অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரக கல்

சிறுநீரக கல்

சிறுநீர் பையில் கற்கள் உருவாதல் என்பது பொதுவாக பரவும் நோய். இந்த கற்கள் சொல்ல முடியாத வலியைக் கொண்டு வரும். ஒரு சில சமயங்களில் இந்தக் கற்கள் எந்தவித சந்தடியும் அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து நீடித்து வரக்கூடும். இந்தக் கற்கள் சிறுநீரகப் பாதையில் தொற்றுதலைக் கொண்டு வந்து சிறுநீரகங்களை பாழடிக்கும். ஒரு சிலருக்கே இப்படி ஏற்படும். அதை முறையாகவும் விரைவிலும் செய்யாவிட்டால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். ஒருமுறை, கற்கள் தோன்றி விட்டால் பிறகு அவை தொடர்வது நீடிக்கும். ஆகவே நோயைப் புரிந்து கொள்வதும், தடுப்பதும் நோயைப் பற்றி கவனம் கொள்வதும் மிக அவசியம்.

சிறுநீரக கல் என்றால் என்ன?

கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் உருவாகும். அந்த படிகங்களின் திண்மை அதிகம் இருந்தாலோ அல்லது கால்ஷியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில் இருந்தால் கற்கள் உருவாகி இருக்கின்றன என்று அர்த்தம். இம்மாதிரியான படிகங்கள் லட்சக் கணக்கில் உருவாகிச் சேர்ந்தவுடன், அளவில் பெரிதாகி நீண்ட நாட்கள் தங்கி விட்டால் அவையே கற்களாகின்றன.

வழக்கமாக சிறுநீரின் அமைப்பு எப்படி என்றால் இயற்கையாகவே இந்த கற்கள் உருவாவதை அது தடுக்கும். இந்த தடுப்பு திரவங்கள் சிறுநீரில் குறையும் பொழுது, கற்கள் உருவாகி விடுகின்றன. Urolitiasis எனும் சொல், இந்த கற்களைக் குறிக்கும் சொல்லாகும். ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுதல் அவசியம் - பித்த நீர்ப்பையில் உருவாகும் கற்கள் வேறு, சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கற்கள் வேறு.

அந்தக் கற்களின் அளவு, உருவம் மற்றும் உருவாகும் இடம் யாவை?

இந்தக் கற்கள் அளவிலும் உருவத்திலும் மாறுபடும். ஒரு சிறு மணல்துண்டை விட பொடியாக இருக்கலாம். அல்லது ஒரு டென்னிஸ் பந்து போலப் பெரிதாக இருக்கலாம். அது உருண்டையாகவும் அல்லது நீள்வட்ட வடிவத்திலும் இருக்கலாம். அதன் மேற்பரப்பு மிருதுவாக இருக்கும். இவ்வகை கற்கள் அவ்வளவு வலியைக் கொண்டு வருவதில்லை. இயற்கையிலேயே அவை வெளிவருவது மிகவும் சாத்தியமே. அல்லது எந்த முறையான வடிவமும் இல்லாமல் மேற்பரப்பு சொரசொரப்பாகவும் இருக்கக் கூடும். சிறுநீரகங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம்.

சிறுநீரகத்தில் வளரும் கற்களின் வகை என்னென்ன?

சிறுநீரகத்தில் வளரும் கற்களில் நான்கு வகைகள் உண்டு.

1. கால்ஷியம் கல்: இதுவே மிகப் பெரும்பாலும் (70 முதல் 80 சதவீதம்) காணப்படுவது ஆகும்.

இவை அனேகமாக கால்ஷியம் ஆக்ஸலேட்டாகக் காணப்படும் சற்றே குறைவான அளவில் கால்ஷியம் ஃபாஸ்பேட்டாகக் காணப்படும். சிறுநீர் அமிலத்தன்மையைக் கொண்டிருந்தால் உருவாவது கால்ஷியம் ஆக்ஸலேட் போன்ற கற்களாகும்.

2. struvile stones : மெக்னீஷியம் அம்மோனியம் ஃபாஸ்பேட் கற்களுக்கே இந்தப் பெயர் கொண்டு அழைப்பர் இவை அதிகமாக உருவாவதில்லை. 10லிருந்து 15 சதவீதமே காணப்படுபவை. இவை சிறுநீரகங்களில் ஏற்படும் தொற்றுக்களாலேயே ஏற்படுபவை. இந்த கற்கள் பெரும்பாலும் பெண்களையே தாக்குகின்றன.

3. யூரிக் அமிலக்கற்கள்: இந்தக் கற்கள் அவ்வளவு பொதுவாகக் காணப்படுவதில்லை. சுமார் 5 லிருந்து 10 சதவீதமே இவை காணப்படுகின்றன. யூரிக் அமிலம் சிறுநீரில் காணப்பட்டால் அதுவும் சிறுநீர் தொடர்ச்சியாக அமிலத்தன்மையுடன் காணப்பட்டால் இவை உருவாகும். எவருக்கெல்லாம் மூட்டு வலி வருகிறதோ அவர்களுக்கு இந்தக் கற்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அல்லது கொழுப்பு சத்து அதிகமாக உள்ள மாமிசத்தைப் புசிப்பவர்களுக்கு இது வரும். அல்லது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வரும். அல்லது கீமோதெராபி சிகிச்சைக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கும் வரும். யூரிக் அமிலக் கற்களை எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு அறிய முடியாது. அதாவது அடிவயிற்றை எக்ஸ் ரே படம் பிடித்தால் அதில் இவை அகப்படாது.

4. Cystine stones : இவை கொஞ்சம் அரிதாகவே உருவாகக் கூடியவை. இவற்றை வம்சாவழியாகப் பெற்ற நிலையில் தெரியும். அதற்குப் பெயர் சிஸ்டின்யூரியா, சிறுநீரில் அதிகமாக காணப்படும் சிஸ்டினால் அந்தப் பெயர் பெறுகிறது.

Staghorn stone என்றால் என்ன?

இது ஒரு பெரும் ஸ்ட்ரூவைட் கல்லாகும். சிறுநீரகத்தில் ஒரு பெரும் இடத்தை இது அடைத்துக் கொள்ளும். ஒரு மானின் கொம்புகளைப் போல இது இருக்கும். அதனாலேயே அந்தப் பெயர். இவை மிகக் குறைந்த அளவே வலியைக் கொண்டு வரும். அல்லது வலியையே கொடுக்காது. இதைக் கண்டு அறிவது பெரும்பாலும் வீண் முயற்சியே.

சிறுநீரகக் கற்களை கொண்டு வரும் காரணிகள் யாவை?

இந்தக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் உருவாகலாம். அவற்றிற்கான காரணிகள் இவை.

  • பருகும் குடிநீர் குறைவாக இருந்து, நீர்ச்சத்துவற்றிப் போனால் வரும்.
  • குடும்ப சரித்திரத்தில் இடம் பெற்றிருந்தால் வம்சாவழியாக வரலாம்.
  • உணவு, மாமிசத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஆக்ஸலேட் அதிகமாக மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது பொட்டாசியம் அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களை உண்ணாமல் இருந்தாலோ வரும்.
  • ஆண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் 75 சதவீதமும், சிறுநீர்ப் பையில் 95 சதவீதமும் உருவாகலாம். ஆண்களுக்கு 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும், பருமனாக இருப்பவர்களுக்கும் மிகவும் எளிதாகத் தாக்கப்படுபவர்களுக்கும் கற்கள் உருவாகலாம்.
  • நெடுநாட்களுக்கு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தால் கற்கள் உருவாகலாம்.
  • மிக வெப்பத்தோடு அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வசிப்பவருக்கு இது வரும்.
  • அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கள் வந்தால் கற்கள் உருவாகும். அல்லது சிறு நீர்ப் பாதை தடப்பட்டால் கற்கள் உருவாகும்.
  • உணவை சக்தியாக மாற்றும்பொழுது வரக்கூடிய வாய்ப்புக்கள் உதாரணத்திற்கு hyperparathyroidism, cystinuria, gout போன்ற நோய்கள் இவற்றிற்கு காரணமாக அமையலாம். ஒரு சில மருந்துகள் (diuretics and antacids) உபயோகப்படுத்துவதால் கற்கள் உருவாகலாம்.

சிறுநீரகக் கல் இருப்பதற்கான அடையாளங்கள் யாவை?

இதன் அடையாளங்கள், உருவம், அளவு, வளரும் இடம் பொறுத்து மாறலாம். பொதுவாக இந்த அடையாளங்கள் ஆவன:

  • அடிவயிற்றில் வலி.
  • வழக்கமாக உடலைப் பரிசோதிக்கும் பொழுது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படலாம். அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக சோதிக்கும்பொழுது காணப்படலாம். இப்படி எந்தவித அறிகுறியும் இல்லாமலும் விபத்துப் போல கண்டு பிடிக்கப்படும் கற்களுக்கு, "அமைதியான கற்கள்" என்று பெயர்.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தலும் எப்பொழுதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருத்தலும்.
  • அடிக்கடி வாந்தி எடுத்தல்
  • சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் (ஹெமடூரியா)
  • சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்
  • யுரீத்ராவில் கற்கள் தடையாக உருவாகி விட்டாலோ அல்லது சிறுநீர் போய்க் கொண்டிருக்கும்பொழுதே திடீரென்று நின்று விட்டாலோ இது ஏற்படும்.
  • கற்கள் ஒரு சில சமயங்களில் அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கள் தோன்ற வைக்கும். அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் தடைகள் ஏற்பட்டால் அப்படி உருவாகும். இதனால் தாற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீரகங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

கற்களால் வரும் அடிவயிற்று வலி எப்படி இருக்கும்?

  • வலியின் வீரியமும் வலிக்கும் இடமும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கக் கூடும். இது கல்லின் அளவையும் உருவத்தையும் கல் இருக்கும் இடத்தையும் பொறுத்தது. அது சிறுநீரப் பாதையில் எங்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. வலிக்கும் கல்லின் உருவத்திற்கும் (பெரியது அல்லது சிறியது) எந்தவித சம்பந்தமும் இல்லை. சிறு கற்கள் பெரிய கற்களை விட மேலும் அதிக வலியைக் கொடுக்கும்.
  • வலி வெறும் ஊமை வலி போல இருக்கலாம். அல்லது திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதமும் வாகனங்களில் போகும்பொழுது ஏற்படும் தீவிர அசைவுகளினாலும் ஏற்படலாம். வலி, ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும். அதன் பின் வலி நின்று விடலாம் சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும்.
  • எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றி வலி இருக்கும். பெரும்பாலும் வாந்தி எடுப்பதும் அத்துடன் சேர்ந்து வரும்.
  • சிறுநீர்ப் பையிலிருக்கும் கல், கீழ் அடிவயிற்றில் வலியைக் கொடுக்கும். சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்படும். பெரும்பாலும், இது ஆண்குறியின் நுணியில் ஏற்படும்.
  • திடீரென்று மிக அசாதாரண அடி வயிற்று வலியை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடிப் போவார்கள்.

இந்தக் கற்கள் சிறுநீரகங்களை தாக்கக் கூடுமா?

ஆமாம். தாக்கக் கூடும். சிறுநீரகத்தில் இருக்கும் கற்களோ அல்லது யுரீட்டரில் இருக்கும் தடுப்புக்களோ சிறுநீர் வெளியேறுவதற்கு தடங்கலைக் கொண்டு வரும். இந்த தடுப்புக்கள் சிறுநீரகங்களை பாதிக்கும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால் நீண்ட நாள்தாக்கத்திற்கு உள்ளாகலாம்.

கதிரியக்க புலனாய்வுகள்

அல்ட்ராசவுண்டு: இது எளிதாகவும் செலவு குறைவாகவும் இருக்கும் சோதனை. இது பெரும்பாலும் கற்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

எக்ஸ்ரே : அளவு, உருவம் மற்றும் கற்கள் இருக்கும் இடத்தை எக்ஸ்ரே படங்கள் மூலம் அறியலாம். சிகிச்சைக்கும் முன்பும் பின்பும் இதுவே ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.

CT Scan இந்த சோதனையே மிக மிகத் துல்லியமாக கண்டு பிடித்துச்சொல்லக் கூடிய ஒரு சோதனை ஆகும். இந்த வழியையே பெரும்பாலும் எவரும் பின்பற்றுவார்கள். இதன் மூலம் எல்லாவித உருவங்களில் இருக்கும் கற்களை கண்டறியலாம். அவை எங்கிருக்கின்றன என்பதையும் துல்லியமாகக் கண்டறியலாம்.

Intravenous urography (IVU) இந்த சோதனை அவ்வளவாக உபயோகப்படுத்தப் படுவதில்லை. இதன் மூலம் வெகு துல்லியமாக கற்கள் இருக்குமிடத்தை அறியலாம். சிறுநீரகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை இந்த சோதனை துல்லியமாக தெரிய வைக்கும். சிறுநீரகத்தின் அமைப்பையும், மற்றும் இதர சில அம்சங்களையும் இந்த சோதனை மிக நன்றாக அறிய வைக்கிறது.

ஆய்வக சோதனைகள்

சிறுநீர் பரிசோதனைகள்: இவற்றின் மூலம் தொற்றுதலையும் சிறுநீரின் Ph மதிப்பையும் கண்டு கொள்ளலாம் 24 மணி நேரத்திற்கு சிறுநீரை பிடித்து வைத்து அன்றாடம் எவ்வளவு கழிக்கப்படுகிறது என்ற கன அளவைக் கண்டு கொள்ளலாம். மற்றும் கால்ஷியம், ஃபாஸ்பரஸ், யூரிக் அமிலம் மற்றும் மக்னீஷியம் ஆக்ஸலேட், சிட்ரேட், சோடியம், கிரியேட்டினைன் இவற்றின் அளவையும் காணலாம்.

இரத்தப் பரிசோதனை அடிப்படை சோதனைகள்-இரத்ததின் கவுண்ட் (count), கிரியேட்டினைன், மின் கடத்தும் திரவங்களின் அளவு மற்றும் சர்க்கரை இவற்றை அளந்து காணலாம். சிறப்பான சில சோதனைகள் மூலம் கற்கள் உருவாக வைக்கும் இரசாயனப் பொருட்களைக் கண்டு கொள்ளலாம்.

கல் பகுப்பாய்வு: தன் வழியிலேயே வெளியே உதறித்தள்ளப்படும் கல்லோ அல்லது மனித முயற்சியால் வெளியே எடுக்கப் பட்டதோ, உடனே பரிசோதிக்கப்படுகிறது. அவற்றின் இரசாயன அமைப்பும் சோதிக்கப்பட்டு தடுப்பு வழிகள் உருவாக்கப்படுகின்றன.

சிறுநீரக கல் உருவாவதை தடுப்பது எப்படி?

பெரும்பாலும் இப்படிச் சொல்வதுண்டு. 'ஒரு முறை கல் தோன்றி விட்டால் என்றென்றைக்கும் அப்படியே உடல் தோன்ற வைக்கும்" என்று சொல்வார்கள். 50 லிருந்து 70 சதவீத நோயாளிகளுக்கு கற்கள் உருவாவது மீண்டும் ஏற்படுகிறது. அல்லது முறையான மருத்துவத்தால் அல்லது முன்னெச்சரிக்கைகளால் மீண்டும் வரும் விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக்கப்படுகிறது. ஆகவே ஒரு முறை தாக்கப்பட்டவர் தடுப்பு முறைகளை அவசியம் அனுசரிக்க வேண்டும்.

பொதுவான சில வழிமுறைகள்

உணவு என்பது ஒரு மிக முக்கியமான அம்சம். உணவே சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கலாம். அல்லது கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பொதுவாகவே கற்கள் சிறுநீரகத்தில் உருவாகி அவதியுறும் நோயாளிகளுக்கு எல்லாம் பொதுவான சில வழிமுறைகளாவன.

நிரம்ப நிரம்ப பருகும் நீரைப் பருகவும்.

  • ஒரு எளியதும் மிக முக்கியமான வழி நிரம்ப குடிநீரைப் பருகுவதாகும். இதுவே கற்கள் உருவாவதைத்தடுக்கும். ஒரு நாளைக்கு 12 விருந்து 14 டம்ளர்கள் நீர்பருகவும். (இது 3 லிட்டர்களுக்கும் மேல்). கையில் ஒரு பாட்டில் குடிநீரை எடுத்துக் கொண்டே செல்லவும்.
  • எல்லா நோயாளிகளுக்கும் எந்த நீரைப்பருகுவது என்பதில் ஒரு சந்தேகம் எப்பொழுதும் இருக்கும். ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - எந்த நீரைப்பருக வேண்டும் என்பதை விட எவ்வளவு நீர்பருகுகிறீர்கள் என்பதே மிக முக்கியம்.
  • கற்கள் உருவாகாமல் தடுக்க, போதுமான அளவு சிறுநீர் சிறுநீரகத்தில் ஒவ்வொரு நாளும் சுரக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இது எடுத்துக் கொள்ளும் அளவை விட மேலும் முக்கியம். நீங்கள் சரியான அளவு பருகும் நீரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கணக்கிட, ஒவ்வொரு நாளும் வெளிவரும் சிறுநீரின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். அது 2 விருந்து 2.5 லிட்டர்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • சிறுநீரின் நிறத்தைப் பார்த்தாலே நீங்கள் எவ்வளவு ஒழுங்குடன் நீரைப் பருகி வருகிறீர்கள் என்பதைக் காட்டும். நாள் முழுவதும் போதுமான அளவு பருகி வந்தால், சிறுநீர் நீர்த்து இருக்கும். தெளிவாக நிறமின்றி அநேகமாக நீரை போலவே இருக்கும். நீர்த்த சிறுநீர் என்பதுதாது உப்புக்களின் அளவு குறைந்தே இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இருந்தாலே கற்கள் உருவாவது தடுக்கப் படும். கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்துடன், திண்மை அதிகமாக இருக்கும் சிறுநீர் வெளிவந்தால், போதுமான அளவு குடிநீரைப் பருகாமல் இருக்கிறீர்களென்று அர்த்தம்.
  • கற்கள் உருவாகாமல் இருக்க, உணவுக்குப் பின், இரண்டு கிளாஸ்கள் நீரைப் பருகும் வழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.
  • அதே போல் படுக்கப் போகும் முன்பும் இரண்டு கிளாஸ்கள் குடிநீரைப் பருகவும். ஒவ்வொரு முறையும் இரவில் விழித்து எழ நேர்ந்தால், கூடுதலாக ஒரு கிளாஸ் நீர்பருகவும். நடுஇரவில் அப்படி நீரைக் குடிப்பது தடுப்புக்கு மிக முக்கியமான வழியாகும். ஏன், ஒரு அலாரம் கடிகாரத்தின் உதவியால் குறித்த நேரத்திற்கு இரவில் எழுந்து நீரைக் குடிப்பது நிச்சயம் நல்ல பயன்தரும்.
  • உடலுழைப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு அவசியமாக அதிகமாக திரவங்களைப் பருகுதல் பரிந்துரைக்கப் படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு வியர்வை மூலம் நிரம்ப நீர் வெளியே சென்று விடுகிறது.

இளநீரைக் குடிப்பது, பார்லி அல்லது அரிசி கழுவிய நீரைக் குடிப்பது, எலுமிச்சை சாறு, அல்லது பைனாப்பிள் ஜூஸ் போன்றவை உள்ளே செல்லும் நீரின் அளவைக் கூட்டி கற்கள் சிறுநீரகத்தில் உருவாவதைத் தடுக்கின்றன.

என்னென்ன வகையான திரவங்கள் கற்கள் உருவாவதைத் தடுக்கும்?

மேற்சொன்ன திரவங்கள் யாவும் அதற்கு நல்லது. ஆனால் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குடிநீரே இருக்க வேண்டும்.

எவ்வகையான திரவங்களை, கற்கள் உள்ள நோயாளி தவிர்க்க வேண்டும்?

திராட்சை பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், கிரான்பெர்ரி ஜூஸ், ஸ்ட்ராங் டீ, காப்பி, சாகலேட் மற்றும் சர்க்கரை போட்ட குளிர் பானங்கள் - கோலா போன்றவை - மற்றும் மது கலந்த குடி பானங்கள், பீர் உட்பட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

உப்பைக் குறைத்தல்

அதிக உப்பு கலந்த உணவை நிச்சயம் தவிர்க்கவும். ஊருகாய், அப்பளம், உப்பு நிரம்பிய நொறுக்குத்தீனி, முதலியவற்றை அறவே நீக்கவும். இதனால் சிறுநீரோடு கால்ஷியம் நிரம்ப கலந்து விட வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் கற்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு 6 கிராம் டேபிள் உப்புக்கு மேல் எடுத்துக் கொள்வதைத் தடுத்து கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாமிசத்தில் அதிகம் புரோட்டின் கலக்காமல் உண்ணவும்

மாமிச உணவை (மட்டன், சிக்கன், மீன் மற்றும் முட்டை) எடுத்துக் கொள்ளுதல் வேண்டாம். இவற்றில் யூரிக் அமிலம் நிரம்ப இருக்கிறது. அதுவே யூரிக் அமில கற்கள் உருவாவதை ஊக்குவிக்கும். கால்ஷியம் கற்கள் உருவாவதும் துரிதப்படுத்தப்படும்.

சமச் சீரான உணவு

நிரம்ப காய்கறிகளும் பழங்களும் கொண்ட சமச் சீரான உணவை உண்ணவும். இது சிறுநீரகத்தின் மீது நாம் உருவாக்கும் அமிலத்தின் கனத்தை குறைக்கிறது. வாழைப்பழம், பைனாப்பிள், ப்ளூபெர்ரிக்கள், செர்ரிக்கள் மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் போன்றவற்றை நிரம்ப எடுத்துக் கொள்ளவும். காரட், பாவக்காய், ஸ்குவாஷ் மற்றும் வால் மிளகு போன்றவற்றை நிரம்ப உணவில் கலக்கவும். பார்லி, பீன்ஸ், ஓட்ஸ் மற்றும் சிலியம் விதைகள் போன்றவற்றை அதிகமாகக் கலந்து கொள்ளுங்கள்.

இதர வழிமுறைகள்

சி விடமினை ஒரு நாளைக்கு 1000 மி.கி.க்கும் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் நெடு நேரம் கழித்து மிக அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள். கற்கள் உருவாவதற்கு உடல் பருமன் ஒரு தனி காரணமாகிறது. ஒரு தனியான சாத்தியக் கூற்றை அது கொண்டு வரும். உடல் பருமனைக் குறைத்தும் சமச் சீரான உணவை உண்ணுதலையும் ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள்.

தனிச் சிறப்புவாய்ந்த வழிமுறைகள்

கால்வியம் உள்ள கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?

  • உணவு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி அவதியுறும் நோயாளிகளுக்கு கால்ஷியமே கூடாது என்று சொல்வது தவறு.
  • கால்ஷியம் கூடிய சத்தான உணவையே உண்டு வரவும். பால் பொருட்களும் அதில் சேரலாம். அதனால் கற்கள் உருவாவது தடுக்கப்படலாம். உணவில் கால்ஷியம் குறைந்து விடும்பொழுது, ஆக்ஸலேட் சிறு குடலில் ஜீரணிக்கப் பட்டு ஆக்ஸலேட் கற்கள் உருவாவது சாத்தியமாகிறது.
  • கால்ஷியம் கூடிய உபரி உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். கால்ஷியம் குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும். இரண்டுமே கற்கள் உருவாவதற்குக் காரணமாகின்றன. அப்படி அந்த உபரிப் பொருட்கள் அவசியமாக இருந்தால், உணவுடன் அவற்றைக் கலந்து சாப்பிட்டு, அபாய சாத்தியக் கூறுகளைக் குறையுங்கள்.
  • மருந்து வகைகள் : Thiazide diuretics போன்ற மருந்துகள் கால்ஷியம் கற்கள் உருவாகாமல்தடுக்கும்.

ஆக்ஸலேட் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

    ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவை தவிர்த்தால் இவ்வகை கற்கள் உருவாகாது. அப்படி ஆக்ஸலேட் அதிகம் உள்ளவை

  • காய்கறிகள் : பசலைக்கீரை, வெண்டைக்காய், பீட்ரூட், மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை.
  • பழங்கள் : உலர்ந்த பழங்கள், ஸ்ட்ரா பெர்ரி, சிவந்த ராஸ்ப் பெர்ரிக்கள், சிக்கு, அம்லா, திராட்சைப் பழங்கள், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, பாதாம்பருப்பு மற்றும் உலர்ந்த அத்திப் பழங்கள்.
  • இதர உணவு வகை : பச்சை மிளகு, பழம் சேர்ந்த கேக்குகள், கறுத்த சாக்லேட்

யூரிக் அமில கற்களைத் தவிர்ப்பது எப்படி?

  • மது கலந்த எந்த பானத்தையும் தவிர்க்கவும். மிருக மாமிச புரோட்டினை தவிர்க்கவும். அதாவது ஒரு குறிப்பிட்ட மிருக அங்கத்தின் மாமிசம் - மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற - அங்க மாமிசங்களைத் தவிர்க்கவும். போர்க், சிக்கன், மற்றும் மாட்டிறைச்சி, முட்டை இவற்றைத் தவிர்க்கவும்.
  • பருப்பு வகைகளைத் தவிர்க்கவும். பீன்ஸ், பசலைக் கீரை, காலிஃப்ளவர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  • ஐஸ்கிரீம், வறுக்கப்பட்ட தானியங்கள் - இவற்றைத் தவிர்க்கவும்.
  • மருத்துவம்: Alopurinol எனும் மருந்து மேற்கண்ட கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீரில் யூரிக் அமிலம் சேர்வதைக் குறைக்கும். பொட்டாசியம் சிட்ரேட் கற்கள் கரைவதை ஊக்குவிக்கும்.
  • இதர வழிகளில் உடல் எடையைக் குறைப்பது ஒன்று ஆகும்.

சிறுநீரக கற்களுக்கு ஏற்ற சிகிச்சை என்ன?

இது கற்களின் உருவத்தையும் அளவையும், இருக்கும் இடத்தையும் பொருத்தது. சிறுநீரகத்தில் வேறு எந்தவித தொற்றுதலும் இருக்கக் கூடாது. சிறுநீர்ப் பாதையில் எந்தவித தடங்கலும் இருக்கக் கூடாது. இரண்டு பிரதான வழிகள் சிகிச்சைக்கு உண்டு.

அ. தொன்று தொட்டு அனுசரிக்கப்படும் சிகிச்சை

ஆ. அறுவை சிகிச்சை

தொன்று தொட்டு அனுசரிக்கப்படும் சிகிச்சை

பெருவாரியான கற்கள் பெரும்பாலும் மிகச் சிறியவை (5 மி.மி.க்கும் குறைவான அளவு விட்டத்தை உடையவை.)

உடனடியாக கற்களுக்கு சிகிச்சை தருவது.

பொறுக்க முடியாத வலிக்கு எதிரான சிகிச்சைகள், NSAIDS OR oploids ஊசிகளை நரம்பு ஊசிகள் மூலம் ஏற்றுதல். கொஞ்சம் வலி குறைவாக இருந்தால், வாய் மூலம் மாத்திரைகள் சாப்பிடலாம். பெரும்பாலும் அவை திறன்மிக்கதாக இருக்கும்.

நிரம்ப பானங்களைப் பருகுதல்

பொறுக்க முடியாத வலியை உடையவர்களுக்கு நிரம்ப பானங்களை எடுத்துக்கொள்வது சற்று மிதமாக இருக்கும். அதிகம் கூடாது. ஏனென்றால் அதுவே வலியைக் கூட்டி விடும். வலி இல்லாத பொழுது திரவங்களைப் பருகலாம். ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 லிட்டர்கள் குடிநீரைப் பருகுவது அறுவை சிகிச்சை இல்லாமல் கற்களை வெளியே எடுக்க உதவும். வாந்தியும் காய்ச்சலும் உடன் வந்தால், இரத்த நாளம் வழியாக ஸலைன் நீரை ஏற்றுவது ஒன்றே வழி. சிறுநீரில் வெளிவரும் கற்களை நோயாளி குறிப்பாக எடுத்துக் காண்பிக்க வேண்டும். இதற்காக ஒரு சல்லடை வழியாக சிறுநீரைப் பாய்ச்சி கல்லை வெளியே எடுக்கலாம்.

இதர வழிமுறைகள்

சிறுநீரின் PH மதிப்பை சரியான நிலையில் வைக்க வேண்டும். கால்ஷியம் சேனல்தடுப்பு மருந்துகள், ஆல்ஃபா தடுப்பு மருந்துகள் கற்களை யுரீத்தரிலேயே விட்டு விடும்படி செய்கின்றன. வாந்தி மற்றும் இதர உபத்திரவங்களை தனியாக சிகிச்சைகள் மூலம் தீர்க்கவும். எல்லா பொதுவான தடுப்பு முறைகளையும் அனுசரித்து குணம் காணவும்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சைகள் பல உண்டு. இவற்றை மேற்சொன்ன பாரம்பரிய வழிகளோடு சேர்த்து செய்யக் கூடாது. Extracorporeal shock wave lithotripsy (ESWI) என்பது ஒரு வழியாகும். இன்னமும் சில வழிகள் உண்டு. சில அபூர்வ நிலைமைகளில் அங்கத்தை திறந்தவாறு செய்யப்படும் அறுவையும் உண்டு. இவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்து திறன்மிக்கது அல்லது இல்லை என்று சொல்ல முடியாதவை. ஒரு நோயாளிக்கு எது உகந்தது என்பதை யூராலஜிஸ்டே தீர்மானிப்பார்.

எவரெவருக்கு அறுவை சிகிச்சை தேவை?

சிறு அளவு கல்லே இருப்பவர்களுக்கு பாரம்பரிய வழிகளிலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை எப்பொழுது அவசியம் என்று தோன்றும் என்றால்-

  • மீண்டும் மீண்டும் அசாத்திய வலி தோன்றினாலோ அல்லது குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் போகாமல் நீடித்தாலோ அறுவையே செய்ய வேண்டும்.
  • கல் இயல்பாகவே வெளியேறுவதற்குத் தடையாக அதன் உருவம் பெரிதாக இருக்கும்.
  • சிறுநீர் வெளியாவதையே பெருமளவு தடை செய்யும். சிறுநீரகத்தையே தாக்கிக் கொண்டிருக்கும்.
  • மீண்டும் மீண்டும் சிறுநீர் செல்லும் பாதையில் தொற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும். அல்லது இரத்தப் போக்கை உண்டாக்கிக் கொண்டிருக்கும்.

கல் ஒன்றின் தடுப்பினாலேயே சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். அது ஒரே ஒரு சிறுநீரகத்தை பாதித்திருக்கலாம் அல்லது இரு சிறுநீரகங்களையும் பாதித்திருக்கலாம்.

ESWL - Extra Coporeal shockWave lithotripsy

மேலே சொல்லப்பட்ட மருத்துவமே மருத்துவ உலகில் மிக மிக அண்மையில் அறிமுகமானது. திறன்மிக்க ஒன்றாகும். இதை சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்ற அடிக்கடி உபயோகிக்கப் படும் சிகிச்சை 1.5 செ.மி.க்கும் குறைவான அளவுள்ள கற்களை அகற்ற இதுவே சிறந்த சிகிச்சை அல்லது யுரீட்டரின் மேல்பகுதியில் இருக்கும் கற்களை இந்த சிகிச்சை மூலம் அகற்றலாம்.

இந்த முறையில் மிக அதிக அழுத்தமான அதிர்ச்சி அலைகளை அல்லது ஒலிக்கு அப்பால் வேலை செய்யும் அலைகளை இயந்திரத்தின் மூலம் உருவாக்கி அவற்றின் உதவியால் கற்கள் உடைக்கப்படும். கற்கள் சிறு சிறு துண்டுகளாக ஆகின்றன. சிறியவை ஆனவுடன் அவை எளிதாக சிறுநீர்ப்பாதையில் சென்று விடுகின்றன. இந்த சிகிச்சைக்குப்பின் நோயாளி நிரம்ப நிரம்ப குடி நீர்பருகுமாறு அறிவுறுத்தப்படுகிறார். அதற்குப்பின் சிறுநீரகத்தில் இருக்கும் சிறு சிறு கல் துண்டுகள் வெளியே வந்து விடும். சிகிச்சைக்குப்பின் யுரீட்டர் தடுப்பு ஏற்படும்பொழுது வெளிப்புறத்திலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் குழாய் ஒன்றை யுரீட்டரில் இணைத்து தடுப்பினால் அவதியுறாமல் செய்வார்கள்.

லித்தோட்ரிப்ஸி எனும் மேற்கண்ட சிகிச்சை பொதுவாக பாதுகாப்பானது. சிறுநீரோடு இரத்தம் கலந்து போவது சிறுநீரகத்தில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது, முழுவதுமாக கற்கள் எடுக்கப்படாமல் விட்டு விடுதல் போன்றவை சிறுநீர் வெளியாவதற்குத் தடையாக இருக்கும். சிறுநீரகங்களையும் பாதிக்கும். மற்றும் இரத்த அழுத்தம் அதிகமடைய ஆரம்பிக்கும்.

இந்த சிகிச்சையினால் வரும் நன்மைகளில் ஒன்று இதற்கு ஆஸ்பத்திரிக்குச் சென்று அட்மிட் ஆக வேண்டாம். மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையைத் துவங்க வேண்டாம். அறுவை ஒன்றும் இல்லை. கத்தியால் உடலின் அடி வயிற்றில் கீற வேண்டாம். வலி மிகமிகக் குறைவு. எல்லா வயதுக் காரர்களுக்கும் இது ஒத்து வரக் கூடிய சிகிச்சை

கற்கள் பெரிதாக இருந்தால், இந்த சிகிச்சை பயன்படாது. அதே போல் பருமனாக இருப்பவர்களுக்கும் இது பயன்படாது. பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது. கடுமையான தொற்றுதல் உடைய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், சிறுநீர்ப்பாதையில் தடங்கல் இருப்பவர்களுக்கும் இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும் இது பயன்படாது.

இந்த சிகிச்சைக்குப் பின் முறையாக, சோதித்து வருதல் வேண்டும். தடுப்பு முறைகளை கடுமையாக அனுசரித்து வருதல் வேண்டும். அப்படிச் செய்தாலே மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகாது. அந்த முறைகளை அனுசரிப்பது ஒரு விதியைப் போல அனுசரித்து வருதல் வேண்டும்.

Percutancous Nephrolitholony (PCNL)

மேற்கண்ட சிகிச்சை ஒரு திறன் மிக்க ஒன்றாகும். நடுத்தர அளவுள்ள கற்களை அல்லது பெரிய கற்களை இந்த சிகிச்சை அகற்றும். (1.5 செ.மி.க்கும் அதிக அளவில் இருக்கும் கற்கள்) அல்லது யுரீட்டரில் தோன்றும் கற்களை அகற்றும். இதர வழிமுறைகள் பயனளிக்காத பொழுது இந்த சிகிச்சையைப் பெரும்பாலும் அனுசரித்தே வருகிறார்கள்.

பெரும்பாலும் இந்த வழிமுறை பாதுகாப்பானதே. ஆனால் ஒரு சில அபாய சாத்தியக் கூறுகள் இருக்கத் தான் செய்கின்றன.

சிக்கல்கள் தோன்றலாம். இது எல்லா அறுவை சிகிச்சைகளுக்குமே பொருந்தும் இதர சிறுநீரக உறுப்புக்களுக்கு அபாயம் வரலாம்.

இந்த சிகிச்சையில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால், ஒரு மிகச்சிறிய வெட்டினால் மட்டுமே உள்ளே உபகரணங்களின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யலாம். எல்லாவித கற்களையும் வெளியே கொண்டு வந்து விடலாம். மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும் இந்த முறை மிகவும் திறன் வாய்ந்தது. இதை ஒரே முறை அறுவை மூலம் செய்து முடித்துவிடலாம். இதற்காக ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய நேரம் மிகக் குறைவு. குணமாகிவிடுவதும் விரைவிலேயே நடக்கும்.

Ureteroscopy (URS)

மேற்கண்ட சிகிச்சை யுரீட்டரில் நடுவிலோ அல்லது கீழ்ப் பாகத்திலோ இருக்கும் கற்களை அகற்ற பெரிதும் உதவும். இது ஒரு திறன் மிக்க சிகிச்சை. மயக்க மருந்து கொடுத்த பின், வெகு நுண்ணிய குழாயில் ஒளியைப் புகுத்தி, அந்த குழாயை ஒரு காமராவுடன் இணைக்கிறார்கள். குழாயை சிறுநீர்ப் பைக்குள் செலுத்துகிறார்கள். அது யுரீட்டர் வரையில் போகும்.

கல்லை இந்த உபகரணத்தின் மூலம் பார்ப்பார்கள். கல்லின் அளவைப் பொறுத்து, கல் உடைக்கப்பட்டு அகற்றப்படுகிறது. கல் சிறியதாக இருந்தால், குழாயில் பொறுத்தப்பட்ட பிடிக்கும் முனையின் மூலம் அகற்றப்படுகிறது, கல் பெரிதாக இருந்தால், சிறு சிறுகற்களாக அது உடைக்கப்படுகிறது. இந்த சிறுசிறுகற்கள் பிறகு சிறுநீற்றோடு கலந்து வெளியேறுகின்றன. நோயாளிகள் அனேகமாக அட்மிட் ஆன தினத்தன்றே வீட்டிற்கு திரும்ப முடியுமாறு செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து அன்றாட வழக்கமான வேலைகளில் அவர்கள் ஈடுபடலாம்.

இந்த முறையினால் பெரிய கற்கள் கூட அகற்றப்பட முடியும். அதற்கு அறுவை சிகிச்சை மூலம் உள்ளே புகுதல் வேண்டாம். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது பாதுகாப்பான முறையாகும். பருமனானவர்களுக்கும் இது உதவும். அதைத்தவிர இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும் இந்த சிகிச்சை உதவக் கூடியது.

இது பொதுவாக பாதுகப்பானது. ஆனால் எந்த முறையிலும் இருக்கும் அபாய சாத்தியக்கூறுகளே இதிலும் உண்டு. ஏற்படக் கூடிய அபாயங்களாவன - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல், சிறுநீர்ப்பாதையில் தொற்றுதல் ஏற்படுதல், யுரீட்டரில் துளை உருவாதல் போன்ற அபாய சாத்தியக்கூறுகள் உண்டு. இவை யுரீட்டரின் குறுக்களவை மேலும் குறுக்கும்.

திறந்த அறுவை சிகிச்சை

இந்த சிகிச்சை உடலை அறுத்துச் செய்வதாகும். இது வலி மிக்கது. 5 லிருந்து 7நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்.

மென்மேலும் தொழில்நுணுக்கம் வளர்ந்து வரும் இந்நாட்களில் உடலை அறுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மிக மிக குறைந்து விட்டன. இப்பொழுதெல்லாம் வெகு அரிய நேரங்களிலேயே அறுவை மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் மிகவும் சிக்கலான தருணங்களிலேயே மேற்கொள்ளப்படுகிறது. கல்லின் அளவு மிகப் பெரிதாக இருந்தாலொழிய அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

பிரதானமாக அறுவை சிகிச்சையின் பயன் என்னவென்றால், கற்கள் முழுவதும் ஒரே முறை அறவே அகற்றப் பட்டு விடும். இது திறன் மிக்கதும் செலவு குறைவானதுமாகும். அதுவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது மிகவும் உதவும்.

ஒரு நோயாளி எப்பொழுது இந்த சிகிச்சைக்காக மருத்துவரை நாட வேண்டும்?

கீழ்க்கண்ட நிலைமைகளில் நோயாளி மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

  • அடிவயிற்றில் கடும் வலி இருந்தாலோ மருத்துவத்தில் கட்டுப்படாமல் போனாலோ தொடர்பு கொள்ள வேண்டும்.
  • கடுமையாக வாந்தி எடுத்தாலோ அல்லது உள்ளே எதுவும் பருக முடியாத நிலைக்கு தள்ளப் பட்டாலோ அல்லது மருந்துகள் உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டலோ
  • காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல் மற்றும் சிறுநீர் போகும்பொழுது எரிச்சல் மற்றும் அடி வயிற்றில் வலி ஏற்படுதல் போன்ற சமயங்களில்
  • சிறுநீரோடு இரத்தம் கலந்து போதல்
  • முழுக்க முழுக்க சிறுநீர் வருவது நின்றால்

மேற்கண்ட சமயங்களில் மருத்துவரை நாட வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate