பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம் / மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிகள்

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இன்றைய இயந்திர வாழ்க்கையில் மூட்டு வீக்க நோய் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. மூட்டு வீக்கமும் அது தொடர்புடைய நோய்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. உடலின் தசைகள், தசை நார், தசை நாண், எலும்புகள் போன்றவற்றில் வீக்கம், விரைப்புத் தன்மை, வலி போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நோய்கள் உடலின் பல்வேறு உள் உறுப்புகளையும் பாதித்து வருகின்றன. மூட்டு வீக்கம் என்பது மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறிக்கிறது. மூட்டின் இணைப்புகளில் ஏற்படும் நோய் அல்லது திசுக்களில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் வீக்கம், சிவந்த நிறம், கட்டி, வலி ஆகியவை ஏற்படும். சில மூட்டு விக்க நோய்கள் உடலில் உள்ள இணைப்பு திசுக்களைப் பாதிப்பதுடன் உள் உறுப்புகளையும் பாதிப்பதால் இணைப்பு திசு நோய் என்றும் கூறப்படுகிறது. பிற வகைகள் உடலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களையே பாதிக்கின்றன. எலும்பு வீக்க நோய், போலி கீல் வாத நோய், தோல் திசுக்கள் இறுக்கம், சிறுவர்களிடையே காணப்படும் கீல் வாத நோய்கள், மூட்டு விரைப்பு, இணைப்பு திசு கடினமாதல், கழுத்து எலும்பு தேய்வு, கீல் வாதம் என்பவை மேலும் சில வகை மூட்டு வீக்க நோய்களாகும்.

உடற்பயிற்சி

மூட்டு வீக்க நோய் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி பல வகைகளில் உதவுகிறது. மூட்டுக்களில் ஏற்படும் வலி, விரைப்புத் தன்மை ஆகியவற்றை குறைப்பதற்கும் மிருதுத்தன்மை அதிகமாதல், தசைகளுக்கு வலு, இதயத்தின் இயக்கம், உறுதித் தன்மை ஆகியவற்றுக்கும் உடற் பயிற்சி ஏதுவாகிறது. உடலின் எடையை குறைப்பதற்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி உதவுகிறது. மூட்டு வீக்க நோய்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் உடற்பயிற்சியும் ஒரு அங்கமாக உள்ளது. மூட்டு வீக்க நோய் உள்ளவர்களுக்கு மூன்று விதமான பயிற்சிகள் சிறந்தவையாக உள்ளன. நடனமாடுவதால் மூட்டுக்களுக்கு சாதாரணமான இயக்கம் இருப்பதுடன் விரைப்புத் தன்மையும் குறைக்கப்படுகிறது. கடினமான தசைகள் மூட்டு வீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கின்றன. எனவே தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் உடலுக்கு நன்மை பயப்பவையாகும். ஒவ்வொரு நாளும் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். பெரும்பாலான உடற்பயிற்சி மன்றங்கள், சமூக மையங்கள் அவரவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி திட்டங்களை அளித்து வருகின்றன.

மூட்டு வீக்க நோய் உள்ளவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமும் அல்லது இதர சுகாதார பாதுகாப்பு அளிப்பவர்களிடமோ அவர்களுக்குத் தேவையான பயிற்சி பற்றி விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான மருத்துவர்கள் அவர்களிடம் வரும் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையினை பரிந்துரை செய்கின்றனர். இது போன்ற நோயாளிகள் வெவ்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆனால் அனைத்து வகையான விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களிலும் இவர்கள் ஈடுபடக் கூடாது.

மருத்துவ உடற்பயிற்சியளிப்போர் இது போன்ற நோயாளிகளுக்கு வீடுகளிலேயே தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு வலி நிவாரண முறைகளை கற்றுத் தருகின்றனர். மேலும் உடலுக்குத் தேவையான சக்தியை சேமிப்பதும், சரியான உடல் அமைப்பு பற்றி இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

சிகிச்சை முறை

தேவையான ஓய்வு, இளைப்பாறல், வேலைக்கேற்ற உணவு, உரிய மருந்து, அவ்வப்போது முறையான உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரண முறை போன்றவற்றை மேற்கொள்வது முறையான சிகிச்சை முறையாகும். குறைவான காலத்தில் வலியை நிறுத்த சில சிகிச்சை முறைகளும் உள்ளன. வெது வெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, சூடான வெந்நீரில் குளிப்பது போன்ற முறைகளை வீட்டில் ஒரு நாளைக்கு மூன்று முறை 15 முதல் 20 நிமிடம் பயன்படுத்துவதால் மூட்டு வலியிருந்து நிவாரணம் பெறலாம். இத்துறையில் உள்ள மருத்துவர்கள் அதிக வெப்ப சக்தியைக் கொடுக்கும் காந்த அலைகள், நுண் அலைகள், நுண்ணொலி அலைகள், ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வெப்ப சக்தி உள்ள இது போன்ற சிகிச்சை அளிப்பது உகந்ததல்ல. கழுத்துப் பகுதிகளில் உள்ள விரைப்புத் தன்மையை குறைப்பதற்கும் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும் இந்த சிகிச்சை பயன் படுத்தப்படுகிறது. பையில் நிரப்பப்பட்ட ஐஸ் கட்டிகள் அல்லது உறைந்த காய்கறிகளை துணியில் சுற்றி வலி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் 10 முதல் 15 நிமிடம் பயன்படுத்த வலியும் வீக்கமும் குறையும். அதிக பாதிப்புக்குள்ளான மூட்டுப் பகுதிகளில் இந்த முறை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரெனாட் நோய் உள்ளவர்கள் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.

நீர் சிகிச்சை முறை

 • வலியையும் விரைப்புத் தன்மையையும் குறைக்கக் கூடியது.
 • பெரிய நீச்சல் குளங்களில் நீச்சலடிப்பதால் மூட்டு வலி குறைக்கப்படுகிறது.
 • நீரின் சுழற்சியினால் ஏற்படும் வேகத்தினாலும் அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்திலிருந்தும் சில நோயாளிகள் வலியிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர்.

இளைப்பாறுதல்

 • மேலும் இளைப்பாறுவதன் மூலமும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
 • வலியைபோக்க நோயாளிகள் தசைகளில் உள்ள அழுத்தத்தை குறைக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • மருத்துவ உடற்பயிற்சியளிப்போர் இதற்கான உத்திகளை கற்றுத்தருகின்றனர்.
 • சில மருத்துவ பயிற்சிக்கூடங்களில் இதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

அக்குபஞ்சர் / அக்குபிரஷர்

 • மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற சீனப் பாரம்பரிய முறையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
 • இந்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் ஊசிகளைக் குத்தி சிகிச்சையளிக்கின்றனர்.
 • இந்த ஊசிகள் நரம்பின் பல்வேறு பகுதிகளில் உணர்வுகளை தூண்டுவதால் இயற்கையான முறையில் வலி நிவாரணம் கிடைக்கிறது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
 • இதே போன்று அக்கு பிரஷர் முறையிலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முறையில் ஊசிகளுக்குப் பதிலாக அழுத்தம் செலுத்தப்படுகிறது.

பயிற்சிகள் செய்வதன் மூலம் ஏற்படும் வலி ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இருந்தால் வலி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இது போன்ற பயிற்சிகளின் போது தொடர்ந்து வலி ஏற்பட்டால் அவர்கள் மருத்துவ உடற்பயிற்சியாளர் அல்லது மருத்துவரின் உதவியுடன் உடற்பயிற்சித் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து உடல் சோர்வு, பலவீனம், நடமாட்டம் குறைதல், மூட்டுகளில் வீக்கம் அதிகரித்தல், தொடர்ந்த வலி ஆகியவை இருப்பின் பயிற்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். மூட்டுக்களில் வலி தாங்கிக்கொள்ள தசைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு எடை குறைந்த உடற்பயிற்சிக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சிகளை சரியான முறையில் செய்யாவிட்டால் தசைகள் கிழிவதுடன் அதிகவலி, மூட்டுக்களில் வீக்கம் ஆகியவை ஏற்படும்.

நல்ல அனுபவமிக்க மருத்துவர்கள், மருத்துவ உடற்பயிற்சியாளர்கள், தொழில் சார்ந்த உடற்பயிற்சியாளர்கள் மட்டுமே குறிப்பிட்ட மூட்டு வலிக்கு எந்த வகையான பயிற்சியை அளிப்பது என்பதை பரிந்துரை செய்ய முடியும். எனவே மூட்டு வலி உள்ள நோயாளிகள் மருத்துவர்களின் உதவியுடன் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.05882352941
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top