பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பலநீர்க்கட்டி கருப்பை நோய்த்தாக்கம் (PCOS)

பலநீர்க்கட்டி கருப்பை நோய்த்தாக்கம் (PCOS) பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இனப்பெருக்கப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்குப் பொதுவாகக் காணப்படும் இயக்குநீர் கோளாறுகளில் ஒன்று பலநீர்க்கட்டி கருப்பை நோய்த்தாக்கம் (PCOS) ஆகும். மலட்டுத் தன்மை உடையவர்களுக்கு இந்நோயே பரவலாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோய்த்தாக்கம் துல்லியமாக இன்னும் வரையறுக்கப்படவில்லை. எனவே இதன் சரியான இருப்பு விவரம் தெரியவில்லை. உலகம் முழுவதும் இதன் இருப்பு 2.2 %-26% வரைப் பெரிதும் வேறுபடுகிறது. சீனாவில் 2%-7% மற்றும் ஸ்ரீலங்காவில் 6.3% காணப்படுகிறது. இந்தியாவிலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தென் இந்தியாவில் 9.13 %-ம், மகாராஷ்ட்டிராவில் 22.5% நோயிருப்பும் (ரோத்தர்தாம் அளவீட்டுப்படி) கண்டறிவிக்கப்பட்டது (10.7 % ஆண்ட்ரோஜன் மிகைப்புச் சங்கம் அளவீடு).

PCOS, முதன்முதலில் 1935-ல் ஸ்டெயின் மற்றும் லெவெந்தாலால் அறிவிக்கப்பட்டது. மாதவிலக்கினமை, தலைமயிர்மிகைப்பு, மற்றும் பலநீர்க்கட்டி கொண்ட விரிவடைந்த கருப்பைகள் ஆகியவற்றின் இணைந்த அறிகுறிகள் என விவரிக்கப்பட்டது.

முறைதவறிய மாதவிலக்கு, மிகையான உடல் மற்றும் முக முடி மற்றும் முக்கிய அறிகுறியான பலநீர்க்கட்டி கருப்பைகள் இந்நோயால் ஏற்படுகின்றன. பெயருக்கு ஏற்றபடி பொதுவாக சிறு, முத்து அளவில் கொத்தாக கருப்பையில் கட்டிகள் உண்டாகும். இக்கட்டிகளில் பாய்மங்களும் முதிராத முட்டைகளும் காணப்படும். இந்நோய் உடைய பெண்களின் உடலில் ஆண் இயக்குநீர் அதிகமாகச் சுரக்கும். இந் நோய்த்தாக்கத்தின் சில அறிகுறிகளுக்கு இதுவே காரணம்.

கணையநீர் எதிர்ப்பு, நீரிழிவு வகை 2, அதிகக் கொலஸ்ட்ரால், மிகை இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்றவை ஏற்படும் ஆபத்து இருப்பதால் ஆரம்பக் கட்டத்திலேயே இந்நோயைக் கண்டறிவது முக்கியம்.  இளமைக் காலத்தில் இது ஒரு வளர்ந்து வரும் சுகாதாரப் பிரச்சினை. எனவே பிற்கால நோய்த்தாக்கத்தைத் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆரம்ப சிகிச்சையும் இன்றியமையாதவை.

நோயறிகுறிகள்

பெண்களுக்குப் பெண்கள் நோயறிகுறிகள் வேறுபடும். PCOS-ன் அறிகுறிகளில் அடங்கும் சில:

 • மலட்டுத்தன்மை: பெண்களின் மலட்டுத்தன்மைக்கு PCOS மிகவும் பரவலான காரணம் ஆகும். பிற பெண்களை விட நாள் கழித்து குழந்தை உருவாகும். அல்லது திட்டமிட்டதை விட குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைதலும் அதிகமாக இருக்கும்.
 • இடைக்கு இடை மற்றும்/அல்லது முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கே வராமை – பூப்பில் இருந்தே மாதவிலக்கு முறையின்மை PCOS நோய்த்தாக்கத்தில் பொதுவாக இருக்கும்.
 • மயிர்மிகைப்பு – முகம், நெஞ்சு, முதுகு, பெருவிரல் அல்லது கால்விரலில் அதிக முடி வளர்ச்சி.
 • முகப்பரு, தோலில் எண்ணெய்ப்பசை அல்லது பொடுகு.
 • எடை கூடுதல் அல்லது உடல்பருமன், பொதுவாக இடுப்பைச் சுற்றி கூடுதல் எடை.
 • ஆண்களைப் போல வழுக்கு அல்லது முடிஅடர்த்தி குறைதல்.
 • கழுத்து, புயம், மார்பு, தொடை ஆகிய இடங்களில் கட்டியான அடர் பழுப்பு அல்லது கருப்புத் தோல் திட்டு.
 • அக்குள் அல்லது கழுத்துப் பகுதியில் தோல் மடிப்புகள்.
 • இடுப்பு வலி
 • மனக்கலக்கம் அல்லது மனவழுத்தம்.
 • தூங்கும்போது மூச்சுத்திணறல்.
 • கருப்பையில் கட்டிகள்.

காரணங்கள்

PCOS-ன் காரணங்கள் தெரியவில்லை. மரபியலை உள்ளடக்கிய பல காரணிகள் பங்காற்றுவதாக நிபுணர்கள் நினைக்கின்றனர். PCOS உள்ளப் பெண்களின் தாய் அல்லது சகோதரிக்கு அந்நோய் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இயக்குநீர் சமநிலை இழப்பு PCOS-ன் முக்கியமான அடிப்படைப் பிரச்சினை. PCOS கொண்ட பெண்ணின்  கருப்பைகள் இயல்பை விட அதிகமான ஆண் இயக்குநீரை உற்பத்தி செய்கின்றன. ஆண் இயக்கு நீர் பெண் உடலிலும் உற்பத்தி ஆகிறது.  இந்த இயக்கு நீரின் அளவு கூடும் போது ஒவ்வொரு மாதமும் கருப்பையில் முட்டை உற்பத்தி ஆவதும் வெளியிடப்படுவதும் பாதிக்கப்படுகிறது.

கணையநீரும் PCOS-ஸோடு இணைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சர்க்கரை, மாவுப்பொருள் மற்றும் பிற உணவுகளை உடல் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் சேமிக்கவும் தக்க ஆற்றலாக மாற்றுவதை கணையநீர் என்னும் இயக்குநீர் கட்டுப்படுத்துகிறது. PCOS கொண்ட பல பெண்களுக்கு மிக அதிகமான கணையநீர் உடலில் உள்ளது. ஏனெனில் அதை அவர்கள உடலால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிகைக் கணையநீர் ஆண் இயக்கு நீர் உற்பத்தியை அதிகரிப்பது போல் தோன்றுகிறது. அதிக ஆண் இயக்கு நீரால் பின் வரும் விளைவுகள் ஏற்படலாம்:

 • முகப்பரு
 • மிகை முடி வளர்ச்சி
 • எடை கூடுதல்
 • கருமுட்டை உற்பத்தி-வெளியீடு பிரச்சினை.

நோய்கண்டறிதல்

PCOS-ஐக் கண்டறிய வெவ்வேறு அளவுகோல்கள் உள்ளன:

 • ரோத்தர்தாம் அளவுகோல் (2004): பின்வரும் மூன்று நிபந்தனைகளில் குறைந்தபட்சம் இரண்டை உள்ளடக்கி இருக்கும்: மருத்துவ மற்றும்/அல்லது உயிர்வேதியல் ஆண் இயக்குநீர் மிகைப்பு, முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கின்மை, மற்றும் பலநீர்க்கட்டி கருப்பைகள் (1 கருப்பையில் 12 அல்லது மேற்பட்ட நுண்ணறைகள்).
 • (அண்ணீரகம் அல்லது கருப்பைக் கட்டி, தைராயிடு செயலிழப்பு, பிறவி அண்ணீரக மிகைத்திசு வளர்ச்சி, பால்சுரப்பு இயக்குநீர் மிகைப்பு, அங்கப்பாரிப்பு, கஷிங் நோய்த்தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாதவிலக்குக் கோளாறுகளை ஏற்படுத்தும் அனைத்தையும் விலக்கிய பின்)
 • ஆண் இயக்குநீர் மிகைப்பு சங்கம், 2006, PCOS-ஐ முக்கியமாக ஆண் இயக்கு நீர் மிகைப்புப் பிரச்சனையாகவே கருதியது. ஆண் இயக்கு நீர் மிகைப்பு (மருத்துவ மற்றும்/அல்லது உயிர்வேதியல்), கருப்பை செயலிழப்பு மற்றும்/அல்லது பலநீர்க்கட்டி கருப்பைகள் கொண்ட (தொடர்புடைய கோளாறுகளை விலக்கி) நோய்த்தாக்கமாக வரையறுத்தது.
 • அமெரிக்க மருத்துவ உட்சுரப்பியல் நிபுணர்கள் சங்கம் (AACE) மற்றும் பலநீர்க்கட்டி கருப்பை நோய்த்தாக்கம்-ஆண் இயக்குநீர் சங்கங்களின் கருத்துப்படி பின்வரும் மூன்று நிபந்தனைகளில் இரண்டை அடிப்படையாக வைத்து PCOS கண்டறியப்படுகிறது: நீடித்த மாதவிலக்குப் பிரச்சினைகள் (சுழற்சி நீளம் 35 நாட்களுக்கு மேல்), ஆணியக்குநீர் மிகைப்பு (மருத்துவ அல்லது உயிரியல்) மற்றும் பல நீர்க்கட்டி கருப்பைகள்.

PCOS-ஐ மதிப்பிட சோதனைகள்:

 • நுண்ணறை தூண்டும் இயக்குநீர் (FSH)
 • லுட்டனிசிங் இயக்குநீர்
 • ஆணியக்குநீர்
 • பெண்ணியக்குநீர்
 • பால் இயக்குநீர் பிணைப்புக் குளோபுலின் (SHBG)
 • ஆண்ட்ரோஸ்டெனிடியோன்
 • மனித கருவெளியுறைப் பாலியக்குநீர் (HCG)
 • எதிர்-முலேரியன் இயக்குநீர்

ஒரே மாதிரியான உடல்குறிகளையும் நோயறிகுறிகளையும் கொண்ட பிற மருத்துவ நிலைகளை விலக்க சோதனைகள்:

 • தைராயிடு தூண்டும் இயக்குநீர்  (TSH) – தைராயிடு செயலிழப்பு இல்லை என்று விலக்க.
 • கோர்ட்டிசால்- கஷிங் நோய்த்தாக்கம் விலக்க.
 • ஊனீர் புரோலேக்டின் – புரோலேக்டிம் அதிகரிப்பை விலக்க.
 • 17- ஹைடிராக்சிபுரோகெஸ்ட்டரோன் – மிகவும் பொது வடிவமான பிறவித் திசுமிகைப்பை விலக்க.
 • ஊனீரற்ற கணையநீர் போன்ற வளர்ச்சிக் காரணிகள்-1 (IGF-1) –மிகை வளர்ச்சி இயக்குநீரை விலக்க (அங்கப்பாரிப்பு).
 • டிஹைடிரோஎபிஆண்ட்ரோஸ்டெரோன் சல்ஃபேட் (DHEAS) – அண்ணகச்சுரப்பிக் கட்டியை விலக்க.

பெண்களின் ஆரோக்கியத்தைச் சோதித்து சிக்கல்களைக் கண்டறியும் பிற இரத்தச் சோதனைகள்:

 • லிப்பிட் விவரம் – இதய நோய்கள் உருவாவதைக் கண்டறிய உதவுகிறது. குறைந்த அளவு அதிக அடர்த்தி லிப்போபுரோட்டின்கள் (HDL), அதிக அளவு குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டின்கள் (LDL), அதிக மொத்தக் கொலஸ்ட்ரால் மற்றும்/அல்லது அதிக டிரைகிளிசரைடுகள் (டைஸ்லிபிடெமியா).
 • குளுகோஸ் அல்லது ஹீமோகுளோபின் A1c (HbA1c) – நீரிழிவு நோயைக் கண்டறிய.
 • கணையநீர்- அதிகரிப்பு பொதுவாக இன்சுலின் எதிர்ப்பை உணர்த்தும்.

பிம்ப ஆய்வுகள்:

PCOS ஐ மதிப்பிட பின்வரும் பிம்ப ஆய்வுகளைப் பயன்படுத்தலாம்:

 • கருப்பை மீயொலி வரைவு, மாறுபக்கயோனி அணுகுமுறை பயன்படுத்துதல் அனுகூலமானது.
 • அண்ணகச்சுரப்பி மற்றும் கருப்பைகளைச் சோதிக்க இடுப்பு சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ.

நோய் மேலாண்மை

PCOS-க்குக் குணப்படுத்தும் சிகிச்சை இல்லை. அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதையும் சிக்கல்களைத் தவிர்க்க நிலைமைகளை மேலாண்மை செய்வதையும்தான் மருத்துவம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சை பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். PCOS உள்ள அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக மிகை உடலிடை கொண்டவர்களுக்கு, ஆரோக்கிய உணவும் தொடர் உடல்பயிற்சியும் இணைந்த வாழ்க்கைமுறை மாற்றம் பரிந்துரைக்கப்படுகிறது.

வாழ்க்கைமுறை மாற்றம்: இளம் பெண்களுக்கும், பல நீர்க்கட்டி கருப்பை நோய்த்தாக்கம் உடையவர்களுக்கும் உணவு மற்றும் உடல்பயிற்சி போன்ற சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் முதல் கட்ட சிகிச்சையாகக் கருதப்படுகின்றன. மாதவிலக்கு சுழற்சியை சீரமைப்பு செய்வதிலும், PCOS உள்ள பருமனான பெண்கள் கருவுருவதிலும் இந்த மாற்றங்கள் பலன் தருகின்றன. உடல் பருமனான பெண்கள் எடை இழக்கும் போது ஆணியக்க நீர் அளவுகளில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவுக்குக் குறிப்புகள்:

 • பதப்படுத்தப்பட்ட, சீனி சேர்க்கப்பட்ட உணவுகளை மட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலும் நிறைகொழுப்பும் குறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.
 • முழுதானியம், பழங்கள்,காய்கறிகள், குறைந்த கொழுப்பு இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கவும், கணையநீரை உடல் பயன்படுத்திக் கொள்ளவும், இயக்குநீர் அளவுகளை இயல்புநிலைப் படுத்தவும் இது உதவுகிறது. 10 சதவிகித எடை இழப்பு முறையான சுழற்சியை மீட்டெடுக்கும்.

மருந்தியல் சிகிச்சை: முட்டையற்ற மாதவிலக்கு, முடிமிகைப்பு, முறையற்ற மாதவிலக்கு போன்ற வளர்சிதைமாற்ற கோளாறுகளுக்கு மருந்தியல் சிகிச்சை பயன்படுத்தப் படுகின்றன.

வாய்வழி கருத்தடை மருந்துகள்: கர்ப்பம் அடைய விரும்பாதவர்களுக்கு மாதவிலக்கை முறைப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன.

கருப்பிடிப்பு மருந்துகள்: PCOS உள்ளப் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி இன்மையே மலட்டுத்தன்மைக்குப் பொதுவான காரணம். இதற்கு முட்டை உற்பத்தியைத் தூண்டும் பல மருந்துகள் உண்டு.

 • முட்டை உற்பத்தியைத் தூண்ட குளோமிஃபீன் சிகிச்சை.
 • குளோமிஃபீனுடன் மெட்ஃபார்மின்* - இணைத்துக் கொடுப்பதன் மூலம் மருந்தளவைக் குறைக்கலாம்.

(*மெட்ஃபார்மின் (குளூக்கோஃபேஜ்) நீரிழிவு வகை-2 சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகிறது. PCOS அறிகுறிகளுக்கும் இது பலன் அளிக்கிறது. இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு ஆணியக்குநீர் உற்பத்தியையும் குறைக்கிறது. மிகை முடி வளர்ச்சியைக் குறைத்து முட்டை உற்பத்தியிலும் உதவி செய்கிறது.)

 • கொனடோடிராப்பின்கள்: குளோமிஃபீன் சிகிச்சைக்கு பலன் இல்லாத போது PCOS நேர்வுகளுக்கு இம்மருந்து பயன்படுத்தப் படுகிறது.

மிகை முடிக்கும் அதிக ஆண் இயக்கு நீருக்கும் மருந்து: எதிர்-ஆணியக்குநீர் மருந்து முடி மிகைப்பையும் முகப்பருவையும் கட்டுப்படுத்தும். இவை கருத்தடை மாத்திரைகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படும். கர்ப்பம் ஏற்பட விழைவோர் இதை எடுக்கக் கூடாது.

அறுவை மருத்துவம்: மருந்துகள் அளித்தும் முட்டை ஏற்படாத போது PCOS அறுவை பரிந்துரைக்கப்படும். லேப்ரோஸ்கோப்பிக் அறுவை பலதிறப்படும். அவற்றில் அடங்குவன:

 • மின்னறுவை
 • லேசர் துளையிடல்
 • பன்திசுவளர்ச்சி

சிக்கல்கள்

PCOS உள்ள பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் பேற்றில் சிக்கல் எழும் ஆபத்து அதிகம் உள்ளது:

 • PCOS அற்ற பெண்களோடு ஒப்பிடும் போது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கருக்கலைவு மூன்று மடங்கு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
 • கர்ப்ப கால நீரிழிவால் பெரிய அளவில் குழந்தை பிறக்கலாம்.
 • 20 வார கர்ப்பத்தில் திடீர் இரத்த அழுத்த அதிகரிப்பும் உடல் வீக்கமும் இருக்கும்.
 • குறைப்பிரசவம்
 • பின்வரும் நோய்கள் உருவாகும் ஆபத்தோடு PCOS தொடர்புடையது:
 • மிகை இரத்த அழுத்தம்
 • அதிக கொலஸ்ட்ரால்
 • மனக்கலக்கமும் மனவழுத்தமும்
 • தூங்கும் போது மூச்சடைப்பு
 • கருப்பை உட்தோல் கட்டியாகி புற்றுநோய்
 • மாரடைப்பு
 • நீரிழிவு
 • மார்பகப் புற்று

தடுப்புமுறை

PCOS-ஐத் தடுக்க முடியாது. ஆனால், மலட்டுத்தன்மை, வளர்சிதைமாற்ற நோய்த்தாக்கம், உடல்பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற நீண்ட கால சிக்கல்களைத் தடுக்க ஆரம்பக் கட்ட நோய்கண்டறிதலும் மருத்துவமும் உதவுகின்றன.

ஆரோக்கியமான உணவு, தொடர் உடல்பயிற்சி, ஆரோக்கியமான உடலெடை ஆகியவை அடங்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை பல சிக்கல்களைத் தடுக்கிறது. இந்தச் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிய தொடர் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடவடிக்கைகள்:

(அ) சரியான முறையில் உண்ணுதல் -

 • பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை சேர்த்த உணவை மட்டுப்படுத்தவும்.
 • அதிக முழு தானியம், பழங்கள் (சாறு அல்ல), காய்கறிகள் (பச்சைக் கீரை, காய்கள்) மற்றும் கொழுப்பு குறைவான இறைச்சி.
 • குறைந்த கிளைசெமிக் அட்டவணை (ஒரு உணவு எவ்வளவு விரைவாகவும் கடுமையாகவும் சர்க்கரை மற்றும் கணையநீர் அளவைக் கூட்டுகிறது என்பதன் அளவீடு) கொண்ட மாவுப்பொருளைத் தேர்ந்தெடுக்கவும். குறைந்த கிளைசெமிக் அட்டவணை கொண்ட (முழுதானிய ரொட்டி, தானியங்கள்) உணவைத் தேர்வதன் மூலம் மாவுப்பொருள் இச்சையைக் குறைக்க உதவுகிறது.
 • கொட்டைகள், விதைகள், எண்ணெய்ப் பசை மீன்கள், அவகேடோ போன்றவற்றில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்பைத் தேர்ந்து நிறை கொழுப்பைத் தவிர்க்கவும் (பால் பொருட்கள் மற்றும் சிவப்பு இறைச்சி).
 • சிறிய அளவு ஆரோக்கியமான உணவை அடிக்கடி உண்டு பசியையும் உணவு இச்சையையும் மேற்கொள்ளவும்; காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.
 • PCOS உள்ள இளம் பிள்ளைகளுக்குத் தாவர அடிப்படையிலான புரத உணவும் (பீன்ஸ், கொட்டைகள்) மென்புரதமும் சிறந்த ஆரோக்கிய உணவுகள்.

(ஆ) உடல்பயிற்சி: உடல் பயிற்சி கணையநீர் அளவைக் குறைத்து எடை இழப்புக்கு உதவுவதால் PCOS உள்ள பெண்கள் உடல் பயிற்சி செய்வது இன்றியமையாதது ஆகும்.

(இ) புகைப்பதைத் தவிர்த்தல்.

(உ) மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்.

(ஊ) சுமையைப் பகிர்ந்து குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் நல்ல ஆதரவைப் பெறுதல்.

ஆரோக்கியமாக உண்ணுதல், சுறுசுறுப்பாக இருத்தல், ஆரோக்கியமான எடை பேணுதல் (அல்லது நீங்கள் அதிக எடையோடு இருந்தால் ஒரு சிறு அளவாவது குறைத்தல்) ஆகியவை PCOS அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.05263157895
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top