பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / நீரிழிவு நோய் / சிகிச்சை / நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிய உதவும் பரிசோதனை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிய உதவும் பரிசோதனை

நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிய உதவும் பரிசோதனை பட்டிய குறிப்புகள்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்த சர்க்கரையைச் சரியான அளவில் அதாவது நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஹெச்பி.ஏ1.சி. (HbA1C ) என்று ஒரு பரிசோதனை உதவுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் ரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்திருக்கிறது என்று இதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஏன் செய்யப்படுகிறது ?

பொதுவாக, ஒருவர் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக்கும்போது முந்தைய நாளும், பரிசோதிக்கிற நாளிலும் அவர் என்ன உணவு, மருந்து சாப்பிட்டாரோ அதைப் பொறுத்துத்தான் ரத்தச் சர்க்கரை அளவு இருக்கும். சில பேர் ரத்தப் பரிசோதனை செய்யும் நாளில் மட்டும் அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாக மட்டும் சரியான உணவு முறையைக் கடைப்பிடித்துவிட்டு, பரிசோதனை செய்துகொள்வார்கள். இது தவறு. முதல் நாளில் மட்டும் உணவைச் சரியாகச் சாப்பிட்டுக்கொண்டு ரத்தப் பரிசோதனை செய்யப்படும்போது, அன்றைக்கு வேண்டுமானால் அவர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் சரியாக இருக்கலாம்.

மற்ற நாட்களில் அவர்களுடைய உணவுமுறை மாறும். அப்போது சர்க்கரை அளவு அதிகமாகும். ஆனால், வெளியில் தெரியாது. இந்த நிலைமை நீடித்தால்,அவர்களுடைய உடல் உறுப்புகளை நீரிழிவு பாதித்து நோயைத் தீவிரப்படுத்தும். ஆகவே, எப்போதும் அவர்களுடைய ரத்தச் சர்க்கரை சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இதைத் தெரிந்துகொள்ளவே இந்தப் பரிசோதனை.

மூன்று மாதச் சர்க்கரையின் சராசரி அளவைச் சரியாகக் காண்பிப்பது எப்படி?

நம்முடைய ரத்தச் சிவப்பு அணுக்களில் ‘ஹீமோகுளோபின்' (Haemoglobin) என்னும் இரும்புப் புரதம் இருக்கிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்போதெல்லாம் சிறிதளவு குளுக்கோஸை தன்னிடம் கிரகித்துக்கொள்கிறது. ஒருமுறை கிரகித்துக்கொண்ட குளுக்கோஸை அந்தச் சிவப்பணுவின் வாழ்நாள் முடியும்வரை தக்க வைத்துக்கொள்கிறது. ஒரு சிவப்பணுவின் ஆயுள் 120 நாள்கள். ஆக, சிவப்பணுவில் ரத்தச் சர்க்கரை 4 மாதங்கள்வரை இருக்கும். இந்தச் சிவப்பணுக்களில் படிந்துள்ள சர்க்கரையை அளந்தால், நோயாளியின் ரத்தச் சர்க்கரை கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக எவ்வளவு இருந்திருக்கிறது என்பது தெரியும்.

நீரிழிவுக்குச் சிகிச்சை பெறுபவர்களுக்கு

# ஹெச்பி.ஏ1.சி. அளவு 5.6 % க்குக் கீழ் இருந்தால், நீரிழிவு இல்லை.

# இதுவே 5.7 % முதல் 6.5 % வரை இருந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம்.

# 6.6 % க்கும் அதிகம் என்றால் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.

# இதுவரை நீரிழிவு இல்லாதவர்கள் முதல்முறையாக இந்தப் பரிசோதனையைச் செய்யும்போது,

# ஹெச்பி.ஏ1.சி. அளவு 5.6 % க்குக் கீழ் இருந்தால், நீரிழிவு இல்லை.

இதுவே 5.7 % முதல் 6.4 % வரை இருந்தால், நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.

# 6.5 % க்கும் அதிகம் என்றால் நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம்.

# நீரிழிவு உள்ளவர்கள் ஹெச்பி.ஏ1.சி பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும்.

ஃபிரக்டோசமின் அசே பரிசோதனை (Fructosamine Assay Test)

நீரிழிவு நோயாளியின் ரத்தச் சர்க்கரை அளவு கடந்த இரண்டு வாரங்களில் எப்படி இருந்தது என்பதைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. ஃபிரக்டோசமின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால், ரத்தச் சர்க்கரையும் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். இந்தப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் நீரிழிவு இருக்கிற பெண்களுக்கு இது மிகவும் பயன்படும். ‘சிக்கில் செல்’ ரத்தசோகை, ரத்த அழிவு ரத்தசோகை போன்ற ஹீமோகுளோபின் சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

சி-பெப்டைடு பரிசோதனை (C-Peptide Test)

ஒருவருக்கு இன்சுலின் எவ்வளவு சுரக்கிறது என்பதை அறிய உதவும் பரிசோதனை இது. இதன் சரியான அளவு 0.4 3.8 ng/ml. இதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பு இல்லை என்று சொல்லலாம். பொதுவாகக் குழந்தைகளுக்கு டை 1 நீரிழிவு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, இந்தப் பரிசோதனை பயன்படுகிறது. மேலும், ‘ஐலெட் செல் ஆட்டோ ஆண்டிபாடி' பரிசோதனை (Islet Cel# Auto antibody Test சுருக்கமாக, ICA Test) மூலமும் ‘GAD' பரிசோதனை (Glutamic Acid Decarboxylase Test சுருக்கமாக, GAD Test) மூலமும் குழந்தைக்கு வந்துள்ளது டை 1 நீரிழிவுதான் என்பதை உறுதி செய்யலாம். இன்சுலின் சிகிச்சையைத் தொடங்குவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆதாரம் : டாக்டர் கு. கணேசன்

3.01587301587
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top