பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆஸ்துமா வருவது ஏன்?

ஆஸ்துமா வருவதன் காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கவிடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை.

பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்!

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது.

ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவு வகைகள்:

பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.

வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

புகை – பெரிய பகை!

ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்து மாவைத் தூண்டுகிற காரணி.

மூச்சுப்பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.

சிகிச்சை

‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன்பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத் திணறல் உடனடியாக கட்டுப்படும்.

ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் எதற்கு ஒவ்வாமை என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேள்வி பதில்கள்

கேள்வி:ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் சாதனையாளர்களாக இருக்கிறார்களே இதற்கு காரணமென்ன?

பதில்: ஆம்! உண்மைதான். ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அடிப்படையில் உயிர்வாழத்தேவையான சுவாசத்துக்கே அவர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது. இது மண் அளவில் அவர்களுக்கான உறுதியை தருகிறது என்று கருதுகிறேன். இதைப்பற்றிய ஆராய்ச்சி நடந்திருக்கிதா  என்று உறுதியாக தெரியவில்லை. நீங்கள்  கேட்டதில்  நிச்சயம்  உண்மை இருக்கிறது.

கேள்வி:ஆஸ்துமா என்பது குறைபாடா அல்லது நோயா?

பதில்: ஆஸ்துமா என்பது குறைபாடுதான்  நோயல்ல.

கேள்வி: ஆஸ்துமா என்றால் என்ன? அது ஏன், எப்படி வருகிறது? இது எப்போது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?

பதில்: மூச்சுகுழாயில் சுருக்கம் அல்லது வீக்கம் ஏற்பட்டு அதனால் சீரான சுவாசம் தடைபடுவது ஆஸ்துமா நோய் எனப்படுகிறது. பல்வேறு புறக்காரணிகளான  காற்று,மாசு, வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றாலும், அகக்காரணிகளான ஒவ்வாமை பரம்பரை ஜீன்கள் ஆகியவற்றாலும் இந்நோய் ஏற்படுகிறது. இது சுமார்  2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மக்களால் கண்டறியப்பட்டு ஆஸ்துமா என்று பெயரிடப்பட்டது.. மேற்கத்திய நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. நமது நாட்டில் ஆஸ்துமாவிற்கான சூழல் அரிதானதாக இருந்தது. ஆனால் கடந்த 80 ஆண்டுகளில் நிலை மாறிவிட்டது

கேள்வி: இந்தியாவில்  எத்தனை  ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர்? சூழல் எப்படி அமைந்தது?

பதில்: உலக அளவில் 300 மில்லியன் அஸ்த்துமா நோயாளிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 30 மில்லியன் இருக்கிறார்கள்.. இந்த நோய் இந்தியர்களை அதிகம் தாக்க தற்காலத்தில் நாம் மேற்கத்தியர்களைப்  போன்று நவீனமயமானதும் ஒரு காரணம். அத்துடன் மிக முக்கியமாக அதிகரிக்கும் காற்று மாசு மிக முக்கிய காரணம்.இந்தியாவில் ஆஸ்துமா  80 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது. அதிக அளவிலான ஆஸ்துமா நோயாளிகள் வட இந்தியர்களாக இருக்கிறார்கள். அதிலும் டெல்லியில் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ஆதாரம் : டாக்டர் கு. கணேசன்

2.98863636364
அய்யாத்துரை Dec 12, 2017 07:18 AM

சார் எனக்கு சுவாச கோளாறு உள்ளது அது நீங்க என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்.இந்த சுவாச கோளாறு எதனால்
வருகிறது.

Meganathan May 03, 2017 03:18 PM

எனக்கு நெடுங்கால சுவாச அடைப்பு நோய் உள்ளது.மிகவும் நெஞ்சு இறுக்கமாக உள்ளது.முதலில் நெஞ்சு இறுக்கத்தை சரி செய்ய ஆங்கில மருத்துவத்துவதில் என்ன செய்ய வேண்டும்.எல்லாம் உறுஞ்சு கேப்ஸுல்களையும் பயன்படுத்திவிட்டேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top