பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தோல் / சொறிசிரங்கு (ஸ்கேபிஸ்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சொறிசிரங்கு (ஸ்கேபிஸ்)

சொறிசிரங்கைப் பற்றிய தகவல்களை கேள்வி வினா வடிவில் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சொறிசிரங்கு என்றால் என்ன?

இது ஒருவகை, தோல் வியாதி. ஆங்கிலத்தில், இதை 'ஸ்கேபிஸ்' என்பர். பொதுவாக, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால், சொறிசிரங்கு வரும் என்பர்; அது தவறான கருத்து.

சொறிசிரங்கு வர காரணம் என்ன?

ஒரு வகையான, சொறிப்பூச்சிகளே இதற்கு காரணம். இந்த பூச்சிகள், மனிதர்களிடம் மட்டுமே வாழும், ஒரு வகையான ஒட்டுண்ணி. இப்பூச்சிகளின் தாக்கத்தினால்தான் சொறிசிரங்கு ஏற்படுகிறது. ஆனால், இவற்றை கண்டு பயப்படத் தேவையில்லை. சொறிசிரங்கை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சொறிப்பூச்சிகள், மனித உடலில், எப்படி வாழ்கின்றன?

தோற்றத்தில் மிகச் சிறிய ஒட்டுண்ணியான, சொறிப்பூச்சிகள், 4 மி.மீ., அளவில் தான் இருக்கும். ஆண் பூச்சியை விட, பெண் பூச்சியே, உருவத்தில் பெரியதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆண் பூச்சிகள், இனப்பெருக்கத்திற்கு உதவியதும், இறந்துவிடும். பெண் பூச்சிகள் மட்டுமே, மனித உடலில் துளைகளிட்டு, அவற்றில், முட்டைகள் இட்டு, இனப்பெருக்கம் அடையும்.

சொறிசிரங்கு இருப்பதற்கான அறிகுறிகள்?

மனித உடலில், சொறிப்பூச்சிகள், இனப்பெருக்கம் அடைந்த, ஏழு முதல் பத்து நாட்களுக்குள், தீவிர நமைச்சல் இருக்கும். மாலை நேரத்திலும், இரவிலும் அந்த நமைச்சல் அதிகமாக இருக்கும்.

சொறிசிரங்கு, மனித உடலில் எங்கெங்கு வரும்?

உறுப்புகளின் மடிப்பு தசைகள், மார்பின் அடிப்பகுதி, வயிறு, தொண்டை, ஆண், பெண் பிறப்புறுப்புகள், கால்விரல்களின் இடுக்குகள், அக்குள் போன்ற இடங்கள், சொறிப்பூச்சிகளால் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளுக்கு கழுத்து மற்றும் தசை மடிப்புகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சொறிசிரங்கின் பாதிப்புகள் என்னென்ன?

மனித உடலில் சொறிப்பூச்சிகள் இருந்தால், சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், தோலில் கொப்புளங்கள் உருவாகும்; தீவிர தோல் அழற்சி உண்டாகும்; அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை சொறிந்தால், தோலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு தோலின் நிறம் கருமை அடையும்.

சொறிசிரங்கு மற்றவர்களுக்கு பரவும்?

பரவும் வாய்ப்புகள் அதிகம். சொறிசிரங்கு கிருமித் தொற்று உள்ளவருடன் கைகுலுக்குதல், அவருடன் சேர்ந்து உறங்குதல், கிருமி தொற்றியவரின் ஆடைகளை உடுத்துதல், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளை பயன்படுத்துதல் மூலம், சொறிசிரங்கு பரவும். குழந்தைகளின் தோல், மிகவும் மிருதுவாக இருப்பதால், சொறிப்பூச்சிகள் அவர்களின் உடலில், எளிதாக நுழைந்துவிடும்.

சொறிசிரங்கு வராமல் தடுப்பது எப்படி?

தினமும், சுத்தமான நீரில் உடலைத் தேய்த்து, குளிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய ஆடைகளையோ, உள்ளாடைகளையோ சலவை செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சொறிசிரங்குக்கான அறிகுறி காணப்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும்.

இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள்?

நோய் தொற்றுக்கான அல்லது அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கும் காரணிகளுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும். சொறிசிரங்கை முற்றிலும் குணமாக்க, நல்ல மாத்திரைகள் மற்றும் களிம்புகள் உள்ளன. மருத்துவர் பரித்துரைக்காத களிம்புகளை, நேரடியாக கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சொறிசிரங்கு பாதிக்கப்பட்ட நிலையில், தம்பதியர் தாம்பத்திய உறவு கொள்ளலாமா?

கண்டிப்பாக கூடாது. காரணம், அது தொற்றுநோய். நோய் குணமாகும் வரையில், உறவை தவிர்ப்பது நல்லது.

ஆதாரம் : எஸ்.எம்.அகஸ்டின், சரும நிபுணர்.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top