অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அமீபியாசிஸ்

அமீபியாசிஸ்

அறிமுகம்

எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயே அமிபியாசிஸ். எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவால் பாதிக்கப்படுபவர்களில் 10-20 % பேருக்கே நோய் ஏற்படும். இது யாவரையும் பாதிக்கும் என்றாலும் வெப்ப மண்டலப் பகுதியில் சரியான சுகாதார வசதியற்று வாழ்பவர்களுக்கே பரவலாகக் காணப்படுகிறது.

மனிதர்களின் இரைப்பைக் குடல் வழியில் ஏற்படும் பொதுவான தொற்றே இது. தட்பவெப்ப நிலையை விட, மோசமான சுகாதாரம் மற்றும் சமுதாயப் பொருளாதார நிலையோடு நெருக்கமான தொடர்புடையது. இது உலகம் முழுவதும் காணப்படுகிறது. சீனா, தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா (குறிப்பாக மெக்சிகோ) நாடுகளில் இது பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.

15 % இந்திய மக்கள் அமிபியாசிசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் இந்நோய் காணப்படுகிறது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோயாக இருப்பதோடு, தீவிரமான அமிபியாசிஸ் முக்கியமான சமூக மற்றும் பொருளியல் விளைவுகளை உண்டாக்கும். சம்பாதிக்கும் வயதில் இருக்கும் வளர்ந்த ஆண்களில் பரவலாகக் காணப்படும் இந்நோய் வேலைத் திறனைத் தற்காலிகமாகப் பாதிக்கும். பல வாரங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டி இருக்கும். முழு அளவில் குணமாக 2-3 மாதங்கள் ஆகலாம். நோய்த் தடுப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ஒரு சில வெப்ப மண்டலப் பிரதேசத்தில் இருந்து வரும் அகதிகள், பயணிகள் ஆகியோருக்கு அமிபியாசிஸ் மருத்துவப் பிரச்சினைகளை உருவாக்கும்.

நோயறிகுறிகள்

மருத்துவ உடலறை உள்நோக்கி வழியாக நோக்கும் போது அறிகுறியற்ற தொற்று, வயிற்றுப்போக்கு, திடீர்க் கடும் பெருங்கடல் அழற்சி, வயிற்று உட்சவ்வழற்சி, குடலுக்கு வெளியிலான அமிபியாசிஸ் ஆகியவை தென்படலாம்.

கடும் அமிபியாசிசில் அடிக்கடி, சிறிது சிறிதாக இரத்தம் கலந்த மலத்துடன் வயிற்றுப் போக்கு உண்டாகலாம்.

நீடித்த அமிபியாசிசில், இரைப்பைக் குடல் அறிகுறிகளும், களைப்பும், எடையிழப்பும், எப்போதாவது காய்ச்சலும் ஏற்படலாம்.

ஒட்டுண்ணி பிற உறுப்புகளுக்கும் பரவும் போது புறக் குடல் அமிபியாசிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் கல்லீரலுக்குச் சென்று கட்டிகளை உருவாக்கும். கல்லீரல் கட்டியினால் காய்ச்சலும் மேல்வலது வயிற்றுப்பகுதி வலியும் உண்டாகும்.

நுரையீரல் உட்தசை, இதயம், பெருமூளை, சிறுநீரகம், பிறப்புசிறுநீர் மண்டலம், அடிவயிற்றுச் சவ்வு, தோல் ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு உண்டாகலாம். வளர்ந்த நாடுகளில், நோய் உள்ள பகுதிகளில் இருந்து வரும் அகதிகளுக்கும், செல்லும் பயணிகளுக்கும், ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கும், தடுப்பாற்றல் அடக்கப்பட்டவர்கள் அல்லது நிறுவனக் காப்பில் வாழ்பவர்களுக்கும் அமிபியாசிஸ் நோய்ப்பாதிப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்

அமிபியாசிஸ் எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகிறது. எண்டமிபியா பேரினத்தைச் சார்ந்த பல ஓரணு சிற்றினங்கள் மனித உடலுக்குள் குடி அமர்கின்றன. ஆனால் அவை யாவுமே நோயை உண்டாக்குவதில்லை. இவை இரு நிலைகளில் கணப்படும்: வளருயிரி நிலை மற்றும் கருவணு நிலை. வளருயிரிகள் பெருங்குடலில் பெருகி கருவணுக்களாகின்றன. மலத்தின் வழியாக வெளியேறி இவை மனிதர்க்குத் தொற்றை ஏற்படுத்தும். ஈரப்பசையும் குறைந்த வெப்பமுமான மலம், நீர், சாய்கடை, மண் ஆகியவற்றில் இந்த கருவணுக்கள் தொற்றை ஏர்படுத்தும் சாத்தியக் கூறு உள்ளவைகளாக நிலைத்திருக்கும்.

பின்வருவன மூலம் இது பரவுகிறது:

• ஆசன – வாய் வழி: மனிதருக்கு மனிதர் நேரடி தொடர்பு அல்லது மலத்தால் அசுத்தம் அடைந்த உணவு அல்லது நீர் மூலம்.

• பாலியல் பரவல்: குறிப்பாக ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் வாய்-குதத் தொடர்பால்.

• ஈ, கரப்பான்பூச்சி, எலி போன்றவற்றால் தொற்று பரவுகிறது.

எ.ஹிஸ்டொலிட்டிக்கா தொற்றின் நோயரும்பும் பருவம் பொதுவாக 2-4 வாரங்கள். ஆனால், சில நாட்களில் இருந்து பல ஆண்டுகள் வரை கூட இது வேறுபடலாம்.

மலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துவதும் இந்நோய் பரவக் காரணம் ஆகும். ஓரிட/கொள்ளை நோயாகப் பரவப் பொதுவாக குடிநீரில் சாய்கடை கசிவதே காரணமாகலாம்.

நோய்கண்டறிதல்

குடலுக்குள் வாழும் பிற ஓரணு உயிர்களில் இருந்து எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவை வேறுபடுத்திக் காண வேண்டும். மலத்தில் உள்ள கருவணுக்களையும் வளருயிரிகளையும் நுண்ணோக்கியின் மூலம் இனங்காணுவதே எ.ஹிஸ்டோலிட்டிக்காவைக் கண்டறியும் பொதுவான முறை. இவற்றின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே வேறுபாடு காணப்படுகிறது.

பெருங்குடல் அகநோக்கு அல்லது அறுவை சிகிச்சையின் போது கிடைக்கும் ஊசியுறிஞ்சல் அல்லது திசுஆய்வு மாதிரிகளின் மூலமாகவும் கண்டறியலாம்.

நோயெதிர்ப்பு மூலம் கண்டறிதல்-

எதிர்பொருள் கண்டுபிடித்தல்

அ) மலப் பரிசோதனையில் உயிரிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நொதி நோயெதிர்ப்புச் சோதனை (EIA) புறக்-குடல் நோயுள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையது (அதாவது. அமீபிக் கல்லீரல் கட்டி).

ஆ) மறைமுக சிவப்பணுசேர்க்கை (IHA)

அமீபிக் கல்லீரல் கட்டி இருக்கும் என்ற சந்தேகம் உள்ள நோயாளிகளுக்கு எதிர்பொருள் கண்டறியப்படாவிட்டால், 7-10 நாட்கள் கழித்து இரண்டாம் மாதிரி எடுக்கப்பட வேண்டும். இரண்டாம் மாதிரியும் ஊனீர் மாற்றத்தைக் காட்டாவிட்டால் வேறு சோதனைகளைப் பற்றி கருத வேண்டியது அவசியம்.

கண்டறியப்படக் கூடிய எ.ஹிஸ்டோலிட்டிக்கா — வெற்றிகரமான சிகிச்சைக்குப் பின் பல ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட எதிர்பொருட்கள் நிலைத்திருக்கலாம். எனவே எதிர்பொருள் இருப்பைக் கொண்டு தொற்று கடுமையானதா அல்லது தற்போது ஏற்பட்டதா எனக் குறிப்பிட முடியாது.

உடற்காப்பு ஊக்கி (ஆண்டிஜென்) கண்டறிதல்-

ஒட்டுண்ணிகளை கண்டறிவதற்கும், நோய் உண்டாக்கும் தொற்றையும் நோய் உண்டாக்காத தொற்றையும் வேறுபடுத்திக் காணவும், நுண்ணோக்கி மூலம் கண்டறிதலுக்கு துணையாக உடற்காப்பு ஊக்கி கண்டறிதல் பயனுள்ளதாக இருக்கும்.

மூலக்கூறு கண்டறிதல்-

மரபான பாலிமெரேஸ் தொடர்வினை (PCR) – மேற்பரிந்துரைப்புக்கான நோய்கண்டறியும் ஆய்வகங்களில் (reference diagnosis laboratories), நோயுருவாக்கும் சிற்றினங்களில் இருந்து (எ,ஹிஸ்டோலிட்டிக்கா) நோய் உருவாக்காத சிற்றினத்தை (எ.டிஸ்பார்) வேறுபடுத்தி அறிய, பி.சி.ஆரை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் மூலம் மூலக்கூறு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கல்லீரல் கட்டி, பெருமூளை அமிபியாசிஸ் ஆகியவற்றைக் கண்டறிய கதிரியல், கேளாஒலியியல். கணினி வரைவி, காந்த அதிர்வு பிம்பவரைவியல் பயன்படுத்தப்படுகின்றன.

குத நெளிபெருங்குடல் அகநோக்கும், பெருங்குடல் அகநோக்கும் குடல் அமிபியாசிஸ் பற்றிய தகவலை அளிக்கும்.

நோய் மேலாண்மை

அறிகுறிகளோடு கூடிய குடல் தொற்றுக்களுக்கும் புறக்குடல் நோய்க்கும் ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி நுண்ணுயிர்க்கொல்லிகளை உட்கொள்ள வேண்டும். அறிகுறிகள் காட்டாத எ.ஹிஸ்டோலிட்டிக்கா தொற்றுள்ள நோயாளிகளுக்கு எதிர் அமிபியா மருந்துகள் அளிக்க வேண்டும். இவர்களால் பிறருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவம் அளிக்காவிட்டால், ஓர் ஆண்டுக்குள் இவற்றுள் 4-10 % நோயாக வளரக் கூடும்.

கல்லீரல் உறிஞ்சல் – கட்டி பெரிதாக இருந்தாலோ (> 12 செ.மீ), கட்டி உடைவது உறுதி என்றாலோ, மருத்துவ சிகிச்சை தோல்வி அடைந்தாலோ, கட்டி இடது மடலில் இருந்தாலோ கல்லீரல் ஊசியுறிஞ்சல் முறை பயன்படுத்தப்படும்.

சிக்கல்கள்

அமீபிக் பெருங்குடல் அழற்சியின் சிக்கல்களில் அடங்குவன:

  • திடீர்கடுந்தாக்கம் அல்லது திசுஇறப்பு பெருங்குடல் அழற்சி
  • நச்சான மகாபெருங்குடல்
  • குத யோனி புரைப்புண்

அமீபிக் கல்லீரல் கட்டியால் ஏற்படும் சிக்கல்கள்:

  • வயிற்று உள்ளுறை, நெஞ்சுக்கூடு, இதயசுற்றுச்சவ்வு ஆகியவைகளில் இரண்டாம் கட்ட தொற்றுடன் அல்லது தொற்று இல்லாமல் அகச் சிதைவு
  • உட்தசை அல்லது இதயச் சுற்றுச் சவ்வுக்கு நேரடி பரவல்
  • மூளைக்கட்டி உருவாதலும் பரவலும்

அமிபியாசிஸ்ஸால் உண்டாகும் பிற சிக்கல்களில் அடங்குவன:

  • குடல் துளை
  • இரைப்பைக்குடல் இரத்தக்கசிவு
  • இறுக்கம் உருவாதல்
  • குடலுட்திணிப்பு
  • அடிவயிற்று உட்புறச்சவ்வழற்சி
  • சீழ் உருவாதல்

தடுப்புமுறை

பொதுவான மற்றும் குறிப்பிட்ட முறைகளில் அமிபியாசிசைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

பொதுவான முறைகள்-

1. நீர் விநியோகத்தை மேம்படுத்துதல் – கிருமிநீக்கத்திற்காக நீரில் சேர்க்கப்படும் அளவு குளோரினால் கருவணுக்கள் (சிஸ்ட்) கொல்லப்படுவதில்லை. நீரை வடிகட்டுதலும், கொதிக்க வைத்தலும் வேதிப்பொருட்களை விட அமீபியாவைக் கட்டுப்படுத்துவதில் அதிக பலன் அளிக்கின்றன.

2. சுகாதாரம் – மனித மலத்தைப் பாதுகாப்பாக அகற்றலும், மலங் கழித்த பின் உணவை கையாளும் முன்னரும் உண்ணும் முன்னரும் கையை சுத்திகரிப்பதும் முக்கியம்.

3. பாதுகாப்பான உணவு – சமைக்கப்படாத பழங்களையும் காய்கறிகளையும் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பழங்களின் தோலை அகற்ற வேண்டும். காய்கறிகளை உண்ணுமுன் வேக வைக்க வேண்டும். ஈ, கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி அவற்றிடம் இருந்து உணவுகளையும் பானங்களையும் பாதுகாக்க வேண்டும். நோய்க் கருவணுக்களை சுமப்பவர்கள் வீடுகளிலும், தெருக் கடைகளிலும், உணவகங்களிலும் உணவைக் கையாளுகிறவர்களாக இருந்தால் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்; ஏனெனில் அவர்களே பெரும்பாலும் அமிபியாசிஸைப் பரப்புகிறவர்கள் ஆகும்.

4. சுத்தம் மற்றும் பாதுகாப்பான உணவு பற்றி பொதுமக்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் சுகாதாரக் கல்வி – பொது ஊடங்கள் மூலம், வீடுகளிலும் பள்ளிகளிலும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளிலும் அடிப்படையான சுகாதாரக் கல்வி பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும்.

5. பொதுவான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி – தனி நபராகவும் சமூகமாகவும் பின்பற்ற வேண்டிய தடுப்பு முறைகள் (உ-ம். கைகழுவுதல், தகுந்த முறையில் மனிதக் கழிவுகளை அகற்றல்) பொதுவான சமூக பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

சாத்தியமாகும் இடங்களில் எல்லாம் பின்பற்றப்பட வேண்டிய குறிப்பான நடவடிக்கைகள்:

1. அந்தந்தப் பகுதிகளில் அமீபியா நோய் நிலையைச் சமுதாய அளவில் கண்காணித்தல்.

2. நோய் மேலாண்மையை மேம்படுத்துதல்: சமுதாயம் மற்றும் சுகாதார மையங்களை உள்ளடக்கிய அனைத்து சுகாதார சேவை மட்டங்களிலும் துரித நோய் கண்டறிதலும் போதுமான மருத்துவமும்.

3. அமீபியா மேலும் பரவுவதை ஊக்குவிக்கும் சூழல்களைக் கன்கணித்துக் கட்டுப்படுத்துதல்: உ-ம்: அகதிகள் முகாம், பொது நீர் விநியோகம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate