பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தசையழுகல்

தசையழுகல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கணிசமான அளவுக்கு உடலின் திசுக்கள் அழுகிவிடுவதையே தசையழுகல் நோய் என்று அழைக்கிறோம். இது காயம் அல்லது தொற்று ஏற்பட்ட பின்னரோ அல்லது இரத்த ஓட்டத்தில் ஏற்படும் நீடித்த பிரச்சினைகளாலோ உண்டாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு இரத்தம் குறைவாகச் செல்லுவதால் திசுக்கள் செத்து தசையழுகல் ஏற்படுகிறது. நீரிழிவு போன்ற நோய்களாலும் நீண்ட புகைப்பழக்கத்தாலும் தசையழுகல் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக உடலின் எப்பகுதியிலும் ஏற்படும் என்றாலும் கால்நுனி, பாதம், விரல்கள், கை போன்ற இடங்களில் இது தொடங்கும்.

வகைகள்

உலர் தசையழுகல்

இது இரத்த ஓட்டக் குறைவினால் கைகால்களின் நுனிப்பகுதியில் தொடங்குகிறது. இரத்தத் தமனிகளின் உட்சுவர் கட்டியாவதால் வயதானவர்களின் கால்விரல்களிலும் பாதங்களிலும் பெரும்பாலும் தோன்றுகிறது. இதனால் இதற்கு முதுமைத் தசையழுகல் என்றும் பெயர் உண்டு. தமனிகளில் உண்டாகும் இடையூறுகளினால் பெரும்பாலும் உலர் தசையழுகல் ஏற்படுகிறது. அழுகல் குறைவாக இருப்பதால் பாக்டீரியாக்கள் நிலைத்திருக்க இயலாது. இரத்த ஓட்டம் சீராகித் திசுக்கள் உயிரோட்டம் உள்ளவைகளாக மாறும் வரை உலர் தசையழுகல் மெதுவாகப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட இடம் உலர்ந்தும், சுருங்கியும், அடர் கருஞ்சிவப்பாகப் பதப்படுத்தப்பட்ட மீன் போலத் தோற்றமளிக்கும்.

ஈரத் தசையழுகல்

ஈரத் திசுக்களிலும், வாய், குடல், நுரையீரல், கருப்பைவாய், பிறப்புறுப்பு ஆகிய உறுப்புகளிலும் ஈரத் தசையழுகல் ஏற்படுகிறது. இடுப்புப் பகுதி, தொடை, கணுக்கால் ஆகியவற்றில் உண்டாகும் படுக்கைப் புண்ணும் ஈரத் தசையழுகலாக வகைப்படுத்தப் படுகிறது. குருதி நச்சாதலின் காரணமாக பல பாக்டீரியாக்களால் உண்டாகும் ஈரத் தசையழுகலை முன்கணிப்பது கடினம். ஈரத்தசையழுகலில் கிளாஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஞ்சென்ஸ் (Clostridium perfringens) அல்லது பெசில்லஸ் ஃப்யூசிஃபார்மிஸ் (Bacillus fusiformis) ஆகிய நுண்ணுயிரிகளினால் தொற்று ஏற்பட்டுத் திசுக்கள் வீங்கித் துர்நாற்றம் வீசுகிறது. நரம்பு (முக்கியமாக) மற்றும்/அல்லது தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஈரத் தசையழுகல் வேகமாக உருவாகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்தம் தேங்குவதால் பாக்டீரியாக்கள் விரைவாகப் பெருகுகின்றன.

வாயு தசையழுகல்: இது ஒரு பாக்டீரியாத் தொற்றாகும். இதனால் திசுக்களுக்கிடையில் வாயு உற்பத்தியாகிறது. இதுவே தசையழுகலில் கடுமையானதாகும். பெரும்பாலும் கிளாஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஞ்சென்ஸ் பாக்டீரியாவால் இது உண்டாகிறது. பாக்டீரியாக்களால் உண்டாகும் வாயு விரிவடைந்து அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களையும் ஊடுறுவுவதால் தொற்று வேகமாகப் பரவுகிறது. இதனால் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அறிகுறிகள்

உலர் தசையழுகல்: இதுவே பரவலாகக் காணப்படும் தசையழுகலாகும். இது ஏற்படும் முறை வருமாறு:

முதலில் பாதிக்கப்பட்ட இடம் சிவப்பாகிறது.

பின் குளிர்ந்து, வெளிறி, உணர்ச்சியற்றுப் போகிறது (சிலருக்கு வலியும் இருக்கும்).

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அந்த உடல் பகுதி நிறமாறத் தொடங்கி, சிவப்பில் இருந்து பழுப்பாகவும் கறுப்பாகவும் மாறும். ஆரோக்கியமான திசுவைச் சுற்றி இருக்கும் செத்த திசுக்கள் சுருங்கி விழும்.

ஈரத் தசையழுகல்

உலர் தசையழுகலை விட வேகமாகப் பரவும் இதன் அறிகுறிகளாவன:

 • பாதிக்கப்பட்ட உடல் பகுதி வீங்கி சிவத்தல்
 • அடிக்கடி கடுமையான வலி
 • புண்ணான தோலில் இருந்து துர்நாற்றத்தோடு சலம் வெளிப்படுதல்
 • பாதிக்கப்பட்ட இடம் சிவப்பிலிருந்து பழுப்பாகவும் கறுப்பாகவும் மாறுதல்

வாயு தசையழுகல்

கனமாக உணர்தலும் வலியும்

பாதிக்கப்பட்ட இடத்தின் அருகில் பிதுக்கும்போது மெல்லிய தகரத்தகடு முறிவதுபோல் ஒலி எழும். இது வாயு உற்பத்தி ஆகித் திரள்வதால் உண்டாகிறது.

காரணங்கள்

காயத்தாலோ, நோயாலோ உடலின் ஒரு பகுதி இரத்த ஓட்டத்தைப் பெறாமல் போவதால் தசையழுகல் உண்டாகிறது. இதற்கான பொதுவான காரணங்கள் வருமாறு:

நீரிழிவு

 • கைகால்களில் தமனிச்சுவர்கள் கட்டியாவது போன்ற இரத்தக் குழாய் நோய்கள்.
 • அமுக்கப்பட்ட நோய்த்தடுப்பு மண்டலம் (எச்.ஐ.வி, வேதியற் சிகிச்சை போன்றவற்றால்)

அறுவை மருத்துவம்

கிளாஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஞ்சென்ஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று அல்லது குருதியூட்டக் குறை அல்லது இரத்தக் குழாய் அடைப்பு

நோய் கண்டறிதல்

தசையழுகல் நோயை ஆய்வகச் சோதனைகள் மூலம் கண்டறியலாம். அவையாவன:

இரத்தச் சோதனைகள்

வெள்ளணுக்களின் கூடுதல் அல்லது குறைவு தொற்றைப் புலப்படுத்துகிறது.

திசுச்சோதனை

பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாய்ம (திரவம்) அல்லது திசு மாதிரி, பாக்டீரியாவைக் கண்டறிய சோதிக்கப்படுகிறது. இது கிராம் சாய முறை என்று அழைக்கப்படும். பாக்டீரியாக்களில் சாயம் ஏற்றப்பட்டு நுண்ணோக்கி மூலம் ஆராயப்படுகிறது. இதன் மூலம் பலனளிக்கக்கூடிய நுண்ணுயிர்க்கொல்லியும் தீர்மானிக்கப்படுகிறது.

இரத்தத்திசு ஆய்வு

தொற்றுள்ள இரத்தம் எடுக்கப்பட்டு வெதுவெதுப்பான சூழலில் வைக்கப்பட்டு பாக்டீரியா வளர்க்கப்படுகிறது.

பிம்ப சோதனை

தசையழுகலின் இருப்பையும் பரவலையும் உறுதி செய்ய எக்ஸ்-கதிர், காந்த அதிர்வு பிம்ப வரைவி, கணினி வரைவி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் மூலம் இரத்தக்குழாய் அடைப்பும் கண்டறியப்படுகிறது.

அறுவை மருத்துவம்

வாயு தசையழுகலை உறுதிசெய்ய அறுவை மருத்துவமும் தேவைப்படுகிறது.

நோய் மேலாண்மை

அறிகுறிகளைக் கொண்டு பொதுவாக தசையழுகலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதற்கு அடிப்படையாக இருக்கும் காரணத்தை அறிய வேண்டியது இன்றியமையாதது ஆகும். அது கீழ் வருமாறு:

தொற்று

கடுமையான தொற்றுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செத்ததிசு அகற்றல்

 • தசையழுகலால் ஏற்படும் செத்த திசுக்கள் அறுவை மருத்துவம் மூலம் அகற்றப்படுகிறது.
 • இரத்தநாள அறுவை : குருதிக்குழாய்ச் சீரமைப்பு அல்லது மாற்றுப்பாதை அறுவை மூலம் இரத்த ஓட்டத்தை மீளமைத்தல்.
 • குருதிக்குழாய்ச் சீரமைப்பு —— குறுகிய அல்லது அடைபட்ட தமனியில் ஒரு சிறு பலூனை வைத்து ஊதும்போது இரத்தக்குழாய் திறந்து கொள்கிறது. ஸ்டெண்ட் எனப்படும் ஒரு சிறு உலோகக் குழாயும் தமனியின் உள் செலுத்தப்பட்டு அது மூடாமல் தடுக்கப்படுகிறது.
 • மாற்றுப்பாதை அறுவை மருத்துவம் —— அடைபட்ட இடத்தைச் தாண்டி இரத்தம் செல்லுமாறு வேறு இரத்தக் குழாயை இணைத்து மாற்றுப்பாதை அமைத்தல்.

மிகையழுத்த உயிர்வளி சிகிச்சை

இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதற்கென அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொப்பியுடன் கூடிய கொள்ளறையில் சுத்தமான உயிர்வளி அடைக்கப்படுகிறது. இதில் அழுத்தமான காற்று நிறைக்கப்படுகிறது. இத் தொப்பி சிதைவடைந்த உடல் பகுதியின் மேல் வைக்கப்படும்.

தடுப்புமுறை

தசையழுகல் உருவாகும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு அதைத் தடுக்கப் பல சுய பேணல் உத்திகள் உள்ளன. பரவலான முறைகள் வருமாறு:

 • காலில் உணர்ச்சியின்மை, நிறமாற்றம், தோல் வெடிப்பு, வலி, வீக்கம் ஆகியவை உள்ளனவா என்று தினமும் சோதனை செய்ய வேண்டும். வெளியே வெறுங்காலுடனோ காலுறை இன்றி காலணி அணிந்தோ செல்லக் கூடாது.
 • தினமும் காலைக் கழுவ வேண்டும்
 • சுடுநீர்க் குடுவை, மின்கம்பளம், பாதக்குளியல், நெருப்புக்கு மிக அருகில் அமர்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை பாதத்தைத் தீய்க்கக் கூடும். தீப்பட்ட திசுவால் தசையழுகல் ஏற்படும் அபாயம் உண்டு.
 • செருப்பு, கவிழ்க்க அல்லது வழுகக் கூடிய கூர்மையான நுனி கொண்ட காலணிகள், ஓர் அங்குலத்துக்கு மேற்பட்ட குதிகால் உயரம் கொண்ட காலணிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். வளைந்த அல்லது சதுரமான நுனியும், கட்டும் நூலும் இணைப்புகளும் கொண்ட காலணிகளே பாதத்துக்குப் பாதுகாப்பு. முறையாக அடிக்கடி புது காலணிகளை மாற்றிக் கொள்ள வேண்டும்

ஆதாரம் : தேசிய சுதாதார இணையதளம்

2.98529411765
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top