অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்

இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்

இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதின் அவசியம் என்ன?

இருமல், சளி, தொண்டைப்புண் (தொண்டை கட்டுதல்) மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை சிறுபிள்ளைகளின் வாழ்க்கையில் பொதுவாக நிகழக்கூடியவை. இவை குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆயினும், சில வேலைகளில், இருமல் மற்றும் சளி என்பது நிமோனியா (சளிக்காய்ச்சல்) அல்லது டியூபர்குளோஸிஸ் (டி.பி. / எலும்புருக்கி நோய்) போன்ற மிகவும் மோசமான சுகவீனங்களுக்கான அபாயகரமான அடையாளங்களாகும்.

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

  1. ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.
  2. சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.
  3. பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்.
  4. ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கி நோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.
  5. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன.

இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு - 1

ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் மற்றும் மிகவும் சிறுபிள்ளைகள் தங்கள் உடல் வெப்பத்தினை சுலபமாக இழக்கின்றனர். அவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருக்கும்போது, அவர்களை அவசியம் துணிகளால் மூடி, கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இருமல், சளி, மூக்குவடிதல் அல்லது தொண்டைப்புண் ஆகியவை இருந்தாலும், சாதாரணமாக சுவாசிக்கின்ற குழந்தைகளை, வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். அவர்கள் மருந்துகள் இன்றியே குணமடைவர். அவர்களை மிதமான வெப்ப சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமான சூழலை தடுக்க வேண்டும். மேலும், அதிக அளவு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். சுகாதார பணியாளர் பரிந்துரைத்தால் மாத்திரமே, மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

காய்ச்சலுடன் இருக்கும் ஒரு குழந்தைக்கு, அவசியம் ஓரளவு குளிர்ந்த நீரை பஞ்சினால் தொட்டு, உடலைத் துடைக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. மலேரியா காய்ச்சல் பொதுவாக உள்ள பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுதல் ஆபத்தானதாக இருக்கலாம். குழந்தையினை உடனடியாக சுகாதார பணியாளரைக் கொண்டு பரிசோதித்தல் வேண்டும்.

இருமல் மற்றும் சளி உள்ள குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது உறங்கச் செல்வதற்கு இவ்வாரு செய்தல் வேண்டும். சுத்தம் செய்யும் போது மூக்கை சுற்றி காணப்படும் ஈரமான தட்ப சூழல், குழந்தை சுவாசிப்பதை சுலபமாக்குகிறது, அகண்ட கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள சுடுதண்ணீரிலிருந்து வெளிவரும் நீராவியினை சுவாசிக்கும் போது, குழந்தை சுவாசத்தினை எளிதாக்க உதவுகிறது. ஆனால், கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.

தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால் உணவு உட்கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் தாய்ப்பாலானது சுகவீனங்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். எனவே தாயானவள் குழந்தைக்கு தொடர்ந்து அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையானது தாய்ப்பாலை தாயின் மார்பிலிருந்து குடிக்க இயலாத பட்சத்தில், தாய்ப்பாலை ஒரு சுத்தமான கிண்ணத்தில் கறந்து, பின்னர் அந்த கிண்ணத்தில் உள்ள தாய்ப்பாலை குழந்தைக்கு அருந்த கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளை அவசியம் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் குடிக்க உற்சாகப்படுத்த வேண்டும். சுகவீனம் நீங்கிய பின், குழந்தைக்கு அவசியம் குறைந்தது ஒரு வாரகாலம், ஒவ்வொரு நாளும் அதிக உணவு கொடுக்கப்பட வேண்டும். குழந்தை நோய்வாய் படுவதற்கு முன் உள்ள உடல் எடை வரும் வரை, குழந்தை முழுமையாக சுகம் பெறவில்லை எனக் கருதலாம்.

இருமல் மற்றும் சளி சுலபமாக பரவும். இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் சிறுபிள்ளைகளுக்கு அருகில் இருமுவது, தும்முவது மற்றும் துப்புவது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

தகவல் குறிப்பு - 2

சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை

பெரும்பாலான வேலைகளில், இருமல், சளி, தொண்டைப்புண் மற்றும் மூக்கு வடிதல் போன்றவை எவ்வித மருந்துகளும் இன்றி குணமாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மேற்கூறிய சுகவீனங்கள் நிமோனியாவின் அடையாளங்களாகளாம். இவற்றை குணப்படுத்த, ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்உயிர் மருந்துகள் தேவைப்படுகிறது.

ஒரு சுகாதாரப்பணியாளர், நிமோனியா சிகிச்சைக்காக ஆன்டிபயாடிக் மருந்தினை கொடுத்தால், அவர் பின்பற்றக் கூறிய குறிப்புகளை கைக்கொள்வது அவசியம். எவ்வளவு காலம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என சுகாதாரப்பணியாளர் கூறியுள்ளாரோ, அவ்வளவு காலம் வரை அவசியம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தை குணமடைவது போல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து குழந்தைக்கு மருந்தினை கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை பராமரிப்பவர்கள், நிமோனியாவின் ஆபத்தான தன்மையையும் மற்றும் அக்குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவை என்பதனை உணராததினால் பல குழந்தைகள் வீடுகளிலேயே இறக்கின்றன. பல லட்சம் குழந்தைகள் நிமோனியாவினால் இறப்பதை கீழ்க்காண்பவைகளை அறிந்திருந்தால் தடுத்து நிறுத்தலாம்

• பெற்றோர் மற்றும் குழந்தையை பராமரிப்பவர்கள், வேகமாக மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காணப்படுதல் ஆபத்தான அடையாளங்கள் என உணர்ந்து, அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை அறிந்திருத்தல்

• பெற்றோர் மற்றும் பராமரிப்பவர்கள், எங்கிருந்து மருத்துவ உதவி பெறலாம் என்பதை அறிந்திருத்தல்.

• மருத்துவ உதவி மற்றும் குறைந்த செலவில் ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எங்கு உடனே கிடைக்கிறது என அறிந்திருத்தல்.

கீழ்க்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கோ அல்லது நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடமோ அழைத்துச் செல்ல வேண்டும்.

• குழந்தை எப்போதையும் விட மிக வேகமாக சுவாசித்தால் - உ-ம் 2 முதல் 12 மாத குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல். 12 மாதங்கள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிமிடத்திற்கு 40 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல்

• குழந்தை சுவாசிக்கும் போது கஷ்டத்துடன் சுவாசித்தால் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுதல்.

• குழந்தை மூச்சு உள்ளிழுக்கும் போது, மார்பின் கீழ்ப்பகுதி உள்ளிழுத்தல் அல்லது வயிறு மேலும் கீழும் நகருவது போல் காணப்படுதல்

• குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருத்தல்

• குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது தண்ணீர் குடிக்க இயலாதிருத்தல்

• குழந்தை அடிக்கடி வாந்தி எடுத்தல்.

தகவல் குறிப்பு - 3

பிறந்த முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்

தாய்ப்பால் கொடுப்பது நிமோனியா மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.

எந்த வயதிலும், நன்கு போஷிக்கப்பட்ட குழந்தை நோய்வாய்ப்படலாம் அல்லது இறக்கலாம்.

வைட்டமின்-ஏ மோசமான சுவாச சம்மந்தமான நோய்கள் மற்றும் பிற உடல்நலக்கேடுகளை எதிர்த்து, தடுத்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், வெகுவிரைவாக குணமடையச் செய்கிறது. தாய்ப்பால், ஈரல், சிவப்பு பாமாயில், மீன், பால் பொருட்கள், முட்டை, சில ஆரஞ்சு, மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சிலை காய்கறிகளில் வைட்டமின்-ஏ உள்ளது. கூடுதல் வைட்டமின்-ஏ பெற தேவையான மருந்துகள், சுகாதாரப் பணியாளர்களால் வழங்கப்படுகிறது

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி அவசியம் போடப்பட வேண்டும். அப்படி தடுப்புசி போடுவதால், குழந்தைக்கு தட்டம்மை வராமல் பாதுகாக்கப்படுகிறது. தட்டம்மையானது நிமோனியா மற்றும் பிற சுவாச உறுப்பு சம்பந்தமான நோய்களான, கக்குவான் இருமல் மற்றும் டியூபர்குளோஸிஸ் போன்றவை தோன்ற வழிவகுக்கிறது.

தகவல் குறிப்பு - 4

ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கிநோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.

டியூபர்குளோஸிஸ் என்பது ஒரு மோசமான நோய். இது குழந்தையை கொன்றுவிடும், அல்லது, நுரையீரலில் நிரந்தர சிதைவினை ஏற்படுத்தும். குடும்பங்கள் கீழ்க்காண்பவைகளை உறுதி செய்தால், குழந்தைகளுக்கு டியூபர்குளோஸிஸ் ஏற்படுவதை தடுக்கலாம்.

• முழுமையான தடுப்பூசி போடுதல் - சில வகை டியூபர்குளோஸிஸிலிருந்து, பிசிஜி தடுப்பூசி ஓரளவு பாதுகாப்பு தருகிறது.

• குழந்தைகளை டியூபர்குளோஸிஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து தள்ளி வைத்தல். மேலும், இரத்தத்துடன் வெளியேறும் சளியுடன் இருமல் உள்ள நபர்களிலிருந்தும் தள்ளி வைத்தல்.

சுகாதாரப் பணியாளர் டியூபர்குளோஸிஸ் நோய்க்கான சிறப்பு மருந்துகளைக் கொடுத்தால், அச்சுகாதாரப் பணியாளரின் சொற்படி, குழந்தை நன்றாக காணப்பட்டாலும், அவர் எத்தனை நாட்கள் வரை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாரோ அத்தனை நாட்களுக்கும், குழந்தைக்கு தவறாமல் மருந்தினை முழுவதும் கொடுக்க வேண்டும்.

தகவல் குறிப்பு - 5

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன.

குழந்தைகள் புகை நிறைந்த சூழலில் வாழும்போது, அவர்களுக்கு நிமோனியா மற்றும் பிற சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறது.

தாயின் வயிற்றிலுள்ள குழந்தைகள் கூட புகையினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கர்ப்பிணிப் பெண்ணானவள் அவசியம் புகைபிடிக்கக்கூடாது மற்றும் புகைக்கு உட்படுத்தப்படக்கூடாது.

புகையிலை புகைக்கும் பழக்கம் பொதுவாக விடலைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள பிற விடலைப் பருவத்தினர் புகைபிடிப்பதாலோ, புகையிலை விளம்பரம் மற்றும் வியாபாரம் அதிகமாக இருந்தாலோ அல்லது புகையிலை பொருட்கள் மலிவாகவும் சுலபமாக கிடைக்கும் சூழலில், விடலைப் பருவத்தினர் புகையிலை புகைக்கும் பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர். விடலைப் பருவத்தினரிடையே அவசியம் புகைபிடிப்பதை தவிர்க்கும்படி வலியுறுத்த வேண்டும். மேலும், புகைபிடிப்பதினால் ஏற்படும் ஆபத்தினை, தங்களின் நண்பர்களுக்கு கூறி, எச்சரிக்கவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

ஆதாரம் : UNICEF

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate