான் இவ்வகை நோயாளிகள் மேலும் மேலும் புதிய பசுமையான காய்கறிகளை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். அத்துடன் விட்டமின்கள் அதிகம் உள்ளவையும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அன்றாட உணவை எப்படி உருவாக்குவது

CKD நோயாளிகளுக்கு அன்றாட உணவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நீரின் அளவும் திட்டமிடப்படுதல் வேண்டும். மற்றும் ஒரு உணவு வடிவமைப்புப் பற்றி தெரிந்த வல்லுநர் ஒருவரிடம் நெஃப்ராலஜிஸ்ட் ஒருவரின் துணையோடு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

உணவுத் திட்டத்தைப் பற்றிய சில அடிப்படைத் தத்துவங்கள்

1. எடுத்துக் கொள்ளப் படவேண்டிய நீரின் அளவும் உணவின் அளவும் முழுக்க முழுக்க மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படியே இருக்க வேண்டும். அன்றாடம் உடலின் எடை அளவை எடுத்து ஒரு வரைபடத்தில் பதிய வேண்டும். முறையில்லாமல் எடை கூடிவிடுதல் மிக அதிகமான அளவு திரவங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று அர்த்தம்.

2. கார்போஹைட்ரேட் போதுமான அளவுகலோரிகள் உடலுக்குக்கிடைக்க வேண்டிய காரணத்தினால், போதுமான தானியங்கள், பருப்புக்கள் ஆகியவற்றோடு நோயாளி சர்க்கரையும் க்ளூகோஸ"ம் இருக்கும் உணவை (அவர் ஒரு நீரிழிவு நோய்க்காரராக இல்லாது இருக்கும் பட்சத்தில்) எடுத்துக் கொள்ளலாம்

3. பால், தானியங்கள், விதைப் பருப்புக்கள், முட்டை, சிக்கன் போன்றவை புரோட்டினை அதிகம் கொடுக்கக்கூடியவை. CKD நோயாளிகள் (இன்னமும் டையாலிஸிஸைத் தொடங்காதவர்கள்) புரோட்டின் இருக்கும் உணவை பெரிதும் தவிர்ப்பது நல்லது. அன்றாடம் 0.8 கிராம்/கிலோகிராம் உடல் எடைக்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. டையாலிஸிஸ் ஆரம்பித்தவுடன், நோயாளிக்கு அதிகம் புரோட்டீன் இருக்கும் உணவு தேவைப்படுகிறது. (அதுவும் பெரிடோனியல் முறையில் டையாலிஸிஸ் செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு அது அதிகம் தேவை.)

மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரோட்டின்களை (மாமிசம், சிக்கன் மற்றும் மீன் - இவற்றின் அதிகம் புரோட்டீன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் - இருக்கின்றன ) தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் மேற்கண்ட நோயாளிகளுக்கு உகந்ததல்ல.

4. கொழுப்பு - உணவில் கொழுப்புச்சத்து நிச்சயம் குறைக்கப்படவேண்டும். ஆனால் ஒட்டு மொத்தமாக வெண்ணையையோ அல்லது நெய்யையோ குறைப்பது ஆபத்தில் முடியும். பொதுவாக சோயாபீன் எண்ணை, தேங்காய் எண்ணை போன்றவை எல்லாம் உடலுக்கு நல்லவையே. ஆனால் இவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது.

5. உப்பு - அனேகமாக நோயாளிகள் எல்லோருமே உப்பு குறைவான உணவையே எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையில் சாப்பாட்டு மேஜைக்கு உப்பு இருக்கும் கொள்கலன் வரவே வேண்டாம். பேக்கிங் பவுடருடன் சமைக்கப்பட்ட உணவை உண்ணவே வேண்டாம். அப்படியே எடுத்துக்கொண்டாலும் குறைவாகவே எடுத்துக்கொள்ளவும். உப்புக்கு பதிலாக வேறு எந்த பண்டத்தையும் எடுத்துக்கொள்ளல் வேண்டாம். ஏனென்றால் அவற்றில் எல்லாம் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது.

6. மாறுதலுக்கு - கோதுமை, அரிசி, எல்லா சூழலிலும் உபயோகிக்கப்படும் மாவுகள், சோளங்கள் போன்றவற்றை சுழற்சியாக உபயோகிக்கலாம். பார்லி, பஜ்ரா மற்றும் சோளம் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.

7. விதைகள், பருப்புக்கள் - சுழற்சியாக பல பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பருப்பை நன்றாகக் கொழம்பு போல் சமைத்து விடும்பொழுது அதில் உள்ள திரவத்தின் அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். தேவைப்பட்டால், நீரைக்குறைத்து பருப்பை கொஞ்சம் திண்மை மிகுந்ததாக எடுத்துக்கொள்ளலாம். எவ்வளவு பருப்பை எடுத்துக்கொள்வது என்பதை மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறவும்.

8. பருப்பிலிருந்து பொட்டாசியத்தை நீக்க, நன்றாகக் கழுவிய பிறகு பருப்பு வெந்நீரில் ஊற வைக்கப் படல் வேண்டும். அப்படி நனைத்த நீரை பிறகு கொட்டி விடவும். அதற்கு அடுத்தாற்போல் நீரில் போட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் உபரியான நீரை வெளியே கொட்டி விடவும். பிறகு விருப்பப்படும் ருசிக்குத்தகுந்தாற்போல் பருப்பைச் சமைத்துக்கொள்ளலாம். அரிசிக்கும் பருப்புக்கும் மாறாக, ஒருவர் கிச்சடியோ தோசையயோ எடுத்துக்கொள்ளலாம்.

9. காய்கறிகள் - பொட்டாசியம் குறைவாக உள்ள காய்கறிகளை தாராளமாகச் சாப்பிடலாம். பொட்டாசியம் அதிகம் உள்ள காய்கறிகளை நன்றாக வேகவைத்தபின் சாப்பிடவும். ருசியை மேம்படுத்திக்கொள்ள எலுமிச்சை ஜூஸை சேர்த்துக்கொள்ளலாம்.

10. பழங்கள் - பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருக்கும் ஆப்பிள், பப்பாளி, பெர்ரி போன்றவற்றை ஒருநாளுக்கு ஒரு முறை சாப்பிடலாம். டையாலிஸிஸுக்குச் செல்லும் நோயாளிகள் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக்கொள்லளாம். பழ ஜூஸ்களும், இளநீரும் நிச்சயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

11. பாலும் பண்ணைப் பொருட்களும் - 300 முதல் 350 மில்லி லிட்டர் பொருட்கள், - கீர், ஐஸ்கிரீம், தயிர், போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் உபரியான திரவத்தை தவிர்க்க, இந்த பொருட்களின் கன அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

12. குளிர்பானங்கள் - பெப்ஸி, ஃபாண்டா, ஃபுரூட்டி, போன்றவை தவிர்க்கப்படல் வேண்டும். பழ ஜூஸ்களோ இளநீரோ தவிர்க்கப்பட வேண்டியவை.

13. உலர்ந்த பழங்கள் - உலர்ந்த திராட்சைப்பழங்கள், வேர்க்கடலை, எள்ளு, உலர்ந்த அல்லது அப்பொழுதே பறிக்கப்பட்ட தேங்காய் தவிர்க்கப்படல் வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

3.10909090909
Anonymous Feb 18, 2020 06:59 PM

நல்ல பயனுள்ள தகவல்

ராஜாத்தி Aug 06, 2019 02:13 PM

தயவுசெய்து ரத்தத்தில் உப்பு கிரியேடின் அளவு அதிகமாக இருந்தாலும் சிறுநீரில் புரோடீன் வெளிவந்தாலும் உடனடியாக சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய இயற்கை முறையில் நடவடிக்கை எடுங்கள் . இல்லை என்றால் விளைவு விபரிதமாகும்

ரமேஷ் Apr 03, 2019 02:41 PM

பயனுள்ள தகவல்கள்.
நன்றி
எனக்கு யூரியா 32
கிரியாட்டின் 1.௦
உள்ளது.
புரோட்டீன் சிறுநீரில் கலந்துவருவதாக மருத்துவர் சொல்கிறார்.
ஆனால் மாத்திரைகள் தரவில்லை
இது குணப்படுத்த இயலாத நோயா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top