பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / மூளை / ஜப்பானிய மூளையழற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜப்பானிய மூளையழற்சி

ஜப்பானிய மூளையழற்சி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஜப்பானிய மூளையழற்சி மனிதர்களையும் விலங்குகளையும் தொற்றும் ஒரு வைரல் நோய் ஆகும். இது மனிதர்களுக்குக் கொசுவால் பரப்பப்படுகிறது. இதனால் மூளையைச் சுற்றி இருக்கும் மென்படலத்தில் அழற்சி உண்டாகிறது.

ஜப்பானிய மூளையழற்சி (JE) ஃபிளேவி வைரசால் (flavi virus) ஏற்படுகிறது. இது மூளையைச் சுற்றியுள்ள மென்படலத்தைத் தாக்குகிறது. பொதுவாக JE வைரசால் ஏற்படும் தொற்று இலேசானதாகவும் (காய்ச்சலும் தலைவலியும்) அல்லது தெளிவான அறிகுறிகள் இன்றியும் இருக்கும்.

நோயறிகுறிகள்

ஜாப்பானிய மூளையழற்சியின் நோயரும்பல் பருவம் 5-15 நாட்கள் ஆகும். பெரும்பாலான தொற்றுக்கள் அறிகுறிகளற்றவை ஆகும்

ஆரம்ப அறிகுறிகளில் அடங்குவன:

 • அதிகக் காய்ச்சல்- 38C (100.4F) அல்லது அதற்கு மேலும்
 • தலைவலி
 • நோய்வாய்ப்பட்ட உணர்வு
 • வயிற்றுப்போக்கு
 • தசை வலி

சில அரிய நோய் நேர்வுகளில் இவ்வாரம்ப அறிகுறிகள் ஒருசில நாட்கள் நீடிக்கும். பின் கடுமையான அறிகுறிகளாக மாறும்:

 • வலிப்பு
 • மனநிலை மாற்றம். இது சிறு குழப்பத்தில் இருந்து அதிக கலக்கம் அல்லது ஆழ்மயக்கமாகவும் மாறும்.
 • கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம்
 • பேச்சிழத்தல்
 • தசை பலவீனம்
 • இயல்புக்கு மாறான தசையிறுக்கம் (அதி விறைப்பு)
 • நடுக்கம், விறைப்பு, மெதுவான இயக்கம், பக்கவாதம் போன்ற அசைவுப் பிரச்சினைகள்
 • கண்களின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்
 • முகத்தின் தசைகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்.

காரணங்கள்

ஜப்பானிய மூளையழற்சி ஃபிளேவி வைரசால் உண்டாகிறது. இவ்வகை அதிநுண்ணுயிரி விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கும். இது விலங்குகளில் இருந்து மனிதனுக்கு ஒரு தொற்றுள்ள கொசுவால் கடத்தப்படுகிறது.

ஆபத்துக்கான காரணிகளில் அடங்குவன:

 • நீங்கள் செல்லும் இடம்
 • செல்லும் ஆண்டின் காலநேரம்
 • நீங்கள் ஈடுபடும் செயல்கள்

நோய்கண்டறிதல்

இரத்தப் பரிசோதனை: இரத்தத்தில் காணப்படும் நோயெதிர்பொருட்களை அறிய

இடுப்புப்பகுதி துளையிடல்: இதுவும் தண்டுவட திரவத்திலும், முதுகுத் தண்டு திரவத்திலும் இருக்கும் நோயெதிர் பொருட்களை அறியவே செய்யப்படுகிறது.

வரைவிகள் (ஊடுகதிர்ப் படங்கள்——Scans): மூளையழற்சியாக இருந்தால்:

 • ஒரு கணினி வரைவிப்படம் (CT Scan): இது உடலை வெவ்வேறு சிறுசிறு கோணங்களில் தொடர் எக்ஸ்-கதிர் படங்களாக எடுத்துத் தொகுத்து  உடலின் உட்பகுதியின் தெளிவான பிம்பமாகத் தருகிறது.
 • ஒரு காந்த அதிர்வு வரைவி பிம்பம் (MRI Scan): இது வலிமையான காந்தப் புலங்களையும் வானொலி அலைகளையும் பயன்படுத்தி உடலின் உட்பகுதியின் முழுமையான பிம்பத்தை உருவாக்குகிறது.

சிக்கல்கள்

கீழ்க்காண்பவைகளைப் போல சிறு சிறு சிக்கல்கள் ஏற்படக்கூடும்:

 • கட்டுப்படுத்த முடியாதவாறு கைகள் நடுங்குதல்
 • ஆளுமை மாற்றம்
 • தசை வலிமை இழப்பு; கைகளும் புயமும் வெட்டி இழுத்தல்.

மிதமான இயலாமை கீழ்வரும் வடிவங்களில் காணப்படலாம்:

 • கற்பதில் மிதமான சிக்கல்
 • ஒரு மூட்டுப் பக்க வாதம்
 • உடலின் ஒரு புறம் பலவீனம் அடைதல்

தடுப்புமுறை

ஜப்பானிய மூளையழற்சியைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் வழிகள்:

(அ) தனிநபர் நிலையில்

 • நோய்பரப்பிகளின் அடர்த்தியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கையாளவும்
 • கொசு கடியில் இருந்து காத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றவும்
 • கொசு கடியில் இருந்து தப்பிக்கத் தகுந்த ஆடைகளை அணியவும் (குறிப்பாகக் கொசு அதிகமாகக் கடிக்கும் நேரங்களில்)
 • கொசு எதிர்ப்பு பசை, நீர்மம், சுருள், வில்லைகளைப் பயன்படுத்தவும்
 • பூச்சுக்கொல்லிகள் பூசப்பட்ட கொசுவலையை பயன்படுத்தவும்
 • கதவையும், ஜன்னல்களையும் நன்றாக மூடிவிட்டுத் தூங்கவும்.
 • குறிப்பாகப் பின் மாலைப் பொழுதில் அறையில் பூச்சுக்கொல்லிகளைத் தெளிக்கவும்
 • வீடுகளில் வலைகளைப் பொருத்தவும்.
 • DEET (டையீதைல்தொலுவாமைட்) சிறந்த கொசு விரட்டி ஆகும். இது தெளிப்பான், சுருள்கள், குச்சிகள், பசை வடிவங்களில் கிடைக்கிறது.
 • ஜப்பானிய மூளையழற்சி தடுப்பு மருந்து தடுப்பிற்கு முக்கியமானதாகும். மூன்று தடவைகளில் கொடுக்கப்படும் மருந்து பல ஆண்டுகள் பாதுகாப்பளிக்கும்.

(ஆ) சமுதாய நிலையில்

 • பெரும் அளவில் பெருகும்போது மாலத்தியான் புகை எழுப்புதல்
 • நோய்பரப்பியைக் கண்டுபிடிக்க சமுதாய மக்களுக்கு உணர்வூட்டல்
 • கொசு பெருகுவதைத் தடுக்க சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்தல்
 • பன்றி வளர்ப்பிடங்களைக் குடியிருப்புப் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 4-5 கி.மீ. தள்ளி அமைக்க வேண்டும்.
 • அடிகுழாயைச் சுற்றி சிமிண்ட் பூசி வடிகால் அமைக்க வேண்டும்

(இ) பயணத்தின் போது தடுத்தல்

 • பயணம் போகும் இடத்தில் இருக்கும் நோய் அபாயத்தை அறிய முயலவும். மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

(ஈ) கர்ப்ப காலத்தில் தடுத்தல்

 • மருந்தூட்டிய/நீண்ட நாட்களுக்கான பூச்சியெதிர்ப்பு வலைகளைப் பயன்படுத்தவும்

சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்

 • பூச்சி எதிர்ப்பு மருந்தை நேரடியாக முகத்தில் தெளிக்க வேண்டாம். கையில் தெளித்து பின் முகத்தில் தேய்க்கவும்
 • மருந்தை கீறல்கள், புண்கள் மீது பயன்படுத்த வேண்டாம்
 • கண்கள், உதடு, வாய் அருகிலும் காதுக்குள்ளும் மருந்தைத் தவிர்க்கவும்.
 • குழந்தைகள், பிள்ளைகளுக்கு மருந்திட உதவுங்கள். குழந்தைகள் தாமாகவே மருந்தைப் பூச அனுமதிக்க வேண்டாம்.
 • வெயில் தடுப்புப் பசை பூசுவதாக இருந்தால் பூசிய பின் மருந்தைப் பூசவும்
 • மருந்தைப் பயன்படுத்திய பின் கைகளை நன்றாகக் கழுவவும்
 • தோலிலிருந்து மருந்தை சோப்பால் கழுவவும்
 • கொசுவிரட்டி மருந்துப்பெட்டியில் எழுதப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றவும்.

சிகிச்சை

ஜப்பானிய மூளையழற்சிக்குத் தனிப்பட்ட மருத்துவம் எதுவுமில்லை. ஆதரவு மருத்துவமே அளிக்கப்படுகிறது. நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி சிக்கல்கள் வளராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே நாட வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top