অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வாய் சுகாதாரம்

வாய் சுகாதாரம்

வாய் சுகாதாரம் என்றால் என்ன?

உலக சுகாதார அமைப்பின் விளக்கப்படி, வாய் சுகாதாரம் என்பது, நாட்பட்ட வாய், முக வலிகள், வாய் தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புண்கள், பிறப்புக் குறைபாடுகளான உதடு அண்ணப் பிளவுகள், ஈறு நோய்கள், பல் சிதைவும் வீழ்ச்சியும் ஆகியவைகளும் மேலும் இது போன்ற வாய்ப் பாதையைப் பாதிக்கும் நோய்களும் கோளாறுகளும் இல்லாமல் இருப்பதே.

வாய் சுகாதாரம், பொதுவான ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும். உங்களுடைய ஒட்டுமொத்தமான நலத்திற்கு சிறந்த வாய் சுகாதாரம் முக்கியமானதாகும்.

வாய் சுகாதாரம் ஏன் முக்கியமானது?

பொது சுகாதாரமும் வாய் சுகாதாரமும் ஒன்றுக்கொன்று விளைவுகளை ஏற்படுத்துவன. வாய்த்தொற்று பெரும் சுகாதாரச் சிக்கல்களை உண்டாக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பொது சுகாதாரத்தை வாய் சுகாதாரம் பாதிக்கும் விதங்களாவன:

இதய நோய்

ஈறு நோய்கள் உள்ளவர்களுக்கு இரு மடங்கு உயிருக்கு ஆபத்தான இதய நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுபோலவே, ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள் வாய் சுகாதாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை வாய்த்தொற்று அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஈறு பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சுவாசப் பிரச்சினைகள்

வாய்த்தொற்று உள்ளவர்களுக்கு கடுமையான சுவாசப்பிரச்சினைகளான நிமோனியா போன்றவை உண்டாவதற்குக் கூடுதல் சாத்தியக் கூறுகள் உள்ளன.

கர்ப்பம்

கர்ப்பிணிகளுக்கு ஈறு பிரச்சினைகள் இருப்பது குறைப்பிரசவம் அல்லது எடைகுறைந்த குழந்தைகள் பிறப்பதற்கு ஒரு காரணமாகும். குழந்தைப் பேற்றைத் தூண்டும் உயிரியல் பாய்மங்களை ஈறுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் செயல்பட வைக்கின்றன.

வாய்த் தொற்று நோய்களைத் தடுக்க சிறந்த வழி முறையாகப் பல்தேய்த்து அழுக்குகளை அகற்றுவதே.

அடிப்படையான பற்பாதுகாப்பு என்பது என்ன?

 • முறையாக பல்தேய்ப்பதும் நூலகற்றியால் பல்லிடுக்குகளைச் சுத்தப்படுத்துதலும்
 • முறையாக பல் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்வது
 • முழுதானியம், காய்கறி, பழங்கள், பால்பொருட்கள் போன்ற சமநிலையான உணவை உட்கொள்ளுவது

இவற்றைக் கடைபிடித்தால் பற்சிதைவு, ஈறு நோய்கள், வாய் நாற்றம் போன்ற பல் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.

பல் தேய்த்தல்

வாய்சுகாதார பழக்க வழக்கத்திற்குப் பல் தேய்த்தல் ஒருங்கிணைந்த பகுதியாகும். சிறந்த வாய்க்கும் புன்னகைக்கும் கீழ் வருவன முக்கியமாகும்:

மென்மையான முடி கொண்ட பற்குச்சியால் தினமும் இருமுறை பல்விளக்கவும். வாயின் எல்லா பகுதியையும் எளிதாக எட்டும் தகுந்த வடிவமும் அளவும் உள்ள பற்குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.

முடி சிதைந்தவுடனோ அல்லது மூன்று அல்லது நான்கு மாதத்திலோ பற்குச்சியை மற்ற வேண்டும்.

தகுந்த அளவு ஃபுளோரைடு கொண்ட பற்பசையை உபயோகப்படுத்தவும்.

பல்லிடுக்கு அழுக்ககற்றல்

பல்லிழை மூலம் அழுக்ககற்றல் வாய் சுகாதாரம் பேணும் முறையின் ஒரு முக்கிய அங்கமாகும். உகந்த வாய் சுகாதாரத்துக்காக பல்லிழை மூலம் தினமும் ஒருமுறை அழுக்ககற்ற வேண்டும். பற்குச்சியால் விளக்கும் போது பல் பரப்பு 60% மட்டுமே சுத்தமாகிறது. பல்லிடுக்கில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்வதால் அவற்றை பல் தூரிகையால் அகற்றுவது கடினம். எனவே பல்லிழை மூலமும் சுத்தம் செய்ய வேண்டும். பற்குச்சியால் துலக்குவதற்கு முன் பல்லிழையால் சுத்தம் செய்யவும். பற்குச்சி அடைய முடியாத பல்லிடுக்குகளில் இருக்கும் பற்காறையை பல்லிழை அகற்ற உதவுகிறது. இதனால் பல்நோய்களும் துவாரங்களும் தடுக்கப்படுகின்றன.

நாக்கு வளிப்பான்

நாக்கு வளிப்பான் நாக்கைச் சுத்தம் செய்ய உதவுகிறது. முறையாகப் பல்லையும் நக்கையும் பற்குச்சியால் துலக்குவதை விட நாக்கு வளிப்பானை பயன்படுத்துவது அதிக பலன் தருகிறதா இல்லையா என்பதற்குச் சான்றில்லை என்றாலும் அது வாய்நாற்றத்தைத் தடுக்க உதவலாம். நாக்கு வளிப்பான் பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன. பின் நாக்கில் இருந்து முன் நோக்கி வளிக்க வேண்டும். இது காறை மற்றும் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது. ஆரோக்கியமற்ற உணவு, உலர் வாய், ஈறு பிரச்சினைகள், புகையிலைப் பழக்கம் அல்லது வாய் ஆரோக்கியம் இல்லாமையே வாய் துர்நாற்றத்திற்குக் காரணம். ஆரோக்கியமான வாய்க்கு சிறந்த வாய் சுகாதாரமும் முறையாகப் பல் மருத்துவரிடம் செல்வதும் முக்கியம்.

வாய் கொப்பளித்தல்

வாய் கொப்பளிக்கும் திரவங்கள் பற்குச்சுகளும் பல்லிழைகளும் எட்டாத இடங்களையும் அடைந்து பாக்டீரியாக்களையும் உணவுத் துகள்களையும் அகற்றுகின்றன.

வாய் கொப்பளிக்கும் திரவங்களுக்கு பல பயன்பாடுகள் உள்ளன:

 • சுவாசத்தை சுத்திகரிக்கிறது
 • பற்சிதைவைத் தடுக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது
 • பற்காறையைக் குறைக்கிறது (பற்கள் மேல் படியும் பாக்டீரியாவின் மெல்லிய படலம்)
 • பல்லீறு வீக்கம் தடுக்கிறது அல்லது குறைக்கிறது (ஈறு நோயின் ஆரம்பம்)
 • பற்படிவைக் குறைக்கிறது (கட்டிப்பட்ட பற்காறை)

இரு வகையான வாய் கொப்பளிக்கும் திரவங்கள் உள்ளன:

சிகிச்சைக்கான வாய்திரவம் : பற்காறை, ஈறுவீக்கம், பற்குழி, துர்நாற்றம் ஆகியவற்றைக் குறைக்கிறது. இவற்றில் அடங்கியுள்ள ஃபுளோரைட் பற்சிதைவைத் தடுக்கிறது.

ஒப்பனை வாய்திரவம் : இது வாய்துர் நாற்றத்தைக் குறைத்து ஓர் இனிமையான சுவையைத் தருகிறது. ஆனால் இது வாய் நாற்றத்திற்கான அடைப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. வாய்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை. பற்காறை, பல்லீறு வீக்கம், பற்குழி ஆகியவற்றைக் குறைப்பதில்லை.

ஒருவருக்கு பல் துலக்கவோ, பல்லிழை பயன் படுத்துவதிலோ சிரமங்கள் இருந்தால், பற்குழி, ஈறு நோய்கள் ஆகியவற்றில் இருந்து வாய்திரவம் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.

சவைக்கும் சவ்வு

சர்க்கரையற்ற சவ்வுகளை மெல்லுவதால் பற்சிதைவையும் பற்சொத்தை உண்டாகும் அபாயமும் குறைகிறது. சர்க்கரையற்ற சவ்வுகளை மெல்லும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து உணவுத்துகள்களை அகற்றுகிறது; வாயில் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் அமிலத்தைச் சமன் செய்கிறது. வாயில் நோயெதிர்ப்பு பொருட்களை வழங்குகிறது. அதிக உமிழ்நீர் அதிக அளவு சுண்ணாம்பு சத்தையும் பாஸ்பேட்டையும் கொண்டு வருவதால் பற்பூச்சு வலிமையடைய உதவுகிறது.

மெல்லும் சவ்வுகளை உபயோகிக்கும் போது பல் துலக்குவதையும் பல்லிழை பயன்படுத்துவதையும் விட்டுவிடக் கூடாது.

உணவும் பற்சிதைவும்

ஒருவர் உண்ணும் உணவும், குடிக்கும் பானமும் கீழ்வருவனவற்றைப் பொறுத்து பற்சிதைவை நோக்கி இட்டுச் செல்லும்;

 • நீர்மம், திடப்பொருள், ஒட்டுவன, எளிதில் கரையாதவை ஆகிய தன்மைகளைப் பொறுத்தது
 • ஒருவர் எத்தனை முறை சர்க்கரை உணவுகளையும் பானங்களையும், அமிலம் சேர்ந்த உணவுகளையும் பானங்களையும் உட்கொள்கிறார்
 • உணவின் சத்து மதிப்பு
 • உணவு வகைகளைச் சேர்த்து உண்ணும் முறையும் வரிசையும்
 • இரைப்பைக் குடல் எதிர்வினையும், உண்ணும் கோளாறுகளும் பற்குழிகளையும் பற்சிதைவு அபாயத்தையும் அதிகரிக்கும்.

பற்களைச் சேதப்படுத்தும் உணவுகள்

1. கடினமான மிட்டாய்கள்

கட்டியான மிட்டாய்கள் ஈர்ப்பவையாகவும் தீங்கற்றதாகவும் தோன்றினாலும் அடிக்கடி அவற்றை உண்ணும் போது அவை பற்களைச் சேதப்படுத்துகின்றன. மேலும் அவை பற்கள் உடையவும் வழிவகுக்கின்றன. இதற்கு மாற்று  ஐ.டி.ஏ. முத்திரை பெற்ற சர்க்கரை இல்லாத பசையே ஆகும்.

2. சவைக்கும் ஐஸ்

சர்க்கரையும், பிற பொருளும் சேர்க்காத வெறும் நீராக இருப்பதால் ஐஸ் தீமையற்றது என்ற எண்ணம் உண்டு. எந்த கடினமான பொருளை கடிக்கும்போதும் பற்களுக்கும் அதன் மேற்பூச்சுக்கும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.

3. மிகையான எலுமிச்சை சாறு

அதிகப்படியான அமில உணவை உட்கொள்ளுவதால் பற்பூச்சு அழிந்து பல் சிதையும் அபாயம் உண்டாகிறது. சோடா போன்றவற்றைக் குடிப்பதற்குப் பதிலாக சாதாரணத் தண்ணீரை அதிக அதிகமாக அருந்துங்கள்.

4. அடிக்கடி காப்பி அல்லது தண்ணீர் அருந்துதல்

காப்பியும் தேனீரும் நல்ல பானங்களே எனினும் அதிகமாக அருந்துவதால் பல்லில் கறை படியக் கூடும். நீங்கள் அதிகமாக இவற்றை உட்கொண்டால் அதற்கு இணையாக அதிகமான தண்ணீரைக் குடித்து அவற்றின் விளைவைக் குறைக்க வேண்டும்.

5. ஒட்டும் உணவு

சிலர் ஒட்டுந்தன்மையுள்ள உணவை விரும்பி உண்பார்கள். ஆனால் அவை நீண்ட நேரம் பல்லில் ஒட்டிக்கொண்டு இருப்பதால் பாக்டீரியாக்கள் அவற்றில் தங்கி இருந்து வினை புரிந்து பல் சிதைவு அடையும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள், ஒட்டும் மிட்டாய்கள், சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட பின் வாய்கொப்பளிக்குமாறு பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

6. உருளைக்கிழங்கு சிப்சுகள்

உருளைக் கிழங்கு சிப்சுகளை எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் அவற்றில் உள்ள மாவுப்பொருள் பல்லில் தங்கி பற்சிதைவை உண்டாக்கும். இதை சாப்பிட்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

7. குளிர்பானங்கள்

கார்பன் ஏற்றப்பட்ட குளிர் பானங்கள் இரு வகை விளைவுகளை உண்டாக்குகின்றன. அவற்றில் அமிலமும் இனிப்பும் உள்ளன. இதனால் பற்சிதைவுக்கு அதிக அபாயம் உள்ளது. கோலா போன்ற குளிர் பானங்கள் வாயை உலர வைக்கும்.

8. அதிகமாக மது அருந்துதல்

மது, நீர்ச்சத்து இழக்கச் செய்வதோடு வாயையும் உலரச் செய்யும். அதிகமாக மது அருந்தும் போது உமிழ்நீர் சுரப்பதை அது குறைக்கும். பற்சிதைவோடு பிற வாய்க் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும். அடிக்கடி மது அருந்துவதைத் தவிர்த்து நீர்ச்சத்திழப்பைக் குறைக்க அதிக நீரை அருந்த வேண்டும்.

9. விளையாட்டு வீரர் பானங்கள்

சக்திபானங்கள் எனப்படும் விளையாட்டு வீரர்களுக்கான பானங்களில் முக்கிய பகுதியாக இருப்பது சர்க்கரையே. நீண்ட கடுமையான பயிற்சிகளில் இருப்பவர்களுக்கு இவை ஏற்றதே எனினும் சர்க்கரை பல்லுக்குக் கேடானது. இத்தகைய பானத்தை அருந்தும் முன் ஒட்டியுள்ள வில்லையைப் படித்துப் பார்க்க வேண்டும்.

வாய் சுகாதாரத்துக்கு நன்மை பயக்கும் உணவுகள்

1. பால்

பாலில் சுண்ணாம்புச்சத்தும், உயிர்ச்சத்து-டியும் இருப்பதால் பல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, முக்கியமானதாகும்.

2. பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி உமிழ்நீர்ச் சுரப்பைக் கூட்டுவதால் அது ஒரு சிறந்த பற்குழி எதிர்ப்பு உணவாகும்.

3. பழங்களும் காய்கறிகளும்

பழங்களிலும் காய்கறிகளிலும் அதிகமான நார்ச்சத்தும் நீரும் இருப்பதால் சர்க்கரையை சமநிலைப் படுத்தி பற்களைச் சுத்தமாக வைக்க உதவுகிறது. அவை அதிக அளவில் உமிழ்நீரைச் சுரக்க வைப்பதால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அழுக்குகளும் கழுவப்படுகின்றன. மேலும் பழங்களிலும் காய்கறிகளிலும் உயிர்ச்சத்து-சி யும் (ஆரோக்கியமான ஈறுகளுக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் உதவும்) உயிர்ச்சத்து-ஏ யும் (பற்பூச்சை கட்ட தேவைப்படுவது) உள்ளன.

4. புரதம் நிறைந்த உணவுகள்

புரதம் நிறைந்த இறைச்சி, மீன், பால், முட்டை ஆகியவற்றில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. பாஸ்பரசும், சுண்ணாம்புச்சத்தும் பல் பூச்சைக் காப்பதற்கும் கட்டுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

5. ஃபுளோரின் நீர்

நீர், குறிப்பாக ஃபுளோரின் சேர்த்த நீர், சிறந்த பானம் மட்டுமன்றி பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

புகையிலையும் வாய் சுகாதாரமும்

புகையிலை இதய நோய்களையும் பலவிதமான புற்று நோய்களையும் உண்டாக்கும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் வாய்ப்புற்று நோய்க்கு புகையிலையே ஒரு முக்கிய காரணமாகும். வாய்சுகாதாரத்துக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

வாய் சுகாதரத்தைப் புகைபிடித்தல் எவ்வாறு பாதிக்கிறது?

புகைத்தல் கீழ்வருவன போன்ற பல வாய் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது:

 • வாய் நாற்றம்
 • பல் கறை
 • ஈறு நோய்
 • வாயறையின் கூரையில் திறக்கும் உமிழ்நீர் சுரப்பி அழற்சி
 • பற்காறை அல்லது பற்படிவு உருவாகும் ஆபத்தை அதிகரிக்கிறது
 • தாடையின் உள் எலும்பு அழிவு
 • வாய்க்குள் வெண்புள்ளி (புற்று முன் சிதைவு) வரும் அபாயம்
 • புண் ஆற தாமதம் ஆதல்
 • வாய்ப்புற்று வரும் அபாயம் அதிகரித்தல்

ஈறுகளையும் பல்லையும் புகைத்தல் எவ்வாறு பாதிக்கிறது?

புகையிலையில் இருக்கும் தார் மற்றும் நிக்கோட்டின் பற்களைக் கறைப்படுத்துகின்றன. பல்லை அது வெகு விரைவில் மஞ்சள் நிறமாக்கும். பின் பல் காவி நிறமாக மாறுகிறது. ஈறுகளுக்கும் அவற்றைத் தாங்கும் திசுக்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தை புகைத்தல் தடை படுத்தி அழற்சி ஏற்பட வழிவகுக்கிறது. பல் விழுதலுக்கு ஈறு நோய்களே முக்கிய காரணம்.

புகைப்பதற்கும் வாய்ப்புற்று நோய்க்கும் சம்பந்தம் உண்டா?

புகை பிடிப்பதால் நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்று நோய்கள் உண்டாகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால் புகைப்பது வாய்ப்புற்றுக்கும் வழி வகுக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

புகையற்றப் புகையிலை என்பது என்ன?

புகைக்காத புகையிலைப் பொருட்களான வெற்றிலைப் புகையிலை, குட்கா, கைனி, பான்மசாலா, மாவா, மூக்குப்பொடி ஆகியவை புகையற்றப் புகையிலை ஆகும்.

புகையற்றப் புகையிலையால் உண்டாகும் தீமைகள் யாவை?

 • வாய், நாக்கு, வாய்ப்பாதைப் புற்று
 • உணவுக்குழாய்ப் புற்று
 • வயிற்றுப் புற்று
 • கணையப் புற்று
 • பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயம் அதிகரிப்பு
 • வாய் வெண் புள்ளி (வாய்ப்புற்றுக்கு முன்னோடி)
 • பல் வேரைச் சுற்றி எலும்பு இழப்பு
 • ஈறுகள் வற்றுதல்
 • பல் சிதைவு
 • பல் விழுதல்
 • கறைப்பட்ட அல்லது நிறமாறிய பற்கள்
 • வாய் நாற்றம்

பொதுவான வாய் சுகாதாரப் பிரச்சினைகள்

1. கடும் பல்வலி

பல் அல்லது தாடையில் உள்ள பிரச்சினைகளால் பல்லைச் சுற்றி வலி உண்டாகிறது. பல் வலி ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுக வேண்டும். கீழே கொடுக்கப்படுபவைத் தற்காலிக நிவாரணத்திற்காக:

 • உப்பு நீரால் கொப்பளிக்க வேண்டும். தங்கி இருக்கும் உணவுத் துணுக்குகளை மெல்லிய பல்லிழையால் அகற்ற வேண்டும். கூர்மையான எதையும் பயன்படுத்தி அழுக்குகளை அகற்றினால் அது பல்லைச் சேதப்படுத்தி காயம் உண்டாக்கலாம்.
 • வலி நிவாரண மருந்தைப் பல் மருத்துவரைப் பார்க்கும் வரை பயன்படுத்தலாம்.
 • வலிக்கும் பல்லை மெதுவாக அழுத்திக் கொடுத்தால் 50 % வலி குறையலாம். கன்னத்தில் குளிர் ஒத்தடம் கொடுத்து வீக்கத்தைக் குறைக்கலாம்.
 • சில மருத்துவர்கள் கிராம்பு அல்லது கிராம்புத் தைலம் பயன் படுத்தி வலியைக் குறைக்கப் பரிந்துரை செய்யலாம்.

2. பல் அடைப்பு அகலுதல்

 • உடனடியாகப் பல்மருத்துவரை அணுகவும்
 • தற்காலிகமாக குழியில் ஒரு சர்க்கரையற்ற பசையையோ அல்லது கடையில் கிடைக்கும் பல் சிமெண்டையோ பயன்படுத்தி அடைக்கலாம்.

3. பல்மூடி அகலுதல்

சில வேளைகளில் பல் மூடிகள் அகன்று விடுகின்றன. போதுமான அளவுக்குப் பல் சிமெண்ட் இல்லாததும் மூடி சரியாகப் பொருந்தாததும் இதற்குக் காரணமாகலாம். இவ்வாறு நிகழ்ந்தால் மூடியை ஒரு ஜிப்புள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து பல்மருத்துவரிடம் கொண்டு வந்தால் அவர் சிமெண்ட் இட்டு அதை மறுபடியும் பொருத்துவார். மூடியை இழந்ததால் அசௌகரியம் இல்லை என்றாலும் தோற்றம் பாதிக்கப்படவில்லை என்றாலும் நீங்களாகவே மூடியைப் பொருத்த வேண்டாம்.

பல்லில் பொருத்த வேண்டும் என்றால் முதலில் அதை நன்கு கழுவ வேண்டும். மூடியில் தங்கியுள்ள சிமெண்டையும் அழுக்குகளையும் ஒரு பல் குத்தும் குச்சியைக் கொண்டு அகற்ற வேண்டும். உலர்ந்த பஞ்சால் துடைக்கவும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் தற்காலிக பல் ஒட்டுப்பசை அல்லது சிமெண்டால் மூடியை மீண்டும் பொருத்தலாம். பின் உடனடியாக பல்மருத்துவரை அணுகவும்.

4. மூடி இழப்பு

மூடி விழுந்து விட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். பல் மருத்துவரை உடனடியாகப் பார்க்க முடியவில்லை என்றால் பஞ்சில் கிராம்புத் தைலம் தடவிப் பல்லில் உணர்ச்சியுள்ள எல்லா இடங்களிலும் பூசவும். முடிந்தால் மூடியில் பற்பசை அல்லது பல் ஒட்டும் பசை தடவி மூடியை அதன் இடத்தில் வைக்கவும். வேறு எவ்விதமான பசைகளையும் பயன்படுத்தக் கூடாது.

5. பல்கட்டி

 • சொத்தைப் பல்லின் மேல் உலர்ந்து கறுத்த தேநீர்ப்பையையோ அல்லது உருளைக்கிழங்கு துண்டையோ ஒரு சில மணிநேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். இது தொற்றைக் குறைத்து சீழை வடித்து வலியையும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தும்.
 • அழற்சி உள்ள இடத்தில் உள்ள தொற்றைக் குறைக்க 1.5 % ஹைடிரஜன் பெராக்சைடால் வாயைக் கொப்பளிக்கவும்.
 • கட்டி உடைந்து விட்டால் பல் துலக்கி ஹைடிரஜன் பெராக்சைடால் மீண்டும் கொப்பளிக்கவும்.
 • சீழை அகற்ற கன்னத்தை மெதுவாக அழுத்தவும். பலமாக அழுத்தினால் சீழ் இரத்த ஓட்டத்திலும் அருகில் உள்ள திசுக்களிலும் பரவி மேலும் பல தீவிரமான தொற்றை உருவாக்கக் கூடும்.
 • தகுந்த மருந்தைப் பல்மருத்துவர் உதவியுடன் உட்கொள்ளவும்.
 • பல் கட்டி போன்ற வாய்த் தொற்றால் இதய அழற்சி, முக எலும்பு அழற்சி போன்ற பிரச்சினைகள் உடலின் பிற பாகங்களிலும் உண்டாகக் கூடும். அதனால் மருத்துவ உதவியை நாடுதல் இன்றியமையாதது ஆகும்.

6. ஈறில் கட்டியும் பல்லைச்சுற்றிய நோய்களும்

பல்குத்தும் குச்சி போன்றவற்றாலும் மிக அழுத்தி பல் துலக்குவதாலும் பல் ஈறுகளில் கட்டி ஏற்படுகிறது. ஈறுகளில் சிராய்ப்பு உண்டாவதால் பாக்டீரியாக்கள் அவ்விடத்தில் தொற்றை உருவாக்குகின்றன. முதலில் அவ்விடம் சிவப்பாகவும் பின் மென்மையாகவும் சீழ் கட்டியதாகவும் மாறுகிறது.

 • பல் மருத்துவரை அணுகும் முன் உப்பு நீரையும் கிராம்புத் தைலத்தையும் பயன்படுத்தித் தற்காலிகமாக வலியைக் குறைக்கலாம்.
 • சில வேளைகளில் வாய்த்திரவங்களையும் பெரக்சைடையும் பயன்படுத்தும் போது தற்காலிக நிவாரணம் ஏற்படலாம்.
 • நுண்ணுயிர்க் கொல்லிகளையும் உட்கொள்ளலாம். எனினும் 24-48 மணி நேரத்துக்குள் பல்மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.

7. பல் உடைதலும் பல் விழுதலும்

 • விபத்தினால் பல் உடையும் வாய்ப்புள்ளது. உடனே மருத்துவரிடம் சென்று விட வேண்டும்.
 • உடைந்த பல் துண்டுகளைப் பல் மருத்துவரிடம் காட்டவும்
 • பசைகளைப் பயன் படுத்தி ஒட்டவோ நீங்களாகவே பழுது பார்க்கவோ கூடாது.

வாய் சுத்தத்துக்கான ஆலோசனைகள்

 • தினமும் இருமுறை மென்மையான முடி கொண்ட பல்துலக்கியால் பல்துலக்கவும்
 • உயிர்ச்சத்து-சி நிறைந்த பழங்களை உண்ணவும்
 • ஆரோக்கியமான உணவை உண்ணவும்; உணவுக்கு இடையில் நொறுக்குத்தீனிகளை உட்கொள்ள வேண்டாம்
 • மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது முடி சிதைந்தவுடன் பல்துலக்கியை மாற்றவும்
 • ஒவ்வொரு உணவுக்குப் பின்னும் பல்துலக்கவும்
 • ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் சோதனை செய்யவும்
 • பற்களுக்கு இடையில் இருக்கும் உணவுத் துணுக்குகளையும் பற்காறையையும் அகற்ற தினமும் பல்லிழையால் சுத்தம் செய்யவும்.
 • மிகவும் அழுத்திப் பல்துலக்கக் கூடாது. பல் பூச்சு தேய்ந்து ஈறுகளில் எரிச்சல் உண்டாகும். மேலும் கீழுமாக மென்மையாகத் துலக்கவும்.
 • வாய்ப் புற்று நோய்க்கு முக்கிய காரணிகளான புகையிலையையும் மதுவையும் தவிர்க்கவும்
 • ஒவ்வொரு காலையும் நாக்கு வளிப்பானை பயன்படுத்தி நாக்கில் படிந்துள்ள அழுக்கை அகற்றி வாய்சுவாசத்தைத் தூய்மைப் படுத்தவும்
 • பற்சிதைவைத் தவிர்க்க அதிக சர்க்கரையுள்ள  உணவையும் பானத்தையும் தவிர்க்கவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார வலைதளம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate