பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / தொற்றுநீக்கு கொள்கைகளும் செயல்முறையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொற்றுநீக்கு கொள்கைகளும் செயல்முறையும்

மருத்துவ மற்றும் அறுவை சிகிட்சைக்குரிய தொற்றுநீக்கு கொள்கைகளும் செயல்முறையும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கும் மற்றும் பெரும்பான்மையான மரணங்களுக்கும் காரணங்களாவன

 1. தூய்மையின்மையினால் தொற்று நோய்கள் பரவுதல்
 2. ஊட்டச்சத்துக் குறைவினால் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறைதல்

சமுதாய நலவாழ்விற்கு தனிநபர் தூய்மை மற்றும் பொதுவிடங்கள் தூய்மை பேணுதல் இன்றியமையாததாகும். அது போன்று நல்ல சத்துணவு, நோயைத் தடுக்கவும் நோயுற்றோர் நோயிலிருந்து மீளவும் உதவுகிறது. ஆனால் இந்தியாவில் மக்கள் பலர் நல்ல உணவுப் பொருட்களை வாங்க வசதியின்றியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான உணவு பெற அல்லலுறுகிறார்கள்.

மேலும் பல சிறிய மற்றும் பெரிய நுண்ணுயிரிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதுடன் மனிதனைச் சார்ந்து வாழ்கின்றன. அவைகளுள் நோய்கிருமிகளும் ஒட்டுண்ணிகளும் நமது உடலுடன் ஒட்டிச் சார்ந்து வாழ்கின்றன. சில நம்மிடமிருந்து உணவைப் பெற்றும் வாழும் போது மற்றும் சில நம் குருதியை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. இத்தகைய நுண்ணியிரிகள் கடுமையான வியாதிகளை உண்டாக்குவதுடன் மரணத்தையும் விளைவிக்கின்றன.

நோய்த்தொற்று நுண்ணியிரிகள்

நம் உடலில் நுழைந்து தாக்கி நோயை உண்டாக்கும் போது அது நோய்த்தொற்று என்றழைக்கப்படுகிறது. பெரும்பான்மையான உயிரிகள் மனிதனுள் அல்லது விலங்கினுள் மட்டுமே வாழ முடியும். பின் அவை ஒன்றிலிருந்து மற்றொன்றி--க்குப் பரவி நோயைப் பரப்புகின்றன. பல நுண்ணியிரிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அவைகளை நுண்ணோக்கி மூலமே பார்க்க முடியும்.

நுண்ணுயிரிகளின் வகைகள்

 1. நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள்.
 2. நோய் உண்டாக்காத நுண்ணுயிரிகள் - நோய் உண்டாக்காத நுண்ணியிரிகள் குப்பைக் கூளங்களை மட்கச் செய்கின்றன. மற்றும் சில தயிர், பாலாடைக்கட்டி, ரொட்டி மற்றும் மது தயாரிக்க உதவுகின்றன.

நுண்ணுயிரிகள் முக்கியமாக நான்கு வகைப்படும்

அ. பாக்டீரியாக்கள்

இவைகளில் காக்கை, பேசிலை, ஸ்பைரெல்லா மற்றும் ஸ்பைரோகீட்ஸ் முக்கியமானவையாகும்.

ஆ, பூஞ்சைக்காளான்கள்

பூஞ்சைக்காளான்கள் தாவர வகை நுண்ணுயிரிகளாகும். ஈஸ்ட் பூஞ்சைகாளான் வகைகளில் முக்கியமானதாகும். ஈஸ்ட்கள் ரொட்டி மற்றும் ஒயின் மதுபான வகைகள் செய்யப்பயன்படுகின்றன. சில பூஞ்சைக் காளான்கள் தோல் மற்றும் வாய் பகுதியில் நோயை உண்டாக்குகின்றன.

இ. புரோட்டோஸோவா

புரோட்டோஸோவா என்பவை விலங்கு வகை உயிரிகளாகும். இவை பாக்டீரியாக்களை விட அளவில் பெரியவை. உதாரணமாக மலேரியா ஒட்டுண்ணிகள் மலேரியாக் காய்ச்சலை உண்டாக்குகின்றன. எண்டமிபா ஹிஸ்டலைடிகா வகை ஒட்டுண்ணிகள் சீதபேதியை உண்டாக்குகின்றன.

ஈ. வைரஸ்கள்

இவை பாக்டீரியாக்களை விட சிறியவை. மிக நுண்ணிய சல்லடை வழியாகக்கூட நுழைந்துவிடும். இவற்றை சாதாரண நுண்பெருக்க ஆடி (microscope) வழியாக பார்க்க முடியாது. மின்னணு நுண்பெருக்க ஆடி (Electron microscope) வழியாகத்தான் பார்க்க முடியும். இவை பல நோய்களை உண்டு பண்ணுகின்றன.

(எ.டு) சாதாரண சளி, தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, வெறிநாய் கடிநோய் மற்றும் இளம்பிள்ளைவாதம்.

மனிதனின் உடலில் நோய்த்தொற்று நுழையும் வழிகள்

நுண்ணுயிரிகள் கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றில் உடலில் புகுகின்றன.

 1. செரிமானப்பாதை - உணவு அல்லது நீர் வழியாக உட்புகுதல்
 2. மூச்சுப்பாதை - காற்றுடன் உள்ளிழுக்கப்படுகின்றன.
 3. தோல் அல்லது சளிச் சவ்வு படலம் – வெட்டுக்காயம், வலிமை இழந்த மேல்தோல் அல்லது ஊசி போடுதலின் போது உள்ளே நுழைபவை.

தொற்று நோய் உள்ள உடலிலிருந்து நண்ணுயிரிகள் கீழ்க்காணும் வழிகளில் வெளியேறுகின்றன

 1. உடல் கழிவு - மலம் மற்றும் சிறுநீர்
 2. இருமல் தும்மல் மற்றும் மார்பு சளி
 3. சீழ் மற்றும் புண்ஒழுக்குகள்
 4. இரத்தம் (எ.டு) கொசுக்கடி, மருந்து ஊசிகள். தொற்று நோய் உள்ளவரிடமிருந்து நலமுள்ள உடம்புக்குள் செல்லவும் வெளியேறவும் ஒவ்வொருவகை நுண்ணியிரிகளும் தமக்கே உரிய வழிகளை கொண்டுள்ளன. கீழே எடுத்துக்காட்டுகள் உள்ளன.

மலத்திலிருந்து வாய் மூலமாக பரவுதல்

மலங்களில் கீழ்க்காண்பவை அடங்கியுள்ளது.

 • குடல் ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்களின் முட்டைகள், சீதபேதி உண்டாக்கும் அமீபாக்கள்
 • காலரா, டைபாய்டு அல்லது சீதபேதி உண்டாக்கும் பாக்டீரியாக்கள்
 • இளம்பிள்ளைவாதம், கல்லீரல் அழற்சி உண்டாக்கும் வைரஸ்கள்

மலங்களிலிருந்து வாய் மூலம் வரும் தொற்றைக் கீழ்க்கண்ட முறைகளில் தவிர்க்கலாம்.

 1. உணவு தயார் செய்யும் முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
 2. சுத்தமான உணவையே உண்ணவேண்டும். ஈக்களிடமிருந்து உணவை பாதுகாக்க வேண்டும்
 3. ஈக்கள் பெருகும் இடங்களை தவிர்த்து ஈக்களை ஒழிக்க வேண்டும்
 4. பாதுகாக்கபட்ட குடிநீர் மற்றும் கொதிக்க வைத்த நீரை குடித்தல்
 5. கழிவறைகளை பயன்படுத்துதல் அல்ல்து மலம் கழித்த பின் மண் கொண்டு மூடி விடுதல்
 6. மலங்கழித்த பின்பு கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

மலங்களிலிருந்து தோலுக்கு தொற்று நோய் பரவுதல்

மலங்கள் வழியாக வெளியேறும் கொக்கிப் புழு முட்டைகள் மண்ணில் லார்வாப் புழுக்களாகப் பொரிக்கப்படுகின்றன. இந்த லார்வாக்கள் காலணிகள் அணியாத பாதங்களின் தோல் வழியாக உடலினுள் சென்று குடல்களில் முழுப் புழுக்களாக வளர்ச்சியடைகின்றன. கழிவறை பயன்படுத்துவது மூலமாகவும் காலுக்கு மிதியடி அணிவதன் மூலமாகவும் கொக்கிப் புழு தொற்று வராமல் தடுக்கலாம்

இரணஜன்னி பாக்டீரியாக்கள் மனிதர் மற்றும் விலங்குகளின் குடல்களில் வாழ்கின்றன. அவை மாட்டுச்சாணத்திலும். மண்ணிலும் இருக்கின்றன. இது தோல் காயத்தின் வழியாகவோ அல்லது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி வழியாகவோ உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டவை. இரணஜன்னி தடுப்பூசி போடுவதன் மூலம் இரணஜன்னி நோய் வராமல் தடுக்கலாம்

காற்றிலுள்ள சிறு சளித்துளிகள் மூலம் பரவும் நோய்கள்

சாதரண சளி அல்லது காச நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதோ, தும்மும் போதோ அல்லது பேசும் போதோ அவரது மூச்சு காற்றிலுள்ள சிறு சளித் துளிகள் வழியாக நுண்ணியிரிகள் வெளிக்காற்றுடன் கலக்கின்றன. அந்த சிறிய சளித்துளிகள் காய்ந்து தொற்று உள்ள தூசியாய் உடல், தரை மற்றும் உபயோகத்திலுள்ள பொருட்களின் மேல் படியும். மற்றவர்கள் அதை சுவாசிக்கும் போது தொற்றுநோய் அடைகிறார்கள்.

தொண்டை அடைப்பான், புட்டாளம்மை, தட்டம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல், நிமோனியா, மேல் மூச்சுப் பாதை தொற்றுநோய்கள் காற்றிலுள்ள சளித்துளிகள் தொற்றினால் பரவும் நோய்களாகும்.

சளித்துளிகள் தொற்றுகளைத் தடுக்கும் வழிகள்

 1. சுத்தமான காற்றையே சுவாசிக்கவேண்டும் மற்றும் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்திடவேண்டும்.
 2. போதிய அளவு சத்துணவை உண்ண வேண்டும்
 3. இருமும் போது சிறு கைக்குட்டையினால் மூக்கையும். வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.
 4. காச நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 5. தட்டம்மை, சின்னம்மை, தொண்டையடைப்பான் நோயுற்றோரை மற்றவரிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
 6. தடுப்பூசிகள், முக்கியமாக குழந்தைகளுக்கு போட வேண்டும்

மேல்மூச்சுப் பாதையைத் தாக்கும் தொற்றுகள்

மேல்மூச்சுப்பாதை என்பது குரல் வளைக்கு மேலே உள்ள பகுதியாகும். சாதாரண சளி, இன்புளுயென்ஸா அல்லது ஃபுளு காய்ச்சல், அடித்தொண்டை அழற்சி டான்சிலைடிஸ் ஆகிய நோய்கள் மேல் மூச்சு பாதையை தாக்கும் நோய்களாகும். அவை நோய் நுண்மப் பெருக்கும் காலமான - 1 முதல் 6 நாட்களுக்குள் மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டவை. சளி மற்றும் ஃபுளு, நச்சு வைரஸ்கள் மூலம் உண்டாகுபவை. குளிர்ச்சி அல்லது ஈரம் அடைதல் இந்த நோய்க்குக் காரணம் அல்ல. ஆனால் ஈரம் அடைவதால் இந்த நோய்கள் மோசமானவையாகிவிடும்.

அடையாளங்களும் மற்றும் அறிகுறிகளும்

 1. தொண்டை வறட்சி, தொண்டை புண்
 2. தும்மல் மூக்கு ஒழுகலும் அடைப்பும்
 3. தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல்
 4. மூட்டுக்களில் வலி (ஃப்ளு காய்ச்சல்)

இந்த அறிகுறிகள் சில நாட்கள் மட்டும் இருக்கலாம். தகுந்த சிகிச்சை அளிக்கவில்லையென்றால் கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் நிமோனியா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகலாம்.

சிகிச்சையும் செவிலியப் பராமரிப்பும்

 1. படுக்கை ஒய்வு மற்றும் நோயாளிகளை வெதுவெதுப்பாக பராமரித்தல்.
 2. குடிக்க அதிக அளவு திரவபானங்கள், ஆரஞ்சுச்சாறு அல்லது எலுமிச்சஞ்சாறு மிகவும் நல்லவை.
 3. ஆஸ்பிரின் மாத்திரை தரலாம். ஆன்டிபயாடிக் மருந்துகள் வைரஸ் தொற்றுநோய்களுக்கு எதிராக வேலை செய்யாது
 4. ஆவி பிடித்தல் மூக்கடைப்பை சரி செய்ய உதவுகிறது. அடைப்பு நீக்கும் மூக்குச்சொட்டு மருந்துகளை தினமும் மூன்றுவேளை மூக்கில் விடலாம்.
 5. மூக்கை அடிக்கடி சுத்தமாகத் துடைக்க வேண்டும். மூச்சு காற்றை கடுமையாக உள் உறிஞ்சுதலோ அல்லது கடுமையாக மூக்கை சிந்துதலோ கூடாது.

தொண்டை சதை அழற்சி (Tonsilitis)

சளி அல்லது ஃபுளு இருந்தால் இந்த அறிகுறி இருக்கலாம் அல்லது அடி நாக்கில் நுண்மத் தொற்றினால் இருக்கலாம்.

அடையாளங்களும் அறிகுறிகளும்

 • அடிநாக்கு சிவப்பாகவும் வீங்கியும் இருத்தல்
 • சீழ் வெளிவருதல்
 • காய்ச்சல்
 • தொண்டையில் வலி
 • விழுங்க சிரமம் இருத்தல் சிறிதளவு சளியுடன் கூடிய இருமலும் வாந்தியும் இருக்கும். தாடையின் கீழ் இருக்கும் நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி இருக்கும்.

சிகிச்சையும் பராமரிப்பும்

 1. வலிக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள்
 2. பெனிசிலின் மாத்திரைகள் அல்லது பெனிசிலின் ஊசி தரப்படலாம்.
 3. வெதுவெதுப்பான உப்பு நீரீனால் கொப்பளித்தல் (ஒரு டம்பளர் நீரில் வெதுவெதுப்பான ஒரு தேக்கரண்டி உப்பு கரைத்தல்)
 4. மூன்று நாளில் முன்னேற்றம் இல்லையென்றால் அல்லது அடி நாக்கின் மேல் சாம்பல் நிறப்படிவம் தோன்றினால் (தொண்டை அடைப்பான்) உடனே நோயாளியை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

நிமோனியா

இந்நோய் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான நோயாகும். 'பிரான்ங்கோ நிமோனியா" என்றால் மூச்சுக்குழாய் மற்றும் காற்று நுண்ணறைகள் இரண்டிலும் தொற்று இருக்கிறது என்பதாகும். நிமோனியா என்பது பெரும்பாலும் தட்டம்மை, கக்குவான் இருமல், ஆஸ்த்துமா அல்லது மேல்நிலை மூச்சு சார்ந்த தொற்று ஆகியவற்றின் சிக்கலான நிலை ஆகும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது ஆபத்தானது.

அடையாளங்களும் அறிகுறிகளும்

 • விரைவான, மேல் மூச்சுவிடல்.
 • சில சமயம் உஸ் என்ற ஒலியுடன் மூச்சு விடுதல்.
 • மூக்குத்துவாரம் விரிவடையும்.
 • சளியுடன் கூடிய இருமல் - இது இரத்தம் பட்டதாக இருக்கலாம் அல்லது மஞ்சள் நிறக் கோழையுடன் இருக்கலாம்.
 • காய்ச்சல்
 • தோல், நீல நிறமாகக் காணப்படலாம்.

குறிப்பிட்ட சிகிச்சையும் பராமரிப்பும்

 1. பென்சிலின் மாத்திரை அல்லது ஆம்பிஸிலின் ஊசி 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்
 2. திரவமான பானங்கள் நிறைய கொடுக்க வேண்டும்
 3. ஆஸ்பிரின் காய்ச்சலைத் தணிக்க உதவும்.
 4. தலைக்கும் தோள்பட்டைக்கும் தலையணை வைக்க வேண்டும். படுக்கை நிலையை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மாற்ற வேண்டும்.
 5. இருமலை கட்டுபடுத்தவும் மூச்சு குழாய் சளியை மிருதுபடுத்தவும் ஆவி பிடித்தல் உதவி புரிகிறது.

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

 1. சாதாரண சளியை உதாசினப்படுத்த கூடாது
 2. பெரும் கூட்டத்தில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 3. சுத்தமான காற்றை நிறையக் கிடைக்கச்செய்யவும்.
 4. நோயாளி நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்
 5. குழந்தைகளுக்கு உணவு அல்லது பானங்கள் தந்த பிறகு தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஏப்பம் (Bup) வந்த பிறகு படுகையில் படுக்க வைக்க வேண்டும்.
 6. குழந்தைகக்குத் தட்டம்மை, கக்குவான் இருமல் முதலியன வந்தால் மிகவும் கவனமாக மருத்துவம் அளித்து நிமோனியா வராமல் தடுக்க வேண்டும்.
 7. நிமோனியா வந்துவிட்டால் விரைவில் சிகிச்சை தொடங்க வேண்டும்.
 8. நோயாளியின் சளியை கவனமாக நுண்மம் நீக்கம் செய்து போக்குதல் வேண்டும்.

புட்டாளம்மை

உமிழ் நீர் சுரப்பிகளை வைரஸ்கள் தாக்கும் போது புட்டாளம்மை நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக உமிழ் நீர் மூலம் சளித்துளிகள் மற்றும் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் பரவுகிறது.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

நோய் அறிகுறிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவர்களுக்கு 2 அல்லது மூன்று வாரங்களுக்குள் ஆரம்பிக்கிறது.

 1. மிதமான காய்ச்சல்
 2. வாயை திறக்கும் போதும், உணவு உண்ணும் போதும் வலியை உணர்தல்
 3. உணவு விழுங்கும் போதும் வலி ஏற்படுதல்
 4. காதுக்கு கீழ் கடைவாய்ப் புறமாக மிருதுவான வீக்கம் காணப்படுதல்.
 5. கழுத்தின் ஒரு புறமோ அல்லது இரண்டு புறங்களிலோ காணப்படுதல்
 6. சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமலே சுமார் 10 நாட்களுக்குள் நோய் குணமாகலாம்

சிகிச்சையும் பராமரிப்பும்

 1. படுக்கையில் ஓய்வு அளித்தல் வேண்டும்
 2. வலி மற்றும் காய்ச்சலுக்கு ஆஸ்பிரின் மாத்திரை அளித்தல் வேண்டும்
 3. அதிக திரவ உணவுகளை அளித்தல் வேண்டும்
 4. எளிதில் ஜீரணிக்ககூடிய மென்மையான உணவை அளிக்க வேண்டும்
 5. வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பனிக்கட்டி அல்லது ஈர ஒத்தடம் கொடுக்கலாம்

மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் (அதிக காய்ச்சல் மனக்குழப்பம், எரிச்சலுற்ற நிலை, வலிப்பு) தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

தடுப்பு மற்றும் கட்டுப்பாடு முறைகள்

நோயாளியை மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தவும்.

நோயினால் வரும் சிக்கலான ஆபத்தக்கள்

 1. மகப்பேறின்மை
 2. மூளைக்காய்ச்சல்

காசநோய்

இந்நோய் காசநோய் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு நாட்பட்ட நோயாகும். காசநோய் நோயாளி இருமும் போது சிறு சளித்துளிகள் காற்றில் கலக்கிறது. அதை நலமுள்ள மற்றவர்கள் சுவாசிக்க நேரிடுகிறது. ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி உடையவராக இருந்தால், அவருக்கு நுரையீரலில் முதன்மை பாதிப்பு ஏற்பட்டு சிகிட்சை கொடுக்கப்படாவிடினும் சிறிது நாளில் குணமாகி விடுகிறது. ஆனால் குறிப்பாக குழந்தைகள் பலவீனமான ஊட்டச்சத்தின்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உடையோருக்கு இந்நோய் தாக்கும் போது காச நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன.

பொதுவாக காசநோய் நுரையீரல்களைப் பாதிக்கிறது (நுரையீரல் காச நோய்) சில சமயங்களில் இந்நோய் கழுத்திலுள்ள நிணநீர்ச் சுரப்பிகள், குடல்கள், கர்ப்பப்பை, எலும்புகள் மற்றும் மூளையைத் தாக்குகிறது.

காசநோயின் அறிகுறிகள்

 1. எடைகுறைதல்
 2. சளியுடன் கூடிய இருமல்
 3. மாலைநேரக் காய்ச்சல்
 4. இரவு வேளைகளில் வேர்த்தல்
 5. அதிக களைப்பு
 6. நெஞ்சு வலி
 7. மூச்சு விடுவதில் சிரமம் (அ) மூச்சுத் திணறல்
 8. சளியில் இரத்தம் வருதல்.

நோய் கண்டறிதல்

1. ஆஸிட்பாஸ்ட் பாசிலைக்கான சளி பரிசோதனை செய்தல் (Acid fastbacilli)

2. மார்பு எக்ஸ்-ரே படம்

சிகிச்சையும் பராமரிப்பும்

காசநோய்க்கு உபயோகிக்கப்படும் மாத்திரைகளாவன

 1. ஸ்ட்ரெப்ரோமைசின் ஊசிகள்
 2. ஐசோனயாசிட் மாத்திரைகள்
 3. ரிஃபாமைசின் மாத்திரைகள்
 4. தயோசிட்டஸோன் மாத்திரைகள்

காசநோய் கிருமிகளை எளிதாக அழிக்க முடியாது. தொடர்ந்து தகுந்த மருத்துவ சிகிட்சை குறிப்பிட்ட காலத்திற்கு கொடுப்பதன் மூலமே அவைகளை அழிக்க முடியும். காசநோய்க்கெதிரான மருத்துவ சிகிட்சையுடன் கீழ்க்கண்ட செயல்களும் முக்கியமானவைகளாகும்

 1. நோயாளிகள் புரதச்சத்து, வைட்டமின் மற்றும் சக்தி அளிக்கும் சதவிகித உணவு உண்ணுமாறு அறிவுறுத்தபட வேண்டும்.
 2. நோயாளிகள் போதிய ஒய்வு மற்றும் உறக்கம் பெற வேண்டும். கடினமான வேலைகளையும் களைப்படைய வைக்கும் வேலைகளையும் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

 • நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நோய் முன் கூட்டி அறிதலும் உடனடி சிகிட்சையும் அவசியமாகும்
 • குடும்பத்தினர் அனைவருக்கும் காசநோய்த் தொற்று இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும்.
 • குழந்தைகளுக்கு பி.ஸி.ஜி (காசநோய் தடுப்பூசி) போட வேண்டும்
 • நோயுற்றோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தவேண்டும்
 • காசநோயாளிகள் இருமும் போது சிறு துணியினால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். சளியை மூடியுள்ள பாத்திரத்தில் துப்ப வேண்டும்.
 • சளியை எரித்து விட வேண்டும். அல்லது பாதுகாப்பான முறையில் போக்க வேண்டும்.
 • காசநோய் தொற்றும் வழிகளையும் தடுக்கும் வழிகளையும் சமுதாயத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
 • அரசு மருத்துவமனைகளில் காசநோயைக் கண்டறிதலும் சிகிட்சையும் இலவசமாக செய்யப்படுகிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு மக்கள் நலவாழ்வுத்துறை

3.01470588235
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top