பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்

சிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும் பற்றிய குறிப்புகள்

சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் உள் சிறுநீர்க் குழாய்களிலோ (Ureters) அல்லது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடலிற்கு வெளியே கொண்டி செல்லும் வெளி சிறுநீர்க் குழாயிலோ (Urethra) பல்வேறு காரணங்களால் அடைப்பு ஏற்படலாம். உள் சிறுநீர்க் குழாய்களில் ஒரு பக்கம் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதில்லை.  ஆனால் இரண்டு உள் சிறுநீர்க் குழாய்களிலும் ஒரே சமயத்திலோ அல்லது சிறுநீர்ப்பை, வெளி சிறுநீர்க்குழாயிலோ முழு அடைப்பு ஏற்படால் சிறுநீர் வெளியேறுவதே குறைந்து சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்படலாம்.

நிரந்தர சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு

சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டால் சிறுநீரகங்கள் மீண்டும் பழையபடி முற்றிலும் சரியாகி விடுகின்றன. ஆனால் நீண்ட காலம் (வாரங்கள், மாதங்கள்) அடைப்பை சரி செய்யாமல் விட்டு விட்டால் அதன் பிறகு அடைப்பை நீக்கினாலும் சிறுநீரகங்கள் நிரந்தமாக செயலிழந்து விடக்கூடும்.

தொந்தரவுகள்

சிறுநீரகப்பைக்கு கீழே எந்த காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டாலும் சிறுநீர் கழிப்பதில் கஷ்டங்கள் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, முக்கி முக்கி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஆகியன இவற்றில் சில. சிறுநீர்ப்பையின் பாதை முற்றிலும் அடைப்பட்டு விட்டால் கொஞ்சம் கூட சிறுநீர் வராமல் போகலாம். சிறுநீர்ப்பைக்கு மேலே உள் சிறுநீர்க் குழாய்களில் வரும் அடைப்புகளால் சில சமயங்களில் எந்த வித தொந்திரவும் வெளியே தெரியாமலும் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள் சிறுநீர்க் குழாய்களின் அடைப்பிற்கு காரணம் சிறுநீரக கற்கள்தான்.  இவற்றால் முதுகு வயிற்றில் அதீத வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் ஆகிய தொந்திரவுகள் வரும்.

சிறுநீரகப் பாதை அடைப்பின் காரணங்கள்

சிறுநீரக கற்கள்

இவை சிறுநீரகப் பாதையின் எந்த பாகத்தையும் அடைக்கலாம்.  பெரும்பாலும் வலியோடு வரும்.

ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Benign Hypertrophy of Prostate-BPH)

ஆண்களுக்கு வயதாகும் போது சிலருக்கு சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள இந்த ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடை செய்யும்.  சில சமயம் கொஞ்சம் கூட சிறுநீர் வராமல் அடைத்துக் கொள்ளலாம். அபூர்வமாக ப்ராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் அடைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

சிறுநீர்ப்பையில் பாதிப்புகள்

சில சமயம் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் கோளாறுகள் இருந்தால் (உதாரணம் சர்க்கரை நோய் நரம்பு பாதிப்பு, தண்டுவட பாதிப்புகள்) சிறுநீர்ப்பையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு அடைப்பு ஏற்படலாம்.  இதற்கு சில சமயம் நிரந்தரமாக வெளி சிறுநீர்க் குழாயில் ஒரு பிளாஸ்டிக் குழாய் (காதிட்டர் - Catheter) பொறுத்தப்பட வேண்டி வரலாம்.

பிறவிக் கோளாறுகள்

சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீரகப் பாதையின் அமைப்புகளில் கோளாறுடன் பிறந்து இருக்கலாம். அதிகமாக ஆண்குழந்தைகளுக்கு வெளிசிறுநீர்க் குழாயில் வால்வுகளால் (Urethral valve) அடைப்பு உண்டாகலாம். இவைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் அறுவை சிகிச்சையில் குணப்படுத்தலாம்.

உள் சிறுநீர்க் குழாயும் சிறுநீரகமும் சேரும் இடத்தில் அடைப்பு (PUJ Obstruction - பி-யூ.ஜெ பகுதியில் அடைப்பு)

உள்சிறுநீர்க் குழாயின் மேற்பகுதியில் (சிறுநீரகத்துடன் சேரும் பகுதியில்) பிறவியிலேயே அமைப்புக் கோளாறு காரணமாக பலருக்கு அடைப்பு ஏற்படுகின்றது.  இது பிறவிலேயே இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பல வருடங்கள் கழித்தே விலாப் பகுதியில் வலி, அல்லது சிறுநீரகத் தாரையில் கிருமித் தாக்கம் என்று பரிசோதனை செய்யும் போது தெரிய வரும்.  பல சமயம் ஏதேற்சையாக வயிற்றில் வேற காரணங்களுக்காக ஸ்கான் செய்யும் போது கண்டுபிடிக்கப்படுவது உண்டு. இதை எளிதில் பையொலோப்ளாஸ்டி  (Pyeloplasty)  என்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

கட்டிகள்

சிறுநீரக பாதையில் எந்த பாகத்தில் வரும் சாதாரண அல்லது புற்று நோய் கட்டிகள் சிறுநீரகங்களை அடுத்துள்ள உறுப்புகளில் வரும் கட்டிகள் சிறுநீர் வரும் வழியை தடுத்து அடைப்பை உண்டாக்கலாம். இதற்கு உரிய தனி பரிசோதனைகளும் சிகிச்சையும் வேண்டி வரும்.

சிறநீரக பாதையில் அழற்சி/கிருமித் தாக்கம்.

பொதுவாக சிறுநீரக பாதையில் கிருமி தாக்கத்தால் அடைப்பு உண்டாவதில்லை. ஆனால் சில சமயம் பூஞ்சை கிருமித் தாக்கம்  (Fungal Injection),  கடுமையான கிருமித் தாக்கம் இவற்றால் சிறுநீரகங்களின் திசுக்களே பிய்ந்து போய் அவை உள்சிறுநீர்க் குழாய்களை அடைத்து விடுவது உண்டு. முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இப்படி வர அதிக வாய்ப்பு உண்டு. இதற்கு கிருமிக்குண்டான சிகிச்சையோடு. தேவைப்பட்டால் உள் சிறுநீரக நோக்கு கருவிகளால் அடைப்பை உண்டாக்கும் திசுக்களை நீக்க வேண்டி வருவதும் உண்டு. இன்னொரு அபூர்வ தன்திசு எதிர்ப்பு வகையைச் (Autoimmune disease) சேர்ந்த ரெட்ரோ பெரிடோனியல்  பைப்ரோசிஸ்- (Retroperitoneal Fibrosis)  என்ற நோயால் உள்சிறுநீரகங்கள் இரண்டும் ஸ்தம்பிக்கப்பட்டு அடைப்பாக மாறிவிடுவது உண்டு. இதைச் சரியாக கண்டுபிடித்தால் ஸ்டீராய்ட் வகை மருந்துகளால் குணப்படுத்தலாம்.

சிறுநீரகப் பாதை அடைப்பு எவ்வாறு கண்டு பிடிக்கப்படும் முறைகள்

சிறுநீரகப் பாதையின் ஒரு பாகத்தில் அடைப்பு வந்தால் அடைப்பிற்கு மேலே உள்ள பகுதி சிறுநீரால் நிரம்பி பலூன் போல வீங்கி விடுகின்றது. இதை எளிதில் அல்ட்ராசவுண்ட் ஸ்கான், தேவைப்படால் CTஸ்கான்.  MRIஸ்கான் இவற்றில் கண்டுபிடிக்கலாம்.  சிறுநீரக கற்களும் கட்டிகளும் இதிலேயே நன்கு தெரியும்.  தேவைப்பட்டால் சில பிரத்யேக பரிசோதனைகளை உங்கள் சிறுநீரக மருத்துவர் சொல்லக்கூடும்.

சிறுநீரகப் பாதை அடைப்பிற்கு உள்ள சிகிச்சைகள் என்னென்ன?

சிறுநீரகப் பாதையின் அடைப்பின் காரணத்தை அதை முழுவதுமாக நீக்குவது தான் சிறந்த சிகிச்சை. ஆனால் எடுத்த உடனே சில சமயம் இதை செய்ய முடியாமல் போகலாம்.  அப்போது அடைப்பிற்கு தற்காலிக நிவாரணமாக உள் நோக்கிக் கருவிகள் மூலம் ஸ்டென்ட் அல்லது காதிட்டர் எனப்படும் பிரத்யேக ப்ளாஸ்டிக் குழாய்களை பொறுத்த வேண்டி வரலாம்.

சிறுநீர்ப்பைக் கீழே அடைப்பு

இதற்கு தற்காலிகமாக காதிட்டர் எனப்படும் ட்யூப் பொறுத்தப்படலாம் பின்னர் மூல காரணம் (உதாரணம்-ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம்) அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட வேண்டும்.

உள்சிறுநீர்க் குழாய்களில் அடைப்பு

இந்த வகை அடைப்பிற்கும் தற்காலிகமாக அடைப்பிற்கு மேல் வீங்கிய சிறுநீர்க் குழாய் பாகத்தில் வெளியிலிருந்து ஒரு சிறப்புக் குழாயை செலுத்தி சிறுநீர் வெளியே வர சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் (Urologist)  வழி செய்வார்.  இதனை ஸ்கான் உதவியுடனோ அல்லது சீ-ஆர்ம் (C-ARM) எனப்படும் சிறப்பு எக்ஸ்-ரே உதவியுடனோ செய்வார். இவ்வாறு வெளியே வர வகை செய்யப்பட்ட சிறுநீர் ஒரு ப்ளாஸ்டிக் சிறுநீர் சேகரிக்கும் பையில் சேகரிக்கப்படும்.

சில காலம் கழித்து சிறுநீரகங்கள் சரியான பின்னர் சிறுநீரக உள்நோக்கி கருவி மூலம் ஸ்டென்ட் எனப்படும் ப்ளாஸ்டிக் ட்யூபை பொறுத்தி வைப்பார்.  இந்த ஸ்டென்ட் ட்யூப் சில மாதங்கள் வரை கூட வைத்திருக்கப்படுவதுண்டு.

சிறுநீரகப்பாதை அடைப்பை சரி செய்த பிறகு?

சிறுநீரக பாதை அடைப்பை சரி செய்த பிறகோ அல்லது பை-பாஸ் செய்த பிறகோ பல சமயம் சிறுநீர் மிக அதிக அளவில் வெளியேறுவதுண்டு.  அது போன்ற சமயங்களில் அதற்கு சமமாக நீர் அருந்த முடியாவிட்டால் இரத்த நரம்புகள் மூலம் சில நாட்களுக்கு நீரை மருத்துவ திரவங்களாக தர வேண்டி இருக்கும்.

பெரும்பாலும் சிறுநீரக பாதை அடைப்பை உடனே அறிந்து சரி செய்து விட்டால் பழுது பட்ட சிறுநீரகங்கள் முழுவதும் சரியாகி விடும்.  ஆனால் இதை தாமதமாக அறிந்து அதன் பின்னரே சரி செய்தால் சிறுநீரகங்கள் ஓரளவு சரியானாலும் முழுவதும் சரியாகாமல் போய் விடலாம்.  அது பின்னாளில் படிப்படியாக முன்னேறும் நிரந்தர சிறுநீரக செயலிழப்பாக மாறிவிடும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

3.08823529412
Anonymous Aug 10, 2020 12:00 AM

very useful ----------------G.VELMURUGAN CHENNAI.

சேகர் Jun 11, 2020 06:09 PM

மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top