অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள்

ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள்

ரத்த சர்க்கரை

வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.

இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

காரணம்

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.

ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

எது தாழ்சர்க்கரை

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

எப்படி வருகிறது

சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.

ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகள்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

  • உடல் அதிகமாக வியர்ப்பது.
  • உடல் குளிர்ச்சியாக இருப்பது.
  • உடல் தளர்ச்சி.
  • படபடப்பு.
  • உடல் நடுக்கம்.
  • அதிகப் பசி.
  • தலைவலி.
  • தலைசுற்றல்.
  • பார்வை குறைவது.
  • இதயத் துடிப்பு அதிகரிப்பது.
  • அடுத்த கட்ட அறிகுறிகள்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.

  • பேச்சு குழறுதல்.
  • மனக் குழப்பம்.
  • அரை மயக்கம் (Semiconsciousness).

இறுதி கட்ட அறிகுறிகள்

  • வலிப்பு வருவது.
  • முழு மயக்கம் (Unconsciousness).
  • 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

முழு மயக்கம் ஏற்பட்டால்?

  • முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
  • டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!

வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.

தடுப்பது எப்படி?

  1. நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
  2. இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
  3. டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
  4. இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
  5. இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
  6. அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?

  • தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
  • இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
  • தாமதமாகச் சாப்பிடுவது.
  • விரதம் இருப்பது.
  • நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
  • அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
  • கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
  • வெறும் வயிற்றில் மது அருந்துவது.

யாருக்கு வருகிறது?

கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

  • இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
  • டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
  • சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
  • முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
  • மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
  • கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

செய்ய வேண்டியது

கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  • குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
  • தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
  • வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
  • குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
  • படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

என்ன முதலுதவி?

தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:

  • குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
  • குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
  • மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
  • கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
  • இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
  • முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.

ஆதாரம் : டாக்டர் கு. கணேசன்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate