অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமனித்தடிப்பு

தமனித்தடிப்பு

அறிமுகம்

தமனிகளின் உட்புறத்தில் அடைப்புகள் உருவாகும் நோயே தமனித் தடிப்பு என அழைக்கப்படுகிறது. உடலின் பகுதிகளுக்கு உயிர்வளி செறிந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களே தமனிகள்.

இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு, கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் பிற பொருட்களால் அடைப்பு உருவாகிறது. காலம் செல்லச்செல்ல இவை கடினமாகித் தமனிகளை ஒடுக்கம் அடையச் செய்கின்றன. இதனால் உறுப்புகளுக்கும் உடலின் பல பகுதிகளுக்கும் உயிர்வளி செறிந்த இரத்தம் பாய்வது தடை படுகிறது.

மாரடைப்பு, பக்கவாதம் அல்லது மரணத்தைக் கூட தமனித் தடிப்பு ஏற்படுத்தலாம்.

நோயறிகுறிகள்

ஒரு தமனியைக் கடுமையாக ஒடுக்கும் வரை அல்லது முற்றிலுமாக அடைக்கும் வரைத் தமனித்தடிப்புப் பொதுவாக அறிகுறிகளைக் காட்டுவதில்லை. மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற மருத்துவ ரீதியான அவசரநிலை ஏற்படும் வரை தங்களுக்கு இந்நோய் இருப்பது பலருக்கும் தெரியாது.

ஒரு சிலருக்கு இந்நோய் அறிகுறிகள் காணப்படலாம். பாதிக்கப்பட்டிருக்கும் தமனியைப் பொறுத்து அறிகுறிகள் அமையும்.

இதயத் தமனிகள்

இதயத் தமனிகள் உயிர்வளி செறிந்த இரத்தத்தை இதயத்துக்கு அளிக்கின்றன. இவற்றைக் காறைகள் அடைத்துவிட்டால் நெஞ்சுவலி ஏற்படும். இதயத் தசைகள் போதுமான அளவுக்கு உயிர்வளியைப் பெறாவிட்டால் நெஞ்சுவலி அல்லது அசௌகரியம் ஏற்படும்.

நெஞ்சில் அழுத்துவது அல்லது பிசைவது போல் இதயவலி தோன்றும். தோள், புயம், கழுத்து, தாடை அல்லது முதுகிலும் வலியை உணரலாம். இதய வலி அஜீரண வலி போல் தோன்றக் கூடும். வேலை செய்யும் போது அதிகரித்து ஓய்வு எடுக்கும் போது குறையும். உணர்ச்சியால் உண்டாகும் மனவழுத்தமும் வலியைத் தூண்டலாம்.

மூச்சடைப்பும் இதயத் துடிப்பில் இலயமின்மையும் இதய நோயின் பிற அறிகுறிகள் ஆகும்.

இதயத்தின் நுண் தமனிகளிலும் அடைப்பு உருவாகலாம். இது இதய நுண்குழல் நோய் எனப்படும். இதய வலி, மூச்சடைப்பு, தூக்கப் பிரச்சினைகள், களைப்பு, சக்தி இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகள்.

தலைத்தமனிகள்

தலைத்தமனிகள் மூளைக்கு உயிர்வளி செறிந்த இரத்தத்தை அளிக்கின்றன. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாத அறிகுறிகள் தென்படும். அவற்றில் அடங்குவன:

  • திடீர் பலவீனம்
  • வாதம் அல்லது முகம், கை அல்லது கால்களின் உணர்வின்மை (குறிப்பாக ஒரு பக்கமாக).
  • குழப்பம்
  • பேசுவதிலும் கேட்பதிலும் சிரமம்.
  • ஒரு அல்லது இரு கண்னிலும் பார்வைப் பிரச்சினை.
  • மூச்சுவிடுவதில் சிரமம்.
  • தலைக்கிறக்கம், நடப்பதில் சிரமம், சமநிலை அல்லது ஒத்திசைவு இழப்பு மற்றும் விளக்க இயலாதவாறு கீழே விழுதல்.
  • சுய உணர்வு இழத்தல்
  • திடீர், கடும் தலைவலி

புறத் தமனிகள்

கால், கை மற்றும் இடுப்புக்கு உயிர்வளி செறிந்த இரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய தமனிகளிலும் அடைப்பு உண்டாகலாம் (புறத் தமனி நோய்).

இந்த முக்கியத் தமனிகள் ஒடுங்கினாலோ அடைபட்டாலோ உணர்வின்மை, வலி மற்றும் சிலவேளைகளில் அபாயகரமான தொற்றுக்கள் ஏற்படலாம்.

சிறுநீரகத் தமனிகள்

சிறுநீரகங்களுக்கு உயிர்வளி செறிந்த இரத்தத்தைக் கொண்டு செல்பவை சிறுநீரகத் தமனிகள் எனப்படும். இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் நீடித்த சிறுநீரக நோய் ஏற்படும். நாள் செல்லச் செல்ல சிறுநீரக நோயால் சிறுநீரகம் செயலிழக்கும்.

ஆரம்ப கட்ட சிறு நீரக நோய்க்கு அறிகுறி இருப்பதில்லை. நோய் அதிகரிக்கும் போது களைப்பு, சிறுநீர்கழிக்கும் முறையில் மாற்றம் (அடிக்கடி அதிகமாக அல்லது குறைவாக), பசியின்மை, குமட்டல், கை அல்லது பாதங்களில் வீக்கம், அரிப்பு அல்லது உணர்வின்மை மற்றும் மனஒருமையில் பிரச்சினை ஆகியவை ஏற்படும்.

காரணங்கள்

தமனித்தடிப்பின் சரியான காரணம் தெரியவில்லை. தமனித்தடிப்பு சிறு வயதில் தொடங்கி மெதுவாக அதிகரிக்கும் சிக்கலான நோய் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வயதாக ஆக அது வேகமாக அதிகரிக்கிறது.

தமனிகளின் உட் சுவரை சில காரணிகள் பாதிக்கும் போது தமனித்தடிப்பு தொடங்கலாம். அக்காரணிகளில் அடங்குவன:

  • புகைத்தல்
  • இரத்தத்தில் அதிக அளவிலான சில கொழுப்புகள் மற்றும் கொலாஸ்ட்ரால்கள்
  • மிகை இரத்த அழுத்தம்
  • கணையநீர் எதிர்ப்பு அல்லது நீரிழிவால் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை

முக்கிய ஆபத்துக் காரணிகள்

  • ஆரோக்கியமற்ற இரத்தக் கொலஸ்ட்ரால் அளவுகள். மிகை எல்டிஎல் கொலஸ்ட்ரால் (கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் குறைந்த எச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்) அடங்கி இருத்தல்.
  • மிகை இரத்த அழுத்தம். தொடர்ந்து இரத்த அழுத்தம் 140/90 மிமிபா அளவிலேயே இருந்தால் மிகை இரத்த அழுத்தம் என்று கருதப்படும். நீரிழிவோ அல்லது நீடித்த சிறுநீரக நோயோ இருந்தால் 130/80 மிமிபா அல்லது அதிகம் மிகை இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படும். (மிமிபா என்பது பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவு – இந்த அலகு இரத்த அழுத்தத்தை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது).
  • புகைத்தல். புகைப்பழக்கம் இரத்தக்குழய்களை சிதைக்கும் அல்லது ஒடுக்கும், கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். போதுமான உயிர்வளி உடல் திசுக்களை அடைவதைப் புகைத்தல் தடை செய்கிறது.
  • கணையநீர் எதிர்ப்பு. உடலால் கணைய நீரைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியாவிட்டால் இந்நிலை ஏற்படுகிறது. கணைய நீர் ஓர் இயக்குநீர் ஆகும். இது இரத்த சர்க்கரை, செல்களுக்குள் புக உதவி செய்கிறது. இங்கு சர்க்கரை ஆற்றல் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும். கணையநீர் எதிர்ப்பால் நீரிழிவு ஏற்படலாம்.
  • நீரிழிவு. உடலால் போதுமான கணைய நீரை உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும் அல்லது உடலில் உள்ள கணைய நீரைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியாவிட்டாலும் உடலின் இரத்த சர்க்கரை அளவு மிகவும் கூடி நீரிழிவு நோய் உண்டாகிறது.
  • மிகை எடை அல்லது உடல்பருமன். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு ஆரோக்கியமானது எனக் கருதப்படும் எடைக்கு அதிகமான எடை இருந்தால் மிகை எடை அல்லது உடல்பருமன் என அழைக்கப்படும்.
  • உடல்செயல்பாடு குறைவு. உடல் செயல்பாடு குறைந்த அளவில் இருந்தால் அது தமனித்தடிப்பின் ஆபத்துக் காரணிகளான ஆரோக்கியமற்ற இரத்தக் கொலஸ்ட்ரால் அளவுகள், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு, மிகை எடை, உடல் பருமன் ஆகியவற்றை அதிகப்படுத்தும்.
  • ஆரோக்கியமற்ற உணவு. தமனித் தடிப்பு ஆபத்தை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் அதிகப் படுத்தும். நிறைவுற்ற மற்றும் மாறு கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் (உப்பு), மற்றும் சர்க்கரை, தமனித் தடிப்பு ஆபத்துக் காரணிகளை மோசமாக்கும்.
  • முதிர்ந்த வயது. வயதாக ஆக தமனித்தடிப்பு ஆபத்தும் அதிகரிக்கும். மரபியல் மற்றும் வாழ்வியல் காரணிகளால் வயதாகும் தமனிகளில் அடைப்புகள் உருவாகின்றன. நடுவயது அல்லது முதிர் வயதில் அறிகுறிகள் தென்படும் அளவுக்கு அடைப்புகள் உருவாகும். ஆண்களுக்கு 45 வயதுக்கு மேலும் பெண்களுக்கு 55 வயதுக்கு மேலும் இந்த ஆபத்து அதிகரிக்கிறது.
  • முன் இதய நோய்களின் குடும்ப வரலாறு. உங்கள் தந்தைக்கோ சகோதரர்க்கோ 55 வயதுக்கு முன்னும் உங்கள் தாய்க்கோ சகோதரிக்கோ 65 வயதுக்கு முன்னும் இதய நோய் கண்டறியப்பட்டு இருந்தால் தமனித்தடிப்புக்கான ஆபத்து உங்களுக்கு அதிகரிக்கிறது.

நோய்கண்டறிதல்

உடல் பரிசோதனை

உடல் பரிசோதனையில் நாடித்துடிப்பு பலவீனமாகவோ, இல்லாமல் இருப்பதையோ கண்டறியலாம் (உ-ம். கால் அல்லது பாதம்). பலவீனமான நாடி அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருப்பது தடைபட்ட தமனியின் அறிகுறியாகும்.

கண்டறிதல் சோதனைகள்

தமனித்தடிப்பைக் கண்டறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகள் தேவைப் படலாம். சோதனைகளால் நோய் உறுதி செய்யப்பட்ட பின் மருத்துவத்தைத் திட்டமிடுவது எளிதாக இருக்கும்.

இரத்தப் பரிசோதனை

இரத்தத்தில் காணப்படும் சிலவகைக் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், சர்க்கரை மற்றும் புரதங்கள் இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகின்றன. இவற்றின் அசாதாரண அளவுநிலை தமனித்தடிப்பு அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

மின்னிதயமானி (ECG)

இதய நோயால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இதயமானியால் கண்டறிய முடியும். இச்சோதனை முன்னர் ஏற்பட்ட மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள மாரடைப்பைக் காட்டும்.

நெஞ்சு எக்ஸ்-கதிர்

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் இதயம், நுரையீரல் மற்றும் இரத்தக்குழாய்கள் போன்ற உறுப்புகளையும் அமைப்புகளையும் ஒரு நெஞ்சு எக்ஸ்-கதிர் படம்பிடித்துக் காட்டுகிறது. இதயச் செயலிழப்பை நெஞ்சு எக்ஸ்-கதிரால் வெளிப்படுத்த முடியும்.

கணுக்கால் / மேற்கை குறியீடு

கணுக்காலின் இரத்த அழுத்தத்தைக் கையின் அழுத்தத்தோடு ஒப்பிட்டு எவ்வளவு தூரம் இரத்த ஓட்டம் சிறப்பாக உள்ளது என்பதை இச்சோதனை காட்டுகிறது. இச்சோதனை புறத் தமனி நோயைக் கண்டறிய உதவும்.

பிற சோதனைகள்

தமனியில் உருவாகி உள்ள அடைப்புகளைச் சரிவர நோக்க பிற சோதனைகள் செய்யப்படுகின்றன. காந்த அதிர்வு பிம்பம் (MRI) மற்றும் பாசிட்ரான் உமிழ்வு ஊடுகதிரியல் (PET) ஆகியவை எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.

நோய்மேலாண்மை

இதய ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள், மருத்துவ சிகிச்சை முறைகள் அல்லது அறுவை போன்றவை தமனித் தடிப்பு நோய் மேலாண்மையில் அடங்கும். சிகிச்சையின் இலக்குகளில் அடங்குவன:

  • இரத்த உறைவு ஆபத்தைக் குறைத்தல்
  • தமனித்தடிப்புத் தொடர்பான நோய்களைத் தடுத்தல்
  • அடைப்பு உருவாவதற்கான ஆபத்துக் காரணிகளைக் குறைத்து அடைப்பு உருவாவதைத் தடுத்தல் அல்லது அதன் வேகத்தைத் குறைத்தல்
  • அறிகுறிகளைப் போக்குதல்
  • அடைப்புற்றத் தமனிகளை அகலப்படுத்துதல் அல்லது மற்றுப்பாதை அமைத்தல்

மருந்துகள்

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த சில சமயம் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மட்டுமே போதுமானவை அல்ல. உதாரணமாக, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க கொழுப்பு மட்டுப்படுத்திகள் ஒருவருக்கு தேவைப்படலாம். இரத்தக் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

மருத்துவ முறைகளும் அறுவையும்

கடுமையான தமனித்தடிப்பு கொண்டவர்களுக்கு மருத்துவ அல்லது அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.

தடுப்புமுறை

ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது தமனித் தடிப்பையும் தொடர்பான நோய்களையும் தடுக்க உதவும். உங்களுக்கு இருக்கும் ஆபத்துக் காரணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தமனித்தடிப்பின் ஆபத்தும் அதிகரிக்கும்.

உங்களுக்குத் தமனித் தடிப்பு இருந்தால், மருத்துவர் மருத்துவ ஆலோசனையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பரிந்துரைபார். இதய ஆரோக்கியத்துக்கான வாழ்க்கை முறை மாற்றங்களில் இதய ஆரோக்கியத்துக்கான உணவுகள், ஆரோக்கியமான உடலிடையைப் பேணுதல், மனவழுத்தத்தைக் கையாளுதல், உடல் செயல்பாடுகள் மற்றும் புகைத்தலை விடுதல் ஆகியவை அடங்கும்.

ஆரோக்கிய இதயத்துக்கான உணவுமுறை

மருத்துவர் ஆரோக்கிய இதயத்துக்கான உணவுமுறையைப் பரிந்துரைபார். அதில் அடங்குவன:

  • கொழுப்பகற்றிய பால் போன்ற கொழுப்பற்ற அல்லது குறைந்த கொழுப்புப் பால்பொருட்கள்
  • ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட கிழங்கான், புள்ளிமீன் (டிரவ்ட்), சூரை போன்ற மீன்களை வாரத்திற்கு இருமுறை உண்ணுதல்.
  • ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரி, புரூண் போன்ற பழங்கள்
  • உளுந்து, பருப்பு, சுண்டல் பயறு, கறுப்புக்கண் பட்டாணி, லிமா பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள்
  • பச்சைப்பூக்கோசு, முட்டைக்கோசு, காரட் போன்ற காய்கறிகள்.
  • ஓட், பழுப்பரிசி, சோளம் போன்ற முழு தானியங்கள்.

ஆரோக்கியமான எடையைப் பேணுதல்

ஆரோக்கியமான எடையைப் பேணுதல் முழுமையான உடல் நலத்திற்கு முக்கியமானது. இதய நோய் ஆபத்தை அது குறைக்கும். உடல் நிறை அட்டவணையைத் (BMI) தெரிந்து கொள்ளுவதால் உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையை அறிந்து கொள்ளுவதோடு உடலில் இருக்கும் முழு கொழுப்பளவையும் மதிப்பிடலாம்.

ஓர் உடல் நிறை அட்டவணை:

  • 18.5 –க்குக் கீழ் குறைஎடை எனக் கருதப்படுகிறது.
  • 18.5 மற்றும் 24.9 –க்கு நடுவில் இயல்பான அளவு.
  • 25.0 மற்றும் 29.9 –க்கு நடுவில் மிகை எடை.
  • 30.0 அல்லது அதற்கு மேல் உடல் பருமன் எனக் கருதப்படுகிறது.
  • 25-க்கும் கீழான உடல் நிறை அட்டவணையே பொதுவான இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய மருத்துவர் அல்லது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் உதவி செய்வார்.

மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்

மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், மன ஓய்வு, பிரச்சினைகளைக் கையாளுதல் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுவது உணர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பின்வருபவைகளைப் போன்ற ஆரோக்கியமான மனவழுத்தம் குறைக்கும் நடவடிக்கைகளைக் கருதவும்:

ஒரு மனவழுத்த மேலாண்மைத் திட்டம்

  • தியானம்
  • உடல் செயல்பாடு
  • ஓய்வு சிகிச்சை
  • பிரச்சினைகளை நண்பர்களோடும் குடும்பதோடும் பேசுதல்

உடல் செயல்பாடு:

தமனித்தடிப்பின் ஆபத்துக் காரணிகளில் அடங்கும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL), மிகை இரத்த அழுத்தம், மிகை எடை போன்ற பலவற்றை உடல் செயல்பாடுகள் குறைக்கக் கூடும். உடல் செயல்பாடுகளால் நீரிழிவு ஆபத்தைக் குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலைக் (HDL) கூட்டவும் முடியும். இதனால் தமனித்தடிப்பைத் தடுக்க முடியும்.

புகைபழக்கத்தை விடுதல்

நீங்கள் புகைப்பவரோகவோ புகையிலைப் பழக்கம் உடையவராகவோ இருந்தால் அவற்றை விட்டொழிக்கவும். புகைத்தல் இரத்தக் குழாய்களைச் சிதைக்கவோ அல்லது ஒடுக்கவோ செய்யலாம். தமனித் தடிப்பு அபாயத்தைக் கூட்டலாம். மருத்துவர் மூலம் இவற்றை விட்டொழிக்க உதவும் மருந்துகளைப் பற்றிய ஆலோசனையைப் பெறலாம். புகைப்போர் புகையை சுவாசிப்பதையும் தவிர்க்கவும். உங்களால் இப்பழக்கத்தைத் தானாகவே விட முடியாவிட்டால் குழுக்களில் இணையவும். பல மருத்துவமனை, பணியிட மற்றும் சமுதாயக் குழுக்கள் புகைப்பழக்கத்தை விட்டொழிக்க வகுப்புகளை வழங்குகின்றன.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate