பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வயிறு / மலச்சிக்கல் / மலம் பரிசோதனையும் - விபரங்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மலம் பரிசோதனையும் - விபரங்களும்

மலம் பரிசோதனை பற்றிய விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சிறுநீரைப் போலவே மலமும் ஒரு கழிவுப்பொருள்தான். இது செரிமான மண்டலத்தின் கழிவுப்பொருள். மென்மையாக, வலி எதுவுமில்லாமல் எளிதில் மலம் வெளியேறினால், அதை இயல்பான மலமாகக் கருதலாம். பொதுவாக, இது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

நாளொன்றில் குறைந்தது 200 கிராம் மலம் போக வேண்டும். இந்த அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும். சாப்பிடும் உணவு மற்றும் அளவைப் பொறுத்தும் மலத்தின் அளவு வித்தியாசப்படும். சிலருக்கு ஒரு வேளை மட்டும் மலம் போகும், இன்னும் சிலருக்கு இரண்டு வேளை போகும். எதுவானாலும் திருப்தியாகப் போனால் நல்லது. இன்னும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால், அது குடல் பாதிப்பைக் குறிக்கும் அறிகுறி.

எப்போது, எப்படிச் சேகரிப்பது?

  • ஆய்வுக் கூடத்தில் தரும் குப்பியில் மலத்தைச் சேகரிப்பது நல்லது. குப்பி உலர்ந்ததாக இருக்க வேண்டியது முக்கியம்.
  • வீட்டில் இருக்கும் பாட்டிலில் அல்லது தீப்பெட்டியில் சேகரிக்கும் மலத்தைப் பரிசோதித்தால், தவறான முடிவு கிடைப்பதற்குச் சாத்தியம் உண்டு.
  • மலத்தை எப்போது வேண்டுமானாலும் சேகரிக்கலாம். 20-லிருந்து 40 கிராம் மலம் தேவைப்படும்.
  • சேகரித்த மலத்தை அரை மணி நேரத்துக்குள் ஆய்வுக்கூடத்தில் கொடுத்துவிட வேண்டும். முக்கியமாக மலம் உலர்ந்துவிடக் கூடாது.
  • குழந்தைகளுக்கு டயப்பரில் உள்ள மலத்தைச் சேகரிக்கலாம்.
  • ‘பெட் பேனி’ல் (Bed-pan) இருந்து மலத்தை எடுக்கக்கூடாது.
  • பரிசோதனைக்கு அவசரம் இல்லையென்றால், ஒரு வாரம் மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடாமல், அதற்குப் பிறகு மலப்பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் மிகச் சரியாக இருக்கும்.

நேரடிப் பரிசோதனை

  • மலத்தை நேரடியாகப் பார்த்துச் சில நோய்களைக் கணிக்கலாம்.
  • மலம் திரவநிலையில் காணப்பட்டால் அஜீரணமாக இருக்கலாம்.
  • தண்ணீர் போல் காணப்பட்டால் அது வயிற்றுப்போக்கு.
  • இறுகிப்போன மலமாக இருந்தால் மலச்சிக்கலைக் குறிக்கும்.
  • களிமண் போல் காணப்பட்டால் பித்தநீர்ப் பாதை அடைப்பு, சிலியாக் நோய் எனச் சந்தேகப்படலாம்.
  • வழக்கத்தைவிட அதிகமாகவும், நுரையுடனும் கெட்ட வாடையுடனும் மலம் போனால், அது கொழுப்பு உணவு செரிமானமாகவில்லை என்பதைக் குறிக்கும்.
  • ரிப்பன் மாதிரி மிக மெலிதாக மலம் போனால், குடலில் அடைப்பு உள்ளது என்றோ, மலக்குடல் சுருங்கியுள்ளது என்றோ சந்தேகப்படலாம்.
  • பச்சை நிறத்தில் மலம் போனால் அது வயிற்றுப்போக்குக் கிருமிகளால் ஏற்படுகிறது. சில நேரம் கீரை உணவை அதிகமாகச் சாப்பிட்டிருந்தாலும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டிருந்தாலும் மலம் பச்சை நிறத்தில் போகும்.
  • மலத்தில் ரத்தம் போனால், பெருங்குடலில் உள்ள புண் அல்லது புற்றுநோய் காரணமாக இருக்கலாம். அல்லது ஆசனவாயைச்சுற்றி விரிசல், புண், மூலநோய் ஆகியவற்றில் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.
  • கறுப்பாக மலம் போனால், உணவுப்பாதையின் மேற்பகுதியில் எங்கோ ஓரிடத்தில் ரத்தக்கசிவு உள்ளது எனப் பொருள். பொதுவாக 75 மி.லி. வரை ரத்தம் வெளியேறினால், இம்மாதிரியான மலம் வெளியேறும்.
  • ‘தார்’ போல் கறுப்பாக மலம் போனால் இரைப்பை, முன்சிறுகுடல், சிறுகுடல் ஆகியவற்றில் புண், புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. 1,000 மி.லி.க்கும் அதிகமாக ரத்தம் வெளியேறினால் இம்மாதிரி மலம் போகும்.
  • இரும்புச்சத்து மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டாலும், மலம் மிகவும் கறுப்பாகப் போகும்.
  • குடலில் நாடாப்புழு பாதிப்பு இருந்தால், மலத்தில் நாடாப்புழுவின் பகுதிகள் சிறுசிறு துண்டுகளாக வெளிப்படும்.
  • சிலருக்கு மலத்தில் சிறு புழுக்கள்கூட வெளியேறும். உதாரணம்: நூல் புழுக்கள்.
  • வெளிறிய நிறத்திலும் பிசுபிசுப்பாகவும் மலம் காணப்பட்டால், அது கணையப் பாதிப்பாக இருக்கலாம்.
  • கெட்ட வாடை இருந்தால், பால் மற்றும் பால் சார்ந்த உணவு அல்லது கொழுப்பு உணவு சரியாகச் செரிமானம் ஆகவில்லை என்பதைத் தெரிவிக்கும் பொதுவான அறிகுறியாகக் கொள்ளலாம்.
  • மிகவும் மோசமான வாடை என்றால், புரத உணவு செரிமானம் ஆகவில்லை என்பதைத் தெரிவிக்கிற அறிகுறியாகக் கொள்ளலாம்.
  • மலத்தில் சளி கலந்து வெளியேறினால் சீதபேதி, அமீபியா பேதி, பெருங்குடல் அழற்சி, குடல் காசநோய் போன்றவை காரணமாகலாம்.
  • சளியுடன் ரத்தமும் கலந்து வந்தால், சீதபேதிதான் முக்கியக் காரணம். இந்த நிலைமை நீடித்தால், பெருங்குடல் புற்றுநோயாகவும் இருக்கலாம்.

நுண்ணோக்கிப் பரிசோதனை (Microscopic examination)

  • மலத்தைப் பக்குவப்படுத்தி நுண்ணோக்கி மூலம் பார்த்துப் பல நோய்களைக் கண்டுபிடிக்கலாம்.
  • குடலில் புழுக்கள் இருந்தால், அவற்றின் முட்டைகள் மலத்தில் காணப்படும். முட்டையின் வடிவம் மற்றும் அமைப்பைப் பார்த்து எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம்.
  • அமீபா போன்ற ஒட்டுண்ணிகள் தெரியும்.
  • சமயங்களில் ஒட்டுண்ணிகள் இல்லாவிட்டாலும், அவற்றின் சிதலுறைகள் (Cysts) காணப்படும்.
  • ரத்த வெள்ளையணுக்களும் சீழ் அணுக்களும் காணப்பட்டால், குடலில் ஏதேனும் ஒரு அழற்சி நோய் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
  • ரத்தச் சிவப்பணுக்கள் காணப்பட்டால் சீதபேதி, மூலநோய், ஆசனவாயில் விரிசல், குடல் புற்றுநோய் போன்றவற்றில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம்.
  • கொழுப்புப் பொருட்கள் காணப்பட்டால் பித்தநீர்ச் சுரப்பு அல்லது கணையநீர்ச் சுரப்பில் குறைபாடு இருக்கலாம்.

மறைந்திருக்கும் ரத்த மலப் பரிசோதனை (Foecal Occult Blood Test)

சாதாரணமாக ஒருவரின் மலத்தில் ரத்தம் தெளிவாகத் தெரிந்தால் மூலநோய், ஆசனவாயில் விரிசல், குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு மலத்தில் ரத்தம் லேசாக வெளியேறும். ஆனால், சாதாரணமாகப் பார்த்தால் அது தெரியாது. மலத்தில் மறைந்திருக்கும். இதை நுண்ணோக்கியிலும் காண முடியாது. இவ்வாறு கண்களுக்குத் தெரியாத ரத்தக்கசிவைக் கண்டறிய இரண்டு பரிசோதனைகள் உள்ளன. அவை:

  1. பென்சிடின் மலப் பரிசோதனை ( Benzidine Stool test),
  2. குயாயிக் மலப் பரிசோதனை ( Stool guaiac test).

ரத்தச் சிவப்பணுக்களில் ‘ஹீம்’ எனும் இரும்புப்பொருள் உள்ளது. இது மலத்தில் காணப்பட்டால் ரத்தக்கசிவு உள்ளது என்று அர்த்தம். இதைக் கண்டறிவதன்மூலம் லேசான ரத்தக்கசிவையும் உறுதிசெய்யலாம். இந்தப் பரிசோதனைகள் ‘பாசிட்டிவ்’ என்று முடிவு சொன்னால், குடலில் புண் அல்லது புற்றுநோய் இருக்கிறது என்று பொதுவாகச் சந்தேகப்படலாம். பிறகு அதை உறுதிசெய்ய கொலோனோஸ்கோப்பி, இரைப்பை என்டோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள குறைகள்:

‘ஹீம்’ எனும் இரும்புப்பொருள் இருக்கிற காய்கறிகளைச் சாப்பிடும்போது, அது மலத்தில் வெளியேறும். பரிசோதனைக்குச் சில நாட்களுக்கு முன்பு இந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டிருந்தால், இப்பரிசோதனை முடிவு தவறாகிவிடும்.

வைட்டமின்-சி, வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டிருந்தாலும் இதே தவறு நடக்கும்.

திரவ பரிசோதனை

‘திசுப் பரிசோதனை’ (Biopsy examination) என்பது நோய் இருப்பதாகச் சந்தேகப்படும் உடல் திசுவிலிருந்து ஒரு சிறிய துண்டை வெட்டியெடுத்து ஆய்வுக்கூடத்தில் பக்குவப்படுத்தி, சில கண்ணாடித் தகடுகளில் பரப்பி, நுண்ணோக்கியில் பரிசோதிக்கும் முறை. இதை நோயியல் (Pathology) படித்த மருத்துவர்கள்தான் மேற்கொள்ள முடியும். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பயனாளியின் திசுவை வெட்டி எடுத்து, இதற்கென உள்ள குப்பியில் பாதுகாப்பாக வைத்து இவர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். நோயியல் மருத்துவர்கள் பரிசோதனை முடிவைத் தெரிவிப்பார்கள். இதன் முடிவு தெரியச் சில நாட்களிலிருந்து சில வாரங்கள்வரை ஆகலாம். பெரும்பாலும் இப்பரிசோதனை உடலில் புற்றுநோய் உள்ளதா இல்லையா, புற்றுநோய் இருந்தால் அதன் வகை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் அதற்கேற்பச் சிகிச்சை முறைகளை அமைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது.

சில வகைகள்

  • உடலின் வெளிப்புறத்திலிருந்து திசுவை எடுப்பது ஒரு வகை. உதாரணம்: தோல் திசுப் பரிசோதனை.
  • உடலின் உட்புறத்திலிருந்து திசுவை எடுப்பது இன்னொரு வகை. கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், குடல், எலும்பு, புராஸ்டேட் போன்ற உறுப்புகளிலிருந்து திசுவை எடுப்பது இந்த வகை.
  • வெளிப்புறத் திசுவை எடுப்பதற்குப் பெரும்பாலும் முன்தயாரிப்பு தேவையில்லை. வெளிநோயாளியாகவே இதைச் செய்துகொள்ளலாம்.
  • உட்புறத் திசுவை எடுப்பதற்கு முன்தயாரிப்பு தேவைப்படும். இதற்கென நேரம் ஒதுக்கி, உள்நோயாளியாக இருந்து பரிசோதனைக்குத் தயாராக வேண்டும். மயக்க மருந்து தரவேண்டியிருக்கும்.
  • அறுவை சிகிச்சைக்கு முன்பு திசுவை எடுத்துப் பரிசோதிப்பதும் உண்டு.
  • அறுவை சிகிச்சையின்போது அகற்றப்படும் கட்டியிலிருந்து, சிறிய துண்டுத் திசுவை அகற்றிப் பரிசோதிப்பதும் உண்டு.
  • அல்ட்ரா சவுண்ட் அல்லது சி.டி. ஸ்கேன் உதவியுடன், பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புக்கு ஓர் ஊசிக்குழலைச் செலுத்தி, அங்குள்ள திசுவை அல்லது அங்குத் தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி எடுத்து, அதைப் பரிசோதனைக்கு அனுப்புவதும் உண்டு (Fine-needle aspiration biopsy - FNAB ). உதாரணமாகத் தைராய்டு கட்டி, மார்பகக் கட்டி, நெறிக் கட்டி, நீர்க் கட்டி போன்றவற்றைப் பரிசோதிப்பதற்கு இது உதவுகிறது.
  • மலம் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனை

(Stool Culture and Sensitivity Test)

மலத்தை ஆய்வுக்கூடத்தில் ஊட்டச்சத்துப் பொருளில் வைத்து வளர்த்து, அதில் எந்த வகை நுண்கிருமிகள் வளர்கின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. மேலும் அந்தக் கிருமிகள் எந்த மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும் இது துல்லியமாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் நோய்க்கிருமிகளைச் சரியாகக் கண்டுபிடிக்கலாம்; அவற்றுக்குச் சரியான மருந்து கொடுத்து நோயையும் குணப்படுத்திவிடலாம்.

ஆதாரம் : தி-ஹிந்து தமிழ் நாளிதழ்

3.04651162791
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top