பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக சதை துணுக்கு (KIDNEY BIOPSY) பரிசோதனை

சிறுநீரக சதை துணுக்கு (KIDNEY BIOPSY) பரிசோதனை பற்றிய தகவல்.

சிறுநீரக சதைத் துணுக்கு பரிசோதனை என்பது உங்கள் ஒரு பக்கத்து சிறுநீரகத்தில் இருந்து சற்றே பெரிய, நீளமான ஊசி மூலம் ஒரு சிறிய பகுதியை (துணுக்கை) பரிசோதனைக்காக எடுப்பது.  இந்த சிறுநீரகத் துணுக்கை உறுப்பெறுக்கி (MICROSCOPE) மூலம் பலவிதமாக பரிசோதிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தில் உள்ள பாதிப்பின் தன்மையையும் அதற்குண்டான சிகிச்சையையும் முடிவு செய்ய இயலும்.

இந்த பரிசோதனை யாருக்கு தேவைப்படுகின்றது?

உங்களுக்கு சிறுநீரக வியாதி உள்ளதாக கண்டறியப்பட்டு நீங்கள் ஒரு சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்லும் போது உங்களுடைய சிறுநீரக பாதிப்பு கீழ்கண்ட வகைகளை சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சிறுநீரக மருத்துவர் இந்த பரிசோதனையை பரிந்துரை செய்யலாம்.

1. சிறுநீரில் இரத்தம் இருந்தால்

2. சிறுநீரில் புரதச் சத்து (பல முறை இது சிறுநீரில் உப்பு என்று தவறாக கூறப்படுகின்றது)

3. சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) - இது இரத்தத்தில் யூரியா முதலான கழிவு உப்புக்களின் அளவு இயல்பு அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை அறிவதின் மூலம் தெரிய வருகின்றது.

பயன்கள்

இவ்வாறு எடுக்கப்படும் சிறுநீரக துணுக்கு பரிசோதனை சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கே மிக மெல்லிய படிவங்களாக வெட்டப்பட்டு பல வகையிலும் வண்ணங்கள் பூட்டப்பட்டு ஒரு பேத்தாலஜிஸ்ட் (PATHOLOGIST) ஒருவரால் உறுப்பெறுக்கி மூலம் பரிசோதனை செய்யப்படும்.

அதில் உள்ள படிமானங்கள், சிறுநீரகத் திசுக்களின் அழிவு, இவை கவனிப்புடன் கண்டறியப்படும்.  இதன் முடிவுகளை சிறுநீரக மருத்துவர் ஆராய்ந்து உங்களின் சிறுநீரக பாதிப்பு சரியாகக் கூடியதா? என்றால் அதற்குண்டான சரியான சிகிச்சை, சரி செய்ய இயலாத பாதிப்பு என்றால் அந்த பாதிப்பு எத்தன்மையது, அது மேலும் அதிகரிக்கும் தன்மையுள்ளதா?  ஆம் எனில் எவ்வளவு நாட்களில் அது முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறும் என அனுமானிக்கவும் உதவும்.  சில சமயங்களில் சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்டவர்களுக்கு கிட்னி ஃபெயில்யர் வந்தால் அதன் தன்மையை கண்டறியவும் இது உதவும்.

நீங்கள் உங்கள் சிறுநீரக மருத்துவரிடம் இந்த பரிசோதனையின் தெளிவான அவசியம், அதனுடைய பக்க விளைவுகள், அபாயங்கள், இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் முடிவுகளால் உங்கள் சிகிச்சையில் கிடைக்கும் பயனுள்ள மாற்றங்கள் இவற்றை பற்றி கலந்தாலோசிக்கலாம்.  அதன் பின்னர் நீங்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்யலாம்.

பரிசோதனை முறை

இந்த பரிசோதனையை செய்யும் முன்பு உங்களுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளதா?  என்பது ஒரு அல்ட்ராசவுண்டு (ULTRASOUND) ஸ்கான் மூலம் உறதி செய்யப்படும்.  உங்கள் இரத்தம் உறையும் தன்மை சாதாரணமான அளவு என்பது இரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும்.  இதன் முன்பே உங்கள் சிறுநீரக பாதிப்பின் தன்மையை அறிய சிறுநீர், இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவைகளின் அளவு, செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே கிட்னி பயாப்ஸி பரிசோதனை வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்த பரிசோதனையின் நன்மைகளும் அதே சமயம் அதில் உள்ள பக்க விளைவுகள், ஆபத்துகள் (இவை மிக மிக அறிதானவையே என்றாலும்) இவை உங்கள் சிறுநீரக மருத்துவரால் விளக்கப்பட்டு அதை நீங்கள் புரிந்து கொண்டபிறகு ஒரு சம்மதப் படிவத்தில் கையொப்பம் இட்டு தர வேண்டியிருக்கும்.

உங்களுடைய ஒவ்வாமைகள் (அலெர்ஜிகள் - ALLERIES) நீங்கள் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள் இவற்றை மருத்துவரிடம் தவறாமல் தெரிவியுங்கள்.  உதாரணமாக நீங்கள் ஆஸ்பிரின் மாத்திரை எடுப்பவராக இருந்தால் அதை நிறுத்தி ஒரு வாரம் கழித்தே இந்த பரிசோதனையை செய்ய முடியும்.

இது ஒரு மருத்துவமனையில் பிரத்யேக அறையில் வைத்து மட்டுமே செய்யப்படும்.  பரிசோதனைக்கு முன்பு 8 மணி நேரம் உணவு, தண்ணீர் இவைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.  நீங்கள் ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டிவரும்.  பரிசோதனை நாளுக்கு முந்திய இரவோ அல்லது அன்று காலையிலேயோ நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.  பரிசோதனை நாளன்று மீண்டும் ஒரு முறை உங்கள் இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு, இரத்த அழுத்தம் ஆகியன பரிசோதிக்கப்படும்.

இப்பரிசோதனையை எளிதாக செய்ய மருத்துவமனையின் உடை அணிய வேண்டி இருக்கும்.  அபூர்வமாக கடினமான சிலருக்கு சுயநினைவில்லாது செய்ய மயக்க மருந்து கொடுக்கப்படலாம்.  நீங்கள் உங்கள் வயிற்றின் புறம் குப்புறபடுக்க வைக்கப்பட்டு அடியில் ஒரு கடினமான தலையணை அல்லது மணற்பை வைக்கப்படும்.  பரிசோதனையின் போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் மூலம் சிறுநீரகத்தின் இருப்பிடம், ஊசி செலுத்தப்படும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடம் அடையாளம் வைக்கப்பட்டு முதலில் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படும்.  பிறகு தோல் அதன் அடிப்புறம் மரத்துப் போக மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும்.  முதலில் சிறுநீரகத்தில் ஆழம், இருப்பு இதனை உறுதி செய்ய மெல்லிய நீண்ட ஊசி செலுத்தப்படும்.   பின்னர் கிட்னி பயாப்ஸிக்குண்டான ஊசி உள்ளே செலுத்தப்படும்.  இச்சமயம் மருத்துவர் உங்களை நீண்ட மூச்சை உள்ளிழுத்து மூச்சை பிடித்துக் கொள்ள சொல்வார்.  அதை 30-45 வினாடிகள் வைத்திருக்க வேண்டும் ஊசி சிறுநீரகத்தில் நுழையும் போது உங்களுக்கு ஒரு சிறிய அதிர்வு போன்ற (ஆனால் வலியில்லாத) உணர்வு உண்டாகலம்.  சதைத் துணுக்கு எடுத்தவுடன் மூச்சை விடச் சொன்னதும் விட்டு விடலாம்.  இது போன்று 2-4 முறை செய்ய வேண்டி வரலாம்.  இவை அனைத்திற்கும் சேர்த்து 1 மணி நேரம் ஆகலாம்.  பரிசோதனை முடிந்த பின் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு நீங்கள் உங்கள் அறைக்கு மாற்றப்படுவீர்கள்.

பரிசோதனைக்கு பின் நன்மைகள்

நீங்கள் முதலில் 6 மணி நேரம் குப்புறவும் பிறகு நேராகவும் படுக்கையில் 12-16 மணி நேரம் படுத்திருக்க வேண்டி வரும்.  அதாவது அடுத்த நாள் காலை வரை.  சிறுநீர் படுக்கையிலேயே சேகரிப்பு கருவி மூலம் போய்க் கொள்ள வேண்டி வரும்.  ஒவ்வொரு முறை சிறுநீர் போகும் போதும் ஒரு சிறிய குப்பியில் பிடித்து வைக்கவும் சொல்லப்படுவீர்கள்.  இதனிடையில் உங்கள் நாடி, இரத்த அழுத்தம் ஆகியன செவிலியரால் இடையிடையே பரிசோதிக்கப்படும்.  அடுத்த ஓரிருநாள் வரை பயாப்ஸி செய்த இடத்தில் சிறிது வலி இருக்கலாம். சிலருக்கு 24-48 மணி நேரம் வரை சிறுநீரில் சிறிது இரத்தம் கலந்து வெளியேறலாம்.  அடுத்த நாள் காலை எந்த தொந்தரவும் இல்லை என்றால் வீட்டிற்கு செல்லலாம்.  அடுத்த 2 நாட்களுக்கு கடின வேலைகள், பிரயாணம் இவற்றை தவிர்ப்பது நல்லது.  வீட்டிற்கு சென்ற பிறகும் கீழ்குறிப்பிட்ட தொந்தரவுகள் ஏதேனும் வந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.  எந்த மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும் சில அபாயங்கள் உண்டு.  நோயாளிகளின் வியாதியினால் வரும் ஆபத்தை விட சிகிச்சையின் ஆபத்து குறைவு என்ற போது மட்டுமே அந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.  இப்பரிசோதனையின் போது விரும்பாத விளைவாக மிகச் சிலருக்கு சிறுநீரில் அதிகமான இரத்தம் தொடர்ந்து வெளியேறலாம்.  இதனால் மிக மிக அபூர்வமாக சிலருக்கு இரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரில் இரத்தம் கட்டி சிறுநீர் குழாயில் அடைப்பு, வலி என்பவை நேரிடலாம்.  இரத்தம் செலுத்தவும், சிறுநீர் குழாய் அடைப்பை நீக்க ட்யூப் பொறுத்த வேண்டியும் வரலாம்.

அறிகுறிகள்

1. 24 மணி நேரத்திற்கு பிறகும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்

2. சிறுநீர் கழிக்க முடியாமை

3. பயாப்ஸி செய்த இடத்தில் அதிக வலி

4. மயக்கம், தலை சுற்றல்

5. காய்ச்சல்

பரிசோதனை முடிவுகள்

10-14 நாட்கள் ஆகலாம்.  உங்களுக்கு இந்த பரிசோதனையின் முடிவு மிகவும் முக்கியமானதாக இருந்தால் ஓரிரு நாட்களுக்குள் முதற்கட்ட முடிவுகள் அறியப்படலாம்.  பரிசோதனையின் முடிவுகளை சிறுநீரக மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

3.02702702703
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top