অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இயக்க நரம்பு நோய்

இயக்க நரம்பு நோய்

அறிமுகம்

நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான் உடலங்கங்களுக்கு கடத்தும் கடத்திகள் போன்றவை ஆகும்.

இயக்க நரம்புகள் – இவை மூளை, முண்ணானிலிருந்து கணத்தாக்கங்களை தசைகளுக்கு கடத்தி அவற்றை சுருக்கமடையச் செய்யும் நரம்புகள் ஆகும்.

புலன் நரம்புகள் – இவை தொடுகை, வெப்பம், ஒலி, மணநுகர்ச்சி, சுவை போன்றவற்றை உடலிலிருந்து மூளைக்கு கடத்தும் நரம்புகள் ஆகும்.

இயக்கநரம்பு நோய்

இங்கு இயக்க நரம்புகள் பாதிக்கப்பட்டு படிப்படியாக செயலிழக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவ் இயக்க நரம்புகளுக்குரிய தசைகள் படிப்படியாக பலமிழக்கின்றன. இவற்றில் பல உபபிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைகளில் ஆரம்பிக்கின்றன. நோய் தீவிரமடைந்து வரும் போது பொதுவான நோய்க்குணங்குறிகள் காணப்படும்.

பிரதான வகைகள்

(Amyotrophic lateral sclerosis) இதுவே முக்கிய/ பொதுவான வகை ஆகும். 10 இல் 7 பேரில் காணப்படும். நோய்க்குணங்குறிகள் கைகளிலும் பாதங்களிலும் ஆரம்பிக்கின்றன. தசைகள் இறுக்கமடைவதுடன் பலமிழந்து காணப்படும்.

(Progressive bulbar palsy) 10 இல் 2 பேரில் காணப்படும் இயக்கநரம்பு நோய். பேச்சு, வாயசைவுகள், விழுங்குதல் போன்றவற்றுக்குரிய தசைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

(Progressive muscular atrophy) அரிதான வகை ஆகும். கைகளிலும் பாதங்களிலும் காணப்படும் சிறு தசைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

(Primary lateral sclerosis) மிக அரிதான வகை ஆகும். பிரதானமாக காற்தசைகளைப் பாதிக்கும். சிலரில் கைகள், பேச்சு போன்றவற்றையும் பாதிக்கும்.

இயக்கநரம்பு நோய் ஒரு அரிதான வகை நோயாகும். இது எவரிலும் உருவாகலாம். ஆயின் இது 40வயதிலும் குறைவானவர்களில் அரிதாகும். பொதுவாக 50 – 80 வயதுகளுக்கிடையில் உருவாகும். இது ஆண்களில் பெண்களை விடப் பொதுவானது. 10 இல் 9 பேரில் காணப்படும். இயக்க நரம்புநோய் பாரம்பரியமாக உருவாகப்படாததனால் அடுத்த சந்ததிக்கு பொதுவாக கடத்தப்படுவதில்லை. ஆயின் 10 இல் ஒருவரில் இது பாரம்பரிய நோயாக காணப்பட்டு அடுத்த சந்ததிக்கு கடத்தப்படக்கூடியது.

காரணங்களும், அறிகுறிகளும்

அதற்குரிய காரணிகள் அறியப்படவில்லை. சில இயக்கநரம்புகளில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள்/ கட்டமைப்புக்கள் பாதிக்கப்படுகின்றமையால் நோய் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. இவ்நரம்புகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் தெளிவற்றுள்ளது. அத்துடன் புலன்நரம்புகள் பாதிக்கப்படாமைக்கான காரணமும் தெளிவற்றுள்ளது. இந்நோய் உருவாகக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளவர்களில் சில சூழற்காரணிகள் இயக்கநரம்பு நோய் உருவாவதை தூண்டுகிறது. இதற்குரிய காரணிகளை மேலும் அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆரம்ப அறிகுறிகள்

இயக்கநரம்பு நோயின் பிரதான அறிகுறி படிப்படியாக மோசமடையும் தசை பலமிழத்தலாகும். ஆரம்ப அறிகுறிகள் கைகள் மற்றும் புயங்களில் அல்லது பாதம் மற்றும் கால்களில் ஆரம்பமாகும். அரிதாக முகம் மற்றும் கழுத்துத் தசைகளில் ஆரம்பமாகும்.

கை மற்றும் புயங்களில் உருவாகும் குணங்குறிகள்

ஆரம்பத்தில் கையினால் பொருட்களைப் பற்றுவது தளர்வடையும். பொருட்கள் நழுவி விழும், போத்தல் மூடிகளைத் திறத்தல், சாவிகளைத் திறத்தல் போன்றவை கடினமாகும்.

பாதம் மற்றும் கால் நோய்க்குணங்குறிகள்

ஆரம்பத்தில் கால் ஒன்றைத் தூக்கி நகர்த்துவது கடினமடையும் அல்லது நடக்கும் போது தடை உணரப்படும். படிகளில் ஏறுதல், நடத்தல் போன்றவற்றின் போது சீக்கிரமாகவே இளைப்படைவார்கள்.

முகம் மற்றும் கழுத்துத்தசை நோய்க்குணங்குறிகள்

உரத்த ஒலி எழுப்புதல்/ பாடுதல் போன்றவை கடினமடையும். பேச்சு உச்சரிப்பு தெளிவற்றதாக ஆரம்பிக்கும். குரலின் தன்மை மாற்றமடையலாம்.

ஏனைய குணங்குறிகள் – தசைப்பிடி/ சுளுக்கு, களைப்பு, பலமிழந்த தசைகளில் ஒழுங்கான விட்டுவிட்டு ஏற்படும் துடிப்புகள், ஓய்வுநிலையில் இருக்கும் போது கை/ காலில் திடீர் உதறல்கள்

ஏனைய குணங்குறிகளும்

ஆரம்பத்தில் பொதுவாக ஒரு கை/ கால் மாத்திரம் பாதிக்கப்படும். பின்னர் படிப்படியாக மோசமடைந்து ஏனைய அங்கங்களுக்கு பரவ ஆரம்பிக்கும். படிப்படியாக உடலின் பல தசைகள் பாதிக்கப்படும். சில தசைக்கூட்டங்கள் ஏனையவற்றை விட கூடுதலாக பாதிப்படையக்கூடும். தசைகள் படிப்படியாக பலமிழந்து மெலிவடைய தொடங்குகின்றன. இதன் காரணமாக

நோயாளியின் நகர்வு(நடை) முக்கியமாக பாதிக்கப்படும்.

கை மற்றும் புயங்களில் மேற்கொள்ளும் தொழிற்பாடுகள் கடினமடையும்.

நாக்கு, முகம் மற்றும் கழுத்து தசைகள் பாதிக்கப்படுவதால் உணவு உட்கொள்ளல், உணவை மெல்லுதல், உணவை விழுங்குதல் கடினமாகும்.

தும்முதல், இருமுதல் பலமிழக்கும்.

மார்புத்தசைகள் பாதிக்கப்படுவதால் சிறு உடற்பயிற்சிகளின் பின்னர் மூச்செடுத்தல் சிரமங்கள் உண்டாகும்.

வெவ்வேறு நோயாளிகளில் நோயின் போக்கு வேறுபடும். இயக்கநரம்பு நோயின் காரணமான தசை பலமிழப்பு குணமடைய மாட்டாது. ஆயின் வாரக்கணக்கில்/ மாதக்கணக்கில் நோய் மோசமடையாது ஒரே நிலையில் காணப்படக்கூடும். இறுதியில் தீவிரமான பலவீனம்/ குறைபாடு உருவாகும். மிகத் தீவிரமடைந்த நிலையில் நோயாளி நடத்தல், பேசுதல், உணவு உட்கொள்ளல், மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாது இருப்பதுடன் அவற்றுக்குரிய கவனிப்பும் அவசியம்.

பொதுவாக 10 இல் 7 நோயாளிகள் நோய்க்குணங்குறிகள் தோன்றி 3-5 வருடங்களில் இறப்பை சந்திக்கின்றன. 10 இல் இருவர் 5 வருடங்கள் வரை உயிர்வாழ்வார்கள். 10 இல் ஒருவர் 10 ற்கு மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்வார். இறப்புக்கான காரணம் சுவாசித்தல் சிக்கல்களால் ஆகும். பழுவிடைத்தசைகள் மற்றும் பிரிமென்தட்டு பலமிழக்கும் போது சுவாசப்பை கிருமித்தொற்றுக்குட்படுதலும்/ அழற்சியும் ஏற்படும்(நியூமோனியா).

நோயினால் பாதிக்கப்படாதவை

அறிவு/ புத்தி போன்றவை பாதிக்கப்படாது. காரணம் மூளையில் சிந்தனைக்குரிய பகுதி பாதிக்கப்படுவதில்லை என்பதாலாகும்.

அரிதானவகை இயக்கநரம்பு நோய் ஒன்றில் விரைவான ஞாபகசக்தி இழப்பு நோய் உருவாகும்.

புலன்நரம்புத் தொகுதி பாதிக்கப்படுவதில்லை. இதனால் சரும உணர்ச்சிகள், பார்வை, மணநுகர்ச்சி, சுவை, கேட்டல் போன்றவை உணரக்கூடியதாக இருக்கும்.

சிறுநீர்ப்பைத் தொழிற்பாடு/ குடற்தொழிற்பாடுகள் பாதிக்கப்படாது. எனவே தன் உணர்ச்சியற்ற சிறுநீர்/ மல வெளியேற்றம் காணப்படாது.

மன உணர்ச்சிகள், இலிங்க தொழிற்பாடுகள் பாதிக்கப்படாது. ஆயின் சிலரில் திடீர் அழுகை/ சிரிப்பு போன்றன அசாதாரணமான சந்தர்ப்பங்களில் உருவாகலாம். (இது மன நோய்க்குரிய அறிகுறி அல்ல ஆயின் இது இயக்கநரம்பு நோயிற்குரிய அறிகுறியாகும். இது மனச்சங்கடமானதாக இருப்பினும் இதற்கு உதவும் முறைகள் இல்லை)

சிலரில் நோயின் தாக்கத்தினால் மன அழுத்தம் மனப்பதற்றம் போன்றவையும் உருவாகலாம்.

ஆதாரம்: ஆரோக்கியதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/27/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate