অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் (COPD)

நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் (COPD)

அறிமுகம்

நுரையீரல் காற்றுச் சுற்றோட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் பல நீடித்த நுரையீரல் நோய்களை உள்ளடக்கிய ஒரு பொதுவான பெயரே நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் என்பதாகும். சிறுசிறு காற்றுப்பாதை நோய்களும் செயல்திசு அழிவும் இணைந்தே நீடித்த காற்றுச் சுற்றோட்டத்தைத் தடை செய்கின்றன. இவ்விரு நிலைகளின் பாதிப்பு நபருக்கு நபர் வேறுபடும்.

மூச்சடைப்பு, மிகைச்சளி, நீடித்த இருமல் ஆகியவையே இந்நோயின் பொதுவான அறிகுறிகள். நோய் முற்றும்போது ஒரு சில படிகளில் ஏறுவது போன்ற அன்றாடப் பணிகளை ஆற்றுவது கூடச் சிரமமாகப் போய்விடும்.

குணப்படுத்த முடியாவிட்டாலும் இந்நோயைத் தடுக்கலாம். மருத்துவத்தால் நோயின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கலாமே தவிர காலம் செல்லச் செல்ல நிலைமை மோசமாகும். இதன் காரணமாகவே பொதுவாக 40 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. நீடித்த நுரையீரல் அழற்சி, திசுக்காற்றோற்றம் போன்ற பெயர்கள் தற்போது பயன்படுத்தப் படுவதில்லை. காரணம் அவை தற்போது COPD கண்டறிதலில் அடங்கியுள்ளது. சாதாரண புகைப்போர் இருமல் எனக் கருதப்படும் ஒன்றுக்குள் கண்டறியப்படாத உயிருக்கு ஆபத்தான கடும் நுரையீரல் நோய் ஒன்று பதுங்கி இருக்கலாம்.

நுரையீரல் செயல்பாட்டு மதிப்பீடு இன்றி இந்தியாவில் எடுக்கப்பட்ட தரவு சேகரிப்பு ஆய்வு, COPD-யால் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. இதே ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு சுவாசநோய் அறிகுறிகள் 6-7% புகை பிடிக்காதவரிடமும் 14 % புகைப்பவரிடமும் காணப்படுவதாகக் காட்டுகிறது.

ஒரு காலத்தில் COPD நோய் ஆண்களிடமே அதிகமாக இருந்தது. ஆனால் புகைபழக்கம் பெண்களிடம் அதிகரித்துள்ளதாலும், அகக் காற்று மாசின் அளவு கூடி உள்ளதாலும் (சமையலுக்கும், வெப்பத்துக்கும் உயிர் வாயு பயன்பாடு) இந்நோய் தற்போது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது.

அடிப்படையில் உள்ள காரணிகளைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால், குறிப்பாகப் புகையிலைப் பயன்பாட்டையும் காற்று மாசையும் கட்டுப்படுத்தாவிட்டால், வர இருக்கும் 20 ஆண்டுகளில் COPD-யால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும்.

நோயறிகுறிகள்

பல்கூறுகள் அடங்கிய ஒரு நோய். நுரையீரலுக்கு வெளியேயும் அது பாதிப்புகளை உருவாக்கும். COPD-யின் மிக முக்கியமான அறிகுறிகள் வருமாறு:

  • மூச்சடைப்பு
  • மிகைச் சளி
  • நீடித்த இருமல்

நோய் படிப்படியாக அதிகரித்து வரும்போது, ஒரு சில படிகளில் ஏறுவது, பெட்டியைத் தூக்குவது போன்ற அன்றாடப் பணிகளைச் செய்வது கூட சிரமமாகப் போய்விடும்.

COPD-யின் கட்டங்கள்

மூச்சுக்குழல் தளர்த்தி அளித்த பின் ஒரு விநாடியில் வலிந்த வெளிமூச்சு கன அளவு (FEV1), வலிந்த காற்றுக் கொள்திறன் (FVC) மற்றும் அறிகுறிகள் அடிப்படையில் COPD-யின் கட்டங்கள்:

கட்டம் 1

குறைந்த COPD – குறைந்த காற்றோட்ட்த தடை இதன் இயல்பு (FEV1/FVC < 0.70; FEV1 ≥ 80% கணிக்கப்பட்டது). நீடித்த இருமல் மற்றும் சளி உற்பத்தி அறிகுறிகள் இருக்கும். ஆனால் எப்போதும் இருக்காது. இக்கட்டத்தில் நோயாளிக்குத் தன் நுரையீரல் இயக்கம் இயல்புக்கு மாறாக இருப்பது தெரியாது.

கட்டம் II

மிதமான COPD – காற்றோட்டத்தடை இன்னும் மோசமாவது இதன் இயல்பு (FEV1/FVC < 0.70; 50% ≤ FEV1 < 80% கணிக்கப்பட்டது). உடலை வருத்திக் கொள்ளும் போது மூச்சடைப்பும், இருமலும் மற்றும் சளி உற்பத்தியும் சில வேளை இருக்கும். நீடித்த சுவாச அறிகுறிகள் நோய் அதிகரித்தலை உணர்வதால் நோயாளி மருத்துவ உதவியை நாடும் கட்டம்.

கட்டம் III

கடும் COPD – காற்றோட்டம் இன்னும் மோசமாகும். (FEV1/FVC < 0.70; 30% ≤ FEV1 < 50% கணிக்கப்பட்டது). மூச்சடைப்பு அதிகரிக்கும்; உடல் உழைப்புத் திறன் குறையும்; களைப்பும் அதிகரித்து வரும் நோயால் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கட்டம் IV: மிகக்கடும் COPD – கடுமையான காற்றோட்டத் தடை (FEV1/FVC < 0.70; FEV1 < 30% கணிக்கப்பட்டது அல்லது FEV1 < 50% கணிக்கப்பட்டது. மேலும் நீடித்த சுவாசச் செயலிழப்பும் இருக்கும்*).

(*கடல் மட்டக் காற்றை சுவாசிக்கும் போது, CO2 (PaCO2) தமனிப் பகுதி அழுத்தம் 6.7 kPa (50 mm Hg) –க்கு மேலுடனோ அல்லது இல்லாமலோ, O2 (PaO2) தமனிப் பகுதி அழுத்தம் 8.0 kPa (60 mm Hg) ஆக இருப்பது சுவாசச் செயலிழப்பு என வரையறுக்கப்படுகிறது).

COPD-யின் மண்டலம்சார் அம்சங்கள் (நுரையீரலுக்குப் புறம்பான பாதிப்புகள்) மற்றும் உடன் நோய்கள்:

  • உடல் நலிவு (கூடுதல் கொழுப்பு இழப்பு)
  • எலும்புச் சதை இழப்பு
  • எலும்புப் புரை
  • மனச்சோர்வு
  • இயல்நிற இயற்செல் சோகை
  • இதயநோய் ஆபத்து அதிகரிப்பு
  • நுரையீரல் புற்று
  • வளர்சிதை நோய்கள் மற்றும் நீரிழிவு சர்க்கரை நோய்

காரணங்கள்

COPD-யின் ஆபத்துக் காரணிகள்

(।) மரபணுக்கள்: COPD ஒரு மரபணுக்களால் ஏற்படும் நோய். ஆல்பா-1 ஆன்டிடிரிப்சினின் மரபு வழியான கடுமையான குறைபாடு மரபியல் ஆபத்தாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

(।।) சூழலியல் காரணிகள்

(அ) புகையிலைப் புகை: COPD-யின் முக்கியக் காரணம் புகையிலைப் புகையாகும் (புகைப்போர் புகை உட்பட). புகை பிடித்தலே பொதுவாக எதிர்கொள்ளும் ஆபத்துக் காரணி. சிகரட் தவிர, இந்தியாவில் புகையிலைப் புகையை பீடி, ஹூக்கா, சில்லும் போன்ற பலவிதங்களில் உட்கொள்ளுகின்றனர். சிகரெட்டை விட பீடி மிக மோசமானது ஆகும் (நான்கில் ஒரு பங்கு நிக்கோட்டினையே கொண்டிருந்தாலும் சிகரெட்டை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு தாரை உற்பத்தி செய்வதால் ஒரு பீடி ஒரு சிகரெட்டுக்கு இணையாக தீங்கு தருகிறது). ஹூக்கா, பீடியை விட அதிக தீமையானது. சுல்லும் எல்லாவற்றையும் விட மோசமானது. கருவுற்ற சமயத்தில் புகைபிடித்தால் கருவின் நுரையீரல் வளர்ச்சி மற்றும் பொதுவான கருவளர்ச்சி பாதிக்கப்படும்.

புகைப்போர் புகையை உள்ளிழுப்பதால் மூச்சு மண்டல அறிகுறிகளும் நீடித்த நுரையீரல் அடைப்பு நோயும் (COPD) ஏற்படலாம்.

(ஆ) உள் காற்று மாசு: சமையல், வெப்பப்படுத்தல், மற்றும் பிற வீட்டுத் தேவைகளுக்காக உலகெங்கும் 300 கோடி மக்கள் உயிர் வாயு (விறகு, விலங்குச் சாணம், பயிர்க் கழிவுகள்) மற்றும் கரியை ஆதார ஆற்றலாகப் பயன்படுத்துகின்றனர். இச்சமுதாயங்களில் புகைப்பதையும், வெளிக்காற்று மாசையும் விட அதிக அளவு COPD ஆபத்து உள் காற்று மாசால் உண்டாகிறது. உயிர் வாயுவை சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பெண்களுக்கு COPD நோய் அதிக அளவிலுள்ளது. மரம் மற்றும் பிற உயிரியல் பொருட்களை எரிப்பதால் உண்டாகும் உள்மாசால் ஒவ்வொரு ஆண்டும் 20 இலட்சம் பெண்களும் குழந்தைகளும் உலக அளவில் மரணமடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிற உள் காற்றை மாசடைய வைக்கும் பொருள் கொசுவர்த்திச் சுருளாகும். ஒரு கொசுவர்த்திச் சுருள் இரவு முழுவதும் எரிவதால் உண்டாகும் துகள் மாசு ஏறக்குறைய 100 சிகரெட்டுகளுக்கு இணையாகும்.

(இ) வெளிக்காற்று மாசு: பெரும்பாலும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைப் புகையினால் ஏற்படும் இது முக்கிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும். ஏற்கெனவே இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு நகர்ப்புறக் காற்று மாசு தீங்களிப்பதாகும்.

(ஈ) பணியிடத் தூசிகளும் வேதிப்பொருட்களும்: ஆவிப்பொருட்கள், உறுத்தல் தருபவை மற்றும் புகையாவிகள்.

(உ) நுரையீரல் வளர்ச்சி: கருவளர்ச்சி மற்றும் குழந்தைப் பருவத்தில் நுரையீரல் வளர்ச்சியைப் பாதிக்கும் எந்த ஒரு காரணியும் COPD ஆபத்தை அதிகரிக்கும்.

(ஊ) உயிர்வளியேற்ற அழுத்தம்: (மிகை உயிர்வளியேற்றிகள் மற்றும்/அல்லது குறைந்த அளவில் எதிருயிர்வளியேற்றிகள் இருப்பதே உயிர்வளியேற்ற அழுத்தம் என அழைக்கப்படுகிறது): உயிர்வளியேற்றிகளுக்கும் எதிருயிர்வளியேற்றிகளுக்கும் இடையில் சமநிலை இல்லாமல் இருப்பதும் COPD நோய் உருவாக்கத்தில் ஒரு பங்காற்றுவதாகக் கருதப்படுகிறது.

(எ) தொற்றுக்கள்: தொற்று நோய்களும் (பாக்டீரியா அல்லது வைரல்) COPD நோய் ஏற்பட்டு அதிகரிப்பதில் பங்களிக்கலாம். குழந்தைப் பருவத்தில் இருந்தே மூச்சு மண்டலத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு வளர்ந்த பின் மூச்சு மண்டல நோய்கள் அதிகரிக்கும். காசநோயும் COPD நோய்க்கு ஒரு ஆபத்துக் காரணியாகும்.

(ஏ) சமூகப்பொருளியல் நிலை: COPD உருவாகும் ஆபத்தும் சமூகப்பொருளியல் நிலையும் தலைகீழ் விகிதத்தில் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனினும் இது வெளி உள் காற்று மாற்று, கூட்டம், மோசமான ஊட்டச்சத்து அல்லது சமூகப்பொருளியல் நிலைக்குத் தொடர்புடைய வேறு ஏதாவது காரணிகளால் ஏற்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

(ஐ) ஊட்டச்சத்து: COPD உருவாக ஊட்டச்சத்தின் பங்கு தனிப்பட்டதா என்பதில் தெளிவில்லை. ஊட்டச்சத்து குறைவும் எடை இழப்பும் சுவாசத் தசைகளின் வலுவையும் தாங்குதிறனையும் இழக்கச் செய்யும். தசைத் திரட்சியையும் எஞ்சி இருக்கும் தசை நார்களின் வலுவையும் குறைப்பதால் இது நிகழ்கிறது.

(ஒ) ஆஸ்துமா: ஆஸ்துமாவும் COPD நோய் ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம். எனினும் சான்றாதாரங்களில் தெளிவில்லை.

நிலப்பகுதியைப் பொறுத்து COPD-யின் காரணங்கள் எதிரான வடிவங்களைக் கொண்டிருக்கும். அதிக மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் புகையிலைப் புகையே மாபெரும் ஆபத்துக் காரனியாகும். அதே நேரத்தில் குறைந்து வருவாய் நாடுகளில் உயிர்எரிபொருட்களை சமையலுக்கும் வெப்பமூட்டலுக்கும் பயன்படுத்துவதால் உண்டாகும் உள்காற்று மாசுறுவதே முக்கிய ஆபத்துக் காரணியாக உள்ளது..

நோய்கண்டறிதல்

நீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக்காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

செயற்கை மூச்சுப்பொறி சோதனை மூலம் COPD உறுதி செய்யப்படுகிறது. ஒருவர் எவ்வளவு காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் முடியும் என்பதையும் காற்று எவ்வளவு வேகமாக நுரையீரலுக்குள் செல்லவும் வெளியேறவும் முடியும் என்பதையும் இது அளக்கிறது. COPD மெதுவாக அதிகரித்து வருவதால் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடமே இந்நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது.

மூச்சுக்குழல் தளர்த்தலுக்குப் பின் FEV1/FVC < 0.70 மற்றும் FEV1 < 80% (கணிக்கப்பட்டது) இருக்குமானால் முழுவதுமாக மாற்ற முடியாத காற்றோட்டத் தடை இருக்கிறது என்று பொருள். COPD –யை அதன் எந்த நிலையிலும் கண்டறியலாம்.

வரைபடம்-1. செயற்கை மூச்சளவியல் படி நோய்க்கடுமை வகைப்பாடு

மூச்சுக்குழல் தளர்த்தலின் பின் FEV1 அடிப்படையில் செயற்கை மூச்சளவியல் படி நோய்க்கடுமை வகைப்பாடு

கட்டம் I: குறைந்த COPD

FEV1/FVC < 0.70; FEV1 ≥ 80% கணிக்கப்பட்டது

கட்டம் II: மிதமான COPD

FEV1/FVC < 0.70; 50% ≤ FEV1 < 80% கணிக்கப்பட்டது

கட்டம் III: கடும் COPD

FEV1/FVC < 0.70; 30% ≤ FEV1 < 50% கணிக்கப்பட்டது

கட்டம் IV: மிகக்கடும் COPD

FEV1/FVC < 0.70; FEV1 < 30% கணிக்கப்பட்டது அல்லது FEV1 < 50% கணிக்கப்பட்டது. மேலும் நீடித்த சுவாசச் செயலிழப்பும் இருக்கும் *

(*கடல் மட்டக் காற்றை சுவாசிக்கும் போது, CO2 (PaCO2) தமனிப் பகுதி அழுத்தம் 6.7 kPa (50 mm Hg) –க்கு மேலுடனோ அல்லது இல்லாமலோ, O2 (PaO2) தமனிப் பகுதி அழுத்தம் 8.0 kPa (60 mm Hg) ஆக இருப்பது சுவாசச் செயலிழப்பு என வரையறுக்கப்படுகிறது).

செயற்கைக் காற்றளவியல் சோதனை வசதி இல்லாவிட்டால், மருத்துவ அறிகுறிகளான அசாதாரண மூச்சடைப்பு மற்றும் வலிந்து மூச்சை வெளியேற்ற எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கண்டறியலாம்.

COPD-யுடன் தொடர்ந்து ஒரு குறைந்த உச்ச அளவு காற்றோட்டம் இருக்கும். இது COPD-க்கு மட்டுமே உரியதல்ல. பிற நுரையீரல் நோய்களாலும் சோதனை குறைபாட்டாலும் இது இருக்கலாம்.

காற்றோட்டத் தடை ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நீடித்த இருமலும் சளியும் இருந்து வரும். ஆனால் இருமலும் சளியும் உள்ள எல்லோருக்குமே COPD உருவாக வேண்டிய அவசியமில்லை.

நோய்மேலாண்மை

சிறந்த முறையில் COPD நோய்க்கு மருத்துவம் அளிக்கும் திட்டத்தில் நான்கு கூறுகள் அடங்கி உள்ளன: (1) நோயை மதிப்பிட்டு கண்காணித்தல் (2) ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல் (3) நிலையான COPD மேலாண்மை (4) நோய் அதிகரிக்காமல் கவனித்தல்.

கூறு 1: நோயை மதிப்பிட்டுக் கண்காணித்தல்

மூச்சுத் திணறல், நீடித்த இருமல், சளி மற்றும் ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு மருத்துவ அடிப்படையில் COPD நோய் கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும். இது செயற்கை மூச்சளவியல் முறையில் உறுதிசெய்யப் படவேண்டும்.

FEV1 < 40% கணிக்கப்பட்டது அல்லது மூச்சுமண்டல அல்லது வலது இதய செயலிழப்பு உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தமனி இரத்த வாயு இழுவிசை அளவு கணக்கிடப்பட வேண்டும்.

மருத்துவத்தின் இலக்குகள் அடையப்பட்டனவா என்றும் நடைபெறும் COPD கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள் மூலம் உறுதிப்படுத்துவதோடு   கீழ்வரும் மதிப்பீடுகளும் சேர்க்கப்பட வேண்டும்: (1) ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்படுதல் குறிப்பாகப் புகையிலைப் புகை (2) நோய் வளர்ச்சியும் சிக்கல் உருவாகுதலும் (3) மருந்தியல் மற்றும் பிற மருத்துவம் (4) அதிகரித்து வரும் போக்கு (5) இணை நோய்கள்.

கூறு 2: ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல்

புகையிலைப் புகை, பணிச்சுழல், உள் வெளி காற்று மாசு மற்றும் உறுத்தல் பொருட்கள் ஆகியவையே COPD நோய்க்கான ஆபத்துக் காரணிகள். இத்தகைய ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்படாமல் இருப்பதே இந்நோய் உருவாகி அதிகரிப்பதைத் தடுக்கும் முக்கிய இலக்காகும்.

புகையிலைப் புகை

புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட எல்லா நோயாளிகளையும் அதை விட்டொழிக்குமாறு சுகாதாரப் பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும். COPD அறிகுறி இன்றி வேறு காரணங்களுக்காக வருவோரிடமும் சுகாதரப் பணியாளர்கள் புகைபழக்கத்தை விடுமாறு தூண்ட வேண்டும். சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகளைவிட சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையால் புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் விகிதம் அதிகரிக்கிறது. ஆலோசனை போதுமானதாக இல்லாமல் இருந்தால் மருந்தியல் சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம்.

புகையிலையின் தீங்கிழைக்கும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. (www.nhp.gov.in/national-tobacco-control-programme).

புகையிலையைப் பயன்பாட்டை விட்டொழிக்க விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம் அலைபேசித் தொழிற்நுட்பத்தின் மூலம் இடைநிறுத்தத் திட்டம் - வாழ்க்கை முழுவதும் புகையிலையை விட்டொழிக்கவும் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. (www.nhp.gov.in/quit-tobacco-programme )

பணிச்சூழல் பாதிப்புக்குட்படுதல் – முதல் கட்டத் தடுப்பே முக்கியமாக வலியுறுத்தப்பட வேண்டியது: பணியிடத்தில் பலவிதமான பொருட்களின் பாதிப்பைக் குறைப்பதாலேயே இது சாத்தியம். இரண்டாவது கட்டத் தடுப்பில் கண்காணிப்பும், ஆரம்ப நிலையிலேயே நோய்கண்டறிதலும் அடங்கும். இதுவும் மிக முக்கியமானதே.

உள் வெளிக் காற்று மாசு – குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் உயிர் எரி பொருள் புகைக்கு உள்ளாவதைக் குறைப்பது என்பது  உலக அளவில் COPD நோயைக் குறைக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான இலக்காகும். வாகனம் மற்றும் தொழிற்சாலைப் புகையைப் பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் பொதுக் கொள்கை, COPD வளர்ச்சியைக் குறைப்பதற்கான உடனடி முன்னுரிமையாகும்.

கூறு 3: நிலையான COPD மேலாண்மை – தனிநபர்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே COPD –யைக் கட்டுக்குள் வைக்கும் ஒட்டுமொத்தமான அணுகுமுறை அடங்கி உள்ளது. சுகாதாரக் கல்வி, மருந்து, நுரையீரல் புனரமைப்பு, உயிர்வளி சிகிச்சை, செயற்கை சுவாசம், அறுவை மருத்துவம் ஆகியவை இந்த அணுகுமுறையில் அடங்கி உள்ளது.

சுகாதாரக் கல்வி

COPD நோயாளிகளுக்குத் திறன்களையும் நோயோடு வாழும் ஆற்றலையும், ஆரோக்கிய நிலையையும் மேம்படுத்துவதில் சுகாதாரக் கல்வி ஒரு பங்கை வகிக்க முடியும். புகைத்தலை நிறுத்துவது உட்பட சில இலக்குகளை அடைவதில் அது பலனளிக்கும். நோய் அதிகரித்தலின் போது நோயாளியின் எதிர்வினையைக் கல்வி மேம்படுத்தும்.

மருந்தியல் சிகிச்சை

அறிகுறிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தவும், அடிக்கடி நோய் அதிகரிப்பதையும் அதன் கடுமையையும் குறைக்கவும், ஆரோக்கிய நிலையையும் உடற்பயிற்சிகளைத் தாங்கும் திறனையும் மேம்படுத்தவும் மருந்தியல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

காற்றுப்பாதை விரிவாக்கம்

COPD அறிகுறிகளைக் கட்டுப்படுத்த காற்றுப்பாதை விரிவாக்க சிகிச்சை தலையாயது. தேவைப்படும்போதோ அல்லது தொடர்ந்தோ இம்மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

பீட்டா2 இயக்கிகள், எதிர்-கோலிநெர்ஜிக்குகள், தியோபிலின்கள் மற்றும் இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ இணைத்து அளிப்பது முக்கிய காற்றுப்பாதை விரிவாக்க சிகிச்சையாகும். நீடித்து வினைபுரியும் காற்றுப்பாதை விரிவாக்கிகளைக் கொண்டு தொடர் மருத்துவம் அளிப்பது குறுகியகால வினைபுரியும் மருந்துகளைவிட அதிக பலன் அளிப்பதாகும்.

குளுக்கோகோர்ட்டிகோஸ்டிராய்டுகள்

நிலையான COPD மேலாண்மையில் குளுக்கோ கோர்ட்டிகோ- ஸ்டிராய்டுகளின் பங்கு குறிப்பிட்ட அறிகுறிகளுக்கே உரியது ஆகும். குளுக்கோ கோர்ட்டிகோ- ஸ்டிராய்டுகளினால் பலன் இருப்பது செயற்கை மூச்சளவியலினால் ஆவாணப்படுத்தப்பட்ட COPD அறிகுறிகள் உடைய நோயாளிகளுக்கோ அல்லது FEV1 < 50% கணிக்கப்பட்டது கொண்டவர்களுக்கோ மற்றும் திரும்பத்திரும்ப ஏற்படும் அதிகரிப்புகளுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகள் அல்லது குளுக்கோ கோர்ட்டிகோ- ஸ்டிராய்டுகள் சிகிச்சை தேவைப்படுவோருக்கும் மட்டுமே இம்மருந்து பரிந்துரைக்கப்பட வேண்டும்.

சாதகமற்ற நன்மை-ஆபத்து விகிதத்தைத் தருவதால் மண்டலம் சார் குளுக்கோ கோர்ட்டிகோ- ஸ்டிராய்டுகள் கொண்டு நீடித்த சிகிச்சை அளிப்பதைத்  தவிர்க்க வேண்டும்.

பிற மருந்தியல் சிகிச்சைகள்

தடுப்பு மருந்து

இறந்த அல்லது உயிருடனான செயலிழப்புச் செய்யப்பட்ட  வைரசுகள் கொண்ட இன்ஃபுளுயன்சா தடுப்பு மருந்து COPD நேர்வுகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய COPD நோயாளிகளுக்கு நியூமோகாக்கல் பாலிசாக்கரைட் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

ஆல்பா-1 எதிர்டிரிப்சின் அதிகரிப்புச் சிகிச்சை – மரபியல் ரீதியாகக் கடும் ஆல்பா- 1 எதிர்டிரிப்சின் குறைபாடும், நிறுவப்பட்ட திசுக்காற்றேற்றமும் கொண்ட இளம் நோயாளிகளுக்கு இது பயன்படுத்தப்படலாம்.

நுண்ணுயிர்க்கொல்லிகள் – தொற்றால் அதிகரிக்கும் COPD மற்றும் பிற பாக்டீரியா தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்க நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சளியகற்றிகள் – ஒரு சில நோயாளிகளுக்கு சளியகற்றிகள் பயன் அளித்தாலும் மொத்த பயன் மிகவும் குறைவானதே. பரவலாக இதைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை.

நோய்த்தடுப்பு சீராக்கிகள்

COPD –க்கு ஒரு நோய்த்தடுப்பு சீராக்கியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வுகளில் அதிகரிப்பின் கடுமையும் நிகழ்வு எண்ணிக்கையும் குறைவதைக் காண முடிகிறது. ஆனால், இதை நிரந்தரமாக பயன்படுத்தும் முன் அதன் நீண்ட கால விளைவுகளைப் பற்றி கூடுதலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருமலடக்கிகள் – இருமலுக்கு குறிப்பான பாதுகாப்புப் பண்புகள் இருப்பதால் இருமலடக்கிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது நிலையான COPD –க்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

மருந்தற்ற சிகிச்சை

புனரமைப்பு – விரிவான நுரையீரல் புனரமைப்புத் திட்டத்தில் பயிற்சி, ஊட்டச்சத்து, ஆலோசனை மற்றும் கல்வி அடங்கியுள்ளது.

(அ) உடல் பயிற்சி – COPD நோயாளிகள் அனைவரும் உடல் பயிற்சியால் பயனடைவர். உடல்பயிற்சி தாங்குதிறன் மற்றும் மூச்சுத்திணறல், களைப்பு அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

(ஆ) ஊட்டச்சத்து ஆலோசனை – COPD நோயில், அறிகுறிகள், பலவீனம் மற்றும் நோய்முன்கணிப்பில் ஊட்டச்சத்து நிலை ஒரு முக்கிய தீர்மானிக்கும் சக்தியாகும். மிகை மற்றும் குறை எடை ஆகிய இரண்டுமே பிரச்சினையாகும்.

உயிர்வளி சிகிச்சை- நிலை IV: மிகக் கடும் COPD-க்கு இது மிக முக்கியமான மருந்தற்ற சிகிச்சை ஆகும். இது மூன்று வகையில் அளிக்கப்படலாம்: நீண்ட காலத் தொடர் சிகிச்சை, உடல்பயிற்சியின் போது, கடுமையான மூச்சுத்திணறலைப் போக்க.

நீடித்த மூச்சுச் செயலிழப்பு உடைய நோயாளிகளுக்கு நீண்ட கால உயிர்வளி சிகிச்சையால் (> 15 h தினமும்) வாழ்நாள் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை சுவாசம் – COPD-யின் கடும் அதிகரித்தலுக்குச் சிகிச்சை அளிக்க புற செயற்கை சுவாசம் (எதிர்மறை அல்லது நேர்மறை அழுத்தப் பொறிகளைப் பயன்படுத்தி) தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அறுவை மருத்துவம்

  • நுரையீரல் காற்றுக்குமிழ் அகற்றல்
  • நுரையீரல் கொள்ளளவு குறைப்பு அறுவைசிகிச்சை (LVRS)
  • நுரையீரல் மாற்று சிகிச்சை

கூறு 4: நோய் அதிகரிக்காமல் கவனித்தல்

மருத்துவம் தேவைப்படும் மூச்சு மண்டல அறிகுறிகள் COPD சிகிச்சையில் ஒரு முக்கிய கட்டமாகும். மூச்சுக்குழல் மண்டலத் தொற்றும் காற்று மாசுமே  நோய் அதிகரிப்புக்கான பொதுக் காரணம். எனினும் மூன்றில் ஒரு பங்கு நோய் அதிகரிப்புக் காரணங்கள் இனம் காண முடியாதவைகள்.

உள்ளிழுக்கும் காற்றுக்குழல் தளர்த்திகள் (குறிப்பாக B2 இயக்கிகள் அல்லது எதிர்கோலிநெர்ஜிக்சுகள்), தியோஃபைலின் மற்றும் மண்டலம்சார், வாய்வழி, குளுக்கோகோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் கடும் COPD அதிகரிப்பை கட்டுப்படுத்த சிறந்தவையாகும்.

காற்றுப்பாதைத் தொற்றின் (உ-ம். அதிகச் சளி நிற மாற்றத்துடன் அல்லது காய்ச்சல்) மருத்துவ அறிகுறிகளுடன் COPD அதிகரிப்பு இருந்தால் நுண்ணுயிர்க்கொல்லி சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கும்.

கடுமையான நோய் அதிகரிப்பின் போது ஊடுறுவலற்ற நேர்மறை அழுத்த சுவாசம் (NIPPV) இரத்த வாய்வையும் pH –ஐயும் (அமில மற்றும் காரத் தன்மை அளவீடு) மேம்படுத்துகிறது; மருத்துவமனை மரணத்தைக் குறைக்கிறது; ஊடுறுவல் இயந்திர சுவாசம் மற்றும் குழல்செருகல் தேவைகளைக் குறைக்கிறது; மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைக்கிறது.

சிக்கல்கள்

இரத்த உயிர்வளிக்குறை – இரத்தத்தில் இருக்கும் உயிர்வளியின் குறைந்த அடர்த்தி.

வலப்புற இதயவீக்கம்: அதிகரித்து வரும் நுரையீரல் மிகை அழுத்தத்தால் வலது இதயக் கீழறை மிகைப்பெருக்கம் அடைந்து இறுதியில் வலது புற இதயம் செயலிழத்தல்.

கடும்விளைவுகள்

நோயாளியின் பொதுவான மூச்சுத்திணறல், இருமல் மற்றும்/அல்லது சளியுற்பத்தி ஆகியவற்றில் அன்றாடக இயல்புநிலை வேறுபாடுகளில் மாற்றம் ஏற்படும் இயல்பான நோய்ப் போக்கில் ஒரு நிகழ்வே COPD –யின் கடும்விளைவு என வரையறுக்கப்படுகிறது. இது கடுமையாக ஏற்படும். COPD  நோயாளிக்கு தொடர்ந்து கொடுத்துவரும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

மூச்சுக்குழல் மண்டலத்தின் தொற்றும் காற்று மாசுமே நோய் அதிகரிப்புக்கான பொதுக் காரணம் எனினும் மூன்றில் ஒரு பங்கு கடும் விளைவுகளுக்கான காரணத்தை இனங்காண முடிவதில்லை.

இதய நோய்கள், நுரையீரல் புற்று மற்றும் முற்றியநிலை COPD யில் சுவாசச் செயலிழப்பு ஆகியவையே இந்நோய் வாய்ப்பட்டோர் இறப்பதற்கான காரணங்களாகும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate