பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விழிக்குழி தோல்கட்டி

விழிக்குழி தோல்கட்டி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பிறழ்ச்சி அடைந்த புற அடுக்கு திசுவை மூலமாகக் கொண்ட பிறவி அயல்திசுக் கட்டியே விழிக்குழி தோல்கட்டியாகும். கரு மூடல் கோடு வழியாக ஒரு தோலடிப் பகுதிக்கு கருவளர்ச்சி நிலையில் மேல் தோல் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதை இக்கட்டியில் காணலாம். கரு வளர்ச்சியில் மண்டையோட்டின் இரு பிளவுகள் மூடும் போது மேல்தோல் அல்லது தோல் கூறுகள் நெருக்கித் தள்ளப்பட்டு கட்டிகள் உருவாகின்றன. விழிக்குழி தோல் கட்டிகள் தோலோடு இணைந்தவை அல்ல.

விழிக்குழி தோல் கட்டி கீழ்வருமாறு தோன்றும்:

தோல் கட்டி: நார்ச்சுவர் கொண்ட தோல் கட்டி கெராட்டினாக்கமும் அடுக்கும்பெற்ற செதிள் புறத்தோலைப் பெற்றிருக்கும். தோல் இணையுறுப்புகளான வியர்வை சுரப்பிகள், மயிர்க்கால்கள், சருமமெழுகுச் சுரப்பிகள் போன்றவற்றையும் கொண்டவை. தோல் கட்டிகள் கீழ்வருமாறு இருக்கலாம்:

 • மேற்புறத் தோல்கட்டி: விழிக்குழி இடைச்சுவருக்கு முன் இவை அமைந்திருக்கும். இவை ஆழ்தோல்கட்டியை விடப் பரவலாகவும் பிறந்து முதல் பத்தாண்டுகளில் தெளிவாகவும் தெரியும்.
 • ஆழ் தோல் கட்டி: விழிக்குழி இடைச்சுவருக்குப் பின் காணப்படும். இளம் வயதில் அல்லது வளர்ச்சி அடைந்த நிலையில் குறிப்பாக இவை தோன்றும்.

புறத்தோல் கட்டி: தோல்கட்டி போன்று இவற்றிற்கு மயிர்க்கால், வியர்வைச் சுரப்பி அல்லது தோல்மெழுகுச் சுரப்பிகள் போன்ற அண்ணுறுப்புகள் இருப்பதில்லை.

நோயறிகுறிகள்

விழிக்குழித் தோல்கட்டி கீழ்வருமாறு காணப்படும்:

 • விழிக்குழியில் வலியற்ற மேற்பொட்டுத் திரட்சி
 • விழிக்குழியில் வலியற்ற மேல்மூக்கு திரட்சி
 • மேல் இமை தொங்குதல்
 • விழிக்கோளம் பிதுங்குதல்
 • இரட்டைப்பார்வை

காரணங்கள்

கரு வளர்ச்சிக் காலத்தில் கருப்பிளவுக் கோடுகள் மூடும்போது கரு மேற்தோல் கூடுகள் சிறைப்பட்டு தோல்கட்டிகள் தோன்றுகின்றன.

நோய்கண்டறிதல்

தோன்றும் வரலாற்றையும் மருத்துவ பரிசோதனைகளையும் கொண்டு விழிக்குழி தோல்கட்டி கண்டறியப்படுகிறது.

மேற்புறத் தோல்கட்டி:

மேற்புற தோல்கட்டி பிறப்பில் ஒரு அறிகுறியற்ற, உறுதியான, வட்டமான புண்ணாக மேற்பொட்டு சார்ந்த விழிக்குழியில் முன் சைகோமேட்டிக் பிளவோடு இணைந்தோ அல்லது மேல் மூக்குசார்ந்து முன் கண்ணீர்ப்பை பிளவோடு இணைந்தோ காணப்படும். அது நகருவதாகவோ அல்லது எலும்போடு இணைந்தோ இருக்கும். கசிந்தாலோ கிழிந்தாலோ அது அருகிலுள்ள திசுக்களில் குருணைவடிவ அழற்சியைத் தூண்டும். பெரிய கட்டிகள் இமையிறக்கத்தை உண்டாக்கும்.

ஆழ் தோல் கட்டி:  இளம் அல்லது ஆள் பருவத்தில் பொதுவாக ஆழ் தோல் கட்டிகள் தோன்றுகின்றன. இதனுடன் விழியிடப்பெயர்ச்சியும், அச்சு-சாரா விழிப்பிதுக்கமும் அல்லது பின் விளிம்பு புலனாகாத் திரள்புண்ணும் உருவாகும். ஆழ் தோல் கட்டி தொட்டுணரக் கூடியதாக அல்லது கூடாததாக இருக்கும். சில ஆழ் தோல் கட்டி பொட்டுத்தசைப் பள்ளம் அல்லது மண்டையோட்டுக்குள் விரிவு அடைந்திருக்கும். இந்த தோல்கட்டிகள் எலும்புக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக  இருக்கலாம். ஆழ் தோல் கட்டி அதிகரிக்கும் விழிப்பிதுக்கம் அல்லது இரட்டைப்பார்வையை உண்டாக்கலாம்.

மருத்துவ அறிகுறிகள்:

தோல்கட்டிகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டலாம்:

 • தொட்டுணரக்கூடிய கட்டி
 • அச்சு சாரா விழிப்பிதுக்கம்
 • இமையிறக்கம்
 • விழிக்கோள அசைவுக் குறுக்கம்

இரட்டைப் பார்வைக்கு விழிக்கோள அசைவுக் குறுக்கமோ அல்லது விழிக்கோள நகர்வைக் கட்டுப்படுத்தும் மண்டையோட்டு நரம்புகள் ( III வது, IVவது அல்லது  VI வது) அழுத்தப்படுவதோ காரணங்களாக இருக்கலாம்.

 • அழற்சி
 • விழிக்குழி-தோல் துளை
 • கண்நரம்பு அழுத்தப்படுவதால் பார்வைத்திறன், நிறப்பார்வை, ஒளிப்பார்வைக் குறைவு உண்டாகும். தொடர்பான பாவை நரம்புக் குறைபாடும் ஏற்படலாம்.

பிம்ப ஆய்வுகள்:

கதிரியக்கவியல்:

கட்டியால் அரிக்கப்பட்டதால் எளிதில் கதிரூடுறுவும் எலும்புக் குறைபாட்டை எக்ஸ்-கதிர் காட்டக்கூடும். இக்குறைபாடுகள் பெரிதாகவும் தெளிவான விளிம்புகளோடு திசுத்தடிப்பையும் காட்டலாம்.

CT ஸ்கேன் (கணினி வரைவி வருடி)

சி.டி.ஸ்கேனில் கட்டியின் உட்குழி பொதுவாக ஒருபடித்தானதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் லிப்பிட் மற்றும் கெராட்டினைப் பொறுத்து அது பலபடித்தானதாகவும் இருக்கும். முரணை (contrast) பயன்படுத்தும்போது உட்குழி விரிவாக்கத்தைக் காட்டுவதில்லை.

காந்த அதிர்வு பிம்பம் (MRI)

கட்டியின் தோற்றம், உள்கொழுப்புத் தேய்வு (T1 மிகைச்செறிவில்), உள் சுண்ணமேற்றம், பாய்ம அளவுகள் ஆகியவற்றை எம்.ஆர்.ஐ. காட்டுகிறது. காந்தவிய அடிப்படை முரணில் (gadolinium based contrast) கட்டியின் சுவர் விரிவைக் காட்டுகிறது; ஆனால் உட்குழி காட்டுவதில்லை. எம்.ஆர்.ஐ. பரவல்-நிறை பிம்பத்தில் (diffusion-weighted imaging) விழிக்குழி தோல்கட்டி அதிகச் சைகைச் செறிவோடு (signal intensity) காணப்படுகிறது.

மீயொலி வரைவி (Ultrasonography)

மீயொலி வரைவியில் தோல் கட்டி மென்மையான வடிவ விளிம்பையும் வேறுபடும் எதிரொலிப்புத் திறனையும் காட்டுகிறது.

வண்ண டாப்லர் பிம்பம்: (Colour Doppler imaging)

தோல்கட்டியின் வண்ண டாப்லர் பிம்பம் புண்ணுக்குள் இரத்த ஓட்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

திசுவியல் அம்சங்கள் (Histological features)

தோல்கட்டியின் சுவர் மாறுபட்ட தடிமனைக் கொண்டது; மற்றும் மிகவும் ஒல்லியாகவும் இருக்கலாம். கட்டி விழிக்கோளத்தைச் சுற்றிலும் நார்க்குழல் திசுவால் இணைக்கப்பட்டிருக்கும். மேல் தோல் கட்டிகள் மேல்தோல் செல்களால் மூடப்பட்டிருக்கும். தோல் கட்டிகள் தோல்மெழுகு சுரப்பி மற்றும் மயிர்க்கால்கள் போன்ற அண்ணுறுப்பு திசுக்கள் கொண்டவை. கட்டியில் எண்ணெய்ப் பாய்மங்கள் அல்லது கட்டியான திரள் அடங்கி இருக்கும். இவற்றில் பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். கட்டிகளில் அழற்சி இருக்கலாம்.

கீழ்க்காணும் நிலைகளில் இருந்து தோல்கட்டிகளை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • பிறவி மூளைக்கட்டி
 • சளிக்கட்டி
 • கண்ணீர்ப்பைக்கட்டி
 • கண்ணீர்ச் சுரப்பிக் கட்டியில் இருந்து பக்கத் தோல் கட்டியை வேறுபடுத்திக் காண வேண்டும்.
 • விழிகோளப் பிதுக்கம்
 • அழுத்தும் கண்நரம்புக் கோளாறு
 • விழிக்குழிப் புற்று
 • தோல் நெய்ச்சுரப்பிப் புற்று

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ மேலாண்மை:

விழிக்கோளத் தோல்கட்டிக்குப் பொதுவாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை.

உடைந்த தோல்கட்டி அழற்சியை உண்டாக்கலாம். வாய்வழி ஊக்கமருந்துகளால் அழற்சி கட்டுப்படுத்தப்படும்.

அறுவை சிகிச்சை:

தோல்கட்டிக்கு அறுவை சிகிச்சையே முதன்மையானது,

மேலோட்டமான தோல் கட்டிகள் ஒப்பனைக் காரணங்களுக்காக வெட்டி அகற்றப்படுகின்றன.

ஆழ் தோல் கட்டிகளுக்கு  அருகில் உள்ள திசுக்களுக்குக் கசிவு ஏற்படாமல் தடுக்க முன், பக்க அல்லது இணைந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

சிக்கல்கள்

தோல் கட்டிகள் பின் வரும் சிக்கல்களுக்கு வழிகோலும்:

 • விழிக்கோள இடப்பெயர்ச்சி
 • கட்டி கசிந்தால் அல்லது உடைந்தால் அருகுள்ள திசுக்களில் அழற்சி
 • கண் நரம்பு அல்லது மண்டையோட்டு நரம்பு (III, IV அல்லது VI) கட்டியால் அழுத்தப்பட்டால் நரம்பியல் சிக்கல்கள்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

Filed under:
2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top