பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / கடைப்பெருங்குடல் புற்றுநோய்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கடைப்பெருங்குடல் புற்றுநோய்

கடைப்பெருங்குடல் புற்றுநோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கபட்டுள்ளன.

அறிமுகம்

மலப்பை புற்றுநோய் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற கடைப்பெருங்குடல் புற்றுநோய் என்பது, முன்பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியினால் உருவாகும் புற்றுநோய் ஆகும்.
இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் இடத்தைப் பொறுத்து, இவற்றை தனித்தனியாக முன்பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கலாம்.

பெருங்குடல் புற்றுநோயும் மலக்குடல் புற்றுநோயும் பல பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. முன்பெருங்குடல் மற்றும் மலக்குடல் என்பதை சுருக்கமாகச் சொல்வதற்கே “கடைப்பெருங்குடல்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

முன்பெருங்குடல் மற்றும் மலக்குடல்

 • முன்பெருங்குடலும் மலக்குடலும் ஜீரண மண்டலத்தின் பாகங்களாகும். இவை பெருங்குடல் என அழைக்கப்படும் ஒரு நீண்ட, தசைக் குழலை உருவாக்குகின்றன.
 • முன்பெருங்குடல் என்பது பெருங்குடலின் முதல் 4 முதல் 5 அடிகள் அடங்கிய பகுதியாகும்;
 • மலக்குடல் என்பது பெருங்குடலின் பிந்தைய பகுதியில் பல அங்குலங்கள் அளவுக்கு அமைந்துள்ளது.
 • பகுதி ஜீரணித்த உணவு சிறுகுடலிலிருந்து முன்பெருங்குடலுக்குள் நுழைகிறது.
 • முன்பெருங்குடல் உணவிலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டப் பொருள்களை நீக்கியெடுத்துவிட்டு எஞ்சியதை கழிவுப் பொருளாக (மலம்) மாற்றுகிறது.
 • கழிவுப் பொருள் முன்பெருங்குடலிலிருந்து மலக்குடலுக்குச் சென்று, பின்னர் மலவாய் வழியாக உடலிலிருந்து வெளியேறுகிறது.

கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்பு

கடைப்பெருங்குடல் புற்றுநோயானது ஆண்களுக்கு மிக அதிகமாக அறியப்படும் புற்றுநோய்களில் 3-ஆம் இடத்தையும், பெண்கள் விஷயத்தில் 2-ஆம் இடத்தையும் வகிக்கிறது. சராசரி ஆபத்து கொண்ட நோயாளிகளுக்கு ஆயுட்கால கடைப்பெருங்குடல் புற்றுநோயின் சம்பவிப்பு சுமார் 5% ஆகும்; இதில் 90% சம்பவிப்புகள் 50 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படுகின்றன. பெரும்பாலான கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகள் சிறுக, சிறுக பல வருடங்களாக வளர்ந்து உருவாகின்றன. இந்தப் புற்றுநோய் உருவாவதற்கு முன்பு, வழக்கமாக முன்பெருங்குடல் அல்லது மலக்குடலின் உள்வரி மீது ஒரு புற்றுநோய்-அல்லாத நீர்ச்சதையாக திசு வளர்ச்சி அல்லது கழலை வளர்ச்சி தொடங்குகிறது. சில நீர்ச்சதைகள் புற்றுநோய்க் கட்டியாக மாறலாம்; ஆனால் அனைத்தும் அவ்வாறு மாறுவதில்லை.

முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உருவாகும் புற்றுநோய் வகைகள்

முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் பல வகையான புற்றுநோய்கள் உருவாகலாம்.

 • அடினோகார்சினோமாஸ் -95%-க்கும் மேற்பட்ட கடைப்பெருங்குடல் புற்றுநோய்கள் அடினோகார்சினோமாஸ் எனப்படும் புற்றுநோய் வகையைச் சேர்ந்தவை. -முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலின் உட்புறம் வழலையைக் கொண்டு மசகிடும் சுரப்பிகளை அமைத்துள்ள செல்களில் இந்தப் புற்றுநோய்கள் உருவாகின்றன.
 • கடைப்பெருங்குடல் புற்றுநோய் குறித்து மருத்துவர்கள் பேசும்போது, அவர்கள் அநேக சந்தர்ப்பங்களில் இதைத் தான் குறிப்பிடுகின்றனர்.

பொதுவற்ற வகைகள்

வேறு சற்று பொதுவற்ற வகை புற்றுக்கட்டிகளும் முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உருவாகலாம். இவற்றுள் அடங்குபவை

 • கார்சினாய்டு புற்றுக்கட்டிகள் : குடலில் உள்ள சிறப்புவகை ஹார்மோன்-உற்பத்தி செல்களில் இந்தப் புற்றுக்கட்டிகள் உருவாகின்றன.
 • இரைப்பைக் குடலிய துளைப் புற்றுக்கட்டிகள் (ஜிஐஎஸ்டிகள்) : கெஜால் இடைத்திசு செல்கள் எனப்படுகின்ற, முன்பெருங்குடலின் சுவரில் உள்ள சிறப்புவகை செல்களில் புற்றுக்கட்டிகள் உருவாகின்றன. இவற்றுள் சிலது தணிவானவை (புற்று-அல்லாதவை); மற்றவை தீங்கானவை (புற்றுத்தன்மை கொண்டவை). இந்தப் புற்றுக்கட்டிகள் ஜீரணப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம்; எனினும், இவை வழக்கமாக முன்பெருங்குடலில் உருவாகுவதில்லை.
 • லிம்•போமாஸ் : இவை, நிணநீர்க் கணுக்களில் உருவாகும் பண்பு கொண்ட, நோயெதிர்ப்பு மண்டல செல்களின் புற்றுநோய்களாகும்; எனினும் இவை முன்பெருங்குடல், மலக்குடல் அல்லது பிற உறுப்புகளிலும் உருவாகலாம்.
 • சார்கோமாஸ் : இந்த புற்றுக்கட்டிகள் இரத்தக் குழாய்களிலும், முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலின் சுவரில் உள்ள தசை மற்றும் இணைப்புத் திசுவிலும் உருவாகலாம்.

கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன?

ஆபத்துக் காரணிகள்

நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது. ஆபத்துக் காரணி கொண்டிருப்பதால் உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது. கடைப்பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகளில் பின்வருபவையும் அடங்கும்:

 • 50-க்கு மேற்பட்ட வயது
 • கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள்
 • குடும்பத்தில் கடைப்பெருங்குடல் புற்றுநோய் நிலவிய வரலாறு
 • மரபணு மாற்றங்கள்
 • புற்றுநோய் நிலவிய சுய வரலாறு
 • புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய்
 • உணவுமுறை
 • புகைப்பிடித்தல்

50-க்கு மேற்பட்ட வயது

மக்கள் வயதடைய, அடைய கடைப்பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த நோய் உள்ள 90% பேருக்கு 50 வயதுக்குப் பிறகே இது நோய்க்குறி அறியப்படுகிறது. நோய்க்குறி அறியப்படுகிற சராசரி வயது, 72.

கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள்

நீர்ச்சதைகள் என்பவை, கடைப்பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்சுவரில் தோன்றும் வளர்ச்சிகள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இவை பொதுவாக உருவாகின்றன. பெரும்பாலான நீர்ச்சதைகள் தணிவானவை (புற்று-அல்லாதவை); எனினும் சில நீர்ச்சதைகள் (அடினோமாஸ்) புற்றுக்கட்டிகளாக மாறலாம். நீர்ச்சதைகளை கண்டறிந்து அகற்றுவது கடைப்பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கலாம்.

மரபணு மாற்றங்கள்

சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன. மரபுவழி நீர்ச்சதையற்ற முன்பெருங்குடல் புற்றுநோய் (எச்என்பிசிசி) மிகப் பொதுவாக நிலவும் மரபுவழி (மரபியல்) கடைப்பெருங்குடல் புற்றுநோய் வகை. மொத்த கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகளில் இது 2% ஆகும். ஓர் எச்என்பிசிசி மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் இது உண்டாகிறது. மாற்றமடைந்த எச்என்பிசிசி மரபணு கொண்ட பெரும்பாலானவர்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது; கடைப்பெருங்குடல் புற்றுநோய் உள்ளதாக நோய்க்குறி அறியப்படுகிற சராசரி வயது, 44.

குடும்ப அடினோமேட்டஸ் பாலிபாசிஸ் (எ•ப்ஏபீ)

முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் நூற்றுக்கணக்கான நீர்ச்சதைகள் உருவாகும் ஓர் அரிய, மரபுவழி நோய்நிலை. இது, ஏபீசி என்ற ஒரு குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் உருவாகிறது. எ•ப்ஏபீ நோய்நிலைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது வழக்கமாக 40 வயதுக்குள் கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கு வழிவகுக்கும். மொத்த கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகளில் எ•ப்ஏபீ 1% -த்தை விட குறைவாகும். எச்என்பிசிசி அல்லது எ•ப்ஏபீ உள்ளவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு குறிப்பான மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா எனச் சோதிப்பதற்கு மரபணுப் பரிசோதனை செய்துகொள்ளலாம். மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளவர்களுக்கு, கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க முயற்சிப்பதற்கான வழிகளை அல்லது இந்த நோய்க் கண்டறிதலை மேம்படுத்துவதற்கான வழிகளை மருத்துவர் ஆலோசனையாக வழங்கலாம். எ•ப்ஏபீ உள்ள பெரிய வயதினருக்கு, முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலை முழுமையாக அல்லது பகுதியாக நீக்குவதற்கான ஓர் அறுவைசிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

புற்றுநோய் நிலவிய சுய வரலாறு

ஏற்கனவே கடைப்பெருங்குடல் புற்றுநோய் கொண்டிருந்த ஒருவருக்கு அது இரண்டாவது முறையாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சினைப்பை, கர்ப்பப்பை (எண்டோமெட்ரியம்), அல்லது மார்பக புற்றுநோய் நிலவிய சரித்திரம் உள்ள பெண்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து சற்று அதிகம்.

புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய்

பல வருடங்களாக முன்பெருங்குடல் அழற்சியை (புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய் போன்றது) உண்டாக்கும் ஒரு நோய்நிலை கொண்டிருந்தவருக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம்

உணவுமுறை

உயரளவு கொழுப்பும் குறைந்தளவு கேல்சியம், போலேட் மற்றும் நார்ச்சத்தும் உள்ள உணவுகள் கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் சுட்டுகின்றன. மேலும், கனிகளும் காய்கறிகளும் வெகு குறைவாக உள்ள உணவை உண்பவர்களுக்கும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கலாம் எனவும் ஆய்வுகள் சுட்டுகின்றன

புகைப்பிடித்தல்

சிகரெட் பிடிப்பவர்களுக்கு நீர்ச்சதைகள் மற்றும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.

ஆதாரம் : ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், திருச்சி

Filed under:
3.02564102564
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top