অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கினிப்புழு நோய்

கினிப்புழு நோய்

அறிமுகம்

கினிப்புழு நோய் (நரம்புச்சிலந்தி நோய்) ஓர் ஒட்டுண்ணி நோய் ஆகும். இது கினிப்புழுவால் ஏற்படுகிறது. இது ஒரு நீண்ட நூல் போன்ற புழு. ஒட்டுண்ணிகளைக் கொண்ட நீர் பூச்சிகள் நிறைந்த தண்ணீரை மக்கள் குடிக்கும்போது இப்புழு பரவுகிறது.

கினிப்புழு நோய் அரிதாகவே உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் தொற்று ஏற்பட்டவர் நகரமுடியாமல் பல வாரங்கள் செயலிழப்பார். இது, திறந்த வெளிக் குளங்கள் போன்றவற்றைக் குடிநீராகப் பயன்படுத்தும் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டக் கிரமப்புற மக்களைப் பாதிக்கிறது.

1980-களின் நடுப்பகுதியில் உலக அளவில் 21 நாடுகளில் 3.5 மில்லியன் கினிப்புழு நோய் நேர்வுகள் நிகழ்ந்தன. இவற்றில் 17 ஆப்பிரிக்க நாடுகள் அடக்கம். 2015-ல், உலக அளவில், 22  நேர்வுகளே அறிவிக்கப்பட்டன (இதுவரையில் அறிவிக்கப்பட்டதில் மிகவும் குறைவானது). 2014-ல் இது 126 ஆக இருந்தது. 2015-ல் நான்கு நோய்ப்பாதித்த பகுதிகள் விவரம் வருமாறு: சட் (9), மாலி (5), தென் சூடான் (5) மற்றும் எத்தியோப்பியா (3). 198 நாடுகளும், பகுதிகளும், பிரதேசங்களும் (186 உறுப்பு நாடுகளைச் சார்ந்தவை) கினிப்புழு நோய் அற்றன என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஏழு மாநிலங்களின் 89 மாவட்டங்களில் கினிப்புழு நோய் இடம்சார் நோயாக இருந்தது. 1984-ல்  2/3 நேர்வு ராஜஸ்தானிலும் (38%) மத்தியப்பிரதேசத்திலும் (29%) ஏற்பட்டன. மீதி கருநாடகம் (13%), ஆந்திரப்பிரதேசம் (11%) மகாராஷ்ட்டிரா (8%) மற்றும் குஜராத்தில் (1%) ஏற்பட்டன. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1983-84-ல் தேசிய கினிப்புழு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கிய பின் இறுதி நேர்வு 1996-ல் அறிவிக்கப்பட்டது. நோய் ஒழிக்கப்பட்டதால் இந்தியாவைக் கினிப்புழு அற்ற நாடாக 2000-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

உலக அளவில் நோய் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  முன்னர் இடம்சார் நோயாக இருந்த நாடுகளில் வழக்கமான நோய்க் கண்காணிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. உலக அளவில் முற்றிலும் ஒழிக்கப்படும் வரையில் இது தொடரும்.

நோயறிகுறிகள்

ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு ஓராண்டு வரை ஒருவருக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை.

  • காய்ச்சலோடு புழு வெளியேறும் இடத்தில் வீக்கமும் வலியும் இருக்கும். கீழ்க்கால் மற்றும் பாதங்களே புழு வெளிவரும் 90% இடங்கள்.
  • வளர்ச்சி அடைந்த பெண் புழு தோலில் இருந்து வெண் இழைபோல் தோன்றும். இக்காலகட்டம் மிகவும் வலியுடனும் மெதுவாகவும் இருக்கும் (1-3 வாரங்கள்).
  • புண்ணில் இரண்டாம் கட்ட நுண்ணுயிரி தாக்கம் ஏற்பட்டால் வலி கூடும்.

காரணங்கள்

காரணம், பரவல், வாழ்க்கை வட்டம் மற்றும் நோயரும்பும் காலம்:

  • டிராகன்குலஸ் மெடினென்சிஸ் என்ற நீண்ட நூல் போன்ற புழுவால் ஏற்படும் ஒட்டுண்ணி நோயே கினிப்புழு நோய்.
  • பரவல் வட்டம் (தொற்று ஏற்பட்டு வளர்ச்சி அடைந்த புழு உடலில் இருந்து வெளியேறும் வரை) முழுமையடைய 10-14 மாதங்கள் ஆகின்றன.
  • புழு உடலில் இருந்து வெளியேறும்போது கீழ்க்கால் அல்லது பாதத்தில் வலி தரும் கொப்புளம் உண்டாகிறது. எரிச்சலுள்ள வலியுடன் ஒன்று அல்லது கூடுதல் புழுக்கள் உடலை விட்டு வெளிப்படும்.
  • எரியும் வலியைத் தணிக்க நோயாளிகள் பாதிக்கப்பட்ட பகுதியை நீரில் முக்கி வைப்பர். அப்போது புழுக்கள் 1000 கணக்கான குட்டிப்புழுக்களைத் தண்ணீரில் வெளிவிடும்.
  • நண்டு போன்ற வெளியோட்டு உயிர்களால் இவை விழுங்கப்பட்டு தொற்று நிலைக்கு முதிரும்.
  • அசுத்த நீரை அருந்தும் மக்கள் தொற்றுள்ள இந்த நீர்ப்பூச்சிகளையும் உட்கொள்ளுகின்றனர். பூச்சிகள் வயிற்றுக்குள் கொல்லப்பட்டு புழுக்கள் வயிற்றில் வெளிவருகின்றன. இவை, குடலைத் துளைத்து வெளியேறி உடலில் இடம்பெயர்கின்றன.
  • கருவுற்ற பெண் புழு (60-100 செ.மீ நீளம் கொண்டது) தோல் திசுக்கள் வழி இடம் பெயர்ந்து வெளியேறும் புள்ளியை, பொதுவாகக், காலின் கீழ்ப்பகுதியை அடைகிறது.
  • ஒரு கொப்புளம் அல்லது வீக்கம் ஏற்பட்டு ஒட்டுண்ணி வெளிப்படுகிறது.

நோய் கண்டறிதல்

இந்நோய் பரவலாக இருக்கும் இடத்தில் உ:ள்ள மக்களுக்கு கினிப்புழு நோய் நன்கு தெரிந்ததே. நோய்கண்டறிய இதுவே போதுமானதாகும்.

  • புழுவில் இருந்து வெளிப்படும் கசிவை ஆய்ந்தால் அதில் உருள்கம்பி வடிவ சிறுபுழு காணப்படும்.
  • ஊனீர் சோதனை எதுவும் இல்லை.

நோய் மேலாண்மை

  • கினிப்புழு நோய்க்கு மருந்தும் தடுப்பு மருந்தும் இல்லை.
  • புழுவின் ஒரு பகுதி வெளி வர ஆரம்பித்தவுடன் ஒரு சிறு குச்சி போன்ற ஒன்றால் அதைச் சுற்றி தினமும் சில செண்டி மீட்டர்கள் வெளியே இழுக்கலாம். இதற்குப் பல வாரங்கள் ஆகும்.
  • புண்ணை நுண்கொல்லிகள் பயன்படுத்தி சுத்தப்படுத்துதலால் இரண்டாம் கட்டத் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
  • புண் உருவாகும் முன் ஒரு மருத்துவரால் புழுவை அகற்றவும் முடியும்.

தடுப்புமுறை

சிகிச்சை அளிக்கவும் தடுக்கவும் மருந்தில்லை. ஆனால் தடுப்பு  உத்திகள் உள்ளன.

இந்த உத்திகளால் இந்த நோய் ஒழியும் விளிம்பில் உள்ளது. தடுப்பு உத்திகளில் அடங்குவன:

  • தொடர் கண்காணிப்பின் மூலம் கினிப்புழு நோய் நேர்வைக் கண்டறிதல்.
  • புழுவை முழுமையாக உடலில் இருந்து அகற்றும் வரை தொடர் சிகிச்சை, சுத்தம் செய்தல், கட்டுதலால் ஒவ்வொரு புழுவில் இருந்தும் பரவலைத் தடுத்தல்.
  • குடிநீர் பாதுகாப்பு: கினிப்புழு நோயுள்ள இடங்களில் பாதுகாப்பான குடிநீரை வழங்குதல்.
  • குடிநீரில் நோயாளிகள் நடக்கவிடாமல் தடுத்தல்:
    • கட்டியும் புண்ணும் உள்ள கிராமத்து மக்களை குடிநீர்ப் பகுதியில் நுழைய விடாமல் தடுத்தல்.
    • படிக் கிணறுகளை, இறைக்கும் கிணறுகளாக மாற்றுதல்.

நரம்புச்சிலந்திகளைக் கட்டுப்படுத்துதல்:

  • டெமிஃபோஸ் பயன்படுத்துதல்
  • நோய் பாதிப்பு இடங்களில் திறந்த நீர்நிலைகளின் நீரை நுண் அரிப்பால்( அளவு 100 மைக்ரோமீட்டர்கள்) அல்லது இரட்டை துணி வடிகட்டியால் அரித்து நரம்புச் சிலந்தியை அகற்ற வேண்டும்.

சுகாதார மேம்பாட்டின் மூலமும், நடத்தை மாற்றங்களின் மூலமும் நோய் பாதிப்புள்ள இடங்களில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.*

இந்தியாவில் கினிப்புழு ஒழிப்பு:

  • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய கினிப்புழு ஒழிப்புத் திட்டத்தை 1983-84-ல் தொடங்கியது.
  • நாட்டில் கினிப்புழு ஒழிப்புத் திட்டத்தைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், வழிகாட்டுதல் மற்றும் மதிப்பிடுதலுக்கு தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் (NCDC), தில்லி, (முன்னர் NICD) ஒருங்கிணைப்பு முகவாண்மையகமாக விளங்குகிறது.
  • இத் திட்டங்கள் இடம்சார்நோய் மாநில சுகாதார இயக்ககத்தினால் ஆரம்ப சுகாதாரப் பரமரிப்பு அமைப்பால் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இந்திய அரசின் கிராம மேம்பாட்டு அமைச்சகம், மாநிலப் பொது சுகாதார பொறியியல் துறைகள் மற்றும் ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம் (கிராமப்புற நீர் விநியோகம்) ஆகியவை, பாதுகாப்பான குடிநீரை வழங்குவதிலும் பராமரிப்பதிலும் மற்றும் கினிப்புழு நோய் பாதித்த இடங்களில் உள்ள் பாதுகாப்பற்ற குடிநீர் ஆதாரங்களை மாற்றுவதிலும் இத்திட்டத்திற்கு உதவிகள் செய்தன.
  • கினிப்புழு நோய் அற்ற நாடாக இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் அறிவித்தது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate